Saturday, February 23, 2008

தொடர்ந்தும் பந்தாடப்படும் சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழு

"எந்தவொரு பிரச்சினையையும் முகங்கொடாது, தட்டிக்கழிக்க விரும்பினால் ஒரு விசாரணைக் கமிஷனையோ ஒரு நாடாளுமன்றத் தெரிவுக்குழுவையோ அமைத்து, சர்வகட்சி மாநாட்டையோ, ஒரு வட்டமேசை மாநாட்டையோ நடத்தி, அதனை முடிவில்லாமல் இழுத்தடிப்பது சிங்கள ஆட்சியாளர்களின் அரசியல் பாரம்பரியம். இதனைத்தான் மஹிந்தவும் செய்கின்றார்.''
இந்தக் கருத்தைக் கூறியவர் வேறு யாருமல்லர், தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரன்தான். அதுவும் இற்றைக்கு ஒன்றேகால் வருடத்துக்கு முன்னரே 2006 நவம்பரில் தாம் ஆற்றிய மாவீரர் தின உரையிலேயே இதைத் தெளிவுபடுத்தி விட்டார் அவர்.
ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்த்தனா என்ன செய்தாரோ ஜனாதிபதி பிரேமதாஸவும், ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவும் என்ன செய்தார்களோ அதைத்தான் இப்போது இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் அதேவழியில் செய்கிறார்.
அதனையே புலிகளின் தலைவரும் நேரத்துடன் சுட்டிக்காட்டியிருந்தார். அதுவே இப்போது நடந்தேறுகின்றது.
சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழு என்ற மாயமானைக்காட்டி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நடத்தும் அரசியல் சித்து விளையாட்டின் தாற்பரியம் உள்ளாந்தம் இப்போது மெல்ல மெல்ல அம்பலமாகத் தொடங்கிவிட்டது.
தாம் ஆட்சிக்கு வந்தால் மூன்றுமாத காலத்துக்குள் இனப்பிரச்சினைத்தீர்வுக்கான தென்னிலங்கையின் இணக்கப்பாட்டை உருவாக்குவார் என்று தமது "மஹிந்த சிந்தனை' மூலம் தேர்தல் வாக்குறுதி வழங்கியே அவர் ஆட்சிப்பீடம் ஏறினார்.
ஆட்சிக்குவந்து ஏழு மாதங்கள் கடந்த பின்னரே இனப்பிரச்சினைத் தீர்வுக்கான சிபார்சுகளைச் செய்வதற்கு என்ற பெயரில் சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவை அவர் கூட்டினார். அது தென்னிலங்கையின் கருத்து இணக்கப்பாட்டை உருவாக்கித்தரும் பொறுப்பை ஏற்றிருப்பதால் வடக்கு, கிழக்குத் தமிழர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கோ, அதில் இடம்பெற்றுள்ள கட்சிகளுக்கோ அந்தச் சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவில் இடமில்லை என்றார்.(அப்படியென்றால் அதில் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சிக்கு ஈ. பி. டி. பிக்கு ஏன் இடமளித்தார் என்பது அவருக்குத்தான் வெளிச்சம்)
அந்தச் சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவும் நீண்ட ஒன்றரை வருடகாலம் அறுபதுக்கும் அதிக அமர்வுகளை பலநூறு மணித்தியாலங்கள் நடத்திக் கூடிக்கலைந்து, ஆராய்ந்து, இனப்பிரச்சினைத் தீர்வுக்கான சிபார்சுஒன்றை நெருங்கிய சமயம் அதற்கும் ஒரேயடியாக முட்டுக்கட்டை போட்டார் அரசுத் தலைவர்.
"இந்தத் தீர்வு யோசனையைக் கிடப்பில் போட்டுவிட்டு, இருபது வருடங்களுக்கு முந்திய, அரசமைப்பின் 13 ஆவது திருத்தத்தை அப்படியே நடைமுறைப்படுத்தக் கோரும் யோசனை ஒன்றை என்முன்னே சமர்ப்பியுங்கள்!' என்று தான் அமைத்த சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவைப் பணித்தார் அவர்.
அரசுக் கூட்டமைப்பில் பங்குவகித்து, அரசுத் தலைவரின் ஏவலராகச் செயற்படும் கட்சிகள் மட்டுமே சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவில் எஞ்சியிருந்ததால் எஞ்சியிருப்பதால் அவரின் வழிகாட்டுதலை சிரசில் தூக்கி வைத்துக் கூத்தடித்து நடந்துகொண்டது கொள்கிறது சர்வகட்சிக் குழு.
அரசமைப்பின் பதின்மூன்றாவது திருத்தத்தை நடைமுறைப்படுத்தக் கோருமாறு ஜனாதிபதி விடுத்த வழிகாட்டலை சிரசின்மேல் வைத்துக்கொண்டு, இடைக்கால ஏற்பாடு என்ற சமாளிப்புடன், அதையே தனது யோசனையாகச் சமர்ப்பித்த சர்வகட்சிக் குழு, இப்போது தன்மீது நிரந்தரப் பழி குற்றச்சாட்டு வந்துவிடக் கூடாது என்பதற்காக, அதைச் சமாளிப்பதற்காக, நிரந்தரத் தீர்வுக்கான யோசனையைத் தேடும் இருட்டறையில் கறுப்புப்பூனையைத் தேடும் குருடனின் பணிபோல தன்னுடைய வேலையை முன்னெடுக்க முயல்கிறது.
அதற்கும் முட்டுக்கட்டை போட்டு முடக்கும் எத்தனங்கள் ஆரம்பமாகி விட்டன.
பிள்ளையான் குழுவின் பெயரால் ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்ட கடிதத்தின் உள்நோக்கம் இதுதான்.
பிள்ளையானின் கடிதத்தை வைத்தே சர்வகட்சிக் குழுவின் செயற்பாட்டுக்கு ஓர் இடக்கு முடக்கு முட்டுக்கட்டை போட்டு விடுவார் ஜனாதிபதி.
கிழக்குத் தமிழ் மக்களின் "உண்மையான' பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களின் பங்களிப்பும் சர்வகட்சி மாநாட்டுக்குள் சேர்க்கப்படும் வரை அதன் பணிகள் முழுமைபெறா என்ற ஒரு கயிறைக் காட்டி எல்லா விடயங்களையும் முடக்கிவிட அவரால் முடியும்.
அத்தகைய சதித் தந்திரோபாயத் திட்டத்தின் ஓர் அங்கமாகவே பிள்ளையான் ஜனாதிபதிக்கு எழுதிய கடிதத்தைக் கொள்ள வேண்டியிருக்கின்றது.
தமிழ் மக்கள் தங்களுடைய ஏக பிரதிநிதிகள் யார் என்பதைக் கடந்த பொதுத் தேர்தலில் தெளிவாகவும் திட்டவட்டமாகவும் வெளிப்படுத்திய பின்னரும், இப்போது தமிழர் தாயகத்தை ஆயுத வன்முறை மூலம் ஆக்கிரமித்து வைத்துக்கொண்டு தமிழர்களின் பிரதிநிதித்துவம் குறித்து சர்ச்சையைக் கிளப்புவது அரசியல் நரித்தனமேயன்றி வேறில்லை.

நன்றி உதயன்.

0 Comments: