வன்னியை நோக்கிய படைநடவடிக்கைகள் நாளுக்கு நாள் தீவிரம் பெறத் தொடங்கியிருக்கின்றன. மணலாறு, வவுனியா, மன்னார் என்று தென்முனையில் மூன்று முக்கிய களங்களும் வடமுனையில் கிளாலி, முகமாலை, நாகர்கோவில் என்று அருகருகாக அமைந்த மூன்று முனைகளிலும் தினமும் மோதல்கள் இடம்பெறுகின்றன.
வடமுனையில் 53,55ஆவது டிவிசன்களும் தென்முனையில் 57,58,59ஆவது டிவிசன்களும் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளை நோக்கிய நகர்வுகளில் ஈடுபட்டு வருகின்றன. இவற்றில் வவுனியாவின் மேற்கு மற்றும் மன்னாரின் கிழக்குப் பகுதிகளில் நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கும் 57ஆவது டிவிசன் மூன்று முனைகளில் நகர்வுகளில் ஈடுபடுகின்றன.
பிரிகேடியர் ஜெகத் டயஸ் தலைமையிலான இந்த டிவிசனில் மூன்று பிரிகேட்கள் தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றன. இதில் இரணைஇலுப்பைக் குளத்தில் இருந்து 571 பிரிகேட் கேணல் ரவிப்பிரிய தலைமையில் பாலம்பிட்டி நோக்கி முன்னேற்ற நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கிறது.
இந்த பிரிகேட்டில் 9ஆவது கஜபா றெஜிமென்ட், 12ஆவது சிங்க றெஜிமென்ட், 8ஆவது மற்றும் 11ஆவது இலகு காலாற்படை என மொத்தம் நான்கு பற்றாலியன்கள் உள்ளடங்கியுள்ளன. இப்படைப்பிரிவு முள்ளிக்குளத்தைக் கைப்பற்றியதைத் தொடர்ந்து மடுவுக்கு வடக்கே இருக்கும் பாலம்பிட்டியைக் குறிவைத்து நகர்கிறது.
அடுத்து மடுவை நோக்கிய நகர்வில் 572 பிரிகேட் ஈடுபட்டிருக்கிறது. இந்த பிரிகேட்டில் உள்ள 7ஆவது சிங்க றெஜிமென்ட் தான் மடுவை கைப்பற்றும் நடவடிக்கையில் இறங்கியிருக்கிறது. தம்பனை ஊடாக முன்னேறி தற்போது பெரியபண்டிவிரிச்சானை அண்மித்திருக்கும் இந்தப் படைப்பிரிவு மடுத் தேவாலயத்துக்கு தெற்காக சுமார் 4 கிலோ மீற்றர் தொலைவில் நிலை கொண்டிருக்கிறது. துருப்புக்கள் தொடர்ந்து முன்னேற்ற நடவடிக்கையில் ஈடுபட்டால் அது தேவாலய சூழலுக்கு ஆபத்தை விளைவிக்கும். இதனைத் தவிர்க்குமாறு அரசுக்கு அழுத்தங்கள் இருந்து வருகின்றன. பெரியபண்டிவிரிச்சான், தம்பனை ஆகிய களமுனைகளில் 57ஆவது டிவிசன் துருப்புக்களுக்கு புலிகளின் மிதிவெடிகளும், பொறிவெடிகளும் பலத்த சேதங்களை விளைவித்து வருகின்றன. அத்துடன், புலிகள் நடத்தும் மோட்டார் தாக்குதல்களாலும் இழப்புக்கள் ஏற்பட்டு வருகின்றன.
இதேவேளை, ஏ9 வீதிக்கு சமாந்தரமாக வடக்கு நோக்கிய படைநகர்வில் 573 பிரிகேட் ஈடுபட்டிருக்கிறது. கேணல் லால் கமகே தலைமையிலான இந்த பிரிகேட் விளாத்திக்குளத்தில் இருந்து வடக்கே முன்னேற முயற்சிக்கிறது. இந்த பிரிகேட்டில் 4ஆவது சிங்க றெஜிமென்ட், 4ஆவது மற்றும் 6ஆவது விஜயபாகு காலாற்படை, 8ஆவது கஜபா றெஜிமென்ட் என நான்கு பற்றாலியன்கள் உள்ளடங்கியிருக்கின்றன.
முள்ளிக்குளம், விளாத்திக்குளம், பெரியபண்டிவிரிச்சான் ஆகிய இடங்களில் இருந்து பாலம்பிட்டியைக் குறிவைத்து நகரும் 57ஆவது டிவிசன் கடந்த பெப்ரவரியில் இப்பகுதியில் நடவடிக்கையை ஆரம்பித்த பின்னர் 200 சதுர கி.மீ பரப்பளவு பிரதேசத்தை புலிகளிடம் இருந்து கைப்பற்றியிருப்பதாகக் கூறுகின்றது.
பாலம்பிட்டியில்தான் புலிகளின் ஆட்டிலறி தளங்கள் இருப்பதாகக் கருதும் படைத்தரப்பு அதற்கு அப்பால் அவர்களை விரட்டினால் தமது முக்கிய தளங்களைத் தாக்குதலில் இருந்து பாதுகாக்கலாம் எனக் கருதுகிறது. அத்துடன், விளாத்திக்குளம், முள்ளிக்குளம், பாலம்பிட்டி ஆகிய பகுதிகளை இணைக்கின்ற வீதியைக் கைப்பற்றினால் இந்தக் களமுனையில் புலிகளின் களவிநியோக நடவடிக்கைகளை சீர் குலைத்து விடமுடியும் என்று படைத்தரப்பு நம்புகிறது.
அதேவேளை, 58ஆவது டிவிசன் நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கும் கட்டுக்கரைக்குளத்துக்கு மேற்குப்புறமாக உள்ள களமுனை கடந்த பலவாரங்களாக உக்கிர மோதல்களைச் சந்தித்து வருகிறது. அதிரடிப்படை 1 என்ற பெயரில் தொப்பிக்கல நடவடிக்கையின் போது புதிதாக உருவாக்கப்பட்ட 58ஆவது டிவிசன், இப்போது தான் கட்டமைக்கப்பட்டு வருகிறது. பிரிகேடியர் சவீந்திர டி சில்வாவைத் தளபதியாகக் கொண்ட இந்த டிவிசன் மூன்று முனைகளில் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கட்டுக்கரைக்குளம் நோக்கி பரப்பாங்கண்டல் ஊடாக முன்னேற்ற நகர்வில் ஈடுபட்டிருக்கும் 581 பிரிகேட்டுக்கு கேணல் சுஜீவ தலைமை தாங்குகிறார். இப்படைப்பிரிவு உயிலங்குளம், ஆண்டான்குளம் பகுதிகளைக் கைப்பற்றி அடம்பனுக்கு வடகிழக்கே 1.3 கி.மீ தொலைவில் நிலைகொண்டிருக்கிறது.
அதேவேளை, அடம்பனை நோக்கி தெற்குப் புறத்தால் கேணல் ஹஷான் டி சில்வா தலைமையிலான 582 பிரிகேட்டும், மேற்குப்புறத்தால் கேணல் சுராஜ் பன்சஜாய தலைமையில் 583 பிரிகேட்டும் முன்னேற்ற நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கின்றன. மேற்குப்புறத்தால் முன்னேறும் 582ஆவது பிரிகேட் மாந்தை, நரிக்குளம், சேற்றுக்குளம், வண்ணாங்குளம் ஆகிய இடங்களைக் கடந்து முன்னேறி அடம்பன் சந்திக்கு ஒரு கி.மீ தொலைவில் நிலைகொண்டிருக்கிறது. உயிலங்குளத்தில் இருந்து அடம்பனை நோக்கி தெற்குப்புறத்தால் முன்னேறும் 583 பிரிகேட் நீலாச்சேனையையும் அதனையடுத்த பாலைக்குழியையும் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளது. அடம்பன் வீதிக்கு மேற்கே ஒரு கிலோ மீற்றர் தொலைவில் நிலைகொண்டிருக்கும் இப்படைப்பிரிவு அடம்பனைச் சென்றடைய 2 கி.மீ. முன்னேற வேண்டியிருக்கும்.
அடம்பன், திருக்கேதீஸ்வரம் வீதியில் 3கி.மீ தூரம் முன்னேறிய படையினருக்கு தற்போது புலிகள் தரப்பில் இருந்து கடும் எதிர்ப்புக் காண்பிக்கப்படுகிறது. அடம்பன் நகரின் மையப்பகுதி நோக்கி படையினர் நகரும்போது மோதல்கள் மேலும் தீவிரமடையலாம் எனக் கருதப்படுகிறது. அடம்பனை நோக்கி இரு முனைகளிலும் பரப்பாங்கண்டல் ஊடாக மற்றொரு முனையிலும் 58ஆவது டிவிசன் துருப்புக்கள் நகர்வில் ஈடுபட்டிருப்பினும் படையினரின் தற்போதைய இலக்கு விடத்தல்தீவு தான். விடத்தல்தீவு, பாப்பாமோட்டை, பள்ளமடு, பெரிய மடு, பாலம்பிட்டி, முள்ளிக்குளம், விளாத்திக்குளம் இரணைஇலுப்பைக்குளம், ஓமந்தை என ஒரு நீண்ட அச்சைக் கைப்பற்றி வன்னியின் மேற்குப்புறத்தை ஆழமாக ஊடுருவ படைத்தரப்பு முயற்சிக்கிறது. இந்தப் பகுதிகளை 199899ஆம் ஆண்டுகளில் ஜெயசிக்குறு மற்றும் ரணகோஷ நடவடிக்கையில் துருப்புக்கள் கைப்பற்றி வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை, மணலாற்றில் கடந்த மாதம் திறக்கப்பட்ட புதிய களமுனையில் 59ஆவது டிவிசன் துருப்புக்கள் மோதல்களில் ஈடுபட்டிருக்கின்றன. பிரிகேடியர் நந்தன உடவத்த தலைமையிலான இந்த டிவிசனில் லெப்.கேணல் ஆரியசிங்க தலைமையில் 591 பிரிகேட்டும், லெப்.கேணல் பீற்றர் டி சில்வா தலைமையில் 592 பிரிகேட்டும், லெப்.கேணல் பாலித பெர்ணான்டோ தலைமையில் 593 பிரிகேட்டும் தாக்குதல்களை முன்னெடுத்து வருகின்றன. மன்னார் களமுனைகளைப் போன்று கடந்த மாதம் முழுவதும் மணலாறு களமுனையிலும் தொடர்ச்சியான மோதல்கள் இடம்பெற்று வந்தன. தினமும் கொக்குத்தொடுவாய், ஜனகபுர, சிலோன்தியேட்டர், ஆண்டான்குளம் என வெவ்வேறு முனைகளினூடாகப் படையினர் முன்னகர்வதும் புலிகளின் பதில் தாக்கு தலையடுத்துப் பின்வாங்குவதுமான நிலை தொடர்ந்து கொண்டிருக்கிறது. மன்னார், வவுனியா, மணலாறு என்ற அச்சில் தொடர்ச்சியான நகர்வுகளை மேற்கொண்டு களமுனை களைக் கொதிநிலையில் வைத்திருக்கும் படைத்தரப்பு தற்போது வடக்கிலும் தாக்குதலைத் தீவிரப்படுத்தியிருக்கிறது. கடந்த வாரத்திலும் அதற்கு முந்திய வாரத்திலும் முகமாலை, கிளாலி, நாகர்கோவில் அச்சில் பல வலிந்த தாக்குதல்களைப் படைத்தரப்பு நடத்தியிருந்தது. 53ஆவது மற்றும் 55ஆவது டிவிசன்களே இந்தத் தாக்குதல்களை நடத்தி வருகின்றன. கடந்த வாரத்தில் இராணுவத் தரப்பு புலிகளின் முதலாவது முன்னரங்க நிலைகளை நோக்கி இரண்டு தாக்குதல்களை நடத்தியது. இந்த இரண்டு தாக்குதல்களுமே அதிகாலை வேளையில் நடத்தப்பட்டன. 53வது டிவிசன் தளபதி பிரிகேடியர் சமந்த சூரிய பண்டாரவும், 55வது டிவிசன் தளபதி பிரிகேடியர் கமால் குணரத்னவும் இந்தக் களமுனையில் தாக்குதல்களை வழிநடத்துகின்றனர். எயர் மொபைல் பிரிகேட் (533) தளபதி சாந்த திசநாயக்கவும், 551பிரிகேட் தளபதி கேணல் நிசாந்த ரணவக்கவும், 552 பிரிகேட் தளபதி கேணல் கபில உடலுப்பொலவும், 553 பிரிகெட் தளபதி கேணல் அத்துல கொடிப்பிலியும் முகமாலை கிளாலி நாகர்கோவில் களமுனைகளில் தாக்குதல்களை நடத்திவருகின்றனர். இவர்களுக்கு உதவியாக பிரிகேடியர் மகிந்த ஹத்துருசிங்க தலைமையிலான ஆட்டிலறி பிரிகேட் பீரங்கிச் சூட்டாதரவை வழங்கிவருகிறது. இந்தத் துருப்புக்களுடன் கேணல் ரால்ப் நுகேராவின் தலைமையிலான இயந்திர காலாற்படைப்பிரிவும் இணைந்தி ருக்கிறது. வடபோர்முனையில் படையினர் இதுவரையில் முன்னேறித் தாக்குதல் நடத்திவிட்டு, அதேவேகத்தில் திரும்பிவருவது என்ற திட்டத்தில் தான் இயங்கிக் கொண்டிருக்கின்றனர். கடந்த 2006 நவம்பரிலும் 2007 டிசம்பரிலும் படையினர் இந்தக் களமுனையில் முன்னேறிய போது புலிகள் உள்ளே நுழையவிட்டுப் படைகளுக்குப் பெரும் சேதம் விளைவித்திருந்தனர். இதனால், ஆனையிறவை நோக்கி முன்னேறும் கனவை இப்போதைக்கு ஒத்தி வைத்துவிட்டு, "தாக்கி விட்டுத் திரும்பும்' உத்திக்கு படைத்தலைமை வந்திருக்கிறது. ஆனால், இது நிரந்தரமான உத்தியாக இருக்காது. அதேவேளை, புலிகளும் படைத்தரப்பின் இந்த உத்தியை நன்கு புரிந்துகொண்டு நெகிழ்வுத்தன்மை கொண்ட முன்னரங்க நிலைகளைப் பேணத் தொடங்கியிருப்பதாகத் தெரிகிறது. படையினர் முன்னேறும் போது புலிகள் அடுத்தகட்ட நிலைக்குச் செல்வதும் அவர்கள் திரும்பிய பின் பழைய நிலைக்கு வருவதும் கடந்த இரு வாரங்களாகத் தொடர்ந்து வருகிறது. மணலாறு, வவுனியா, மன்னார், முகமாலை என்று அனைத்துக் களமுனைகளிலும் படைத்தரப்பின் கவனம் புலிகளுக்கு தொடர்ச்சியான சேதங்களை ஏற்படுத்தி அவர்களின் பலத்தைக் குறைப்பதிலேயே இருக்கிறது. நாளாந்தம் 8முதல் 10 வரையிலான புலிகளைக் கொல்வதன் மூலம் புலிகளைப் பலவீனப்படுத்தி அழித்து விடலாம் எனக் கணக்குப் போட்டிருக்கிறது படைத்தலைமை. இதனால்தான் நிலப்பரப்புக்களை பெரியளவில் கைப்பற்றும் நகர்வுகள் ஒத்திப்போடப்பட்டு வருகின்றன. அத்துடன், புலிகளின் படைபலத்தையும் சுடுபலத் திறனையும் பத்துக்கும் மேற்பட்ட முன்னரங்க களமுனைகளில் பரவலாக்குவதன் மூலம் தமது பக்க இழப் புக்களைக் குறைக்கவும் படைத்தலைமை திட்டமிட்டிருக்கிறது. புலிகளின் தலைமை பத்துக்கும் அதிகமான கள முனைகளில் படைகளை எதிர்கொண்டபடியேதான் வலிந்த தாக்குதல்களைத் தொடுக்கமுடியும் என்ற நிலை உருவாகியிருக்கிறது. இந்தக்கட்டத்தில் புலிகளின் அடுத்த நகர்வு எப்படி அமையும் என்பதைப் பொறுத்தே போர்அரங்கின் போக்கு தீர்மானிக்கப்படும்.
வீரகேசரி வாரவெளியீடு
Sunday, February 3, 2008
பத்துக்கும் அதிக களமுணைகளில் புலிகளுக்கு வைக்கப்படும் பொறி
Posted by tamil at 10:13 AM
Subscribe to:
Post Comments (Atom)
0 Comments:
Post a Comment