Saturday, February 9, 2008

தமிழரைக் கொன்று குவிக்க இந்திய அரசு உதவி நன்றி தெரிவிக்கிறார் சிங்கள அமைச்சர்

ஈழத்தமிழர்களைக் கொன்று குவிக்க சிங்களக் கடற்படைக்கு இந்தியக் கடற்படை பெரும் துணை புரிந்ததாக சிங்களக் கடற்படைத் தளபதி வசந்தா கரணகோடா என்பவர் "கொழும்பு போஸ்ட்" என்னும் பத்திரிகைக்கு அளித்த நேர்காணலில் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறியிருப்பதாவது:

"ஈழத்தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தை ஒடுக்குவதில் எங்களுக்கு இந்தியக் கடற்படை மிகச்சிறந்த வகையில் ஒத்துழைத்தது. கடற்புலிகளை எதிர்கொண்டு போராடுவதற்கு இந்தியக் கடற்படை மற்றும் கடலோரக் காவல் படை ஆகியவை எங்களுக்குப் பேருதவி புரிந்தன.

இந்தியக் கடற்படையும் இலங்கைக் கடற்படையும் ஆண்டுதோறும் நான்குமுறை கூடிப் பேசுகின்றனர். மேலும் இந்தியக் கடற்படையுடன் சிங்களக் கடற்படையும் இலங்கை கடற்பகுதிகளில் கூட்டுரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றன. புலிகளின் ஆயுதக் கப்பல்கள், படகுகள், மிதக்கும் சேமிப்புக் கிடங்குகள் அழிக்கப்பட்டுள்ளன." என சிங்களக் கடற்படைத் தளபதி விரிவாகக் கூறியுள்ளார்.

அவர் கூறுவதுபோல கடற்புலிகள் ஒடுக்கப்பட்டுவிட்டார்களா இல்லையா என்பது வேறு கேள்வி? வழக்கம்போல சிங்கள இராணுவத் தளபதிகள் கூறும் கட்டுக்கதைகளில் இதுவும் ஒன்று.

ஆனால் இந்தியக் கடற்படை சிங்களக் கடற்படையுடன் கூட்டாக ரோந்துப் பணி புரிவது மட்டுமல்ல. எல்லா வகையிலும் அதனுடன் ஒத்துழைக்கிறது என்பது மிக முக்கியமானதாகும். இதைவிடப் பெரும் துரோகம் வேறு இருக்க முடியாது.

நமது சகோதரத் தமிழர்களை ஒடுக்குவதற்கு சிங்களப் பேரினவாதிகளுக்கு இந்திய அரசு துணை நிற்கிறது என்ற குற்றச்சாட்டு இப்போது சிங்களக் கடற்படைத் தளபதியால் உறுதிசெய்யப்பட்டுள்ளது.

தமிழக மீனவர்களை சிங்களக் கடற்படை அத்துமீறி வந்து கொன்றுகுவிக்கிறது. நமது மீனவர்ளைக் காப்பாற்றுவதற்கு முன்வராத இந்தியக் கடற்படை சிங்களருடன் இணைந்து ஈழத்தமிழர்களைக் கொன்றுகுவிக்க துணை நிற்கிறது.

இத்தகைய தமிழின பகைப்போக்கில் இந்திய அரசு தொடர்ந்து செயல்பட்டுவருவதை தமிழகம் ஒன்றுபட்டு நின்று கண்டிக்கவேண்டும். இந்தத் துரோகச்செயலை உடனடியாக நிறுத்தாவிட்டால் இந்திய அரசுக்குக் கொடுத்துவரும் ஆதரவை விலக்கிக்கொள்வதற்கு தமிழக முதல்வர் முன்வரவேண்டும்.

நன்றி - தென்செய்தி

0 Comments: