Thursday, February 7, 2008

தமிழர் குணங்கள் அன்றும் மாறவில்லை; இன்றும் மாறவில்லை

* இரத்மலானை இந்துக்கல்லூரியின் முத்தமிழ் விழா அண்மையில் வெள்ளவத்தை இராமகிருஷ்ணமிஷன் மண்டபத்தில் நடைபெற்ற போது பிரதம விருந்தினராக கலந்து கொண்ட நீதியரசர் சி.வி. விக்னேஸ்வரன் ஆற்றிய உரை
மீண்டும் உங்கள் கல்லூரி விழாவொன்றில் பங்குபற்றுவதில் மகிழ்ச்சி அடைகின்றேன். அதுவும் முத்தமிழ் விழா என்பதால் உங்கள் இயல், இசை, நாடகத் திறமைகளைக் காணும், இரசிக்கும் ஒரு வாய்ப்பைப் பெற்றுள்ளேன்.

எப்பொழுதுமே ஒரு காலகட்டத்தில் இயல், இசை, நாடக இலக்கியப் படைப்புகள் அக்கால கட்டத்தின் சமகால அரசியல், பொருளாதார, சமூக நிலைமைகளை, சிந்தனைகளை, எதிர்பார்ப்புகளை, வெளிக்கொண்டு வருவனவாக, சித்திரிப்பவையாக, பிரதிபலிப்பனவாக அமைவன. நீங்களும் அதற்கு விதிவிலக்கானவர்கள் அல்ல என்பதை உங்கள் படைப்புகள் எடுத்துக் காட்டுகின்றன.

நான் றோயல் கல்லூரியில் ஐம்பத்தேழு வருடங்களுக்கு முன் படித்த காலத்தில் பிரித்தானியரின் குடிநாடாக இருந்த இலங்கை அப்பொழுது தான் அடிமைத்தளைநீங்கிச் சுதந்திர நாடாக மாறியிருந்தது. அந்தக் காலகட்டத்தில் சிங்களவருந் தமிழரும் திருமணமாகிய இளந் தம்பதியர் தமது இல்லற வாழ்வு எப்படி அமைய வேண்டும் என்று கனவு கண்டிருப்பார்களோ அதே மாதிரியான ஒரு மனோநிலையில் தான் இருந்தனர். மாணவர்களாகிய நாங்கள் சுதந்திர இலங்கையின் வருங்காலம் எப்படி இருக்கும், எப்படி இருக்க வேண்டும் என்பது பற்றியெல்லாம் கனவு கண்டோம். ஆங்கில மோகம் மாற வேண்டும். தமிழ், சிங்களமொழிப் பாண்டித்தியம் பரவவேண்டும். பொருளாதார விருத்தி பெற்ற நாடாக இலங்கை மலர வேண்டும் என்று விழாக்களில் கூறியது மட்டுமன்றி ஆங்கில மோகத்தில் வளர்ந்த, ஊறியிருந்த மக்களையும் மக்கட் தலைவர்களையும் நையாண்டி செய்து எங்கள் இலக்கிய விழாக்களை நடத்தினோம். உள்ளே காற்சட்டை அணிந்து அதன் பிறகு சாரம் அணிந்து மேல் கோட் அணிந்து தலையில் சீப்பு வைத்து வலம் வந்த அப்புகாமிகளைப் பற்றி விமர்சித்தோம். பரிகசித்தோம் விகடகவிகள் எழுதினோம். அதேநேரந் தலையில் நன்றாக நல்லெண்ணெய் தேய்த்து, சுருட்டுப் பற்றவைத்து முருங்கைக்காய்க் கட்டுகளைச் சுமந்து வந்த அப்புசாமிகளையும் அரட்டைக்குள்ளாக்கினோம். இவற்றைச் சிங்களத் தமிழ் மாணவர்கள் சேர்ந்தே செய்தனர். ஆங்கில மொழி அப்பொழுது எங்களைப் பிணைத்து வைத்திருந்தது.

ஆனால், திருமணமாகி எட்டு ஆண்டுகளுக்குள்ளேயே மண வாழ்க்கை கசக்கத் தொடங்கியது. `சிங்களம் மட்டுஞ்" சட்டத்தைப் பெரும்பான்மையினத்தவர்கள் ஆங்கிலேயரால் ஒன்றிணைக்கப்பட்ட இலங்கையின் பாராளுமன்ற ஜனநாயக பலத்தைப் பாவித்து நடைமுறைக்குக் கொண்டு வந்தார்கள். அன்றிலிருந்து இன்று வரை இலங்கைத் தமிழர்களின் அந்த இல்லற வாழ்வு இன்னல் வாழ்க்கையாகவே இருந்து வந்துள்ளது. கணவன் அடிக்கின்றான், துன்புறுத்துகின்றான் என்று அடுத்த வீட்டுக்காரனிடம் முறையிட்டால், "வருகிறாயா எனக்கமைவாக அடிமை வாழ்க்கை வாழ?" என்று கேட்கிறான். "என்னடி பத்தினி வேஷம் போடுகிறாய்" என்று இலங்கைத் தமிழரை இம்சைப்படுத்தப் பார்த்த அடுத்த வீட்டுக்காரனை அடித்து உதைத்ததால் அங்கு போகவும் முடியாதுள்ளது. விவாகரத்துப் பெறலாம் என்றால் அதற்கு அயலவர்கள் எவரும் சம்மதிக்க மாட்டார்கள் போலத் தெரிகிறது. புருஷனிடம் அடிபட்டு உதைபட்டு அல்லல்பட்டுத்தான் வாழ்க்கையை நடத்த வேண்டுமா என்ற ஒரு கட்டத்திற்குத் தமிழர்கள் தள்ளப்பட்டுள்ளார்கள்.

இவ்வளவுக்கும் இலங்கைத் தமிழன்னையின் இன்னொரு அங்கலாய்ப்பு அவளின் மக்களின் ஒற்றுமையின்மை. ஒருத்தரை ஒருத்தர் காட்டிக் கொடுக்கின்றார்கள். தம்பியை அடிக்க அண்ணன்மார் துப்பாக்கி எடுத்துக் கொடுக்கின்றார்கள். அதுவும் பதவி மோகத்தில் பகைகாட்டுவோருக்குப் பணிவிடை செய்கின்றார்கள். இப்படி ஒரு அவல வாழ்க்கை வாழும் இலங்கைத் தமிழ் மக்களின் மத்தியில் எங்கள் இலக்கிய நாயக, நாயகிகள் இன்று உயிர்பெற்றுத் திரும்பி வந்தால் எங்களைப் பற்றி என்ன நினைப்பார்கள் என்றெல்லாம் கற்பனை பண்ணத் தொடங்கியுள்ளார்கள் எங்கள் மாணவ மாணவிகள், அவர்கள் பார்வையில் இருந்து தெரியவருவது என்னவென்றால் இன்றைய களநிலை கவலைக்குரியதாக இருக்கின்றது என்பதே. பெரியவர்களாகிய நாங்கள் செய்த தவறுகள் தான் இளம் நெஞ்சங்களைக் குமுற வைக்கின்றனவோ என்று எண்ண வேண்டியுள்ளது.

என்றாலுந் தமிழர் வாழ்க்கையில் இவையெல்லாம் சகஜம் என்று கூறுமாப்போல் அன்றும் இன்றும் எங்களை வழி நடத்தும் ஒரு சுதந்திரத் தமிழ் மகன், சுதந்திரத் தமிழ் நெஞ்சன், எமக்கு ஒரு விதத்தில் ஆறுதல் கூறுமாப்போல் பாக்களை யாத்துத் தந்துதவிச் சென்றுள்ளான். எத்தனையோ பாரதிகள் வாழ்ந்த தமிழ் நாட்டில் "பாரதியார்" என்ற பெயருக்குப் பொருந்திய பாத்திரமாகக் கணிக்கப்பட்டவர் தான் அந்தத் தமிழ் மகன் சுப்பிரமணிய பாரதியார்.

அரை நூற்றாண்டுக்கு முன்னரும் எங்கள் முத்தமிழ் விழாக்களில் அவன் பாடல்கள் ஒலித்தன. இன்றும் அதே நிலை தான். சமகால சமுதாயத்தைப் பார்த்து, அதன் அடிமைத் தனத்தைப் பார்த்து அதன் அவலத்தைப் பார்த்து, அதன் அழுகையைப் பார்த்து மனம் பதைபதைத்துச் செந்தமிழ்ப் பாக்களினால் தனது உள்ளக் குமுறல்களை வெளிப்படுத்தியவன் பாரதி. அவனின் அன்றைய உள்ளக் குமுறல்கள் வேறுபட்ட, மாறுபட்ட இன்றைய சூழலிலும் பொருந்துகின்றன என்றால் அது தான் அவனின் இலக்கியப் படைப்புக்களுக்குப் பெருமையையும் பெறுமதியையும் வாங்கித் தருகின்றது. அதேநேரம், தமிழர் குணங்கள் அன்றும் மாறவில்லை இன்றும் மாறவில்லை என்று எண்ணத் தோன்றுகின்றது.

நெஞ்சு பொறுக்குதில்லையே என்று அன்று அவன் கூறியது இன்றும் எமக்குப் பொருந்துகின்றது. நிலைகெட்ட இன்றைய இலங்கைத் தமிழ்ச் சமுதாயத்தைப் பார்த்துத் தான் பாரதி கவிதை யாத்தானோ என்று மலைக்க வேண்டியுள்ளது. அவனின் அந்தப் பாடலில் ஒரு செய்யுட் பகுதி பின்வருமாறு அமைகிறது.

"சிப்பாயைக் கண்டு அஞ்சுவார் - ஊர்ச்

சேவகன் வருதல் கண்டு மனம் பதைப்பார்;

துப்பாக்கி கொண்டு ஒருவன் - வெகு

தூரத்தில் வரக் கண்டு வீட்டில் ஒளிப்பார்"

இது தானே இன்று தமிழ்ப் பிரதேசங்களில் காணப்படும் நிலை!

1988 - 89 அளவில் ஒரு நண்பர் யாழ்ப்பாணத்தில் இருந்து குடும்ப சமேதராய் வந்து என்னைக் கொழும்பில் கண்டார். திடீரென்று அவரின் ஆறு வயது மகன் நடுங்கி Settee க்கு பின் ஒளிந்து கொண்டான். ஏன் என்று கேட்டதில் ஹெலி! ஹெலி!!! என்று கத்தினான். வானூர்தி ஒன்றின் சப்தம் கேட்டதும் அவன் தான் யாழ்ப்பாணத்தில் இருக்கின்றோம் என்ற எண்ணத்தில் பதைபதைத்துப் போனான். அன்றைய நிலை இன்னும் மாறவில்லை.

அதே பாடலில் இன்னொரு இடம் பின்வருமாறு அமைகிறது.

நெஞ்சு பொறுக்குதில்லையே -இந்த

நிலை கெட்ட மனிதரை நினைத்துவிட்டால்

கொஞ்சமோ பிரிவினைகள் - ஒரு

கோடி என்றால் அது பெரிதாமோ

ஐந்து தலைப் பாம்பென்பான் அப்பன்

ஆறதலையென்று மகன் சொல்லி விட்டால்

நெஞ்சு பிரிந்திடுவார் - பின்பு

நெடுநாள் இருவரும் பகைத்திருப்பார்

இப்படித்தானே எங்கள் பகைமைகள் எமது சமுதாயத்தை இன்றுஞ் சீரழித்து வருகின்றன.

மாணவ மாணவியரின் இன்றைய படைப்புக்கள் அவர்களின் உள்ளக் குமுறல்களை வெளிக்காட்டுகின்றன என்று கொள்ளலாம். சிரிப்பு மூட்டினாலுஞ் சில படைப்புகள் சிந்தனையைக் கிளறிவிடுவதாக அமைந்துள்ளன. ஆழச் சிந்திக்கவும் வைத்துள்ளன.

பலவித தடங்கல்கள், தடைகள் என்பவற்றையுந் தாண்டியே மாணவ மாணவிகள் இந்த முத்தமிழ் விழாவினை அரங்கேற்றுகிறார்கள் என்பதை நாம் அறிவோம். அவர்களின் குறைகளைக் கருதாமல் நிறைகளை மட்டும் மனதில் எடுத்து அவர்களைப் பாராட்டுவோமாக!

இன்றைய மாணவ உள்ளங்கள் தான் நாளைய மாமனித உள்ளங்கள். அவர்கள் பார்வையில் இன்றைய காலகட்டம் எவ்வாறு அவர்கள் கண்களுக்குப் புலப்படுகின்றது என்பதை அவதானிக்கும் போது அவர்கள் காலத்தில் அவர்கள் எங்கள் பிழைகளைத் திருத்தி நல்வாழ்வுக்கான அத்திவாரத்தை சக வாழ்வுக்கான அடித்தளத்தை அமைக்கத் தம்மால் இயன்ற சகலதையுஞ் செய்வார்கள். செய்ய வேண்டும் என்று எண்ணத் தோன்றுகின்றது. உங்கள் அனைவருக்கும் இறைவன் அருள்கிட்டுவதாக !

நன்றி - தினக்குரல்

0 Comments: