"துப்பாக்கிச் சன்னங்கள் எம்மை அச்சுறுத்த முடியாது. நீதியான யுத்தம் எம்மை வலுப்படுத்தும்'' சுதந்திரதேச பிரகடனம் வெளியிடப்பட்ட தினமன்று கொசோவா நகர வீதிகளில் எதிரொலித்த கோஷங்கள் இவை.
யார் இந்த கொசோவா மக்கள்? தனியரசை உருவாக்க, அவர்களை உந்திச் சென்ற வரலாற்றுப் பின்னணி என்ன? விரிவாகப் பார்க்கலாம்.
சோவியத் காலத்தில், அதன் ஆதரவு நாடாக விளங்கிய யூகோஸ்லாவியாவின் மிகச் சிறிய பிரதேசமாக இருந்தது இந்த கொசோவா மாகாணம்.
பல துண்டுகளாக யூகோஸ்லாவியா சிதறிய போது, இப்பிரதேச மக்களின் சுயநிர்ணயம் பற்றிய அரசியல் வெளிப்பாடுகள் முக்கியத்துவம் பெறவில்லையென்பதும் குறிப்பிடத்தக்கது.
இரண்டாம் உலக மகா யுத்த காலத்திலிருந்து சோசலிச சமஷ்டிக் குடியரசாகவிருந்த யூகோஸ்லாவியாவின் தலைவராகத் திகழ்ந்த டிட்டோ, 1980ஆம் ஆண்டு இறக்கும்வரை இந்நாடு சோவியத்தின் பிராந்திய ஆளுமைக்குள் சிறைப்பட்டிருந்தது.
மூன்றாம் உலக நாடுகளை இணைத்து உருவாக்கப்பட்ட, அணி சேரா நாடுகளின் கூட்டமைப்புத் தலைவர்களில் ஒருவராகவிருந்த வரே இந்த டிட்டோ என்றழைக்கப்படும் ஜோசிப் புரொஸ் டிட்டோ.
1980 ஆம் ஆண்டு டிட்டோவின் மறைவிற்குப்பின்னர், சேர்பியத் தேசிய வாதமானது அன்றைய கம்யூனிஸ்ட் தலைவர் சுலோப்டான் மிலோசவிச்சினால் எழுச்சியுற்ற வேளையில், யூகோஸ்லாவியாவின் ஆறு குடியரசுகளும் அதிகளவு சுதந்திரத்தினை வலியுறுத்த ஆரம்பித்தன.
1990 ஆம் ஆண்டு சோவியத்தின் வீழ்ச்சியினால், அரசியல் மாற்றங்கள் அங்கு ஏற்படத் தொடங்கின.
அக்குடியரசுகளில் மேற்கொள்ளப்பட்ட தேர்தல்களில், குரோசியா, ஸ்லோவினியாவில் சுதந்திர தனியரசிற்கு ஆதரவான சக்திகளும் சேர்பியா, மொன்ரிநீக்ரோவில் ஒன்றிணைந்த யூகோஸ்லாவியாவிற்கு ஆதரவான சக்திகளும் தெரிவு செய்யப்பட்டன.
1991 ஆம் ஆண்டு ஜூன் 25ஆம் திகதி ஸ்லோவினியாவும் குரோசியாவும் தனிநாடுகளாகத் தம்மை பிரகடனம் செய்தன.
மட்டுப்படுத்தப்பட்ட யுத்தத்தை மேற்கொண்ட சேர்பிய யூகோஸ்லாவிய இராணுவம் ஸ்லோவினியாவில் இருந்து தாமாக விலகிக்கொண்டது.
ஆயினும் குரோசியாவில் வசித்த சேர்பியர்களுக்கும், சேர்வியா இராணுவத்திற்குமிடையே பெரும்போர் வெடித்தது.
அதேவேளை, செப்டெம்பர் 1991இல், மசிடோனியாவின் சுதந்திரப் பிரகடனத்தை சேர்பியா எதிர்க்கவில்லை.
யூகோஸ்லாவியாவின் நில அமைப்பினை நோக்கினால் தற்போதைய சேர்பியாவின் எல்லையோடு நான்கு குடியரசுகளின் மசிடோனியா, மொன்ரிநிக்ரோ, பொஸ்னியா, குரோசியா என்பன அமைந்துள்ளன.
ஸ்லோவினியக் குடியரசானது சேர்பியாவின் எல்லையோடு அமையாமல், குரோசியாவின் வடபகுதியில் ஆஸ்திரியா, ஹங்கேரி நாட்டு எல்லைகளால் சூழப்பட்டதொரு தேசமாகும்.
இத்தகைய புவியியல் அமைப்பு சாதகமாக இல்லாத நிலையினை கருத்திற்கொண்டே ஸ்லோவினியாவிலிருந்து சேர்பிய இராணுவம் வெளியேறியதாக கூறப்படுகின்றது.
நவம்பர் 91இல் பொஸ்னியாவிலுள்ள சேர்பிய இன மக்கள், யூகோஸ்லாவியாவுடன் தொடர்ந்து இணைந்திருக்க வேண்டுமென வாக்களித்தனர். அதேவேளை, நடைபெற்ற சர்வஜன வாக்கெடுப்பில் தனியரசுக் கோரிக்கை முன் வைக்கப்பட்டு, பெரும்பான்மையினர் அதற்கு ஆதரவளித்தனர். இருதரப்பினரும் வாக்களிப்புப் பெறுபேற்றினை சட்டவிரோதமானதொன்றாகப் பிரகடனம் செய்தார்கள்.
இந்த முரண்நிலையின் விளைவாக 1992 ஏப்ரல் 5 ஆம் திகதியன்று பொஸ்னியா தனியரசுப் பிரகடனத்தை வெளிப்படுத்தியபொழுது, ஏட்டிக்குப் போட்டியாக சேர்பியர்களும் சிறிப்ஸ்கா என்கிற தமது தேசத்தை பிரகடனம் செய்தனர். உடனடியாக பாரிய யுத்தம் வெடித்தது.
அகண்ட சேர்பியா என்கிற பேரினவாதச் சிந்தனை, இருதரப்புக்களுக்குமிடையே பாரிய மோதலை உருவாக்கி பேரழிவுகளை ஏற்படுத்தியது.
பொஸ்னியாவிலுள்ள சரஜேவாவில் 12000 மக்கள் கொல்லப்பட்டு, சிரபெரனிகா (குணூஞுஞணூஞுணடிஞிச்) வில் 8000 முஸ்லிம் மக்களின் படுகொலையூடாக இந்த அழிவுகளின் உச்ச வடிவம் நிகழ்த்தப்பட்டது.
இனச் சுத்திகரிப்பினூடாக தமது பிரதேச இறையாண்மையை நிலைநிறுத்த பெல்கிரேட் ஆட்சியாளர்கள் நடத்திய படுகொலைகள் சர்வதேச கண்டனங்களுக்குள்ளாகின.
விரிவடையும் இவ்வன்முறைகளை தணியச் செய்ய, ஐரோப்பிய யூனியனின் முயற்சியினால் மாநாடொன்று பிரான்சில் கூட்டப்பட்டபோது, ""ஐரோப்பிய யூனியன் நேட்டோ'' உடன்படிக்கை என்கிற சொற்பிரயோகத்தை ஏற்க மறுத்தனர் சேர்பியர்கள்.
இதேவேளை சேர்பிய அரசின் தென் மாநிலமாகவிருக்கும் கொசோவாவிலுள்ள அல்பேனியர்கள் மீது வன்முறையைக் கட்டவிழ்த்தது சேர்பிய இராணுவம்.
இதன் எதிர்விளைவாக, பரந்துபட்ட வகையில், இன அழிப்பிற்கெதிரான தமது யுத்தத்தினை கொசோவா விடுதலை இராணுவம் ஆரம்பித்தது.
கொசோவாத் தலைநகரான பிரிஸ்ரினாவின் தென் பகுதியிலுள்ள ரகாக்கில் சேர்பிய துணை இராணுவக் குழுக்களால் 45 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
இந்த மிலேச்சத்தனமான கொலை நிகழ்வு மேற்குலகின் நேரடித் தலையீட்டிற்கான காரணியாகக் கூறப்படுகின்றது.
78 நாட்கள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட நேட்டோப் படைகளின் விமானத் தாக்குதலையடுத்து, 1999 ஆம் ஆண்டு ஜூன் மாதமளவில் தமது ஆக்கிரமிப்புப் படைகளை கொசோவாவிலிருந்து மீளப் பெற்றார் சேர்பிய அதிபர் சுலபோடன் மிலோசெவிச்.
அதேவேளை, 98 99 ஈராண்டு யுத்தத்திற்கு முன்பாக சேர்பிய பெருந்தேசிய இனவாத அழுத்தத்திற்கு ஈடுகொடுத்தவாறே மிதவாத அல்பேனிய இயக்கங்கள் தமது போராட்டத்தை தொடர்ந்தன.
ஆயினும் இன ஒதுக்கலும், அழிப்புகளும் விரிவடைய, வன்முறைப் போராட்டப் பாதையில் தேர்ந்தெடுத்த கொசோவா விடுதலை இராணுவம் (ஓஃஅ) தோற்றம் பெற்றது.
சேர்பிய காவல்துறை, இராணுவ நிலைகள் மீது தாக்குதல்களை ஆரம்பித்தனர்.
இந்த ஆயுத போராட்ட விடுதலை இயக்கத்தை முன்னின்று வழிநடத்தியவரே, கொசோவா நாடாளுமன்றில் தனியரசுப் பிரகடனம் செய்த பிரதமர் ஹாசிம் தாச்சி (ஏச்ண்டடிட் கூடச்ஞிடி) ஆவார்.
1999ஆம் ஆண்டு சேர்பிய ஆக்கிரமிப்பு இராணுவம், கொசோவாவிலிருந்து வெளியேற்றப்பட்டவுடன் நடைபெற்ற தேர்தலில் மிதவாத தலைவரான இப்ராகிம் ருகோவா விடம் தோல்வியுற்றார் ஹாசிம் தாச்சி.
2001 ஆம் ஆண்டுத் தேர்தலில் மறுபடியும் தோல்வியடைந்த ஹாசிம், கடந்த நவம்பரில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் தனது கொசோவõ ஜனநாயகக் கட்சியை ஆட்சியிலிருத்தி பிரதமரானார்.
மேற்குலக அனுசரணையில் பிரான்ஸில் நடந்த சமாதான பேச்சுவார்த்தைகளில் கலந்து கொண்ட ஹாசிம் தாச்சி, சுதந்திர கொசோவா தேசம் என்கிற கோட்பாட்டிற்கு மாற்றீடான எந்தவித சமரச உடன்பாட்டிற்கும் இணங்க மறுத்துவிட்டார்.
ஆயினும் பெல்கிரேட் ஆட்சியாளர்கள் தமது சேர்பிய இராணுவத்தை கொசோவாவிலிருந்து அகற்ற மறுத்த நிகழ்வே இப்பேச்சுவார்த்தை முறிவிற்கு அடிப்படைக் காரணியாக அமைந்தது.
அதேவேளை, 78 நாள் விமானத் தாக்குதல்களால் சேர்பியப் படைகள் வெளியேற ஐ.நா.சபை நிர்வாகமும், நேட்டோ அமைதிப்படைகளும், கொசோவாவில் நிலை நிறுத்தப்பட்டன.
அத்தோடு 2001 ஆம் ஆண்டு கொசோவாவின் முமுமையான நிர்வாக பரிபாலனத்தை ஐ.நா. சபை பொறுப்பேற்றுக்கொண்டது.
சர்வதேச நாடுகளின் நிர்வாகப் பிரசன்னமும் நேட்டோ படைகளின் பாதுகாப்பும் இருந்த வேளையில் 2004 மார்ச்சில் நடைபெற்ற இனக்கலவரம் கொசோவா நிலைமைøய மேலும் சிக்கலாக்கியது.
இதனிடையே சேர்பியா சார்பாக ரஷ்யாவும், கொசோவாவின் பக்கமாக மேற்குலகும் இணைந்து முன்னெடுத்த சமாதான பேச்சுவார்த்தையில் எதுவித இணக்கப்பாடுகளும் எட்டாத நிலையில், ஐ.நா. பாதுகாப்புச் சபையில் இது குறித்து விவாதிக்க ரஷ்யா முற்பட்டது.
சேர்பிய அரசின் சுயாட்சித் தீர்வினை முற்றாக நிராகரித்த கொசோவாத் தலைமை பிரிந்து செல்லும் சுயநிர்ணய உரிமைக் கோட்பாட்டினை வலியுறுத்தியது.
ஆனாலும், நவம்பர் 28, 2007 இல் செய்யவிருந்த தனியரசுப் பிரகடனத்தை, மேற்குலகின் அழுத்தத்தினால் இந்த வருட பெப்ரவரிக்கு ஒத்திவைத்தது கொசோவா அரசாங்கம்.
அதேவேளை அடுத்துவரும் ஐ.நா. பாதுகாப்புச் சபைக் கூட்ட அமர்வில், இதுகுறித்து விவாதம் முன்னெடுக்கப்படுமெனவும், அதுவரை தனியரசுப் பிரகடனத்தை தவிர்க்குமாறு மேற்குலகால் ஆலோசனையும் வழங்கப்பட்டது.
அக்கூட்டத்தில், தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி, பிரச்சினையை இழுத்தடிக்கும் போக்கினை இரஷ்யா முன்னெடுக்கலாமெனக் கருதியது கொசோவா.
இந்த விதமான சிக்கல்களிலிருந்து வெளியேற, பாதுகாப்புச் சபைக் கூட்டத்திற்கு முன்பாகவே தமது கொசோவோ நாடாளுமன்றத்தினைக் கூட்டி பெப்ரவரி 17ஆம் திகதியன்று தனியரசுப் பிரகடனத்தை கொசோவோ வெளியிட்டது.
மேற்குலக நாடுகளின் ஒருமித்த ஆதரவினைத் திரட்டுவதற்கு முன்பாக வெளிவந்த தனியரசுப் பிரகடனம், பிளவுகளையும், அதிருப்தியையும் ஐரோப்பிய நாடுகளிடையே உருவாக்கியுள்ளதென மேற்குலகின் அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
ஐ.நா. சபையின் சட்டதிட்டங்களிற்கு முரண்படும் வகையில் செய்யப்பட்ட ஒரு தலைப்பட்சமான தனியரசுப் பிரகடனம் இதுவெனத் தெரிவித்ததோடு அதனை அங்கீகரிக்க முடியாதெனக் கூறுகிறது ஸ்பானிய அரசு.
இதுபோன்று சைப்பிரஸ், ருமேனியா, ஸ்லோவாக்கியா, கிறீஸ் போன்ற நாடுகளில் தனியரசை அங்கீகரிக்க மறுக்கின்றன.
பாஸ்க் இன மக்களின் தனிநாட்டுப் போராட்டத்தினை முகங்கொள்ளும் ஸ்பானிய தேசத்தின் இந்நிலைப்பாடு குறித்து, ஆச்சரியமடைய கூடிய காரணிகள் எதுவும் கிடையாது.
இலங்கை இப்பிரகடனத்தை கண்டிப்பதாக வெளியுறவு அமைச்சர் றோஹித போகொல்லாகம கூறுகிறார். அவர் கூறிய விளக்கவுரை மிகவும் விசித்திரமானது.
அதாவது அந்நாட்டின் பெரும்பான்மை இன மக்கள் ஏற்றுக்கொள்ளாத விடயத்தை சர்வதேசம் அங்கீகரிக்கக் கூடாதென்பதே அவ்விளக்கவுரையின் பொழிப்புரையாகும். இவை எல்லாவற்றையும் சுயபாதுகாப்பு நலன் அடிப்படையில் எழும் அச்சத்தின் வெளிப்பாடுகளாகக் கருதலாம்.
இங்கு வெளிக்கிளம்பும் தனியரசுப் பிரகடன எதிர்வலைகளில் ஒரு விடயத்தை உன்னிப்பாக அவதானிக்க வேண்டும்.
அதாவது சிறுபான்மைத் தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமைப் போராட்டத்தை நசுக்க முனையும் அரசுகளே, கொசோவோ தனியரசுப் பிரகடனத்தை வன்மையாகக் கண்டிக்கின்றன என்கிற விடயத்தை புரிந்து கொள்வது அவசியமானதாகும்.
20 இலட்சம் மக்கள் வாழும் 10,800 சதுரகிலோ மீற்றர் பரப்பினை கொண்ட கொசோவோ நாட்டில், 3000 மக்கள் 98,99 இரு வருடப் போரில் கொல்லப்பட்டனர்.
25 வருட கால இலங்கை உள்நாட்டுப் போரில் 80,000 க்கு மேற்பட்ட தமிழ் மக்கள் அழிக்கப்பட்டுள்ளனர்.
45 பொதுமக்கள் கொசோவாவில் கொல்லப்பட்டபோது பெல்கிரேட் மீது விமõனத் தாக்குதல் தொடுத்த மேற்குலக நேட்டோ நாடுகள், வல்லிபுனத்தில் 62 சிறார்கள் கொல்லப்பட்டபோது மௌனித்திருந்தார்கள்.
ஆயினும் கொசோவோ தேசத்தின் புவியியல் கேந்திர முக்கியத்துவத்தோடு ஒப்பிடுகையில் இலங்கையின் வடக்கு கிழக்கு பிரதேசம் ஆசியப் பிராந்திய உணர்திறன் கூடிய மையம் பலம் வாய்ந்ததொன்றாகும்.
ஆசியாவின் கடல் வழித் தலைவாசலில் அமைந்துள்ள இம்மையப்புள்ளி சந்தைப்போட்டியின் விநியோகப் பாதையில் இருப்புக் கொள்வது வல்லாதிக்க நலன்களில் பிரிக்க முடியாத சமரசமற்ற போக்கினை உள்ளடக்கியுள்ளது.
சமாதான ஒப்பந்தத்தோடு சர்வதேசத் தளத்தில் கொண்டு செல்லப்பட்ட விடுதலைப் போராட்டம், ஒப்பந்த முறிவோடு இந்திய தலையீட்டு வட்டத்தினுள் சுழல ஆரம்பித்துள்ளது.
ஜே.வி.பி.யின் அனுசரணையில் இந்தியத் தளம் அகற்றப்படக்கூடிய சõத்தியப்பாடுகள் தென்படுவதால், அடுத்துவரும் புதிய பரிமாணத் தளமே இறுதி நிகழ்விற்குரிய பாதையை உருவாக்கும்.
அவ்வாறான புதிய அரசியல் களமானது எவ்வாறு செயற்பாடுமென்பதை இனி நடைபெறப்போகும் நிகழ்வுகளே தீர்மானிக்கும்.
நன்றி
வீரகேசரி
Sunday, February 24, 2008
"கொசோவாவின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரித்த புதிய உலகக்கோட்பாடு"
Posted by tamil at 6:08 PM
Subscribe to:
Post Comments (Atom)
0 Comments:
Post a Comment