வன்னியில் மோதல்கள் உச்சக் கட்டத்தை அடைந்துள்ளன. விடுதலைப் புலிகளின் பகுதிகளினுள் நுழைந்துவிட படையினர் கடும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர். சகல வளங்களுடனும் புலிகளுக்கெதிரான போரைத் தீவிரப்படுத்தினாலும் விடுதலைப் புலிகளின் பலத்த எதிர்ப்பால் படையினரின் வெற்றி சாத்தியப்படவில்லை. பின்னடைவுகளைச் சந்திக்க வேண்டிய நிலையில் படையினர் உள்ளனர்.
வன்னிக் களமுனையில் ஏதாவது பகுதியை கைப்பற்றிவிட வேண்டுமென்ற நோக்கில் கடந்த சில வாரமாக இராணுவ நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன. தினமும் பாரிய தாக்குதல்கள் நடைபெறுகின்றன. புலிகள் தங்கள் நிலைகளிலிருந்து பின் வாங்குகிறார்கள், தினமும் ஐம்பதிற்கும் மேற்பட்ட புலிகள் கொல்லப்படுகிறார் களென படையினர் கூறிவந்தாலும் களமுனையில் சிறுசிறு மாற்றங்களே ஏற்படுகின்றன.
வன்னியில் வவுனியா, மன்னார் மற்றும் மணலாறு களமுனைகளில் இந்த மோதல்கள் நடைபெறுகின்றன. வவுனியா மற்றும் மணலாறு அடர்ந்த காட்டுப் பகுதிகளைக் கொண்ட களமுனைகள். இவை, மன்னார் கள முனையிலிருந்து மாறுபட்டவை. சிறுசிறு பற்றைக்காடுகளும் பெரும்பாலும் பொட்டல் வெளிகளையும் கொண்டது மன்னார் களமுனை. இது விடுதலைப் புலிகளை விட படையினருக்கு சாதகமாயிருந்தாலும் மன்னாருக்கு வடக்கே கடற்கரையோரப் பிரதேசம், பெரும் யுத்தத்திற்கு சாதகமற்றதொரு பகுதியாகும்.
வவுனியாவிலும் மணலாறிலும் பலமுறை முன்நகர்வு முயற்சிகளை மேற்கொண்டும் அது சாத்தியப்படாது போனதால் தற்போது படையினர் மன்னார் களமுனையில் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். இந்தக் களமுனையில்தான், இராணுவத்தின் மிகப் பலம் வாய்ந்த 58 ஆவது படையணி நிலைகொண்டு பாரிய முன் நகர்வு முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது.
யுத்தத்திற்கே சாதகமற்றதொரு களமுனையில் இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக பெரும் போர் நடைபெறுகிறது. இலங்கைத் தீவை போர்த்துக்கேயர், ஒல்லாந்தர், ஆங்கிலேயர் ஆக்கிரமித்த போது கூட அவர்கள் மன்னார் தீவை தங்கள் வசம் வைத்திருந்ததுடன் மன்னார் பெரு நிலப் பரப்பின் வாசல்வரை (மாந்தை) வந்து நின்றார்களே தவிர அதற்கப்பால் வடக்கே கரையோரப் பகுதிகளுக்குச் செல்லவில்லை.
யாழ்.குடாநாட்டுக்கான தரை வழிப் பாதையை மூடியுள்ள அரசு அதற்கு மாற்றாக மன்னார் - பூநகரிப் பாதையை திறக்க முயல்கிறது. மன்னார் தீவைத் தாண்டி வடபகுதி நோக்கி கரையோரமாகச் செல்லும் இந்தப் பாதையை கைப்பற்றி விட அரசு தீவிர அக்கறை காட்டுகிறது. அதேநேரம், மன்னார் - பூநகரிப் பாதையை கைப்பற்றி விட்டால், தமிழகத்திற்கும் வன்னிக்குமிடையிலான போக்குவரத்துக்களை தடுத்து விடமுடியுமெனவும் அரசு கருதுகிறது.
மன்னாரிலிருந்து விடத்தல்தீவு வரையான கரையோப் பகுதி பொட்டல் வெளிகளிலும் நின்று கொண்டதுடன் சதுப்பு நிலப் பிரதேசமானது. பெரும்பாலும் பற்றைக் காடுகளைக் கொண்டது. குடி நீருக்கு பெரும் தட்டுப்பாடு நிலவும் பிரதேசம். டாங்கிகள், கவச வாகனங்கள் போன்றவற்றுடன் இந்தக் களமுனையில் புலிகளுக்கெதிரான போரில் வெற்றிகொண்டு விடலாமென படைத் தரப்பு கருதுகிறது. ஆனால், படையினர் ஒருவேளை இந்தப் பகுதிகளைக் கைப்பற்றிவிட்டால் அங்கு நிலைகொள்வதில் படையினர் பெரும் நெருக்கடிகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
இவ்வாறானதொரு நிலைமை இருக்கின்ற போதும் தற்போதைய நிலையில் அது புலிகளை விட படையினருக்கே சாதகமானது. பற்றை காடுகளுக்குள்ளும் பொட்டல் வெளிகளுக்குள் நின்றும் முறியடிப்புச் சமரை மேற்கொள்வது சாதகமற்றது. எனினும் இந்தச் சாதகமான நிலையை பயன்படுத்தி மன்னார் கரையோரப் பகுதியில் படையினரால் முன்னேற முடியவில்லையென்றால், யுத்தத்திற்கும் தங்களுக்கும் சாதகமற்றதொரு களமுனையில் புலிகள் எந்தளவிற்கு பதில் தாக்குதலை மேற்கொள்கிறார்களென்பதனை இங்கு கவனிக்க வேண்டும்.
1990 களின் பிற்பகுதியில் மன்னாரில் படையினர் மேற்கொண்ட `ரணகோஷ' 1 முதல் 5 வரையான படை நடவடிக்கை மூலம் இராணுவத்தினர் மன்னாருக்கு வடக்கே பூநகரி வீதியில் பள்ளமடுவரை முன்னேறியிருந்தனர். இந்தப் படை நடவடிக்கைகளுக்கு விடுதலைப் புலிகள் கடும் எதிர்தாக்குதலை நடத்தவில்லை. ஆனாலும் பள்ளமடுவரை வந்த படையினரால் அந்தப் பகுதிகளில் நிலைகொள்ள முடியவில்லை. சாதகமற்றதொரு களமுனையிலிருந்து படையினர் விலகும் நிலையேற்பட்டது.
மன்னாரிலிருந்து வடக்கு நோக்கிய இந்தக் கரையோரப் பகுதிகளை படையினர் கைப்பற்றினாலும் அவர்களால் அங்கு தொடர்ந்தும் நிலைகொள்ள முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. பின்தளங்கள், வளங்கள், விநியோகமின்றி சாதகமற்றதொரு களமுனையில் படையினர் பெரும் போரை நடத்த வேண்டியுள்ளது.
யுத்தத்திற்கு சாதகமற்ற இந்தக் கரையோரப் பகுதியை படையினர் கைப்பற்றினால் அது பின்னர் புலிகளுக்கு சாதகமாகிவிடும். கரையோரப் பகுதிகளில் படையினர் நிலைகொள்ள ஏனைய பகுதிகளில் பெரும் பின்தளமிருப்பதால் புலிகளால் படையினர் மீது பாரிய ஊடறுப்புத் தாக்குதல்களை மேற்கொள்ள முடியும். அத்துடன் இந்தக் கரையோரப் பகுதியை மீண்டும் அவர்களால் கைப்பற்றக் கூடிய வாய்ப்பும் உருவாகும். இந்த நிலைமையை படையினரும் நன்கறிவர். இதனால்தான் ஒரேநேரத்தில் வவுனியாவிலும் மன்னாரிலும் பாரிய படை நடவடிக்கைகளை மேற்கொண்டு இரு பிரதேசங்களையும் கைப்பற்றிச் செல்லும் போது கரையோரத்தை அண்டிய பெரும் பிரதேசங்களும் தங்கள் வசமாகிவிட்டால் மன்னாருக்கும் விடத்தல் தீவுக்குமிடையே கரையோரப் பகுதியை தக்கவைக்க முடியுமென படையினர் கருதுகின்றனர்.
ஆனாலும் வவுனியா களமுனை படையினருக்கு சாதகமற்றதொன்றாகவேயுள்ளது. அங்கு படையினர் பல முன்நகர்வு முயற்சிகளை மேற்கொண்ட போதும் அதனை புலிகள் முறியடித்துள்ளனர். படையினர் இங்கு தங்கள் உத்திகளையும் தந்திரோபாயங்களையும் மாற்றி மாற்றி முன்நகர்வு முயற்சிகளை பல தடவைகள் மேற்கொண்டபோதும் இதுவரை எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை.
சிறுசிறு அணிகளாக தங்கள் முன்னரங்க நிலைகளிலிருந்து புறப்படும் படையினர் அடர்ந்த காடுகளினுள் புலிகளின் முன்னரங்கப் பகுதிகளினுள் ஊடுருவி புலிகள் மீது தாக்குதல்களை மேற்கொண்டு புலிகளுக்கு பலத்த உயிர்ச்சேதங்களை ஏற்படுத்தி அதன் மூலம் அவர்கள் பின் நகர வேண்டிய கட்டாய நிலையேற்படும் போது, கடும் மோதல்கள் எதுவுமின்றி முன்னேறி வந்து புலிகளின் முன்னரங்க நிலைகளைக் கைப்பற்றுவதே படையினரின் உத்தியாகவும் தந்திரமாகவுமிருந்தது.
ஆரம்பத்தில் படையினரின் இந்த உத்தி அவர்களுக்கு சாதகமாயிருந்த போதும் பின்னர் படையினரின் உத்தியை அறிந்த புலிகள் அதற்கேற்ப தங்கள் தாக்குதல் தந்திரத்தை மாற்றியமைக்கவே படையினரின் தந்திரம் பெரிதும் பலிக்காமல்போனது. எனினும் தங்களுக்குச் சாதகமற்ற வவுனியா களமுனையில் தொடர்ந்தும் இவ்வாறான உத்திகளைப் படையினர் பயன்படுத்தி வருகின்றனர். இதன்மூலம் தாங்கள் பெருவெற்றிகளைப் பெற்று வருவதாகவும் புலிகள் பெரும் பின்னடைவுகளைச் சந்தித்து வருவதாகவும் படையினர் கூறுகின்றனர்.
ஆனாலும் வவுனியா கள முனையில் புலிகளின் கண்ணிவெடிகள், மிதிவெடிகள், பொறி வெடிகள் படையினருக்கு தினமும் பலத்த சேதங்களை ஏற்படுத்துகின்றன. பாரிய படைநகர்வில் ஈடுபடாது சிறுசிறு படையணிகளாக புலிகளின் பகுதிகளுக்குள் ஊடுருவும் படையணிகளே இவற்றில் அதிகம் சிக்கி பலத்த இழப்புக்களைச் சந்திக்கின்றன. இதைவிட இந்தக் களமுனையில் புலிகளின் `சினைப்பர் அணி'யைச் சேர்ந்த பலரும் களமிறங்கியுள்ளதால் அவர்களாலும் படையினர் பலத்த இழப்புக்களை சந்தித்துள்ளனர்.
வவுனியா களமுனை இவ்வாறிருக்கையில் மன்னாரில் படையினர் தினமும் பாரிய முன்நகர்வுகளை மேற்கொண்டு பெருமளவு நிலப்பிரதேசங்களைக் கைப்பற்றி வருவதாக படையினர் கூறுகின்றனர். ஆனால், வடக்கில் போர் தொடங்கி ஒரு வருடமாகும் நிலையில் படையினரால் சுமார் ஆறு மைல் தூரம் வரையே செல்ல முடிந்துள்ளது. மன்னாரில் போர் தொடங்கிய போது படையினர் இருந்த இடமும் தற்போது அவர்கள் இருக்குமிடத்திற்கும் இடையிலான தூரம் வெறும் ஆறு மைல்தான்.
இதற்காக அவர்கள் சந்தித்த இழப்புகள் மிக மிக அதிகம். கொல்லப்பட்ட படையினரை விட புலிகளின் தாக்குதல் உத்திகளால் படுகாயமடைந்து அவயவங்களை இழந்து மீண்டும் களமுனைக்கு திரும்ப முடியாது சென்ற படையினரின் எண்ணிக்கை மிக அதிகம். மிகப்பெருந்தொகை நிதியையும் செலவிட்டுள்ளனர்.
புலிகளுக்கு போரியல் சாதகமற்றதொரு பகுதியில் மிகப்பெரும் படை பலத்துடன் களமிறங்கிய படையினர் இந்தக் காலப்பகுதியில் பல மைல் தூரம் முன் நகர்ந்து புலிகள் வசமிருக்கும் பல பகுதிகளைக் கைப்பற்றியிருக்க வேண்டும். ஆனால் அது அவர்களால் முடியவில்லையென்றால், வன்னிக் களமுனை அவர்களது எதிர்பார்ப்புகளுக்கு மாறாகவேயுள்ளது தெளிவாகிறது.
மன்னார் களமுனையிலேயே கடந்த இரு மாதங்களாக கடும் சமர் நடைபெறுகிறது. கடந்த ஜனவரி மாதம் இங்கு 840 புலிகளும் இந்த மாதத்தில் முதல் மூன்று வாரத்தில் 675 புலிகளும் கொல்லப்பட்டுள்ளதாக படைத்தரப்பு கூறுகின்றது. இராணுவத்தினர் வெளியிடும் இந்தத் தகவல் அப்பட்டமான பொய்யென்பதை பல இராணுவ ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டி வருகின்றனர். இராணுவத்தினரின் இந்த எண்ணிக்கை உண்மையானதென்றால், இன்று இலங்கையில் தமிழ் மக்கள் எவருமே இருந்திருக்க முடியாதெனக் கூறும் ஆய்வாளர்களும் உள்ளனர்.
களமுனையை பார்த்தால் படையினர் கூறுவதில் எதுவித உண்மையுமில்லையென்பது தெரியவரும். கெரில்லா பாணியில் பதில் தாக்குதலை நடத்தும் அமைப்பொன்றுக்கு எதிராக மரபு வழிப் படையொன்று தாக்குதலை நடத்தி வருகிறது. பாரிய முன்நகர்வுகளற்ற போது முன்னரங்க நிலைகளில் மிகக் குறைந்தளவு எண்ணிக்கையான புலிகளே நிலை கொண்டிருப்பர். படையினர் தினமும் மேற்கொள்ளும் சிறுசிறு தாக்குதல்களின் போது புலிகளுக்கு இழப்புக்கள் ஏற்பட்டால் அதில் ஒரு சிலரே கொல்லப்படுவர். இராணுவத்தினர் முன்னரங்க நிலைகளில் மோதல்களில் ஈடுபடுவது போல் கெரில்லா அணிகள் நூற்றுக் கணக்கில் ஆட்களை நிறுத்தி போரிடுவதில்லை.
பாரிய மோதல்கள், படையினரின் பாரிய முன்நகர்வுகள் நடைபெறும் போதே புலிகளும் தங்கள் படையணிகளை முன்னரங்க நிலைகளில் அதிகளவில் நிறுத்துவர். இதன் போது புலிகள் இழப்புக்களை சந்திக்கலாம். ஆனால் பாரிய மோதல்கள் நடைபெறாத நாட்களில் இடம்பெறும் சிறு சிறு மோதல்களில் தினமும் நாற்பது, ஐம்பது புலிகள் கொல்லப்படுவதாகக் கூறப்படுவது மிகப்பெரும் மிகைப்படுத்தலென்பதுடன் புலிகள் இந்தளவு தொகையில் கொல்லப்படுகிறார்களென்பதை படையினர் எவ்வாறு கண்டறிகின்றனரென்பதும் பெரும் கேள்விகளை எழுப்புகிறது.
வவுனியா, மன்னாரை விட மணலாறு மற்றும் யாழ்.குடாபகுதியிலும் படையினர் தினமும் பலத்த தாக்குதல்களையும் முன்நகர்வு முயற்சிகளையும் மேற்கொள்கின்றார்கள். எனினும் அந்த முயற்சிகளில் கூட எதுவித பலனும் கிடைப்பதாகத் தெரியவில்லை. அங்கு படையினரால் முன்நகர முடியாதிருப்பதுடன் இழப்புக்களையும் சந்தித்து வருகின்றனர். இவ்விரு களமுனைகளிலும் புலிகளின் பதில் தாக்குதல்கள் மிகக் கடுமையாகவேயுள்ளன.
மன்னாரிலேயே படையினர் தற்போது தங்கள் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளனர். இங்கு 58 ஆவது படையணியே முன் நகர்வு முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இராணுவத்தைப் பொறுத்தவரை 58 ஆவது படையணியே பெரும்பாலான படைநடவடிக்கைகளில் முன்நகர்வு முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதுடன், ஈடுபட்டும் வருகிறது. விசேட பயிற்சிகளைப் பெற்ற கமாண்டோக்கள் 58 ஆவது படையணியிலேயே உள்ளனர். இவர்களே வன்னியிலும் புலிகளின் பகுதிகளுக்குள் நுழையும் தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
58 ஆவது படையணி தற்போது மன்னார் - பூநகரி வீதியில், வடக்கேயுள்ள விடத்தல்தீவை நோக்கி முன்நகரும் முயற்சியில் இறங்கியுள்ளது. அதற்காக தொடர்ந்தும் பாரிய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. இந்தப் படையணி விடத்தல்தீவை நோக்கி முன்நகரும் போது, மன்னாருக்கு வடக்கேயிருந்து மடுத் தேவாலயப் பகுதியை கைப்பற்றும் நோக்கில் நகரும் 57 ஆவது படையணியுடன் இணைவதே இவர்களது நோக்கமாகும். இதற்காக 57 ஆவது படையணியும் மடுப் பகுதியில் தொடர்ந்தும் முன்ேனற்ற முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
இவ்வாறு வன்னிக்கள முனையில் நாளுக்கு நாள் மோதல்கள் தீவிரமடைகின்றன. வன்னியை முழுமையாக ஆயிரக்கணக்கான படையினர் இரு புறங்களிலும் சுற்றிவளைத்தவாறு உள்நுழைய முயல்கின்றனர். வன்னியின் ஏனைய இரு புறங்களிலும் கடல் சூழ்ந்துள்ளது. யாழ். குடாவிலிருந்தும் வவுனியா மற்றும் மன்னாரிலிருந்துமே தங்கள் முன்நகர்வு முயற்சியில் படையினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.
புலிகளை இந்த வருடத்திற்குள் முழுமையாக அழித்துவிடப்போவதாகவும் வன்னியை முழுமையாக மீட்டுவிடப் போவதாகவும் சூளுரைத்தவாறு அரசும் படைத்தரப்பும் இந்தப் பெரும் போரை நடத்துகின்றன. எனினும் புலிகளும் இந்தப் பெரும் போரை தொடர்ந்து சந்தித்தே வருகின்றனர். கடந்த பல வருடங்களாக இல்லாதளவிற்கு அரசு இந்தப் போரையும் பிரசாரப் போரையும் முன்னெடுக்க முயல்கிறது. இதற்காக தனது அனைத்து வளங்களையும் அரசு செலவிட்டும் வருகிறது.
விமானத் தாக்குதல், ஷெல் தாக்குதல், பல்குழல் ரொக்கட் தாக்குதல், மோட்டார் தாக்குதலெனத் தினமும் பலலட்சம் ரூபா பணத்தை செலவிட்டு இந்தப் போரை நடத்துகின்ற போதும் அரசுக்கு எந்தளவுக்கு பலன் கிடைக்கிறதென்பது கேள்விக்குறியாகவேயுள்ளது. புலிகள் வசம் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களிருப்பதை எப்படியாவது இல்லாது செய்வதன் மூலம் இந்தப் போராட்டத்திற்கு முடிவு கட்டிவிட அரசு முனைகிறது.
நன்றி:- -விதுரன்-
Sunday, February 24, 2008
மன்னாரில் மையம் கொள்ளும் யுத்தம்
Posted by tamil at 6:39 AM
Subscribe to:
Post Comments (Atom)
0 Comments:
Post a Comment