இலங்கை இனப்பிரச்சினைக்கு அமைதி வழித் தீர்வு காண்பதற்கான சமாதான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட வேளையில் மேற்கு நாடுகள் குறிப்பாக ஐரோப்பிய ஒன்றியம் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தைப் பயங்கரவாத இயக்கமாகப் பட்டியலிட்டு அதன் மீது தடை விதித்தன.
இலங்கை அரசும், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பும் சம தரப்பு அந்தஸ்து என்ற இணக்கப்பாட்டுடன் அமைதி முயற்சிகளில் ஈடுபட்டிருக்கையில், அவற்றில் ஒரு தரப்பின் அந்தஸ்து நிலையைக் கெடுக்கும் விதத்தில் தடையை விதித்து, அமைதி முயற்சிகளைக் குழப்பாதீர்கள் என்று தமிழர் சார்பு அமைப்புகள் பலவும் சுட்டிக்காட்டியபோது அதைக் காதில் வாங்காமல் நடந்து கொண்டது ஐரோப்பிய சமூகம்.
கொழும்பின் பொய்ப் பரப்புரைகளுக்கு எடுபட்டு, புலிகள் மீது தடை விதித்து, அமைதி முயற்சிகளுக்கு எஞ்சியிருந்த கொஞ்ச நஞ்ச வாய்ப்பையும் சிதறடித்ததில் ஐரோப்பிய ஒன்றியத்தின் பங்களிப்பும் புறக்கணிக்கத் தக்கதல்ல.
அத்தகைய நடவடிக்கைகளினால் கிடைத்த வாய்ப்பான சூழ்நிலையைப் பயன்படுத்தி, அமைதி முயற்சிகளுக்கு நிரந்தர சாவுமணி அடித்த கொழும்பு, இப்போது யுத்த வெறித் தீவிரத்தில் சந்நத உருக்கொண்டு நிற்கின்றது.
அமைதி வேளையில் புலிகள் மீது நடவடிக்கை எடுத்த மேற்குலகு, இப்போது யுத்த சமயத்தில், போர்த் தீவிரத்தில் துடிக்கும் இலங்கை அரசுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது குறித்து பிரஸ்தாபிக்கின்றது ஆராய்கின்றது.
இலங்கையின் யுத்த தீவிரச் செயற்பாடுகளுக்குக் கண்டனம் தெரிவித்தும், அமைதி முயற்சி வழிகளுக்குத் திரும்பும்படி வலியுறுத்தும் விதத்திலும் இலங்கைக்கு எதிராகச் சில பொருளாதாரத் தடைகளை விதிக்கவேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியத்தின் சக்திமிக்க நாடான ஜேர்மன் கேட்டிருக்கின்றது.
பொருளாதார ஒத்துழைப்பு, அபிவிருத்தி ஆகிய துறைகளுக்கான ஜேர்மனியின் சமஷ்டி அமைச்சர் ஹெய்டிமேரி விஸோரக் ஸியோல் அம்மையார் இவ்விடயம் குறித்து வெளிப்படையாகவும் காட்டமாகவும் கருத்துக் கூறியிருக்கின்றார்.
முக்கியமாக இலங்கைக்கான விசேட வரிச் சலுகைகளை நிறுத்துவதற்கு அவர் முன்மொழிந்திருக்கின்றார்.
இலங்கையில் தைக்கப்படும் ஆடைகளை வரிச்சலுகை வழங்கி இறக்குமதி செய்கிறது அமெரிக்காவும், ஐரோப்பிய ஒன்றியமும்.
இலங்கைக்கு, ஐரோப்பிய ஒன்றியமும், அமெரிக்காவும் விசேட வரிச் சலுகைகளை வழங்குவதாலேயே மற்ற நாடுகளோடு போட்டி போட்டுக்கொண்டு இந்த இரு தரப்புகளுக்கும் தைத்த ஆடைகளை இலங்கையால் தாராளமாக ஏற்றுமதி செய்ய முடிகின்றது. இந்த வரிச்சலுகையை ஐரோப்பிய ஒன்றியமும், அமெரிக்காவும் ரத்துச் செய்யுமானால் இலங்கையால் பிற நாடுகளுடன் போட்டிபோட்டு குறைந்த கட்டணத்தில் அத்தகைய ஆடைகளை ஏற்றுமதி செய்ய முடியாது. இலங்கையின் ஆடை உற்பத்தித் தொழிற்சாலைகள் படுத்துவிடும். இலங்கையில் உள்ள ஆயிரக்கணக்கான ஆடைத் தொழிற்சாலைகளுக்கு மூடுவிழா நடத்தவேண்டி நேரும். ஆடைத் தொழிற்சாலைகளில் பணிபுரியும் லட்சத்துக்கும் அதிக தொழிலாளர்கள் வேலை இழந்து நடுவீதிக்கு வருவர். நாட்டின் பொருளாதாரமே நெருக்கடிக்குள் மூழ்கும்.
ஐரோப்பிய ஒன்றியம் மட்டும் வருடாந்தம் நூற்றியிருபது கோடி டொலருக்கு (சுமார் 13 ஆயிரம் கோடி ரூபாவுக்கு) இலங்கையிலிருந்து ஆடைகளை இறக்குமதி செய்கின்றது. இதேபோன்ற பெருந்தொகைக்கு அமெரிக்காவுக்கும் தைத்த ஆடைகள் இலங்கையிலிருந்து ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
இந்த இரண்டு தரப்புகளும், இலங்கை விசேடமாக வழங்கிவரும் வரி இல்லாத சலுகையை ரத்துச்செய்து, ஆடை உற்பத்தி மற்றும் ஏற்றுமதி விடயத்தில் மற்றைய நாடுகளுடன் நியாயமான போட்டியில் ஈடுபடுங்கள் என்று இலங்கைக்கும் கூறி ஒதுங்குமானால் இலங்கையில் உள்ள பல நூறு ஆடை உற்பத்தித் தொழிற்சாலைகளை நிரந்தரமாக இழுத்து மூடுவதைத் தவிர வேறு வழியில்லை என்றாகிவிடும்.
அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் பொதுவாக உள்ள இறக்குமதி வரியை இலங்கையும் செலுத்தி, அங்கு ஆடைகளை ஏற்றுமதி செய்வதாயின் அது இலங்கைத் தொழிற் சாலைகளுக்குக் கட்டுப்படியாகாது. இத்துறையில் போட்டிபோடும் ஏனைய நாடுகளுடன் இலங்கையால் தாக்குப் பிடிக்க முடியாது.
ஆகவே, பொருளாதார விடயத்தில் இலங்கையின் முக்கிய "குடுமியை' தனது கையில் பிடித்து வைத்துக் கொண்டே ஜேர்மன் இப்போது நியாயத்தைப் பேச நிலைநிறுத்த முற்பட்டிருக்கின்றது.
இலங்கைக்கு வழங்கிவந்த இந்த வரிச்சலுகைத் திட்டம் 2008 உடன் நிறைவு பெற இருக்கும் இச்சமயத்தில் இவ்விவகாரம் குறித்து அமெரிக்காவுடன் பேசி ஒரு தீர்மானத்துக்கு வரவேண்டும் என்று ஜேர்மனி முன்மொழிவது இக்கால கட்டத்தில் முக்கியமான ஒரு திருப்புமுனையாகும்.
இதேசமயம், யுத்த முனைப்பில் இலங்கை தீவிரம் காட்டுவதால் இலங்கைக்கான தனது புதிய அபிவிருத்தி மற்றும் உதவித் திட்டங்களை ஜேர்மன் அடியோடு இடைநிறுத்தியிருக்கின்றமை குறித்தும் ஜேர்மன் அமைச்சர் விளக்கியிருக்கின்றார்.
கொழும்பின் யுத்தத் தீவிரப் போக்குக்கு எதிராக சர்வதேச மட்டத்தில் காத்திரமான நிலைப்பாடு கருக்கட்டி வருவதையே ஜேர்மன் அமைச்சரின் கருத்து வெளிப்படுத்துகின்றது.
நன்றி - உதயன்
Thursday, February 14, 2008
யுத்தத் தீவிரப் போக்குக்கு எதிராக சர்வதேச நிலைப்பாடு
Posted by tamil at 5:09 AM
Subscribe to:
Post Comments (Atom)
0 Comments:
Post a Comment