கொசோவோ பிரச்சினையிலிருந்து சிறிலங்கா அரசாங்கம் கற்றுக்கொள்ள வேண்டியது என்ன என்பது குறித்து சிறிலங்காவின் அரச தலைவர் மகிந்த ராஜபக்சவுக்கு அந்நாட்டு ஆங்கில ஊடகமான டெய்லி மிரர் அறிவுறுத்தியுள்ளது
டெய்லி மிரர் நாளேட்டின் நேற்றைய பதிப்பில் இது தொடர்பில் ஜெகான் பெரேரா எழுதிய கட்டுரையின் தமிழ் வடிவம்:
அனைத்துலக ரீதியில் சிறிலங்கா மீண்டும் பிரதான தலையங்கமாக மாறியுள்ளது. கொசோவோவின் ஒருதலைப்பட்சமான சுதந்திரப் பிரகடனம் குறித்தான சிறிலங்காவின் நிலைப்பாடே இதற்கு பிரதான காரணமாகும். இந்த நிலைமை அனைத்துலக உறவுகளில் ஒரு தவறான முன்னுதாரணத்தை விளக்கி நிற்பதாகவே சிறிலங்கா அரசாங்கம் கருதுகிறது. கொசோவோவின் சுதந்திரப் பிரகடனம் அனைத்துலக சமாதானத்திற்கும், பாதுகாப்பிற்கும் மிகப்பாரிய அச்சுறுத்தல் என சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.
பிரிவினைவாதப் போராட்டங்கள் நிலவி வரும் நாடுகள் கொசோவோ நிலைமை குறித்து உன்னிப்பாக அவதானித்து வருகின்றன. ஒருதலைப்பட்சமான சுதந்திரப் பிரகடனத்தின் மூலம் பலம் வாய்ந்த நாடுகளது அதிகாரபூர்வ அங்கீகாரத்தை பெற்றுக்கொள்ளக்கூடிய வாய்ப்பு கிட்டியுள்ளது.
ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புப் பேரவையின் 1,244 ஆம் சரத்தின் அடிப்படையில் கொசோவோ, ஐக்கிய நாடுகள் சபையின் இடைக்கால நிர்வாக சபையின் கட்டுப்பாட்டின் கீழ் நிர்வகிக்கப்படும். நேட்டோப் படையினரின் தலைமையிலான கொசோவோப் படையினரினால் பாதுகாப்பு வழங்கப்படும். இதன் மூலம் பிராந்தியத்தில் சட்ட ரீதியாக சேர்பியாவின் இறைமை மீண்டும் நிலைநிறுத்தப்படும்.
கொசோவோவின் சுதந்திரப் பிரகடனம் தொடர்பான சிறிலங்காவின் கன்டணக்குரல் பல நாடுகளில் எதிரொலித்துள்ளது. ரஸ்யா மற்றும் சீனா ஆகிய நாடுகளில் இதன் தாக்கத்தை உணரக்கூடியதாக இருந்தது.
சிறிலங்கா அரசாங்கத்தின் யதார்த்த நிலைமை காரணமாகவே அதன் நிலைப்பாடு பல முக்கிய அனைத்தலக நாடுகளுடன் ஒப்பீடு செய்யப்படுகின்றது.
சிறிலங்கா அரசாங்கத்தின் இந்த நிலைப்பாடு கசப்பானதும், அனுபவபூர்வமானதுமான நீண்ட போராட்டம் மற்றும் அனைத்துலக தலையீடு என்பவற்றின் ஊடாக பெறப்பட்டதே அன்றி வெறும் ஏட்டுச் சுரக்காய் அல்ல என்பதே எனது வாதமாகும்.
ஒரு தலைப்பட்சமான சுதந்திரப் பிரகடனம் தொடர்பாக சிறிலங்கா அரசாங்கத்திற்கு முன் அனுபவம் உள்ளது. 1992 ஆம் ஆண்டு வடக்கு - கிழக்கு மாகாண சபையின் முதல்வர் வரதராஜபெருமாள் ஒருதலைப்பட்சமான சுதந்திரப் பிரகடனம் செய்திருந்தார்.
ஆனாலும் இந்த சுதந்திரப் பிரகடனம் தொடர்பாக அனைத்துலகம் தனது பார்வையை செலுத்தவில்லை. இந்தக் கிளர்ச்சி நிர்வாகத்தை சிறிலங்கா அரசாங்கம் உடனடியாக கலைத்தது.
மறுபுறத்தில் தமிழர் தாயகத்தின் இறைமையை மறுசீரமைப்பு செய்யுமாறு ஐக்கிய நாடுகளிடமும், அனைத்துலக சமூகத்திடமும் விடுதலைப் புலிகள் கோரிக்கை விடுத்தனர். விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளுக்கு அத்தகையதொரு அங்கீகாரம் வழங்கப்படவில்லை. ஏனைய நாடுகளுடன் ஒப்பீடு செய்யும் போது சிறிலங்காவில் சுதந்திரப் பிரகடனம் தொடர்பான நிலைமை மிக மோசமான போக்கையே காட்டி நிற்கின்றது.
ரஸ்யா, சீனா, ஸ்பெய்ன் மற்றும் இந்தோனேசியா போன்ற பிரிவினைவாத கிளர்ச்சிகள் நிலவும் நாடுகளும் கொசோவோவின் சுதந்திரப் பிரகடனத்தை மறுதலித்துள்ளன.
அடக்குமுறைத் தீர்வுகள்
சில நாடுகளில் கிளர்ச்சியாளர்களின் போராட்டங்கள் சிறிலங்காவை விட மிக மோசமான நிலையிலேயே காணப்படுகிறது. செச்சினியாவிற்கு எதிரான ரஸ்யாவின் பிரிவினைவாத கொள்கைகளின் காரணமாக பல்வேறு குழப்ப நிலைமைகள் தோன்றியுள்ளன.
சீனாவில் திபெத் இன முரண்பாடுகள் துரிதகதியில் மிக மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
மேலும் உலகின் பிரிவினைவாதப் போராட்டங்களின் சின்னமாக தலாய்லாமா பிரச்சினை கருதப்படுகிறது.
இந்த இரண்டு நாடுகளினதும் மத்திய அரசாங்கங்கள், பிரிவினைவாத சிறுபான்மையினரிடம் எந்தவிதமான கருத்துக்களையும் கேட்டறியாமல், அவர்கள் மீது தமது தீர்வுத் திட்டங்களை வலுக்கட்டாயமாக சுமத்தின.
ரஷ்யா மற்றும் சீனா ஆகிய பாரிய நாடுகளுடன் ஒப்பிடும் போது சுதந்திரப் பிரகடனமொன்றின் மூலம் பிளவுபடக்கூடிய அதிக அச்சுறுத்தல் சிறிலங்கா அரசாங்கத்திற்கே இருக்கின்றது.
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு இலங்கையின் குறிப்பிட்ட ஒரு பகுதியின் கட்டுப்பாட்டை தம் வசம் வைத்திருக்கிறது. பிரிவினைவாதிகளினால் இலங்கையின் இறைமைக்கு விடப்படும் சவால்களை எதிர்கொள்வதில் பல்வேறு சிக்கல்கள் அரசாங்கத்திற்கு உள்ளது என்பதை மறுக்க முடியாது.
பாரிய இராணுவப் படைபலம் மற்றும் வலுவான பொருளாதார நிலையையுடைய ரஸ்ய, சீனா விவகாரங்களில் தலையீடு செய்ய அனைத்துலக நாடுகள் முன்வராது என்பதனை விளங்கிக் கொள்ள வேண்டும்.
பொருளாதார மற்றும் இராணுவ ரீதியில் வலுவிழந்து காணப்படும் அரசாங்கமொன்றினால் அனைத்துலகத்தின் கவனத்தை தன்பால் முழுமையாக ஈர்க்க முடியாது என்பதையே சேர்பிய அரசாங்கத்தின் தற்போதைய நிலைமை தெளிவுபடுத்தி நிற்கின்றது. குறைந்த பட்சம் அனைத்துலகத்தின் நன்மதிப்பு இருந்தால் மட்டுமே நாடு பிளவுபடுவதனை தடுத்து நிறுத்த முடியும்.
தொடக்கத்தில் சேர்பியாதான் வலுவான நிலையிலேயே காணப்பட்டது. அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகள் கொசோவோ தனிநாடாக பிளவுபடுவதனை அனுமதிக்கவில்லை.
உண்மையில் கொசோவோ விடுதலை இராணுவத்தினரை அமெரிக்க அரசாங்கம், ஒரு தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கமாக அறிவித்திருந்தது.
எனினும், சேர்பிய அரசாங்கம் இரண்டு பிரதான காரணிகளில் அவதானம் செலுத்தத் தவறியது.
யுகோஸ்லாவிய அதிபர் டிடோவினால் தூர நோக்குடன் கொசோவோவிற்கு வழங்கப்பட்டிருந்த சுயநிர்ணய உரிமைகளை சேர்பியா தொடர்ந்து பேணவில்லை.
1974 ஆம் ஆண்டு அரசியல் சாசன திருத்தங்களின் அடிப்படையில் கல்வி, சுகாதாரம், வீடமைப்பு, காவல்துறை, நீதிமன்றம் போன்ற அதிகாரங்கள் கொசோவோ சுயநிர்ணய அரசாங்கத்திற்கு வழங்கப்பட்டிருந்தது.
எனினும் சேர்பியாவின் அதிபர் மிலொசொவிக்கின் ஆட்சிக்காலத்தில் கொசோவோவின் அதிகாரங்களை மத்திய அரசாங்கத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர நடவடிக்கைகள் மேற்கொண்டார்.
குறிப்பாக சுயநிர்ணய அரசாங்கத்தை இரத்துச் செய்து, சேர்பியப் படையினரை கொசோவோவில் நிலை நிறுத்தினார்.
இரண்டாவது, கொசோவோவை தமது இறைமையின் கீழ் வைத்திருக்க முன்னெடுக்கப்பட்ட இராணுவ நடவடிக்கைகளின் போதும் ஏனைய சூழ்நிலைகளின் போதும் மனித உரிமைகள் தொடர்பாக உரிய அவதானம் செலுத்தப்பட்டது என்பதனை அனைத்துலக சமூகத்திடம் நிரூபிக்க சேர்பிய ஆட்சியாளர்கள் தவறினர்.
மாறாக, இந்த இன முரண்பாட்டு போராட்டங்களின் போது பாரிய மனித அவலங்களே அரங்கேற்றப்பட்டன.
சேர்பிய அரசாங்கத்தின் கொசோவோ விடுதலை இராணுவத்தினருக்கு எதிரான போராட்டப் பிரகடனம் குறிப்பிட்ட இனத்திற்கு எதிரான போர்ப்பிரகடனமாக காலப்போக்கில் மாறியது.
ஒத்திவைக்கப்பட்ட உதவிகள்
சிறிலங்கா அரசாங்கமானது தமிழீழ விடுதலைப் புலிகளை இராணுவ ரீதியில் வெற்றிகொண்டு, கட்டுப்பாட்டுப் பிரதேசங்களை மீட்டு எடுப்பதிலேயே தமது முழுக் கவனத்தையும் செலுத்தியுள்ளது. இந்த முன்நகர்வு எதிர்பார்க்கப்பட்டதனை விட மிக குறைந்தளவு வேகத்திலேயே முன்னெடுக்கப்படுவதுடன், பாரிய மனித மற்றும் பொருளாதார இழப்புக்களை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்ச் சமூகத்தில் கடத்தல்கள் மற்றும் கொலைகள் பயங்கரவாத மயப்படுத்தப்பட்டுள்ளன. இந்த இராணுவ நடவடிக்கைகளின் காரணமாக பெரும் எண்ணிக்கையிலான மக்கள் தமது இருப்பிடங்களை இழந்துள்ளனர்.
மனித உரிமை மீறல்கள் தொடர்பான மகிந்தவின் ஆணைக்குழுவில் அங்கம் வகித்த அனைத்துலகப் பிரதிநிதிகளின் துரித வெளியேற்றத்தின் காரணமாக அனைத்துலக தரத்திலான மனித உரிமை மீறல் தகவல்களை பெற்றுக்கொள்ள முடியாத துரதிர்ஷ்டவசமான நிலைமை தோன்றியுள்ளது.
நில ரீதியான கட்டுப்பாட்டின் மூலம் நாட்டின் இறைமைக்கு உத்தரவாதம் அளிக்க முடியாது என்பதே சேர்பிய விவகாரத்தின் ஊடாக நாம் கற்றுக்கொள்ளக் கூடிய பாடமாகும். மிக வலுவான சேர்பிய இராணுவம் கொசோவோவின் கட்டுப்பாட்டை மீளப் பெற்றுக்கொண்டது.
எனினும், கொசோவோவில் நிகழ்த்தப்பட்ட மிக மோசமான மனித உரிமை அவலங்கள் காரணமாக மேற்குலக நாடுகள் தலையீடு செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டதுடன், இறுதியில் சேர்பிய இராணுவத்தினரின் செயற்பாடுகள் தடை செய்யப்பட்டன.
இறைமை உள்ளிட்ட அனைத்துலக சட்டங்களை புறந்தள்ளி விட்டு கொசோவோவின் சுதந்திரப் பிரகடனத்திற்கு பல நாடுகள் அங்கீகாரம் வழங்கியுள்ளன.
பிராந்தியத்தில் நிலைத்தன்மை ஏற்படுத்தப்பட வேண்டும் என்ற யதார்த்த நிலைமையின் அடிப்படையிலேயே இந்த நாடுகள் அங்கீகாரமளித்துள்ளன.
இதனால்தான் சிறிலங்கா அரசாங்கம் மனித உரிமைகளைப் பாதுகாத்தல் மற்றும் அரசியல் தீர்வு ஆகிய இரண்டு அடிப்படை ஏதுக்களை மையமாக வைத்து தமது இறைமை தந்திரோபாயத்தை முன்னெடுக்க வேண்டும்.
ஒருதலைப்பட்சமான இறைமை கோட்பாடுகள் மூலமோ அல்லது முழுமையான இராணுவ முன்னகர்வின் மூலமோ இந்தப் பிரச்சினைக்கு தீர்வு எட்டப்படமுடியாது.
அனைத்துலக சமூகத்தின் ஒத்துழைப்புடனேயே இலங்கையின் ஒருமைப்பாட்டை பேண முடியும் என்பது யதார்த்த ரீதியாக மெய்ப்பிக்கப்பட்டுள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி :- சங்கதி
Thursday, February 28, 2008
கொசோவோ பிரச்சினை ஒரு பாடம்: மகிந்தவுக்கு அறிவுரை
Posted by tamil at 9:55 AM
Subscribe to:
Post Comments (Atom)
0 Comments:
Post a Comment