Wednesday, February 27, 2008

சேர்பிய வழியில் இலங்கை

"இராணுவத் தீர்வில் தங்கி நிற்பதில் உள்ள ஆபத்தையே கொசோவோ காட்டுகின்றது' என்ற தலைப்பில் அரசியல் விமர்சகரும் பார்வையாளருமான ஜெஹான் பெரேரா தமது கட்டுரை ஒன்றில் தெளிவாகவும் விளக்கமாகவும் சில விடயங்களைச் சுட்டிக்காட்டியிருக்கின்றார்.
உலகின் ஏனைய நாடுகளை ஓர் அச்ச உணர்வுக்குள் ஆழ்த்தி, அதன் மூலம் அவற்றைத் தனது வழிப்படுத்தலுக்குள் கொண்டுவரக்கூடிய இராணுவ அல்லது பொருளாதார வலிமையைக் கொண்டிராத சேர்பியா, தனது பிரதேசம் இரண்டு நாடுகளாகத் துண்டாடப்படாமல் தவிர்ப்பதற்கு குறைந்த பட்சம் சர்வதேசத்தின் நல்லாதரவையாவது நன்மதிப்பையாவது பேணியிருக்க வேண்டும்.

கொசோவோ விடுதலை இராணுவத்தைப் பயங்கரவாதப் பட்டியலில் சேர்த்து, அதைத் தடைசெய்து, கொசோவோ பிரிவினைக்கு எதிராக அமெரிக்கா உட்பட்ட சர்வதேச நாடுகள் நின்றபோது அந்த நல்லாதரவை சாதகமாகப் பயன்படுத்த சேர்பியா தவறிவிட்டது.
முக்கியமாக இரண்டு விடயங்களைத் தனது கவனத்தில் கொள்வதற்கு சேர்பிய அரசு தவறியமையே இன்று தனது இறைமையிலிருந்து கட்டுப்பாட்டிலிருந்து கொசோவோவை அது இழக்கும் நிலைமை ஏற்பட்டதற்குப் பிரதான காரணமாகும்.
ஒன்று கொசோவோப் பிராந்தியத்துக்கு அதிகாரங்களைப் பகிர்ந்து வழங்கி, சுயாட்சியை நிலைப்படுத்துவது குறித்து சேர்பியா சிந்திக்கவேயில்லை.

அடுத்தது கொசோவோவை இராணுவ ரீதியில் நசுக்கித் தனது இறையாண்மைக் கட்டுப்பாட்டுக்குள் அதனை அடக்கி வைத்திருக்கும் தனது எத்தனத்தின்போது மனித உரிமைகளைப் பேண அது முற்றிலும் தவறிவிட்டது. எந்தச் சந்தர்ப்பத்திலும் எந்த நிலைமையிலும் சிவில் யுத்தத்துக்கு மத்தியிலும் கூட மனித உரிமைகளைப் பேணுவதில் தனது அரசும் படைகளும் மிகச் சிரத்தையாக இருக்கின்றன என்ற நம்பிக்கையை சர்வதேசத்துக்கு ஏற்படுத்துவதற்கு சேர்பியா அடியோடு தவறிவிட்டது.
இந்த இரண்டு காரணங்களுமே சேர்பியாவிலிருந்து கொசோவோப் பிராந்தியம் பிரிந்து தனிநாடாவதற்கான ஆசீர்வாதத்தை சர்வதேச சமூகத்திடமிருந்து பெற்றுத்தருவதற்குப் பிரதான அம்சங்களாகின.

இந்த விடயங்களைச் சுட்டிக்காட்டும் ஜெஹான் பெரேரா, இந்த நிலைமையை இலங்கை விவகாரத்தோடு மேலோட்டமாக ஒப்பிடவும் தவறவில்லை.
விடுதலைப் புலிகளை வெற்றிகொள்வதற்குத் தனது முழு இராணுவப் பலத்தையும் இப்போது பிரயோகிக்கின்றது இலங்கை அரசு. ஆனால் விடுதலைப் புலிகளின் பிரதேசங்களைக் கைப்பற்றுவதற்கான இராணுவ முன்நகர்வு என்பது எதிர்பார்த்த வேகத்தில் அமையவில்லை. மிகவும் மந்தமாகவே அது உள்ளது. அந்த முன்நகர்வு பலத்த ஆள் சேதத்தையும் பொருளாதார இழப்பையும் கூட ஏற்படுத்துகின்றது. தமிழர் சமுதாயத்தை ஆட்கடத்தல்களும், கொலைகளும் பெரும் பயங்கரத்துக்குள் மூழ்கடித்துள்ளன. இராணுவ நடவடிக்கைகளினால் பெரும் எண்ணிக்கையான மனித இடப்பெயர்வுகளும் அதனால் மனிதாபிமானப் பேரவலங்களும் நெருக்கடிகளும் முற்றி வருகின்றன.
மனித உரிமைகளைப் பேணுகின்றமை தொடர்பான அரசின் பெறுபேற்றுப் பதிவு சீர்கெட்டுக்கிடக்கிறது.

அத்தோடு, நிலப்பிரதேசங்களைக் கைப்பற்றுவது, ஆக்கிரமிப்பது, கட்டுப்பாட்டில் வைத்திருப்பது போன்ற இராணுவ சாகச வெற்றிகள் இறைமையைக் காப்பதற்கான உறுதியாகவோ, வலுவாகவோ அமைந்துவிடா என்பதுதான் சேர்பிய அனுபவம் காட்டும் பாடமாகும் என்றும் ஜெஹான் பெரேரா சுட்டிக்காட்டுகின்றார்.
தமிழர்களுக்கு நியாயமான சுயாட்சி உரிமைகளை விட்டுக்கொடுப்போடு பகிர்ந்தளிக்க முன்வராது
பௌத்த, சிங்களப் பேரினவாத மேலாண்மைப் போக்கில் முறுகிக் கொண்டு
தமிழர் தேசம் மீது பெரும் யுத்தம் ஒன்றைத் தொடுத்து, மனிதப் பேரழிவுக்கும், பேரவலத்துக்கும் வழிகோலியபடி
மிக மோசமான மனித உரிமை மீறல்களுக்கு இடமளிக்கும் அரச பயங்கரவாதத்தைத் தொடர்ந்த வண்ணம்
இலங்கை அரசும், படைகளும் சந்நத உருக்கொண்டு செயற்படுகின்றன.
கொசோவோப் பிரிவினையை எதிர்த்த மேற்குலகு பின்னர் அந்த நிலைப்பாட்டிலிருந்து விலகி, அந்தப் பிரிவினையை அங்கீகரிக்கும் நிலைக்குத் தனது கருத்தியலை மாற்றிக் கொண்டமைக்கு சேர்பிய அரசின் எத்தகைய திமிர்த்தனப் போக்குகளும், செயற்பாடுகளும் காரணமாக அமைந்தனவோ அவற்றையே இலங்கை அரசுத் தலைமையும் தனது தந்திரோபாயமாகக் கையில் எடுத்திருக்கின்றது என்பதைச் சொல்லாமல் சொல்லிச் சுட்டிக்காட்டுகின்றனர் ஆய்வாளர்கள். இது அரசுத் தலைமைக்குப் புரியுமோ என்னவோ.......?
கொழும்பின் திமிர்த்தனப் போக்கு இப்படியே தொடருமானால் இலங்கையை சேர்பியாவாகவும், ஈழத்தைக் கொசோவோவாகவும் சர்வதேசம் கருதும் சூழல் விரைவாக உருவாகிவிடும். அத்தகைய நிலையைத் தவிர்ப்பதா, இல்லையா என்பதைக் கொழும்புதான் தனது சமயோசிதம் மூலம் முடிவு செய்யவேண்டும்.

நன்றி :- உதயன்

0 Comments: