Thursday, February 7, 2008

இடதுசாரிகளின் தப்பிலித்தனம்

இலங்கையின் தேசிய இனப்பிரச்சினைக்கான தென்னி லங்கையின் தீர்வு யோசனையை ஆராய்ந்து கண்டறிவதற் காக அமைக்கப்பட்ட சர்வகட்சிக்குழு, கடைசியாக இவ் விடயத்தில் மஹிந்த அரசு சர்வதேச சமூகத்தின் காதில் பூச்சுற்றுவதற்காக நடத்த முற்படும் "அரசமைப்பின் 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்தல்' என்ற அரசியல் ஏமாற்று நாடகத்தின் "கதை வசனத்தை' தனது திட்டமாக முன்வைக்க வழிப்படுத்தப்பட்டிருக்கிறது. ஜனாதிபதி மஹிந்தரின் விருப்பத்துக்கு அமைய அத்தகைய நாடகத்துக்கான மூலக்கதையை சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழு வின் தயாரிப்பாக முன்வைக்கும் நடிப்பை அக்குழுவின் தலைவரும் தம்மை இடதுசாரி என அடையாளப்படுத்திக் கொள்பவருமான பேராசிரியர் திஸ்ஸ விதாரண, கனகச்சித மாக நிறைவு செய்திருக்கின்றார்.

அடக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களுக்காக சமூக அட்டூழியங்களுக்கு எதிராக நீதி, நியாயத்துக்காக குரல் எழுப்புபவர்கள் "இடதுசாரிகள்' என்ற பொதுவான பண்பியல்புக்கு இழுக்கும், அகௌரவமும் தேடித்தரும் தென்னிலங்கையின் வழமையான சராசரி இடதுசாரித் தலைவரே தாமும் என்பதை, இவரும் தமது அரசியல் குளறுபடித்தன நடவடிக்கைமூலம் நிரூபித்திருக்கின்றார்.

இவர் மாத்திரமல்லர், தென்னிலங்கையில் உருவான பெரும் பாலும் சகல இடதுசாரித் தலைவர்களும் இந்தப் போக் கிலிருந்து விலகியவர்களே அல்லர் என்பதுதான் நிஜம்.
தம்மை சிவப்புச் சட்டை அணிந்த இடதுசாரிகள் என்று அழைத்துக் கொள்ளும் ஜே.வி.பியினரை விட்டு விடு வோம். முழுப் பேரினவாத சிந்தனையில் மூழ்கி, அடக்கு முறைக்கான இனவாதக் குரூரத்தில் சிக்கிக் கிடக்கும் அத்தரப்பினர் தம்மை "இடதுசாரிகள்' என்று அழைத்துக் கொண்டால் உலகின் இடதுசாரிகளின் செயற்பாட்டுக்கே அது அகௌரவமாகி விடும். எனவே, அவர்களை விட்டு விடுவோம்.
இவர்களுக்கு வெளியில் நின்றுகொண்டு, தங்களை இனவாதிகள் அல்லர் என்று வெளியில் படம் போட்டபடி, தங்களின் இடதுசாரிக் கொள்கைக் கோட்பாடுகளைக் கோட்டைவிட்டபடி, "மாக்ஸிஸம்', "கம்யூனிஸம்' பேசும் மிதவாத இடதுசாரித் தலைவர்களை எடுத்துக் கொள்வோம்.

1958 இல் எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்காவின் பேரினவாத அரசு தனிச் சிங்களச் சட்டத்தை முன்வைத்த போது அப்போது உண்மையான இடதுசாரிச் சிந்தனையில் கட்டுண்டு கிடந்த கொல்வின் ஆர் டி சில்வா, அன்றைய பிரதமரைப் பார்த்து "ஒரு மொழி என்றால் இரு நாடுகள்; இரு மொழிகள் என்றால் ஒரு நாடு!' என்று எச்சரிக்கை விடுத்தார்.
ஆனால் பதின்மூன்று ஆண்டுகள் கழித்து அதே கொல் வின் ஆர் டி சில்வா என்னவானார்?
சிங்களத்துக்கு அரச மொழி என்ற ஏகத் தகைமையை யும், பௌத்தத்துக்கு முதன்மையான தனியிடம் என்ற உயர் அந்தஸ்தையும் சட்ட ரீதியாக ஏற்று உறுதிப்படுத்தி நடைமுறைப்படுத்தும் அரசமைப்பின் பிதாமகராக அவரே மாறினார். முன்னர் வழக்கில் இருந்த சோல்பரி அரசமைப் பின் 29 ஆம் விதியின் கீழ் சிறுபான்மையினருக்கு அடிப் படை உரிமைகள் மற்றும் விசேட சலுகைகள் வழங்கு வதை உறுதிப்படுத்துவதற்காக இருந்த விசேட ஏற்பாட்டை நடைமுறை வழக்கிலிருந்து ஒழித்து, சிறுபான்மைத் தமிழர் களை இரண்டாம் தரப் பிரஜைகளாக்கும் துரோகத்தனத் துக்கு அவரே கருக்கொடுத்து உருவேற்றினார்.
இதுவே தென்னிலங்கை இடதுசாரிகளின் பாரம்பரியப் பண்பு.

1950களில் சிறுபான்மையினரான தமிழர்களின் நீதி யான அபிலாஷைகளுக்காக இந்த இடதுசாரிகள் குரல் கொடுத்தார்கள் என்பது உண்மையே. ஆனால் அறு பதுகளின் பின்னர் அவர்கள் அரசியல் சந்தர்ப்பவாதத்துக்கு வளைந்து கொடுத்து, சிங்கள பௌத்த பேரினவாத அர சியலை அரவணைத்து, அந்தச் சகதிக்குள் முற்றாக மூழ்கிப் போனார்கள்.
பாரம்பரிய இடதுசாரிகள் அறுபதுகளுக்குப் பின்னர் "ஜன நாயக சோசலிஸம்' என்ற ""புதிய'' கோட்பாட்டில் சிக்கி, தங்களின் அரசியல் இலட்சியங்களையும் அணுகுமுறை களையும் தலைகீழாக மாற்றிக் கொண்டனர். அவர்களது பரந்த அரசியல் சிந்தனைத்தளம் தென்னிலங்கையின் ஆளும் வர்க்கத்தின் கருத்தியலால் அதாவது பௌத்த, சிங் களப் பேரினவாதச் சிந்தனையால் கௌவிப்பிடிக்கப் பட்டு மழுங்கடிக்கப்பட்டது. அரசியல் அதிகாரத்துக்கும் பதவிச் சுகத்துக்குமாகக் கூட்டுச்சேர்ந்து விட்டுக்கொடுக்கும் சந் தர்ப்பவாத அரசியலை அவர்கள் வரித்துக் கொண்டார்கள். அதனால்தான், சிறுபான்மையினரான தமிழர்களுக்கு எதி ரான அரச ஒடுக்குமுறை தீவிரமடைந்தபோது அக்கொடு மையின் யதார்த்த மெய்நிலையைக் கண்டும் காணாமலும் பார்த்திருக்கும் விட்டேத்தித்தனம் அவர்களை பற்றிப் பீடித்து, செயலற்றவர்களாக்கியது.

சிங்களப் பேரினவாத அரச ஒடுக்குமுறையின் வரலாற் றுப் பெறுபேறாகப் பிறப்பெடுத்ததே தமிழ்த் தேசிய எழுச் சியும் அதையொற்றிய கிளர்ச்சியும், புரட்சியும். சுதந்திரம், தர்மம், கௌரவம், சமவுரிமை, சமத்துவ வாழ்வு போன்ற இலக்குகளை நோக்கிய முற்போக்குத் தன்மைகளையும் பண்புகளையும் இந்த எழுச்சி கொண்டிருந்தமையை சரி யாக அடையாளம் காண தென்னிலங்கை இடதுசாரிகள் தவறினர். அவர்களையும் பற்றிப் பீடித்திருந்த பேரினவாத சிந்தனை இந்தப் புரிதலுக்கு இடமளிக்கவில்லை.
தமிழ்த் தேசியப் போராட்டத்தின் புரட்சிகரமான வர லாற்றுப் புற நிலைகளை அவர்களால் புரிந்து கொள்ளவே முடியவில்லை. தமிழர்களின் நீதியான அரசியல் அபிலாசை களை அவர்களால் உணர்ந்து கொள்ள முடியவில்லை.

ஒடுக்கப்பட்ட ஓர் இனத்தின் தேசியப் போராட்டத்துக்கு மேலாக வர்க்கப் போராட்டத்துக்கு முதன்மை கொடுத்துப் பிதற்றிக் கொண்டிருந்தார்கள் அவர்கள். தமிழ் மக்களின் தேசப்பற்றுணர்வைத் தவறாக எடைபோட்டு அதை வெறும் குறுகிய இனவாதப் பிற்போக்கு வடிவமாக முலாம் பூசினார்கள்; இன்றும் பூசிக்கொண்டிருக்கின்றார்கள்.
தேசிய ஒடுக்குமுறை ஒரு குரூர வடிவமெடுத்து கொடூரமாகப் பேயாட்சி புரியும்போது வர்க்க ஒருமைப் பாட்டுக்காகவும் சுரண்டலுக்கு எதிராகவும் குரல் எழுப் புவது அர்த்தமேயற்றது என்பதை அவர்கள் புரிந்து கொள்ளாது இருப்பது ஏன்? இனி எப்போதேனும் புரிந்து கொள்வார்கள் என்று எதிர்பார்ப்பதற்கும் இல்லை!

thanks - uthayan

0 Comments: