Saturday, February 16, 2008

கானல் நீருக்குக் காலக்கெடு

வாழ்வியலுக்கான நீதியும் நியாயமும் பலத்தை வைத்தே தீர்மானிக்கப்படுபவை என்ற உறுதியான கருத்து தென்னிலங்கையில் எப்போதுமே மேலோங்கி நிற்கின்றது.
அதன் அடிப்படையிலேயே தேசிய எண்ணிக்கை வீதத்தில் மிகச் சிறிய தொகையினரான தமிழ் பேசும் மக்களுக்குத் தொடர்ந்தும் நீதி மறுக்கப்பட்டு வருகின்றது, நியாயம் நிராகரிக்கப்பட்டு வருகின்றது.

ஜனநாயக ரீதியில் எண்ணிக்கைக் கணியங்களில் கணக்கெடுக்கும்போது இயல்பாகவே அதிக தொகையினரான பெரும்பான்மையினரின் ஆணையே முடிவே விருப்பே செல்லுபடியாகும் என்ற கோட்பாட்டின் கீழ், சிங்களவர்களின் ஏக ஆதிக்கம் தமிழர்கள் மீது தொடர்ந்தும் சாதாரணமாகவே திணிக்கப்பட்டு வந்தது; திணிக்கப்பட்டு வருகின்றது.
இலங்கையின் ஆட்சி அதிகாரம் பௌத்த சிங்களப் பேரினவாதிகளிடம் 1948 இல் உத்தியோகபூர்வமாக கைமாறியது முதல் கொண்டு, சிறுபான்மையினரான தமிழர்கள் கொடூர அடக்குமுறைக்கும் எதேச்சாதிகார நெருக்குதலுக்கும் ஆளாக நேரிட்டமையும்
அந்த அடக்குமுறைகளுக்கு எதிரான தமிழர்களின் சாத்வீக வழியிலான உரிமைப் போராட்டங்கள் பலாத்காரமாக படை வலிமை மூலம் அமுக்கி, அழிக்கப்பட்டமைக்கும்
இந்த எண்ணிக்கைப் பலமே மூல காரணமும் முக்கிய வசதியுமாயிற்று.

ஜனநாயகத்தின் பெயரால் எண்ணிக்கைப் பலம் மூலம் மறுக்கப்பட்ட தமது நியாயமான உரிமைகளை எப்படியேனும் பெற்றுக்கொள்வதற்காகத் தமிழர்கள் ஆயுதம் தரித்த எதிர்ப் புரட்சி மூலம் மாற்றுவழி நாடியபோது, அதையும் இராணுவப் பலம் மூலம் அடக்கி, அழிக்க கங்கணம் கட்டி நிற்கிறது ஆட்சி அதிகாரம்.
அந்தத் தீர்மானம் தென்னிலங்கையில் நாளுக்கு நாள் உறுதியாகி, இறுகி வருவதை நாம் இப்போது அவதானிக்கின்றோம்.

ஆனால், இவ்வாறு தேசிய இனப்பிரச்சினைக்கு நீதியான தீர்வு வேண்டி தமது வாழ்வியலுக்கான நியாயமான உரிமைகளை நாடி தமிழர்கள் நடத்தும் அரசியல், இராணுவப் போராட்டத்தை படைபலம் கொண்டு நசுக்கி அழிக்கும் தென்னிலங்கையின் கதை கானல் நீராகக் கண்ணுக்குத் தோற்றித் தோற்றித் தள்ளிப் போவதையும் நாம் கடந்த முப்பது ஆண்டுகால சரித்திரமாக அவதானித்து வருகின்றோம்.

"வென்று வா; அல்லது பூண்டோடு அழித்து வா!' என்ற ஆணையோடு ஆறு மாதக் காலக்கெடு கொடுத்து தமது முன்னணிப் படைத் தளபதி பிரிகேடியர் வீரதுங்கவை 1979 ஜூலையில் யாழ்ப்பாணத்துக்கு அனுப்பி வைத்தார் அப்போதைய நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்த்தனா.

1978 மே மாதத்தில் கொண்டு வரப்பட்ட "தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மற்றும் அது போன்ற பிற இயக்கங்களைத் தடை செய்தல் (தற்காலிக ஏற்பாடுகள்) ' சட்டத்தை, 1979 ஜூலை 20 இல் "பயங்கரவாதத் தடுப்பு (திருத்த)' சட்டமாக மாற்றியமைத்து, ஜூரி இல்லாத விசாரணை, கேட்டுக் கேள்வியில்லாத கைது, நீண்ட காலத் தடுத்து வைப்பு ஆகிய அதிகாரங்களை படைத்தரப்புக்கு வழங்கி, "பயங்கரவாதத்தைப் பூண்டோடு அழித்து வாருங்கள்' என்ற பணிப்புரையோடு ஆறு மாதக் காலக்கெடு கொடுத்து, அனுப்பி வைத்தார் ஜயவர்த்தனா.
என்ன ஆயிற்று?
தமிழருக்கு எதிரான அரச பயங்கரவாதம் கொடூர மிருகத்தன வடிவமெடுத்து, தமிழரின் எதிர்ப் புரட்சியை கிளர்ச்சியை மேன்மேலும் தீவிரமடைய வைத்ததே தவிர அதைத் தணிக்கச் செய்யவில்லை.

இவ்விடயத்தில், ஜே.ஆர்.ஜயவர்த்தனா அன்று தொடங்கிய காலக்கெடு விதிக்கும் ஆட்சி அதிகார மமதைப் போக்கு, இன்று வரை தொடர்கின்றது அவ்வப்போது காலக்கெடு நீடிப்புகளுடன்.

யாழ்ப்பாணக் குடாநாட்டைக் கைப்பற்றியதும் "" இதோ முக்கால் யுத்தம் முடிந்து விட்டது. எஞ்சிய கால்வாசி யுத்தமும் இந்தா முடியப்போகின்றது'' என்றும் ""தொண்ணூற்று ஐந்து வீதப் புலிகளை அழித்து விட்டோம். எஞ்சிய ஐந்து வீதப் புலிகளும் கூண்டோடு விரைவில் அழிக்கப்படுவர்'' என்றும் செருக்கோடு 1996 இல் பிரகடனப்படுத்தினார் அன்றைய "சப்புமல்குமரய' ஆன பிரதிப் பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் அனுருத்த ரத்வத்தை.

அந்த எஞ்சிய கால்வாசி யுத்தம் இன்னும் இப்போதும் பன்னிரண்டு ஆண்டுகள் கடந்தும் தொடர்கின்றது. அதுவும் அன்று எஞ்சி, மிஞ்சியிருந்த ஐந்து வீதப் புலிகளுடன் !
முன்னைய சிங்கள ஆட்சித் தலைமைகளுக்குத் தான் சிறிதும் வேறு பட்டதல்ல, அதே பௌத்த சிங்கள ஆட்சியதிகார மமதைப் போக்குப் பண்பே உடையது என்பதை இப்போதைய ஆட்சித் தலைமையும் ஒழுங்காக நிரூபித்து வருகின்றது.

தேசிய இனப்பிரச்சினைக்கு நீதி, நியாயமான தீர்வு ஒன்றை முன்வைத்து, அதன் மூலம் சிறுபான்மையினரான தமிழர்களின் மனதை வென்று,நிரந்தரத் தீர்வு ஒன்றைக் காண்பதை விடுத்து, முன்னைய ஆட்சித் தலைமைகள் போல இதுவும்தன் படைபலத்தால் வென்று அடக்கு முறைத் தீர்வைத் திணிக்கக் கங்கணம் கட்டி நிற்கின்றது என்பது தெளிவாக வெளிப்படுகின்றது.

புலிகளை அழித்தொழித்து, "பயங்கரவாதத்தை' பூண்டோடு களைதல் என்ற தேசியப் பிரகடனத்தை நிறைவு செய்வதற்கு குறுகிய காலக்கெடுக்களை விதித்து, அதை இப்போது மெல்ல, மெல்ல சற்றுப் பின்னோக்கி நகர்த்தி வரும் கொழும்பின் போக்கு இதைத் தெட்டத் தெளிவாக வெளிப்படுத்துகின்றது.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அவருக்கு அடுத்து அரசுக்குள் படைபல அதிகார செல்வாக்குடையவரான அவரது சகோதரரும் பாதுகாப்புச் செயலாளருமான கோட்டபாய ராஜபக்ஷ, இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சரத் பொன்சேகா ஆகியோர் இது தொடர்பில் வெளியிட்டு வரும் கருத்துகள் அவதானிக்கத்தக்கவை.
"வரும் ஓகஸ்ட்டுக்குள் புலிகள் கூண்டோடு காலி' என்றார்கள். "2008 இல் தமது பிறந்த தினத்தை எதிர்கொள்ள புலிகளின் தலைவர் பிரபாகரன் இருக்க மாட்டார். இதுதான் அவரது கடைசிப் பிறந்த நாள்.' என்றார்கள். பின்னர் "இவ்வருட இறுதிக்குள் புலிகள் முற்றாக அழிக்கப்படுவர்' என்று பிரகடனப்படுத்தினர். இப்போது "புலிகளை ஒடுக்க இன்னும் ஒன்றரை வருடங்களாவது தேவை ' என்கின்றனர்.

அதற்குப் பின்னரும் சற்று நழுவல். "இருபத்தியைந்து வருடம் நாசகார சக்தியாக வளர்ந்து விட்ட புலிகள் அமைப்பு போன்ற இயக்கத்தை முற்றாக அழிக்க இதுதான் திகதி என்று காலக்கெடு விதிக்க முடியாது. ஆனால் விரைவில் அவர்கள் இல்லாமல் செய்யப்பட்டு விடுவார்கள் ' என இப்போது கதை மாறுகின்றது.

இப்படிக் காலக்கெடு விதித்தலும், அதை நீட்டலும் என்ற நம்பிக்கையை "குதிரைக்கு முன்னால் கரட்டைக் கட்டித் தொங்க விட்ட மாதிரி' காட்டிக் கொண்டே தன்னுடைய ஆட்சி அதிகார நாட்களை இந்தத் தலைமையும் கொண்டிழுத்து விடும் போலவே தோன்றுகின்றது.
புலிகளை முற்றாக அழித்து, தமிழர்களின் கிளர்ச்சியை முளையோடு கிள்ளி எறிந்து, அதன் மூலம் இனப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு கண்டு விடும் "கானல் நீரை' தேடியபடி தென்னிலங்கை மக்களும் இந்த ஆட்சிக்குப் பின்னால் நம்பிக்கையோடு போக வேண்டியது தான்.

நன்றி - உதயன்

0 Comments: