Wednesday, February 27, 2008

இலங்கை இனநெருக்கடி தொடர்பாக இந்தியாவின் வழமையான `வாய்ப்பாடு'

இலங்கையின் இனநெருக்கடிக்கு இராணுவ ரீதியில் தீர்வுகாண முடியாது என்பதில் நாங்கள் தெளிவாக இருக்கின்றோம் என்றும் ஒன்றுபட்ட இலங்கைக்குள் சமூகத்தின் சகல பிரிவினரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய அரசியல் இணக்கப்பாட்டை பேச்சுவார்த்தை மூலம் ஏற்படுத்திக்கொள்ள வேண்டியது அவசியம் எனவும் இந்திய ஜனாதிபதி பிரதீபா பட்டேல் நேற்று முன்தினம் திங்கட்கிழமை இந்தியப் பாராளுமன்றத்தில் தெரிவித்திருக்கிறார்.
மன்மோகன் சிங் அரசாங்கத்தின் வரவு - செலவுத் திட்ட அமர்வை சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்துவைத்து உரையாற்றுகையில் இந்திய அரசின் வெளியுறவுக் கொள்கை பற்றி விபரிக்கையிலேயே இலங்கை தொடர்பாக அரசாங்கத்தின் நிலைப்பாட்டை மிகச் சுருக்கமாக குறிப்பிட்டுள்ள இந்திய ஜனாதிபதி, இலங்கையில் வன்முறைகள் அதிகரித்திருப்பது துரதிர்ஷ்டவசமானது என்று கூறியுள்ளார்.

இலங்கையின் இனநெருக்கடி விவகாரத்தில் 1990 களிலிருந்து தூர விலகிநின்று அவதானிப்பவராகவே, வெளிஅரங்கில் புதுடில்லி தொடர்ந்தும் காண்பித்து வருவதும் இனநெருக்கடிக்கு ஒன்றுபட்ட நாடு என்ற கட்டமைப்புக்குள் இலங்கையர் சமூகத்தின் சகல தரப்பினரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வை எட்டுவதற்கான பேச்சுவார்த்தையே அவசியமென்று கூறிவருவதும் வாய்ப்பாடாகிவிட்டது.

1983 இனக் கலவரத்தை அடுத்து இலட்சக்கணக்கான தமிழ் மக்கள் தமிழகத்திற்கு அகதிகளாக சென்றதையடுத்து இலங்கை விவகாரத்தில் நேரடியாக தலையிட்ட இந்தியா, 1987 ஜூலையில் இலங்கை- இந்திய உடன்படிக்கையின் கீழ் 13 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை மேற்கொண்டு மாகாணசபைகள் முறைமை ஏற்படவும் வடக்கு, கிழக்குப்பகுதிகள் தமிழ் மக்களின் பாரம்பரிய வதிவிடங்களென உத்தியோகபூர்வமாக அங்கீகரிக்கவும் வழிசெய்து கொடுத்ததுடன் வட,கிழக்கு தற்காலிகமாக இணைக்கப்படவும் ஏற்பாடுகளை செய்து கொடுத்திருந்தது.

ஆயினும், நடைமுறையில் வட, கிழக்கை தாயகமாகக் கொண்ட தமிழ் மக்களின் அபிலாஷைகள் நிறைவேற்றப்படவில்லை என்பதும் உயர்நீதிமன்றத் தீர்ப்பு மூலம் தற்காலிகமாக இணைக்கப்பட்டிருந்த இரு மாகாணங்களும் பிரிக்கப்பட்டிருப்பதும் இனநெருக்கடிக்கு தீர்வு காணும் முயற்சியை பூச்சிய நிலைக்கு கொண்டுசென்று விட்டது என்பதும் புதிய விடயமல்ல.

இந்தியாவின் ஆசீர்வாதத்துடன் மேற்கொள்ளப்பட்ட 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்தப்போவதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அண்மையில் அறிவித்திருந்தார். இதனை இந்தியா உடனடியாகவே வரவேற்றிருந்தது. ஆனால், இந்தியாவின் மறைமுக அழுத்தமே ராஜபக்ஷ அரசாங்கத்தின் இந்த நடவடிக்கைக்கு காரணமென தென்னிலங்கையில் மூன்றாவது பலம்பொருந்திய அரசியல் சக்தியாக விளங்கும் ஜே.வி.பி. உரத்து கண்டனம் தெரிவிக்க ஆரம்பித்துள்ளது.

இலங்கையில் தமிழ் மக்களுக்கு பிரச்சினைகள் இல்லையென்ற தொனியிலும் இங்கிருப்பது பயங்கரவாதப் பிரச்சினையே என்றும் வாதிடும் ஜே.வி.பி., இலங்கைக்கு பயங்கரவாதத்தை ஏற்றுமதி செய்தது இந்தியாவே என்றும் சாடியுள்ளது.

கடந்த மூன்று தசாப்தங்களாக தொடரும் மோதல்களால் வடக்கு, கிழக்கிலும் ஏனைய பகுதிகளிலும் வாழும் தமிழ் மக்கள் அன்றாடம் எதிர்நோக்கும் அவலங்கள், துன்பங்கள் குறித்து சிறிதளவேனும் கவலையோ இரக்கமோ கொள்ளாமல் யாவற்றையும் அரசியல் இலாபம் தேடும் கண்ணோட்டத்திலேயே அணுகும் சக்திகள் தென்னிலங்கையில் மட்டுமன்றி, இந்தியாவிலும் இருப்பதையே வெளிப்படுத்தும் செயற்பாடுகள் அரங்கேறி வருகின்றன.

இலங்கை விவகாரத்தில் தூரவிலகி நிற்கும் போக்கை இந்தியா கடைப்பிடிக்க ஆரம்பித்ததையடுத்து மேற்குலகை கடுமையாக விமர்சித்தும் புதுடில்லி தொடர்பாக ஆரவாரப்படுத்தாமலும் செயற்பட்ட ஜே.வி.பி. போன்ற கடும்போக்கு கட்சிகள் தற்போது புதுடில்லியை மறைந்திருந்து செயற்படும் எதிரியாக வர்ணிக்கத் தலைப்பட்டுள்ளன.

இலங்கை விவகாரத்தில் இந்தியாவின் இரட்டைத் தன்மையான நிலைப்பாடு குறித்து இரு தரப்பிலுமுள்ள அரசியல்வாதிகள் நன்கறிவார்கள். ஆயினும், `இந்தியா எமது சிறந்த நண்பன்' என்று இலங்கையிலுள்ள பெரும்பாலான அரசியல்வாதிகளும் கூறிவருவதையும் கேட்க முடிகின்றது.

இலங்கையின் இனநெருக்கடிக்கு யுத்தத்தின் மூலம் தீர்வு காணமுடியாது என்று இந்தியா எவ்வளவு தூரம் வலியுறுத்திக் கூறுகின்ற போதும் அதன் பூகோள அரசியல் நலன்களுக்கு அப்பால் அந்நாடு ஒருபோதுமே செல்லப்போவதில்லை என்பதே யதார்த்தமான விடயமாகும்.

இதற்கு வலுவூட்டும் பிந்திய உதாரணமாக இந்திய ஜனாதிபதி பிரதீபா பட்டேல் நேற்று முன்தினம் இந்தியப் பாராளுமன்றத்தில் ஆற்றிய உரையின்போது, அரசின் வெளிநாட்டுக் கொள்கை பற்றி குறிப்பிட்டிருப்பதை கூறமுடியும்.

`பிராந்தியத்திலும் உலகிலும் சமாதானம், ஸ்திரத்தன்மையான சூழலை ஏற்படுத்த எனது அரசாங்கம் விரும்புகின்றது. எமது தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கும் பொருளாதார சமூக அபிவிருத்தியை மேம்படுத்துவதற்கும் அனுசரணையாகவே எமது வெளியுறவுக் கொள்கை அமைந்திருக்கின்றது" என்று அவர் தெரிவித்திருக்கின்றார்.

அயல் நாடுகளுடன் நட்புறவையும் ஒத்துழைப்பையும் வளர்த்தெடுப்பதற்கு இந்திய அரசாங்கம் கடுமையான முயற்சிகளை மேற்கொண்டிருப்பதாகக் கூறினாலும் பூகோள, அரசியல் மற்றும் வர்த்தக நலன் சார்ந்த கொள்கைகளுக்கு அப்பால் சென்று இலங்கையின் இனநெருக்கடிக்கு அரசியல் தீர்வு காண வேண்டுமென்ற அழுத்தத்தை கொழும்புக்கு புதுடில்லி வழங்குமென எதிர்பார்க்க முடியாது.

அதிகரித்துவரும் மோதல்களினால் வட, கிழக்கிலிருந்து தமிழ் மக்கள் உடனடியாக வெளியேறி தஞ்சமடையக் கூடியதாக தமிழ் நாடே இருக்கின்றதென்பதையும் எண்ணிக்கை குறைவாக இருப்பினும் தற்போதும் படகுகளில் மக்கள் தமிழகத்திற்குச் சென்று கொண்டிருப்பதையும் தற்போது அங்கு 2 இலட்சம் இலங்கைத் தமிழ் அகதிகள் தங்கியிருப்பதையும் (யூ.என்.எச்.சி.ஆர். அறிக்கை) அதனால் இந்தியாவிற்கு ஏற்பட்டிருக்கும் தார்மீகப் பொறுப்பையும் எளிதில் உதாசீனம் செய்துவிட முடியாது.

ஆதலால், வன்செயல் அதிகரிப்பையிட்டு கவலை தெரிவிப்பதுடனும் இராணுவ ரீதியில் தீர்வு சாத்தியமற்றது என்னும் வாய்ப்பாட்டை தொடர்ந்தும் உச்சாடனம் செய்வதை விடுத்து இலங்கையில் தமிழ் மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றக்கூடியதான தீர்வை துரிதமாக காண்பதற்குரிய பங்களிப்பினை இந்தியா இனிமேலும் காலந்தாழ்த்தாது மேற்கொள்ள வேண்டும் என்பதே பலரினதும் எதிர்பார்ப்பாகும். தொடரும் இனநெருக்கடியினால் மோசமாக பாதிக்கப்படுவோர் தமிழ் மக்களே என்பது அறியாத விடயமல்ல.

ஆகையால், அந்த மக்களின் துன்பங்களை கருத்தில்கொண்டு சொந்த நலன்களுக்கு அப்பால் இனநெருக்கடியை கவனத்திற்கெடுத்து "சமன்செய்து சீர்தூக்கும் கோலாக" செயற்பட வேண்டும் என்பதே வேண்டுகோளாகும்.


நன்றி:- தினக்குரல்

0 Comments: