Tuesday, February 12, 2008

'காதலர் தினமும், தமிழரின் காதல் வாழ்வும்;;!"

Valantine’s Day என்று தற்போது அழைக்கப்பட்டு வருகின்ற "காதலர் தினம்" இன்றைய காலகட்டத்தில் நன்கு வணிகமயப்படுத்தப்பட்ட, பிரபல்யமான ஒரு சமுதாயச் சடங்காக வளர்ந்து வருவதை நாம் காணக்கூடியதாக உள்ளது. காதலர் தினத்துக்குரிய வாழ்த்து அட்டைகள் மட்டும் சுமார் ஒரு பில்லியனுக்கு மேல் விற்பனையாகி வருவதாக அறிகிறோம். இந்த 2008 ஆம் ஆண்டு இந்த விற்பனை மேலும் அதிகரித்தால் அதில் ஆச்சரியப்பட எதுவும் இல்லை. இந்த ஒரு பில்லியன் வாழ்த்து அட்டைகளில் 85 சதவீதமானவற்றைப் பெண்களே வாங்குகின்றார்கள் என்பது ஓர் உபரியான தகவல்!

Valantine’s Day தினம் எவ்வாறு ஆரம்பமானது என்ற ஆய்வில் இறங்கினால், பலவிதமான தகவல்களை நாம் காணக்கூடியதாக உள்ளது. இவற்றில் பல உறுதிப்படுத்தப்படாமல் செவி வழித் தகவல்களாகவும் இருக்கின்றன. சில உறுதிப்படுத்தப்பட்டு, ஆவணங்களாகவும் உள்ளன. இவை குறித்துச் சுருக்கமாக ஆய்வதோடு, உலகின் பல இனங்களையும் - நமது தமிழினம் உட்பட - இக் காதலர் தினம் அல்லது இந்தக் காதல் எவ்வளவு பாதித்துள்ளது, அல்லது பாடுபடுத்தியுள்ளது என்பதையும் நாம் குறிப்பிட விழைகின்றோம்.

ரோம் நகரத்தில், கிறிஸ்துவுக்குப் பின்னர் மூன்றாம் நூற்றாண்டளவில், மத நம்பிக்கையற்ற சடங்காகக் காதலர் தினம் உருவாகியது என்று பலர் கருதுகின்றார்கள். ஆட்டு மந்தைகளையும், அவைகளின் இடையர்களையும் தொடர்ந்து ஓநாய்கள் தாக்கி வந்தமையால், இந்த இடையர்களின் நல்வாழ்வு கருதி ஒரு சடங்கு மேற்கொள்ளப்பட்டு வந்தது. மணமாகாத இளம் பெண்களின் பெயர்களைத் தனித்தனியே சீட்டுகளில் எழுதி, ஒரு பெட்டியில் இட்டு, ஒவ்வொரு இளைஞனும் தனக்கென ஒரு சீட்டை எடுப்பான். தேர்ந்தெடுக்கப்படுகின்ற இளம் பெண்கள் தம்மைத் தேர்ந்தெடுத்த இளைஞர்களுடன் ஓர் ஆண்டு காலம் சேர்ந்து வாழ்வார்கள். இந்தச் சடங்கு பெப்ரவரி மாத மத்தியில் நடைபெற்று வந்தது.

இந்த நடைமுறையைப் பின்னர் கிறிஸ்தவ தேவாலயங்கள் மாற்றியமைத்து, சீட்டுக்களில் இளம் பெண்களின் பெயர்களுக்குப் பதிலாகப் புனிதர்களின் பெயர்களை இட்டு, இப் புனிதர்களின் பெயர்களைத் தெரிவு செய்யும் இளைஞர்கள் இப் புனிதர்களைப் போலவே வாழ வேண்டும் என்று விதிமுறையைக் கொண்டு வந்தன. இந்தப் புதுமுறை வெற்றியளிக்கவில்லை.

Valantine என்ற பெயர் வந்ததற்குச் சுமாராக ஏழு கதைகள் உள்ளன. பின்னாளில் இந்த ஏழு கதைகள் அல்லது சம்பவங்கள் ஒரு கதையாக உள்வாங்கப்பட்டிருக்கலாம். புனித வலன்டைன் என்கின்ற கிறிஸ்தவப் பாதிரியார் செய்து வந்த பிரச்சாரம் காரணமாக, மக்கள் இராணுவத்தில் சேரவேயில்லை என்றும், இதனால் கோபமுற்ற சக்கரவர்த்தி கிளோடியஸ் என்பவர், வலன்டைன் பாதிரியாரைச் சிறையில் அடைத்ததன் விளைவாகச் சிறையில் வலன்டைன் பாதிரியார் இறந்தார் என்றும் அறியப்படுகின்றது. பாதிரியார் இறந்த விதம் குறித்தும் பல உப கதைகள் உண்டு. வலன்டைன் பாதிரியார் பல காதலர்களுக்குத் துணை நின்று அவர்களுடைய காதலை நிறைவேற்றி வைத்தபடியால் அவர் காதலர்களின் அன்புக்குரிய பாதிரியாராக அறியப்பட்டார். பின்னாளில் 'புனித வலன்டைன் தினம்", 'காதலர் தினமாக" அறியப்பட்டது.

இதே வேளை பெப்ரவரி 14 ஆம் திகதியில்தான் பறவைகள் இன விருத்தியில் ஈடுபட ஆரம்பிக்கின்றன என்று பொதுவாக ஐரோப்பியர்கள் நம்புவதுண்டு. இது குறித்துக் கவிதைகள் பலவும் உண்டு. தவிரவும் Saint Valantine’s தினம் குறித்துச் சேக்ஸ்பியரும் குறிப்பிடுகின்றார்.

சீனர்களின் பண்பாட்டில்கூட காதலர் தினம் முக்கிய இடம் வகிக்கின்றது. The Night of Seven என்ற அழைக்கப்படும் இத்தினம் ஒவ்வொரு ஆண்டும் ஏழாம் மாதம் ஏழாம் திகதியன்று கொண்டாடப்படுகின்றது. ஜப்பானியர்களின் பண்பாட்டில், சூரியக் காலக் கணக்கின்படி, ஜூலை ஏழாம் திகதியன்று காதலர் தினம் சற்று வித்தியாசமான முறையில் கொண்டாடப்படுகின்றது. பிரேசில் நாட்டில் ஆண் நண்பர் பெண் நண்பர் என்ற பெயரில் ஜூன் 12 ஆம் திகதி காதலர் தினம் கொண்டாடப்படுகின்றது. கொலம்பியா நாட்டில் செப்டெம்பர் மாதத்து மூன்றாவது வெள்ளிக்கிழமையிலும் நட்பு மற்றும் காதலர் தினம் என்ற பெயரில் காதல் தினம் கொண்டாடப்படுகின்றது.

இத் தகவல்கள் எடுத்துக்காட்டாகத் தரப்படுகின்றன.

இவையெல்லாம் இருக்கட்டும். தமிழர் வாழ்வில் 'காதலர் தினம்' என்ற ஒன்று தேவையா? அல்லது தமிழர் வாழ்வில் 'காதல்' என்ற ஒன்று இல்லையா? என்று விதவிதமாகக் கேட்போரையும் சற்றுக் கவனிப்போம்.

புலம்பெயர்ந்த தமிழர்கள் பலர் காதலர் தினத்தைப் பழித்தும், இகழ்ந்தும் பேசி வருவதோடு அது வெள்ளைக்காரனின் பண்பாடு என்று ஒதுக்கித் தள்ளுவதையும் இன்று நாம் பார்க்கின்றோம். காதலர் தினம் உண்மையில் மேல்நாட்டுப் பண்பாடா? தமிழன் எப்போதும் பேசித்தான் திருமணம் செய்தானா? தமிழனுக்கும் காதலுக்கும் காத தூரமா? என்றெல்லாம் கேள்விகள் எம்மவர் மனதில் எழுந்து கொண்டுதான் உள்ளன.

உண்மையைச் சொல்லப் போனால், காதல் விடயத்தில், காதலர் தின விடயத்தில் மேல்நாட்டவனுக்குத் தமிழன் அப்பனல்ல, பாட்டனுமாவான்! அந்த அளவிற்குக் காதல் விடயத்தில் புகுந்து விளையாடியவன்தான் தொல்தமிழன்! சங்கக்கால இலக்கியங்களிலும், சிலப்பதிகாரத்திலும் ஏன் தொல்காப்பியத்திலும் காதலும், காதல் மணமும் எடுத்தாளப்பட்டுள்ளன. இந்தக் காதலர் தினத்தை ஒரு சாட்டாக வைத்து எம் பழம் தமிழர் மரபை நாமும் திரும்பிப் பார்ப்போம்!

தமிழ் மொழிக்கே உரிய சிறப்பான பொருள் இலக்கியம், அகம் - புறம் என்கின்ற இரண்டு தனிக் கூறுகளைக் கொண்டது. இந்த இரண்டு திணைகளைப் பற்றிக் கூறுகின்ற பொருள் இலக்கண - இலக்கிய நூல்கள் தமிழ் மொழி தவிர, உலகின் வேறு எந்த மொழியிலும் காண முடியாது. இந்தப் பொருள் இலக்கண - இலக்கிய நூல்கள் தமிழரின் சமுதாய வாழ்வை அணுகி, நுணுகி, ஆய்ந்து எழுதப்பட்டுள்ளன.

தொல்காப்பியத்திற்கு உரை எழுதிய நச்சினார்க்கினியர், அகம் - புறம் குறித்து வரையறுத்துக் கூறுகின்றார். அகம் பற்றிக் கூறும் போது 'ஒத்த அன்பான ஒருவனும் ஒருத்தியும் கூடுகின்ற காலத்துப் பிறந்த பேரின்பம்...' என்றுதான் அவர் ஆரம்பிக்கின்றார். சமுதாயத்தில் ஒருவனும் ஒருத்தியும் வாழும் வாழ்வில், காதல் - கணவன் - மனைவி - உறவு என்பன அகம் எனப்படும். குடும்பத்தின் புறம் சார்ந்த கடமைகளான கொடை, வீரம், போர், ஆட்சி என்பன புறம் எனப்படும். அகப் பொருளின் பாடு பொருள், ஆண் பெண் என்னும் இரு பாலரது காமம் ஆகும். காமம் என்பது உலக உயிர்களுக்கெல்லாம் உரியது, உடைமையது, இன்பம் தருவது. இது குறித்துத் தொல்காப்பியனார் இவ்வாறு சொல்கின்றார்:

எல்லா உயிர்க்கும் இன்பம் என்பது
தானர்ந்து வரு உம் மேவற்றாகும்.
-தொல்காப்பியம் பொருளதிகாரம் - நூற்பா 27

உலக மக்களின் இனப் பெருக்கத்திற்கும், உலக வாழ்வின் பண்பு மேற்பாட்டிற்கும் வழி வகுக்கின்ற அகப்பொருள், சங்க இலக்கியப் பாடல்களில் சிறப்பிடம் பெறுகி;றது. 2,381 சங்க இலக்கியப் பாடல்களில், 1,862 பாடல்கள் அகத்தினைப் பற்றிக் கூறுகின்றன. சங்க இலக்கியப் பாடல்களைப் பாடிய 473 புலவர்களில் 378 புலவர்கள் அகப்பொருளைப் பாடியவர்கள் ஆவார்கள். இதன் மூலம் சங்கக் காலத்துச் சான்றோர் அகப்பொருள் இலக்கியத்திற்குத் தந்த சிறப்பையும், முதன்மையையும் நாம் அறியக்கூடியதாக உள்ளது. மகன் - தாய் - அண்ணன்- தம்பி ஆகியோரிடத்து ஒவ்வொரு நிலையிலும் அன்பு என்னும் காதல் காட்டப்படுகின்றது. குறுந்தொகையில் இக் காதல் தலைவன் தலைவியிடத்தும், தலைவி தோழியிடத்தும், செவிலி நற்றாயிடத்தும், தலைவன் பாங்கனிடத்தும், ஒருவர் மற்றொருவரிடத்தும் காட்டுகின்ற அன்பின் விளக்கமாக அமைந்துள்ளது.

தொல்காப்பியத்தில்; வருகின்ற கற்பு என்கின்ற இடங்களை ஆராய்ந்தால் அது இல்லறம் என்கின்ற பொருளையே குறிக்கின்றது என ஆய்வாளர்கள் கூறுவார்கள். பத்துவிதமான திருமணங்கள் சங்கக் காலத்தில் நடந்ததாக நாம் அறியக்கூடியதாக உள்ளது.

1. களவு மணம்
2. தொன்றியல் மரபின் மன்றல்
3. பரிசல் கொடுத்து மணத்தல்
4. சேவை மணம்
5. திணைக் கலப்பு மணம்
6. ஏறு தழுவி மணமுடித்தல்
7. மடலேறி மணமுடித்தல்
8. போர் நிகழ்த்தி மணமுடித்தல்
9. துணங்கையாடி மணத்தல்
10. பலதார மணம்

இதில் களவு மணம் குறித்துச் சற்றுக் கவனிப்போம்.

களவியல் குறித்த பொருள் விளக்கச் சிந்தனை, ஒரு நீண்ட பரிணாம வளர்ச்சியின் ஊடாகவே நிகழ்ந்துள்ளது. தமிழ் இலக்கண வரலாற்றில் தொல்காப்பியம் தொடங்கிச் சோழர் கால உரையாசிரியர் வரை இந்த சிந்தனைப் போக்கின் பரிணாமத்தை அறிந்து கொள்ள முடியும்.

தொல்காப்பியர் தமது நூற்பா ஆக்கத்தினை இரண்டு வழிகளில் மேற்கொண்டுள்ளார். முதலாவது - முன்னோர் கருத்தை ஏற்று மொழிவது. இரண்டாவது - தாமே படைத்து மொழிவது. களவியலைப் பொறுத்த வரையில் அதன் பொருள் விளக்கத்தைத் தொல்காப்பியர் தானே படைத்து மொழிந்துள்ளார். ஆகவே தொல்காப்பியர் காலத்து முந்திய களவியல் பற்றிய பொருள் விளக்கத்தை இப்போது அறிய இயலாமல் உள்ளது.

களவுக் காதல் வாழ்வைப் பல துறைகளாக அமைத்துச் சுவைபடச் சங்கப் புலவர்கள் பாடியுள்ளார்கள். காமம் நுகர்வதற்குரிய குமர்ப் பருவமடைந்த, எங்கோ பிறந்த தலைவனும் தலைவியும், எதிர்பாராத விதத்தில் ஓரிடத்தில் எதிர்ப்பட்டு ஒருவரிடத்தில் ஒருவர் அன்பு கொண்டு காதல் கொள்வதனை இயற்கைப் புணர்ச்சி என்று அக இலக்கணம் கூறுகின்றது. இவ்வாறு சந்தித்து மனமொன்றிய காதலர்கள் மீண்டும் சந்திக்க வேட்கை கொண்டு, முன்பு சந்தித்த இடத்தில் சந்தித்து மகிழ்ச்சி கொள்வது 'இடந்தலைப்பாடு' என்று அழைக்கப்பட்டது. அந்தக் களவுக் கூடல் தலைவனின் தோழனின் உதவியால் நடைபெறும் என்றால் அது 'பாங்கற் கூட்டம்' என்றும், தலைவியின் தோழி வாயிலாக நிகழுமென்றால் அது 'பாங்கியற் கூட்டம்' என்றும் வழங்கப்பட்டது.

வேட்கை மிகுதியால் களவுக் காதலர்கள் இரவிலும், பகலிலும் தோழியின் துணையால் சந்தித்து அளவளாவுதல் உண்டு. இவ்வாறு பகலில் நடைபெறும் காதலர் கூடல் பகற்குறி என்றும், இரவில் நடைபெறும் களவுக் கூடல் இரவுக்குறி என்றும் வழங்கப்பட்டது.

இங்கே ஒரு விடயத்தை வாசகர்கள் கவனிக்க வேண்டும். சங்கக் காலத்துக் களவுக் காதல், கற்பு வாழ்விற்கு ஒரு வாயிலாக அமைந்தது. கற்பு என்பதற்கு இல்லறம் என்ற பொருளையே தொல்காப்பியர் சொல்வது இங்கு கவனிக்கத்தக்கது. ஆகவே அக்களவுக் காதல் புனிதமானது. சங்கக் காலச் சமுதாயம் களவுக் காதலை மதித்தது, போற்றியது. கற்பு வாழ்வுக்கு அதாவது இல்லற வாழ்விற்கு வழி வகுத்துக் கொடுத்தது. சங்கக் காலக் களவுக் காதலின் நெறியைக் குறித்து:

'களவொழுக்கம் தூயது, களவுக் காதலர் மன மாசற்றவர், மணந்து கொள்ளும் உள்ளத்தவர், களவுக் காதல் வெளிப்பட்ட பின்னரும் வாழ்பவர்'

- என்று ஆய்வாளர், முனைவர் வ. சு. ப. மாணிக்கம் அவர்கள் கூறியதை இங்கே நினைவு கூறுகின்றோம்.

களவுக் காதலர் மணம் புரிந்து, இல்லறம் என்னும் நல்லறத்தை இனிது நடத்துதலைப் பற்றிக் கூறுவது, கற்பொழுக்கம் ஆகும். அகத்தினைக் கூறும் தூய்மையான அறங்களுள் தலையானது களவு வழிப்பட்ட கற்பு வாழ்க்கையாகும்.

'காதல் என்பது இன்பத்துள் பேரின்பம், உணர்ச்சியுள் பேருணர்ச்சி, ஆற்றலுள் பேராற்றல், அடிப்படையுள் பேரடிப்படை, எல்லோருக்கும் உரியது, நட்பினுள் இரு பாலரையும் இணைப்பது என்பதைச் சங்கத் தமிழர்கள் அறிந்திருந்தார்கள்' என்றும் ஆய்வாளர், முனைவர் வ.சு.ப.மாணிக்கம் அவர்கள் குறிப்பிடுகின்றார்.

காதலால் ஒருமித்துச் சேர்ந்து வாழ்ந்தவர்களில் மத்தியில் பிரச்சனைகள் ஏற்பட்டுப் பிரிவு ஏற்பட்டபோது, அதனைத் தடுப்பதற்காகப் பின்னாளில் திருமணம் என்ற சடங்கு அறிமுகப்படுத்தப்பட்டது. அதனைத் தொல்காப்பியர் கீழ்வருமாறு கூறுகின்றார்:

'பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர்
அய்யர் யாத்தனர் கரணம் என்ப"

இங்கே 'அய்யர்' என்று சொல்லப்படுபவர்கள் நீங்கள் நினைப்பது போல் பிராமணர் அல்லர்! சமுதாயத்தில் உயர்ந்தவர்களாக, பெரியவர்களாக, சான்றோர்களாக அறியப்பட்டவர்களை, ஏற்றுக்கொள்ளப்பட்டவர்களை ~அய்யன்| என்று தொல்காப்பியர் காலச் சமுதாயம் அழைத்தது. அதேபோல் 'கரணம்' என்பதற்கு அர்த்தம் திருமணச் சடங்காகும்.

அதாவது காதல் வயப்பட்டு ஒன்றாக வாழ்ந்தவர்களது வாழ்வில் பிரிவு வரக்கூடாது என்பதற்காகப் பின்னாளில் ஊர்கூடித் திருமணச் சடங்கை நடாத்தியது. அதன் காரணமாக இல் வாழ்க்கையில் இணைந்தவர்கள் சமுதாயத்திற்கும் பொறுப்பாகவும், அச்சமுதாயம் அவர்களுக்குப் பொறுப்பாகவும் இருக்கின்ற சூழ்நிலை உருவாகியது. எனவே களவு முறையில் தோன்றும் பொய்யையும், வழுவையும் 'கரணம்' தடுக்கும் என்றும், தடுப்பதற்காகவே கரணத்தை அமைத்தனர் என்னும் கட்டுப்பாட்டுத்தன்மை, தமிழ் சமுதாயத்தில் பின்னர் உருவாயிற்று.

தமிழன் காதலில் திளைத்த பின்பே இல்லறத்தை நாடியவன் என்பதற்குக் காமத்துப்பால் எழுதிய திருவள்ளுவரும் சாட்சிக்கு நிற்கின்றார். அறத்துப்பாலையும், பொருட்பாலையும் விட காமத்துப்பாலில் நளினமும், இனிமையும் கூட இருப்பதை வாசகர்கள் அறிவீர்கள். நறுக்குத் தெறித்தாற்போல் காதலைப் பற்றியும், காமத்தைப் பற்றியும் வள்ளுவர் கூறினாலும் அதிலிருக்கும் பொருளோ எல்லை கடந்ததாக உள்ளது.

'யான் நோக்குங்காலை நிலன் நோக்கும் நோக்காக்கால்
தான் நோக்கி மெல்ல நகும்’ - திருக்குறள் 1094

- என்ற குறளில் தலைவனும், தலைவியும் ஒருவரை ஒருவர் நோக்கெதிர் நோக்குகின்றார்கள். தலைவியோ தனக்கே உரிய நாணத்தின் காரணமாக நிலத்தை நோக்கினாள். தலைவன் தன்னைப் பாராதவிடத்துத் தலைவி அவனை நோக்கி மெல்லப் புன்முறுவல் செய்தாள். தலைவனுக்குத் தனது உள்ள விருப்பைத் தனது மலரும் முகத்தினால் தலைவி வெளிப்படுத்தினாள். தலைவனும் தலைவியிடம் தோன்றிய புகுமுகம் புரிதல் மெய்ப்பாட்டால் அவள் தன்னை மனப்பூர்வமாக விரும்புகின்றாள் என்பதனை அறிந்து கொண்டான் - என்று பார்வையினூடே காதலைப் படர விடுகின்றார் வள்ளுவர்.

வள்ளுவர் சுட்டிக்காட்டுகின்ற இன்னுமொரு தலைவியோ வேறு விதப் பார்வையினால் தன் காதலை வெளிப்படுத்துகின்றாள். தலைவனை நேரடியாக நோக்காது, வேறொரு பொருளை நோக்குவதுபோல் முகம் காட்டிக்கொண்டு ஒரு விழிப் பார்வையால் தலைவனை நோக்கித் தன்னுள்ளே மகிழ்ந்தாள் என்பதனை, 'குறிக்கொண்டு நோக்காமை அல்லால் ஒரு கண்
சிறக்கணித்தாள் போல நகும்" - குறள் 1095

- என்ற குறள் மூலம் வள்ளுவர் அழகாகச் சொல்லிக் காதல் இன்பத்தை வெளிக்கொண்டு வருகிறார்.

பண்டைத் தமிழனின் காதல் வாழ்க்கை முறை, பின்னர் ஆரியர் ஆக்கிரமிப்பின் பின்னர் மறையத் தொடங்கியது. பெண்ணடிமை மிக்க சடங்குகளும், வாழ்க்கை முறைகளும் தமிழனின் வாழ்வைச் சீரழிக்க ஆரம்பித்தன. பண்டைத் தமிழர் காலத்தில் காதல் எவ்வவளவு வலுவாக இருந்தது என்பதற்கு ஒரு காரணத்தைச் சுட்டிக் காட்ட விரும்புகின்றோம். தமிழர்களுக்கு எதிராக எழுதப்பட்ட இராமாயணத்தை தெள்ளு தமிழில், தேனூறும் சொற்பரப்பிக் கம்ப நாடான் மொழி பெயர்த்தான். வால்மீகி இராமாயணத்தில் இல்லாத ஒரு காட்சியைக் கம்பன் தனது கம்பராமாயணத்தில் காட்டுகின்றான்.

வில்லை முறித்துச் சீதையை மணப்பதற்காக இராமன் வருகின்றான். வில்லை முறிக்கின்றான். சீதையை மணக்கின்றான். இது வால்மீகி இராமாயணம். கம்பனின் இராமாயணத்திலோ வில்லை முறிக்க வரும் இராமனை, மேல் மாடத்திலிருந்து சீதை பார்க்கின்றாள். இராமனும் அவளை நோக்குகின்றாள். இருவரது கண்களும் ஒருவரை ஒருவர் முதல் தடவையாகப் பார்க்கின்றன. காதல் வசப்படுகின்றன. உள்ளக் குறிப்புரைகளைக் கண்களால் பேசிக் கொள்கின்றன. ஒருவரது உள்ளத்தை ஒருவர் உள்ளம் ஈர்க்கின்றது. இராமன் உள்ளத்தில் சீதையும், சீதை உள்ளத்தில் இராமனும் குடி புகுந்தனர். தமிழர் காதல் பண்பாட்டின் அடிப்படையான புகுமுகம் புரிதல் மெய்ப்பாடு இங்கே கம்பனால் காட்டப்படுகின்றது. அதனைக் கம்பன் இவ்வாறு எழுதுகின்றார்:

'எண்ணரும் நலத்தினாள் இளையள் நின்றுழி
கண்ணொடு கண்ணினைக் கவ்வி ஒன்றையொன்;று
உண்ணவும் நிலைபெறாமல் உணர்வும் ஒன்றிட
அண்ணலும் நோக்கினான் - அவளும் நோக்கினாள்."

'பருகிய நோக்கெனும் பாசத்தால் பிணித்து
ஒருவரை ஒருவர் தம் உள்ளம் ஈர்த்தலால்
வரிசிலை அண்ணலும் வாட்கண் நங்கையும்
இருவரும் மாறிப் புக்கு இதயம் எய்தினர்"
- (கம்பராமாயணம் - பாலகாண்டம் செய்யுள் 590 , 592)

தமிழன் காதலிக்காமல் திருமணம் செய்வதில்லை. எனவே கம்பர் தமிழர்களுக்கு எதிரான இராமயணத்தைத் தமிழாக்கி, தமிழருக்குள் கொண்டு வரும்போது இப்படி இடையில் ஒரு காதல் காட்சியைப் புகுத்தி இராமன் சீதைத் திருமணத்தை, ஒரு காதல் வீரத் திருமணமாகக் காட்ட வேண்டிய நிர்ப்பந்தம் அன்று அவருக்கு இருந்தது. இது தமிழரின் காதல் வாழ்விற்கு ஓர் எடுத்துக்காட்டல்லவா?

இன்று நாம் புலம்பெயர்ந்துள்ள வெளிநாடுகளில் காதலின் அடையாளமாகக் கொடுக்கப்படும் மலர்கள், எம் தமிழர் வாழ்விலும் பெரும் பங்கு வகித்தன என்பதும் ஒரு வரலாற்று உண்மை. தமிழ்நாட்டில் மலர்கள் மங்கையர் கூந்தலிலும், மனங்களிலும், இல்லங்களிலும் இன்றும் கூட முக்கிய இடத்தை வகித்து வருகின்றன.

அன்புக்குரிய வாசகர்களே! தமிழனின் கடல் போன்ற காதல் வாழ்வைச் சொல்வதற்காக முக்குளித்து ஒரு துளியை மட்டும் இன்று சொல்ல முனைந்தோம். இந்தக் கட்டுரைக்குச் சங்கக் காலப் பாடல்கள், தொல்காப்பியம், திருக்குறள், கம்பராமாயணம் போன்றவற்றோடு சங்க இலக்கியத்தில் காதல் மெய்ப்பாடுகள், தொல்தமிழர் சமயம், குறுந்தொகை காட்டும் காதல் வாழ்க்கை போன்ற நூல்களும் உதவின. இது உங்கள் காதல் தீயை இன்னும் கொழுந்து விட்டெரியச் செய்யும் என்றே நம்புகின்றோம்.

நன்றி -சபேசன் (அவுஸ்திரேலியா)-

2 Comments:

கருப்பன் (A) Sundar said...

காதலர் தினம் இந்தியாவில், கடந்த பத்தாண்டுக்குள், அதிபயங்கர வளர்ச்சி கண்டுள்ளது (கமர்சியலாக)! எல்லா டீவி, மற்ற மீடியாக்களும் இதற்காக வேட்டியை மடித்துகட்டிக்கொண்டு வேலை பார்க்கின்றனர்.

(அவுஸ்திரேலியா)-வா??? ஜெர்மனியில் இருக்கின்றீரா??

உண்மைத்தமிழன் said...

சபேசன் மிக அழகான பதிவு.. எனக்கு தமிழ் செய்யுளில், இலக்கணத்தில் அவ்வளவு பரிச்சயம் இல்லை. ஆனால் ஆர்வம் உண்டு. மிக எளிய தமிழில் கடைசிவரைக்கும் படிக்க வைத்துள்ளீர்கள். உங்களிடமிருந்தும் நிறைய கற்றுக் கொள்ள வேண்டியுள்ளது என்று நினைக்கிறேன் எப்படி எழுத வேண்டும் என்பதை..

நன்றிகள் உரித்தாகட்டும்..

வாழ்க வளமுடன்..