Sunday, February 10, 2008

படைத்துறை வியூகங்களை முறியடிக்கும் உத்திகள்

கடந்த ஆண்டு மியான்மாரில் நடைபெற்ற அரசியல் போராட்டங்களையும், அதனை அடக்கிய இராணுவ ஆட்சியாளர்களின் வன்முறைகளையும் தொடர்ந்து அனைத்துலக சமூகம் மியான்மார் அரசின் மீது அழுத்தங்களைப் பிரயோகிக்க முயன்று வந்தன. அதன் முதற்கட்டமாக மியான்மார் நாட்டிற்கான படைத்துறை விநியோகங்களை நிறுத்திக் கொள்வது என்பது அவர்களின் தீர்மானமாக இருந்தது.

மியான்மாருக்கான பிரதான ஆயுத விநியோகஸ்தராக சீனாவே இருக்கின்ற போதும் இராணுவ அரசின் மீது தமது செல்வாக்கை செலுத்தும் நோக்குடன் ஏனைய ஆசிய நாடுகளும் மியான்மாருக்கான ஆயுத மற்றும் நிதி உதவிகளை வழங்கி வருவதுண்டு. அவற்றில் இந்தியாவும் பிரதான பங்கு வகிக்கின்றது.

எனினும் கடந்த வருடம் மியான்மாரில் நடைபெற்ற மனித உரிமை மீறல்களைத் தொடர்ந்து மியான்மாருக்கான ஆயுத உதவிகளை நிறுத்தி விடுவதாக இந்தியா அமெரிக்காவிற்கு உறுதியளித்திருந்ததாக அமெரிக்க ஊடகம் ஒன்று தெரிவித்திருந்தது.

ஆனால் மியான்மாருக்கான ஆயுத உதவிகளை இந்தியா தொடர்ந்து வழங்கிவரும் என புதுடில்லியில் இருந்து வெளிவரும் தகவல்கள் தெரிவித்துள்ளன. அதாவது ஆயுத விநியோகங்கள் தாமதமாகுமே அல்லாமல் ஒரேயடியாக நிறுத்தப்பட மாட்டாது என்பது அதன் பொருள்.

மியான்மாருக்கு கடந்த ஆண்டு இந்தியாவால் விநியோகம் செய்யப்படுவதாக இருந்த ரீ-55 டாங்கிகள், 105 மி.மீ பீரங்கிகள், துருப்புக்காவி வாகனங்கள் என்பன இந்த தாமதமடையும் பட்டியலில் உள்ள நாசகார ஆயுதங்களாகும்.

மேற்கூறப்பட்ட தகவல்களில் இருந்து இரு விடயங்களை நாம் புரிந்து கொள்ள முடியும், அதாவது தமது பூகோள நலன் கருதி சிறு பிரச்சினைகளையும் பூதாகாரமாக்கி அதன் மூலம் தமது பூகோள அரசியலை சாதகமாக்கி கொள்ள முனையும் மேற்குலகத்தின் இரட்டை முகம் ஒருபுறம். உலகில் மிகப்பெரும் ஜனநாயக நாடு என தம்மை அழைத்துக்கொள்ளும் இந்தியா அண்டைய நாடுகளில் ஏற்படுத்தி வரும் குழப்பங்கள் மறுபுறம். குறிப்பாக அண்டைய நாடுகளில் உருவாகும் வன்முறைகளுக்கு முக்கிய பின்புல சக்தியாகவும் அது இயங்கி வருகின்றது.

இந்தியா இதே அணுகுமுறைகளைத்தான் இலங்கையிலும் மேற்கொண்டு வருகின்றது. ஆனால் மேற்குலகின் அணுகுமுறைகள் மறுதலையானவை. அதாவது மியான்மாரில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் கண்ணுக்கு தெரிந்த அளவிற்கு இலங்கையிலும் மோசமடைந்து வரும் மனித உரிமை மீறல்கள் அவர்களுக்கு தெரியவில்லை. ஆனால் இந்த இரண்டு அணுகுமுறைகளும் இலங்கை அரசிற்கு சாதகமானவையே.

எனினும் இலங்கை தொடர்பாக தமது அணுகுமுறைகளுக்கு காத்திரமான காரணங்களை தேடுவதற்காக ஏதாவது ஒரு அரசியல் தீர்வுத்திட்டத்தை முன்வைக்குமாறு கூறிவந்த அனைத்துலகத்திற்கும், 1987 களில் இந்திய இலங்கை ஒப்பந்தத்தில் கூறப்பட்டதையாவது மீண்டும் தூசுதட்டி சமர்ப்பிக்கும்படி கூறி வந்த இந்தியாவுக்கும் பலத்த ஏமாற்றங்களை இலங்கையின் 60 ஆவது சுதந்திரதினம் கொடுத்துள்ளது.

ஏனெனில் இந்த ஆண்டின் முதல் மாதத்தில் தீர்வுத்திட்டத்தை அனைத்துக்கட்சி குழு சமர்ப்பித்துவிடும், அதனை ஜனாதிபதி உடனடியாகவே முன்வைத்து விடுவார் என இவர்களுக்கு கூறப்பட்டிருந்தது. பின்னர் சுதந்திர தினத்தின் போது அது முன்வைக்கப்படும் என கூறப்பட்டது. ஆனால் தற்போது அவர்களுக்கு எஞ்சியது ஏமாற்றம் தான்.

அனைத்துலக சமூகம் தென்னிலங்கையின் அரசியல் அடித்தளத்தை ஒரு தடவை அலசிப்பார்த்திருந்தால் அவர்களுக்கு இந்த ஏமாற்றம் எஞ்சியிருக்காது. அதாவது 1983 ஆம் ஆண்டு இலங்கையில் இனக்கலவரம் உச்சம் அடைந்த பின்னர் ஆட்சிக்கு வந்த எல்லா அரசுகளும் போரையும், இனவாதத்தையும் வைத்தே அரசியல் நடத்தி வந்துள்ளன என்பது தான் யாதார்த்தமானது.

தற்போதைய அரசும் அதற்கு விதிவிலக்கல்ல என்றே பல தரப்பும் கூறுகிறது. அது இராணுவத்தீர்வில்தான் அதிக நாட்டம் கொண்டுள்ளது. அதன் செயற்பாடுகள் அனைத்தும் அதனையே பிரதிபலித்து நிற்கின்றன. கிராம மக்கள் எல்லோரும் ஆயுதமயப்படுத்தப்பட்டு வருகையில், புதிது புதிதாக படையணிகளையும் இராணுவம் உருவாக்கி வருகின்றது.

கடந்த வருடம் புதிதாக 57, 58, 59 என மூன்று படையணிகளையும், கவசத்தாக்குதல் பிரிகேட்டையும் உருவாக்கியுள்ள நிலையில் இந்த வருடத்தில் புதிதாக 61 ஆவது படையணியை உருவாக்கவும் அரசு திட்டமிட்டுள்ளதுடன், அதற்கான நடவடிக்கையிலும் அரசு தீவிரமாக இறங்கியுள்ளது.

மூன்றாவது ஈழப்போரில் 9 டிவிசன்களை கொண்டிருந்த இராணுவம் தற்போது 12 டிவிசன்களை கொண்டதாக மாற்றமடைந்துள்ளதுடன், இலங்கை முழுவதும் ஒரு இராணுவமயப்படுத்தலுக்கு மெல்ல மெல்ல உட்பட்டு வருகின்றது போன்ற தோற்றப்பாடு எழுந்துள்ளது.

அதனை உறுதிப்படுத்துவது போல இலங்கையின் 60 ஆவது சுதந்திர தினத்தை பெரும் படைக்கல காட்சிகளுடன் விமர்சையாக கொண்டாட அரசு முயற்சிகளை மேற்கொண்டு வந்தபோதும் தொடர்ச்சியாக தென்னிலங்கையில் நடைபெற்ற தாக்குதல்களும், குண்டு வெடிப்புக்களும் அதன் முக்கியத்துவத்தை குறைத்துவிட்டன.

சுதந்திரதினத்தை ஒட்டி கடந்த 4 ஆம் திகதி அன்று பண்டாரநாயக்கா சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த கண்காட்சியும், கொழும்பில் இடம்பெற்ற குண்டு வெடிப்பை தொடர்ந்து பின்போடப்பட்டிருந்தது.

எனினும் கடந்த 7 ஆம் திகதி ஆரம்பமான இந்த கண்காட்சியானது, எம்ஐ-35 ரக தாக்குதல் உலங்குவானூர்தி, கிபீர் தாக்குதல் விமானம், அவற்றின் ஆயுதங்கள், சிறிய மற்றும் நடுத்தர ஆயுதங்கள், ஆளில்லாத உளவு விமானங்கள், கடற்படையினரின் அதிவேக தாக்குதல் படகுகளின் மாதிரி வடிவங்கள் என மக்களை படைத்துறை ரீதியாக கவர்ச்சிக்கு உள்ளாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

அதாவது படைத்துறைக் கவர்ச்சிகளில் நாட்டின் அரசியல் மற்றும் பொருளாதார சீரழிவுகளை மறைத்துவிடலாம் என்பது ஒரு உத்தி. மேலும் விரிவடைந்து செல்லும் களமுனைகளை சமாளிப்பதற்கு தேவையாக படையினரை திரட்டுவதும் இந்த கண்காட்சியின் மற்றுமொரு நோக்கம்.

இதனிடையே கடந்த 4 ஆம் திகதி திங்கட்கிழமை இலங்கை அரசு தனது 60 ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடிய போது மணலாறு, மொனராகல, அம்பாந்தோட்ட, அம்பாறை மாவட்டங்களில் பரவலான தாக்குதல்கள் நடைபெற்றதுடன், கொழும்பில் கல்கிசை பகுதியில் இருந்த மின்மாற்றி ஒன்றும் குண்டுத்தாக்குதலில் தகர்க்கப்பட்டிருந்தது.

மேலும் மன்னார் கடற்பரப்பில் சுற்றுக்காவலில் ஈடுபட்டிருந்த நீருந்து விசைப்படகு தாக்குதலுக்கு உள்ளாகியதுடன் ஒரு படகுடன் 6 கடற்படையினர் காணாமல் போயுள்ளதாகவும் கடற்படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கடற்புலிகள் நடத்திய ஆர்.பி.ஜி உந்துகணை தாக்குதலில் படகு முழ்கடிக்கப்பட்டதாக சில தகவல்கள் தெரிவிக்கின்ற போதும், அதனை கடற்புலிகள் கைப்பற்றி விட்டதாகவும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த வருடம் நத்தார் தினத்திற்கு மறுநாள் இதே கடற்பகுதியில் கடற்படையினரின் பி-413 இலக்கமுடைய அதிவேக டோரா தாக்குதல் படகு மூழ்கடிக்கப்பட்டிருந்ததும் நினைவில் கொள்ளத்தக்கது.

இரு தரப்பினரும் ஒருவரின் படைத்துறை வியூகங்களை மற்றவர்கள் முறியடித்து விடும் உத்திகளை விரைவாக வகுத்து வருவதை அண்மைக்கால நடவடிக்கைகள் மூலம் இலகுவாக உணர்ந்து கொள்ள முடியும்.

அதாவது அரசு படைபலத்தை விரிவாக்கும் போது விடுதலைப் புலிகள் களமுனைகளை விரிவாக்குவதுடன், தமது படைபலத்தையும் சேதமின்றி தக்கவைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆனால் அரசின் நவீன ஆயுத பலப்படுத்தல்களுக்கு ஈடாக விடுதலைப் புலிகளும் தமது படைபலத்தை பெருக்கி வருவதாக இராணுவ புலனாய்வு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. நான்காவது ஈழப்போரில் தமது தொழில்நுட்பத்தில் வான்படையை வடிவமைத்து அதனை கொண்டு ஐந்துக்கும் மேற்பட்ட தாக்குதல்களை நடத்திய விடுதலைப் புலிகள் தற்போது நீண்டதூர பல்குழல் உந்துகணை செலுத்திகளை வெற்றிகரமாக வடிவமைத்துள்ளதாக இராணுவ புலனாய்வுத்துறை அரசை எச்சரித்துள்ளது.

1990 களில் தமது சொந்த தொழில்நுட்பத்தில் பசீலன்-2000 என்னும் பீரங்கிகளை விடுதலைப் புலிகள் வடிவமைத்திருந்ததும், அதனைக் கொண்டு படைமுகாம்கள் மீது தாக்குதல்களை நடத்தியதும் உங்களுக்கு நினைவிருக்கலாம். ஏறத்தாள 1,000 மீற்றர் தூரவீச்சுக் கொண்ட இந்த பீரங்கி 50 கிலோ அதி சக்திவாய்ந்த வெடிமருந்து கொண்ட எறிகணைகளை ஏவக்கூடியது.

எனினும் பின்னர் விடுதலைப் புலிகளின் பீரங்கிப் படையணியானது அதிக தூரவீச்சுக் கொண்ட 122 மி.மீ, 130 மி.மீ, 152 மி.மீ பீரங்கிகளைக் கொண்ட நவீன பீரங்கி படையணியாக மாற்றம் பெற்றதைத் தொடர்ந்து பசீலன்-2000 இன் பாவனை கைவிடப்பட்டிருந்தது.

ஆனால் தற்போது பசீலன்-2000 பீரங்கியானது பல்குழல் உந்துகணை செலுத்தியாக மாற்றம் பெற்றுள்ளதாக படையினரின் புலனாய்வுப்பிரிவு தெரிவித்துள்ளது. சீனாவின் தயாரிப்பான ரீ-82 130 மி.மீ வகையை சேர்ந்த 30 குழல்களை கொண்ட பல்குழல் உந்துகணை செலுத்திகளின் (வுலிந 82 130அஅ 30-வரடிந ஆடுசுளு) வடிவமைப்பை ஒத்ததாக இது உருவாக்கப்பட்டுள்ளது.

எனினும் பசீலன்-2000 உந்துகணைச் செலுத்தியானது ஒரு குழல் உடையதாகவும், 25 தொடக்கம் 30 கிலோ நிறையுடைய அதன் ஏவுகணைகள் 25 கி.மீ தூரம் சென்று தாக்கும் வல்லமை கொண்டதாகவும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கை இராணுவத்தின் பல்குழல் உந்துகணைச் செலுத்திகளுக்கு சவாலாக இது மாற்றம் பெறலாம் எனவும் அவை தெரிவித்துள்ளன.

விடுதலைப் புலிகளைப் பொறுத்த வரையில் அனைத்துலகத்தின் நவீன தொழில்நுட்பங்களை தமது சொந்த மூலவளத்துடன் மாற்றியமைக்கும் திறன் படைத்தவர்கள் என்பது பல தடவைகளில் கண்டறியப்பட்டுள்ளது.

இஸ்ரேலின் அதி நவீன டோரா அதிவேக தாக்குதல் படகிற்கு ஈடாக புலிகள் முராஜ் அதிவேக தாக்குதல் படகுகளை கட்டியிருந்ததுடன், சாதாரண இலகுரக போக்குவரத்து விமானத்தையும் குண்டு வீச்சு விமானமாக மாற்றியமைத்திருந்தனர். இவை தவிர தொலைத்தொடர்பு, ஆயுத உற்பத்தி மற்றும் தாக்குதல் உத்திகள் போன்றவற்றில் அவர்கள் தமது திறமையை அவ்வப்போது வெளிப்படுத்தி வருவதுண்டு.

இந்த நிலையில் படையினரின் பல்குழல் உந்துகணை செலுத்திகளுக்கு ஈடாக விடுதலைப் புலிகள் தயாரித்துள்ளதாக கூறப்படும் பசீலன்-2000 நடுத்தர தூர வீச்சுடைய உந்துகணை செலுத்தியானது எதிர்காலத்தில் படையினருக்கும் அவர்களின் விநியோக வழிகளுக்கும் பெரும் நெருக்கடிகளை ஏற்படுத்தலாம் என படை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

மொத்தத்தில் நான்காவது ஈழப்போரானது இலங்கைத் தீவு முழுவதையும் ஆட்கொண்டு வருவதுடன் பேரழிவை எற்படுத்தும் போராகவும் மெல்ல மெல்ல மாற்றம் பெற்று வருகின்றது. எனினும் அவற்றை தடுத்து நிறுத்தும் வல்லமையை அனைத்துலக சமூகம் இழந்து அந்தரத்தில் தொங்குவது தான் வேதனையானது.

-அருஸ் (வேல்ஸ்)-

0 Comments: