Sunday, February 17, 2008

"தமிழகத்தில் தீவிரமடைந்திருக்கும் புலிகள் தொடர்பான சர்ச்சை"

விடுதலைபுலிகள் விவகாரம் தொடர்பில் தமிழகத்தில் பெரும் சர்ச்சை கிளம்பியிருப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது. அண்மைக்காலமாக மாநிலத்தில் விடுதலைப்புலிகளின் நடமாட்டம் அதிகரித்திருப்பதாகக் குற்றஞ்சாட்டும் அனைத்திந்திய அண்ணாதிராவிட முன்னேற்றக் கழக பொதுச் செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான செல்வி ஜெயலலிதா ஜெயராம் கலைஞர் மு.கருணாநிதியின் திராவிடமுன்னேற்றக் கழக அரசாங்கத்தைக் கலைத்துவிட்டு ஜனாதிபதி ஆட்சியைப் பிரகடனம் செய்ய வேண்டுமென்ற கோரிக்கையை விடுத்திருக்கிறார். ஆனால், முதலமைச்சர் கருணாநிதியோ விடுதலை புலிகளுக்கு எதிராக தனது அரசாங்கம் எடுத்திருக்கும் நடவடிக்கைகளைப் பட்டியல் போட்டுக்காட்டி தனது ஆட்சியில் தீவிரவாத சக்திகளின் ஊடுருவலுக்கு இடமளிக்கப் போவதில்லை என்று சூளுரைத்திருக்கிறார். தமிழகத்தில் விடுதலை புலிகளை ஆதரித்துப் பேசுபவர்களுக்கு எதிராக கடுமையாக நடவடிக்கை எடுப்பதற்காகப் புதிய சட்டங்களைக் கொண்டுவரவும் தயாராயிருப்பதாகவும் சில தினங்களுக்கு முன்னர் கலைஞர் சட்டசபையில் தெரிவித்திருந்தார். ஆளும் தி.மு.க.வின் தோழமைக் கட்சியான காங்கிரஸின் மாநிலத் தலைவர்களும், விடுதலை புலிகளின் ஊடுருவலைத் தடுப்பதற்கு கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென்றும் அந்த இயக்கத்துக்கு ஆதரவான சக்திகள் வளருவதற்கு தமிழகத்தில் இடமளிக்கக் கூடாது என்றும் வலியுறுத்தி வருகிறார்கள்.
இலங்கையில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷவின் அரசாங்கம் போர் நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியிருக்கும் நிலையில் விடுதலை புலிகளின் ஊடுருவல் பற்றிய சர்ச்சை தமிழகத்தில் முழுமூச்சாகக் கிளப்பப்படுவதற்கு ஒரு பின்னணி இருக்கின்றது என்ற போதிலும், அத்தகைய எந்த ஊடுருவலும் இடம் பெறவில்லை என்று மாநிலத்தின் பாதுகாப்புத்துறை உயர் அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள். விடுதலை புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் சிகிச்சைக்காக தமிழகத்துக்கு இரகசியமாக வரக்கூடும் என்றும் அவரது மனைவி கேரள மாநிலத்துக்கு வந்திருப்பதாகவும் கூட இந்திய ஊடகங்களில் பரபரப்புச் செய்திகள் வெளியாகியிருந்தன. விடுதலை புலிகளின் ஊடுருவல் சர்ச்சையைப் பொறுத்தவரை சினிமா நட்சத்திரங்களைப் பற்றி `கிசு கிசு' செய்திகளை வெளியிடுவதைப் போன்று தமிழகத்தின் பல ஊடகங்கள் குறிப்பாக, பத்திரிகைகள் வாசகர்களுக்கு பரபரப்பூட்டும் வேலையில் இறங்கியிருப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது. இலங்கையில் போரின் விளைவாக அவலங்களை அனுபவிக்கும் அப்பாவித் தமிழ் குடிமக்களுக்கு அனுதாபம் தெரிவித்து அமைதிவழிப் போராட்டங்களை நடத்துகின்ற அரசியல் கட்சிகள் மற்றும் பொது அமைப்புகள் விடுதலை புலிகளுக்கு ஆதரவானவை என்று வர்ணம் தீட்டப்பட்டு விடுகின்றன.

விடுதலை புலிகள் மாநிலத்தில் ஊடுருவி விட்டதாகவும் சட்டம் ஒழுங்கு கெட்டு விட்டதாகவும் கலைஞரின் அரசாங்கத்துக்கு எதிராகத் தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் காரணமாக தி.மு.க.வுக்கும் தோழமைக் கட்சியான காங்கிரஸுக்குமிடையே பிசகு ஏற்படக்கூடிய சூழ்நிலையும் தோன்றியிருக்கிறது. ஜெயலலிதாவின் குற்றச்சாட்டுக்களை மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் ஆமோதிப்பதுபோன்று செயற்படுவதாக தி.மு.க.விசனம் தெரிவித்திருக்கிறது. நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை சென்னையில் அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற தி.மு.க.வின் நிருவாகக் குழுக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் `விடுதலை புலிகளின் ஊடுருவல் அதிகரித்துள்ளதாக அரசாங்கத்தின் மீது சட்டசபையில் ஜெயலலிதா குற்றஞ்சாட்டிப் பேசியபோது அதற்கு எந்தவித எதிர்ப்பையும் காட்டாமல் தி.மு.க.வின் தோழமைக் கட்சிகள் அமைதிகாத்தன. மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர்களின் செயற்பாடுகள் ஜெயலலிதாவின் குற்றச்சாட்டுக்களை ஏற்றுக்கொள்வதுபோன்று அமைந்திருக்கின்றன. தோழமை நல்லுணர்வையும் ஆக்கபூர்வமான கூட்டணி அணுகு முறையையும் சகல தோழமைக் கட்சிகளும் கடைப்பிடிக்கவேண்டும்' என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஜெயலலிதா சட்ட சபையில் உரையாற்றியதற்குப் பிறகு பொதுக் கூட்டங்களில் உரையாற்றிய சில காங்கிரஸ் தலைவர்கள் (மத்திய அமைச்சர் பழனியப்பன் சிதம்பரம் உட்பட) விடுதலை புலிகளின் நடமாட்டம் அதிகரித்திருப்பதாகத் தெரிவித்தனர். இது முதலமைச்சர் கருணாநிதியை கடுமையாக ஆத்திரமடையச் செய்ததாக தமிழக ஊடகங்கள் வாயிலாக அறியமுடிகிறது.

இவ்வாறாக விடுதலை புலிகள் விவகாரம் தமிழகத்தில் மீண்டும் பெரும் சர்ச்சைக்குரியதாக மாறியிருக்கிறது. வைகோவின் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், பழ.நெடுமாறனின் தமிழர் தேசிய இயக்கம், வீரமணியின் திராவிடர் கழகம், தொல். திருமாவளவனின் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி போன்ற சில கட்சிகளைத் தவிர தமிழகத்தின் பிரதான அரசியல் கட்சிகளிடையே விடுதலை புலிகளுக்கு எதிராக உரத்துக் குரல் கொடுப்பது யாரென்ற ஒரு போட்டி ஆரம்பித்திருப்பதைக் காண்கிறோம். தி.மு.க.வையும் அ.தி.மு.க. வையும் பொறுத்தவரை இதுகாலவரையான அணுகுமுறைகளை அடிப்படையாகக் கொண்டு நோக்குகையில் ஒரு விசித்திரமான அம்சத்தை அவதானித்து வந்திருக்கிறோம். ஜெயலலிதாவுக்கு எதிராகப் பயன்படுத்தமுடியுமென்றால் விடுதலை புலிகளுடன் தொடர்புபட்ட எந்தவொரு விவகாரத்தையும் தூக்கிப்பிடிக்க கலைஞர் எப்போதுமே தயாராயிருக்கிறார். அதேபோன்றே கலைஞருக்கு எதிராகப் பயன்படுத்த முடியுமென்றால் அதே விவகாரங்களை கூடுதல் பட்சம் சர்ச்சையாக்குவதற்கு ஜெயலலிதா தயாராயிருக்கிறார் என்றுதான் கூறவேண்டும். இதைத் தவிர, இலங்கையில் அப்பாவித் தமிழ் மக்கள் படுகின்ற இன்னல்களை சிறிதளவேனும் போக்குவதற்கு உதவக் கூடிய உருப்படியான எந்தவொரு நடவடிக்கையிலும் இறங்க இக்கட்சிகள் தயாராயில்லை.


நன்றி .- தினக்குரல்

0 Comments: