Sunday, February 17, 2008

மனித உரிமைகள் தொடர்பில் சர்வதேசத்தின் கவனம் ஈர்ப்பு

விடுதலைப் புலிகளைப் பூண்டோடு அழித்து அதன்மூலம் இனப்பிரச்சினையை நிரந்தரமாகத் தீர்க்க முடியும் என மனக்கோட்டை கட்டியுள்ள கொழும்பு அரசு, அதற்குத் தனக்குத்தானே விதித்துக்கொண்ட காலக்கெடுவை, முன்னைய அரசுகளைப் போலவே மெல்ல மெல்லப் பின்நோக்கி நகர்த்துகின்றமை குறித்து சில தினங்களுக்கு முன்னர் இப்பத்தியில் ஆராய்ந்தோம். இந்த ஓகஸ்டில் இருந்து அடுத்தவருட இறுதிக்கு இப்போதைக்கு யுத்தத்தின் முடிவு காலத்துக்கான கெடு தள்ளிப்போடப்பட்டிருக்கின்றது. இன்னும் எவ்வளவு காலத்துக்கு இப்படியே இதுவழுவி நழுவி பின்நகரும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
புலிகளுக்கு எதிரான தீவிர யுத்தத்தில் கொழும்பு வெறிகொண்டு நிற்கையில், இலங்கையின் நிலைமையை நேரில் கண்டறிந்து தமக்கு அவதானிப்பு அறிக்கையைச் சமர்ப்பிப்பதற்காகத் தமது விசேட பிரதிநிதி ஒருவரை ஐ.நா.செயலாளர்நாயகம் பான் கீ மூன் நேரடியாக இலங்கைக்கு அனுப்புகின்றார்.

அரசியல் விவகாரங்களுக்கான தனது உதவிச் செயலாளர் நாயகம் அங்கெலா கனே அம்மையாரை அடுத்த ஞாயிற்றுக்கிழமை கொழும்புக்கு அனுப்பி வைக்கின்றார் ஐ.நா. செயலாளர் நாயகம்.
இலங்கை நிலைமை மோசமடைந்து வருகின்றமை குறித்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் நேரடியாகத் தொலைபேசிமூலம் உரையாடிய பின்னரே தமது விசேட பிரதிநிதியை இலங்கைக்கு அனுப்பும் தீர்மானத்துக்கு ஐ.நா.செயலாளர் நாயகம் வந்திருக்கின்றார்.

இதேசமயம், ஐ.நா. செயலாளர் நாயகத்தின் விசேட பிரதிநிதி இலங்கை வருவதற்கு மூன்று நாட்கள் முன்பதாக எதிர்வரும்21 ஆம் திகதி வியாழக்கிழமை நியூயோர்க்கில் கூடும் ஐ.நா. பாதுகாப்புச்சபையின் செயலணிக் குழுவில் இலங்கை விவகாரம் ஆராயப்படவிருக்கின்றது.
சிறார்களைப் படைக்குச் சேர்த்தல் உட்பட இலங்கையின் ஆயுத மோதல்களில் சிறுவர்களின் நிலை தொடர்பாக ஐ.நா. செயலாளர் நாயகத்தின் விசேட பிரதிநிதி ராதிகா குமாரசுவாமியும், அவரின் விசேட தூதுவர் அலன் றொக்கும் சமர்ப்பித்த அறிக்கைகள் நியூயோர்க் கூட்டத்தொடரில் விரிவாக ஆராயப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
சிறுவர்களைப் படைக்குச் சேர்க்கும் கருணா குழுவின் நடவடிக்கைகளுக்கு அரசுப் படைகள் ஒத்துழைப்பும் ஊக்கமும் அளித்து வருகின்றன என்று அலன் றொக் தமது அறிக்கையில் வெளிப்படுத்தியிருந்தார்.

இப்போது பிரிட்டனில் சிறையில் இருக்கும் கருணா, முழு உண்மைகளையும் பிரிட்டிஷ் அதிகாரிகளிடம் உளறிக் கொட்டிவிட்டார் என்று கருதப்படுகின்றது.
இந்த நிலையில் பிரிட்டனையும் ஓர் அங்கத்தவராகக் கொண்டுள்ள ஐ.நா. பாதுகாப்புச் சபையின் செயலணிக்குழுவில் இலங்கை விவகாரம் அதுவும் சிறுவர்களைப் படைக்குச் சேர்க்கும் விடயம் எடுக்கப்படும்போது, எந்தப் பாம்பு, எந்தப் புற்றுக்குள்ளிருந்து, எப்படிக் கிளம்பும் என்று தெரியாத நிலைமை காணப்படுவதாக விடயமறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

இதனால் இந்தக் கூட்டத் தொடரில் இலங்கையின் நலனைக் கவனித்து வாதாடுவதற்காக சட்டமா அதிபர், பிரதி சொலிசிட்டர் ஜெனரல், நீதி அமைச்சின் செயலாளர், ஐ.நாவுக்கான இலங்கையின் தூதுவர் என்று உயர்மட்டக் குழுவே நேரில் சென்று களத்தில் இறங்குகின்றது.
இதேசமயம், எதிர்வரும் மூன்றாம் திகதி ஜெனிவாவில் ஆரம்பமாகும் ஐ.நா. மனித உரிமைகைள் கவுன்ஸில் கூட்டத்திலும் இலங்கையில் மோசமாகியிருக்கும் மனித உரிமைகள் விவகாரம் எடுக்கப்படவிருக்கின்றது. அங்கும் நிலைமையைச் சமாளித்து, சர்வதேசத்தையும் "தாஜா' செய்து, அவற்றின் எரிச்சலையும், சீற்றத்தையும் அமுக்கி, அடக்குவதற்காக உயர்மட்டக் குழு ஒன்று கொழும்பிலிருந்து ஜெனிவா செல்லவுள்ளது.
இதற்கிடையில், டென்மார்க், சுவீடன், நெதர்லாந்து ஆகிய நாடுகளில் இருந்து ஐரோப்பிய ஒன்றியத்தின் மனித உரிமைகள் தூதுவர்கள் மூவர் இலங்கைக்கு வர எடுத்துள்ள முயற்சிக்குக் கொழும்பு இடமளிக்காமல் முட்டுக்கட்டை போட்டிருப்பதாகவும் அறியவருகிறது.
அதேநேரம் ஐரோப்பிய ஒன்றியத்தின் வேறு உயர்மட்ட அவதானிப்புக் குழு ஒன்று அடுத்தமாதம் கொழும்பு வருகின்றது. இக்குழுவில் பிரெஞ்சு வெளிவிவகார அமைச்சர் பேர்னாட் குச்னர், ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளிவிவகார ஆணையாளர் பெனீற்றா பெரேரோ வால்ட்னர் ஆகியோர் இடம்பெறுவர் என்றும் கூறப்படுகின்றது.

இவர்கள் இருவருமே மனித உரிமைகள் நிலைநிறுத்தப்பட்டுப் பேணப்படவேண்டும் என்பதில் கடும் போக்குத் தீவிரப்பற்றுள்ளவர்கள் என்பது குறிப்பிட்டுக் கூறக்கூடியது.
இவர்களில் குச்னர் இலங்கை விவகாரம் குறித்து நன்கு அறிந்தவர். பரிச்சயமானவர். முக்கிய மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரிக்கும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் நடவடிக்கைகளைக் கண்காணிப்பதற்கு நியமிக்கப்பட்ட சர்வதேசப் பிரமுகர்கள் குழுவில் இடம்பெற்றிருந்தவர். அது மட்டுமல்ல. "எல்லைகளற்ற பிரெஞ்சு மருத்துவர் அமைப்பு' என்ற மருத்துவத் தொண்டர் அமைப்பின் ஸ்தாபகர். தற்போது வடக்கு, கிழக்கில் மருத்துவத் தொண்டுப் பணியில் செயற்படும் இந்த அமைப்பின் ஊடாக இலங்கை விடயங்களை அத்துப்படியாக அறிந்து கொண்டவர் குச்னர்.

எனவே, இந்தக் குழுவின் இலங்கை வருகை, இலங்கை நிலைவரத்தை அப்பட்டமாகத் தெளிவுபடுத்தி, உலகுக்கு அம்பலப்படுத்த உதவும் என எதிர்பார்க்கலாம்.
மொத்தத்தில், இலங்கையில் மூடிமறைத்து, புதைக்கப்பட்ட மனித உரிமை மீறல்களையும், தொடரும் அத்தகைய அவலங்களையும் சர்வதேசமும் அறியத்தக்க வகையில் அவை அம்பலமாகும் காலமும், நேரமும் கனிந்து வருகின்றன என்றே படுகின்றது.

நன்றி
உதயன்

0 Comments: