Wednesday, February 20, 2008

கொசோவோ மார்க்கத்தில் ஈழம்?

கொசோவோவின் ஒருதலைப்பட்ச தனிநாட்டுப் பிரகடனமும், அதற்கு சர்வதேசத்தில் சக்தி வாய்ந்த அமெரிக்கா மற்றும் பிரிட்டன், பிரான்ஸ் போன்ற முக்கிய ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் உடனடியாக வழங்கிய அங்கீகாரமும் இலங்கையில் பௌத்த சிங்களப் பேரினவாத மமதைப் போக்கில் வெறிகொண்டலையும் ஆளும் தரப்புகளுக்கு பெரும் அதிர்ச்சியாக வந்து அமைந்திருக்கின்றன.

கொசோவோவின் தனிநாட்டுப் பிரகடனத்தை எதிர்க்கின்ற ஒரு சில நாடுகளை எடுத்துப் பார்த்தால் அவற்றிடையேயும் ஓர் ஒத்த பொது பண்பு மிளிர்வதை நாம் காணமுடியும்.
சேர்பியாவிலிருந்து கொசோவோ பிரிந்ததால் சேர்பியா அந்தப் பிரிவினையைக் கடுமையாக எதிர்ப்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது.

அதேவேளை, ரஷ்யா, ஸ்பெயின், சைப்பிரஸ், சீனா, இலங்கை போன்றவையும் இந்தப் பிரகடனத்தை முழு அளவில் எதிர்த்திருக்கின்றன. அதற்கும் காரணம் இருக்கின்றது.
ரஷ்யா ஏற்கனவே செச்னியா, ஜோர்ஜியா பிரிவினைகளை எதிர்கொண்டுள்ளது. ஸ்பெயினில் பாஸ்க் பிரிவினைவாதிகளின் கோரிக்கை வலுத்து வருகின்றது. சைப்பிரஸ் ஏற்கனவே துருக்கி, கிரேக்க பிரதேசங்களாகப் பிளவுபட்டுக் கிடக்கின்றது. சீனாவுக்கு தைவானின் தனிநாட்டுப் பிரச்சினை தலையிடியாக உள்ளது. அதேசமயம் திபெத் பிரிவினைக் கோரிக்கையும் அங்கு நீண்ட காலமாக இழுபட்டு வருகின்றது. இலங்கை நிலைமையோ நமக்கு வெளிப்படையாகத் தெரிந்ததுதான்.

கொசோவோ விவகாரத்தில் இந்தியாவும் சற்று அமுக்கி வாசிக்கிறது. ஏனென்றால் இந்தியாவிலும் நாகலாந்து, காஷ்மீர் பிரிவினைப் பிரச்சினைகள் உள்ளன.
இப்படிப் பிரிவினைப் பிரச்சினையை எதிர்கொள்ளும் நாடுகள் எல்லாவற்றுக்குமே கொசோவோவின் தனிநாட்டுப் பிரகடனம் வயிற்றில் புளியைக் கரைத்திருப்பதற்கு முக்கிய பின்னணி உண்டு.

கொசோவோ விவகாரத்தை ஒட்டி ஐ.நா.தீர்மானம் ஒன்று உள்ளது. 1999 இல் நிறைவேற்றப்பட்ட 1244 ஆம் இலக்க மேற்படி தீர்மானத்தின்படி, கொசோவோ பிரதேசம் சேர்பியாவுக்கு உட்பட்டது. சேர்பியாவின் இறைமைக்குள்ளும் ஆளுகைக்குள்ளும் அடங்கும் பிரதேசம் அது என ஐ.நாவின் தீர்மானம் ஒன்று தெளிவாக வரையறை செய்கிறது.
இவ்வாறு முடிவு செய்த தீர்ப்பளித்த ஐ.நாவின் ஒரு தீர்மானம் இருக்கத்தக்கதாகவே , அதையும் மீறி, ஒரு தனிநாட்டுப் பிரகடனமும் அதற்கு மேற்குலக வல்லாதிக்கத்தின் முழு ஆதரவும், அங்கீகாரமும் வழங்கும் நிகழ்வுகளும் சர்வசாதாரணமாக நடந்தேறியிருக்கின்றன.
கொசோவோவில் பிரிவினைக்காகப் போராடிய கொசோவோ விடுதலை இராணுவம் முன்னர் பயங்கரவாத இயக்கமாக அறிவிக்கப்பட்டு அடையாளப்படுத்தப்பட்டதுதான். அதன் தலைவர் பயங்கரவாதத் தலைவராக அப்போது சித்திரிக்கப்பட்டார்.

ஆனால் இப்போது அந்தப் பயங்கரவாத முத்திரை களையப்பட்டு விட்டது. அந்த அமைப்பின் தலைவரை இன்று சுதந்திர கொசோவோ தேசத்தின் தலைவராக மேற்குலகம் ஏற்றுக்கொண்டு விட்டது.

இவற்றிலிருந்து கிடைக்கும் பாடம் பட்டறிவு என்ன?
தனது இறைமைக்கு உட்பட்ட ஒரு மக்கள் கூட்டத்துக்கு அந்த மக்கள் கூட்டம் நியாயமான உரிமைகளைக் கேட்டுப் போராடும்போது அவர்களைப் "பயங்கரவாதிகளாக' சித்திரித்து, அடையாளப்படுத்தி ஒதுக்கினாலும் அம்மக்களுக்கு நியாயமான தீர்வையும் நீதியையும் வழங்க வேண்டியது ஆட்சியாளர்களின் கடமையும் பொறுப்புமாகும். அதைச் செய்வதை விடுத்து ஆட்சியாளர்கள் தமது அதிகார, வன்முறைப் பலத்தாலும், இராணுவ அராஜகத்தாலும் அடக்கப்பட்ட அந்த மக்கள் கூட்டத்தைத் தொடர்ந்து அடக்கி, ஒடுக்கி, அட்டூழியம் புரிய முற்படுவார்களேயானால், பாதிக்கப்பட்ட மக்களின் சுயநிர்ணய உரிமையையும் தனித்துவமான ஏனைய உரிமைகளையும் எந்த எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் முன்னைய சர்வதேசத் தீர்மானங்கள் எவையாக இருந்தாலும் அவற்றையும் புறக்கணித்து அங்கீகரிக்க சர்வதேசம் பின்நிற்காது. அத்தகைய விடுதலைப் போராட்ட சக்திகளுக்கு சூட்டப்பட்ட பயங்கரவாத முத்திரையை அகற்றி, அந்தப் பக்கத்தில் உள்ள நியாயத்தை அங்கீகரிக்க உலகம் பின்னடிக்காது என்பதே அந்தப் பாடமாகும்.

இலங்கையில் ஈழத் தமிழர்களின் நீதியான, நியாயமான அபிலாஷைகளையும் கோரிக்கைகளையும் கவனத்தில் எடுக்க மறுத்து, அவற்றைப் புறக்கணித்து, அந்த மக்கள் கூட்டத்தை அடக்கி ஒடுக்குவதற்கு தனது இராணுவக் கொடூரப்பிடியை ஏவிவிட்டிருக்கும் கொழும்பு, உலகில் இந்த அனுபவப் பாடத்திலிருந்து கற்றறிந்து தெளியவேண்டிய அம்சங்கள் நிறையவே உள்ளன.

ஈழத் தமிழர்களுக்கு நீதி, நியாயமான தீர்வை முன்வைத்து, அமைதிப்பேச்சு மூலம் சமாதானத் தீர்வு காணும்படி மேற்குலகம் விடாது வற்புறுத்தி வருகையில்
அதனை ஒரேயடியாகப் புறக்கணித்து, உதாசீனம் செய்து, தமிழர் தேசத்தின் மீது கொடூரப் போர் ஒன்றை ஒருதலைப்பட்சமாகத் திணித்து, பேரழிவு நாசத்துக்கு கொழும்பு வழி செய்யுமானால்
மேற்குலகம், இலங்கை தொடர்பான தன்னுடைய தற்போதைய நிலைப்பாட்டை கொசோவோ விவகாரத்தில் தான் மாற்றிக்கொண்டு அந்தத் தேசத்தின் மக்களின் தனித்துவமான உரிமைகளை அங்கீகரித்தமை போல இங்கும் மாற்றிக்கொள்ள முற்படலாம்.
அப்படி நேருமானால் தற்போதைய இலங்கையின் நிலைமை தலைகீழாக மாறும். ஈழமும் ஒரு கொசோவோ ஆகும்.

அதைத் தவிர்ப்பதற்கான வழிவகைகளை ஆராய்ந்து முன்னெச்சரிக்கையாக வரமுன் காப்போராக புத்திசாதுரியமாக நடந்து கொள்வது கொழும்பைப் பொறுத்தது.
அல்லது இன்று கொசோவோவைக் கோட்டைவிட்டுவிட்டு சேர்பியா அரற்றுவது போல ஈழத்தைக் கோட்டை விட்டுவிட்டு கொழும்பும் அரற்ற வேண்டி நேரும்.

நன்றி :- உதயன்

3 Comments:

Anonymous said...

Thats good idea. But, if the declration is done now, what about recovering remaining part of Eelam which are under Srinlankan Army ??

Anonymous said...

அடடா நல்ல ஒரு கட்டுரை!!!
பொறுத்திருந்து பார்ப்போம் என்ன நடக்கின்றது என்பதை!

வெத்து வேட்டு said...

it looks like editor of this article didn't want to secede from Srilanka..why should we stay with Singalese even when they are ready to share power with us? wouldn't we have more power if we go alone like Kosovo?
:)