Sunday, May 31, 2009

இரு இனங்களின் ஆதரவினை இழக்க போகும் இந்தியா

இத்தனை அழிவுகளும், பேரவலங்களும் நிகழ்த்தப்பட்ட பின்னர், தேசிய இனங்களுக்கிடையே நல்லிணக்கத்தை உருவாக்கப் போவதாக, இந்தியா கூறுவது வேடிக்கையாக இருக்கிறது.இதன் அடிப்படையிலேயே, ஐ.நா. மனித உரிமைப் பேரவையில், இலங்கை அரசிற்கு எதிராக கொண்டு வரப்பட்ட மனித உரிமை மீறல்கள் குறித்த தீர்மானத்தை எதிர்ப்பதாக, இந்தியா கூற முனைகிறது.இந்திய அரசின் நகர்வுகள் பற்றியதான சந்தேகங்களுக்கு சில காரணிகள் உண்டு.விடுதலைப் புலிகள் மீதான எதிர்ப்புணர்வு, தற்போது தமிழ் மக்கள் மீது திரும்பியுள்ளது போலுள்ளது.

ஐ.நா.சபையில், மேற்குலகு ஓரணியாக நிற்க, அதற்கு எதிரான நாடுகள் மற்றோர் அணியாக நின்று இலங்கை அரசாங்கத்தைக் காப்பாற்றியுள்ளன. ஆனாலும், இவர்கள் எவருமே, கடந்த சில மாதங்களாக உணவிற்காகவும், மருந்திற்காகவும் ஏங்கிய மக்களை திரும்பிப் பார்க்கவில்லை. ஆயுதப் போராட்டக் கட்டமைப்பு அழிக்கப்பட வேண்டுமென்பதில் சிரத்தை கொண்ட இந்த வல்லரசாளர்கள், மக்களின் அழிவு குறித்து கவலைப்படவில்லை. அவ்வாறு கவலையடைய மாட்டார்கள் என்பதை பலர் உணர்ந்து கொள்ளவுமில்லை.

மூன்று இலட்சம் மக்களுக்கு 25 தொன் உணவு போதாது என்கிற உண்மையை காலங்கடந்து புரிந்து கொள்கிறார்கள். நிலத்தில் ஊர்ந்து செல்லும், வாகனங்களின் இலக்கத் தகடுகளைத் துல்லியமாகப் படம் பிடிக்கும் செயற்கைக் கோள்கள், அங்கு சிக்குண்டிருந்த மக்களின் எண்ணிக்கையையும் அறிந்திருக்கும்.

அரசாங்கம் முன்னர் வெளியிட்ட மக்கள் தொகை, புள்ளிவிபரம் தவறானது எனப் புரிந்தும், எதுவித காத்திரமான அழுத்தங்களையும் செலுத்த முற்படாத உலக மகா மனிதாபிமான நாடுகளின், புவிசார் அரசியல் நலன்களை புரிந்து கொள்ளப்பட வேண்டியது அவசியம். இப்படி நடக்குமென்று இவர்களுக்கு நன்கு புரியும். ஆனாலும், இவர்களின் உள்நோக்கத்தையும், ஜனநாயகப் போர்வையினையும் சிலர் உணர்ந்து கொள்ளவில்லை.

சர்வதேச தொண்டு நிறுவனங்கள், ஐ.நா.சபையின் உப அமைப்புக்கள் மற்றும் அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கம் போன்வற்றைக் வன்னிக் களமுனையிலிருந்து அரசாங்கம் அகற்றியவுடன், வல்லரசாளர்களின் திட்டமிட்ட அசமந்தப் போக்கினை புரிந்திருக்க வேண்டும். ஆனாலும், இன்னும் கூட அந்நிலை நீடிப்பதையிட்டு கவலைகொள்ளாமல், அரசாங்கத்தின் தயவில் அகதி முகாமில் இருப்பதை ஏற்றுக் கொள்ளும் நிலைப்பாட்டிலேயே சர்வதேசம் சமூகம் இருக்கிறது.

விடுதலைப் புலிகளோடு இறுதிவரை நின்றவர்களை, பழிவாங்கும் மனோ நிலையில், சர்வதேசமும் இருக்கிறதென்கிற சந்தேகம் தமிழ் மக்களிடையே தோன்றியுள்ளது. ஆகாயத்திலிருந்து கள முனைகளின் கோரத்தைப் பார்த்தவர்களும், முகாம்களுக்குச் சென்று இடம்பெயர்ந்த மக்களைச் சந்தித்தவர்களும், வெறும் கவலையைத் தெரிவித்து கலைந்து சென்றுள்ளனர். முடமாகிப் போன, நோயுற்ற மக்களுக்கான போதிய வைத்தியவசதிகள் அற்ற நிலைமை முள்ளிவாய்ககாலில் இருந்து வவுனியா வரை நீடித்துக் கொண்டேயிருக்கிறது.

கூடுகள் கலைக்கப்பட்டு, பெற்றோர், குழந்தைகள் யாவரும் தொடர்பற்ற நிலையில், சிதறுண்டு போகடிக்கப்பட்டுள்ளனர். இவர்களைப் பொறுப்பேற்று, பராமரிக்கக் கூடிய வல்லமையையும், ஐ.நா. சபை இழந்திருப்பதே பெரும் சோகமாகும். பிராந்தி வல்லரசாளர்கள், அதற்கு இடையூறாக இருப்பதாகக் கூறப்படுகிறது. வேறெõருவரும் உள்நுழைய முன்பாக, நிவாரணப் பொருட்களை அனுப்ப அவசரப்படும் இந்தியா, தனது 34 வர்த்தக நிறுவனங்களை உள்ளே அனுப்பும் முயற்சியிலும் ஈடுபடுவதாக செய்திகள் தெரிவிக்கி ன்றன. ஆனாலும் ஆயுதப் போராட்டத்தினை அழிப்பதில் ஒன்றிணைந்து செயற்பட்ட பிராந்திய வல்லரசாளர்கள், தமக்குள் மோதிக் கொள்ள தயாராகின்றனர்.

அதற்கான அறிகுறிகள், பகிரங்கமாக வெளிப்படுத்தத் தொடங்கியுள் ளன. சீனா, பாகிஸ்தான், ரஷ்யாவின் படைகள், அதியுயர் தொழில்நுட்ப பங்களிப்பாலேயே தாம் இந்த யுத்தத்தில் வெற்றி பெற முடிந்ததாக அரசாங்கம் தெரிவிப்பதை, இந்தியா உணர ஆரம்பித்துள்ளது. ரஷ்யாவிற்கு நன்றி தெரிவிக்கும் ஊர்வலங்களும் கொழும்பில் நடைபெற்று, கனடா தூதரகமும் தாக்கப்பட்டுள்ளது. தம்மீது அழுத்தம் கொடுக்க முனைபவர்களை முழு மூச்சாக எதிர்ப்பதும், அந்த எதிர்ப்பினூடாக அவர்களை அடிபணிய வைத்து மௌனியாக்குவதுமே, இதுகால வரை சிங்கள தேசம் மேற்கொண்டு வரும் எதிர்வினைச் செயற்பாடுகள் ஆகும். ஆனாலும் பிராந்திய ஆதிக்க விரிவாக்கத்திலும், சந்தைப்பங்கிடுதலிலும், போட்டி போடும் ஏகாதிபத்தியங்களுக்கு, சூடு சொரணை இருக்க வேண்டுமென எதிர்பார்ப்பது மிகத் தவறானது.

இவை எவ்வாறு இருப்பினும், இந்தியாவின் ஈழப்பிரச்சினை குறித்த நிகழ்ச்சி நிரலில் மாற்றங்கள் ஏற்பட்டது போல் தெரியவில்லை. ஆயுதப் போராட்டம், முடிவொன்றினை எட்டியவுடன், அதன் அடுத்த கட்டமாக, புலம்பெயர் தமிழ் மக்களின் போராட்டத் தளத்தினை சிதைக்க வேண்டுமென்கிற திட்டத்தினை இந்தியா கொண்டிருக்கிறது. மறுபடியும், விடுதலைப் புலிகளின் எழுச்சி, உருவாகி விடக் கூடாதென்பதில் தனது கவனத்தைச் செலுத்தும் இந்தியா, அதற்கான ஏது நிலைகள், புலம்பெயர் நாடுகளில் இருந்து வரக்கூடிய அபாயம் இருப்பதாக எடை போடுகின்றது.

இந்திய அமைதிப்படைத் தளபதி கல்கட் தனது இந்த வார கட்டுரையொன்றில், இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. அதேவேளை, சகல வழிகளிலும், புலம்பெயர் தமிழ் மக்கள் மீது உளவியல் சமரொன்று மிக வேகமாக கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளதை உணரக்கூடியதாக விருக்கிறது.அவர் இருக்கிறாரா. இல்லையா என்பதிலிருந்து இச்சமர் ஆரம்பமாகிறது. அந்த விவாதம், விரிவடைந்து நீண்டு செல்ல வேண்டுமென்பதே பிராந்திய வல்லரசின் விருப்பம். ஆயினும், புவிசார் அரசியலைப் புரிந்து, மீண்டும் மீண்டெழ வேண்டியதன் அவசியத்தை புலம்பெயர் மக்கள் புரிய ஆரம்பித்துள்ளனர். அதே÷வளை ஏதிலியாக்கப்பட்ட மூன்று இலட்சம் மக்களுக்கு செய்ய வேண்டிய அவசர உதவிப் பணிகள் குறித்தும், இவர்கள் சிந்திக்க வேண்டும். இன்னமும் தமிழக அரசியல் கனவிலும், ஒபாமா உறவிலும், தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுக்கலாமென்ற கற்பிதம் கொள்வது தவறானது என்பதை புலம்பெயர் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஒட்டுமொத்த பிராந்திய வல்லரசாளர்களுக்கு எதிரான போரில், தமிழினம் வெற்றி பெற்றதா அல்லது தோல்வியுற்றதா என்பதை காலம் தீர்மானிக்கும்.

நன்றி
- வீரகேசரி -

ஈரடி பின்னால் ஓரடி முன்னால்?

தமிழ் மக்களின் தேசிய விடுதலைப் போராட்டம் ஒரு திருப்புமுனையைச் சந்தித்துள்ள இன்றைய காலகட்டத்தில் அடுத்தது என்ன எனத் தெரியாத சூழ்நிலைக்குத் தமிழ் மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

அனைவரும் குழப்பத்தில் ஆழ்ந்துள்ள அதேவேளை புலம்பெயர் தமிழர் மத்தியில் இக்குழப்பம் வெகுவாக நிலவுதுடன், மோதல் உருவாகக்கூடிய அபாயமும் தென்படுகின்றது.

போராட்டம் ஒரு துயர முடிவைச் சந்தித்துள்ளது என்பதற்கு அப்பால், தேசியத் தலைவர் வே.பிரபாகரனின் மரணம் தொடர்பாக வெளிவரும் முரணான சேதிகளே மக்களின் துயரத்துக்கும், குழப்பத்துக்கும் அதிகளவில் காரணங்களாக உள்ளன.

இன்றைய நிமிடத்தில் தேசியத் தலைவர் உயிருடன் இருக்கிறாரா, இல்லையா என்பதை ஆராய்வதிலேயே தமிழ் மக்களின் கவனம் வெகுவாகக் குவிக்கப்பட்டிருக்கின்றது. இந்த விவாதத்திற்கு கிட்டிய எதிர்காலத்தில் முடிவு இருக்கப் போவதில்லை என்பதே யதார்த்தம்.

அதேவேளை, முடிவு காண முடியாத இந்த விடயம் தொடர்பில் சர்ச்சைப்படுவதை விட்டுவிட்டு வேறு விடயங்களில் நாம் அவசரமாகவும், அவசியமாகவும் கவனம் செலுத்த வேண்டிய தேவை உள்ளது.

இன்றைய நிலையில் தமிழ் மக்கள் தமது துயரத்தின் உச்சத்தைச் சந்தித்துள்ளார்கள் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. இன்னமும் கூட அதிலிருந்து அவர்கள் மீளவில்லை என்பதுவும் உண்மை. ஆனால், இதற்காக நாம் எமது அடுத்த கட்டச் செயற்பாடுகளை மறந்துவிடலாமா? எதிர்பாராத இழப்புக்கள் தவிர்க்க முடியாதவை. அதற்காக நாம் ஸ்தம்பிதம் அடைந்துவிட முடியாது. இழப்புக்களைத் தாங்கிக்கொண்டு நாம் முன்னோக்கி நடைபோட வேண்டியது அவசியம்.

ஐ.நா. அகதிகள் உயர் ஸ்தானிகராலயம் வெளியிட்டுள்ள தரவுகளின் படி தற்போது சுமார் 3 இலட்சம் தமிழ் மக்கள் இடம்பெயர்ந்த நிலையில் இடைத்தங்கல் முகாம்களில் அடைக்கப்பட்டுள்ளார்கள். அவர்கள் போதுமான உணவின்றி, சுத்தமான குடிநீரின்றி, சுகாதார வசதிகள் இன்றி, நடமாடும் சுதந்திரம் இன்றி வாடுகின்றார்கள். இது தவிர பிள்ளைகள் தமது பெற்றோரிடம் இருந்து பிரிக்கப்பட்டுள்ளார்கள். பெண்கள் பாலியல் கொடுமைகளுக்கு ஆளாகின்றார்கள்.




இடைத்தங்கல் முகாம்கள் தவிர, போரின் இறுதிக் கட்டத்தில் முள்ளிவாய்க்கால் பகுதியில் இருந்து வெளியேறிய ஆயிரக்கணக்கான மக்கள் இன்னமும் கிளிநொச்சி பகுதியில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் அடிப்படை வசதிகள் கூட இல்லாத நிலையில் அவர்கள் மிக மோசமாக நடத்தப்படுவதாகவும் அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, சிறிலங்கா அரசு வெளியிட்டுள்ள தகவல்களின்படி இன்னமும் சுமார் 9,000 வரையான போராளிகள் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாகத் தெரிகின்றது. இத்தொகை நாளுக்கு நாள் உயர்ந்தும் வருகின்றது. இவர்கள் தடுப்புக்காவலில் மிருகத்தனமாக நடத்தப்படுகின்றார்கள் என்பது சொல்லாமலேயே புரியும்.

இது தவிர காயப்பட்ட நிலையில் கணிசமான எண்ணிக்கையிலான பொதுமக்களும், போராளிகளும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றார்கள். இவர்களுள் சுமார் முப்பதாயிரம் வரையானோர் தங்களின் அவயவங்களை இழந்திருக்கிறார்கள். இவர்களில் அநேகருக்குக் கண்துடைப்புச் சிகிச்சைகளே வழங்கப்பட்டு வருவதாக தெரிகின்றது. சிறிலங்கா அரசு நினைத்தால் இவர்களைக் காப்பாற்றவும் முடியும், கொல்லவும் முடியும்.

இந்நிலையில் இடம்பெயர்ந்து தடுப்பு முகாம்களில் வாழும் மக்களின் மீள் குடியேற்றம், புனர்வாழ்வு என்பவற்றுக்கும், தடுத்து வைக்கப்பட்டுள்ள போராளிகளின் விடுதலை மற்றும் மறுவாழ்வு என்பவற்றுக்கும் முன்னுரிமை அழிப்பNது நியாயமானது.

ஏற்கனவே, சிறிலங்கா அரசிடம் சரணடைந்துள்ள தயா மாஸ்ரர் போன்றோர் வழங்கிவரும் தகவல்கள் காரணமாக தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்துக்கு ஆதரவு வழங்கிய, தொடர்ந்தும் ஆதரவு வழங்கிக் கொண்டிருக்கின்ற தமிழ், சிங்கள ஊடகவியலாளர்களுக்கும் சிங்கள மக்கள் மத்தியில் இருந்து கொண்டே தமிழ் மக்களின் உரிமைகளுக்காகக் குரல் தந்துவந்த சிங்களப் புத்திஜீவிகளுக்கும், அரசியல்வாதிகளுக்கும் அச்சுறுத்தல்கள் உருவாகியுள்ளன.

விடுதலைப் புலிகளின் முன்னணித் தலைவர்கள் பலர் உயிருடன் அரசின் கையில் சிக்கிவரும் நிலையில் உள்நாட்டில் மட்டுமன்றி வெளிநாடுகளில் வாழ்வோருக்கும் கூடப் பல நெருக்கடிகள் உருவாகுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன.

போரட்டத்தின் இறுதி நாட்களில் எவ்வாறு தமிழ் மக்கள் ~கைவிடப்பட்டார்களோ| அதுபோன்று இவர்களையும் கைவிட்டுவிடலாகாது என்பதை நாம் மனதில் கொள்ள வேண்டும்.

போர் முடிவிற்கு வந்துவிட்டதாக சிறிலங்கா அரசு அறிவித்துள்ள போதிலும் அதன் தமிழர் விரோதப் போக்கும், போர் முனைப்பும் இன்னமும் குறைந்து விடவில்லை. சொல்லப் போனால் அது இன்னமும் அதிகரித்திருக்கிறது என்றே கூற வேண்டும். இதுநாள் வரை, போர்க்குற்ற விசாரணைகளுக்காக அஞ்சிக் கொண்டிருந்த சிங்களத் தலைமை மே 26, 27 ஆம் திகதிகளில் ஐ.நா. மனித உரிமைகள் சபையின் 11 ஆவது விசேட கூட்டத்தில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தைத் தோற்கடித்ததில் இருந்து மேலும் உற்சாகம் பெற்றிருக்கின்றது.

துட்டகைமுனுவின் பாணியில் தமிழர்களை வெற்றிகொண்டு விட்டோம் என்ற மமதையில் இருக்கும் சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ மேலும் ஒரு லட்சம் படையினரை இராணுவத்தில் சேர்க்கவுள்ளதாகவும் விடுதலைப் புலிகள் என்ற பெயரை இனிமேல் யாரும் உச்சரிக்காத ஒரு நிலையை உருவாக்கப் போவதாகவும் சூழுரைத்திருக்கின்றார்.

வன்னியில் போர்ப் பிரதேசங்களில் சிக்குண்டிருந்த தமிழ் மக்களையும் விடுதலைப் புலிகளின் தலைமையையும் சர்வதேச சமூகம் காப்பாற்றும் என்ற நம்பிக்கை தமிழ் மக்களுக்கு - குறிப்பாக புலம்பெயர் தமிழ் மக்களுக்கு - நிறையவே இருந்தது. அந்த நம்பிக்கையின் அடிப்படையிலேயே புலம்பெயர் நாடுகளில் தொடர்ச்சியான போராட்டங்கள் பல்வேறு வடிவங்களிலும் முன்னெடுக்கப்பட்டன. ஆனால், தூரதிர்ஷ்டவசமாக ஊடக விழிப்புணர்வையும் தமிழ் மக்கள் மத்தியில் எழுச்சியையும் ஏற்படுத்தியதைத் தவிர வேறு எதனையும் இத்தகைய போராட்டங்களால் சாதிக்க முடியாமற் போய் விட்டது.

இதேவேளை, சிறிலங்கா அரசு மீது போர்க்குற்ற விசாரணையையாவது நடாத்துவதில் சர்வதேசம் விடாப்பிடியாகச் செயற்படும் என்ற எதிர்பார்ப்பும் ஐ.நா. மனித உரிமைகள் சபையில் கொண்டுவரப்பட்ட தீர்மானம் தேற்கடிக்கப்பட்டதுடன் பொய்த்துப் போனது.

இத்தகைய யதார்த்தங்களின் அடிப்படையிலேயே தமிழ் மக்களின் அடுத்த கட்ட நகர்வுகள் அமைய வேண்டும்.

தற்போதைய நிலையில் மற்றுமொரு ஆயுதப் போராட்டம் பற்றி நினைத்துப் பார்க்கக்கூட முடியாத நிலையே உள்ளது. இத்தகைய தீர்மானம் தற்கொலைக்கு ஒப்பானதுடன், ஏற்கனவே பல்வேறு இழப்புக்களைச் சந்தித்து ஏதிலிகளாக இருக்கும் மக்களுக்கு மேலும் இழப்புக்களை ஏற்படுத்துவதற்கே வழி கோலும்.

இன்றைய நிலையில் அந்த மக்களிடம் உயிர்களைத் தவிர இழப்பதற்கு வேறு எதுவுமே இல்லை. உரிமைப் போராட்டத்துக்கு தன்னலமற்ற ஆதரவை இதுவரை நல்கிய அந்த மக்களுக்கு உரிமைகளைப் பெற்றுத் தருவதில் தவறியிருந்தாலும், ஆகக்குறைந்தது அவர்களிடம் எஞ்சியிருக்கும் உயிர்களைக் காப்பதற்காவாவது நாம் மானசீகமாக முயல வேண்டும்.

எனவே, எம்முன்னே இருக்கின்ற ஒரே தெரிவு ஜனநாயக வழிமுறைகளுக்கு ஊடாக எமது இறுதி இலக்கை நோக்கி நகர்த்திச் செல்வதே.

இன்றைய சூழ்நிலையில் களத்தில் விடுதலைப் புலிகளின் தலைமை அகற்றப்பட்டுவிட்ட நிலையில் அல்லது அழிக்கப்பட்டுவிட்ட நிலையில் உயிரோடு இருப்பதாகக் கருதப்படும் ஒருசில தலைவர்கள் கூடத் தங்களைப் பகிரங்கமாக வெளிக்காட்ட முடியாத நிலையில் புலம்பெயர் சமூகத்தில் இருந்தே அந்தத் தலைமை - தற்காலிகமாகவேனும் - உருவாக வேண்டிய தேவை இருக்கின்றது.

இது நடைமுறைச் சாத்தியமானதா? இதனால் எதையாவது சாதிக்க முடியுமா என்ற கேள்வி எழுப்பப்படலாம்.

ஒரு காரியத்தை முன்னெடுக்கும் போது நாம் முதலில் இலக்கைத் தீர்மானிக்க வேண்டும். அதன் பிறகே இந்த இலக்கை எவ்வாறு சென்றடைவது என்பதைப் பற்றி திட்டமிட வேண்டும்.

தமிழ் மக்கள் தமது சொந்த மண்ணில் சுதந்திரமாக, இறைமையுள்ளவர்களாக வாழவே விரும்பினர். இலங்கைத் தீவில் அவர்கள் அவ்வாறு வாழ விரும்பியமைக்கு வலுவான காரணங்கள் நிறையவே உள்ளன. அவர்கள் எதற்காகப் பிரிந்து சென்று தனிநாடு அமைக்க வேண்டும் என்ற தீர்மானத்துக்கு வந்தார்களோ. அந்தக் காரணங்கள் இப்போதும் மாற்றமின்றி உள்ளன. எனவே, அவர்களது இலட்சியமும் மாற்றமடைய வேண்டிய அவசியமில்லை.

அந்த உன்னத இலட்சியத்தை எட்டுவதற்காக இதுவரை சுமார் 2 லட்சம் வரையான உயிர்களையும் கோடிக்கணக்கான டாலர் பெறுமதியான சொத்துக்களையும் அவர்கள் இழந்துள்ளார்கள்.

இத்தனை இழப்புக்களின் பின்னும் அவர்கள் தமது இலட்சியப் பாதையில் ஒரு அடியேனும் முன்னேற முடியவில்லை. யதார்த்தமாக நோக்கினால் அவர்கள் முன்னைய நிலையை விடப் பின்னோக்கியே சென்றுள்ளார்கள் எனலாம். இது தேவைக்கும் அதிகமானது.

இந்நிலையில் இன்றைய யதார்த்தம் தமிழ் மக்கள் தமது போராட்டப் பாதையை மாற்றியாக வேண்டிய தேவையை வலியுறுத்தி நிற்கின்றது.

இடம்பெயர்ந்த மக்களைத் தொடர்ந்தும் முகாம்களில் தடுத்து வைத்திருப்பதற்கும் எமது மக்களின் விடுதலைக்காக தீரமுடன் போராடிய போராளிகளை தடுத்து வைத்துச் சித்திரவதை செய்வதற்கும், அவர்களுக்கு ஆதரவு வழங்கிய ஏனையோரை வேட்டையாடுவதற்கும் சிங்கள இனவெறி அரசு தகுந்த காரணங்களைத் தேடிக் கொண்டிருக்கின்றது. அதற்கான வாய்ப்பை எந்தச் சந்தர்ப்பத்திலும் நாம் வழங்கிவிடக் கூடாது.

மறுபுறம், விடுதலைப் புலிகள் என்ற நாமமே இனி இலங்கைத் தீவில் இருக்கக்கூடாது எனச் சிங்கள தேசம் விரும்புகின்றது. இதனையே புலம்பெயர் நாடுகளில் வாழும் ஒரு சில புத்திஜீவிகளும், மாற்றுக் குழுவினரும் கூட விரும்புகின்றனர்.

இன்றைய நிலையில் விடுதலைப் புலிகள் ஆயுத ரீதியாகத் தோற்றடிக்கப்பட்டாலும் கூட அவர்கள் முன்னெடுத்த போராட்டம் பல சாதனைகளைப் படைத்திருப்பதை நாம் மறந்துவிடக் கூடாது. இன்று உலகத் தமிழினம் ஒன்றுபட்டிருக்கின்றதென்றால், தனக்கென ஒரு தனித்துவமான அடையாளத்தைக் கொண்டிருக்கின்றதென்றால், ஈழத் தமிழ் மக்களுக்கு எதிராக சிங்கள அரசினால் கொடுமைகள் இழைக்கப்பட்டுள்ளன எனச் சர்வதேசம் ஏற்றுக் கொண்டுள்ளதென்றால், அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வு அவர்களுக்கு வழங்கப்பட வேண்டுமென்ற சிந்தனை உருவாகியுள்ளதென்றால் அது விடுதலைப் புலிகளாலும் தேசிய தலைவர் பிரபாகரனாலுமே சாத்தியப் பட்டிருக்கின்றது. எனவே, அந்தத் தியாகமும், பெருமையும் அழிக்கப்படவோ, வரலாற்றில் இருந்து அகற்றப்படவோ அனுமதிக்கக்கூடாது.

எனவே, இத்தகைய சிந்தனைகளின் அடிப்படையில் புதிதாக உருவாகப் போகும் விடுதலைப் புலிகளின் தலைமை வன்முறை அரசியலைக் கைவிடுவதாக அறிவித்துவிட்டு ஜனநாயக அரசியலில் பிரவேசிக்கும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். புலம்பெயர் நாடுகளில் வாழும் கல்விமான்கள், ஊடகவியலாளர்கள், விடுதலை விரும்பிகளை ஆகியோரை உள்ளடக்கிய ஆலோசனைச் சபையொன்றை ஏற்படுத்தி அவர்களுடைய ஆலோசனைகளைப் பெற்று செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும். அவ்வாறு செய்யும் போது சர்வதேச சமூகத்தின் ஆதரவு கிட்டுவதுடன் சிறி லங்கா அரசோ இந்தியாவோ அந்த முயற்சியைப் புறம்தள்ளி விட முடியாத நிலை உருவாகும்.

இன்று யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா மாவட்டங்களுக்கான உள்ளுராட்சி மன்றத் தேர்தல்கள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. இந்தத் தேர்தலை ஒத்திப் போடும் முயற்சிகள் பயனளிக்காதவிடத்து, தேர்தலில் விடுதலைப் புலிகள் நேரடியாகவோ தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஊடாகவே பங்கெடுக்க வேண்டும்.

விடுதலைப் புலிகள் 90-களில் பதிவு செய்த ~விடுதலைப் புலிகள் மக்கள் முன்னணி| என்ற அரசியல் கட்சி இன்னமும் சிறிலங்கா தேர்தல் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்ட ஒரு அரசியல் கட்சியாக இருப்பதை மறந்துவிடக்கூடாது.

ஈழ தேசிய விடுதலைப் போராட்டத்தில் அனைத்துத் தமிழ் மக்களுமே துன்ப துயரங்களை அனுபவித்து உள்ளார்கள் என்ற போதிலும் அதிகபட்ச துன்பத்தை, துயரத்தை அனுபவித்தவர்கள் வன்னி மக்களே.

அனைத்தையும் இழந்த நிலையில் இன்று தடுப்பு முகாம்களில் வாடும் அவர்கள் நிம்மதியாக வாழ தத்தம் இடங்களுக்குத் திரும்ப வேண்டுமாக இருந்தால், முன்னாள் போராளிகளில் கணிசமானோர் பொதுமன்னிப்பின் கீழ் விடுதலையாக வேண்டுமாக இருந்தால், இன்னமும் உயிர்ப்பலி நிகழாமல் தற்போது தென் தமிழீழத்திலும் ஏனைய இடங்களிலும் மறைந்து வாழும் போராளிகள் பொதுமன்னிப்புப் பெற்று சகஜ வாழ்வில் பிரவேசிக்க வேண்டுமாக இருந்தால்
இதுவொன்றே சரியான மார்க்கம்.

இதேவேளை, தற்போதைய சோர்வு மனப்பான்மையில் நாம் தளர்ந்து, செயலற்றுப் போய்விடாமல் நமது தொடர்புகளைத் தொடர்ந்து பேணி எமது தாயக மக்களின் நலவாழ்வுக்காக நாம் பாடுபட வேண்டும்.

குறிப்பாக தாய்த் தமிழகத்தில் எமது விருப்பு வெறுப்புகளுக்கு அப்பால் சகல அரசியல் கட்சிகளுடனும் உறவுகளைப் பேணி எமது அரசியல் செயற்பாடுகளுக்கான ஆதரவையும் அங்கீகாரத்தையும் பெற்றுக்கொள்ள வேண்டும்.

எமது போராட்டப் பாதையில் நோர்வே, சுவிற்சர்லாந்து போன்ற ஒரு சில நாடுகள் எமது மக்களின் நலவாழ்வுக்காக உண்மையாகவே பாடுபட்டிருந்தன. அந்த உறவு தொடர்ந்து பேணப்பட வேண்டும்.

இது தவிர, இன்றைய நிலையில் எமக்காகக் குரல்தர சர்வதேச முன்னணி ஊடகங்கள் சில தாமாகவே முன்வந்துள்ளமை பாராட்டப்பட வேண்டிய ஒரு விடயம். இந்த வாய்ப்பை நாம் நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

அத்துடன், சர்வதேச மன்றமான ஐ.நா.வில் எமது குரல் தொடர்ந்து ஒலிப்பதையும் நாம் உறுதி செய்ய வேண்டும். ஐ.நா. மனித உரிமைக் குழுவில் சிறிலங்கா அரசுக்கு எதிராக அண்மையில் கொண்டுவரப்பட்ட தீர்மானம் முறியடிக்கப்பட்ட போதிலும் அத்தகைய ஒரு முயற்சிக்கு ஊடாக வெளிப்பட்டுள்ள சேதி மிக முக்கியமானது.

தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டம் ஆயுத வன்முறையற்ற, ஜனநாயக வழிப்பட்ட ஒன்றாக அமைய வேண்டும் என்ற கருத்தையே மேற்குலக நாடுகள் இதுவரை வலியுறுத்தி வந்தன. அன்றைய சூழலில் அக்கருத்தை உள்வாங்கி நாம் செயற்படத் தவறியிருந்த போதிலும், இன்றைய சூழ்நிலையில் அதுவே மிகப் பொருத்தமான தெரிவாக உள்ளது. அதுதவிர, அத்தகைய தெரிவின் ஊடாக இத்தகைய நாடுகளின் தார்மீக ஆதரவையும் நாம் எமது இலட்சியத்துக்காகப் பெற்றுக்கொள்ள முடியும்.

உலகின் பல்வேறு மூலைகளிலும் போராடிக் கொண்டிருக்கின்ற பல்வேறு போராட்ட அமைப்புக்களுக்கும் பல்வேறு போராட்ட முன்மாதிரிகளை விடுதலைப் புலிகள் இயக்கம் இதுவரை வழங்கியுள்ளது. எதிர்பாராத வகையில் இத்தகையதொரு இராணுவத் தோல்வியைச் சந்தித்துள்ள நிலையிலும், தனது அரசியற் செயற்பாடுகளுக்கு ஊடாக, இக்கட்டான நிலையிலும் தனது மக்களின் நலன்களுக்காகத் தன்னைத் தகவமைத்தக் கொண்டு சரியான வழிநடத்தலை வழங்கிய அமைப்பு என்ற முன்மாதிரியை வழங்க விடுதலைப் புலிகள் முன்வர வேண்டும்.

இவை அனைத்தும் விரைந்து செய்யப்பட வேண்டும். தாமதிக்கின்ற ஒவ்வொரு கணமும் நாம் தோல்விப் பாதையில் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியாகவே அமையும்.

எவ்வது உறைவது உலகம் உலகத்தோடு
அவ்வது உறைவது அறிவு. - திருக்குறள்.

நன்றி: ~நிலவரம்|

Friday, May 29, 2009

இனி என்ன செய்யப் போகிறது மேற்குலகு?

ஒடுக்கப்பட்ட இனங்களுக்கு நீதி, நியாயம் பெற்றுக் கொடுக் கும் விடயத்தில், இதுவரை தன்னைப் பெரிய சக்தியாக முன்னிறுத்தி, வாய்கிழிய உபதேசம் செய்துவந்த சர்வதேசம் குறிப் பாக மேற்குலகம் இப்போது தன்னுடைய சுய செல்வாக்கு,ஆளுமை, பலம் ஆகியவற்றை ஓரளவுக்கேனும் எடைபோட வாய்ப்புக் கிட்டியிருக்கின்றது எனலாம்."வன்முறையைக் கைவிடுங்கள்!", "பயங்கரவாதத்தைக் கைவிடுங்கள்!", "அமைதி வழியில் பிரச்சினைகளை எடுத்துரைத்துமுன்வையுங்கள்!" என்றெல்லாம் இதுவரை ஈழத் தமிழர் தரப்பைப் பார்த்து தத்துவம் பேசிக்கொண்டி ருந்த மேற்குலகுஇனிமேல் எந்த முகத்துடன் ஈழத் தமிழர்க ளின் முன்னால் வரப்போகின்றது?

பல்லாயிரக் கணக்கில் மக்கள் இடம்பெயர்ந்து ஒரு குறு கிய நிலப்பரப்புக்குள் கூடியிருந்த சமயம், அக்கூட்டம் மீது மிகமோசமான யுத்தத் தாக்குதல் நடத்தப்பட்டதன் மூலம் பல்லாயிரக் கணக்கான அப்பாவிகள் கொத்துக் கொத்தாகக் கொன்றுகுவிக்கப்படும் பேரவலம் ஈழத் தமிழர் தாயகத்தில் அரங்கேறியிருக்கின்றது. அந்தக் கொடூரத்தை கோரத்தை கண்டு முழுஉலகமுமே அதிர்ச்சியில் உறைந்து போயி ருக்கின்றது.

இந்த அட்டூழியம் குறித்து, நீதி விசாரணை நடத்தி, சம்பந்தப் பட்ட தரப்பை" சர்வதேச சட்டத்தின் முன் நிறுத்தித் தண்டிக்கவேண்டும் என்ற நியாயம் சர்வதேசத்துக்குப் புரிந்தும் கூட, அதைச் செய்ய முடியாத இயலாத் தன்மையில் கையாலாகாத்தனத்தில் தான் இருப்பதை இப்போது மேற்குலகு அனுபவ வாயிலாக பட்டறிவாக அறிந்துகொண்டிருக் கின்றது.உயர் தொழில்நுட்ப வசதிகளுடன் உலகின் எந்த மூலையில் நடக்கும் விடயங்களையும் துல்லியமாக அவதானிக் கும்ஏற்பாடுகளுடன் உலகம் பார்த்திருக்கத் தக்கதாகவே வன் னிப் பெருநிலப்பரப்பில் கொத்துக் கொத்தாக அப்பாவித் தமி ழர்கள்கொடூரமாகக் கொன்றொழிக்கப்பட்டார்கள்; அவய வங்கள் இழந்து படுகாயமடைந்தார்கள்; உடைமைகள், உறவு களை அகோரத்தாக்குதல்களுக்குப் பறிகொடுத்தார்கள்.மனித இனத்துக்கே எதிரான அட்டூழியங்கள் உலகத்தின் கண்களுக்கு முன்னால் அங்கே குரூரமாக அரங்கேறிய மையைமேற்குலகம் நன்கு அறியும். அந்தக் கொடூரத்துக்கு நியாயம் தேடு முகமாகவே, ஐக்கிய நாடுகளின் மனித உரிமை கள்கவுன்ஸில் இந்த மோசமான சம்பவங்கள் குறித்து விசா ரணை நடத்த வேண்டும் என்ற பிரேரணையை அவை முழு மூச்சாகஅந்தக் கவுன்ஸிலில் கொண்டு வந்தன.

ஆனால், இலங்கை அரசுடன், இந்தியா, பாகிஸ்தான், சீனா, ரஷ்யா ஆகிய வலுவான நாடுகள் கூட்டாக ஒன்று சேர்ந்து அந்தமுயற்சியை வெற்றிகரமாக முறியடித்திருக்கின்றன.
இதுவரை காலமும், ஈழத் தமிழர்கள் சார்பில் அவர்களின் நீதி, நியாயமான அபிலாஷைகள், கௌரவ வாழ்வு ஆகியவை வேண்டிஆயுத வழியில் போராட்டங்கள் முன்னெடுக்கப் பட்டபோது, அவற்றைப் "பயங்கரவாதம்", "வன்முறை", "சட்டவிரோதமானபோராட்டம்" என்றெல்லாம் வரையறுத்து, ஒதுக்கி வந்தது மேற்குலகம். "பயங்கரவாதத்தைக் கைவிட்ட தாக சொல்லிலும்செயலிலும் வெளிப்படுத்தினால் ஈழத் தமிழர்களுக்கு நீதி, நியாயம் கிட்ட சேர்ந்து பணியாற்றி ஒத்து ழைப்போம்!" எனஅமெரிக்கா, பிரிட்டன், ஐரோப்பிய ஒன்றி யம் உட்பட்ட மேற்குலகம் விடாது உபதேசம் செய்து வந்தன.

அவற்றிடம் ஈழத் தமிழர்கள் சார்பில் இன்று ஒரு கேள்வியை முன்வைப்பது காலத்தின் கட்டாயமாகின்றது.

இடம்பெயர்ந்து பல்லாயிரக்கணக்கில் ஒன்று கூடி அவலப்பட்டுக் கொண்டிருந்த ஈழத் தமிழர்கள் மீது கண்மூடித்த னமானதாக்குதல்களை நடத்தி பெரும் மனிதக் கொடூர அழிவு நிகழ்வதற்கான அநியாயம் இலங்கைத் தீவில் கட்டவிழ்த்துவிடப்பட்டதை நீங்கள் நேரில் கண்டீர்கள். அது குறித்து சர்வதேசரீதியான விசாரணைகள் நடத்தப்பட்டு யுத்தக் குற்ற வாளிகள்சர்வதேச மன்றில் நிறுத்தப்பட வேண்டும் என் பதை நீங்களும் உணர்ந்தீர்கள். ஆனால் மக்கள் கொத்துக் கொத்தாகக்கொன்றொழிக்கப்பட்ட அவலத்துக்கான விசார ணையைக் கூட உங்களால் ஏற்பாடு செய்ய முடியவில்லை. அவ்வளவுதான் உங்களின் வலிமை, செல்வாக்கு, ஆளுமை. இனி என்ன? வாலைச் சுருட்டிக்கொண்டு, இந்தப் பேரழிவுக் கொடூரத்தை எமதுதமிழ் மக்களுடன் சேர்ந்து நீங்களும் சகித்துக் கொண்டு பார்த்திருக்க வேண்டியதுதானா?

வன்னியில் அப்பாவி மக்கள் பல்லாயிரக் கணக்கில் கொன்றொழிக்கப்பட்ட விடயத்துக்கே நீதி செய்யும் ஏற்பாட்டைச் செய்யஇயலாத கையாலாகாத்தனத்தில் இருக்கும் நீங்கள், இலங்கைத் தீவில் அடிமைப்படுத்தப்பட்டு, ஒடுக்கப்பட்டு, அடக்கப்பட்டிருக்கும்ஈழத் தமிழர்களுக்கு நீதியான தீர் வைப் பெற்றுக்கொடுப்பதில் மட்டும் என்ன செய்துவிட முடியும்? ஒரு கணம் சிந்தித்துப்பாருங்கள்!

ஈழத் தமிழர்களில் ஒரு சாரார் தமது இனத்தின் நியாய மான உரிமைகளைப் பெற்றெடுப்பதற்கு வேறு வழியின்றி ஆயுத வழிப்போராட்டத்தில் ஈடுபட்டபோது அதைப் பயங்கர வாதமாக முத்திரை குத்தி, தடை செய்து, அவர்களின் வலிமையைநலிவுபடுத்தி, அவர்களை இலங்கை அரசுத் தரப்பு முற் றாக அழித்தொழிக்க பக்கபலமாகித் துணையும் போனீர்கள்.

சரி. அது முடிந்துவிட்டது என்று கொள்வோம். கொத்துக் கொத்தாக அப்பாவி ஈழத் தமிழர்கள் கொன்றொழிக்கப்பட்ட அராஜகம்குறித்து நீதி விசாரணை நடத்தும் உங்களின் முயற் சியும் தோற்றுப்போய்விட்டது. அதையும் விட்டுவிடு வோம்.

"வெறுங்கையோடு இலங்கை புகுந்த இராவணேஸ் வரன்" போன்று பற்றுக் கோடின்றி ஈழத் தமிழினம் இன்று நிற்கின்றது.நீங்கள் விரும்பியபடி, தனது உரிமைப் போராட் டத்தை முன்னெடுக்க முடியாத நிலைக்கு ஈழத் தமிழர்களின் முதுகெலும்புமுறிக்கப்பட்டு விட்டது. இனி, ஈழத் தமிழர் களுக்கு நியாயம் கிடைக்க என்ன செய்யப் போகின் றீர்கள்?
அவர்கள் மத்தியில் ஆயுத வலிமையோடு இருந்த "பயங்கர வாதிகளை" அழிப்பதற்குத் துணை போவதுடன் எமது கடமைமுடிந்து விட்டது என நீங்கள் கைவிரிக்கப் போகின் றீர்களா? வன்னி யுத்தக் கொடூரங்கள் தொடர்பாக நீதி விசா ரணை நடத்தச் செய்ய நீங்கள் எடுத்த முயற்சி தோற்றுப் போன தும் அந்தவிடயத்தை அத்துடன் கைவிட்டமை போல, எங்கள் வேலை முடிந்தது என்று ஓய்ந்து போகப் போகின்றீர்களா?

அல்லது, தங்களது உரிமைக்கான கௌரவ வாழ்வுக்கான நீதி, நியாயமான அபிலாஷைகளுக்காகப் போராடும் ஈழத்தமிழர்களுக்காக பலமிழந்து, அடிமை வாழ்வே நிதர்சனம் என்று அல்லாடும் ஓரினத்துக்காக ஆக்கபூர்வமாக ஏதாவது செய்யப்

போகின்றீர்களா?
மேற்குலகே உன் திட்டம் என்ன?

Thursday, May 28, 2009

முகாபே வழியில் மஹிந்த ராஜபக்ஷ?

ஜெயமுரசுகொட்டும் இலங்கை அரசுஇந்த யுத்தத் தில் இறுதி வெற்றி பெற்றுவிட்டதாகக் கூறுவது எவ்வளவு தூரம் உண்மை என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். காலம்தான் அதற்குச் சரியான பதில் கூறும்.

ஆனால் பொருளாதார யுத்தத்தில் அது தோற்றுத் தடுமாறும் நிலையில்தான் உள்ளது. உள்நாட்டு யுத்தம் தென்னிலங் கையின் அடிக்கோடி வரை தாக்கத்தை ஏற்படுத்தியதோ என் னவோ தெரியவில்லை. ஆனால் பொருளாதார யுத்தத்தின் சீரழிவு, ஒவ்வொரு வீட்டினதும் சமையலறை வரை வியா பித்து "குசினிச் சண்டை"யாக விரிவாக்கம் பெற்று நிற்பது கண்கூடு.

யுத்தத்துக்காக, நாட்டின் மூல வளங்களை வருமானத்தை கண்மண் தெரியாமல் கொட்டிக் கொடுத்ததன் விளைவு, இன்று சர்வதேச நாணய நிதியத்திடம் பிச்øசப் பாத்திரத் துடன் கையேந்திக் காவல் இருக்கும் நிலைமையை ஏற் படுத்தி நிற்கின்றது. நாட்டின் நிதிமூலவளச் சேமிப்பு முற் றாகக் கரைந்துவிட்டதால் அன்றாட நிலைமையைச் சமா ளிக்கவேமத்திய வங்கி அல்லாடுவதாகத் தகவல்.

இந்தச் சீத்துவத்தில், "யுத்தத்தில் வெற்றி கண்டாயிற்று", "யுத்தம் முடிவுற்று விட்டது", "இலக்குப் பூர்த்தி" என்றெல் லாம் மிக ஆரவாரமாக அரசுத் தலைமை அறிவித்த பின் னரும் கூட இராணுவச் செலவினத்தைக் குறைக்கும் எண் ணம் படைத் தலைமைக்கு இல்லை என்பது இப்போது வெளிப்படையாக அறிவிக்கப்பட்டிருக்கின்றது.

இலங்கை இராணுவத்தில் இப்போது இரண்டு லட்சம் பேர் இருக்கின்றார்கள் என்று கூறப்படுகின்றது. புலிகள் அமைப்பை முற்றாக நிர்மூலமாக்குவதற்கு இன்னும் ஒரு லட்சம் துருப்பினர் தேவைப்படுகின்றனர் என்று இராணுவத் தளபதியே பகிரங்கமாக அறிவித்திருக்கின்றார். அதா வது, போர் வெற்றியில் முடிவடைந்து விட்டது என அறிவிக்கப்பட்ட பின்னரும் மிச்சம் மீதி இருக்கும் புலிகள் அமைப்பை அழிப்பதற்கு இராணுவத்தின் பலத்தை மேலும் மூன்றில் ஒரு பங்கினால் அதிகரிக்க வேண்டி இருக்குமாம்.
இதற்காக விரைவில் ஆள்சேர்ப்பு ஆரம்பமாகவுள்ளது என்கிறார் இராணுவத் தளபதி.
வடக்கு, கிழக்கில் புதிய இராணுவத் தளங்கள் ஸ்தாபிக்கப்படவிருக்கின்றன,மேலும் ஆயுதங்கள் வாங்கிக் குவிக் கப்படவிருக்கின்றன என்றெல்லாம் கூட படைத்தரப்பில் இருந்து செய்திகள் கசிய விடப்படுகின்றன.

பொருளாதாரம் சீர்கெட்டு, நாடு திண்டாடும் நிலையில் இராணுவத் தளபதியின் இந்த அறிவிப்பும், படையை இவ் வளவு தூரம் விரிவாக்கம் செய்யும் படைத்தரப்பின் பல் வேறு எத்தனங்களும் இயல்பாகவேபல்வேறு சந்தேகங் களை எழுப்பச் செய்கின்றன.
விடுதலைப் புலிகளின் முதுகை முறித்து, அவர்களின் தலைமையை சின்னாபின்னமாக்கி, அழித்தொழித்து விட்ட தாகப் படைத்தரப்பு வெளிப்படையாகப் பிரகடனப்படுத்தி, பெருமித அறிவிப்புகளை வெளியிட்ட பின்னரும் புலிகளின் வலுவான தலைமை இன்னும் தப்பியிருக்கலாம், தலை மறைவாகியிருக்கலாம், தக்க சமயத்தில் மீண்டும் தலை தூக்கலாம் என்றெல்லாம் பல்வேறு மட்டங்களில் பரவலா கப் பேச்சடிபடாமல் இல்லை.

புலிகளை முற்றாக நிர்மூலமாக்க இன்னும் ஒரு லட்சம் இராணுவத்தினர் தேவை என்று கூறி, அதற்கான ஆள்திரட் டலை முழு யுத்த உஷார் நிலையில் மேற்கொள்வது போன்ற பின்னணியில் படைத்தரப்பு இப்போதும் முன் னெடுக்க முயல் வது, புலிகளின் எஞ்சிய தலைமை தொடர் பாகப் பல்வேறு மட் டங்களில் அடிபடும் மேற்படி ஊகப் பேச்சுகளுக்கு வலு வூட்டும் அம்சமாக அமைந்திருப்பது கவனிக்கத்தக்கது.

அதுவும் நாட்டின் பொருளாதாரம் "டயர் காற்றுப் போய் றிம்மில் ஓடுவது போன்ற நிலையை" எட்டிய பின்னரும், இராணுவத் தயாரிப்பு ஆயத்தங்களுக்கு மேலும் கட்டு மட் டில்லாத தொகையைத் தொடர்ந்து கொட்டிக் கொடுப்பதற்கு வழி செய்யும் விதத்தில் நிதியை வீணாக்க முயல்வது, புலிகளின் எஞ்சிய தலைமை சம்பந்தமாக அரசுத் தலைமைக்கு உள்ள அச்சத்தை வெளிப்படுத்துவதாகவேஅமைகின்றது.

அத்தோடு, தென்னிலங்கை அரசினால் போர் முடிவுக்கு வந்துவிட்டதாக அறிவிக்கப்பட்ட இந்தக் கட்டத்தோடு, இலங்கைத் தீவை ஜனநாயக வழிக்கு மீளக் கொண்டுவரா மல் தொடர்ந்தும் இராணுவ ஆதிக்கக் கட்டமைப்புப் பொறிக்குள் அதைச் சிக்கவைக்கும் முயற்சியாகவேஇந்த இராணுவ மயப்படுத்தலை அடிப்படையாகக் கொண்ட மேலாண்மை சிந்தனைப் போக்கைக் கருதலாம் அல்லவா?

இனவழிப்பு, இனக்குரோதம் போன்ற பேரழிவுக் கொடூரங்களை ஒட்டி உள்நாட்டுக் கலகங்கள், கலவரங் கள், போர்கள் போன்றவற்றை எதிர்கொண்டு மீண்ட இரு ஆபிரிக்க நாடுகளை முன்னுதாரணமாகச் சுட்டிக்காட்டி யுள்ள இலங்கையின் பிரதான எதிர்க்கட்சியான ஐ.தே.க., இந்த இரு நாடுகளில் எதன் வழியை இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இனி இங்கு கைக்கொண்டு பின்பற்றப் போகின்றார் என்றும் கெள்வி எழுப்பியிருக்கின்றது.

அந்த நாடுகளுள் ஒன்று தென்னாபிரிக்கா. உள்நாட்டுக் கலகங்கள், கலவரங்களின் பின் முடிவில் அங்கு ஆட்சிப் பொறுப்பை ஏற்ற நெல்ஸன் மண்டேலா, சகல தரப்பு மக்களை யும் ஒன்றிணைத்து, நல்லிணக்கத்தை ஏற்படுத்தி, இன செளஜன்யத்தையும், பரஸ்பர புரிந்துணர்வையும் உரு வாக்கி, நல்லாட்சியை நிலைநிறுத்தினார். அதன் பலனை அமைதியையும், சமாதானத்தையும் அந்த நாடு இன்று அனுபவிக்கின்றது.

ஆனால் மறுபுறம் முன்னாள் றொடிஷியாவில் இன் றைய ஸிம்பாப்வேயில் நிலைமை தலைகீழ். வெள்ளை யர்களின் ஆதிக்க ஆட்சியின் முடிவோடு கிட்டிய நல்லிணக் கத்துக்கான வரலாற்று வாய்ப்பைக் கோட்டைவிட்ட அந் நாட்டுத் தலைவர் றொபேர்ட் முகாபே, இன்று இராணுவத் தின் வல்லாதிக்கக் கொடுக்குப் பிடியை வசமாகப் பயன் படுத்திக்கொண்டு, சர்வாதிகார ஆட்சி நடத்துகின்றார். அதன் விளைவாக ஊழல், பொருளாதார வீழ்ச்சி, சட்டம் ஒழுங்கு சீர்குலைவு, தாராள வன்முறை, அராஜகத்தின் ஆட்சி ஆகியவை நிலைநிறுத்தப்பட்ட நிலையில், அமைதி இழந்து வறுமை மற்றும் பட்டினியின் சாகரத்துக்குள் மூழ்கி அத்தேசம் இன்று அவலப்படுகின்றது.

தொடர்ந்தும் படைகளை விஸ்தரித்து இராணுவ மயப் படுத்தும் சிந்தனையை முன்னெடுக்கும் இலங்கைத் தீவின் தற்போதைய ஆட்சிப்பீடம், நல்லிணக்கத்துடன் கூடிய புரிந்துணர்வும், பரஸ்பரம் அன்னியோன்னியமும் மிக்க ஓர் இன செளஜன்ய நிலையை இத்தீவில் ஏற்படுத்தும் இலக்கில் செயற்படுவதாகத் தோன்றவில்லை.

இனப்போரின் உச்சக்கட்டம் முடிவெய்திய நிலையில் இந்த அரசுத் தலைமை முன்னெடுக்கும் நிகழ்ச்சித்திட்டம், றொபேர்ட் முகாபே வழியில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பயணிக்க முனைகிறாரா என்ற சந்தேகத்தையே எழுப்புகிறது.

நன்றி
- உதயன் -

Monday, May 25, 2009

தமிழக தலைமைகளின் போக்கு

கொடூரப் போரின் உச்ச வேதனைகளால் வெந்து துடித்துக் கொண்டிருக்கும் ஈழத் தமிழினத்துக்கு அய லில் "தொப்புள் கொடி" உறவுகளின் அரசியல் போக்குக் கண்டு அழுவதா, சிரிப்பதா என்ற இரண்டுங்கெட்டான் நிலை.

யுத்தத்தில் சீரழிந்த ஈழத் தமிழர்களுக்காக எதுவும் செய்து விடாமல்"காட்டிக் கொடுத்த" தமிழகத் தலை வர்கள், இன்று சொற்பகாலத்திற்குள்ளேயேதங்க ளுக்குக் கூடத் தாங்களே எதுவும் செய்ய இயலாதவர் களாக புதுடில்லியிடம் கைகட்டி நிற்கும் பரிதாபம் கண்டு பச்சாதாபப்படுவதைத் தவிர எமக்கு வேறு மார்க் கமில்லை.

நேற்று முன்தினம் வரையான ஐந்து ஆண்டு கால இந்திய மத்திய அரசின் ஆட்சியில் முக்கிய பங்கு வகித்தது தமிழகத்தின் ஆளும் திராவிட முன்னேற்றக் கழகம்.

ஆனால் இந்த ஐந்து ஆண்டு காலத்தில்தான் ஈழத் தமிழர்கள் மிகமோசமாக அடக்கி, ஒடுக்கப்பட்டு நசுக்கப்படுவதற்கு இந்திய மத்திய அரசு மறைமுகமா கப் பெருமளவில் துணைபோனது என்பது உலகறிந்த இரகசியம். அதைத் தடுக்கத் தவறி தடுக்க இயலா மல் அப்பெருங்குற்றத்தில் பங்காளியானது தி.மு. கவும் அதன் தலைமையும் என்பது ஈழத்தமிழரின் மனத் தாங்கல்.

அப்படித் துணை போயும் கூட தி.மு.க. தனக்குத் தன்னும் பயன்தரக் கூடிய உருப்படியான விடயங் கள் எதையாவது சாதித்ததா என்று பார்த்தால் தமிழகத் தில் தனது ஆட்சியைத் தக்க வைத்ததைத் தவிர அது வேறு எதையும் சாதிக்கவில்லை என்பதுதான் உண்மை.

யுத்தத்தில் சிக்குண்டு அவலப்பட்ட ஈழத்தமிழர் களைப் பாதுகாக்க மறுத்து, அவர்களுக்கு எதிராக சதி முயற்சியோடு செயற்பட்ட புதுடில்லி அரசுத் தலை மைக்குக் கண்ணை மூடிக் கொண்டு முண்டு கொடுத்த பெருந்தவறின் பெறுபேற்றை அனுபவிக்கும் வாய்ப்பு தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதிக்கும் அவரது தி.மு.கவுக்கும் விரைவிலேயேகிட்டியிருக்கின்றது.

ஈழத் தமிழர்களின் பேரிழப்புக்களை முன்னிறுத்தி, இந்திய மத்திய அரசை அவ்விடயத்தில் ஒழுங்காகச் செயற்பட வைக்கத் தவறிய தி.மு.க. தலைமை, அவ் விடயத்தைப் புறந்தள்ளி விட்டு, தனது அரசியல் ஆதா யத்துக்காக, இந்தியாவின் மத்திய காங்கிரஸ் அரசைத் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடியது. தட்டிக் கேட்க வேண்டிய விடயத்தில் அப்படிக் கேட்கத் தவ றிய தி.மு.கவை, இப்போது தனது தேர்தல் வெற்றி உறு தியானதும் தூக்கி மூலையில் கடாசி விட்டது காங்கி ரஸ் கட்சி.

இந்திய மத்திய அரசின் அமைச்சுகள் ஒதுக்கீட்டில் தான் போடும் பிச்சையைப் பவ்வியமாகப் பெற்றுக் கொண்டு அடங்கிப் போகுமாறு கலைஞருக்கு புது டில்லியில் நல்ல சூடு கொடுத்து அனுப்பியிருக்கின்றார் சோனியா காந்தி.

இந்தக் கசப்பு மருந்தை மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் தவிக்கிறார் கலைஞர். வால் பிடிக்கும் உதிரிக் கட்சிகளின் உதவியுடன் தனது மத் திய அரசு உறுதியாக இருப்பதாக காங்கிரஸ் தலைவி எண்ணுவதால் தி.மு.கவை உதாசீனப்படுத்தி உதைத் துத்தள்ளி விட்டார் அவர்.

ஆனால் கலைஞராலோ எது வும் செய்ய முடியாத நிலை. சீறிக் கொண்டு காங்கி ரஸ் உறவைத் துண்டித்து விட்டால் தமிழகத்தில் காங் கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் 35 பேரின் தயவில் ஆளும் தமது சிறுபான்மை ("மைனாரிட்டி") அரசு கவிழ்ந்து விடும் ஆபத்து. அதனால் இந்திய மத்திய அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு என்ற"விழுந் தும் மீசையில் மண்படவில்லையே!" என்பது போன்ற நிலைமையை அனுசரிக்க வேண்டிய விரக்தி நிலை கலைஞர் தரப்புக்கு.

ஈழத்தமிழர்களைக் கைவிட்டு, காங்கிரசுக்கு முண்டு கொடுத்த பாவத்திற்கு நல்ல படிப்பினைகள் இன்னும் பல அவருக்குக் காத்திருக்கின்றன.

இதேசமயம், ஈழத் தமிழர், பிரச்சினையை முன்னி றுத்தி, தமிழக மக்களின் வாக்குகளைச் சுருட்ட முயன்ற "புரட்சித் தலைவி" ஜெயலலிதா வோ அதற்காகக் கடைசி நேரத்தில்"தமிழீழமே ஈழத் தமிழர்களுக்கு ஒரேதீர்வு. அதைப் பெற்றுக் கொடுத்தே தீரு வேன்!" என்று சூளுரைத்து"பல்டி" அடித்தார்.

தேர்தல் முடிந்ததும் இப்போது ஈழம் அமைக்கும் தனது உறுதிப்பாட்டைக் குப்பைக்

கூடைக்குள் தூக்கி வீசிவிட்டு ஈழத்தமிழர்களின் மறுவாழ்வு, அவர்களுக் கான கட்டுமானப் பணி, அபிவிருத்தி என்றெல்லாம் பேசுகின்றார் அவர்.

தமிழக இந்திய அரசியல் விடயங்களில் மட்டுமல்ல, ஈழத் தமிழர் விவகாரத்தை ஒட்டிய நிலைப்பாட்டிலும் கூடத் தாங்கள் ஒரேகுட்டையில் ஊறிய மட்டைகள் தாம் என்பதை தமிழகத்தின் பிரபல அரசியல் தலை வர்கள் பலரும் நிரூபித்து நிற்கிறார்கள் என்பதே யதார்த் தமாகும்.

-நன்றி-

உதயன்

Sunday, May 24, 2009

அரசியல் தீர்வு குறித்த வெளியுலக எதிர்பார்ப்புகள்

மூன்று தசாப்தகால உள்நாட்டுப் போர் முடிவடைந்துவிட்டதாக கடந்த வாரம் பிரகடனம் செய்திருக்கும் இலங்கை அரசாங்கம் தமிழ் மக்களின் நியாயபூர்வமான அரசியல் அபிலாசைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய அரசியல் தீர்வொன்றைக் காண்பதற்கு எத்தகைய உருப்படியான செயற்பாடுகளை முன்னெடுக்கும் என்பதே சர்வதேச சமூகத்தின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. போர் வெற்றிக்குப் பிறகு இலங்கையின் சமூகங்கள் மத்தியில் மீண்டும் நல்லிணக்கத்தை ஏற்படுத்தி நிரந்தரமான அரசியல் தீர்வைக் காண வேண்டுமென்று உலக நாடுகள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துக் கொண்டிருப்பதையும் காணக்கூடியதாக இருக்கிறது. மோதல்கள் இடம்பெற்ற பகுதிகளில் இருந்து இடம்பெயர்ந்து அகதிமுகாம்களில் தங்கியிருக்கும் 3 இலட்சத்துக்கும் அதிகமான தமிழ் மக்களுக்கான நிவாரண மற்றும் புனர்வாழ்வு நடவடிக்கைகளை மேற் கொள்வதே உடனடித் தேவையாக இருக்கின்றபோதிலும் கூட, போருக்குக் காரணமாயமைந்த இனநெருக்கடிக்கு அரசியல் தீர்வைக் காணுகின்ற விடயத்தில் காலத்தை இழுத்தடிக்கக்கூடிய எந்தவொரு போக்கையும் சர்வதேச சமூகம் விரும்பப் போவதில்லை என்பதை உணரக்கூடியதாக இருக்கிறது.

போரின் முடிவை உறுதி செய்யும் தகவலை இந்திய வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜிக்கு தொலைபேசி மூலம் ஜனாதிபதி ராஜபக்ஷ கடந்த வாரம் தெரிவித்த உடனடியாக இந்திய வெளியுறவு அமைச்சு விடுத்த அறிக்கையிலும் இலங்கையில் சகல சமூகங்களும் கௌரவமாகவும் சுதந்திரமாகவும் வாழ்வதற்கு ஏற்றவகையில் பயனுறுதியுடைய அதிகாரப் பரவலாக்கலைச் செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டிருந்தது. கடந்த வியாழக்கிழமை கொழும்புக்கு விஜயம் செய்திருந்த இந்திய தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணனும் வெளியுறவுச் செயலாளர் சிவ் சங்கர் மேனனும் ஜனாதிபதி ராஜபக்ஷடன் நடத்திய பேச்சுவார்த்தைகளின் போது இனநெருக்கடிக்கு நிரந்தர அரசியல் தீர்வைக் காண்பதற்கான தேவை வலியுறுத்தப்பட்டது. இவர்கள் இருவரினதும் கொழும்பு விஜயத்தின் இறுதியில் வெளியிடப்பட்ட கூட்டறிக்கையிலும் அரசியல் தீர்வு பற்றிய விடயம் முக்கியமானதாக இடம்பெற்றிருக்கிறது.

ஜனாதிபதி ராஜபக்ஷவுடனான சந்திப்புக்குப் பிறகு கொழும்பில் செய்தியாளர்களுடன் பேசிய மேனன் இலங்கையில் முதற்தடவையாக அதிகாரப் பரவலாக்கலுக்கு வழிவகுத்த 1987 ஜூலை இந்திய இலங்கை சமாதான உடன்படிக்கையின் ஏற்பாடுகளுக்கு அப்பாலும் செல்வதற்கு இலங்கை தயாராயிருக்கிறது போலத் தெரிகிறது என்று கூறியிருந்தார். தங்களது பேச்சு வார்த்தைகள் சமாதான உடன்படிக்கை வரையறைக்குள் தான் அமைந்திருந்தன என்று தெரிவித்த மேனன் ஜனாதிபதி ராஜபக்ஷ இலங்கை அரசியலமைப்புக்கான 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கு மாத்திரமல்ல, அதற்கு அப்பால் அதிகாரங்களைப் பரவலாக்கம் செய்யவும் தயாராகியிருக்கிறார் என்று குறிப்பிட்டிருந்தார். கடந்த செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தில் உரையாற்றிய ஜனாதிபதி ராஜபக்ஷ இந்திய இலங்கை சமாதான உடன்படிக்கை பற்றி எதுவும் குறிப்பிடவில்லையென்று நாராயணனிடம் செய்தியாளர்கள் சுட்டிக்காட்டியபோது அதற்குப் பதிலளித்த அவர் இலங்கை ஜனாதிபதி மாகாணங்களுக்குக் கூடுதல் அதிகாரங்களை பரவலாக்கம் செய்யும் விடயத்தில் சமாதான உடன்படிக்கையையும் அரசியலமைப்புக்கான 13 ஆவது திருத்தத்தையும் ஏற்றுக் கொள்கிறார் என்று கூறியிருந்தார்.

அரசியலமைப்புக்கான 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவது மாத்திரமல்ல, அதற்கு அப்பாலும் கூடச் செல்வதற்கு ஜனாதிபதி ராஜபக்ஷ தயாராயிருப்பதாக இவர்கள் இருவரும் கூறுகின்ற அதேவேளை, ஜனாதிபதியோ கடந்த வாரம் பாராளுமன்றத்தில் ஆற்றிய உரையில் வெளிநாட்டு வட்டாரங்களினால் சிபாரிசு செய்யப்படும் தீர்வு யோசனைகளை பரீட்சித்துப் பார்ப்பதற்கு தங்களுக்கு நேரமில்லை என்றும் உள்நாட்டு நிலைவரங்களுக்கு இசைவாக வகுக்கப்படக்கூடிய ஒரு அரசியல் தீர்வையே நடைமுறைப்படுத்துவதற்கு விரும்புவதாகவும் தெரிவித்திருக்கிறார். முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியும் முன்னாள் இலங்கை ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தனவும் 22 வருடங்களுக்கு முன்னர் கைச்சாத்திட்ட சமாதான உடன்படிக்கை குறித்து ஜனாதிபதி ராஜபக்ஷவுக்கு அக்கறை பிறந்தது கடந்த வருடம் ஜனவரியில் தான். அதற்கு முன்னர் அந்த உடன்படிக்கை குறித்து சாதகமாக எதையுமே அவர் கூறியதாக நாம் அறியவில்லை. 2008 ஜனவரி நடுப்பகுதியில் இந்தியாவின் என்.டி.ரி.வி. தொலைக்காட்சிச் சேவையின் "வோக் த ரோக்' நிகழ்ச்சியில் இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் சேகர் குப்தாவுக்கு பேட்டியொன்றை அளித்த ஜனாதிபதி ராஜபக்ஷ இந்தியஇலங்கை சமாதான உடன்படிக்கையில் விதந்துரைக்கப்பட்டிருக்கும் அதிகாரப் பரவலாக்கல் திட்டம் இன நெருக்கடிக்குச் சிறந்த தீர்வாக அமைந்திருக்கிறது என்று குறிப்பிட்டிருந்தார்.

இன நெருக்கடிக்கான அரசியல் தீர்வு யோசனைகள் குறித்து ஆராய்ந்துவரும் விஞ்ஞான, தொழில்நுட்ப அமைச்சர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண தலைமையிலான சர்வகட்சி மகாநாட்டு பிரதிநிதித்துவக் குழு 2008 ஜனவரி பிற்பகுதியில் ஜனாதிபதியிடம் கையளித்த இடைக்கால அறிக்கையில் அரசியலமைப்புக்கான 13 ஆவது திருத்தத்தை அரசாங்கம் முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டுமென்ற விதப்புரையைச் செய்த போது தான் சமாதான உடன்படிக்கையிலும் அந்த திருத்தச் சட்டத்திலும் ஜனாதிபதிக்குப் பிறந்த திடீர் அக்கறைக்கான காரணத்தைப் புரிந்து கொள்ளக்கூடியதாக இருந்தது. சர்வகட்சி மகாநாட்டுப் பிரதிநிதித்துவக் குழு இந்த விதப்புரையைச் செய்து கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்கள் கடந்துவிட்டன. ஆனால், அரசியலமைப்புக்கான 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதை நோக்கிய திசையில் எந்த நடவடிக்கையையாவது அரசாங்கம் எடுத்திருக்கிறதா? பேராசிரியர் விதாரண சமர்ப்பித்த இடைக்கால அறிக்கையில் விதந்துரைக்கப்பட்டதன் பிரகாரம் கிழக்கு மாகாண சபைக்கான தேர்தல் நடத்தப்பட்டு இப்போது ஒருவருடம் கடந்துவிட்டது. அந்த மாகாணத்தில் தானும் 13 ஆவது திருத்தத்தின் ஏற்பாடுகளில் ஏதாவது ஒன்றை நடைமுறைப்படுத்துவதற்கான முயற்சி எடுக்கப்பட்டதா?

முன்னாள் ஜனாதிபதி திருமதி குமாரதுங்க மூன்று மாதங்களுக்கு முன்னர் புதுடில்லிக்கு சென்றிருந்த போது இந்திய இலங்கை சமாதான உடன்படிக்கை தொடர்பிலான கொழும்பு அரசாங்கங்களின் நிலைப்பாடுகள் குறித்து தெரிவித்திருந்த கருத்துகளை இச்சந்தர்ப்பத்தில் நினைவுபடுத்துவது மிகவும் பொருத்தமானதாக இருக்கும். "இலங்கையில் கடந்த இரு தசாப்தங்களாக அதிகாரத்தில் இருந்த சகல அரசாங்கங்களுமே இந்திய இலங்கை சமாதான உடன்படிக்கையின் ஏற்பாடுகள் நடைமுறைப்படுத்தப்படாதிருப்பதை உறுதி செய்து கொண்டன. சமாதான உடன்படிக்கையைச் சகல அரசாங்கங்களுமே சூழ்ச்சித்தனமாகச் சீர்குலைத்திருக்கின்றன. அரசியலமைப்புக்கான 13 ஆவது திருத்தம் நடைமுறைப்படுத்தாதிருப்பதை சகல அரசாங்கங்களும் உறுதிப்படுத்திக் கொண்டன. என்னாலும் கூட இதை நடைமுறைப்படுத்தக் கூடியதாக இருக்கவில்லை என்று திருமதி குமாரதுங்க கூறியிருந்தார். அரசியல் தீர்வுக்கான முயற்சிகளைப் பொறுத்தவரை தமிழ் மக்கள் பெற்றுக்கொண்ட வரலாற்றுப் படிப்பினைகளை மறுதலையாக்கக் கூடியதாக இலங்கையில் அரசியல் அதிசயம் நடந்துவிடமுடியுமென்று சர்வதேச சமூகம் எதிர்பார்க்கிறதா? இந்திய இலங்கை சமாதான உடன்படிக்கை தொடர்பிலான கொழும்பு அரசாங்கங்களின் இதுவரையான அணுகுமுறைகளுக்கு வேறுபட்டமுறையில் ஜனாதிபதி ராஜபக்ஷ அரசாங்கம் நடந்துகொள்ளுமென்று தமிழ் மக்கள் நம்பமுடியுமா?

நன்றி
- தினக்குரல் -

Saturday, May 23, 2009

மனிதநேய உதவிகள் கிட்டுவதற்கு ஐ.நா. செயலர் வழி செய்வாரா?

வெற்றிக்களிப்பில் திளைத்துக் கொண்டாட்ட மகிழ்ச்சியில் மூழ்கிக் கிடக்கும் கொழும்புக்குப் பட்ட வர்த்தனமாக போட்டு உடைப்பதுபோல ஒரு விட யத்தை எடுத்துக் கூறியிருக்கின்றது வாஷிங்டன்.

அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் ஹிலாரி கிளின்ரன் நேற்று முன்தினம் தொலைபேசி மூலம் தாமே நேர டியாக இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் தொடர்புகொண்டு பேசி இந்த விடயத்தை எடுத்துரைத் திருக்கின்றார்.

தமிழ் ஈழ விடுதலைப் புலிகளின் தலைமையைக் கூண்டோடு அழித்து, மூன்று தசாப்த கால யுத்தத்தை இலங் கைத் தீவில் முடிவுக்குக் கொண்டுவந்து விட்டதாக இலங்கை வெற்றிக்களிப்பில் இருக்கும் இச்சமயத்தில் தான் அமெரிக்கா இந்தக் கருத்தை ஆணித்தரமாக எடுத்துரைத் திருக்கின்றது.

யுத்தம் முடிவுக்கு வந்துவிட்டதாக அறிவிக்கப்படும் இச்சமயத்தை ஒட்டி இலங்கை அரசு எப்படி நடந்து கொள்கின்றது, எப்படிச் செயற்படுகின்றது என்பதில்தான் இலங்கையின் எதிர்கால அமைதியும், சமாதானமும் தங்கி நிற்கின்றன எனச் சுட்டிக்காட்டியிருக்கின்றது அமெரிக்கா.

யுத்தப் பேரவலக் கொடூரங்களில் சிக்குண்டு மிக மோசமாகப் பாதிக்கப்பட்டு அவதியுறும் பல்லாயிரம் தமிழர்களுக்கும் அவசரமாகவும் அவசிய மாகவும் தேவைப்படுவது மனிதநேய அரவணைப்பு, மருத்துவ உதவி, ஆறுதல் சூழல், கௌரவமான வாழ்க்கை, உற்றார் மற்றும் உறவுகள் போன்றோரின் நிலைமை பற்றிய தகவல் என்பனவாகும். முட்கம்பி வேலிகளுக்குப் பின்னால் வெயில் தகிக்கும் கூடாரங்களுக்குள் மந்தைகள் போல் அடைபட்டு,காயங்களுடனும், நோய்களுடனும், பட்டினியுடனும், சின்னாபின்னமாகிப் பிரிந்து போன உறவுகள் மற்றும் உடைமைகள் பற்றிய வாட் டும் நினைவுகளுடனும் பேரவலப்படும் அவர்களுக்கு மிக விரைந்து தேவைப்படுவது உயிர் வாழ்க்கை மீதான பிடிப்பை ஏற்படுத்தும் பற்றுதல் பற்றிய எண்ணமும் ஆறுதலும்தான்.

இன ரீதியாக, சமுதாய ரீதியாக, சமூக ரீதியாக அடக்கப்பட்டு, ஒடுக்கப்பட்டு, அவமானப்படுத்தப்பட்டுள் ளோம் என்ற மனவேதனையில் இருந்து விரைந்து விடுபடும் வாய்ப்பும் சூழலும் அவர்களுக்கு வழங்கப்பட வேண்டும். ஆனால் அதனை அளிக்கும் தாராளம் ஆட் சிப் பீடத்துக்கு இருப்பதாகத் தெரியவில்லை.

"விடுதலைப் புலிகளை அழிப்பதற்கான இறுதிக் கட்ட யுத்தம்" என்ற பெயரில் கொழும்பு எடுத்த படை நடவடிக்கையின் போது பல்லாயிரக் கணக்கில் மக்கள் உயிரிழந்தார்கள்; படுகாயமடைந்தார்கள்; குற்றுயிரும் குறையுயிருமாக வீழ்ந்தார்கள்.

ஆனால் புலிகளுக்கு எதிரான அந்த யுத்தத்தில் இறுதி வெற்றி என்ற சாதனையைப் பொதுமக்களின் இரத்தம் சிந்தப்படாத வகையில் முன்னெடுத்து இராணுவத்தினர் பெரும் அதிசயத்தை நிகழ்த்தியிருக்கின்றார்கள் என்ப தாக கதை விடுகின்றது கொழும்பு அரசியல் தலைமை.

இந்தப் படை நடவடிக்கையில் மக்களுக்கு ஏற்பட்ட பேரழிவை ஒப்புக்கொள்ளாமல் கருத்து வெளியிடுவதன் மூலம் அரசுத் தலைமை தவறு இழைக்கின்றது என்பதை அரசில் உள்ள தமிழ் பேசும் அமைச்சர் ஒருவரே இந்திய நாளிதழ் ஒன்றுக்கு வழங்கிய பேட்டியில் ஒப்புக்கொண்டிருக்கின்றார் எனச் செய்திகள் வெளியாகின.

இவ்வாறு தமிழ்மக்கள் மீது இழைக்கப்பட்ட கொடூரத்தை மூடி மறைத்துக்கொண்டு தொடர்ந்தும் அவ்வாறு மூடிமறைக்கும் கபட எண்ணத்துடன், பாதிக்கப்பட்ட தமிழ் மக்களை சர்வதேசத் தரப்புகள் தொடர்பு கொண்டு உதவி வழங்குவதைத் தடை செய்யும் வகையில் அதிகாரத் தரப்பு செயற்படுகின்றமை ஆரோக்கியமான சூழலைத் தரப் போவதில்லை.
இலங்கை அரசுத் தலைமைக்கு அமெரிக்கா சுட்டிக்காட்டியிருக்கின்றமை போல, யுத்தம் முடிவுற்று விட்டதாக இலங்கை அரசு அறிவித்துள்ள இச்சமயத்தில், அது எடுக்கப்போகின்ற நடவடிக்கைகளும் செயற்பாடும் தான் இத்தீவின் எதிர்கால அமைதி குறித்தும் சமாதானம் பற்றியும் தீர்மானிக்கப் போகின்றன.

இலங்கைக்கு விஜயம் செய்யும் ஐ.நா. செயலாளர் பான் கீ மூன் இந்த விடயத்தில் அதி தீவிர கவனம் செலுத்த வேண்டியவராக இருக்கின்றார்.

உலக நாடுகளின் சர்வதேசத் தரப்பின் பொது மன்றமாகத் திகழ்வது ஐக்கிய நாடுகள் சபை. அதன் செயலாளர் நாயகம் என்ற வகையில் உலகின் எங்கோ ஒரு மூலையில் ஓர் இனத்துக்கு எதிராகக் கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும் இனவழிப்புக் கொடூரம் குறித்து தகுந்த நடவடிக்கைகளை விரைந்து எடுக்க வேண்டிய தலையாய பொறுப்பு அவருக்கே உண்டு. ஆனால் அப்பாவித் தமிழர்கள் மீது யுத்தக் கொடூரம் எரிமலையாக சூறாவளிப் புயலாக கட்டவிழ்த்து விடப்பட்டபோது, கடந்த வார இறுதி வரை, தனது விசேட தூதுவரை இலங் கைக்கு அனுப்புகிறேன், கண்டனம் தெரிவிக்கிறேன் என் றெல்லாம் வெறுமனே வாய்ப்பந்தல் அறிக்கைகளை வெளியிட்டமையைத் தவிர, அவர் பாதிப்புற்ற தமிழ் மக்களுக்கு ஆறுதலளிக்கும் விதத்திலோ, மீட்சி கிட்டும் வகையிலோ, பலன் தரும் போக்கிலோ கிஞ்சித்தும் எதுவுமே உதவ வில்லை, அதனை நாடிச் செயற்படவுமில்லை என்பது தான் வெளிப்படையான உண்மை.

யுத்தம் முடிவுற்று விட்டதாக அறிவிக்கப்பட்ட பின்னராவது சர்வதேசத்தின் மனிதநேய உதவிகள் அந்த மக்களுக்கு விரைந்து கிட்டுவதற்கான காத்திரமான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு கொழும்பு அரசை அவர் இணங்கச் செய்வாரா?
அதனை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்!

நன்றி
- உதயன் -

Thursday, May 21, 2009

கூட்டுமன அதிர்விற்குள் ஒரு இனம்: தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் போக்கு குறித்த ஒரு உளவியல் பதிவு

தமிழீழ விடுதலைப் போராட்டம் எந்த வித மறு பேச்சிற்கும் இடம் வைக்காமல் முடிவடைந்து விட்டது அல்லது முடிவுக்கு வந்து கொண்டிருக்கிறது அல்லது நீர்த்துப்போய் படிப்படியாக அந்த நிலையை அது எய்தும் என்று எதிர்வு கூறல்களாக அல்லாமல் அவை முடிவுகளாகவே முன்வைக்கப்பட்டுக் கொண்டிருக்கிற ஒரு சூழலுக்குள் ஒரு இனத்தின் நீண்ட நெடிய போராட்டம் வந்து சேர்ந்திருக்கிறது.

போராட்டத்திற்கு வெளியே இத்தகைய சொற்பதங்கள் புழக்கத்திற்கு வந்து நீண்ட நாட்களாகிவிட்டன. ஆனால் துரதிஸ்டவசமாக நாமும் இவற்றை தற்போது உச்சரிக்கத் தொடங்கியிருக்கிறோம். அதன்வழி அவற்றை நம்பவும் தொடங்கியிருக்கிறோம் அல்லது நம்பும்படி கட்டாயப்படுத்தபடுகிறோம். ஒரு தமிழ் உயிரியின் ஒவ்வொரு கணமும் இத்தகைய நிர்ப்பந்தத்திலேயே கழிந்து கொண்டிருக்கிறது.

உண்மையிலேயே தமிழீழ விடுதலைப்போராட்டம் முடிவுக்கு வந்து விட்டதா? இந்த சிக்கலான கேள்விக்குள் நாங்கள் இறங்க விரும்பவில்லை. ஏனெனில் அது எமது வேலை இல்லை. அத்தோடு நாம் தீர்க்கதரிசிகளோ ஆருடக்காரர்களோ கிடையாது. படைத்துறை ஆய்வாளர்களும் அரசியல் ஆய்வாளர்களும் பதில் தெரியாமல் "பேந்த பேந்த" முழித்துக்கொண்டிருக்கும் ஒரு விடயத்திற்குள் நுழைந்து எம்மைக் காயப்படுத்திக்கொள்ளவும் விரும்பவில்லை.

ஆனால் நாம் வேறு ஒரு கோணத்தில் இந்த வரலாற்றுக் காலகட்டத்தை ஆய்வு செய்ய முனைந்திருக்கிறோம். ஒரு வேளை மேற்கண்ட கேள்விக்கான பதிலை இந்த ஆய்வினூடாக நீங்கள் தரிசிக்கலாம். அதற்கு எந்த உத்தரவாதத்தையும் நாம் முன்கூட்டியே வழங்கவிரும்பவில்லை.

"தமிழீழ விடுதலைப் போராட்டம் முடிவுக்கு வந்து விட்டதா?" என்ற கேள்வியைத்தான் மையப்படுத்தி நாங்களும் ஆய்வு செய்யப்புகுந்துள்ளோம். இது என்ன முரண்பாடு என்று நீங்கள் முணுமுணுப்பது கேட்கிறது. இதில் எந்த முரண்பாடும் இல்லை. நாம் எல்லோரையும்போல் அந்தக் கேள்விக்குள்ளாக இறங்காமல் மேலும் கீழுமாக அதைச்சுற்றிப் பயணித்து அக் கேள்வியின் உருவாக்க நியாயங்கள் மீதும் எதன் அடிப்படையில் இது முன்மொழியப்படுகிறது என்பதனையும் ஒரு உளவியல் ஆய்வாக முன்வைக்க முனைந்துள்ளோம். இந்த ஆய்வு கூட எமக்கு முக்கியமனதல்ல. இதனூடாகக் கிடைத்திருக்கும் ஒரு உளவியல் வாசிப்பையே நாம் பிரதானப்படுத்த விரும்புகிறோம்.

இப்பரந்த பூவுலகில் ஒவ்வொரு மனித உயிரியும் தாம் எதிர்கொள்ளும் வாழ்வியல் புறநிலைக்கேற்ப பல கருத்துருவாக்கங்களினால் கட்டமைக்கப்படுகின்றன. இதன்வழி இப்பூமியில் கட்டவிழும் ஒரு நிகழ்விற்கெதிராக அல்லது அந் நிகழ்வு குறித்து ஒவ்வொரு உயிரியும் வேறுபட்ட பார்வையை அல்லது எதிர்வினையைப் பதிவு செய்கின்றன. இதை சற்று விரிவு படுத்தினால் இனம், மதம், மொழி, கொள்கை, கோட்பாடுகள் சார்ந்து குழுமங்களாகவும் ஒருமித்த - வேறுபட்ட கருத்துருவாக்கங்களும் உருவாகின்றன - மாற்றம் பெறுகின்றன.

பெண்ணியம், மானுடவியல், தத்துவம், சமூகவியல் சார்ந்த உளவியலை கல்விப்பின்புலமாகக் கொண்ட எமக்கும் உலக சமூக நிகழ்வுகள் குறித்த ஒரு வாசிப்பு இருக்கிறது. இதன் அடிப்படையில் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் முடிவு குறித்த பல பிதற்றல்களையும், உளறல்களையும் அதன்வழி தொடர் பதற்றத்திற்குள்ளாகியிருக்கும் ஒரு இனத்தின் அரற்றல்களையும் அங்கலாய்ப்புக்களையும் கவனத்தில் கொண்டு நீண்ட உரையாடல்களை நிகழ்த்தி விவாதித்து தமிழீழ விடுதலைப்போராட்டத்தின் போக்கு குறித்த ஒரு கருத்துருவாக்கத்தினைப் பெற்றிருக்கிறோம்.

இக் கருத்துருவாக்கத்துடன் யாரும் முரண்படலாம். நாம் அதை மறுக்கவில்லை. ஆனால் இதன் பெரும்பான்மை சாத்தியங்களை யாரும் மறுதலிக்க முடியாது. நாம் இந்த ஆய்வை இன்னும் முழுமையாக நிறைவு செய்யவில்லை. இதை அனைத்துலகத்தின் பார்வைக்கு கொண்டு செல்வதற்கு முன்பாக தமிழ்ச்சூழலுக்கு உடனடியாகக் கொண்டு வருவதன் நோக்கம் சில மணித்தியாலங்களை போரின் இறுதி வெற்றிக்கான காலக்கெடுவாக அறிவித்துவிட்டு மிக மோசமான இனச்சுத்திகரிப்பில் இறங்கியிருக்கும் ஸ்ரீலங்கா அரசின் கபடத்தனத்தை நாம் புரிந்து கொள்வதுடன் எம்மிடையே தோன்றியிருக்கும் சில நம்பிக்கையீனங்களிற்கும் அடிப்படை புரிதலின்மைக்கும் ஒரு முற்றுப்புள்ளி வைப்பதற்கேயாகும். இவை குறித்த சரியான புரிதலில்லாவிட்டால் நாம் தொடர்ந்து உலகத்துடன் பேச முடியாது- எமது தொடர் போராட்டங்களுக்கும் ஒரு அர்த்தம் இருக்காது.

உண்மையிலேயே இவை குறித்து எமக்குள்ளாகப் பேசிக் கொள்ளத்தேவையில்லை. ஏன் எமது எதிரிகளான ஸ்ரீலங்கா அரசிற்குக் கூட எந்தச் செய்தியும் இதற்குள் இல்லை. மாறாக இந்தக் கருத்தியலை கவனத்தில் கொள்ள வேண்டியவர்கள் எமது போராட்டத்தின் மீது ஆதிக்கம் nசுலுத்தும் மூன்றாவது சக்திகளான இந்தியாவும் மேற்குலகமும்தான். ஏனெனில் நாளை ஒரு இனத்தின் எதிர்வினைக்குள் சிக்கி விளைவுகளை அறுவடை செய்யப்போவது அவர்கள்தான்.

சிலவற்றை வெளியாகப் பேசிவிட வேண்டியதுதான். எந்த பூசிமெழுகல்களும் பாசாங்குகளும் இனி வேலைக்கு உதவாது. எமது ஆய்வின் முடிவு பயங்கரமானது மட்டுமல்ல பெரும் அச்சம் தருவதும் உலக ஒழுங்கை நிர்மூலமாக்கக்கூடியதும்கூட. அதாவது ஒற்றை வரியில் சொன்னால் மூன்றாவது சக்திகளின் துணையுடன் படைத்துறை ரீதியில் தமிழீழ விடுதலைப் போராட்டம் தோற்கடிக்கப்படுமாயின் அல்லது தோற்கடிக்கப்படுவது போன்ற பாவனைகளையும் உளறல்களையும் அனைத்துத் தரப்பும் தற்போதுள்ளதுபோல் தொடருமாயின் எந்த கணத்திலும் இந்த உலகத்தின் மீது பல வடிவங்களில் வன்முறையைக் கட்டவிழ்த்து விடுவதற்கு தமிழ் இனம் தன்னையறியாமலேயே தயாராகிக் கொண்டிருக்கிறது. அதன் வன்முறை வடிவங்களைக்கூட நாம் இனங்கண்டிருக்கிறோம்.

உடனடியாக போரை நிறுத்தி தமிழீழ விடுதலைப்புலிகளின் ஏபிரநிதித்துவத்தை ஏற்று தமிழர்களின் அரசியல் அபிலாசைகள் நிறைவேற்றப்படாதவிடத்து தமது பிராந்திய மேற்குலக நலன்கள் சார்ந்து தமே தம்மைச்சுற்றி வரைந்து வைத்திருக்கும் உலக ஒழுங்கைக் காப்பாற்ற ஒரு சிறிய விடுதலைப்போராடத்தினதும் அதன் மக்களினதும் அழிவுக்கு எந்த மூன்றாவது சக்திகள் துணைபோனதோ அந்த உலக ஒழுங்கை அழிவுக்குள்ளான அந்த இனம் வன்முறை, பயங்கரவாத வடிவங்களினூடக சிதைத்து சின்னாபின்னப்படுத்துவதை இந்த உலகம் எதிர்கொள்வதைத்தவிர வேறு மாற்று விளைவுகள் கிடையாது. ஏனெனில் அந்த இனம் தனது சுய நனவு மனத்திலிருந்து விடுபட்டு - வெளியெடுக்கப்பட்டு நீண்ட நாட்களாகிவிட்டது. அதாவது அது ஒரு கூட்டு மன அதிர்விற்குள் தள்ளப்பட்டிருக்கிறது.

நாம் இந்த ஆய்வை செய்ய புகுந்த கதையை சுருக்கமாவேனும் விளக்க வேண்டியவர்களாக இருக்கிறோம். நாம் தமிழர்களாக இருந்தபோதிலும் எமது வாழ்வை தமிழ்ச்சூழலுக்கு வெளியிலேயே கட்டமைத்துக்கொண்டவர்கள். (இதில் விதிவிலக்கு நண்பர் பரணி கிருஸ்ணரஜனி - அவர் தொடர்ந்து தமிழ்ச்சூழலில் இயங்கி வருபவர்) காரணம் எமது கல்விப்பின்புலம், தொழில் சார்ந்த நடைமுறைகளும் குறிப்பாக சுயநலன்களும் என்று கூறலாம். தமிழர்களாக இருந்தும் எமது இனத்தின் போராட்டத்தை செய்தியாகவே அறிந்து கொள்ள முற்பட்டவர்களாக இருந்தோமேயொழிய பங்குதாரர்களாக நாம் இருக்கவில்லை. இப்போது அதற்காக நாம் வெட்கப்படுகிறோம் - வேதனைப்படுகிறோம்.


திடீரென்று நாம் எம்மை தமிழர்களாக உணரத்தொடங்கியது ஒரு இனம் அழியத்தொடங்கியதிலிருந்துதான் என்பது வேதனைக்குரியது மட்டுமல்ல வெட்கத்திற்குரியதும்கூட. நாம் தமிழீழ விடுதலைப்போராட்டத்திற்கு எதிரானவர்கள் அல்ல. ஆனால் புலிகள் பார்த்துக்கொள்வார்கள் அவர்கள் போராடி ஈழம் எடுத்த்துத்தருவார்கள்தானே என்று இருந்துவிட்டோம். இது எமது நிலைப்பாடல்ல, பலரதும் நிலைப்பாடும் இதுதான்.

இந்த மனோநிலையில்தான் இதுவரைகாலமும் இருந்திருக்கிறோம் என்பதையே எமது ஆய்வினூடகத்தான் நாம் கண்டுபிடித்தோம் என்பதே ஆச்சரியமாக மட்டுமல்ல அதிர்ச்சியாகவும் இருக்கிறது.

தமிழீழ விடுதலைப்புலிகளை படைத்துறை ரீதியாக தோற்கடிப்பதாகவும், தொடர்ந்து நிலங்களை கைப்பற்றுவதாகவும் ஸ்ரீலங்காக அரசு அறிவித்ததோடு மட்டுமல்ல பல மூன்றாம் சக்திகளின் துணையுடன் உலக அளவில் அவர்களுக்கு பயங்கரவாத முத்திரைகளைக் குத்தி அவர்களை ஓரங்கட்டத்தொடங்கியிருந்ததும் ஒட்டு மொத்த தமிழர்களையும் ஒரு வித வெறுமைக்குள் தள்ளி பதற்றமடையச் செய்திருந்ததை அப்போது உணராதவர்களும் இப்போது உணர்கிறார்கள். இதைத்தான் கூட்டுமன அதிர்வு என்ற உளவியல் சிக்கலாக விளக்க முற்படுகிறோம்.

விடுதலைப் போராட்டத்தோடு தம்மை தாயகத்திலும் புலத்திலும் நேரடியாக ஈடுபடுத்திக்கொண்டவர்கள் மட்டுமின்றி எம்மைப்போன்றிருந்த ஈழத்தமிழர்கள் உட்பட உலகெங்கும் பரந்து வாழும் தமிழ் உறவுகள் அனைத்துமே என்னவென்று அறியாமலேயே இந்த கூட்டுமன அதிர்வுக்குள்ளாகியதுதான் ஆச்சர்யம். தமிழகம் மட்டுமின்றி தென்னாபிரிக்கா, மலேசியா, மொறீசியஸ், பிஜித் தீவுகள் என்று ஒரு இனமே அதிர்ந்தது - இன்னும் அதிர்ந்து கொண்டிருக்கிறது. உலகின் சட்ட ஒழுங்குகளையும் மீறி நாம் இன்று வீதியில் இறங்கியிருப்பதே அதற்கு சாட்சி.

ஆயிரக்கணக்கான பக்கங்களில் நிறைந்து கிடக்கும் எமது ஆய்வை சுருக்கமாக இங்கு விளக்குவது கடினமானது மட்டுமல்ல பல உளவியல் வார்த்தைகளுக்கு தமிழில் விளக்கமும் கிடையாது. அதைத் தொடர்ந்து விளக்குவது உங்களுக்கு அயர்ச்சியையும் தரும். சுருக்கமாக சிறிய விளக்கங்களையே நாம் உங்கள் முன் வைக்க விழைகிறோம்.

இந்த கூட்டுமன அதிர்வுக்கு ஓரே காரணம் எதிரி நிலத்தை விழுங்கியதோ மக்கள் ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்டதோகூட அல்ல. பலருக்கு ஆச்சரியமாக இருக்கலாம், தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல் தலைமைத்துவம் கைநழுவிக்கொண்டிருப்பதாகவும் தமது தலைமையை எதிரியானவன் பலருடன் கூட்டுச்சேர்ந்து அழிக்க முற்படுகிறான் என்றும் எல்லைகள் கடந்து ஒட்டுமொத்த தமிழினமும் நம்பத் தொடங்கியதுதான் இக்கூட்டுமன அதிர்வின் முதன்மையான காரணம் ஆகும். எமது ஆய்வின் மிக முக்கியமான அம்சம் இது.

தேசம், தேசியம், தேசியத் தலைவர் என்று ஒரு இனம் மூன்று தசாப்பதங்களுக்கும் மேலாக ஒரு வாழ்வை வாழ்ந்து விட்டது. அந்த வாழ்வியலினூடாகவே அந்த இனத்தின் உளவியல் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. அந்த இனத்தின் ஆன்மாவாகவே விடுதலைப்புலிகள் மாறிப்போய்விட்டது யதார்தம். இது விருப்பு வெறுப்புகளுக்கும் அப்பால் நடந்தேறிவிட்டது. திடீரென்று கொஞ்சப்பேர் வெளிக்கிட்டுவந்து ஆளாளுக்கு வன்முறை, பயங்கரவாதம், மனிதக் கேடயம் என்று அந்த இனத்திடம் எந்தக் கருத்தையும் கேட்காமல் மிக மோசமான வன்முறையை அந்த இனத்தின் மீது பிரயோகித்துக்கொண்டே அந்த மூன்று தசாப்த கால வாழ்வைக் குலைப்பதென்பது மிக அப்பட்டமான மனித உரிமை மீறலும் மிகமோசமான வன்முறையுமாகும்.

புலிகளையும் தமிழினத்தையும் பிரித்துக் கருத்துச் சொல்லும் யாருமே அந்த இனத்தைப் பொறுத்த வரையிலே வன்முறையாளர்களே. இதற்கு ஐக்கிய நாடுகள் சபையும் சரி ஐரோப்பிய ஒன்றியமும் சரி யாரும் விதிவிலக்காக முடியாது.

இதைத்தான் எமது ஆய்வில் கடுமையாக முன்வைக்க விரும்புகிறோம்.

அண்மையில் கனடாவிலிருந்து வெளிவரும் "NATIONAL POST" மக்களின் போராட்டங்களை முன்வைத்து ஒரு சந்தேகத்தைக் கிளப்பியிருந்தது. அது தமிழர்கள் தமது போராட்டங்களில் புலிகளின் கொடியையும் அதன் தலைவரினது படங்களையும் வைத்திருப்பதைப் பார்த்தால் மக்களைக் காப்பாற்றுவதற்கு போராட்டங்களை நடத்துவது போல் தெரியவில்லை, மாறாக தடைசெய்யபப்பட்ட பயங்கரவாத இயக்கமான புலிகளைக் காப்பாற்றவதற்கே இந்த போராட்டங்கள் நடத்தப்படுவதாக சந்தேகம் வெளியிட்டிருந்தது.

"NATIONAL POST" உட்பட எல்லோருக்கும் ஒன்றைக்கூறிக் கொள்ள விரும்புகிறோம். உங்களுக்கு எந்தச் சந்தேகமும் தேவையில்லை, தமது அரசியல் தலைமைகள் என்று ஒட்டு மொத்த இனமுமே நம்புகிற புலிகளைக் காப்பதற்கும் அவர்களுக்கு ஒரு சர்வதேச அங்கீகாரத்தை வாங்கித் தருவதற்குமாகவே மக்கள் வீதியில் இறங்கியிருக்கிறார்கள். இதில் நீங்கள் புதிதாக எந்தக் கண்டுபிடிப்பையும் செய்யத் தேவையில்லை.

முப்பது வருடங்களுக்கும் மேலாக ஒரு இனம் படிப்படியாக வளர்த்த நம்பிக்கையும் அரசியல் அவாவும் புலிகளின் வளர்ச்சியோடு பின்னிப் பிணைந்தது. அதன் பெருபிம்பமாக தலைவர் பிரபாகரனை அந்த இனம் வரித்து நீண்ட காலங்களாகிவிட்டது. இதை உளவியல் மொழியில் கூறினால் ஒவ்வொரு தழிழனினதும் உள்ளத்தில் அவர்களது அரசியல் அவா பிரபாகரன் என்ற உருவத்திலேயே ஆன்மாவாக உறைந்து கிடக்கிறது. அவரையும் அவர் உருவாக்கி வளர்த்த அரசியல் கட்டமைப்பையும் அழிப்பதென்பது ஒவ்வொரு தமிழனினதும் ஆன்மாவில் கைவைப்பதற்கு ஒப்பானது. அதுதான் இப்போது ஒட்டுமொத்த இனமும் அதிர்வுக்குள்ளாகியிருக்கிறது.

இந்த அடிப்படையில்தான் நாம் எமது ஆய்வை வளர்த்துச் சென்று ஒரு கருத்துரலவாக்கத்தைப் பெற்றிருக்கிறோம். இனி நாம் விடயத்திற்குள் நுழைவோம்.

மேற்படி விளைவுகளின் காரணமாக கடந்த ஒரு வருடமாக ஒருவிதமான வெறுமைக்குள் தள்ளப்பட்டவர்களாக அலைந்து திரிந்த நாம் எமது பிரச்சினையை கண்டுபிடித்ததும் இந்த ஆய்வைச் செய்ய வேண்டும் என்று தூண்டியதும் ஒரு கருத்தரங்கு என்றால் உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கும்.

அண்மையில் ஸ்பெயின் பர்சிலோனா பல்கலைக்கழகத்தில் "Psychology of crime : Several psychological factors that figure into why people commit crimes" என்ற தலைப்பில் நடந்த கருத்தரங்கே அது. "பெண் உளவியல்" தொடர்பான எமது மேலதிக ஆய்வுகளின் பயன்பாட்டிற்கமையவும் ஒக்ஸ்போட் பல்கலைக்கழகத்தில் பயங்கரவாதத்திற்கும் உளவியலுக்கும் இடையிலான தொடர்பை முன்னிறுத்தி கலாநிதி பட்ட ஆய்வை மேற்கொண்டிருக்கும் எமது தோழி ஒருத்தியின் நச்சரிப்பு தாங்காமாலும் நாங்கள் அக்கருத்தரங்கில் கலந்து கொண்டோம்.

தனிமனித குற்றங்கள் எப்படி சமூக குற்றங்களாக மறுஉருவாக்கம் செய்யப்படுகின்றன என்பதிலிருந்து தொடங்கி வன்முறை, பயங்கரவாதம், உளவியல் ஆகியவற்றிற்கிடையேயான பிணைப்பையும் தொடர்பையும் மிகத்துல்லியமாக வரையறை செய்தது மேற்படி கருத்தரங்கு.

குற்றங்களின் மூலமும் அடிப்படையும் மனச்சிதைவிலிருந்து அல்லது மனப் பிறழ்விலிருந்துதான் தோற்றம் கொள்வதாக உளவியல்வாதம் கட்டமைக்கப்படுகிறது. ஆனால் தனிமனிதன் தொடங்கி அரசு, நிறுவனங்கள் வரை இதைப் பெரும்பாலும் கணக்கிலெடுப்பதில்லை. இதை வேறொரு மொழியில் கூறினால் தமது வசிதிக்கேற்ப மறந்து விடுகிறார்கள் என்று நாம் கூறிக்கொள்ளலாம்.

குற்றம் என்ற பொது வகைமைக்குள் தனிமனித குற்றம், சமூக குற்றம், போராட்டம், ஆயுதக்கிளர்ச்சி, வன்முறை, பயங்கரவாதம் என்ற தனி அலகுகளாகப் பிரித்து அவற்றின் உளவியல் பிரதிபலிப்பையும் தாக்கங்களையும் ஆய்வாக முன்வைத்தது மேற்படி கருத்தரங்கு.

உண்மையைக் கூறப்போனால் சிக்மன்ட் பிராய்டையும் லக்கானையும் அதன் வழி சர்த்தரையும் கற்றுத் தெளிந்த ஒருவருக்கு மேற்படி ஆய்வுகள் புதிதாக எதனையும் கற்பிக்கப் போவதில்லை. இன்றைக்கு 50 வருடங்களுக்கு முன்பே தொடர் வன்முறைக்குள்ளாகும் ஒரு மக்கள் கூட்டத்தின் மன அதிர்வுகளின் வெளிப்பாடே "பயங்கரவாதமாக" வெளிப்படுபகிறது என்று சர்த்தர் வரையறை செய்து விட்டார். மேற்படி கருத்தரங்கு அதை மீண்டுமொரு முறை மறுபதிப்பு செய்திருக்கிறது என்று வேண்டுமானால் கூறிக்கொள்ளலாம்.

இந்தக் கருத்தரங்கிள் முடிவில்தான் நாம் "கூட்டு மன அதிர்வு"க்குள்ளாகயிருக்கிறோம் என்பதையே கண்டுபிடித்தோம்.

அண்மைக்காலமாக மோசமடைந்து வரும் களநிலவரங்களினால் தமது அரசியல் எதிர்காலம் குறித்த நிச்சயமின்மையும் அதனால் தோற்றம் கொண்டிருக்கும் அரசியல் வெறுமையும் - வறுமையும் ஈழத்தமிழினத்தை எல்லையற்ற தொடர் கிலிக்கும் பீதிக்குள்ளும் அமிழ்த்திக்கொண்டிருக்கிறது. இதன் நிமித்தமாக ஈழத்தமிழினத்தின் உள்ளும் புறமுமாக ஒரு தொடர் வலைப்பின்னலாக பின்னப்பட்டுக்கொண்டிருக்கும் எண்ணற்ற கேள்விகளுக்கும் சந்தேகங்களுக்கும் ஒரு பதிலாக இல்லாவிட்டலும்கூட, அறத்தையும் நீதியையும் நழுவவிட்டு எம்மை இவ்விக்கட்டான நிலைக்குள் தள்ளியிருக்கும் அனைத்துலக சமூகத்தைத் தொடர்ந்து எதிர்கொள்வதற்கும் அதற்கு எம்மால் தொடர்ந்து

சொல்லப்படக்கூடியதுமான சில முன்முடிவுகளை - தீர்மானங்களை மேற்படி கருத்தரங்கு அடையாளம் காட்டியது. அந்த வகையில் மேற்படி கருத்தரங்கு முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக இருக்கிறது. இதிலிருந்து எமது ஆய்வை நாம் மேற்கொள்ளத் தொடங்கினோம்.

நாம் இக்கருத்தரங்கில் கலந்து கொண்ட நோக்கத்திற்கு மாறாக மேற்படி சங்கதிகளை அடையாளம் காணக்கூடியதாக இருந்தது. ஒரு வகையில் இவற்றைத்தான் தேடி அங்கே போனோமோ என்ற சந்தேகம் எமக்கே இப்போது எழுகிறது. ஏனெனில் மனம் ஒரு நிலையில் இல்லை. இது எமது நிலை மட்டுமல்ல, ஒட்டு மொத்த தமிழினத்தின் நிலை இன்று இதுதான்.

உளவியலில் ஒரு நிலை இருக்கிறது. ஒரு மனித உயிரி தன்னளவில் தான் சக மனிதர்களாலும் தான் வாழும் சமூகத்தாலும் நிராகரிக்கப்படுவதாக, புறக்கணிக்கப்படுவதாக, ஒதுக்கப்படுவதாக உணரும்போது அல்லது அவ்வாறு எண்ணத்தலைப்படும் போது ஒரு வகையான வெறுமைக்கும் தனிமைக்குள்ளும் தள்ளப்படும் நிலை தோன்றுகிறது. அந்த நிலையில் அந்த மனித உயிரி அடையும் உளவியல் சிக்கலை "Schizoid" என்று உளவியல் மொழியில் அழைப்பார்கள். இந்த நிலை தொடருமானால் மீளமுடியாத மனப்பிறழ்வுக்குள் அந்த மனித உயிரி தள்ளப்படுவதை நாம் தொடர்ந்து அவதானிக்கலாம். Paul Eugen Bleuler என்ற உளவியல் நிபுணர் இன்றைக்கு 100 ஆண்டுக்கு முன்பே மனித மனம் தொடர்பாக கண்டடைந்த உண்மை இது.

இந்நிலையினூடாக ஒரு உயிரிக்கு உள்ள பெரும்பான்மை சாத்தியம் மீளமுடியாத மனப்பிறழ்வு நிலை அதன்வழி தற்கொலை அல்லது குற்றம் மட்டுமே... இதன் அடிப்படையில்தான் குற்றங்களின் மூலமும் அடிப்படையும் மனச்சிதைவிலிருந்து அல்லது மனப் பிறழ்விலிருந்துதான் தோற்றம் கொள்வதாக உளவியல்வாதம் கட்டமைக்கப்படுகிறது. எனவே ஒரு குற்றத்திற்கு என்று அடிப்படையும் ஒரு மூலமும் இருக்கின்றது என்பதை நாம் முதலில் புரிந்து கொள்வோம். மேற்படி கருத்தரங்கு இதைத்தான் பல தலைப்புக்களில் பேச முற்பட்டது.

நாம் பயங்கரவாதத்திற்கும் உளவியலுக்கும் உள்ள தொடர்பை மட்டும் இங்கு

விவாதிப்போம். (ஏனென்றால் நாங்கள் "பயங்கரவாதிகள்"தானே.. இந்த கேடுகெட்ட உலகம் அப்படித்தானே சொல்கிறது) பயங்கரவாதம் என்ற சொல்லுக்கு ஏகப்பட்ட குழப்பமான விளக்கங்களை இந்த உலகம் முன்வைக்கிறது. எது பயங்கரவாதம் என்பதில் அதை உச்சரிக்கிறவர்களுக்கே குழப்பமான ஏகப்பட்ட முரண்பாடுகள் இருக்கின்றன என்பதுதான் இங்கு கவனிக்கப்படவேண்டியது. அரசுகள்கூட பயங்கரவாதச் செயற்பாடுகளில் ஈடுபடுகின்றன என்பது இங்கு ஏற்கனவே நிருபிக்கப்பட்ட ஒன்றாக இருக்கிறது. நாம் இதில் ஒன்றை மட்டும் கவனத்தில் கொள்வோம்.

பயங்கரவாதம் என்பது பல தருணங்களில் தனிமனிதர்களால் நிகழ்த்தப்பட்டாலும் அது தனிமனித நிகழ்வு அல்ல. எந்த தனி மனிதனும் இங்கு "பயங்கரவாதி"யாக அறியப்பட்டது கிடையாது. அவன் தான் சார்ந்துள்ள ஒரு அமைப்பிற்காக - ஒரு சமுதாயத்திற்காக - இனக்குழுமத்திற்காக என்று ஒரு பொதுச் சிந்தனையின் அடிப்படையிலேயே அந்த செயலை செய்ய முற்படுகிறான். அந்த நோக்கம் சரியானதா தவறானாதா என்பது இங்கு வேறு ஒரு தளத்தில் தனியாக விவாதிக்கப்பட வேண்டியது. ஆனால் அவனது நோக்கம் பொதுமையானது என்பதுதான் இங்கு முக்கியமானது.

இதைத்தான் சர்த்தர் தொடர் வன்முறைக்குள்ளாகும் ஒரு மக்கள் கூட்டத்தின் மன அதிர்வுகளின் வெளிப்பாடே "பயங்கரவாதமாக" வெளிப்படுகிறது என்றார். எனவே ஒரு குறிப்பிட்ட மக்கள் குழுமத்தை தொடர் வன்முறைக்குள் அமிழ்த்தி தொடர்ந்து அந்நிலைக்குள்ளிருந்து வெளியேற விடாமல் - வழி தெரியாமல் மனஅதிர்வுக்குள்ளாக்கி அந்தக் குழுமத்தை மனப்பிறழ்வடையச் செய்யும்போது அந்நிலைக்கு ஒரு எதிர்வினையை அக்குழுமம் பதிவு செய்த போது அதை இந்த கேடு கெட்ட உலகம் "பயங்கரவாதம்" என்று பெயர் சொல்லி அழைக்கிறது. இங்கு அந்த குற்றத்தின் மூலமும் அடிப்படையும் காரண காரியங்களும் அடியோடு மறைக்கப்பட்டது மட்டுமல்ல அந்தக் குற்றவாளிகளை( அரச பயங்கரவாதிகளை) காப்பாற்றும் உலக ஒழுங்கும் வேதனைக்குரியது என்பதுடன்

அச்சமூட்டக்கூடியதும்கூட...

இந்த ஒட்டு மொத்த சாராம்சத்துக்குள்ளிருந்துதான் நாம் இந்த உலகத்தோடு பேசவேண்டிய - அழுத்தமாகச் சொல்லவேண்டிய முக்கிய பேசுபொருள் வருகிறது.
நாங்கள் முன்பே குறிப்பிட்டது போல் அக் கருத்தரங்கில் நாம் கலந்து கொண்ட நோக்கத்திற்கு மாறாக எதை எதையோ கண்டடைந்தோம். ஏனெனில் ஒட்டு மொத்த தமிழ் சமூகத்தில் நாங்களும் ஒரு அங்கம். இப்போது முழுத் தமிழினமுமே அதிர்வுக்குள்ளாகியிருக்கிறது. ளுஉhணைழனை என்ற உளவியல் சொல்லாடல் ஒரு தனிமனித உயிரியின் மனப்பிறழ்வு நிலை குறித்துப் பேசுகிறது. இங்கே ஒட்டு மொத்த இனமுமே அத்தகைய நிலைக்குள்ளாகித் தவிக்கிறது. இதைத்தான் நாம் இப்போது கூட்டு மன அதிர்வு என்ற சொல்லாடலுக்குள் கொண்டு வருகிறோம்.

நாம் இந்த உலகத்தால் வஞ்சிக்கப்படுகிறோம், தொடர்ந்து ஏமாற்றப்படுகிறோம், நாம் புறக்கணிக்கப்படுகிறோம், ஒதுக்கப்படுகிறோம் என்று ஒட்டு மொத்த உலகத் தமிழினமுமே அச்சம் கொள்ளத் தொடங்கியிருக்கிறது. தமது அரசியல் வாழ்வியல் எதிர்காலத்தை ஒரு சூனிய வெளியில் வைத்தே புரிந்து கொள்ளத் தலைப்படுகிறது. இதன் வழி முழுத் தமிழினமும் கூட்டு மன அதிர்வுக்குள்ளாகித் தவிக்கிறது.
இப்போது சர்த்தாரை மீண்டும் ஒரு முறை அழைப்போம். அவர் சொல்கிறார்,"தொடர் வன்முறைக்குள்ளாகும் ஒரு மக்கள் கூட்டத்தின் மன அதிர்வுகளின் வெளிப்பாடே "பயங்கரவாதமாக" வெளிப்படுகிறது".

உண்மையில் இந்தக் ஆய்வுக்கு "புலிகளின் அழிவுக்குப் பின்னான பயங்கரவாதத்திற்கு யார் பொறுப்பு?" என்றுதான் தலைப்பிட்டிருக்க வேண்டும். ஏனெனில் புலிகளுக்கு "பயங்கரவாதப்" பட்டத்தை சுமத்தி ஒட்டு மொத்த தமிழினத்தையும் அழித்துக் கொண்டிருக்கும் சிங்களத்திற்கும் அதன் பின் நிற்கும் இந்தியா உட்பட மேற்குலத்திற்கும் ஒரு சிறிய செய்தி இருக்கிறது. அதாவது புலிகளின் அழிவுக்குப்பிறகும் நீங்கள் வரைவிலக்கணப்படுத்தி வைத்திருக்கும் "பயங்கரவாதம்" இருக்கும். அதுதான் அந்த செய்தி. எமது ஆய்வின் "பயங்கரமான" செய்தியும்கூட.

ஏனெனில் முழு இனமுமே அதிர்வுக்குள்ளாகத் தொடங்கியிருக்கிறது. அது ஒரு கட்டற்ற வன்முறையை எந்த நேரமும் யார் மீதும் பிரயோகிக்கக்கூடிய நிலைக்குத் தள்ளப்பட்டுக்கொண்டிருக்கிறது. அதாவது உளவியல் வாய்ப்பாட்டிற்கமைய இந் நிலையை வரைவிலக்கணப்படுத்தினால் அது ஒரு கூட்டு "Schizoid" நிலைக்குள் தள்ளப்பட்டிருக்கிறது. "Schizoid" என்ற மனப்பிறழ்வின் உச்சநிலை தற்கொலை அல்லது குற்றம். தமிழினம் நாளை இரண்டில் எந்த முடிவை எடுக்கப்போகின்றது என்பதை தீர்மானிக்கப்போகிறவர்கள் சிங்களத்தின் அரச பயங்கரவாதத்திற்கு துணைநிற்கும் அனைத்துசக்திகளும்தான். தற்கொலைகள் தொடங்கிவிட்டது. குற்றங்கள்தான் மீதமிருக்கின்றன...

இப்போது ஒட்டுமொத்த தமிழினமும் இந்த கூட்டு மன அதிர்வு என்ற வரையறைக்குள் எப்படி வந்தது என்பதை நாம் முதலில் பார்ப்பது நல்லது. இது முக்கியமானது மட்டுமல்ல வரலாற்று ரீதியான பல உண்மைகளையும் உள்ளடக்கியது.

தமிழர்களின் போராட்ட சக்திகளான தமிழீழ விடுதலைப்புலிகளை ஒரு சமாதான காலத்தில் "பயங்கரவாதிகள்" என்று இந்த மேற்குலகம் அறிவித்ததிலிருந்துதான் இந்த அதிர்வு தொடங்கியது. போராடும் காலத்தில்கூட இத்தகைய அறிவிப்பை வெளியிடாத மேற்குலகம் ஒரு சமாதான காலத்தில் இந்த நயவஞ்சக நாடகத்தை அரங்கேற்றியபோது தொடங்கிய இந்த மன அதிர்வுக்கான முதற் பொறுப்பாளிகள் அவர்கள்தான். சிறீலங்கா அரசின் குருரமான கபட நாடகத்தில் மேற்குலகமும் தம்மை ஒரு பங்காளிகளாக்கிவிட்டனவோ என்ற அச்சம்தான் இக்கூட்டுமன அதிர்வின் முதற் புள்ளி.

மேற்குலகத்தின் இந்த மோசமான பொறுப்பற்ற நடவடிக்கைகளை சிறீலங்கா இனவாத அரசு தமிழர்கள் மீதான இனப்படுகொலைக்கு மேற்குலகம் வழங்கிய ஆசீர்வாதமாகவும் அங்கீகாரமாகவும் கருதியதில் வியப்பேதும் இருக்க முடியாது.
தமிழீழ விடுதலைப்புலிகளின் போராட்டத்திலுள்ள "பயங்கரவாத" கூறுகளை அடையாளங் காணத் தலைப்பட்ட மேற்குலகம் அதன் பின்னுள்ள அறத்தையும் நியாயத்தையும் சீர் தூக்கிப் பார்க்க தவறியிருந்தது. அன்றைய உலக ஒழுங்கும் அதற்கு இடமளித்தது துரதிஸ்டவசமானது.

நாம் மீண்டும் ஒரு முறை சர்த்தரை அழைப்போம். அரச வன்முறைக்குள்ளாகி நிர்க்கதியாகி நிராயுபாணிகளாக இருக்கும் மக்களின் ஒரே ஆயுதம் பயங்கரவாதம் மட்டுமே என்று வாதிடும் ளயசவசந ஒடுக்கப்பட்டவர்களின் ஆயுதக்கிளர்ச்சிக்கு ஒரு புதிய வடிவத்தையும் தருகிறார். தமிழீழ விடுதலைப்புலிகளின் தோற்றுவாயும் அவர்களின் போராட்ட வழி முறைகளில் காணப்பட்ட "பயங்கரவாத" கூறுகளும் சர்த்தரின் எந்த வியாக்கியானத்தையும் மீறியதல்ல. அவ்வளவு ஏன் இன்றுகூட அந்த கருத்தரங்கின் முன்மொழிவும் புலிகளின் போராட்டத்தின் வழி முறைகளை சமன்செய்பவையேயாகும்.

சர்த்தரின் மேலதிக கூற்றுப்படி, தொடர்ந்து புதுப்பிக்கப்படும் அடக்குமுறைகள் ஒரு இனத்தை அடி பணியச் செய்வதற்கு பதிலாக தாங்கிக் கொள்ள முடியாத முரண்பாட்டிற்குள் அழுத்துகின்றன. இதற்குத்தான் அவர்கள் பதில் சொல்கிறார்கள். அவமானமும் பசியும் வலியும் என்னவென்று அவர்களுக்கு ஆக்கிரமிப்பாளன் கற்பித்த போது எழுந்த அழுத்தத்திற்கு சமமான சீற்றமான உணர்வை இன்று அவர்கள் வெளிப்படுத்துகிறார்கள். இப்போது அவர்களை பயங்கரவாதிகள் என்கிறார்கள். அவர்களுக்கு வன்முறையைத் தவிர வேறு ஒன்றும் தெரியாது என்றும் சொல்கிறார்கள். ஆமாம், உண்மைதான். ஆனால் ஆரம்பத்தில் அது எதிரியினுடையது. விரைவில் அவர்கள் அதை தமதாக்கிக் கொண்டார்கள். உண்மையைச் சொல்லப்போனால் அவர்கள் வன்முறையின் குழந்தைகள் - இதன் வழி தமிழர் சேனைகளான தமிழீழ விடுதலைப் புலிகள் வன்முறையின் குழந்தைகள்.

இதன்வழி தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் வன்முறை வடிவத்தையும் அதன் வடிவ மாறுதலையும் இந்த உலகம் புரிந்து கொள்ள வேண்டும்.
எனவே தமிழீழ விடுதலைப் பேராட்டத்திற்கோ தமிழீழ விடுதலைப் புலிகளுக்கோ சூட்ட வேண்டியது "பயங்கரவாத" பட்டங்கள் அல்ல... தமிழினத்திற்கான அரசியல் தீர்வு. மக்களிலிருந்துதான் புலிகள் பிறப்பெடுத்தார்கள். புலிகளை பயங்கரவாதிகள் என்பதற்கும் தமிழர்களைப் பயங்கரவாதிகள் என்பதற்கும் ஒரு மெல்லிய கோடு இடைவெளியேயுள்ளது.

ஏனெனில் அவர்கள் தமிழர்களின் விடுதலைக்காக ஆயுதம் தரித்திருக்கிறார்கள். அதற்கான அனுமதியையும் ஆசீர்வாதத்தையும் மக்கள் அவர்களுக்கு வழங்கியிருக்கிறார்கள். இந்த இடைவெளியைத் தவிர வேறு எந்த இடைவெளியும் இரு தரப்பையும் பிரித்துப் பார்க்க உதவாது. அந்த மெல்லிய கோட்டைக்கூட அனைத்துத் தரப்பும் இன்று மெல்ல மெல்ல அழிக்கத் தொடங்கியிருக்கிறது. ஏனெனில் எல்லோருமே வன்முறையார்களாக மாற வேண்டிய இக்கட்டான நிலைக்குள் தள்ளப்பட்டுக்கொண்டிருக்கிறது தமிழினம்.

இன்று அனைத்துத்தரப்பும் சொல்வது போல் புலிகளின் தலைமைத்துவம் அழிக்கப்படுமாயின் புலிகளில்லாத ஒட்டு மொத்த தமிழினமும் பிரயோகிக்கத் தயாராகிக் கொண்டிருக்கும் அந்த வன்முறை வடிவங்களை எதிர்கொள்வதற்கு உலகம் தன்னை தயார் செய்வது நல்லது... இது குறித்து அடுத்த வாரம் எழுதுகிறோம்...


000000000000000000000000000000000000000000


புலிகளின் தலைமைத்துவம் பேணப்படாதவிடத்து உலக ஒழுங்கு நிர்மூலமாகக்கூடும்!
ஆய்வாளர்கள் எச்சரிக்கை

தமிழ்ச்சூழலைச் சேர்ந்த உளவியலை கல்விப்பின்புலமாகக் கொண்ட சில பல்கலைக்கழக ஆய்வாளர்கள் கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாகச் செய்த சுயாதீன ஆய்விலிருந்து மேற்படி எச்சரிக்கை விடப்பட்டிருக்கிறது. தொடர் ஆய்வில் ஈடுபட்டிருக்கும் அவர்கள் காலத்தின் தேவை கருதி தமது ஆய்வின் முக்கிய விடயங்கள் தொடர்பாக சிலவற்றை இங்கு பகிர்ந்து கொள்கிறார்கள்.

பரணி கிருஸ்ணரஜனி (பாரிஸ்)
யாழினி ரவிச்சந்திரன் (ஒக்ஸ்போட்)
சித்ரலேகா துஸ்யந்தன் (வியன்னா)
பிரியதர்சினி சற்குணவடிவேல் (பர்சிலோனா)

நன்றி

- பதிவு -

Tuesday, May 19, 2009

எத்தகைய சூழ்நிலையிலும் மனம் தளராது நிமிர்ந்து நிற்போம்

தமிழீழம்

19.05.2009

எத்தகைய சூழ்நிலையிலும் மனம் தளராது நிமிர்ந்து நிற்போம்.

அன்பு மிக்க எம் உறவுகளே!

60 வருடகால நீண்ட மிகப்பெரிய போராட்டத்தின் மூலமாக எம் தமிழர் தேசம் தனக்கான சுயமான போராட்ட சக்தியாக மாறியுள்ளது.

இன்று சர்வதேசம் எங்கும் எமது தேசம் தொடர்பாகவும் தமிழீழ தமிழர் பற்றிய பிரச்சினைகளையும் அங்கு ஓர் இனப்படுகொலை நடந்தேறிக்கொண்டிருக்கின்றதனையும் உலகம் அறிந்துள்ளது.

சொந்த காலில் சுயமாக கட்டியெழுப்பப்பட்ட எமது விடுதலைப் போராட்டத்தினை அழித்து எமது போராட்டத்தினை தாம் விரும்பியவாறு பயன்படுத்த அண்டை நாடுகளும் சர்வதேசமும் போட்டிபோட்டுக் கொண்டுசெய்த சூழ்ச்சிகளை எமது தலைவர் அவர்கள் கடந்த 30 வருடங்களாக உடைத்தும் தகர்த்தும் உத்வேகத்துடன் முன்னெடுத்து வந்துள்ளார்.

இன்றுவரை எந்தவித விட்டுக்கொடுப்புகளுக்கும் போகாது சுயமாக நின்று போராடியதனால்தான் நாம் அனைவரும் தமிழீழ தேசம் என்ற ஒரே குடையில் நிமிர்ந்து நிற்கின்றோம்.

இலங்கை அரசும் சர்வதேச சமூகமும் எமது தாயகம், தன்னாட்சி, சுய உரிமை என்று தன் அடிப்படையில் எமக்கான உரிமைகளை வழங்க முற்படுவதற்கு மாறாக தாம் விரும்பிய தீர்வுகளை தரமுற்பட்டது.

அடிப்படைகளை ஏற்றுக்கொள்ளாத தீர்வுகளை வழங்கி எமது சுயநிர்ணய உரிமையினை எப்படி முடக்கி அடக்கி எமது தாயக பூமியை சிங்கள பூமியாக மாற்றலாம் என திட்டமிட்டு செயற்பட்டது.

தொடர்ந்தும் இவ்வாறான அரைகுறை தீர்வுகளை வழங்குவதன் ஊடாக எமது முனைப்பு பெற்ற ஆயுத போராட்டத்தினை மழுங்கடிக்க முயற்சி செய்தது.

காலத்திற்கு காலம் சிங்கள அரசு எமது நியாயமான போராட்டத்தினை மறுதலித்து அதற்கு மாறாக ஓர் இனப்படுகொலையினை எம் மக்கள் மீது ஏவி விட்டுக்கொண்டிருந்தது.

இந்த இனப்படுகொலையினை அரசாங்கம் குடியேற்றம் என்றும், அபிவிருத்தி என்றும் பயங்கரவாதம் என்றும் புதிய புதிய வார்த்தைகளில் சர்வதேசத்தின் உதவியுடன் சிங்கள மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் செய்துகொண்டிருந்தது.

இறுதியாக பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்ற இன அழிப்பு ஆயுதத்தினை எடுத்து சர்வதேச ரீதியான அங்கீகாரத்துடனும் அயல் நாடுகளின் வழிகாட்டுதலுடனும் ஓர் மிகப்பெரிய இன அழிப்பு போரினை அனைத்து சர்வதேச மனிதாபிமான நெறிமுறைகளையும் மீறி செயற்படுத்திக் கொண்டிருந்தது சிங்கள தேசம்.

எமது தேசியத்தலைவர் அவர்கள் சிங்கள அரசின் இந்த இன அழிப்புப் போரினை உலகுக்கு தெரியப்படுத்திக்கொண்டே தமிழீழ மக்களை சிங்கள அரசின் இனப்படுகொலைகளில் இருந்து பாதுகாப்பதற்கான தற்காப்பு போரை நடாத்திக்கொண்டிருந்தார்.

ஆனால், சர்வதேசம் இனப்படுகொலைக்கான எத்தனையோ சாட்சியம் இருந்தும் பயங்கரவாதம் என்ற சொற்பதத்திற்குள் லட்சக்கணக்கான மக்களின் உணர்வுகளையும் ஆயிரக்கணக்கான உயிர்களையும் முழுங்கியவாறு கண்மூடித்தனமாக செயற்பட்டுக்கொண்டிருக்கின்றது.

இந்த இக்கட்டான நிலையில்தான் எமது தலைமை மக்களை காக்கும் இறுதி முயற்சியாக ஆயுதப்பாவனையை நிறுத்துவதாகவும் உடனடியாக மக்களை பாதுகாக்குமாறும் சர்வதேசத்திடம் கேட்டுக்கொண்டது.

ஆனால், சர்வதேசத்தின் மௌனம் ஆயிரக்கணக்கான மக்களின் உயிர்களை காவுகொண்டு விட்டது. இன்று தமிழீழ விடுதலைப் புலிகளை துடைதத்தழித்து விட்டோம் என்ற இறுமாப்பில் சிங்கள தேசமும் அதன் கூட்டாளிகளும் ஆரவாரித்துக்கொண்டிருக்க தாயகமும் புலம்பெயர் தமிழர் தேசமும் துயரத்தில் மூழ்கி நிற்கின்றனர்.

20 ஆயிரத்திற்கும் அதிமான மாவீரர்கள் ஒரு இலட்சத்திற்கு அதிகமான மக்கள், பல்லாயிரம் கோடி சொத்துக்கள் ஆகியவற்றின் இழப்புக்கள், தியாகங்கள் அனைத்தும் வீண் போகாது வீண்போகவும் விடமுடியாது.

கால சூழ்நிலைகளுக்கு ஏற்ப அனைத்து நெருக்கடிகளையும் எதிர்கொள்வோம். மீண்டும் ஒருங்கிணைந்து எமது இலட்சியத்தினை அடைவதற்காய் போராடுவோம்.

கணிசமான போராளிகளையும் மக்களையும் எமது கட்டுப்பாட்டுப் பிரதேசங்களையும் இழந்தது. உலகெங்கும் வாழும் எம் உறவுகளிற்கு பெரும் துயராக இருக்கும். எனினும் துயரங்களை சுமந்து பயணங்களை தொடர்வோம்.

தமிழீழ தேசம் மட்டுமன்றி உலகெங்கும் விரிந்தும் பரந்தும் இருக்கின்ற மக்கள், போராளிகள் எமது தலைமையின் வழிகாட்டுதல்களின் கீழ் மீண்டும் விருட்சமாக தோன்றி; எமது மக்களுக்கான உரிமை கிடைக்கும்வரை போராடுவோம்.

போராட்ட வடிவம் மாறலாம் போராட்ட இலக்கு மாறாது என்ற தலைவரின் சிந்தனையுடன்.

நன்றி,
வணக்கம்,
புலிகளின் தாகம் தமிழீழ தாயகம்.
போராளி கே.பி.அறிவன்.

நன்றி
- தமிழ்நாதம் -

Sunday, May 17, 2009

ஈழத்தமிழருக்கு நிம்மதி தராத இந்தியத் தேர்தல் முடிவுகள்

பலரும் எதிர்பார்த்திருந்த இந்தியத் தேர்தல் முன்னோட்ட முடிவுகள் நேற்றிரவு வெளியாகிவிட்டன.

ஈழத்தமிழர்களைப் பொறுத்தவரை இந்த முடிவுகள் "பனையால் விழுந்தவனை மாடேறி மிதித்த" கதை போன்றதுதான்.

தமிழர் தாயகம் மீது தொடுக்கப்பட்டிருக்கும் கொடூரப் போரினால் பல்லாயிரக்கணக்கில் தனது உறவுகளைப் பலிகொடுத்து, சந்ததிகளை இழந்து, உடைமைகளைத் தொலைத்து, கௌரவமான வாழ்வைப் பறி கொடுத்து, அடிமைப்பட்ட சமூகமாகத் துவண்டு கிடக்கின்றது ஈழத்தமிழினம்.

"வீடெரிக்கும் அரசனுக்குக் கொள்ளி எடுத்துக் கொடுக்கும் மந்திரி" போல ஈழத் தமிழர் மீதான போரியல் வெறிக்குத் தூண்டு கோலாகவும், துணையாகவும் இதுவரை இருந்து வந்தது இந்தியாவின் மத்தியில் ஆட்சியில் அமைந்திருந்த காங்கிரஸ் அரசு.

"இலங்கையில் தமிழர்களுக்கு நியாயமான அதிகாரப் பகிர்வு, கௌரவத்துடன்கூடிய வாழ்வு, அமைதியுடன் கூடிய சமாதானத் தீர்வு இதுவே இந்தியாவின் நிலைப்பாடு" என வெளிப்பகட்டுக்குக் கூறிக் கொண்டே, இலங்கைத்தீவில் பேரினவாதிகளின் அடி மைகளாகத் தமிழர்களை அடக்கி ஒடுக்கும் இராணுவச் செயற்பாடுகளுக்கு நேரடியாகத் துணை போனது இந்திய அரசு.

அத்தகைய காங்கிரஸ் கட்சியிடமும் அதன் தோழமை அணிகளிடமும் மீண்டும் இந்திய அரசை ஒப்படைத் ததன் மூலம், இன்றைய பேரவல நிலையில் இருந்து ஈழத்தமிழர்கள் மீளுவதற்கு இருந்த கடைசி நப்பாசையையும் இந்திய வாக்காளர்கள் தகர்த்து விட்டனர் என்றே கூறவேண்டும்.

இந்தியத் தேசிய மட்டத்தில் மாத்திரமல்லாமல், தமிழக மட்டத்திலும் கூட, இங்கு ஈழத்தமிழர்கள் அனுபவிக்கும் பேரவலங்கள் பொருட்படுத்தப்பட வில்லை என்ற கருத்து நிலைப்பாட்டையே இந்தத் தேர்தல் முடிவுகள் எடுத்துக் காட்டுகின்றன.

"ஈழத் தமிழர்கள் கொன்றொழிக்கப்படுவதற்குத் துணைபோகும் காங்கிரஸ் கட்சிக்குத் தமிழகத்தில் நல்ல பாடம் புகட்டுவோம்!" என்ற தமிழக சினிமாத் துறையினரின் கோரிக்கை கூட, தமிழக வாக்காளர்களி டம் எடுபடவில்லையே என்றே எண்ண வைத்துள்ளது.
தமிழகத்தின் காங்கிரஸ் தூண்களான மணிசங்கர ஐயர், ஈ.கே.வி.எஸ். இளங்கோவன், தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு போன்றோருக்கு தமிழக மக்கள் நல்ல படிப்பினை தந்திருந்தாலும்
மறுபுறத்தில் ஈழத் தமிழர்களுக்கு ஓயாது குரல் கொடுத்து வந்த பாட்டாளி மக்கள் கட்சி, மறுமலர்ச்சி தி.மு.க., இடதுசாரிகள் போன்ற தரப்பினரையும் தமிழக மக்கள் ஓரம் கட்டியிருக்கின்றார்கள்.

அதேசமயம், ஈழத்தமிழர் விவகாரத்தை தமது பதவியைத் தக்கவைப்பதற்காக வசமாகப் பயன்ப டுத்திவரும் கலைஞர் கருணாநிதிக்கும் அவரது திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும்கூட தமிழக மக்கள் தொடர்ந்து பெரும் எடுப்பில் வாக்களித்து வெற்றி வாகை சூட்டியிருக்கின்றார்கள்.

காங்கிரஸ் கட்சிக்குக் கூஜா தூக்குவதன் மூலம், தமது தமிழக ஆட்சியைத் தக்கவைப்பதை உறுதிப் படுத்தும் தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதியின் எத்தனத்துக்கு முழுவெற்றி கிடைத்திருக்கின்றது என்பதே இந்தத் தேர்தல் முடிவு காட்டும் பெறு பேறாகும்.

இலங்கையில் தாம் மேற்கொள்ளும் பாரிய இராணுவ நடவடிக்கைகளில் தமக்குக் கிடைத்துவரும் பெரும் வெற்றிகளுக்கு இந்திய அரசின் நேரடி ஒத்துழைப்பும், உதவியும், ஒத்தாசையும்தான் பிரதான காரணம் என இலங்கை அரசின் மூத்த அரசுத் தலை வர்களும், உயர் பாதுகாப்பு அதிகாரிகளும் கூறிவரு கின்றனர்.

இந்திய மக்களின் இந்த வாக்களிப்புத் தீர்மானம், இலங்கை அரசுத் தலைவர்களைத் தமது இராணுவ நட வடிக்கை வெறிப்போக்கில் மேலும் தீவிரமாக ஈடுபட அவர்களை நெட்டித் தள்ளித் தூண்டி விடுவதாகஷேஅமைந்திருக்கின்றது.

தங்களது யுத்த நடவடிக்கைகளுக்கு இந்திய அரசு வழங்கி வந்த முழு ஒத்துழைப்புக்கு இந்திய வாக்காளர் கள் தங்கள் ஜனநாயக உரிமைகள் மூலம் வழங்கிய அங்கீகாரமே இந்தத் தேர்தல் முடிவுகள் எனத் தெரிவித்து அதை மகிழ்வுடன் கொண்டாடக் கொழும்பு பின்நிற்காது என்பதும் உறுதி.

ஆக, ஈழத் தமிழர்களால் ஆவலுடன் எதிர்பார்க் கப்பட்ட இந்தியப் பொதுத் தேர்தலின் முடிவுகள், அவ லப்படும் ஈழத் தமிழர்களுக்கு எந்த ஆறுதலையும் வழங் குவதாக அமையஷேஇல்லை என்பதுதான் நிலைமை; நிதர்சனம்.

மேலும் ஐந்து ஆண்டு காலத்துக்குத் தமது ஆட் சியை உறுதி செய்திருக்கும் சோனியா காந்தியும் அவரது காங்கிரஸ் கட்சியும் ஈழத் தமிழர் அழிப்பு நடவடிக் கைகளுக்குத் தொடர்ந்து துணைபோகும் துன்பியல் நிகழ்வுஇந்தப் பிராந்தியத்தில் இனியும் நீடிக்கப் போகின்றது.

- உதயன் -

Friday, May 15, 2009

வெற்றுவேட்டு அறிவிப்புகளை வெளியிடும் சர்வதேசத் தரப்புகள்

வன்னியில் மோதல் பிரதேசத்தில் நிலைமை மிக மோசமடைந்துள்ள கட்டத்தில், சூழலைச் சரிசெய்வதற்கு சர்வதேச சமூகம் எடுத்த எந்த முயற்சியுமே பலன் தரவில்லை. எல்லாமே விழலுக்கு இறைத்த நீராகிவிட்ட கட்டத்தில் பல்வேறு சர்வதேசத் தரப்புகளும் மாறி மாறி வெறும் அறிக்கைகளை வெளியிட்டு, வன் னியில் கொன்றொழிக்கப்படும் தமிழர்களுக்காக வெறுமனே நீலிக்கண்ணீர் வடித்துக்கொண்டிருக்கின்றன.

அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் போன்ற வல்லாதிக்க நாடுகள் கூட கொழும்பைக் கட்டுப்படுத்த முடியாத நிலையில் நீதியை நிலைநிறுத்த முடியாத கையறு சூழலில் வெறுமனே கையைப் பிச்ந்து கொண்டிருக்கின்றன.

இலங்கையில் பல நூற்றுக்கணக்கில் அப்பாவித் தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதைத் தடுக்க முடியாமல் வெறுமனே பார்த்துக்கொண்டு வாளாவிருப்பதன் மூலம் பெரும் வரலாற் றுக் குற்றத்தை இழைத்துக் கொண்டிருக்கின்றது சர்வதேசம்.

"பாதுகாப்பு வலயம் "மீது எந்நேரமும் பாரிய இராணுவ நடவடிக்கை எடுக்கப்படலாம். இதனால் பெரும் இரத்தக்களரி அபா யம் உள்ளது. நிலைமை மிகமிக மோசமடையும் பேராபத்து ஏற்பட்டுள்ளது. கடந்த ஜனவரிக்குப் பின்னர் இப்படிப் படுகொலையுண்டோரின் எண்ணிக்கை ஏழாயிரத்தையும் தாண்டி விட்டது. பொதுமக்கள் மீதான இசாவாறான தாக்குதல்களுக்கு யார் காரணம் என்ற சர்ச்சையை முன்னிறுத்தியபடியே இக் கொடூரம் தொடர்கின்றது. எனவே, இச்சர்ச்சையைக் கருத்தில்கொண்டு மோதல் நடைபெறும் பகுதிகளுக்கு ஐ.நா. கண்காணிப்பாளர்கள் மற்றும் மனிதாபிமான அமைப்புகளை அனுமதிக்குமாறு பாது காப்புச் சபை வேண்டுகோள் விடுக்கவேண்டும் " இப்படி சர்வ தேச மன்னிப்புச்சபை கோரிக்கை விடுத்திருக்கின்றது.

இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள மனிதாபிமான அவலம் குறித்து ஐ.நா.பாதுகாப்புச்சபை உடனடியாக ஆராய வேண் டும் என மனித உரிமைகள் கண்காணிப்பகமும் வேண்டுகோள் விடுத்துள்ளது.

ஐ.நா.பாதுகாப்புச்சபையின் உத்தியோகபூர்வ அமர்விலும், ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸிலிலும் இலங்கை விவகாரம் விசேடமாக ஆராயப்பட வேண்டும் என அது வற்புறுத்துகின்றது.

ஆனால் இத்தகைய வற்புறுத்தல்கள், வலியுறுத்தல்கள், வேண்டுகோள்கள், கோரிக்கைகள் போன்றவை அங்கீகரிக்கப் பட்ட தகுதியும் தகைமையும் உடைய தரப்புகளால் முன் வைக் கப்படுகின்றன என்பதும், மிக அவசரமாகவும் அவசியமாக வும் கவனத்தில் எடுத்து உரிய நடவடிக்கைகளை விரைந்து எடுக்க வேண்டிய விவகாரம் இது என்பதும் சர்வதேச சமூகத்துக்கு நன்கு தெரியும். அது தெரிந்தும் புரிந்தும் கையாலாகாத நிலையில் வெறும் அறிக்கைகளை வெளியிட்டபடி அது பார்த்திருக்கின்றது.

இலங்கை விவகாரத்தை ஐ.நா. பாதுகாப்புச் சபையின் கூட்டத்துக்குக் கொண்டு செல்வதற்கு பிரிட்டன், பிரான்ஸ், அமெரிக்கா போன்ற வல்லரசு நாடுகளும் பிற ஐநோப்பிய நாடுகள் சிலவும் எடுத்த முயற்சியும் பலனளிக்கவில்லை.

இதேவேளை, ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸிலிலும் இலங்கை விவகாரம் குறித்து விசேட அமர்வு ஒன்றை நடத்த மேற்கு நாடுகள் சில எடுத்த முயற்சி தோல்வியில் முடிவடைந் திருப்பதாக இலங்கைத் தரப்பில் பெருமிதம் கூறப்படுகின்றது.

உலகின் மிகப்பெரிய வல்லரசான அமெரிக்காவின் வெளிவிவகார அமைச்சர் ஹிலாரி கிளின்ரனும், பிரிட்டிஷ் வெளிவிவகார அமைச்சர் டேவிட் மில்லிபாண்டும் கூட மோச மடைந்து வரும் இலங்கை நிலைமை குறித்துக் கலந்துரையாடி யிருக்கின்றார்கள். ஆனால் வன்னியில்நைர்ந்துள்ள பேராபத்து நிலையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்குத் தேவையான ஆக்கபூர்வ நடவடிக்கையை எடுக்க வக்கற்ற அவர்கள், திரும்பவும் ஒரு தடவை வழமை போல உடனடியாக மோதலை நிறுத்துமாறு வற்புறுத்தும் அறிக்கையை வெளியிட்டிருக்கின்றார்கள்.

இத்தகைய அறிவிப்புகள், அறிக்கைகள் மற்றும் வெற்றுக் கோரிக்கைகளைக் கொழும்பு செவிமடுக்கப் போவதில்லை என்பதும், தனது போரியல் வெறிப்போக்கை அது இன்னும் தீவிரமாக முன்னெடுப்பதிலேயே முனைப்பாக உள்ளது என்பதும் இப்படி வெற்றும் வறிதானதுமான கோரிக்கைகளை வெளியிட் டுவரும் சர்வதேச சமூகத்துக்கு நன்கு தெரியும்.
அப்படித் தெரிந்திருந்தும் கூட, தங்கள் கோரிக்கையை செவிமடுத்து உரிய வழியில் நீதி, நியாயத்துடன் செயற்பட கொழும்பு இணங்காவிட்டால், கடுமையான தீவிரமான பதிலடி நடவடிக்கைகளை சர்வதேச சமூகம் எடுக்கவேண்டிநைரும் என்ற கடும் தொனியுடனான வற்புறுத்தல்களை சர்வதேச சமூகம் வெளியிடாமல், வெறும் மேம்போக்கான கோரிக்கைகளையே அது தொடர்ந்தும் வெளியிட்டுக் கொண்டிருக்கின்றது.

"நான் ஒப்புக்குச் சப்பாணியாக மோதலை நிறுத்தும்படி வற்புறுத்திக் கொண்டு இருக்கிறேன். நீ அதனை ஒரு காதால் வேண்டி மறுகாதால் வெளியிட்டபடி தமிழர்களைத் துடைத்தழிக்கும் உனது கைங்கரியத்தை உன்பாட்டில் செய்து கொண்டிரு! "எனக் கொழும்புடன் இரகசிய உடன்பாடு செய்துவிட்டுக் காரியங்களை ஆற்றிக்கொண்டிருக்கின்றதோ சர்வதேச சமூகம் எனத் தமிழர்களும், சுயாதீனநேக்கர்களும் கருதும் அளவுக்கு இசா விவகாரத்தில் சர்வதேச சமூகத்தின் பொறுப்பற்ற நழுவல், வழுவல் போக்கு அமைந்திருக்கின்றது.
ஈராக் மீது தனது ஆக்கிரமிப்புப் போரை ஆரம்பிப்பதற்கு ஐ.நாவின் இணக்கத்துக்குப் பார்த்திருக்காத காத்திருக்காத அமெரிக்கா, இலங்கையில் மோசமடைந்துவரும் நிலைமை யைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து தமிழர்களின் பேரழிவைத் தடுப்பதற்கு மட்டும் பாதுகாப்புச்சபை கூட்டத்துக்கும் அனுமதிக்கும் காத்திருப்பது போல நடிக்கின்றது. "சர்வதேச பொலிஸ்காரனான "அமெரிக்காவின் வழியில் தானும் இப்படிப் "பொறுப்புடன் "நடிப்பதாகக் காட்ட முயல்கின்றன சர்வதேச சமூகத்தின் ஏனைய அங்கத்துவத் தரப்புகள்.

சமாதானப் பேச்சுக் காலத்தில் அமைதி முயற்சிகளில் விடுதலைப் புலிகளும் இலங்கை அரசு ம் சமதரப்பு அந்தஸ்துடன் பங்குபற்றியபோது, அவசரப்பட்டு, விரைந்து, புலிகளைப் பயங்கரவாதப் பட்டியலில் சேர்த்துத் தடைசெய்து, அதன்மூலம் அமைதி எத்தனங்களில் புலிகளின் சமதரப்பு அந்தஸ்தை சிதறடித்து, அதன் வாயிலாக சமாதான எத்தனங்களுக்கே நிரந்தர ஆப்பு வைத்த சர்வதேச சமூகம், அப்போது புலிகளுக்கு எதிராக விரைந்து நடவடிக்கை எடுத்தமை போல இப்போது கொலைக் கொடூரத்தை அப்பாவித் தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்து விட்டி ருக்கும் தரப்புகள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க முடியாமல் இருப்பது ஏன் என்பதுதான் தமிழ் மக்களுக்குப் புரியவில்லை.

சர்வதேச சமூகத்தின் இந்த வெற்றுவேட்டு அறிக்கைகளும் கோரிக்கைகளும் பேரழிவுக்குள் சிக்குண்டிருக்கும் அப்பாவி ஈழத் தமிழர்களைக் காப்பாற்ற மாட்டா என்பதை இந்த சர்வதேச சமூகத்தின் பிரதிநிதிகள் கவனத்தில் கொள்ளவேண்டும். மனச்சாட்சியுடன் காரியமாற்ற அத்தரப்புகள் முன்வரவேண்டும். அப் போதுதான் பேரழிவின் இறுதியில் சிக்குண்டிருக்கும் எஞ்சிய தமிழர்களின் உயிர்களையாவது காப்பாற்ற வாய்ப்புக்கிட்டும்.

நன்றி
- உதயன் -

Wednesday, May 13, 2009

சாட்சியமின்றி அரங்கேறும் யுத்தம்

வன்னியில் தமிழ் மக்கள் தினசரி பல நூற்றுக்கணக்கில் கொன்றொழிக்கப்படும் பேரவலம் தொடர்கையில் சர்வதேச சமூகம் அதைத் தடுத்து நிறுத்துவதற்குக் காத்திரமான பங்களிப்பு ஏதும் செய்யாமல் வெறும் கண்டனம், கவலை தெரிவிப்பு என்று அறிக்கைப் போர் நடத்திக்கொண்டிருக்கின்றது.

ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோக ணேசன் எம்.பி.கூறுவதுபோல, கடந்த வாரத்தில் தென் னிலங்கை கௌதம புத்தரின் பெயரால் புனித வெசாக் பண்டிகையைக் கொண்டாடிய வேளையில் வடக்கில் பெரும் எணிக்கையான மக்கள் படுகொலை செய்யப்பட்டி ருக்கின்றார்கள்.

கௌதம புத்தரின் காருண்ய சீலத்தைப் போதனையாகவும் வழிகாட்டலாகவும் கொண்டுள்ள ஒரு நாடு எனஓர் அரசு என தன்னைப் பிரகடனப்படுத்திக்கொண்டிருக்கும் ஒரு தரப்பால் இந்தப் பேரவலக் கொடூரம் அரங்கேற்றப் பட்டுக் கொண்டிருப்பதுதான் வேதனையிலும் வேதனை.

இவ்வளவு அட்டூழியங்களும் அங்கு நிகழ்த்தப்பட்டுக் கொண்டிருக்கையில், அப்படி எதுவும் நடக்கவில்லை என்றும், படையினரின் நடவடிக்கைகளில் பொதுமக்களுக்கு எந்தவித பாதிப்புமே ஏற்படவில்லை என்றும் தாங்கள் கனரக ஆயுதங்கள், விமானக் குண்டு வீச்சுகள் போன்றவற்றைப் பயன்படுத்தவில்லை என்றும் கதைவிட்டுக் கொண்டிருக்கின்றது அரசு.
இவ்வாறு சிறுபிள்ளைத்தனமாகக் கருத்து வெளியிடுவதை அரசு உடனடியாக நிறுத்த வேண்டும் என மனோ கணேசன் எம்.பி. சுட்டிக்காட்டியிருக்கின்றார்.

யுத்தப் பிரதேசத்தில் சிக்குண்டுள்ள மக்களுக்குரிய அவசர, அவசிய மருத்துவப் பொருள்கள், உணவுப் பொருள்கள் போன்ற இன்னோரன்னவற்றை எடுத்துச் செல்லவோ, மனிதாபிமானத் தேவைகளை வழங்கி நிறைவு செய்யவோ சர்வதேச தொண்டர் அமைப்புகளுக்கு அனுமதி வழங்க மறுக்கின்றது கொழும்பு. ஐ.நா. முகவர் அமைப்புகளைச் சேர்ந்தோர் உட்பட சர்வதேச தொண்டுப் பணியாளர்களோ, சுயாதீன ஊடகவியலாளர்களோ மோதல் பிரதேசத்துக்குச் செல்ல முடியாமல் தடையை எதிர்நோக்குகின்றார்கள். மோதல் பிரதேசத்தில் சிக்கிப் பேரவலப்பட்டு, அங்கிருந்து வெளியேறி, "உள் நாட்டில் இடம்பெயர்ந்தோரின் மையங்கள்" என்ற பெயரில் முட்கம்பிகளுக்குப் பின்னால் அரசு ஏற்படுத்தியிருக்கும் தடுப்பு முகாம்களில் "சிறை" வைக்கப்பட்டிருக்கும் சுமார் இரண்டு லட்சம் தமிழர்களைக் கூட ஊடகவியலாளர்கள், சர்வதேசப் பிரமுகர்கள், தொண்டர் அமைப்புப் பிரதிநிதிகள் சுயாதீனமாகச் சென்று, சுதந்திரமாகச் சந்தித்து, ஒளிவுமறைவின்றி வெளிப்படையாகப் பேசி, உண்மைகளைக் கண்டறிய அனுமதி இல்லை.

ஏன், இத்தகைய தடுப்பு முகாம்களில் சிறைவைக்கப்பட்டிருக்கும் மக்களை, அவர்கள் தமது வாக்குகள் மூலம் தேர்ந்தெடுத்த நாடாளுமன்றப் பிரதிநிதிகள் கூட நேரில் சென்று சந்தித்துப் பேச முடியாத அளவுக்குத் தடுப்பு விதிகள் மிக இறுக்கமாகவும் தீவிரமாகவும் உள்ளன.
இவ்வாறு "சாட்சியம் ஏதும் இல்லாமல் ஒரு யுத்தம் முன்னெடுக்கப்படுவதை" தனது கெடுபிடிக் கட்டுப்பாடு கள் மூலம் உறுதிப்படுத்திக் கொண்டுதான் மக்கள் பேரழிவு பற்றிய ஐ.நா. அறிக்கைகளைக் கூட வெளிப் படையாக நிராகரித்துக் கண்டித்துப் புறந்தள்ளுகின்றது இந்த அரசு.

பாதுகாப்புத் தரப்பின் கெடுபிடிகளை மீறி சம்பவப் பிரதேசங்களுக்கு நேரில் சென்று உண்மைகளைக் கண்டறிந்து ஆதாரத்துடன் அம்பலப்படுத்த முயலும் ஊடகங்கள், ஊடகவியலாளர்கள் மீது அரசின் அதிகாரக் கரங்கள் பாய்வதும் இந்தப் பின்னணியில்தான். பிரிட்டிஷ் "சனல் 4" ஊடகவியலாளர்கள் நாடு கடத்தப்பட்டதும் கூட இந்த வரிசையில் இடம்பெற்ற ஓர் அதிகாரக் கெடுபிடித்தனம்தான்.

இந்தக் கொடூர யுத்த விவகாரத்தில் அரசுத் தரப்புக்கு மறைக்கப்பட வேண்டிய விடயங்கள் ஏதும் இல்லை என்று கொழும்பு பீற்றிக்கொள்வது உண்மை என்றால், ஐ.நா. பாதுகாப்புச் சபையில் இலங்கை சம்பந்தமான பொது விவா தத்திற்கு அரசு ஏன் மறுக்க வேண்டும், அச்சம் கொள்ள வேண்டும் எனப் பிரதான எதிர்க்கட்சியான ஐ.தே.க. எழுப்பியிருக்கும் கேள்வியும் முற்றிலும் நியாயமானதே.

"மடியில் கனமில்லை என்றால் வழியில் பயம் இல்லை" என்பார்கள். வன்னியில் தனது யுத்த நடவடிக்கைகளை சர்வதேச சட்ட விதிகளுக்கு அமைவாகவும், மக்களுக்குப் பாதிப்பில்லாமலும் தான் முன்னெடுப்பதாகக் கொழும்பு கூறுவது உண்மையென்றால், ஐ.நா.பாதுகாப்புச்சபையில் இவ்விடயம் குறித்து விவாதிக்க அஞ்சுவதேன்? அதற்கு முட்டுக்கட்டை போடுவது ஏன்?

வன்னியில் பொதுமக்களுக்கு அப்பாவித் தமிழர்க ளுக்கு நேர்ந்துள்ள கொடூரம் மிக மோசமானது. முழு உலகுக்கும் புரிந்த உண்மை அது.

இந்தத் தீவின் சிறுபான்மை இனத்தவரான தமிழர்கள் நீதி வேண்டி, நியாயம் கோரி, கௌரவமான சமத்துவமான வாழ்வைத் தேடி நடத்தும் உரிமைப் போராட்டத்தை எப்ப டியும் நசுக்கி, அடியோடு ஒடுக்கி, அவர்கள் மீதான பேரினவாதத்தின் ஆக்கிரமிப்பையும், அடிமைப்படுத்த லையும் தொடர்ந்து நிலைநிறுத்தி உறுதிசெய்ய வேண் டும் என்ற மேலாண்மைத் திமிரில் சிங்களம் மிகவும் திடமாக இருக்கின்றது. உரிமை கோரும் தமிழர்களுக்கு உரிய பாடம் படிப்பித்து, அவர்களை நிரந்தரமாக அடக்கி வைத் திருப்பதை உறுதி செய்வதற்காக எத்தனை ஆயிரம் அப் பாவித் தமிழர்களைக் கொன்றாலும் தப்பில்லை என்ற ஆதிக்க எண்ணப் போக்கே தென்னிலங்கை மக்களைப் பற்றிப் பீடித்து நிற்கின்றது. அதனால்தான் இத்தகைய மனிதப் பேரவலக் கொடூரம் வன்னியில் அரங்கேறும் போது புத்தரின் பக்தர்கள் அதைப் பாராட்டி, வர வேற்றுப் பார்த்திருப்பது மட்டுமல்லாமல், அந்தப் பேரழிவுகளை புளகாங்கிதத்துடன் வர வேற்கவும் செய்கின்றார்கள்.

பிரதான எதிர்க்கட்சியான ஐ.தே.க. கூட இந்த மனிதப் பேரவலக் கொடூரத்தைப் பட்டும் படாமலும் கண்டித்து வாளாவிருப்பதன் பின்னணியும் கூட இதுதான்.

நன்றி
- உதயன் -

Tuesday, May 12, 2009

"குற்றவாளி"

ஈழத் தமிழர்கள் மீதான இனப்படுகொலை தொடா்பாக தமிழ்நாட்டு ஊடகங்களின் மௌனமும் புதுடில்லி ஆட்சியாளர்களின் தமிழ்நாட்டு மக்கள் மீதான ஏளனமும் தொடர்பாக அலசுகின்றார் தமிழ்நாட்டில் இருந்து அ.பொன்னிலா.
"இராணுவச் சீருடையில் வந்த அவர்கள் மூன்றாவது பெண்ணின் உடைகளைக் களைந்தபோது நான் எனது கண்களை மூடிக்கொண்டேன். இம்மாதம் என் ஊதியத்தில் ஏதேனும் வெட்டு விழுமோ என்பதை நினைத்தபோது இறுக்க மூடிய கண்களை நான் கடைசி வரை திறக்கவே இல்லை."

ஜேர்மனியின் நாஜி முகாமில் யூதர்களுக்கு எதிரான இனப்படுகொலையின் போதோ,
பாலஸ்தீனத்தில் இன்று அமெரிக்க,
யூத அரசு பயங்கரவாதத்திற்கு எதிராகவோ,

ருவாண்டாவின் டுட்சிக்களுக்கு எதிரான ஹுட்டுக்களின் படுகொலைக் காலங்களின் போதோ எழுதப்பட்டதல்ல இந்தக் கவிதை.

ஈழத்தில் அன்றாடம் இனச் சுத்திகரிப்பில் நூற்றுக்கணக்கில் ஆயிரக்கணக்கில் தமிழ் மக்கள் கொல்லப்படும்போது அதைப் பார்த்து மௌனமாக இருக்கும் தமிழ்நாட்டு ஊடகங்களையும், ஊடக நண்பர்களையும் நினைத்த போது நான் எழுதித் தொலைத்த கவிதைதான் இது,

மௌனம் என்பதன் நேரடிப் பொருளான சம்மதம் என்பதை இலங்கையில் நடக்கும் அப்பட்டமான இனப்படுகொலைப் போரில் இந்தியாவின் நிலையில் இருந்து நாம் புரிந்து கொள்கிறோம்.

ஆனால், சம்மதம் என்கிற நிலையையும் கடந்து இன்றைய இந்தியா ஒட்டு மொத்த ஈழத் தமிழர் அழிப்பிற்கும் இலங்கை அரசோடு சேர்ந்தியங்குகிறது என்பதும் உண்மையாகி இருக்கிறது.

ஆளும் திமுக, காங்கிரஸ் கூட்டணியின் நெருக்கடியோடு ஊடக முதலாளிகளின் தொழில் ரீதியான தொடர்பு என்று இன்று ஆளும் திமுகவின் விருப்பங்களுக்கு ஏற்ப ஈழத்தில் அன்றாடம் கொல்லப்படும் மக்களின் செய்திகள் தமிழக ஊடகங்களில் முக்கியத்துவமற்று எழுதப்படுகின்றன.

கலைஞர் கருணாநிதியின் குடும்ப ஊடகங்களோ நேரடியாக இலங்கையில் போரே நடைபெறவில்லை என்பது போன்று பொய்ச் செய்திகளை வெளியிட்டு வருகின்றன.

அல்லது வவுனியா முகாமில் இராணுவ வீரன் ஒரு தமிழ் குழந்தைக்கு பிஸ்கெட் கொடுக்கிற படத்தைப் போட்டு சென்னையில் இருக்கும் சிறிலங்கா துணைத் தூதரக அதிகாரி அம்சாவுக்கு வாலாட்டிக் கொண்டிருப்பதன் மூலம் கொல்லப்பட்ட பல நூறு ஈழத் தமிழ் குழந்தைகளின் கொலைகளை கேள்விகளற்ற ஒன்றாக பெரும்பாலான தமிழ்நாட்டு ஊடகங்கள் மாற்றுகின்றன.

கொல்லப்படும் மனித உயிர்கள் குறித்த அக்கறை சிறிதளவு கூட இவர்களிடம் இல்லாமல் போனதை நாம் சமகாலத்தில் எதிர்கொள்கிறோம்.

தமிழ்நாட்டு ஊடகங்களின் மௌனம் இப்படி இருக்க, வட இந்திய ஆங்கில ஊடகங்களோ போர் நடைபெறும் பூமியான ஈழத்துச் செய்திகளில் இலங்கை அரசாங்கம் எதைக் கொடுக்கிறதோ அதை அப்படியே வாந்தி எடுத்து கொட்டிக் கொண்டிருக்கின்றன.

இவர்கள் புலிகளின் தோல்விக்கான நேரம் ஒன்றை கணித்துக்கொண்டு அதற்காகக் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.



புலிகளின் தோல்வியை ஒட்டுமொத்த ஈழ மக்களின் தோல்வியாக மட்டுமல்லாமல், இந்தியத் தமிழ் மக்களின் தோல்வியாகப் பார்க்கிற பார்வையின் வெளிப்பாடுகள்தான் இந்த ஆங்கில ஊடகங்களில் அப்பட்டமான இனவாதமாக உருவாகி இருக்கிறது.

இது எந்த அளவுக்கு மோசமான இனவாதச் சித்தரிப்பாக மாறியிருக்கிறது என்றால் வழக்கறிஞர்கள் ஈழத் தமிழர்களுக்காக போராடிய போது அதை பதிவு செய்கிற ஆங்கில ஊடகங்கள் அதை (pro tamils) அதாவது தீவீர தமிழ் ஆதரவாளர்கள் என்று பதிவு செய்கிறார்கள்

தமிழ்நாட்டில், தமிழர்களால், ஈழத் தமிழர்களுக்காக நடத்துகிற போராட்டத்தை தீவிர தமிழ் ஆதரவாளார்கள் என்று பதிவு செய்கிற திமிர் எங்கிருந்து வருகிறது.

இந்தியத் தமிழர் மீதான வெறுப்புதான் ஈழத் தமிழர் படுகொலைச் செய்திகளையும் பதிவு செய்ய மறுக்கிறது.

ஈழத்தில் புலிகள் வலுப்பெற்றால் அது இந்தியத் தமிழர்களுக்கான எழுச்சி அரசியலாக மாறிவிடும் என்றும் பார்க்கப்படுகிறது.

தமிழ் பேசும் பத்திரிகையாளர்கள் என்றால் சென்னையிலேயே செட்டில்மெண்ட்.

அதுவே ஆங்கிலம் பேசும் மேதாவிப் பத்திரிகையாளர்கள் என்றால் கொழும்புக்கு அழைத்துச் சென்று குளிப்பாட்டுகிறார்கள்.

பெரும்பாலான ஊடகவியாலாளர்கள் இலங்கை அரசால் வழங்கப்படும் சில நூறு டாலர்களுக்கு விலை போய்விட்டார்கள்.

'மக்கள்' தொலைக்காட்சி, அரசியல் காரணங்களுக்காக ஈழத்துச் செய்திகளுக்கு தற்போது முக்கியத்துவம் கொடுக்கும் 'ஜெயா' தொலைக்காட்சி தவிர்த்து பெரும்பாலான தமிழக ஊடகங்களில் நிலை இதுதான்.

இன்றைய தமிழகத்தில் இனப்படுகொலை பற்றிய விழிப்பு நிலை எதுவும் இல்லை என்றே தோன்றுகிறது.

அதே நேரத்தில் போருக்குப் பிந்தைய பேச்சான தனி ஈழம், அல்லது அதிகாரப் பகிர்வு குறித்து பேசப்படுகிறது. பேசப்படுவதோடு ஈழம் முழுமையான தேர்தல் பிரச்சினையாக மட்டுமே மாற்றப்பட்டிருக்கிறது.

தமிழக அரசியல்வாதிகளிடம் இன்றிருக்கும் வேகம் வாக்கெடுப்பு முடிந்த பிறகு இருக்குமா? என்பதும் தெரியாது ஆனால் நிரந்தரமான ஈழ விடுதலை ஆதரவாளர்களை கவர்ந்திருக்கும் ஜெயலலிதாதான் இன்று இவர்களுக்கு உற்சாக டானிக்.

தமிழ்நாடு தொடர்பான அச்சம் டில்லி காங்கிரஸ்காரர்களிடம் எந்த அளவுக்கு பரவிக் கிடக்கிறது என்பதற்கு இரண்டு உதாரணங்களைச் சொல்ல முடியும்.

ஒன்று சோனியாவின் வருகைக்காக சென்னை தீவுத்திடலில் பொதுக்கூட்ட மேடை ஒன்று அமைக்கும் பணி நடைபெற்றது. மேடை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் சிலரை அழைத்து மேடையை நோக்கி செருப்பை வீசச் சொல்லி செருப்பு விழுந்த தூரத்தை அளந்து அந்தப் பகுதிக்கு வெளியே பார்வையாளர்கள், பத்திரிகையாளர்கள், அமரும் பகுதியை அமைத்தார்களாம்.

அது போலவே பிரதமர் மன்மோகன் சென்னையில் பத்திரிகையாளர்களை சந்திக்க வந்தபோது பத்திரிகையாளர்கள் யாரும் கையில் எடுத்து வீசும் படியான எந்தப்பொருளையும் சந்திப்பு அறைக்கு கொண்டுசெல்ல அனுமதிக்கப்படவில்லை.

செல்போன், தண்ணீர் பாட்டில், போன்ற பொருட்கள் கொண்டு செல்ல அனுமதிக்கப்படாததோடு மன்மோகன் அமரும் மேடைக்கும் பத்திரிகையாளர்களுக்கும் இடையில் மிக நீண்ட இடைவெளி இருந்தது.

சோனியாவுக்கும் மன்மோகனுக்கும் மக்களுக்கும் இடையே மேடைகளில் ஏற்படுத்தப்பட்டிருந்த இடைவெளிதான் இனப்படுகொலை மீதான தமிழக மக்களின் கோபம்.

இந்த இருவருமே சென்னையை விட்டுக் கிளம்பிய பிறகு காவல்துறை அதிகாரிகள் விட்ட நிம்மதிப் பெருமூச்சுதான் தமிழக மக்களின் இனப்படுகொலை மீதான தார்மீக ரீதியிலான கோபம்.

சரி, மன்மோகன் எதற்காக சென்னைக்கு வந்தார். வந்து என்ன சொன்னார். என்றால் அவரது பத்திரிகையாளர் சந்திப்பில் பிரதானமாக இருந்தது ஐந்து விடயங்கள்தான்.

1. வடக்கு மக்களின் பாரம்பரிய பிரதேசங்களில் புதைக்கப்பட்டிருக்கும் கண்ணிவெடிகளை அகற்ற இந்திய இராணுவத்தினர் விரைவில் இலங்கைக்குச் செல்வார்கள். இந்திய இராணுவத்தினர் கண்ணிவெடிகளை அகற்றிய பிறகு முகாம்களுக்குள் அடைக்கப்பட்டிருக்கும் மக்கள் விரைவில் அவர்களின் வீடுகளுக்குத் திரும்புவார்கள்.

2. இப்போது எங்கள் கவனமெல்லாம் போரால் பாதிக்கப்பட்டு முகாம்களுக்குள் இருக்கும் மக்களைப் பற்றித்தான். அவர்கள் சம உரிமை பெற்று வாழ வேண்டும் என்பது பற்றித்தான்.

3. இலங்கை ஒரு பூரண இறையாண்மை உள்ள நாடு அப்படியான தேசத்திற்குள் நாம் தலையிடுவது முடியாது. அண்டை நாட்டிற்கு இராணுவ உதவிகள் செய்வதும் பயிற்சிகள் கொடுப்பதும் சகஜமான ஒன்று.

4. இலங்கைத் தமிழர்கள் சகல உரிமைகளையும் பெற்று ஒன்றுபட்டு இலங்கைக்குள் வாழ இந்தியா தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.

5. இந்தியாவின் கோரிக்கையை ஏற்று இலங்கை அரசு போரில் கனரக ஆயுதங்களை பயன்படுத்தவில்லை.

என்பதான ஐந்து கருத்துக்கள் பொதுவாக இருந்தது.

மேலே உள்ள ஐந்து கருத்துக்கள். குறித்தும் நாம் பல முறைப் பேசியாகி விட்டது.

இந்தியா இலங்கைக்கு இராணுவ உதவி செய்யவில்லை என்று இந்தியத் தரப்பும் இதுவரை மறுக்கவில்லை. மாறாக வெளிப்படையாகவே ஒத்துக்கொள்கிறது.

அது போல போர் நிறுத்தம் குறித்தும் இந்தியத் தரப்பு இதுவரை இலங்கை அரசிடம் கேட்கவில்லை.

சென்னைக்கு வந்த மன்மோகன் மறந்தும் போர் நிறுத்தம் என்ற வார்த்தையை பயன்படுத்தவில்லை.

மாறாக எப்போதெல்லாம் இந்தியத் தரப்பினர் கொழும்புவுக்கு சென்று பேசி வந்தார்களோ அப்போதெல்லாம் ஈழ மக்கள் மீதான இனப்படுகொலை முழு வீச்சுப் பெற்றது என்பதற்கு மிகச் சரியான சான்றாக மன்மோகன் சென்னையில் இருந்து கிளம்பிச் சென்ற சில மணி நேரங்களுக்குள் இலங்கை இராணுவம் தன் கொடூரத் தாக்குதலை தொடங்கி விட்டது.

கனரக ஆயுதங்களைக் கொண்டு 2 ஆயிரத்திற்கும் அதிகமான மக்களை இரக்கமற்ற முறையில் கொன்று குவித்திருக்கிறது.

நாம் தொடர்ந்து போர் நிறுத்தம் கேட்கிறோம். இவர்களோ கொல்லப்படுகிற நிர்க்கதியாய் விடப்படுகிற மக்களுக்கான நிவாரணங்கள் குறித்துப் பேசுகிறார்கள்.

அப்படியான நிவாரணங்களைச் செய்கிற யோக்கியதை இந்திய அரசுக்கோ தமிழக அரசிற்கோ இருக்கிறதா? என்றால் கொலைக்கு துணை போய்விட்டு சவங்களை அடக்கம் செய்ய பெட்டி தயாரித்து அனுப்புகிற செயலைத்தான் இந்தியா இப்போது ஈழத்தில் செய்து கொண்டிருக்கிறது.

இலங்கை இறையாண்மை உள்ள தேசம் என்றால்? ஈழ மக்கள் மீதான படுகொலையை தடுக்க இலங்கையின் இறையாண்மை மன்மோகனை தடுக்கும் என்றால் அப்படியான இறையாண்மை உள்ள தேசத்தில் கண்ணிவெடியை அகற்றுகிறோம் என்ற போர்வையில் இராணுவ வீரர்களை மட்டும் அனுப்புவது எந்த வகையில் இந்திய இறையாண்மைக்கு உகந்தது என்று ஒரு கேள்வியை யாராவது ஒரு பத்திரிகையாளர் கேட்பார் என்று எதிர்ப்பார்த்தோம்.

அதற்கான ஊடகச் சூழலே தமிழகத்தில் இல்லாதபோது நாம் மட்டும் புலம்புவதில் என்ன அர்த்தம் இருக்க முடியும்.

அண்டை நாட்டுக்கு ஆயுதப் பயிற்சியும் ஆயுதமும் வழங்குவது சகஜமென்றால் பாகிஸ்தானுக்கு இதே பயிற்சியை இந்தியா வழங்குமா?

அண்டை நாடான நேபாளத்தில் ஆட்சியமைத்த பிரதமர் பிரசந்தாவின் இராணுவத்துக்கு ஏன் இந்தியா பயிற்சியளிக்கவில்லை? மாறாக நேபாளம் சீனாவோடு நெருங்குகிறது என்பதற்காக நேபாளத்தில் இன்று அரசியல் ஸ்திரமற்ற சூழலை உருவாக்கியதே இந்தியாதானே?

நேபாளம் எந்த சீனாவோடு நெருங்குகிறதோ அதே சீனாவோடு இலங்கையும் நெருங்குகிறதே? இந்தியாவின் இந்துப் பிராந்திய நலன் கருதியாவது இந்தப் போரை முடிவுக்குக் கொண்டு வந்திருக்கலாமே? ஏன் சீனா இந்தியாவின் வடக்கு - கிழக்கில் விளையாடிக் கொண்டிருக்கிறது.

இப்பிராந்தியத்தின் சீனாவிடம் மோதி வெற்றிபெற முடியாது. என்கிற அச்சம் தானே இலங்கையில் இனப்படுகொலையில் இந்தியாவை கை நனைக்கத் தூண்டுகிறது.

மன்மோகன் வந்து சென்ற ஒரு இரவுக்குள் 2 ஆயிரம் கொலைகள். மறுநாள் மாலை சென்னை தீவுத்திடலில் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பேசுகிற சோனியா காந்தியோ இந்தியாவின் அழுத்தங்களால் இலங்கையில் போர் நின்றிருக்கிறது என்று பேசியிருக்கிறார்.

எவ்வளவு துணிச்சல் ஒரு பொய்யை மீண்டும் மீண்டும் இவர்கள் சொல்வதன் மூலம் பொய்யை மெய்யாக்கப் பார்க்கிறார்கள்.

ஒரு பிரதமர் பொய் பேசவும், பிரதமரை இயக்கும் ஒரு செல்வாக்குள்ள பெண்மணி பொய் பேசவும் பின்னால் இருந்து உற்சாகமளிப்பது தமிழ்நாட்டு முதல்வர் கருணாநிதிதான்.

இனப்படுகொலையில் பொறுப்பை எடுத்துக்கொள்ள வேண்டிய முதல்வரே பொய் சொல்கிறார். டில்லியில் இருந்து வந்து செல்கிற நாம் சொல்வது மட்டும் எப்படி பொய்யாக இருக்கும் என்று சோனியாவும், மன்மோகனும் பொய் சொல்கிறார்கள்.

பொய்யை உண்மை போலப் பேசுகிறார்கள்.

வளைக்குள் சிக்கியிருக்கும் முயல்கள் இரத்த வெள்ளத்தில் மிதப்பதைப் பார்த்து இவர்கள் ஏளனம் செய்கிறார்கள்.

இந்த நூற்றாண்டில் இது மன்னிக்க முடியாத மாபெரும் துரோகம். புலிகளை அழிக்கிறோம் என்ற பெயரில் கொல்லப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான மக்களின் இனப்படுகொலையின் சூத்திரதாரிகள் இவர்களே!

இன்றைக்கு ஈழம் என்கிற சுதந்திரமான தேசீய இன விடுதலைக் கருத்தியல் தமிழகத்தில் மிகவும் வலுப் பெற்றிருக்கிறது. அத்தோடு புலம்பெயர் நாடுகளில் ஒரு புதிய தலைமுறை உணர்வோடு வீதிக்கு வந்திருக்கிறது.

முப்பதாண்டுகால ஈழ விடுதலை ஆயுதப் போரில் இது மூன்றாம் தலைமுறைக்கான போராட்டம். அவரவர் வழியில் அவரவரால் இயன்ற அளவு போரடுவோம்.

இந்தியாவின் விருப்பத்திற்கிணங்க அல்ல, இரத்தவெறி கொண்ட பாசிச பயங்கரவாத இலங்கை அரசின் ஒடுக்குமுறைகளுக்கிணங்க அல்ல மாறாக நமக்காக நமது மக்களுக்காக குரல் கொடுப்போம்.

நமது மக்களை இனப்படுகொலைகளில் இருந்து காப்போம்.

உலகத்தை விழித்திருக்கச் செய்வோம்.

முதலில் போர் நிறுத்தம் செய்!

மக்களை அவர்களின் இல்லங்களுக்கு அனுப்பு.

இலங்கை இராணுவத்தை தமிழர் பகுதிகளில் இருந்து வெளியேற்று.

சுதந்திர தமிழீழத்தை அங்கிகரி..

இதுதான் இன்றைய உலகின் முன்னால் நாம் முன்வைக்க வேண்டிய முழக்கம்.

(இக்கட்டுரைக்கு பொருத்தமான ஓவியம் ஒன்றை வரைந்து தந்த நண்பரும் மாணவருமான புதியவனுக்கு நன்றி)

அ.பொன்னிலா

Monday, May 11, 2009

அவலம் நிறைந்த அகதி வாழ்வு தொடருமா?...

அகதி முகாம் வாழ்க்கை என்பது தமிழினத்திற்கே சொந்தமான இன்னுமொரு வாழ்க்கை முறையா? என்ற கேள்வி தற்போது சகல தமிழனது மனதிலும் எழுந்துள்ளது.

வெவ்வேறு கொள்கைகள் உடைய இரு தரப்பினர் உள்நாட்டில் போர் புரிகின்றனர். ஒரு தரப்பினர் நாட்டிற்காக எனவும், இன்னுமொரு தரப்பினர் இனத்திற்காக எனவும் கூறிக்கொண்டு களத்தில் இறங்கி சண்டை புரிகின்றனர். இந்தப் போர் மூன்று தசாப்த காலமாக நடைபெற்றுவருகிறது. ஆனால், நடைபெற்று வரும் இப் போரிற்கு சம்பந்தமே இல்லாத ஒரு பகுதியினர் தண்டிக்கப்படுவது தர்மமாகுமா?

போர்ச் சூழலினால் பாதிக்கப்பட்டு, தற்போது வவுனியாப் பிரதேசத்தில் காணப்படும் ஓர் அகதிமுகாமைப் பார்வையிடும் சந்தர்ப்பம் கிடைத்தது. பிரதமரின் அலுவலகத்தினர் மேற்படி முகாமைப் பார்வையிட்டு, அங்கு வாழ்கின்ற அப்பாவிமக்களுக்கு நிவாரணங்களை வழங்கி, ஆறுதல் கூறினர். கடந்த வாரத்தில் கொழும்பில் இருந்து சில ஊடகவியலாளர்களையும் அழைத்துக் கொண்டு பிரதமரின் ஊடகப் பிரிவு, வவுனியா காமினி மகா வித்தியாலயத்தில் தங்கவைக்கப்பட்டுள்ள இடம்பெயர்ந்துள்ள தமிழ் மக்களைப் பார்வையிட சென்றனர். இவ் விஜயத்தின் நோக்கம், பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்குதலுடன், அன்றைய தினம் அவர்களுக்கு மதிய உணவினையும் வழங்குதலுமாகும். அந்த ஏற்பாடுகள் சிறப்பாக நடைபெற்ற போது, பாதிக்கப்பட்ட மக்களுடன் உரையாடும் சந்தர்ப்பம் சகல ஊடகவியலாளர்களுக்கும் கிடைத்தது.

வவுனியா காமினி மகாவித்தியாலயத்தில் இயங்கும் தற்காலிக முகாமின் பணியானது, போரின் போது இடம் பெயர்கையில் காயங்களுக்கு உள்ளாகும் பொதுமக்களை வைத்தியசாலை சிகிச்சைக்குப் பின் பராமரித்தலாகும். மேற்படி முகாமில் 781 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 1,820 பேர்கள் வரை தங்கவைக்கப்பட்டுள்ளனர். இம் முகாமில் பெண்களும், சிறுவர்களுமே அதிகமாக உள்ளனர். குறிப்பாக, குழந்தைகளைப் பெற்று ஒரு மாதத்திற்கு உட்பட்ட பல தாய்மார்களும் இங்கு காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

உணவும் நிவாரணமும்

முகாமில் தங்கியுள்ள மக்கள் தங்களுக்கான உணவினை குழுவாகச் சேர்ந்து சமைத்து உண்ணுகின்றனர். 250 பேர்கள் அல்லது 300 பேர்கள் கொண்ட குழுக்களாகப் பிரிந்து, மேற்படி உணவுத் தேவைகளையும் ஏனைய அத்தியாவசியதேவைப்பாடுகளையும் மேற்கொள்வதாக சமைக்கும் பணியில் ஈடுபட்ட பொதுமக்களில் சிலர் தெரிவித்தனர். நிவாரண உதவிகள் எங்களுக்குப் போதுமான அளவிற்குக் கிடைக்கின்றது. ஆனாலும் குழந்தைகளினதும், விசேடமாக பெண்களினது அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவதற்கான வசதி வாய்ப்புக்கள் குறைவாகவே காணப்படுகின்றன. பெரும்பாலும் பிறந்த 1 அல்லது 2 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்குத் தேவையான பால்மா வகைகள், சருமப் பராமரிப்புப் பொருட்கள் (பவுடர், கிறீம், ஓடிக்கொலோன்) போன்றவை தட்டுப்பாடாகவே உள்ளன. குறிப்பாக, இரண்டு மாதங்களுக்கு உட்பட்ட குழந்தைகளும் இம் முகாமில் உள்ளமையால் மேற்படி தேவைகள் மிக அத்தியாவசிய அவசரத் தேவையாக உள்ளதாகவும் இளம் தாய்மார்கள் தெரிவித்தனர். இதேபோன்று, குழந்தைகளைப் பிரசவித்து ஒரு சில தினங்களேயான தாய்மார்களுக்கான போஷாக்கு உணவு, பால்மா போன்றவற்றிக்கு பாரிய தட்டுப்பாடு நிலவுவதாகவும் இளம் தாய்மார்கள் தெரிவித்தனர்.

சுகாதாரம்

அகதி முகாமில் சுகாதா நலனோம்பு விடயங்களை சிறந்த முறையில் எதிர்பார்க்க முடியாது. இதற்கு காமினி வித்தியாலயமும் விதிவிலக்கல்ல. இங்க சுகாதாரப் பிரச்சினைகள் அதிகளவு உள்ளதாக பொதுமக்கள் குறைப்பட்டுக்கொண்டனர். குறிப்பாக, குழந்தைகளினதும் பெண்களினதும் சுகாதாரப் பிரச்சினைகள் உச்ச நிலையை அடைந்துள்ளதாகத் தெரிவிக்கின்றனர்.

நோய்கள்

இம்முகாமில் தங்கியுள்ள பொதுமக்களில் அநேகமானவர்களுக்கு கைகளிலும், கால்களிலும் சிறு சிறு புண்கள் காணப்படுகின்றன. இது தொடர்பாக பாதிக்கப்பட்ட நோயாளர்கள் கூறுகையில், யுத்தத்தினால் தாம் இடம்பெயர்ந்து வருகையில், கழுத்தளவிற்கு நீர் நிறைந்த குழிகள் உள்ள பாதைகளைக் கடக்க வேண்டியிருந்தது. இந்த அசுத்த நீர் எமது உடல்களில் பட்ட பின்பு ஓரிரு தினங்களில் சிறு சிறு புண்கள் தோன்றியதுடன், பெரும் அரிப்பும் ஏற்பட்டது. அவற்றுக்கான மருந்து வழங்கப்பட்ட போதும் இப் புண்கள் பூரணமாகக் குணமடையவில்லை. மேலும், இம் முகாமில் வாழும் சிலருக்கு வாந்தி, மயக்கம், காய்ச்சல், தலைவலி, போன்ற அறிகுறிகள் காணப்படுவதோடு உணவு உட்கொள்ள முடியாமல் உள்ளதாகவும் நோயாளி ஒருவர் குறிப்பிட்டார். வைத்தியர்கள் தொடர்ந்தும் சிகிச்சைகள் அளிக்கின்றமையால் நோய்கள் பரவாமலும், பாதிப்புக்கள் குறைவாகவும் உள்ளதாகத் தெரிவித்தனர்.

கல்வி ஏனையவை

முகாமில் உள்ள சிறார்களின் கல்வித் தேவையைக் கருத்தில் கொண்டு, இடம் பெயர்ந்து வந்து அதே முகாமில் இருக்கும் ஆசிரியர்கள் இருவரினால் தற்காலிகமாக மரநிழலில் மாணவச் சிறார்களுக்கு கல்வி கற்பிக்கப்படுகின்றது. மேலும், தமது உறவுகளுடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ள வசதியாக முகாமிற்குள் தபால் சேவையும் நடத்தப்படுகின்றது. முகாம் வாழ் மக்களின் கருத்து முகாம் வாழ்க்கை பற்றி எம்மால் கூறுவதற்கு ஒன்றும் இல்லை. எமது மண்ணில் பல வசதி வாய்ப்புக்களுடன் வாழ்ந்த நாம், இன்று அனைத்தையும் இழந்தவர்களாகவும் சபிக்கப்பட்ட இனமாகவும் வாழ்கின்றோம். எம்மை ஒரு காட்சிப் பொருளாகவே சகலரும் பார்க்கின்றனர். இன்று நாங்கள் வெறும் நடைப்பிணங்களே. எம் உணர்வுகள் அனைத்தும் அழிந்துபோய் விட்டன. நான் இந்த முகாமில் இருக்கின்றேன். எனது கணவன், பிள்ளைகள் தொடர்பில் எந்தத் தகவலும் இல்லை. இதேபோன்றே, ஏனையோரும் தத்தமது உறவுகளைப் பிரிந்து வாழ்கின்றமை கொடுமையானதொன்று எனப் புலம்புகின்றனர்.

ராஜேஸ்வரி (வயது 21)

போரினால் பாதிக்கப்பட்ட நிலையில், புதுக்குடியிருப்பு ஆனந்தபுரம் ஊடாக நானும் எனது குடும்பத்தாரும் இடம் பெயர்ந்தோம். இடம்பெயர்கையில் ஷெல் தாக்குதலுக்கு இலக்காகிக் காயமடைந்த நிலையில், வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையின் பின்பு இம் முகாமிற்கு அழைத்து வரப்பட்டேன்.

என்னுடன் வந்த அம்மா, அப்பா, அக்கா, இரண்டு தம்பிமார்கள் தொடர்பில் எதுவித தகவலும் இதுவரையில் இல்லை. இவர்கள் தொடர்பாக முகாமிற்கு வரும் அதிகாரிகளுடன் வினவிய போது, அவர்கள் பாதுகாப்பாக வேறொரு முகாமில் உள்ளதாகத் தெரிவித்தனர். என் மனநிலை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. எனது உறவுகள் மீண்டும் எம்முடன் இணைவார்களா என கண்ணீர் மல்க ராஜேஸ்வரி கூறினார்.

நகுலேஸ்வரன் ஜெயசீலி (வயது 37)

நான் புதுமாத்தளன் பகுதியிலிருந்து இடம்பெயர்ந்து வந்தேன். வரும் போது, எனது பிரசவ நாள் மிக அண்மித்துக் காணப்பட்டதால், என்னை எனது கணவர் பல சிரமங்களுக்கு மத்தியிலேயே அழைத்து வந்தார். இன்று எனக்கு குழந்தை பிறந்து 15 நாட்களே ஆகின்றன. குழந்தைக்குத் தேவையான எந்தப் பொருளுமே என்னிடம் இல்லை. இந்த முகாமில் நானும் 15 நாட்களேயான எனது குழந்தையும் மாத்திரம் ஆதரவற்ற நிலையில் உள்ளோம். எனது உறவுகள் தொடர்பில் எவ்வித தகவலும் இல்லை. மொழிப் பிரச்சினையால் என்னால் எனது குழந்தையின் பிறப்புச் சான்றிதழைக்கூட எடுக்கமுடியவில்லையென அழுது புலம்பினார்.

நந்தகுமார் (வயது 45)

நான் எனது மனைவி, ஐந்து பிள்ளைகளுடன் புதுமாத்தளனிலிருந்து கடும் போர்ச் சூழலிற்கு மத்தியில் இடம்பெயர்ந்தோம். ஷெல் தாக்குதலினால் காயமடைந்த நிலையில் காடுகள் வழியாகவும், நீர் ஓடைகள் ஊடாகவும் பாதுகாப்பான இடம்தேடி ஏனையோருடன் வந்தோம். இடையில் நான் வேறாகவும் மனைவி, பிள்ளைகள் வேறாகவும் பிரிந்துவிட்டோம். இன்று வரை அவர்கள் தொடர்பில் எவ்வித தகவலும் இல்லை என கண்கள் சிவந்த நிலையில் தெரிவித்தார்.

அனிட்டா (வயது 27)

சகல பொருட்களையும் கைவிட்ட நிலையில் நான் எனது கணவர், அம்மா, பிள்ளைகள் எல்லோருமாக இடம்பெயர்ந்தோம். நிறைமாதக் கர்ப்பிணியாக இருந்த நான் இம்முகாமிற்கு வந்த பின் குழந்தையைப் பிரசவித்தேன். தற்போது எனக்கு குழந்தை பிறந்து 1 1/2 மாதம் ஆகின்றது. ஆனால், எனது குழந்தையைப் பற்றியோ, எனது நிலைமை குறித்தோ எனது கணவருக்குத் தெரிவிக்கமுடியாத நிலையில் உள்ளேன். காரணம், நாம் வரும் போது இடையில் பிரிக்கப்பட்டமையால் தகவல் எதனையும் பரிமாறிக்கொள்ள முடியாத நிலையில் உள்ளோம்.

மகேஸ்வரி (வயது 37)

நானும் எனது கணவரும் ஒன்றாகவே இம் முகாமிற்கு வந்தோம். எனது கணவர் புலிகளுடன் தொடர்புடையவர் என சந்தேகத்தின் பேரில் கொண்டு செல்லப்பட்டார். ஒருவாரம் ஆகியும் இதுவரையில் கணவரை விடுவிக்கவில்லை. எனது கணவரின் பெயர் சதாசிவம் பாஸ்கரன் (வயது 45). இவர் புலிகளுடன் தொடர்புடையவர் அல்ல. உடனடியாக அவரை விடுவிக்க நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளைக் கேட்டுக் கொண்டார்.

நவநீதன் (வயது 10)

கிளிநொச்சிப் பிரதேசத்திலிருந்து இடம் பெயர்ந்தோம். வரும் வழியில் கடும் ஷெல் வீச்சுக்களுக்குள் சிக்கி எனது ஒரு காலை இழந்ததுடன், எனது அக்காவின் ஒரு கையும் துண்டிக்கப்பட்டு விட்டது. எனக்கு முன்பு போல விளையாடவோ, பாடசாலைக்கு செல்லவோ விருப்பமில்லாமலேயே உள்ளது. எனது சொந்த வீட்டிற்கு செல்லவேண்டும். அதுவே எனது ஆசை என அச்சிறுவன் தெரிவித்தான்.

வேண்டுகோள்


யுத்தத்தின் அகோரம் அப்பாவிகளான எங்களை பூச்சிய நிலைக்கே தள்ளியுள்ளது. எஞ்சியுள்ள உறவுகளும் உடல் உயிருமே எமது எதிர்கால குறுகிய எதிர்பார்ப்புக்கள். நாங்கள் இடம்பெயர்ந்தது வாழவேண்டும் என்ற ஆசையிலேயே. அது தமிழர்களாகிய எங்களுக்குப் பேரõசையா? அப்படியானால், அப்படித் தெரிந்திருந்தால், சொந்த மண்ணிலேயே மாண்டு போயிருப்போம். நம்பிக்கையோடும் எதிர்பார்ப்புக்களுடனும் வந்த எங்களை தனித்தனியே பிரித்து வைத்து எஞ்சியுள்ள உயிரையும் பறிக்க வேண்டாம். எங்களை எமது உறவுகளுடன் சேர்த்து வைக்க விரைவில் நடவடிக்கை எடுங்கள். பிறந்த குழந்தையின் முகத்தைப் பார்க்காத தந்தை, மனைவியைக் காணாத கணவன், பிள்ளைகளைக் காணாத பெற்றோர், பெற்றோரைக் காணாத பிள்ளைகள், ஒருவருமே இல்லாத அநாதை என எத்தனைத் துன்பங்கள் இந்த முகாமில் எம்மைச் சூழ உள்ளன. அத்தனையையும் மனதில் அடக்கி வைத்துக் கொண்டு சிறிய எதிர்ப்பார்ப்புக்களையும் மனதில் சிறைவைத்துக் கொண்டே வாழ்கின்றோம். எஞ்சிய எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற சம்பந்தப்பட்டவர்கள் நடவடிக்கை எடுப்பார்களா? எமது மண்ணில் மீண்டும் வாழும் சந்தர்ப்பம் வருமா? இல்லையேல் அகதி முகாம் வாழ்க்கை தொடருமோ என்ற பல கேள்விகளுக்கான பதில்கள் கிடைக்கப் பெறாத நிலையே உள்ளது. இம் முகாம்களில் பிறந்த குழந்தைகளுக்கு பிறப்புச் சான்றிதழ் உட்பட ஏனைய ஆவணங்கள் தொடர்பில் கவனம் செலுத்துமாறு பாதிக்கப்பட்ட தாய்மார்கள், சம்பந்தப்பட்டவர்களிடம் வேண்டுகோள் விடுப்பதுடன், தம்மைப் பார்வையிட வரும் உறவுகளை முகாமிற்குள் வர அனுமதிக்குமாறும் கேட்டுக் கொள்கின்றனர்.

நன்றி
- வீரகேசரி -