எதிர்வரும் மார்ச்சு மாதம் 15 ஆம் நாள் Can Indo Lanka என்ற சஞ்சிகை ஸ்ரீலங்கா தூதரகத்தின் ஆதரவோடு 2008 ஊளுடு CSL Awards Gala என்ற நிகழ்ச்சியை DoubleTree International Hotel, Toronto, இல் நடத்த இருக்கிறது. இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக அர்ச்சுன இரணதுங்கா, நாடாளுமன்ற உறுப்பினர் அழைக்கப்பட்டுள்ளார்.
இதில் ஒரு வேடிக்கை கலந்த வேதனை என்னவென்றால் விருது பெறுவோர் பட்டியலில் பத்துக்கும் அதிகமான தமிழ்க் கனேடியர்களது பெயர்கள் இடம்பெற்றுள்ளன. இவர்களில் பெரும்பாலோர் கனடிய தமிழ்க் குமுதாயத்துக்கு நன்கு அறிமுகமானவர்கள். தமிழீழ விடுதலைப் போராட்ட மேடைகளில் தோன்றி உரையாற்றியவர்கள்.
விடிய விடிய இராமாயணம் விடிந்த பின்னர் இராமனுக்கு சீதை என்ன முறை என்று கேட்டவன் கதையாக எமது தாயகத்தில் கடந்த அய்ம்பது ஆண்டுகளாக விடுதலைக்கான ஒரு வேள்வி நடந்து கொண்டிருக்கிறது. ஏறக்குறைய 75,000 தமிழ்மக்கள் சிங்களப் படையின் பயங்கரவாதத்துக்குப் பலியாகி உள்ளார்கள். மூன்று இலட்சத்துக்கும் மேலான தமிழர்கள் தாங்கள் பிறந்த மண்ணில் ஏதிலியாக்கப்பட்டு உண்ண உணவின்றி, உடுக்கத் துணியின்றி படுக்கப் பாயின்றி பள்ளிக்கூடங்களிலும் வீதி ஓரங்களிலும் மரநிழலிலும் தற்காலிக கூடாரங்களிலும் அல்லல்கள் அவலங்கள் மத்தியில் வாழ்கிறார்கள்.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக சிங்கள அரசு தமிழர்கள் மீது ஒரு கொடிய இனவழிப்புப் போரைக் கட்டவுழ்த்து விட்டுள்ளது. பயங்கரவாதத்துக்கு எதிரான போர் என்ற போர்வைக்குப் பின்னால் ஒரு இனப் படுகொலையை (genocide) மகிந்த இராசபக்சேயின் அரசு அரங்கேற்றி வருகிறது.
கடந்த கிழமை கிராஞ்சி என்ற ஊரில் ஸ்ரீலங்கா மிகையொலி வானூர்திகள் நடத்திய கோரமான குண்டுத்தாக்குதலில் ஆறுமாதக் குழந்தை ஒன்று, நான்கு வயதுப் பிள்ளை ஒன்று உட்பட 9 பேர் பலியாகினார்கள். பொதுமக்களை இலக்கு வைத்து குண்டுகளைப் போட்டுவிட்டு வி.புலிகளது முகாம்களைத் தாக்கி அழித்ததாக ஸ்ரீலங்கா அரசு வெட்கமோ துக்கமோ எதுவுமின்றிப் பொய் சொல்கிறது.
கடந்த சனவரி மாதம் 29 ஆம் நாள் பள்ளமடுவில் ஸ்ரீலங்காவின் ஆழ ஊடுருவும் அணி மேற்கொண்ட கோழைத்தனமான கண்ணிவெடித் தாக்குதலில் பேரூந்தில் பயணம் செய்த 20 பள்ளி மாணவர்கள் கொல்லப்பட்டார்கள். முப்பதற்கும் அதிகமானோர் காயப்பட்டார்கள்.
மகிந்த இராசபக்சே ஆட்சிக்கு வந்த பின்னர் அண்ணளவாக 5,000 தமிழ் மக்கள் கொல்லப்பட்டும், கப்பம் கேட்டுக் கடத்தப்பட்டும் உள்ளார்கள். தென்னிலங்கையில் வகைதொகையின்றித் தமிழ்மக்கள் - அவர்கள் தமிழர்கள் என்ற ஒரே காரணத்துக்காக - ஸ்ரீலங்காப் படையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்கள்.
தமிழ்மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட 3 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஸ்ரீலங்காப் படையின் உளவுப் பிரிவால் அல்லது அவர்களோடு இணைந்து இயங்கும் கூலிக் குழுக்களினால் கொல்லப்பட்டுள்ளார்கள். பத்துக்கும் மேற்பட்ட தமிழ் ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள்.
மகிந்த இராசபக்சேயின் இளவலும் பாதுகாப்பு அமைச்சின் செயலருமான கோத்தபாய இராசபக்சே தமிழீழ தேசியத் தலைவர் அவர்களின் கடைசி மாவீரர் உரை இதுதான் என்றும் அவரை அடுத்த பிறந்த நாள் விழாவுக்கு முன்னர் கொன்றுவிடப் போவதாகச் சூளுரைத்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் வாழும் 3 இலட்சம் மக்கள் திறந்தவெளி சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளார்கள். நாளாந்தம் 5 பேராவது அங்கு கொலை செய்யப்படுகிறார்கள்.
தென்தமிழீழத்தின் மீது ஸ்ரீலங்கா படைகள் மேற்கொண்ட தொடர்ச்சியான படை நடவடிக்கையின் போது 300 கும் மேலான பொதுமக்கள் கொல்லப்பட்டார்கள். சம்பூர் மற்றும் மூதூர் கிழக்கைச் சேர்ந்த 4,000 தமிழ்க் குடும்பங்கள் அவர்களது வாழ்விடங்களில் இருந்து விரட்டப்பட்டார்கள். அவர்கள் வாழ்ந்த ஊர்கள் அதியுயர் பாதுகாப்பு வலயமாக சிங்களப் படையினால் பிரகடனப்படுத்தப் பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா ஒட்டாவா தூதரகத்தின் ஆதரவில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் ஆளும் கட்சியைச் சேர்ந்த அர்ச்சுன இரணதுங்காவின் கையால் விருது வாங்க இருக்கும் தமிழர்களுக்கு இவையெல்லாம் தெரியாமல் இருக்க நியாயமில்லை. பின் எந்த முகத்தோடு தமிழ் மக்களின் குருதி நனைந்த இரணதுங்காவின் கைகளால் விருது வாங்கத் துடிக்கிறார்கள்?
அர்ச்சுனா இரணதுங்கா ஒரு கடைந்தெடுத்த சிங்களப் பேரினவாதி எனப் பெயர் எடுத்தவர். சிங்கள இனவாத சக்திகளுடன் கைகோர்த்துக் கொண்டு நிற்பவர். இப்போது இந்தச் செய்தியைப் படியுங்கள்.
"In various interviews with the newspapers and the BBC Arjuna Ranatunga said that hereafter he would keep on working for progress of the Deshapremi Janatha Viyaparaya, the mass organization that collected mass support of writers, poets, working class representatives , farmers , teachers and students for the anti-UNP protests that were launched with the help of the SLFP, JVP ............ "(http://www.lankaweb.com/news/items04/120404-7.html)
"பிபிசி மற்றும் செய்தித்தாள்களுக்குச் செவ்வி கொடுத்த அர்ச்சுனா இரணதுங்கா தொடர்ந்து தான் தேசப்பிரேமி ஜனதா அமைப்பின் வளர்ச்சிக்கு தொடர்ந்து உழைக்கப் போவதாகக் கூறினார். தேசப் பிரேமி அமைப்பு வெகுமக்கள் அமைப்பு. சுதந்திரக் கட்சி, ஜாதிக விமுக்தி பெரமுன போன்ற கட்சிகளின் உதவியுடன் அய்க்கிய தேசியக் கட்சிக்கு எதிராக நடவடிக்கைகளில் இறங்க எழுத்தாளர்கள், கவிஞர்கள், தொழிலாளர்கள் பிரதிநிதிகள், கமக்காரர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களை அணி திரட்டும் அமைப்பு......
(http://www.lankaweb.com/news/items04/120404-7.html)
இந்த தேசப் பிரேமி அமைப்பு சிங்கள இனவாத சக்திகளின் மொத்த உருவம். அந்தச் சக்திகள் சங்கமமாகும் சாக்கடை;!
இதன் பின்னரும் தன்மானம், இனமானம் படைத்த எந்தத் தமிழனாவது சிங்கள பேரினவாத அரசின் ஆதரவோடு நடத்தப்படும் விழாவில் கொடுக்கப்படும் விருது எதனையும் இரண்டு கைகளையும் நீட்டி வாங்க மாட்டான் என மனதார நம்புகிறோம்.
நன்றி :- ஸ்விஸ்முரசம்
Friday, February 29, 2008
தமிழ்மக்களின் குருதி நனைந்த கைகளால் கொடுக்கப்படும் விருதுகளை தமிழர்கள் கையேந்தி வாங்குவதா?
Posted by tamil at 2:40 PM
Subscribe to:
Post Comments (Atom)
0 Comments:
Post a Comment