இலங்கை விமானப்படை 1986 ஆம் ஆண்டு தொடக்கத்தில் இத்தாலியத் தயாரிப்பான "சியாமாசெற்றி' குண்டுவீச்சு விமானங்களைத் தாக்குதலுக்குப் பயன்படுத் தத் தொடங்கியது. கடந்த 22 வருடங்களாக மேற்கொள்ளப்படும் விமானக்குண்டு வீச்சுக்களின் மூலம் உளவியல் ரீதியாகப் புலிகளையும் தமிழ் மக்களையும் பலவீனப்படுத்தவே விமானப்படை முயன்றிருக்கிறது. தற்போது புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள வன்னிப் பெருநிலப்பரப்பில் இலங்கை விமானப்படை நடத்திவரும் தொடர்ச்சியான விமானத் தாக்குதல்களும் அதுதொடர்பாக அரசதரப்பில் இருந்து வெளியிடப்படும் செய்திகளும் உளவியல் போர் நடவடிக்கையாகவே கருதத்தக்கவை.
இலங்கை விமானப்படையிடம் தற்போதுள்ள உயர்வலுப் போர் விமானங்களான கிபிர் மற்றும் மிக்27 என்பன நேரடியாகப் போர் நடவடிக்கைகளில் தரைப்படைக்கு உதவக் கூடியவையல்ல. இவை ஏதாவது கேந்திரநிலைகளை அழிக்கப் பயன்படக்கூடுமே தவிர முன்னரங்கப் போர்முனைகளில் துருப்புக்களுக்கு நேரடி உதவி புரிய முடியாதவை. முக்கிய நிலைகள், கேந்திர மையங்கள், கட்டளைத் தலைமையகங்கள், விநியோகத் தளங்களை இந்த விமானங்களால் தாக்கியழிக்க முடியும். தற்போது வன்னியைச்சூழ மணலாறு, வவுனியா, மன் னார், முகமாலைநாகர்கோவில் என பலமுனைகளில் முன்னெடுக்கப்பட்டுவரும் படை நடவடிக்கைகளுக்கும் விமானப்படை நடத்திவரும் குண்டு வீச்சுக்களுக்கும் நேரடித் தொடர்புகள் கிடையாது.
ஆனால், புலிகளின் முக்கிய தளங்கள் என இனங்கண்டு கொண்டதாகக் கருதும் இடங்களைக் குறிவைத்து விமானப்படை குண்டுத் தாக்குதல்களை நடத்தி வருகிறது. கடற்புலிகளின் தளங்கள், ஆட்லறி ஏவுதளங்கள், வான்புலிகளின் ஓடுபாதை, புலனாய்வுத் துறையின் தளங்கள், முக்கிய பிரமுகர்கள் கூடும் இடம் அல்லது அவர்கள் வசிக்கும் தளங்கள் ஆகியவற்றைத் தாக்கியழிக்கும் நோக்கில்தான் விமானப்படை தற்போது செயற்பட்டு வருகிறது.
அதாவது, அரசபடைகளின் இராணுவ வெற்றிகளுக்குக் குறுக்கீடாக இருக்கக்கூடிய இலக்குகளை அழித்துவிட்டதாகக்கூறும் ஒரு உத்திதான் இது. வன்னிப்பகுதியில் கடந்த மாதத்தில் (ஜனவரி 02 முதல் 31வரை) விமானப்படை மோசமான குண்டுவீச்சுக்களை நடத்தியது. விடத்தல்தீவு, பாலம்பிட்டி, அலம்பில், கோம்பாவில், உடையார்கட்டு, கனகபுரம், வள்ளிபுனம், கல்மடு, கைவேலி, செல்வநகர், கல்முனை, இரணைமடு, வெட்டுக்காடு, புதுக்குடியிருப்பு போன்ற இடங்களில் விமானப்படை 16 இற்கும் அதிக தடவைகள் தாக்குதலை நடத்தியது.
இவற்றில் ஒரே தினத்தில் பலதடவைகள் என்ற வகையில் 25 இற்கும் குறையாத குண்டுவீச்சுப் பறப்புக்களை விமானப்படையின் விமானங்கள் மேற்கொண்டன. இரண்டு முதல் ஆறு வரையிலான கிபிர் மற்றும் மிக்27 ஜெட் போர்விமானங்கள் ஒவ்வொரு தாக்குதல் பறப்புக்களின் போதும் பங்கெடுத்திருந்தன.
சாதாரணமாக 250 கிலோ எடையுள்ள குண்டுகள் முதல் 1000 கிலோ எடையுள்ள குண்டுகள் வரையில் இந்தத் தாக்குதல்களில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு தாக்குதலின் போதும் விமானப்படையால் வீசப்பட்ட மொத்த குண்டுகளின் எடை குறைந்தது 1000 கிலோவில் இருந்து 6000 கிலோ வரையில் இருக்கும் என மதிப்பிடப் பட்டிருக்கிறது. வன்னியில் இவ்வாறு நாளாந்தம் கொட்டப்படும் குண்டுகளின் பெறுமதி பல்லாயிரம் டொலர்களாகும். இந்தளவுக்குச் செலவழித்து விமானப்படை நடத்தி வரும் குண்டுத் தாக்குதல்கள் மூலம் புலிகளைப் பல வீனப்படுத்த அல்லது அவர்களின் ஆற்றலை அழிக்க முடிந்திருக்கிறதா என்பது முக்கியமான கேள்வியாகும்.
விமானப்படை நடத்துகின்ற தாக்குதல்கள் அனைத்துமே வெற்றிகரமானதென்றும் குறிப்பிட்ட தளம் முற்றாக அழிக்கப்பட்டு விட்டதாகவும் அரசாங்கத் தரப்பில் தகவல் வெளியிடப்படுகிறது. ஆனால், இவற்றில் எத் தனை தாக்குதல்கள் துல்லியமாக புலிகளின் தளத்தை அழிக்கும் வகையில் நடத்தப்பட்டன என்பதை சுயாதீனமாக உறுதிப்படுத்த முடியாது. அதேவேளை, விமானப்படை விமானங்கள் புலிகளின் தளங்கள் என்று கூறி நடத்திய தாக்குதல்கள் பல, பொதுமக்கள் குடியிருப்புக்களை அழித்ததும் அதில் அப்பாவிகள் கொல்லப்பட்டு , காயமுற் றதையும் நிராகரிக்க முடியாது. அத்துடன் வெற்றுத் தரைகளில் குழிகளை ஏற்படுத்திய தாக்குதல்களும் நிறையவே உள்ளன.
இத்தகைய தொடர்ச்சியான தாக்குதல்களால் வன்னிப் பகுதியில் இயல்பு வாழ்க்கை பெரிதும் சீர்குலைந்திருப்பதாக வெளியாகும் செய்திகள் உளவியல் ரீதியாக இவை பாதிப்பை ஏற்படுத்தியிருப்பதை உணரமுடி கிறது. ஆனால் புலிகளுக்கு இத்தகைய தாக்குதல்கள் எந்தளவுக்கு சேதத்தை ஏற்படுத்தியிருக்கும் என்பது கேள்விக்குரியது. புலிகள் பலம்மிக்க பதுங்குகுழிகளைக் கொண்டிருப்பது அவர்களுக்கு இத்தகைய குண்டு வீச்சுக்களில் இருந்து பாதுகாப்பைக் கொடுக்கிறது. கடந்த நவம்பர் 2 ஆம் திகதி பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் விமானத்தாக்குதலில் கொல்லப்பட்ட பின்னர் புலிகளின் தலைமையைக் குறிவைத்துக் குண்டுத் தாக்குதல்களை நடத்தி வருவதாகவும் புலிகளின் தலைவர் பிரபாகரனின் நடமாட்டத்தை அவதானித்து குண்டுவீச்சுக்கள் நடத்தப்படுவதாகவும் அரசாங்கம் சொல்லிவருகிறது. கடந்த நவம்பர் 28ஆம் திகதி மற்றும் கடந்த ஜனவரி 23ஆம் திகதிகளில் கிளிநொச்சியில் ஜெயந்தி நகர் மற்றும் இரணைமடுப் பகுதியில் நடத்தப்பட்ட குண்டுவீச்சுக்களின்போது புலிகளின் தலைவர் பிரபாகரன் காயமடைந்து அல்லது மரணமடைந்திருக்கலாம் என்று அரசாங்கம் பிரசாரம் செய்தது.
நவம்பர் தாக்குதலில் பிரபாகரன் கொல்லப்பட்டிருக்கலாம் என்றும் அவர் உயிருடன் இருப்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று கூறியவர்களே இரண்டாவது தாக்குதலில் அவர் கொல்லப்பட்டிருக்கலாம் என்று நம்புவதாகக் குறிப்பிட்டதுதான் வேடிக்கையின் உச்சக்கட்டம்.
இராணுவத் தளபதி மிக அண்மையில் கொடுத்த பேட்டியொன்றில் கூட பிரபாகரன் உயிருடன் இருக்கிறாரா என்று தெரியவில்லை என கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது. பிரபாகரனின் தளம் வேண்டுமானால் தாக்குதலுக்குள்ளாகியிருக்கலாம். ஆனால் நிலத்துக்கடியில் அவர் தங்கியிருக்கும் பதுங்குகுழிகளை அழிக்கின்ற வகையில் தாக்குதல் இடம்பெற்றதா என்பதே முக்கியமானது. பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் மரணத்துக்குப் பிறகு புலிகளின் முக்கிய தலைவர்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்தப்போவதாக அரசு அறிவித்து தொடர்ச்சியான தாக்குதல்களைத் தீவிரப்படுத்திய போதும் புலிகள் அதுபற்றி அலட்டிக் கொண்டதாகத் தெரியவில்லை. வன்னியில் புத்தக, இறுவட்டு வெளியீட்டு விழாக்கள், உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளும் தங்கு தடையின்றி நடைபெறுகின்றன. இந்த நிகழ்வுகளில் புலிகளின் உயர்மட்டத் தளபதிகள், பொறுப்பாளர்கள் பங்கெடுத்து வருகின்றனர்.
வன்னியின் போர்முனைகளிலும் தெற்கிலும் இடம் பெறும் தாக்குதல்கள் நெருக்கடிகளைக் கொடுத்து வரும் நிலையில் தென்பகுதி மக்களை ஆசுவாசப்படுத்தும் நோக்கில் விமானத் தாக்குதல்களையும் அது பற்றிய செய்திகளையும் அரசாங்கம் பயன்படுத்தி வருகிறது. தொடர்ச்சியாக இப்படித் தாக்குதல் நடத்துவது விமானப்படைக்கு பெரும் பொருளாதார நெருக்கடி யைக் கொடுக்கும் என்பதோடு அதுவே தென்பகுதி மக்கள் மத்தியில் விமானப்படை மீதான நம்பிக்கையீனத்தையும் தோற்றுவித்துவிடக்கூடும்.
thanks - வீரகேசரி வாரவெளியீடு
Sunday, February 3, 2008
விமானக்குண்டு வீச்சுக்களும் உளவியல் தாக்கங்களும்
Posted by tamil at 7:09 AM
Subscribe to:
Post Comments (Atom)
0 Comments:
Post a Comment