Saturday, February 16, 2008

இலங்கையில் பொருளாதார, இராணுவ நலன்களை இலக்காகக் கொண்ட அமெரிக்க, இந்திய செயற்பாடுகள்

கடந்த நூற்றாண்டில் இலங்கையின் தேசிய இனப்பிரச்சினை இன முரண்பாடாகத் தோற்றம் பெற்று வளர்ச்சி கண்டது. இதற்குப் பிரித்தானிய கொலனித்துவ வாதிகள் தமக்கே உரித்தான பிரித்தாளும் நரிக்குண பங்களிப்பை வழங்கிச் சென்றனர். அவ்வாறே கடந்த மூன்று தசாப்த காலத்தில் அதே தேசிய இனப்பிரச்சினையை யுத்தமாக வளர்த்தெடுத்து இரத்த ஆறு ஓடச் செய்ததிலும் அமெரிக்க மேற்குலக சக்திகளுக்கும் இந்திய ஆளும் வர்க்கத்தினருக்கும் இருந்து வந்தபங்கையும் பணியையும் எவரும் நிராகரித்துவிட முடியாது. ...


தத்தமது அக்கறைகளுக்கும் நலன்களுக்கும் ஏற்றவாறு மேற்கொள்ளப்பட்டு வந்த இவ் அந்நியத் தலையீடு என்பது எப்பொழுதும் தேசிய இனப்பிரச்சினையில் தாக்கம் விளைவிக்கும் வலுவான புறக்காரணியாக இருந்து வந்துள்ளதை எவராலும் நிராகரிக்க முடியாது.

இவ் அந்நியத் தலையீடு ஒரு புறத்தால் பேரினவாத ஒடுக்குமுறைக்கு ஆதரவு வழங்கி வளங்கள் அளித்து பலப்படுத்தி வந்துள்ளது. அதேவேளை, போராடும் தமிழர் தரப்பினருக்கு மட்டுப்படுத்தப்பட்ட உதவி ஒத்தாசைகளை வழங்கி போலி நம்பிக்கைகளைக் கொடுத்து உசுப்பி விட்டும் வந்துள்ளன. இத்தகைய அந்நியத் தலையீடுகளுக்கு உள்நோக்கங்கள் அன்று முதல் இன்று வரை இருந்து வருவதை யாராவது அறியாது இருப்பார்களேயானால் அத்தகையோர் அரசியல் அறிவிலிகளாக மட்டுமே இருப்பர். அதனை விடவும் அதே அந்நிய சக்திகள் மூலம் தத்தமது இலக்குகளை அடைந்துவிடலாம் என்ற நம்பிக்கையை மக்கள் மத்தியில் பரப்பி வரும் பரப்புரையாளர்களை அந்நியருக்குத்துணை போகும் கையாட்கள் என்றே கூறமுடியும். ஏனெனில், உண்மையான மக்கள் விடுதலை என்பதோ அல்லது ஒரு தேசிய இனத்தின் அபிலாஷைகளை வென்றெடுப்பது என்பதோ எத்தகைய அந்நியத் தலையீட்டின் மூலமும் வென்றெடுக்க முடியாதவைகளாகும். அவை முற்றிலும் மக்கள் போராட்டங்களாலும் அவற்றுக்குரிய சரியான கொள்கை தலைமைத்துவம் தந்திரோபாயங்கள் என்பனவற்றாலுமே சாத்தியமாக்கப்பட முடியும்.

இலங்கையின் தேசிய இனப்பிரச்சினையில் அமெரிக்க மேற்குலகத் தரப்பினரும் இந்திய ஆளும் தரப்பினரும் வெளிப்படையற்ற விதத்தில் உள்ளார்ந்த போட்டிச் செயற்பாடுகள் மூலமாகவே செயலாற்றி வந்திருக்கிறார்கள். இவ்விரு தரப்பினரினதும் உலக மேலாதிக்கம் பிராந்திய மேலாதிக்கம் என்பனவற்றின் உள்நோக்கங்களை அறிந்தும் அறியாமலும் பேரினவாத ஒடுக்குமுறையாளர்களும் தமிழர் போராட்டத் தரப்பினர்களும் தத்தமது நிலைப்பாட்டிற்கு இவ்வந்நிய சக்திகளைப் பயன்படுத்தலாம் என்ற நம்பிக்கையிலேயே இன்றுவரை இருந்து வருகிறார்கள். இதைவிட்ட துரதிர்ஷ்டம் வேறு எதுவாகவும் இருக்க முடியாது.

1977 இல் அமெரிக்க விசுவாசியும் கடைந்தெடுத்த முதலாளித்துவப் பிற்போக்கு வாதியுமான ஜே.ஆர். ஜெயர்வர்தனா பதவிக்கு வந்தபோது அமெரிக்கா உள்ளங்கால் முதல் உச்சி வரை குளிர்ச்சி பெற்றது. ஜே.ஆருக்கு வழிகாட்டி ஆதரவளித்து உலகமயமாதலின் கீழான திறந்த பொருளாதாரக் கொள்கையையும் தனியார் மயத்தையும் நடைமுறைகளாக்கிக் கொண்டது. அதேவேளை, ஜே.ஆர். முன்னெடுத்த பேரினவாத இராணுவ ஒடுக்குமுறைக்கு சகல வழிகளிலும் அமெரிக்கா உதவிகள் வழங்கின. இதனைப் பொறுத்துக்கொள்ள முடியாத இந்தியா தனது காய்களை நகர்த்த ஆரம்பித்தது.

தமிழர் தரப்பை சுண்டி இழுத்தது நிதி ஆயுதங்கள் பயிற்சிகள் தமிழ் இளைஞர் இயக்கங்களுக்கு வழங்கியது. அவ் இயக்கங்களை வைத்தே ஜே.ஆரின் ஆட்சியை அடிபணிய வைத்தது இந்தியா. இந்தியா காட்டிய விசுவரூபத்திற்கு முன்னால் நின்று எதிர்வினையாற்றுவதை விரும்பாத அமெரிக்கா பின்வாங்கிக் கொண்டது. ஆனால், இலங்கை - இந்திய ஒப்பந்தமும் அமைதி காக்கும் படையும் வடக்கு கிழக்குற்கு வரப்பிரசாதம் என்றும் கூறப்பட்டது. இருப்பினும், ஜே.ஆரின் பின்னால் நின்ற அமெரிக்கா தனது மறைமுகக் கரங்களைப் பயன்படுத்தத் தவறவில்லை. அதன் காரணமாக இந்தியப் படைகள் இலங்கையில் இருந்து வெளியேறவும் இலங்கை - இந்திய ஒப்பந்தம் செயலற்றதாகிப் போகவும் கூடிய சூழல் உருவாகியது.

இச்சூழலில் இந்திய ஆளும் தரப்பு இலங்கையின் தேசிய இனப்பிரச்சினையில் தூர இருந்து மௌன அவதானிப்பில் ஈடுபட்டும் வந்தது. அதேவேளை, அமெரிக்காவும் மேற்குலக சக்திகளும் தமது கரங்களைப் பலப்படுத்தி தமக்குரிய காய்களை நகர்த்தி வந்தன. நோர்வேயின் அனுசரணை என்பதை முன் தள்ளியதுடன் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையிலான அரசாங்கக் காலத்தில் ஒரு புரிந்துணர்வு யுத்தநிறுத்த உடன்பாட்டைப் புலிகள் இயக்கத்துடன், ஏற்படுத்திக் கொள்வதிலும் அமெரிக்கா வெற்றிபெற்றுக் கொண்டது. ஒப்பந்தத்தில் கையொப்பம் இட்ட அரசாங்கமும் புலிகள் இயக்கமும் இவ் யுத்தநிறுத்த கால கட்டத்தை தத்தமது தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளும் காலமாகவே பயன்படுத்திக் கொண்டன. ஏற்கனவே, இலங்கை - இந்திய ஒப்பந்தத்தின் கீழான 13 ஆவது திருத்தத்தில் கூறப்பட்ட மாகாண சபை வடக்கு கிழக்கில் செயலிழக்கப்பட்டதாக விளங்கியது. அதற்கும் மேலான உள்ளக சுயநிர்ணய உரிமை அடிப்படையிலான ஒருவகைச் சமஷ்டி பற்றிப் பேசப்பட்டது. இதற்குப் பின்னால் அமெரிக்காவே நின்று செயல்பட்டது.

இவ்வாறான புரிந்துணர்வு யுத்தநிறுத்த சூழலும் அமெரிக்க கைகள் மேல் எழும்புவதையும் இந்திய ஆளும் வர்க்கத்தால் சகித்துக்கொள்ள இயலவில்லை. அனுசரணை வகித்த நோர்வேயின் பிரதிநிதிகள் அடிக்கடி புதுடில்லி சென்று விளக்கமளித்து வந்த போதிலும் இந்தியா, தனது காய்களை நகர்த்துவதற்கான சந்தர்ப்ப சூழலை ஏற்படுத்தும் மறைமுக முயற்சிகளில் ஈடுபட்டு வந்தமை ஆங்காங்கே வெளிப்படவே செய்தன. குறிப்பாக, நோர்வேயின் அனுசரணையும் புரிந்துணர்வு ஒப்பந்தமும் முறிந்து போவதை இந்தியா ஆவலுடன் எதிர்பார்த்து வந்தது. தற்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் வரவோடு அது சாத்தியப்படும் என நம்பிய இந்தியாவின் நம்பிக்கை நிறைவேறியது.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ முற்றுமுழுதாக இந்தியாவின் பக்கம் தன்னை வைத்துக்கொள்வதில் வெளிப்படையாகவே செயல்பட்டால் அதற்குப் பிரதியுபகாரமாக இந்தியாவால் வெளிப்படையாக நடந்துகொள்ள முடியவில்லை. அதற்குக் காரணம் தமிழ்நாட்டில் உருவாகிய இலங்கைத் தமிழர் ஆதரவு அலையாகும். ஆனால், மகிந்தரின் ஆட்சியின் இராணுவம் பலப்படுத்தலுக்கும் பயிற்சிகளுக்கும் இந்தியா தாராளமாக உதவி வருகின்றமை தொடர்ந்தது. இவ்வளவும் செய்துகொண்ட போதிலும் அதிகாரப் பரவலாக்கலை இந்தியாவின் விருப்பப்படி மகிந்தர் செய்யவில்லையே என்ற மனக்குறை இந்தியத் தரப்பிற்கு இருந்தது. அதன் காரணமாகவே இலங்கையின் 60 ஆவது சுதந்திர தினத்தில் இந்தியத் தலைவர்கள் எவரும் கலந்துகொள்ளவில்லை. எவ்வாறாயினும் தற்போதைய சூழலில் இந்தியாவின் காய்நகர்த்தல்களும் கையோங்கல்களும் இலங்கையின் விடயங்களில் மேலோங்கி நிற்கின்றன என்பது வெளிப்படை.

இந்நிலையில் அமெரிக்க மேற்குலக சக்திகள் தத்தமது நிலைகளை எவ்வாறு நிலைப்படுத்திக்கொள்ளலாம் என்பதையிட்டு கடும் முயற்சிகளில் ஈடுபட்டும் வருகின்றன. மனித உரிமை அமைப்புகள் ஐ.நா.வின் பாதுகாப்புச் சபை நிதியுதவி வழங்கல்கள் போன்றவற்றின் மூலம் தங்களது நோக்கங்களை வெளிப்படுத்த ஆரம்பித்துள்ளன. இலங்கை அரசாங்கம் எடுத்துவரும் பேரினவாத நடவடிக்கைகளும் வடக்கு, கிழக்கு மீதான தாக்குதல்களும் அமெரிக்க மேற்குலக காய்நகர்த்தல்களுக்கு சாதகமான சூழலைத் தோற்றுவித்தும் வருகின்றன.

அண்மையில், இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான இரா. சம்பந்தனும் சுரேஷ் பிரேமச்சந்திரனும் சந்தித்துப் பேசியுள்ளனர். இந்திய ஆளும் வர்க்கத்தின் விசுவாசிகளான அவ்விரு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களும் 13 ஆவது திருத்தம் இனப்பிரச்சினைக்குத் தீர்வு தரக்கூடியதல்ல என்பதை அமெரிக்க தூதருக்கு விளக்கினார்கள். அதனை அமெரிக்கத் தூதுவர் ஏற்றுக் கொண்டதாகவும் சுரேஷ் பிரேமச்சந்திரன் பத்திரிகைகளுக்குத் தெரியப்படுத்தியுள்ளார்.

முன்பே சுரேஷ் பிரேமச்சந்திரன் உள்ளிட்ட ஈ.பி.ஆர்.எல்.எப். 13 ஆவது திருத்தச் சட்டத்தின் கீழ் மாகாண சபையை ஏற்றுக் கொண்டபோதே அமெரிக்கா அதற்குத் தனது புறமுதுகைக் காட்டிக் கொண்டது மட்டுமன்றி, அதனை நடைமுறைக்கு வராது இருப்பதற்கு தன்னாலான உதவி ஒத்துழைப்பை சகல வழிகளிலும் வழங்கி வந்தமை மறைக்கவோ மறுக்கவோ முடியாதவைகளாகும்.

அத்தகைய அமெரிக்காவிடம் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் விளக்கமளித்திருப்பது வேடிக்கையானதாகும். அதுவும் ஜனாதிபதியின் பதின்மூன்றாவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதை இந்தியா `ஆரம்பப்படி என வரவேற்றுள்ள நிலையிலே, இவர்கள் அமெரிக்கத் தூதுவரிடம் விளக்க முறைப்பாடு செய்திருக்கிறார்கள். அதேவேளை, இந்தியாவின் இணை அமைச்சர் தலைமையிலான வர்த்தகக் குழு இவ்வாரம் இலங்கையில் தங்கியிருந்து திருகோணமலையில் அனல் உற்பத்தி நிலையம் நிறுவ ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள். அத்துடன், இலங்கை - இந்திய வர்த்தக ஒப்பந்தத்தை மேலும் வலுப்படுத்த பேச்சுவார்த்தையும் நடாத்தியிருக்கிறார்கள். இப்பொழுது இலங்கையின் கடற்படைத் தளபதி இந்தியாவில் பயங்கரவாத ஒழிப்புப் பற்றிப் பேசியிருக்கிறார்.

இவ்வாறு இந்தியப் பிராந்திய மேலாதிக்கமும் அமெரிக்க உலக மேலாதிக்கமும் தேசிய இனப்பிரச்சினையின் ஊடாக எவ்வாறு இலங்கையில் தமது பொருளாதார அரசியல் இராணுவ நலன்களையும் இலக்குகளையும் அடையலாம் என்பதில் குறியாகவே இருந்து வருகிறார்கள் என்பது பட்டவர்த்தமானது.

இவற்றையும் அதன் ஆபத்தையும் தமிழ் மக்களுக்கு எடுத்துக்கூற முடியாத பத்திரிகை ஆய்வுப் பரப்புரையாளர்கள் தனக்கும் யுத்தமாக்கப்பட்டுள்ள தேசிய இனப்பிரச்சினைக்குமிடையில் தெளிவான கோட்டினை வரைந்து நிற்கும் சீனாவைப் பற்றி வம்புக்கு இழுத்து எழுதுவது பாரம்பரிய தமிழர் ஆண்ட பரம்பரைப் பரப்புரையேயாகும். தமது இதயத்திற்கு நெருக்கமான அமெரிக்காவையும் இந்தியாவையும் இஸ்ரேலையும் விமர்சனம் செய்து எழுத முடியாத பேனாக்கள் சீனா நேபாளத்தில் மாவோயிஸ்ட்டுக்கள் மூலமும் இலங்கையில் ஜே.வி.பி. மூலமும் ஆதிக்கம் செலுத்த முற்படுகிறது என்று எழுதும் தமிழ் ஆய்வுப் பத்தியாளர்கள் யாரை மனம் குளிரச் செய்து யாருக்குத் துதிபாடுகிறார்கள். இது உண்மையான திருடனை தப்பியோட வழிகாட்டி விட்டு வீதியில் சென்றவனைத் திருடன் எனப்பிடித்த கதை போன்றதுதான். இதுதமிழ் மக்களுக்கு மார்க்ஸிசம் கம்யூனிஸம் இடதுசாரிகள் சீனா என்பனவற்றை பூச்சாண்டி காட்டி என்றென்றும் அமெரிக்க, இந்திய, இஸ்ரேலிய எசமானர்களுக்கு அடிமை விசுவாசிகளாக இருக்கச் செய்யும் முயற்சியின் தொடர்ச்சிதான்.

மூன்று தசாப்த காலத் தமிழர் போராட்டத்தில் இந்திய, அமெரிக்க மேற்குலக சக்திகளின் உள்ளார்ந்ததும் வெளிப்படையானதுமான உள்நோக்கமுடைய நயவஞ்சகம் கொண்ட செயற்பாடுகளை இன்றும் தமிழ் மக்களுக்கு உரியவாறு அடையாளம் காட்ட மறுக்கும் எவரும் அந்நியர்களின் அடிவருடிகளும் மக்கள் விரோதிகளுமேயாவர்

காலகண்டன்

0 Comments: