Sunday, February 10, 2008

வடக்கில் மாறும் தாக்குதல் உத்திகள்!

வடக்கில் போர்க்களம் அரசோ அல்லது படையினரோ எதிர்பார்த்தது போலில்லை. பாரிய தாக்குதல்கள் மூலம் வடபகுதிக்குள் நுழைந்து விடலாமென எதிர்பார்த்த படையினரால் இன்று சிறுசிறு தாக்குதல்கள் மூலம் கூட எதனையும் சாதிக்க முடியாத நிலையேற்பட்டுள்ளதால், வடக்கில் போர் உத்திகளை அடிக்கடி மாற்ற வேண்டிய நிலையேற்பட்டுள்ளது.

கனரக ஆயுதங்களை ஒன்றுதிரட்டி புலிகளின் நிலைகள் மீது தொடர்ச்சியாகவும் மிகக் கடுமையாகவும் தாக்குதல் நடத்தி பெருமெடுப்பில் படையணிகளை புலிகளின் பகுதிகளுக்குள் முன்நகர்த்தி அவர்கள் வசமிருக்கும் பிரதேசங்களைக் கைப்பற்றி விடலாமென்று அரசும் படையினரும் போட்ட திட்டங்கள் பலிக்கவில்லை.

இந்தத் தாக்குதல் உத்தி பலனளிக்காததால் வடக்கேயுள்ள களமுனைகளில் பாரிய படை நகர்வுகளைத் தவிர்த்து சிறுசிறு படையணிகள் மூலம் புலிகளின் முன்னரங்க காவல் நிலை களைத் தகர்த்து அவர்களின் பகுதிகளுக்குள் ஊடுருவி அவர்களுக்கு பெரும் உயிர்ச்சேதங்களை ஏற்படுத்தி அதன் மூலம் அவர்கள் வசமுள்ள பிரதேசங்களைக் கைப்பற்றி விடலாமென்று போட்ட திட்டங்களும் நிறைவேறவில்லை.

பாரிய படைநகர்வுகள் ஏன் வெற்றியளிக்கவில்லை, அந்த பாரிய படைநகர்வுகளை புலிகள் எவ்வாறு வெற்றிகரமாக எதிர்கொள்கிறார்களென்று ஆராய்ந்து கொண்டிருக்கையில், சிறு சிறு படையணிகளைப் பயன்படுத்தி கெரில்லா பாணியில் மேற்கொண்ட தாக்குதல்களுக்கெதிராகவும், புலிகள் எவ்வாறு முறியடிப்புச் சமர்களை மேற்கொள்கிறார்களென ஆராய வேண்டிய நிலையில் படையினருள்ளனர்.

அதேநேரம், கடந்த சில மாதகால மோதல் களில் படையினரால் புலிகளின் வசமுள்ள எந்தவொரு பகுதியையும் கைப்பற்ற முடியவில்லை.புலிகளின் வசமுள்ள பகுதிகளை கைப்பற்றும் நோக்கம் தங்களுக்கில்லையெனவும் முடிந்தவரை புலிகளை முன்னரங்க நிலைகளில் போருக்கிழுத்து அவர்களைக் கொல்வதே தங்களது நோக்கமும் உத்தியுமென படைத்தரப்பு கூறுகிறது.

வடக்கில் தற்போது கடும் மோதல்கள் நடைபெறும் வவுனியா, மன்னார், மணலாறு முன்னரங்க பகுதிகளிலும் யாழ்.குடாநாட்டில் கிளாலி, முகமாலை, நாகர்கோவில் முன்னரங்க பகுதிகளிலும் தாங்கள் இவ்வாறான உத்திகளையே பயன்படுத்தவதாக படைத்தரப்பு கூறுகிறது. பாரிய படையெடுப்பொன்றை மேற்கொள்ளும்போது அதனை அறிந்துவிடும் புலிகள் அந்தப் பாரிய படைநகர்வுக்கெதிராக ஒரேநேரத்தில் தங்கள் பெரும்பலத்தை பிரயோகித்து முறியடிப்புத் தாக்குதலை வெற்றிகரமாக மேற்கொண்டு விடுகின்றனர்.

வன்னிக் களமுனையிலும் மன்னாரிலும் யாழ். குடாநாட்டிலும் மேற்கொள்ளப்பட்ட மிகப் பெரும்பாலான பாரிய படை நகர்வுகள் தோல்வியிலேயே முடிவடைந்துள்ளன. இவ்வாறான பாரிய படைநகர்வுகள் படையினருக்கு பாதகமாகவும் புலிகளுக்கு சாதகமாகவும், அமைந்துள்ளன. படையினர் நகரும் இடங்களையும் திசையையும் குறிவைத்து புலிகள் கடும் தாக்குதலை தொடுக்கும் போது அது படையினருக்கு பலத்த இழப்புக்களையும் பின்னடைவு களையும் ஏற்படுத்துகிறது.

1997 இல் வன்னியில் படையினர் மேற்கொண்ட `ஜெயசிக்குரு'படை நடவடிக்கையை எப்படித் தோற்கடித்ததென்பதை தற்போதைய வன்னிக்களமுனையில் பாரிய படை நகர்வுகளை மேற்கொள்ளும் போது புலிகள் உணர்த்துகின்றனர். இதையடுத்தே, வடக்கில் தற்போது பெருமெடுப்பிலான பாரிய படை நகர்வை விடுத்து சிறுசிறு அணிகளைப் பயன்படுத்தி புலிகளின் பகுதிகளுக்குள் ஊருடுவிச் சென்று தாக்குதலை நடத்தி புலிகளுக்கு பெரும் சேதங்களையேற்படுத்தி அவர்களைப் பின்வாங்கச் செய்யும் உத்திகளை படைத்தரப்பு பயன்படுத்துகிறது.

சிறுசிறு படையணிகள் மூலம் புலிகளின் முன்னரங்க காவல் நிலைகளைத் தகர்த்தும் பதுங்குகுழிகளை அழித்தும் அவர்கள் பகுதிகளுக்குள் சென்று அவர்களை அழித்தும் அவர்களுக்கு சிறுகச் சிறுக பெரும் சேதங்களை ஏற்படுத்தும் போது அவர்கள் தங்கள் முன்னரங்க காவல் நிலைகளையும் பதுங்குகுழிகளையும் கைவிட்டு பின்வாங்குவார்களென படைத்தரப்பு நம்புகிறது.

இவ்வாறு ஏற்படும் சேதங்களைத் தவிர்ப்பதற்காக அவர்கள் அந்தந்தப் பகுதிகளைவிட்டு பின்வாங்கும் போது அந்தப் பிரதேசங்களும் தங்கள் வசம் வந்துவிடுமென்றும் படைத்தரப்பு நம்புகிறது. இதனால்தான், பாரிய தாக்குதல்களை நிறுத்திய படையினர் தாக்குதல் பாணியை மாற்றி சிறுசிறு அணிகளாக கெரில்லா தாக்குதலில் இறங்கினர்.

ஆரம்பத்தில் இதுபடையினருக்கு சாதகமாயிருந்தது. புலிகளுக்கு இழப்புகள் ஏற்பட்டன. படையினரின் இழப்புக்கள் குறைந்தன. இதனால், இந்தத் தாக்குதல் உத்தியை படையினர் தொடர முற்பட்டபோது, புலிகள் நிலைமையை உணர்ந்து தங்கள் முறியடிப்புத்தாக்குதல் உத்தியை மாற்றினர். சிறுசிறு படையணிகளை தங்கள் பகுதிக்குள் வரவிட்டு அவர்களைச் சுற்றிவளைத்து தாக்கத் தொடங்கினர். அதேநேரம், படையினரின் நிலைகள் மீதும் கடும் தாக்குதலைத் தொடுக்கவும் முனைந்தனர்.

தாங்கள் புலிகள் மீது பாரிய தாக்குதல்களைத் தொடுக்காத அதேநேரம், தங்கள் மீது புலிகள் பாரிய தாக்குதல்களைத் தொடுக்க விடாது தினமும் புலிகளின் நிலைகள் மீதும் அதற்கப்பால், அவர்கள் அணிதிரளக் கூடுமென எதிர்பார்க்கப்படும் பகுதிகள் மீதும் கடுமையான ஆட்லறி ஷெல் தாக்குதலையும் மோட்டார் தாக்குதலையும் நடத்தி, புலிகளைத் தாக்குதல் நிலையிலிருந்து தற்காப்பு நிலைக்கு வைத்திருப்பதிலும் கவனம் செலுத்துகின்றனர்.

இதேநேரம், சிறு சிறு படையணிகள் புலிகளின் முன்னரங்க காவல் நிலைகளுக்குள் ஊடுருவித் தாக்கியும் பதுங்கு குழிகளை அழிக்கும் நடவடிக்கையில் ஈடுபடுகையில் ஆழ ஊடுருவும் படையணியினர் அந்தப் பிரதேசங்களுக்குள் ஊடுருவி கிளைமோர் தாக்குதல்களை நடத்துவதன் மூலம், புலிகளின் தரைவழிக் கட்டளைப் பிரிவு முன்னரங்கப் பகுதிகளுக்கு வருவதைத் தடுக்கும் முயற்சியிலும் ஈடுபடுகின்றனர். இவ்வாறானதொரு தாக்குதலில்தான் புலிகளின் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த கேணல் சாள்ஸ் கொல்லப்பட்டார்

வியட்நாம் போரில் அமெரிக்கப் படைகள் பயன்படுத்திய தந்திரங்களையும் உத்திகளையும் பயன்படுத்த படைத்தரப்பு முயல்கிறது. சிறிய அணிகளுக்கு பெரிய அணிகளுக்குரிய பலத்தை வழங்குவதன் மூலம் புலிகளுக்கு பலத்த உயிர்ச் சேதத்தை ஏற்படுத்த படைத்தரப்பு முயல்கிறது. இதனால், முன்னர் இலகு ரகத் துப்பாக்கிகளை பயன்படுத்திய தாக்குதல் அணிகள் தற்போது மிக நவீன கனரக ஆயுதங்களைப் பயன்படுத்துகிறது. இதன்மூலம், கொல்லப்படும் புலிகளை விட படுகாயமடையும் புலிகளும் மீண்டும் களமுனைக்கு திரும்ப முடியாதளவுக்கு பாதிப்பை ஏற்படுத்த வேண்டுமென படைத்தரப்பு கருதுகிறது.

புலிகள் வசமுள்ள இடங்களைப் பிடிக்காது ஓய்வின்றி தொடர்ந்து அடித்து புலிகளுக்கு பலத்த இழப்பையும் பெரும் சலிப்பையும் ஏற்படுத்திவிட்டு பின்னர் திடீரென முன்னேறி இடங்களை தம்வசப்படுத்தும் கெரில்லா பாணியிலான போரிலேயே தற்போது படையினர் இறங்கியுள்ளனர். இதனால், வன்னிக்களமுனையில் மரபுவழிப் படையொன்று கெரில்லா பாணியிலான யுத்தத்தை நடத்துகிறது.

ஆனால், யாழ். குடாநாட்டில் களமுனையின் தன்மைவேறு. அந்தக் களமுனை அடர்ந்த காட்டுப் பகுதிகளைப் போலன்றி திறந்த வெளிக்களமாகவேயுள்ளது. ஆனால், அங்கும் படையினரால் பாரிய முன்னகர்வு முயற்சிகளை மேற்கொள்ள முடியாததால் கெரில்லா பாணியிலான தாக்குதலை நடத்த முயல்கிறது. இது அங்கு அவர்களுக்கு பலத்த இழப்புக்களை ஏற்படுத்துகிறது. புலிகளின் நிலைகளையோ பதுங்கு குழிகளையோ தகர்த்து முன்னேற முடியாதுள்ளது.

வன்னியில் ஒவ்வொரு களமுனையிலும் சுமார் 3000 படையினரே தாக்குதல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகக் கூறப்படுகிறது. ஒரே படையணியே திரும்பத் திரும்ப களமுனையில் ஓய்வின்றி தாக்குதலை நடத்துகிறது. இதனால், அந்தப் படையணிகள் களைத்துச் சலித்துப் போயுள்ளதாகத் தெரிவிக்கப்படுவதுடன் இந்தப் படையணிகளுக்கு ஏற்படும் இழப்புக்கள் நிரப்பப்படுவதில்லையெனவும் கூறப்படுகிறது.

வவுனியா, மன்னார், மணலாறு களமுனையில் ஒவ்வொரு பகுதிகளிலும் இதே நிலைதான் காணப்படுகிறது. தற்போதைய நிலையில் மன்னார் களமுனையும் குடாநாட்டு களமுனையுமே சற்று ஒடுங்கிய பிரதேசங்களாயிருப்பதால் இங்கு முன்னேற்ற முயற்சிகளை மேற்கொள்ள படையினர் முனைகின்றனர். ஏனைய களமுனைகளை விட தற்போதைய நிலையில் குடாநாட்டிலேயே அதிகளவு படையினர் நிலைகொண்டுள்ளனர்.

அதேநேரம், முகமாலை, கிளாலி, நாகர்கோவில் களமுனைகள் மிகவும் ஒடுங்கியவை. தற்போதைய நிலையில் வவுனியாவிலோ, மன்னாரிலோ அல்லது மணலாறிலோ பாரிய முன்நகர்வுகளை மேற்கொண்டு இடங்களைக் கைப்பற்றினால் அவற்றைத் தக்கவைக்க மேலதிக படைகள் தேவை. ஆனால், குடாநாட்டுக் களமுனைகள் மிகவும் ஒடுங்கிய குறுகலான பிரதேசங்களென்பதாலும் அங்குதான் கூடியளவு படைகள் (முப்படைகளும் பொலிஸாருமென 35,000 பேர்) நிலைகொண்டுள்ளதாலும் அங்கு முன்நகர்வு முயற்சிகள் மூலம் இடங்களைக் கைப்பற்றினால் பெருமளவு படையினரில்லாமல் முன்னரங்க நிலைகளை அப்படியே முன்நகர்த்த முடியுமெனவும் படைத்தரப்பு கருதுகிறது.

இராணுவத்தினரை பொறுத்தவரை புதிது புதிதாக படையணிகளை உருவாக்கினாலும் ஆட்கள் பற்றாக்குறை பெருமளவில் நிலவுகிறது. யுத்தமுனையில் ஏற்படும் இழப்புக்கள், தப்பியோடுவோர், ஓய்வுபெறுவோரின் வெற்றிடங்களை நிரப்ப முடியாத நிலையில், தென்பகுதியில் பாதுகாப்பு நிலைமை பெருமளவில் மோசமடைந்துள்ளதால் தெற்கே பெருமளவு படையினரை நிறுத்த வேண்டிய நிலையேற்பட்டுள்ளது. ஊர்காவல் படையினரை நம்பி தென்பகுதி பாதுகாப்பை அவர்களிடம் ஒப்படைக்க முடியாத நிலையேற்பட்டுள்ளது.

இதேநேரம், கடந்த காலங்களில் நடைபெற்ற பாரிய படை நடவடிக்கைகளின் போது ஒரே நேரத்தில் மூன்று படையணிகள் களமிறங்கும். உதாரணத்திற்கு, 56 ஆவது படையணி தாக்குதலில் ஈடுபட்டு முன்நகர்வை மேற்கொண்டு முன்னேறி இடங்களைக் கைப்பற்றினால் 57 ஆவது படையணி, பிடித்த பிரதேசங்களில் நிலையமைத்து மீண்டும் அது புலிகளிடம் வீழாது பாதுகாக்க 58 ஆவது படையணி அங்கு நிலை கொண்டு அடுத்த நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.

ஆனால், வடக்கில் தற்போது இடம்பெறும் படை நடவடிக்கையில் அந்தந்தப் பகுதிகளில் நிலைகொண்டுள்ள படையணிகளே அனைத்திலும் ஈடுபட வேண்டிய நிலையேற்பட்டுள்ளது. தாக்குதலில் ஈடுபடும் படையணியே முன்னேறுவது முதல் அதனைத் தக்கவைப்பது வரையான அனைத்து நடவடிக்கைகளிலும் ஈடுபடும் நிலையேற்பட்டுள்ளது. இதனால், தாக்குதல் படையணிகள் பலத்த இழப்பைச் சந்திக்கும் போது அவர்களுக்கு மாற்றீடுகளை மேற்கொள்ள முடியாத நிலையேற்பட்டுள்ளது.

திருகோணமலை முதற்கொண்டு மட்டக்களப்பு மற்றும் வன்னிக் களமுனை வரை 58 ஆவது படையணியே தாக்குதல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. இந்தப் படையணியில் கொல்லப்படுவோர் மற்றும் காயமடைவோருக்கான வெற்றிடத்தை நிரப்ப முடியாத நிலையேற்பட்டுள்ளது. இதிலிருந்து ஓய்வுபெறுவோருக்குரிய வெற்றிடமே ஓரளவு நிரப்பப்படுகிறது. இதுபோன்றே ஏனைய படையணிகளதும் நிலையுள்ளது. ஆட் பற்றாக்குறையும் தென்பகுதி நிலைமையும் வடக்கில் இடம்பெறும் படை நடவடிக்கைகளை பெரிதும் பாதிக்கின்றன.

இதைவிட தினமும் சகல களமுனைகளிலும் 3000 முதல் 3,500 வரையான ஷெல்களும் அதற்கு மேற்பட்ட மோட்டார் குண்டுகளும் ஏவப்படுவதால் தினமும் அரசு போருக்காக பல இலட்சம் ரூபாவை செலவிடுகிறது. தினமும் வீசப்படும் விமானக் குண்டுகளின் செலவும் மிக அதிகம். பலகோடி ரூபாவை கொட்டி தினமும் யுத்தத்தை நடத்த முடியாத நிலைமை அரசுக்கு ஏற்பட்டு வருகிறது. அதேநேரம், தொடர்ந்து ஓய்வின்றி படையினர் யுத்தத்திலீடுபடுவதால் அவர்களது மனோநிலையும் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் தான் வன்னியிலும் குடாநாட்டிலும் யுத்த தந்திரோபாயத்தை மாற்றி படையினர் தொடர்ச்சியாக கடும் மோதல்களில் ஈடுபட்டு வருகின்றனர். எனினும், படையினரால் குறிப்பிடத்தக்க வெற்றி எதனையும் பெற முடியவில்லை. கடந்த பல மாதங்களாக வடக்கு போர்முனையிலிருந்து அரசால் வெற்றிச் செய்தி எதனையும் வெளியிட முடியவில்லை. சாணேற முழம் சறுக்கும் நிலையே போர்முனையிலேற்பட்டு வருகிறது. விமானத் தாக்குதல் மூலம் புலிகளின் தலைவர்களைக் குறிவைக்க முடியுமென்ற நிலையும் தோல்வியடைந்து வருகிறது.

படையினரின் போர் உத்திகளையும் தந்திரோபாயங்களையும் அறிந்து புலிகளும் அதற்கேற்ப தங்கள் படையணிகளை களமிறக்கி படையினருக்கு பலத்த இழப்புக்களை ஏற்படுத்தி வருகின்றனர். தினமும் களமுனையில் பத்திற்கும் குறையாது புலிகள் கொல்லப்படுவதாக கடந்த பல மாதங்களாக படைத்தரப்பு கூறுகிறது. புலிகளின் தொலைத்தொடர்பு சாதனங்களை ஒட்டுக்கேட்டபோதே, இது தெரியவருவதாகவும் கூறுகிறது. ஆனால் புலிகள் இதனை முற்றாக மறுத்து வருகின்றனர்.

வன்னிக் காடுகளுக்குள் தாக்குதல்களை நடத்த வரும் படையினரை புலிகளும் தந்திரமாகவே எதிர்கொள்கின்றனர். தங்களை உருமறைப்புச் செய்தவாறு பதுங்கியிருக்கும் புலிகளின்

`சினைப்பர் தாக்குதல்' அணிகள், படையினர் வரும் வழிகளில் காத்திருந்து அவர்களைத் தாக்குகின்றனர். மிதிவெடிகள், பொறிவெடிகளும் படையினருக்கு பலத்த சேதங்களை ஏற்படுத்துகின்றன. கிளைமோர் தாக்குதல் மூலமும் படையினருக்கு புலிகள் சேதங்களை ஏற்படுத்துகின்றனர்.

அதேநேரம், படையினர் வன்னியில் பலத்த இழப்புக்களைச் சந்தித்து வருவதாகவும் தினமும் கொல்லப்படும் படையினரின் சடலங்களை தென்பகுதிக்கு கொண்டு செல்லாது மன்னாரில் சில பகுதிகளில் புதைத்து வருவதாகவும் புலிகள் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. இரவிரவாக ட்ரக்குகளில் சடலங்களுடன் வரும் படையினர் அவற்றை புதைத்துவிட்டுச் செல்வதை மக்கள் அவதானித்து வருவதாகவும் அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த காலங்களில் கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் பல யுத்தங்களில் கொல்லப்பட்ட படையினரின் சடலங்களை படையினர் ஏற்க மறுத்ததையும் சுட்டிக்காட்டும் அந்தத் தகவல்கள், தற்போதும் அதுபோன்றே கொல்லப்படும் படையினரின் சடலங்கள் உறவினர்களிடம் கையளிக்கப்படாது அந்தந்தப் பகுதிகளிலேயே புதைக்கப்படுவதாகவும் தெரிவிக்கின்றன.

எனினும், படையினர் இதனை மறுத்துள்ளனர். புலிகள் பொய்ப் பிரசாரங்களை மேற்கொண்டு படையினரின் குடும்பத்தவர்களை குழப்பமடையச் செய்ய முயல்வதாகவும் இது மோசமானதொரு பிரசாரமெனவும் சீறிப் பாய்ந்துள்ளனர். அதேநேரம், களமுனையில் தங்களுக்கேற்படும் இழப்புக்களை தாங்கள் மறைப்பதில்லையென்றும் கொல்லப்படும் படையினரின் சடலங்கள் அவர்களது குடும்பத்தவர்களிடம் ஒப்படைக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் வடபகுதி கள நிலைமை எதிர்பார்ப்புகளுக்கு மாறாகவேயுள்ளது. புலிகளின் பகுதிகளை பிடித்துவிட படையினர் பகீரதப் பிரயத்தனங்களில் ஈடுபட்டுள்ளனர். போர் முறையையும் தந்திரோபாயங்களையும் உத்திகளையும் மாற்றி புலிகளின் பகுதிகளுக்குள் நுழைய முற்படுகின்றனர். படையினரின் தந்திரங்களையும் உத்திகளையும் அறிந்து புலிகளும் தங்கள் தாக்குதல் முறைகளை மாற்றி படையினருக்கு பலத்த இழப்புக்களையும் சலிப்பையும் ஏற்படுத்தி வருகின்றனர். எந்தவொரு பரபரப்போ எதிர்பார்ப்போ இன்றி களமுனை தினமும் அதிர்ந்துகொண்டிருக்கிறது.

நன்றி -விதுரன்-

0 Comments: