இறந்துபோன குழந்தை ஒன்றிற்கு இன்று (22-02-08) பிறந்த நாள். மகிழ்வோடு கொண்டாட வேண்டிய இத்தினத்தை கவலையோடு நினைத்துப் பார்க்கிறோம்.
22-02-2002 அன்று சிறிலங்கா அரசுடன் செய்து கொள்ளப்பட்ட போர் நிறுத்த உடன்பாட்டு பிறப்பே அந்தக் குழந்தை.
நீண்ட போர் முழக்கத்திற்குள் சிக்கித் தத்தளித்த இலங்கைத்தீவை சமாதான பூமியாக்குவோம் எனும் நல்ல நோக்கத்தோடு நகர்ந்த சர்வதேசத்தின் முயற்சிக்கும் சிங்கள தேசத்தின் இராணுவ வீழ்ச்சிக்கும் சாட்சியாக உதித்த அந்த சமாதான உடன்படிக்கைக்கு பிறப்பிலிருந்தே இனவாதம் எனும் கொடிய புற்றுநோய் பீடித்து இருந்தது.
அந்தக் குழந்தையின் கவர்ச்சியால் அந்த நோய் குறித்துப் பலர் அறிந்திருக்காவிட்டாலும் அந்த நோய் விஸ்பரூபம் எடுத்து கைமீறிய நிலைக்குச் சென்றபோதே பலரும் அச்சமடைந்தனர். கவலை கொண்டனர்.
1995 ஆம் ஆண்டு காலப்பகுதியில் சந்திரிகா அரசால் தீவிரப்படுத்தப்பட்ட இன அழிப்பு யுத்தம் எம் தாயக நிலத்தை பெருமளவில் ஆக்கிரமிக்கத் தொடங்கியது. சூரியக்கதிர் இராணுவ நடவடிக்கை மூலம் பல இலட்சம் தமிழ் மக்களின் வாழிடங்களை வெறுமையாக்கி அவர்களை அகதிகளாக்கிய சந்திரிகா அரசு வன்னி மண்ணிலும் தனது இராணுவச் செயற்பாட்டை தீவிரப்படுத்தியது. 1997 மே 13 ஆம் திகதி தொடங்கப்பட்ட ஜெயசிக்குறு இராணுவ நடவடிக்கை மூலம் வன்னி மண்ணையும் கூறுபோட்டு தன் மேலாதிக்கத்தைக் காட்ட முயன்றது.
கிளிநொச்சி பகுதிகளும் ஆக்கிரமிக்கப்பட்ட நிலையில் மாங்குளத்தை அண்மித்து நின்ற ஆக்கிரமிப்புப் படைகள் தொடர்ச்சியாக மன்னார் மாவட்டத்தின் பல பகுதிகளையும் ஆக்கிரமித்து நிலை கொண்டிருந்தது.
இப்படிப்பட்ட இராணுவ நெருக்கடிக்கு முகம் கொடுத்த நிலையிலேயே எமது தேசியத் தலைவர் வகுத்த இராணுவ யுக்தி 1999 ஆம் ஆண்டு பிற்பகுதியில் ஓயாத அலைகள் மூன்றாய் பிறப்பெடுத்து வன்னி மண்ணை ஒவ்வொரு பகுதியாக மீட்கத் தொடங்கியது.
விடுதலைப் புலிகளின் மிகத் தீவிர தாக்குதல்களுக்கு முகம் கொடுக்க முடியாத சிங்களப் படைகள் இறந்தோர் போக உயிர் தப்பினால் போதும் என்ற நிலையில் தப்பியோடத் தொடங்கினர். ஒட்டுசுட்டான், நெடுங்கேணி, கரிப்பட்டமுறிப்பு, மாங்குளம், கனகராயன்குளம், புளியங்குளம் என அடுத்தடுத்து விடுதலைப் புலிகளினால் தமிழர் தாயகப் பகுதிகள் மீட்கப்பட்ட செய்தி தமிழர்களை உற்சாகம் கொள்ளச் செய்தது. இராணுவ முனைப்புப் பெற்றிருந்த சிங்கள தேசத்தை அச்சமடையச் செய்தது.
இவ்வாறாக ரணகோச நடவடிக்கையில் இராணுவம் ஆக்கிரமித்த மன்னாரின் பகுதிகளும் புலிகளிடம் வீழ்ச்சி கண்ட நிலையில் வடக்கு நோக்கிய புலிகளின் ஓயாத அலைகள் மூன்று படையணிகள், வெற்றிலைக்கேணி, கட்டைக்காடு, பரந்தன் படைத்தளங்கள் உட்பட பல பிரதேசங்களை மீட்ட நிலையில் யாழ். குடாவில் நிலை கொண்ட பெரும் தொகையான படையினருக்கு சவால்களைக் கொடுத்து முன்னேறத் தொடங்கினர்.
இதில் முக்கிய அம்சமாக குடாரப்புப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட மதிநுட்பமான தரையிறக்கத்தின் மூலம் சிங்களப் படை வாசலின் உயிர்நாடியாய் இருந்த ஆனையிறவு பெரும் தளத்தை தமிழீழ விடுதலைப் புலிகள் கைப்பற்றிக் கொண்டதான செய்தி சர்வதேசத்தையும் வியப்பில் ஆழ்த்தியது.
வன்னியில் எங்கோ ஓர் மூலைக்குள் முடக்கப்பட்டதாக அரசு கூறிய புலிகளா இச்சாதனையை செய்கிறார்கள்? எனச் சிங்கள தேசம் பயத்தில் உறைந்தது. பளையைத் தாண்டி முகமாலை, கிளாலி, நாகர்கோவில் வரையுமான பகுதிகள் வரை முன்னேறி நிலைகொண்ட புலிகளின் போர் வெற்றியால் சிங்களத்தின் இராணுவ மமதை சின்னாபின்னமாக்கப்பட்டது எனலாம். இப்படிப்பட்ட இராணுவ மேலாதிக்க நிலையில் இருந்து கொண்டே தமிழீழ விடுதலைப் புலிகள் அப்போது ஒருதலைப்பட்சமான போர் நிறுத்தத்தை அறிவித்து, சமாதானத்திற்கான கதவுகளை அகலத் திறந்திருந்தனர்.
சர்வதேசத்தின் கோரிக்கைகளுக்கு மதிப்பளித்து விடுதலைப் புலிகள் மேற்கொண்ட ஒரு தலைப்பட்சமான போர் நிறுத்தத்தை மதிக்காத சிங்கள அரசு, விழுந்தும் மீசையில் மண் ஒட்டாத கதையாய் அச்சந்தர்ப்பத்தில் கிடைத்த இராணுவ உதவிகளைப் பயன்படுத்தி இழந்த பிரதேசங்களை ஆக்கிரமிக்க முயன்றது.
அதன் உச்சகட்டமாக ஆனையிறவுப் படைத்தளத்தை மீட்பதற்காக படைத் தரப்பு மேற்கொண்ட தீச்சுவாலை நடவடிக்கை மிகமோசமான படைத்துறைத் தோல்வியை சிங்களப் படைகளுக்கு ஏற்படுத்தியது எனலாம்.
துரத்தித் தாக்கி வந்த புலிகளின் படையணிகள் எதிர்பார்த்திருந்து பகையை உள்வரவிட்டு வியூகம் அமைத்து மேற்கொண்ட அந்த எதிர்ச்சமரில் சிங்களப் படை மிகமோசமான இழப்புக்களைச் சந்தித்து தப்பியோடியது.
இதன் சமகாலத்தில் சிங்களத்தின் தேசத்தில் அமைந்துள்ள கட்டுநாயக்கா விமானப் படைத்தளம் மீதான சிறப்பு அணியினரின் தாக்குதல்களும் இராணுவ வழியில் தலை எடுக்க முடியாத பரிதாப நிலைக்கு அரசைக் கொண்டு சென்றது.
இந்த நிலை நீடித்தால் தமிழீழப் பகுதியைப் புலிகள் மீட்டெடுத்து விடுவார்கள் என்றஞ்சிய சிங்களத் தலைமை சர்வதேசத்தின் சமாதான முயற்சிகளுக்கு உடன்பட்டாக வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டது. அப்போது எழுந்த அரசியல் மாற்றமும் அதனையே உணர்த்தி நின்றது.
ஒரு முறை (சந்திரிகாவின் இரண்டாவது ஆட்சிக் காலம்) போருக்காகவே சந்திரிகாவை சனாதிபதியாக்கிய சிங்கள மக்கள் இம்முறை சமாதானத்திற்காக ரணிலை பிரதமாரக்கினார்கள். பிரதமர் பதவியை ஐ.தே.க.வினரும் சனாதிபதி பதவியை எதிர்க்கட்சியான பொதுசன ஐக்கிய முன்னணியின் தலைவி சந்திரிகாவும் வைத்திருந்த நிலையில் உருவாக்கப்பட்ட சமாதான உடன்படிக்கை நோர்வே அரசின் நடுநிலைமை கண்காணிப்புடன் கைச்சாத்தானது.
யுத்த நிறுத்த உடன்படிக்கையின் கவர்ச்சியான விடயங்களாலும் மாற்றங்களாலும் கூடவே வந்த இனவாத முனைப்புக்கள் இரண்டாம் பட்சமாகி பலரால் கவனிக்கப்படாமல் போனது என்பதும் உண்மை.
பொருளாதாரத் தடை நீக்கம், கண்டி வீதி திறப்பு, கிழக்கு மாகாணத்தில் பல வீதிகள் திறப்பு, யுத்த சத்தங்கள் இல்லை என்ற நிலையில் அந்த அமைதியான சூழல் அனைவரையும் கவர்ந்தது.
குறிப்பாக, சிங்கள மக்களின் மனநிலை அப்போது அமைதிச் சூழலை விரும்பியமையால் யுத்த நிறுத்த உடன்படிக்கைக்கு ஆதரவான மனநிலையில் இருந்தார்கள். இது அவர்களின் அமைதியான வாழ்க்கைக்கும் வழிவகுத்தது எனலாம்.
இச்சூழலில் எங்கோ ஓர் மூலையில் முடங்கிப்போய் இருந்த சிங்கள இனவாதம் எனும் புற்றுநோய்க் கிருமிகள் மெல்ல மெல்ல யுத்த நிறுத்த குழந்தையை பீடிக்கத் தொடங்கியிருந்தது.
யுத்த நிறுத்தம் கைச்சாத்தாகி மறுநாள் ஜே.வி.பி., இதற்கு எதிரான குரலை பாராளுமன்றத்தில் மிகத் தீவிரமாக முன்வைத்தது.
யுத்த நிறுத்த உடன்படிக்கையில் உள்ள சரத்துக்கள் குறித்து விவாதிக்க உடனடியாக பாராளுமன்றத்தைக் கூட்டுமாறு சபாநாயகருக்கு வேண்டுகோள் விடுத்தது. இந்த நிலைப்பாட்டிலேயே சிகல உறுமய கட்சியும் தமது கருத்து நிலைப்பாடுகளைத் தீவிரப்படுத்தியது.
இவ்வணியினருக்கு ஆதரவாக பொ.ஜ. முன்னணியினரும் சேர்ந்து செயற்படத் தொடங்கினர். இவர்களின் நடவடிக்கைகளை அப்போது சமாதானத்திற்கிருந்த பெரும்பான்மைக் குரல்கள் வெளிக்கொணராது தடுத்தாலும் அந்த இனவாத நோய் தன் வேகத்தை அதிகரித்து பீடிக்கத் தொடங்கியது எனலாம்.
காலப் போக்கில் சமாதானத்தின் ருசி சிங்கள தேசத்திற்கு கடந்த காலங்களின் கசப்புகளை மறக்க வைத்தது. இனவாத குரல்களின் வீச்சுகளால் தமிழர்களுக்கான உரிமைகள் குறித்த கருத்துக்கள் இரண்டாம் பட்சமாக்கப்பட்டது. சந்தர்ப்பம் பார்த்து ரணில் அரசாங்கத்தின் முக்கிய அமைச்சுக்களை சர்வ வல்லமை கொண்ட சந்திரிகா அம்மையார் பறித்தெடுத்து இனவாதிகளுக்கு ஊக்கமளித்தார்.
நரித்திட்டத்தில் காய்களை நகர்த்தி தமிழர்களின் தலைமைத்துவத்தை சிதைக்க எண்ணியிருந்த ரணில் அரசாங்கம் ஓய்வு நிலைக்குச் சென்றது. போரின் வலி சிங்களத்திற்கு மறக்கத் தொடங்க சமாதானத்திற்காக வாக்களித்தவர்கள் இனவாத கூச்சல்களுக்கு கூத்தாடத் தொடங்கினர். அடுத்தடுத்து இடம்பெற்ற தேர்தல்கள் ஜே.வி.பி., சிகல உறுமய போன்ற இனவாதிகளின் வளர்ச்சிப் படிகளாய் அமைந்ததிலிருந்தது சிங்களவர்களின் மனமாற்றத்தை அறியலாம்.
யுத்த நிறுத்த உடன்பாட்டு விதிமுறைகளை மதிக்காது செயற்பட்டார்கள். மனிதாபிமான நடவடிக்கைகளுக்காக உருவாக்கப்பட்ட சுனாமிக் கட்டமைப்பை கிழித்து குப்பைக் கூடைக்குள் போட்டார்கள்.
சர்வதேசத்தை தம் வியூகத்திற்குள் சிக்கவைத்து உதவிகளைப் பெற்றார்கள் எனத் தொடங்கிய இனவாதப் புற்றுநோயின் வீரியம் சமாதானக் குழந்தையை கோமா நிலைக்குக் கொண்டு சென்றது.
இனவாதமே அரசியல் ஆகிவிட்ட நிலையில் உச்ச இனவாதியாக றுகுனு சண்டியனாக தன்னை உருவகித்து வந்த மகிந்தர் 2005 ஆம் ஆண்டு சனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற்றதன் மூலம் சமாதானக் குழந்தைக்கான சாவு மணி அடிக்கப்பட்டது.
உடன்படிக்கை அமுலில் இருந்தபோதே ஆக்கிரமிப்புப் போரைத் தொடங்கினர். இறைமை உள்ள நாடெனக் கூறி சர்வதேச தலையீட்டை வெட்டி விட்டனர். இலட்சக்கணக்கான கிழக்கு மாகாண தமிழ் மக்களை அகதிகளாக்கி ஆக்கிரமிப்பின் வெற்றிகளைக் கொண்டாடினர். போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவினர் அறிக்கைகள் விடுவதற்கு மட்டும் உரித்துடையவர்கள் ஆக்கப்பட்டனர்.
விமானக் குண்டு வீச்சு, எறிகணை வீச்சு, கிளைமோர்த் தாக்குதல்கள் என பல்வகையிலும் தமிழ் மக்களைக் கொன்றொழித்தனர்.
பாதைகள் மூடப்பட்டன. மரண வாசல்கள் திறக்கப்பட்டன. போர் நிறுத்த உடன்படிக்கையின் சமாதானக் குழந்தை இறுதிக் கணத்தை நெருங்கத் தொடங்கியது.
பன்நாட்டு மருத்துவர்களும் வந்து வைத்தியம் பார்த்து காப்பாற்ற முயன்றனர். பலர் இனவாதப் புற்றுநோயை இனம் காணாதவர்களாய் சமாதானக் குழந்தையைக் காப்பாற்றி விடலாம் என நம்பிக்கை வெளியிட்டனர். இன்னும் சிலர் நோயை விட்டுவிட்டு நோய் அற்ற பகுதிகளுக்கு வைத்தியம் பார்க்கத் தொடங்கினர்.
சமாதானக் குழந்தையைக் காப்பாற்ற அவர்கள் (சர்வதேசம்) கொடுத்த மருந்துகள் எல்லாம் நோயை அதிகரிக்கச் செய்யவே உதவியது. 2002 ஆம் ஆண்டு காலப் பகுதியில் சமாதானத்துக்கு ஆதரவாக 80 வீதமான சிங்கள மக்கள் ஆதரவு வழங்கியிருந்த நிலையில் கடந்த ஆண்டு அதேவீதமான சிங்களவர்கள் போருக்கு ஆதரவான கருத்து நிலையில் இருப்பதாக ஆய்வுகள் தெரிவித்தன.
இந்நிலையில் சென்ற மாதம் 16 ஆம் திகதி சமாதானக் குழந்தை இறந்துவிடும் என சென்ற மாதம் இரண்டாம் திகதி சிங்கள அரசு அறிவித்தது. அதன் படியே அனுசரணையாளர்களும் விடயத்தை உணர்ந்து கொண்டார்கள். நோய் பீடித்தவர் இறந்துவிடும் திகதி மருத்துவர்களுக்குத் தெரியுமோ இல்லையோ ஆனால், அதனைத் தீர்மானிக்கும் சக்தி நோய் காரணிக்கே உண்டு. அந்த வகையில் சமாதானக் குழந்தையை முற்றுமுழுதாகக் கொன்றொழித்தது சிங்களம்.
நம்பிக்கையோடு காத்திருந்த மருத்துவர்கள் (கண்காணிப்பாளர்கள்) மூட்டை கட்டிப் புறப்பட்டனர். குழந்தை இறந்தப் பின்பே நோயின் தாக்கம் குறித்து புரிந்து கொண்டனர். இன்னும் சிலர் சமாதானக் குழந்தை இறந்ததற்கு காரணம் தெரியாமலே உள்ளனர்.
தமிழர் தரப்பின் இராணுவ பல மேலாதிக்கத்தில் பிறந்த சமாதானம், சிங்கள இனவாதத்தின் வளர்ச்சியில் இன்று மரணித்திருக்கிறது.
விரும்பியோ விரும்பாமலோ யுத்தம் செய்து மீளெழ வேண்டிய கட்டாயத் தெரிவிற்குள் தமிழர் தேசம் நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கும் இக்காலம் தீர்மானிக்கும் சக்தியாக எம்மையே விட்டுவைத்திருக்கிறது என்ற நிலையில் இனவாதத்துடன் மோதி எம் நிலத்தை மீட்டெடுக்க வேண்டியது அவசியமாகியுள்ளது.
2002 சமாதான உடன்படிக்கையாகிலும் சரி அதற்கு முற்பட்ட 1994 சந்திரிகா கால சமாதான உடன்படிக்கை 1990 ஆம் ஆண்டு கால பிரேமதாச ஆட்சிக் கால சமாதானப் பேச்சுவார்த்தை மற்றும் அதற்கு முந்தைய பேச்சுவார்த்தைகள் எல்லாமே தமிழர் தரப்பின் பலத்தாலே பிறந்து சிங்கள தேசத்தின் இனவாத முன்னெடுப்புக்களால் மரணித்தவை என்பதே வரலாறு. இந்த வகையில் இலங்கைத்தீவின் நிரந்தர சமாதானம் தமிழர்கள் அமைக்கப்போகின்ற தனிநாட்டிலேயே உள்ளது என்பதுதான் உண்மை நிலைப்பாடு
நன்றி -ப.துஸ்யந்தன்-
Friday, February 22, 2008
இறந்துபோன சமாதானத்தின் பிறந்த நாள்
Posted by tamil at 5:51 PM
Subscribe to:
Post Comments (Atom)
0 Comments:
Post a Comment