Saturday, February 2, 2008

ஒத்திசைவற்ற செயற்பாடுகளால் ஒன்றும் சாதிக்கவே முடியாது

இலங்கையில் மிக மோசமாக இடம்பெற்றுவரும் மனித உரிமை மீறல்களைத் தடுக்கும் முயற்சியில் சர்வதேச சமூகத்தின் செயற்பாடுகள் திருப்திதரக் கூடியனவாக அமையவில்லை என அமெரிக்காவைத் தளமாகக் கொண்டு இயங்கும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் விசனம் தெரிவித்திருக்கின்றது.

உலகளாவிய ரீதியில் மனித உரிமைகள் நிலைவரம் குறித்துத் தான் வெளியிட்ட ஆண்டறிக்கையிலேயே அந்த அமைப்பு இப்படி ஆதங்கம் வெளியிட்டிருக்கின்றது.
இலங்கையில் மனித உரிமைகள் நிலைமை மிக மிக மோசமடைந்து வருகிறது. ஆனால் அதனை ஒழுங்குபடுத்துவதற்கு சர்வதேசம் எடுக்கும் முயற்சிகள் மிக மெதுவானவையாகவும், ஒத்திசைவு இல்லாதவையாகவும் உள்ளன என்று அந்த அமைப்பு தெளிவாகச் சுட்டிக்காட்டியிருக்கின்றது.
தனி இறைமையுள்ள ஜனநாயக ரீதியில் தெரிவு செய்யப்பட்ட ஓர் அரசு என்று தன்னைக் கூறிக்கொண்டு, அந்தக் கவசத்தோடு இலங்கை அரசும் அரசுப் படைகளும் மேற்கொண்டுவரும் மனித உரிமை மீறல் நடவடிக்கைகளும் அரச பயங்கரவாதமும் சர்வதேச சமூகத்தால் சரியாகக் கண்டுகொள்ளப்படவில்லை என்பதே உண்மையாகும்.

ஓர் அரசுக் கட்டமைப்பு என்ற முகமூடிக் கவசத்துக்குள் நின்றுகொண்டு, கொழும்பு புரியும் அராஜகங்களையும், அரச பயங்கரவாதத்தையும் கட்டுப்படுத்தி, நெறிப்படுத்துவதில் சர்வதேச சமூகம் தவறிழைத்துள்ளது என்ற மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் குற்றச்சாட்டு முழு அளவில் நியாயமானதே.
ஒழுங்குமுறை வரன்முறை தவறி இவ்வாறு மோசமான மனித உரிமை மீறல்களைப் புரியும் இலங்கை போன்ற ஒரு நாட்டுக்கான கட்டமைப்புக் கொண்டவற்றை ஒழுங்குபடுத்துவதில் சர்வதேச சமூகத்திடம் பல வழிமுறைகள் உண்டு.

ஆனால், இலங்கை விவகாரத்தில் அது கூட செயற்படுத்தப்படவில்லை என்பதுதான் இங்கு பாதிக்கப்படும் மக்களான தமிழர்களின் முழு ஆத்திரமும், ஆதங்கமுமாகும்.
இலங்கையின் மோசமான மனித உரிமை மீறல் போக்குக் குறித்து இலங்கைக்கு உதவும் இணைத் தலைமைகளின் கூட்டங்கள் அவ்வப்போது ஆராய்ந்தன.

அந்தப் பின்புலத்தில் "மிலேனியம் ஆண்டு அபிவிருத்தித் திட்டத்தின்' கீழ் இலங்கைக்கு உதவி வழங்குவதை நிறுத்தி அதன்மூலம் தனது உதவிப் பங்களிப்பை அமெரிக்கா குறைத்துக் கொண்டது.
அதேபோல, பிரிட்டனும் தனது சில உதவித் திட்டங்களை இலங்கைக்கு வழங்காமல் நிறுத்தியது.
ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் இலங்கைக்கு எதிராக ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸிலில் பிரேரணை கொண்டுவர முயன்றன.

இப்படிப் பல தரப்பிலும் முயற்சி எடுக்கப்பட்ட போதிலும், சில நாடுகள் இவ்வாறான சர்வதேச அரசியல் நிலைவரங்களை ஒட்டி, நியாயமாக நடப்பதை விடுத்து பக்கச் சார்பாக நடந்துகொண்டன. சர்வதேசக் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகும் தமது நட்பு நாட்டுக்கு எதிராக ஐ.நா. மன்றத் தடை வராமல் காப்பாற்றிக் காபந்து பண்ணும் செயற்பாட்டில் அவை ஈடுபட்டன.
இலங்கையில் மோசமான மனித உரிமை மீறல்களுக்காக அந்த நாட்டின் மீது பொருளாதாரத் தடைகளையோ அல்லது அவற்றை ஒத்த வேறு கட்டுப்பாடுகளையோ விதிக்க இலங்கைக்கு உதவும் நாடுகளின் இணைத்தலைமைகள் முயன்றன என்றும்
ஆனால் அமெரிக்கா, நோர்வே, ஐரோப்பிய ஒன்றியம் போன்ற நாடுகள் இவ்விடயத்தில் ஒத்துழைக்க முயன்ற போதிலும் மற்றொரு இணைத் தலைமையான ஜப்பான் அதில் இழுத்தடித்து குழப்பி வந்தது என்றும் கூறப்பட்டது.

இலங்கையில் இடம்பெறும் மனித உரிமை மீறல் விடயத்தை, இலங்கைக்கு உதவி வழங்கும் விடயத்துடன் தொடர்பு படுத்த முடியாது என்றும், உதவிகளை நிறுத்தினால் இலங்கை மக்கள் பாதிக்கப்பட்டுவிடுவர் என்பதால் அதனைச் செய்யமுடியாது என்ற சாரப்படவும் சில அறிவிப்புகள் அவ்வப்போது ஜப்பான் தரப்பிலிருந்து வெளிவரவும் தவறவில்லை.
இவ்வாறு இலங்கையில் மனித உரிமை மீறல் விடயங்களைக் கட்டுப்படுத்துவதற்காக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து உதவும் நாடுகளின் இணைத் தலைமைகள் இடையே ஒத்திசைவு ஏற்பட முடியாத போக்கே இதுவரை தென்பட்டது. எனவே, இவ்விவகாரத்தில் சர்வதேச சமூகத்தின் செயற்பாடு மெதுவாக மட்டும் அல்ல, ஒத்திசைவுடனும் அமையவில்லை என்ற மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் குற்றச்சாட்டு நூற்றுக்கு நூறுவீதம் சரியானதே.
இப்போது நிலைமை எல்லை மீறி முழுப் போர்த் தீவிரத்துக்குள் இலங்கை அரசு குதித்து மனித உரிமை மீறல்களும் எல்லை கடந்துள்ள நிலையில் "ஒப்புக்குச் சப்பாணி' என்பது போல ஜப்பானிடம் இருந்து நழுவல், வழுவல் போக்கிலான எச்சரிக்கை அறிவிப்பு வருகின்றது.
அமைதி முயற்சிகளைப் புறந்தள்ளி, உதாசீனம் செய்து, ஒதுக்கி விட்டு, தமிழர் தாயகம் மீது முழு அளவிலான போர் என்பதைக் கொழும்பு ஐயந்திரிபறத் தெளிவுபடுத்தி, அதன் வழி முழு மூச்சாக நகரத் தொடங்கிய பின்னரும் கூட
"வன்முறைகள் தொடருமானால் நிதியுதவிகளை ஜப்பான் நிறுத்தும்' என்ற சாரப்பட, ஜப்பான் எச்சரிக்கை விடும் நிலையோடு பின்னடித்து நிற்பது நகைப்புக்கிடமானது.
இதற்கு மாற்றாக, நிதியுதவியை ஜப்பான் நிறுத்தியது என்ற விளைவுபூர்வமான பயன் விளையத்தக்க திட்டவட்டமான அறிவிப்பை விடுக்குமளவுக்காவது ஜப்பான் இச்சமயத்தில் முன்வந்திருக்குமானால் அது ஓரளவுக்கு நியாயமானதாக இருக்கும்.
ஆக, சர்வதேச சமூகத்தின் செயற்பாடு மெதுவாக மந்தமாக ஒத்திசைவற்றதாக தொடர்ந்து இருக்கும் வரை இலங்கையைச் சீரான தடத்துக்குத் திருப்பவே முடியாது என்பது தெளிவு.


thanks - Uthayan.com

0 Comments: