Monday, February 4, 2008

"போரிலிருந்து விடுபடமுடியாத நிலைக்கு இலங்கை சென்றுள்ளது"

போரைத் தீவிரப்படுத்தி ஓராண்டுகாலத்திற்குள் போரை முடிப்பதெனவும் அடுத்த இராணுவத் தளபதிக்கு போரை விட்டுச் செல்லமாட்டேன் எனவும் சிறீலங்கா இராணுவத் தளபதி சரத்பொன்சேகா சூளுரைத்துள்ளார். அத்துடன் வன்னி மீதான படை நடவடிக்கைகள் எக்காரணம் கொண்டும் கைவிடப்படமாட்டாது எனவும் வன்னிப்பகுதி மீது அரசபடைகள் மேற்கொள்ளும் ‘மனிதாபிமான’ இராணுவ நடவடிக்கைகள் கைவிடப்பட மாட்டாது எனவும் ‘பயங்கர வாதி’களின் எந்த அச்சுறுத்தல்களுக்கும் இராணுவம் அடிபணிய மாட்டாது என்றும் தெரிவித்துள்ளார்.

உண்மையில் சிறீலங்கா அரசு போர் நிறுத்த ஒப்பந்தத்தை பெயரளவில் தான் தற்போது முறித்துள்ளதே தவிர அது நடைமுறையில் எப்போதோ முறித்துவிட்டது. வெளிப்படையாக இதனை முறித்துள்ளதால் தனது படை வலிமையை மேலும் வலுவுள்ளதாக காட்ட வேண்டிய தேவை சிறீலங்கா அரசிற்கு உள்ளது. அதுவும் குறிப்பாக இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவிற்கு உள்ளது. எதிர்வரும் டிசம்பர் மாதம் 18ம் திகதியுடன் சரத்பொன் சேகாவின் பதவிக்காலம் முடிவிற்கு வருகிறது. அதற்குகிடையில் புலிகளை அழித்து விடப்போவதாகவும், அடுத்த தளபதிக்கு போரை விட்டுச் செல்லப் போவதில்லை எனவும் அவர் கூறுகிறார். இந்நிலையில் போர் மேலும் தீவிரமடைவதற்கான அறிகுறிகளும் தென்பட்டுவரும் சூழலில் போர் முன்னரைப் போன்று வடக்கு, கிழக்கு பகுதிகளில் மட்டும் இருக்காது.

அது முழு இலங்கைத் தீவிற்கும் பரவப்போவது உறுதி. இதன் அறிகுறிகள் கூட தற்போது ஏற்படத் தொடங்கியுள்ளன. இந்த நிலையில் சர்வதேச சமூகம் போரை நிறுத்தி பேச்சில் ஈடுபடுமாறும் பேச்சின் மூலமே இனப்பிரச்சினைக்கு தீர்வுகாண முடியும் எனவும் பெயரளவில் கூறி வருகிறதே ஒழிய, போரை நிறுத்துமாறு அரசிற்கு அழுத்தம் கொடுக்கத் தவறிவிட்டது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் சிறீலங்காவின் ஊடகத்துறை அமைச்சர் அனுரபிரியதர்சன யாப்பா அவர்கள் தமது அரசை எவரும் கண்டிக்கவில்லை எனவும், போர் நிறுத்தத்தில் இருந்து தாம் விலகியதை பிழை என்று எவரும் கூறவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் இலங்கையில் புதிய போர் நிறுத்த ஒப்பந்தத்தை உருவாக்குவதற்கு சர்வதேச சமூகம் முயல வேண்டும் என பிரித்தானியாவின் பொதுநலவாய வெளி விவகார அமைச்சர் பிரித்தானிய நாடாளுமன்றத்தில் ஒரு கோரிக்கையை முன் வைத்திருக்கிறார். இவரின் கருத்தின் படி பார்த்தால் சர்வதேசம் அதிருப்தி அடைந்துள்ளது என்று எடுத்துக் கொண்டாலும், இலங்கை விடயத்தில் ஒவ்வொரு நாடும் தமது நலன் கருதி செயற்படுவதால் சிறீலங்கா அரசிற்கு அழுத்தம் கொடுக்க முன்வரமாட்டாது என அரசியல் ஆய்வாளர்கள் வாதிடுகின்றனர்.

எனினும், பிரித்தானிய அமைச்சரின் கருத்து சர்வதேத்திற்குரிய அழைப்பு, வெளி உலகின் கண்களை திறப்பதற்கான ஒரு எடுகோள் அல்லது ஒரு சிறிய தொடுகை எனக் கொண்டாலும், அமைச்சர் சொல்லில் கூறியதை மகிந்தர் ஏற்றுக் கொள்வாரா அல்லது அவரின் அரசு அதற்கு செவிசாய்க்குமா என்றால் இல்லை என்று உடனடியாகக் கூறி விடலாம். ஏன் என்றால் மகிந்தரும் அவரின் அரசு தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்ற சிந்தனைப் போக்கு உடையவர்கள் அல்ல. இராணுவ வழியில் தமிழர் களை அழிக்க வேண்டும் என்ற எண்ணப் போக்கே அவர்களின் அடிப்படை. எனவே பிரித்தானிய அமைச்சரின் கூற்று மகிந்த அரசைப் பொறுத்தவரை ஒரு கூற்றாகவே மட்டும் இருக்கப் போகிறது.

அத்துடன் சர்வதேச சமூகம் என்று கூறப்படுகின்ற நாடுகளும் தமக்கு பெரியளவில் அழுத்தம் தரமாட்டாது என மகிந்தர் நம்புகிறார். அரசாங்கத்துக்கு அரசாங்கம் நல்லுறவு, ஒத்துழைப்பு என்ற ராஜீக விதிகளையும் தமது சொந்த வர்த்தக மற்றும் பூகோள அரசியல் நலன்களையும் கருத்தில் கொள்ளாமல் எந்தவொரு நாடும் தமக்கு அழுத்தம் கொடுக்க மாட்டாது என உறுதியாக நம்பும் மகிந்த அரசு, தமது போர் மூலமான நகர்வுகளை சர்வதேசம் தட்டிக் கேட்காது எனவும் நம்புகிறார். இதனால்தான் போரை ஆட்சேபிக்காத இத்தகைய நாடுகளைத் திருப்பதிப்படுத்தவும் ஏனைய நாடுகளை ஏமாற்றும் நோக்குடன் அனைத்துக் கட்சிக்குழு என்ற காய் நகர்த்தலை மகிந்த அரசு ஒருபுறம் மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில் தமிழீழ விடுதலைப் புலிகளிற்கு எதிரான போரில் சிறீலங்கா அரசாங்கத்திற்கு அமெரிக்கா முழு ஆதரவு வழங்கும் என்று உறுதி மொழி வழங்கப்பட்டுள்ளது. சிறீலங்காவிற்கு வருகை தந்திருந்த அமெரிக்காவின் பசுபிக்பிராந்திய கடற்படைத்தளபதி அட்மிரல் றொபேர்ட் எஃப் பில்லாட் அவர்கள் அலரி மாளிகையில் மகிந்தரைச் சந்தித்து இந்த உறுதி மொழியை வழங்கியுள்ளதுடன், சிறீலங்கா கடற்படைக்கு தேவையான ஆயுததளவாடங்களை வழங்குவது குறித்தும் திருகோணமலை கடற்படைத்தளத்தில் நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தில் கடற்படைத்தளபதி அட்மிரல் றொபேர்ட் எஃப் பில்லாட் ஆராய்ந்துள்ளார்.

அத்துடன் சிறீலங்கா கடற்படையினருக்கு அமெரிக்கா கடற்படையினரால் வழங்கப்பட்டு வரும் பயிற்சிகள் உதவிகள் குறித்தும் அக்கூட்டத்தில் விளக்கமளித்த பில்லாட், தமிழீழ விடுதலைப் புலிகளை அழிக்கும் விடயத்தில் சிறீலங்கா கடற்படைக்கு அமெரிக்கா தொடர்ந்தும் உதவும் என்றும் தெரிவித்துள்ளார். அத்துடன் அமெரிக்கா கடந்த வருடம் இறுதியில் சிறீலங்கா கடற்படையினர்க்கு வழங்கிய அதிநவீன கடற் கண்காணிப்பு ராடர்களையும் அதிவேகப் படகுகளையும் அட்மிரல் றொபேர்ட் எஃப் பில்லாட் திரு கோணமலைக் கடற்படைத்தளத்தில் வைத்து பார்வையிட்டுள்ளார்.

இதனிடையே சிறீலங்காவிற்கான தனது பயணத்தின் போது கடற்படைத்தளபதி வைஸ் அட்மிரல் வசந்தகர்ன கொடவையும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவையும் சந்தித்து கலந்துரையாடியமையும் குறிப்பிடத்தக்கது. இந்தச் சந்திப்புக்களில் சிறீலங்காவிற்கான அமெரிக்கத் தூதுவர் பிளேக்கும் உடன் இருந்திருக்கிறார். சில வாரங்களிற்கு முன் சிறீலங்காவிற்கான ஆயுத விநியோகத்தை அமெரிக்கா நிறுத்துவதாக அறிவித்திருந்த சூழ்நிலையில் கடற்படைத்தளபதியின் வருகையும் சந்திப்புக்களும் அறிவிப்புக்களும் அமெரிக்காவின் நிலைப்பாட்டை புலப்படுத்தயுள்ளன.

இதனை ஏற்கனவே உணர்ந்திருந்த அல்லது அறிந்திருந்தாலோ என்னவோ சிறீலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச தற்போது இராணுவத் தீர்வை மட்டுமே விட்டு வைத்திருப்பதாக அமெரிக்காவில் இருந்து வெளிவரும் தவோல்ட் ஸ்றீற் ஜேர்னல் என்ற பத்திரிகை தெரிவித்திருக்கிறது. உண்மையில் இலங்கையில் இடம்பெற்று வரும் போரை அல்லது இனி பெரியளவில் இடம்பெறப் போகும் போரை முன் கூட்டியே தடுப்பதற்கான நகர்வுகள் மேற்கொள்ளப் படாமல் போரிற்கான ஊக்குவிப்புக்கள் கூடுதலாக இடம் பெற்று வருகின்றமையால் மகிந்த அரசும் அடிவாங்கி அடங்கும் வரை அல்லது திருந்தும்வரை போர் சன்னதத்தில் இருந்து விடுபடப் போவதில்லை. மாறாக இனப்பிரச்சினைக்கு விடுதலைப் புலிகளுடன் பேசி இறுதிதத்தீர்வைக் காண முன்வராமல் இராணுவத் தீர்வையே முடிந்த முடிவாக அரசு கொண்டுள்ளதால் போரில் இருந்து விடுபட முடியாத நிலைக்கு இலங்கை சென்று கொண்டிருக்கிறது.

வே.தவச்செல்வன்

0 Comments: