Wednesday, February 6, 2008

அரசியல் தீர்வுத் திட்டம் எதுவுமின்றி பயங்கரவாதத்தை தோற்கடிக்க கங்கணம் கட்டி நின்றால் நாடு மேலும் கொடுக்கவேண்டிய விலைதான் என்ன...?

இலங்கை இன்று மிக இக்கட்டானதும் இருள் சூழ்ந்ததுமான பாதையில் பயணித்துக் கொண்டிருக்கின்றது. நாடெங்கிலும் மனித உயிர்கள் அழிக்கப்படுவதும் மரண ஓலங்களும் நாளாந்த நிகழ்வுகளாகியுள்ளன. நாடு 443 வருடங்களாக சுரண்டல் நிறைந்த அந்நிய ஆதிக்கத்திலிருந்து 1948 இல் சுதந்திரம் அடைந்ததாயினும், அன்று முதல் நாட்டில் நல்லாட்சி நிலவாமல் படிப்படியாகச் சீரழிக்கப்பட்டு வந்துள்ளதன் ஒட்டுமொத்த அறுவடையாகவே இன்றைய துர்ப்பாக்கிய நிலையினை நோக்க வேண்டும். மாறாக, இவையெல்லாம் ஒருபுறமிருக்கையில், மறுபுறத்தில் 60 ஆவது சுதந்திர தினம் படை அணிவகுப்பு மற்றும் யுத்தமயமான சாகஸங்கள் உள்ளிட்டு நேற்று முன்தினம் காலி முகத்திடலில் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. வைபவத்தில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ஆற்றிய தனதுரையில் குறிப்பிட்டிருந்த சில அம்சங்களைப் பார்ப்போம்.

(அ) கிழக்கைப் போல் வடக்கையும் பயங்கரவாதத்தின் பிடியிலிருந்து மீட்டு அங்குள்ள மக்களுக்கு அரசியல் தீர்வையும் அரசியல் சுதந்திரத்தையும் பெற்றுக்கொடுப்போம்;

(ஆ) சுதந்திரம் பெற்று ஆறு தசாப்தங்கள் கடந்துவிட்டாலும் அதன் மூன்று தசாப்தங்கள் மிகவும் பரிதாபமான சாபக்கேடான பயங்கரவாதத்துடனும் கோரமான அனுபவங்களுடனும் வாழ வேண்டிய நிலை இலங்கை மக்களுக்கு ஏற்பட்டது.

(இ) நாட்டைப்பற்றிக் குறைகூறிக் கொண்டிருப்பதும் இழந்த சந்தர்ப்பங்கள் பற்றி பெருமூச்சு விட்டுக் கொண்டு இருப்பதும் நாட்டுக்குச் செய்யும் துரோகமாகவும், காட்டிக் கொடுக்கும் தன்மை யாகவும் கருதவேண்டிய காலம் வந்துவிட்டது. சிங்கப்பூர் போன்ற முன்னேறிய நாடுகளுடன் ஒப்பிட்டுப் பார்ப்பதிலும் அர்த்தமில்லை.

(ஈ) சரித்திரத்தில் ஒருநாளும் பெற்றுக்கொள்ளாத வெற்றிகளை அரச படையினர் பெற்றுக்கொண்டிருக்கின்றனர். அதேபோல் சரித்திரத்தில் ஒருநாளும் பெறாத தோல்வியை இன்று பயங்கரவாதம் தழுவிக் கொண்டிருக்கின்றது.

(உ) ஒற்றையாட்சியின் கீழ் செயற்படுத்தக்கூடிய தீர்வை இன்றைய அரசியலமைப்பின் ஊடாக வழங்குவோம். மாறாக பரீட்சார்த்தமான தீர்வுகளெதுவும் தேவையில்லை.

தமிழ் பேசும் மக்களுக்கு இற்றைவரை அரசியல் தீர்வோ அரசியல் சுதந்திரமோ கிட்டவில்லை என்பது ஏற்றுக்கொள்ளப்படுகிறது. அதற்காக 3 தசாப்தங்களாக மேற்கொண்ட சமாதான முயற்சிகள் கண்மூடித்தனமாக புறந்தள்ளப்பட்டதன் காரணமாகவே பயங்கரவாதம் எனப்படும் ஆயுதப்போராட்டம் வெடித்தது என்பது ஒத்துக்கொள்ளப்படவில்லை. நாடு பின்தங்கியுள்ள நிலையில் அதனையிட்டு ஆழ்ந்து சிந்தித்து சுயவிமர்சனம் செய்து முன்னேறிய நாடுகள் போல் எமது நாடும் முன்னேற்றம் கண்டு சர்வதேச சமூகத்தில் தலைநிமிர்ந்து நிற்க வேண்டுமென்று பேசும் சுதந்திரம் எந்தவொரு பிரஜைக்கும் உண்டு. அது தான் தேசப்பற்று. நம்பகத்தன்மையான அரசியல் தீர்வுத் திட்டம் எதுவுமின்றி பயங்கரவாதத்தை முற்றாகத் தோற்கடிக்க வேண்டுமென கங்கணக் கட்டி நின்றால் அதற்கு நாடு மேலும் கொடுக்க வேண்டிய விலைதான் என்ன என்பது ஆழ்ந்து சிந்திக்கப்பட வேண்டியதொன்றாகும். சுதந்திரம் என்பதை நாளுக்கு நாள் அர்த்தபுஷ்டியாக்கிக்கொள்ள வேண்டுமென தான் நம்புவதாக ஜனாதிபதி தனதுரையில் கூறியுள்ளார்.

அதற்கு, தேசிய இனப்பிரச்சினைக்கு அர்த்தபுஷ்டியான அரசியல் தீர்வு அவசியமாகும். மாறாக, 13 ஆவது திருத்தம் முழுமையான அமுலாக்கம் பற்றி இன்று பேசப்படுவது உதவப்போவதில்லை என்பதை நாம் மிக ஆணித்தரமாகக் கூறிவைக்க விரும்புகிறோம்.

ஹன்டி பேரின்பநாயகம் - பூர்ண சுவராஜ்

இலங்கைக்கு முழுமையான சுதந்திரம் (பூர்ணசுவராஜ்) வேண்டுமென்று அன்று யாழ்ப்பாண இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஹன்டி பேரின்பநாயகம் தான் முதலில் பிரேரித்தவர் என்பதையும் ஜனாதிபதி ராஜபக்ஷ தனதுரையில் குறிப்பிட்டுள்ளார். பெரிதும் வரவேற்புக்குரியதாகும். ஏனென்றால் அன்று யாழ்ப்பாண இளைஞர் காங்கிரஸ் வடக்குக்கும் தெற்குக்கும் இடையிலானதொரு அற்புதமான பாலமாக விளங்கியது. குறிப்பாக, சிங்கள- தமிழ் ஒற்றுமையைக் கட்டியெழுப்புவதிலும் இனவாதம், என்ற பேச்சுக்கே இடமிருக்கக்கூடாது என்பதிலும் மிக கண்டிப்பாகவும் ஒப்பற்ற அர்ப்பணிப்புடனும் ஹன்டி செயற்பட்டவர் என்று கூறினால் அது கிஞ்சித்தும் மிகையல்ல. தெற்கிலிருந்து பி.டி.ஈ.எஸ். குலரத்ன போன்ற தலைசிறந்த கல்விமான்களும் என்.எம். பெரேரா, எஸ்.ஏ. விக்ரமசிங்க மற்றும் எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்க போன்ற அரசியல் தலைவர்களும் யாழ்ப்பாண இளைஞர் காங்கிரஸின் அமர்வுகளில் பங்குபற்றி உரையாற்றியிருந்தனர். 1920 களில் நிகழ்ந்த அந்த மகத்தான வரலாற்றினை இன்று தென்னிலங்கையில் பிரசாரப்படுத்துவதற்கு ஜனாதிபதி ராஜபக்ஷ நடவடிக்கை எடுக்க வேண்டுமென நாம் பெரிதும் விரும்புகிறோம்.

கொல்வின் ஆர்.டி.சில்வா 1948 இல் கூறியவை

1948 பெப்ரவரியில் இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்த போது கொல்வின் ஆர்.டி.சில்வா "சுதந்திரம் போலியானதா உண்மையானதா?" எனும் தலைப்பில் வரைந்திருந்த கட்டுரையில் வெளியிட்டிருந்ததொரு கருத்தினை மீட்டுப்பார்ப்பது இச்சந்தர்ப்பத்தில் சாலப்பொருத்தமானதாயிருக்குமென நினைக்கிறேன்.

"மகுல்பெற' இசை ஒலிக்க பெப்ரவரி 4 ஆம் திகதி சுதந்திரம் வந்தடைகிறது. பல இலட்சக்கணக்கான பணம் விரயமாக்கப்படுகிறது. `பிரித்தானிய பொதுநல நாடுகளுக்குள் முழுமையான பொறுப்புக்கொண்ட அந்தஸ்து' எனும் நிலையினை இலங்கை எய்துகின்றது. பரந்துபட்ட இந்த நாட்டு மக்கள் இதனையிட்டு குதூகலிப்பதற்கு எதுவும் உண்டா? இல்லவே இல்லை என்பதுதான் எமது தெட்டத்தெளிவானதும் அசைக்க முடியாததுமான பதிலாகும். பிரதமர் டி.எஸ்.சேனநாயக்க மற்றும் தேசாதிபதி மேசன் மூல் இருவரும் இலங்கைக்கு கொண்டு வந்துள்ள `புதிய அந்தஸ்து' பரந்துப்பட்ட மக்கள் ஆர்வம் கொள்வதற்கோ அவர்கள் இருவரும் பிரகடனப்படுத்தும் `சுதந்திரம்' மீது பூரிப்படைவதற்கோ ஒன்றுமே இல்லை. ஏனென்றால், இது சுதந்திரம் அல்ல என்பது மட்டுமல்லாமல், உண்மையில் அது பிரித்தானிய ஏகாதிபத்தியத்துடனான அடிமை விலங்குகளுக்கு புதுவடிவம் கொடுக்கும் செயலாகும். அதுதான் பிரித்தானிய ஆட்சி தொடர்வதற்கான வழிவகையாகும். இலங்கை மீது பிரித்தானிய ஏகாதிபத்தியத்தின் பொருளாதார ஆதிக்கம் தொடரும். அவரின் கட்டுப்பாட்டில் நாட்டின் பொருளாதாரம் இருக்கிறதோ எவரின் கட்டுப்பாட்டிலேயே அரசும் அதன் எந்திரமும் இருக்கும்". இவ்வாறு அன்று கொல்வின் கூறிவைத்தார்.

என்றும் அபிவிருத்தியடைந்து வரும் நாடு

நாடு சுதந்திரம் பெற்று 60 ஆண்டுகள் கழிந்த பின்னரும் இன்றும் `அபிவிருத்தியடைந்து வரும் நாடு' எனும் பரிதாப நிலையிலேயே இலங்கை தேங்கி நிற்கின்றது. அத்தோடு வெளிநாட்டுக் கடன்களில் பெரிதும் தொடர்ந்து தங்கியிருக்கும் நிலையில் இன்றைய முதலாளித்துவ உலக மயமாக்கல் வலையில் இலங்கை மாட்டுப்பட்டிருக்கின்றது. இந்த சிக்குப்பாட்டிலிருந்து எவ்வாறு விடுபடுவது என்ற சிந்தனையின்றியே காய்கள் நகர்த்தப்பட்டு வருகின்றன. உண்மையில் சுதந்திரம் கிடைத்த நாள் முதல் ஆட்சியாளரின் சொல்லொன்றும் செயலொன்றுமாகவே இருந்து வந்துள்ளது.

சுதந்திர தினத்தில் பண்டாரநாயக்க ஆற்றிய உரை

1948 பெப்ரவரி 4 ஆம் திகதி பிரித்தானிய "யூனியன் ஜக்" கொடி இறக்கப்பட்ட தருணத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் அன்றைய மூத்த தலைவரும் அமைச்சருமாயிருந்தவராகிய எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்க ஆற்றிய உரையில், "எமக்கு இந்த தருணத்தில் கிடைத்துள்ள அரசியல் சுதந்திரமானது உயிரோட்டம் பெற்று அறியாமை அகன்ற சுதந்திரம், நோய்நொடிகள் அற்ற சுதந்திரம், பஞ்சம்பட்டினியற்ற சுதந்திரம் மற்றும் பயம் பீதியற்ற சுதந்திரம் ஆகிய நான்கு சுதந்திரங்கள் அல்லது குறிக்கோள்கள் எட்டப்படாவிட்டால் எமது அரசியல் சுதந்திரம் வெறுமனே ஏட்டுச் சுதந்திரமாகவே இருக்கும்" எனக் கூறிவைத்தார். இந்த நான்கு குறிக்கோள்களும் உண்மையில் ஒட்டுமொத்தமாக எட்டப்படாமல் நாடு பெரிதும் குழம்பிய குட்டையாகவே கலங்கிநிற்கின்றது. சிங்கள- பௌத்த மேலாதிக்க சிந்தனையே இதன் சூத்திரதாரியாக இருந்து வந்துள்ளது. கொழும்பு கத்தோலிக்க சபையின் அதிமேற்றிராணியார் ஒஸ்வல்ட் கொமிஸ் தனது சுதந்திர தின உரையில் "வாழ், வாழ விடு" என அறைகூவல் விடுத்துள்ள அதேவேளை, "நாம் எவருமே எமது இனம், குலம், மதம் எதனையும் தெரிவு செய்தவர்கள் அல்லர். இவை இயற்கை எமக்களித்த வரங்கள். இந்த அடிப்படை உண்மையினை உணர்ந்து எல்லாவிதமான இன, மத ரீதியான ஆணவத்துக்கும் எதிராக கைகோர்த்து நிற்க என்று தலைப்படுகிறோமோ அன்றுதான் எமது சுபிட்சம் துளிர் விடும்" எனவும் சூளுரைத்துள்ளார். இத்தகைய விழுமியங்கள் தான் கண்டிப்பாகக் கடைப்பிடிக்கப்பட வேண்டியவையாகும்.

முதல் பிரதமர்

சுதந்திர இலங்கையின் முதலாவது பிரதமராகப் பதவியேற்றவராகிய டி.எஸ்.சேனாநாயக்க, உடனடியாகவே பெருந்தோட்டத்துறை, தமிழ் தொழிலாளர்களின் பிரஜா உரிமையையும் வாக்குரிமையையும் பறித்து அவர்களை அரசியல் அநாதைகளாக்கி விட்டார். அவர்கள் பெரும்பாலும் இடதுசாரிகளை ஆதரித்து வந்தவர்களாகையால், டி.எஸ்.சேனநாயக்க ஒரு கல்லில் இரண்டு மாங்காய் என்பதற்கிணங்க அன்று இடது சாரிகள் பெருந்தோட்டத்துறையில் கொண்டிருந்த பலத்தையும் உடைக்கும் நோக்கில் செயற்பட்டார்.

ஏன், சுதந்திரம் கிடைப்பதற்கு முன்னர் கூட, அவர் விவசாய அமைச்சராகச் செயற்பட்ட காலகட்டத்தில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களை நிறுவி, குறிப்பாக கிழக்கில் தமிழ் பேசும் மக்களின் இனவிகிதாசாரத்தை மட்டம் தட்டுவதில் ஈடுபட்டிருந்தவர்.

பின்னர், ஐ.தே.க. விலிருந்து விலகி ஷ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை ஸ்தாபித்தவராகிய எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்க 1756 இல் `தனிச் சிங்களம்' சட்டத்தினை இயற்றியதன் மூலம் தமிழரை அந்நியப்படுத்தி நாட்டையும் நட்டாற்றில் விட்டுவிட்டார். 1950களில் சிங்கப்பூர் முன்னாள் பிரதமர் லீகுவான் யூ இலங்கையை எட்டிப்பிடிப்பதற்குத் தவித்துக் கொண்டிருந்தவர். பின்னராக இலங்கையைப் பார்த்து லீ எள்ளிநகையாடுமளவுக்கு இலங்கை பரிதாபமாகப் பின் தங்கியுள்ளது. வேடிக்கை என்னவென்றால், 1980 களின் பின்னர் ஜே.ஆர்.ஜயவர்த்தன, ஆர்.பிரேமதாச போன்ற தலைவர்கள் இலங்கையை ஒரு சிங்கப்பூர் ஆக்க வேண்டுமென அவாவுற்றிருந்தனர் என்பதாகும்.

இலங்கை மேலும் மோசமான நிலைக்குத் தள்ளப்படும் அபாயம் அகற்றப்பட வேண்டுமென்பதே வரலாற்றுக் கட்டாயமாகும்.


வ. திருநாவுக்கரசு

0 Comments: