* கொழும்பு மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சி எம்.பி.யான தியாகராஜா மகேஸ்வரன் மறைவுக்கு அனுதாபம் தெரிவிக்கும் பிரேரணை மீது பாராளுமன்றத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பி. நல்லதம்பி ஷ்ரீகாந்தா ஆற்றிய உரை
கடந்த ஏழு வருட காலமாக இந்தச் சபையிலே துடிப்புமிகுந்த ஓர் உறுப்பினராக உறுதியுடனும், உற்சாகத்துடனும் செயற்பட்ட ஓர் இளைய பாராளுமன்றவாதியை இந்தச் சபை மாத்திரமல்ல, முழு நாடுமே இழந்துள்ள துயரத்தினை, கட்சி வேறுபாடின்றி இந்தச் சபையிலுள்ள சகல உறுப்பினர்களுமே உணர்ந்து கொண்டிருக்கிறார்கள்.
முழு நாடும் அறிந்திருந்த மிகப்பிரபலமான ஓர் அரசியல்வாதியாக மிளிர்ந்து மறைந்த மகேஸ்வரன் அவர்கள் மிகக் குறுகிய காலத்துக்குள்ளேயே அரசியல் வானிலே மின்னுகின்ற ஒரு கவர்ச்சிகரமான தாரகையாக மாறியதை நான் இப்பொழுது எண்ணிப் பார்க்கிறேன். 1999 ஆம் ஆண்டு என நினைக்கிறேன். "யாழ்ப்பாண அரசாங்க அதிபருடன் நான் தொடர்பு கொள்ள வேண்டும்" என்ற வேண்டுகோளுடன் மகேஸ்வரன் அவர்கள் தனது நண்பன் ஒருவரையும் அழைத்துக்கொண்டு கொழும்பிலே நான் தங்கியிருந்த எனது வீட்டுக்கு வந்திருந்தார்.
அதற்கு முதலில் நான் அவரைச் சந்தித்தது சுமார் பத்து - பதினொரு வருடங்களுக்கு முன்னர், அது 1988 ஆம் ஆண்டு இந்திய அமைதிப் படை இங்கே நிலைகொண்டிருந்த நேரம் என்று நினைக்கின்றேன். அன்று அவர் சுமார் 24-25 வயதுடைய ஓர் இளைஞராக இருந்தார். அந்தச் சந்தர்ப்பத்திலே அவர் ஒரு தமிழ் இளைஞர் என்ற முறையிலே அரசியல்வாதியாகிய என்னிடம் சுமார் பத்து - பதினைந்து நிமிடங்கள் பல கேள்விகளைத் தொடுத்ததன் மூலம் அவர் பல விபரங்களையும் தெரிந்துகொள்வதில் தனக்கிருந்த ஆர்வத்தை வெளிப்படுத்தினார். அந்தச் சந்திப்பு நிகழ்ந்து சுமார் பத்து வருடங்களுக்குப் பின்னரே - 1999 ஆம் ஆண்டிலேயே நான் மீண்டும் அவரைச் சந்தித்தேன். மகேஸ்வரன் அவர்கள் கேட்டுக்கொண்டதன்படி, அப்பொழுது யாழ்ப்பாணம் அரசாங்க அதிபராக இருந்தவர் என்னுடைய நல்ல நண்பர் என்ற வகையிலே நான் அவருடன் தொடர்புகொண்டு பேசினேன். அதன் பிறகு நான் மகேஸ்வரன் அவர்களைப் பார்த்துக் கேட்டேன். "ஏன் நீங்கள் அடுத்துவரும் பொதுத் தேர்தலிலே யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்திலே எங்களுடைய கட்சியின் சார்பிலே போட்டியிடக்கூடாது?" என்று அதற்கு அவர் சிரித்தபடி பதில் சொன்னார். "பாராளுமன்றம் என்பது உங்களைப் போன்றவர்களுக்குத்தான் பொருத்தமானது. என்னைப் போன்றவர்களுக்கு எல்லாம் அது எதற்காக?" என்று அவர் மிகவும் அடக்க ஒடுக்கமாகப் பதில் சொன்னார். இருந்தும் நான் விடவில்லை. "உங்களைப் போன்ற இளைஞர்கள் கட்டாயம் அரசியலுக்கு வர வேண்டும்" என்ற என்னுடைய விருப்பத்தை நான் அவரிடம் தெரிவித்திருந்தேன்.
அந்தச் சந்திப்பு நிகழ்ந்த ஒருசில மாதங்களுக்குப் பிறகு, அதாவது 1999 ஆம் ஆண்டு இறுதிப் பகுதியிலே நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலிலே ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்ட ரணில் விக்கிரமசிங்க அவர்களை நானும் நான் சார்ந்திருந்த கட்சியும் ஆதரித்த நேரத்திலே - இப்பொழுது நாங்கள் இலங்கைத் தமிழரசுக் கட்சியைச் சேர்ந்தவர்களாக ஒரு பரந்த அரசியல் அணியின் சார்பிலே பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப் படுத்திக் கொண்டிருந்தாலும் கூட, இந்த அணியிலே அங்கம் வகிக்கின்ற நான்கு கட்சிகளிலே ஒரு கட்சியான நான் சார்ந்திருந்த, சார்ந்திருக்கின்ற தமிழீழ விடுதலை இயக்கத்தின் சார்பிலே `ரெலோ' இயக்கத்தின் சார்பிலே - நாங்கள் அப்பொழுது விக்கிரமசிங்க அவர்களுக்கு எங்களுடைய உறுதியான ஆதரவைத் தெரிவித்திருந்த அந்த நேரத்திலே - தம்பி மகேஸ்வரன் அவர்கள் - அவரை நான் `தம்பி' என்று தான் அழைக்க விரும்புகின்றேன். யாழ்ப்பாணத்திலே ரணில் விக்கிரமசிங்க அவர்களுடைய தேர்தல் பிரசார வேலைகளை முழுமையாகப் பொறுப்பேற்றிருந்ததுடன் அந்தப் பிரசார இயக்கத்தைப் பல தடைகளுக்கு மத்தியிலும் பல கீழ்த்தரமான எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் முன்னெடுத்துச் சென்றதை நான் நேரடியாகவே பார்த்தேன்.
அந்த நேரத்திலே யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்திலே ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளரை ஆதரித்துப் பிரசாரம் செய்வது என்பது மிகக் கடுமையான ஒரு முயற்சியாக இருந்தது. ஏனென்றால், அன்றைய ஆளும் கட்சி - ஏன், அது இன்றைய ஆளும் கூட்டணியில் உள்ள பிரதான கட்சியும் கூட - மற்றும் அந்த அரசிலே அங்கம் வகித்திருந்த யாழ்ப்பாணத்திலே நிலைகொண்டிருந்த வேறு சில கட்சிகள் போன்றன. ஆளும் கட்சி வேட்பாளருக்குச் சார்பான பிரசாரங்களில் பல்வேறு விதங்களிலும் மிக முனைப்போடு செயற்பட்டுக் கொண்டிருந்தன. இருந்தும் தம்பி மகேஸ்வரன் மனம் தளராது துணிவோடு யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தின் மூலை முடுக்குகளில் எல்லாம் தன்னுடைய நண்பர்களையும் தொண்டர்களையும் நூற்றுக் கணக்கில் களத்திலே இறக்கி, ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளருக்காக மிக விசுவாசமாகவும் உறுதியோடும் உத்வேகத்தோடும் வேகமாகவும் பாடுபட்டதை நான் இப்பொழுதும் நினைத்தப் பார்க்கின்றேன். அது நடந்து ஒரு வருடம் முடிவதற்குள் 2000 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலிலே யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தின் ஐக்கிய தேசியக் கட்சிப் பட்டியலிலே முதன்மை வேட்பாளராக இடம்பிடித்துக் களத்தில் குதித்ததையும் நான் இன்று நினைத்துப் பார்க்கின்றேன்.
ரவூப் ஹக்கீம் அவர்கள் சற்று முன்னர் குறிப்பிட்டதுபோல 1952 ஆம் ஆண்டுக்குப் பிறகு அல்ல, 1956 இற்குப் பிறகு யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தில் ஒரு தேசியக் கட்சியின் சார்பில் பாராளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்பட்டவர் தான் மகேஸ்வரன் அவர்கள். ஏனென்றால், 1952 ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தலில் யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்ட காலஞ்சென்ற எஸ்.நடேசன் அவர்கள், தமிழரசுக் கட்சியின் தலைவர் எஸ்.ஜே.வி.செல்வநாயகம் அவர்களை, தமிழரசுக் கட்சி சந்தித்த அந்த முதலாவது பொதுத் தேர்தலிலே, அன்றைய தமிழ் காங்கிரஸ் கட்சியின் ஆதரவோடு தோற்கடித்திருந்தார்.
அதற்குப் பிறகு, 1956 ஆம் ஆண்டு, வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வாழ்கின்ற தமிழ் மக்களின் அரசியல் தலைமைத்துவத்தைத் தமிழரசுக் கட்சி ஏற்று, எட்டுத் தமிழர்களும், இரண்டு முஸ்லிம்களுமாகப் பத்துப் பிரதிநிதிகள் வெற்றியீட்டியவேளையில், அதாவது, வடக்கு -கிழக்கின் 16 ஆசனங்களிலே 10 ஆசனங்களை அக்கட்சி கைப்பற்றியிருந்த அந்தத் தேர்தலிலே, யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தின் பருத்தித்துறைத் தொகுதியிலிருந்து கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்ட காலஞ்சென்ற பொன். கந்தையா அவர்கள் வெற்றியீட்டியிருந்தார். ஆகவே, 1956 ஆம் ஆண்டுத் தேர்தலிலேதான் தென்னிலங்கையைத் தளமாகக் கொண்ட அல்லது ஒரு தேசியக் கட்சி என்று வருணிக்கப்படக்கூடிய கட்சியொன்றின் சார்பிலே யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்திலிருந்து கடைசியாக ஒரு பிரதிநிதி தெரிவு செய்யப்பட்டிருந்தார்.
அதன் பின்னர் 2000 ஆம் ஆண்டு, 44 வருடங்களுக்குப் பிறகு, ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் தலைமை வேட்பாளராகப் போட்டியிட்ட தம்பி மகேஸ்வரன் அவர்கள், விகிதாசாரத் தேர்தல் முறையின்கீழ் யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஒன்பது பாராளுமன்ற உறுப்பினர்களிலே ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் தனியொரு பாராளுமன்ற உறுப்பினராக வெற்றியீட்டியதன் மூலம் அவர் தென்னிலங்கை அரசியல் சக்திகள் மத்தியிலே ஆச்சரிய அலைகளை ஏற்படுத்தியதை நான் எண்ணிப் பார்க்கின்றேன். அது ரணில் விக்கிரமசிங்க அவர்களுடைய தலைமையின்கீழ் ஐக்கிய தேசியக் கட்சி முன்வைத்த அரசியல் கொள்கைகளுக்கு மாத்திரமல்ல. அந்தக் கொள்கைகளை முன்னெடுத்துத் தலைமை வேட்பாளராக தேர்தல் களத்திலே நின்ற மகேஸ்வரன் அவர்களுடைய ஆளுமைக்கும் மக்கள் மீது அவர் வைத்திருந்த பற்றுக்கும் மக்களுடைய அடிப்படைப் பிரச்சினைகளில் அவர் காட்டிநின்ற அதீதமான ஈடுபாட்டுக்கும் கிடைத்த ஆதரவு என்று தான் கொள்ள வேண்டும்.
2000 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இந்த சபைக்குள் வந்த மகேஸ்வரன் அவர்கள், மீண்டும் 2001 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற தேர்தலிலும் யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்திலிருந்து மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பிலே போட்டியிட்டு தனியொரு உறுப்பினராக வெற்றியீட்டிச் சாதனை படைத்தார். 2004 ஆம் ஆண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பிலே போட்டியிடுமாறு அவருக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டது. அவருக்காகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் பட்டியலிலே ஓரிடம் தயாராகவே இருந்தது. இருந்தாலும் அவர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள்ளே வர விரும்பாமல், தனது கட்சிக்கு விசுவாசமானவராக, தான் சார்ந்த கட்சியை விட்டு விலக விரும்பாமல், ஐக்கிய தேசியக் கட்சியோடு தான் கொண்டிருந்த அந்த உறவினைத் துண்டிக்க விரும்பாமல், அந்த அழைப்பை உறுதியோடும், பண்போடும், நாகரிகத்தோடும் நிராகரித்ததை நான் எண்ணிப் பார்க்கின்றேன்.
அப்பொழுது யாழ்ப்பாணத்திலே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பான அலை மிகப்பெரிதாக, பாரிய அளவிலே எழுந்திருந்த அந்த நேரத்திலே மகேஸ்வரனுக்கு ஒரேயொரு தெரிவுதான் இருந்தது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராக அவர் போட்டியிட விரும்பவில்லை. ஏனென்றால், நான்கு தமிழ்க் கட்சிகள் ஒன்றுபட்டு நின்ற நிலையில் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதற்கு ஏதுவாக எந்தவொரு அரசியல் பேச்சுவார்த்தையும் நடத்தப்படுமாக இருந்தால் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் மாத்திரமே அந்தப் பேச்சுவார்த்தையிலே தமிழினத்தைப் பிரதிநிதித்துவப்படுத்த வேண்டுமென்ற உறுதியான நிலைப்பாட்டினைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வைத்து நின்ற நேரத்திலே அவர் அதற்கு எதிராக களம் அமைக்க விரும்பாமல், அதேநேரத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பிலே விடுக்கப்பட்ட அந்த அழைப்பை நிராகரித்திருந்த நிலையிலும் கூட அதற்கு உரிய மதிப்பைக் கொடுத்தவராக யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்திலிருந்து நீங்கி கொழும்பிலே - தலைநகரிலே ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பிலே போட்டியிடுகின்ற அந்த முடிவைத் துணிச்சலோடு எடுத்தார். அது மிகத் துணிச்சலோடு எடுக்கப்பட்ட முடிவென்றே நான் நினைக்கின்றேன்.
வடக்கு- கிழக்கிலிருந்து இடம்பெயர்ந்து வந்த தமிழ் மக்கள் மாத்திரமல்ல, தலைமுறை தலைமுறையாக தொடர்ச்சியாகப் பெருமளவில் வாழ்ந்து வருகின்ற தமிழ் மக்களும் மலையகத்தைப் பிறப்பிடமாகக் கொண்டிருந்தும் தொடர்ச்சியாகப் பல தசாப்தங்களாக வாழ்ந்து கொண்டிருக்கின்ற தமிழ் மக்களும் வாழ்ந்துகொண்டிருக்கின்ற கொழும்பு மாவட்டத்தில் தன்னால் வெற்றியீட்ட முடியும். கொழும்பு மாவட்டத் தமிழ் மக்களின் ஆதரவைப் பாரிய அளவிலே பெறமுடியும் என்ற நம்பிக்கையோடு தான் அவர் கொழும்பு மாவட்டத்திலே போட்டியிட்டார். ஏனென்றால், 2000 ஆம் ஆண்டு அவர் இந்தச் சபைக்கு வந்தது முதல் 2004 ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தல் நடைபெறும் வரையிலே ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதிநிதியாகத் தமிழ் மக்களின் சார்பிலே உரையாற்றிய ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அந்த மக்களின் குரலை எவ்வளவு தூரம் தான் இந்தச் சபையிலே ஓங்கி ஒலித்திருந்தாரென்பதைத் தமிழ் மக்கள் மறந்திருக்க முடியாது என்பதிலே அவர் நம்பிக்கை கொண்டிருந்தார். அந்த நம்பிக்கை வீண்போகவில்லை. 2004 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 2 ஆம் திகதி நடைபெற்ற பொதுத் தேர்தலிலே சகலரும் வியக்கும் வண்ணம் கொழும்பு தேர்தல் மாவட்டத்திலே ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் வெற்றியீட்டிய பிரதிநிதிகளிலே விருப்பு வாக்குகளின் அடிப்படையில் நான்காவது இடத்தைப் பெற்றவராக மகத்தான வெற்றியை நிகழ்த்திக் காட்டினார். 1999 ஆம் ஆண்டில் தான் தீவிர அரசியலுக்கு வந்த ஒருவர் தொடர்ந்து மூன்று பாராளுமன்றப் பொதுத் தேர்தல்களிலே, இரண்டு வெவ்வேறு மாவட்டங்களில், அதாவது முதல் இரண்டு தேர்தல்களையும் தனது சொந்த மாவட்டத்திலே சந்தித்து வெற்றியீட்டி, தொடர்ந்து மூன்றாவது முறையாக மாவட்டத்துக்கு வெளியிலே தொலை தூரம் வந்து தலைநகரான கொழும்பிலே போட்டியிட்டு வெற்றியீட்டியதன் மூலம் கொழும்பிலே முதன்முறையாக வெற்றியீட்டிய வடக்கு - கிழக்கைப் பிறப்பிடமாகக் கொண்ட முதலாவது தமிழர் என்ற அந்தப் பெருமையையும் மகேஸ்வரன் தட்டிக்கொண்டார்.
1947 ஆம் ஆண்டிலிருந்து 1977 வரை கொழும்பு மத்திய தொகுதி மூன்று அங்கத்தவர் தொகுதியாக இருந்ததென்றால், அந்த மூன்று ஆசனங்களில் ஒன்று தமிழர்களுக்கென்றுதான் ஒதுக்கப்பட்டிருந்தது. 1960 ஆம் ஆண்டு புதிதாக உருவாக்கப்பட்ட கொழும்பு தெற்குத் தொகுதி 1970 ஆம் ஆண்டுவரை இரட்டை அங்கத்தவர் தொகுதியாக இருந்துவந்ததென்றால், அந்த இரண்டு ஆசனங்களில் ஒன்று தமிழருக்கென்று தான் ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால், 1977 வரையிலே தொகுதி முறையில் நடைபெற்ற தĭ
நன்றி தினக்குரல்
Tuesday, February 12, 2008
`மகேஸ்வரன் கொலைச் சூத்திரதாரிகளை வேறு எங்கும் போய்த் தேட வேண்டியதில்லை அவர்கள் அரசுக்குள்ளேயே இருக்கிறார்கள்'
Posted by tamil at 7:07 AM
Subscribe to:
Post Comments (Atom)
0 Comments:
Post a Comment