Saturday, May 23, 2009

மனிதநேய உதவிகள் கிட்டுவதற்கு ஐ.நா. செயலர் வழி செய்வாரா?

வெற்றிக்களிப்பில் திளைத்துக் கொண்டாட்ட மகிழ்ச்சியில் மூழ்கிக் கிடக்கும் கொழும்புக்குப் பட்ட வர்த்தனமாக போட்டு உடைப்பதுபோல ஒரு விட யத்தை எடுத்துக் கூறியிருக்கின்றது வாஷிங்டன்.

அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் ஹிலாரி கிளின்ரன் நேற்று முன்தினம் தொலைபேசி மூலம் தாமே நேர டியாக இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் தொடர்புகொண்டு பேசி இந்த விடயத்தை எடுத்துரைத் திருக்கின்றார்.

தமிழ் ஈழ விடுதலைப் புலிகளின் தலைமையைக் கூண்டோடு அழித்து, மூன்று தசாப்த கால யுத்தத்தை இலங் கைத் தீவில் முடிவுக்குக் கொண்டுவந்து விட்டதாக இலங்கை வெற்றிக்களிப்பில் இருக்கும் இச்சமயத்தில் தான் அமெரிக்கா இந்தக் கருத்தை ஆணித்தரமாக எடுத்துரைத் திருக்கின்றது.

யுத்தம் முடிவுக்கு வந்துவிட்டதாக அறிவிக்கப்படும் இச்சமயத்தை ஒட்டி இலங்கை அரசு எப்படி நடந்து கொள்கின்றது, எப்படிச் செயற்படுகின்றது என்பதில்தான் இலங்கையின் எதிர்கால அமைதியும், சமாதானமும் தங்கி நிற்கின்றன எனச் சுட்டிக்காட்டியிருக்கின்றது அமெரிக்கா.

யுத்தப் பேரவலக் கொடூரங்களில் சிக்குண்டு மிக மோசமாகப் பாதிக்கப்பட்டு அவதியுறும் பல்லாயிரம் தமிழர்களுக்கும் அவசரமாகவும் அவசிய மாகவும் தேவைப்படுவது மனிதநேய அரவணைப்பு, மருத்துவ உதவி, ஆறுதல் சூழல், கௌரவமான வாழ்க்கை, உற்றார் மற்றும் உறவுகள் போன்றோரின் நிலைமை பற்றிய தகவல் என்பனவாகும். முட்கம்பி வேலிகளுக்குப் பின்னால் வெயில் தகிக்கும் கூடாரங்களுக்குள் மந்தைகள் போல் அடைபட்டு,காயங்களுடனும், நோய்களுடனும், பட்டினியுடனும், சின்னாபின்னமாகிப் பிரிந்து போன உறவுகள் மற்றும் உடைமைகள் பற்றிய வாட் டும் நினைவுகளுடனும் பேரவலப்படும் அவர்களுக்கு மிக விரைந்து தேவைப்படுவது உயிர் வாழ்க்கை மீதான பிடிப்பை ஏற்படுத்தும் பற்றுதல் பற்றிய எண்ணமும் ஆறுதலும்தான்.

இன ரீதியாக, சமுதாய ரீதியாக, சமூக ரீதியாக அடக்கப்பட்டு, ஒடுக்கப்பட்டு, அவமானப்படுத்தப்பட்டுள் ளோம் என்ற மனவேதனையில் இருந்து விரைந்து விடுபடும் வாய்ப்பும் சூழலும் அவர்களுக்கு வழங்கப்பட வேண்டும். ஆனால் அதனை அளிக்கும் தாராளம் ஆட் சிப் பீடத்துக்கு இருப்பதாகத் தெரியவில்லை.

"விடுதலைப் புலிகளை அழிப்பதற்கான இறுதிக் கட்ட யுத்தம்" என்ற பெயரில் கொழும்பு எடுத்த படை நடவடிக்கையின் போது பல்லாயிரக் கணக்கில் மக்கள் உயிரிழந்தார்கள்; படுகாயமடைந்தார்கள்; குற்றுயிரும் குறையுயிருமாக வீழ்ந்தார்கள்.

ஆனால் புலிகளுக்கு எதிரான அந்த யுத்தத்தில் இறுதி வெற்றி என்ற சாதனையைப் பொதுமக்களின் இரத்தம் சிந்தப்படாத வகையில் முன்னெடுத்து இராணுவத்தினர் பெரும் அதிசயத்தை நிகழ்த்தியிருக்கின்றார்கள் என்ப தாக கதை விடுகின்றது கொழும்பு அரசியல் தலைமை.

இந்தப் படை நடவடிக்கையில் மக்களுக்கு ஏற்பட்ட பேரழிவை ஒப்புக்கொள்ளாமல் கருத்து வெளியிடுவதன் மூலம் அரசுத் தலைமை தவறு இழைக்கின்றது என்பதை அரசில் உள்ள தமிழ் பேசும் அமைச்சர் ஒருவரே இந்திய நாளிதழ் ஒன்றுக்கு வழங்கிய பேட்டியில் ஒப்புக்கொண்டிருக்கின்றார் எனச் செய்திகள் வெளியாகின.

இவ்வாறு தமிழ்மக்கள் மீது இழைக்கப்பட்ட கொடூரத்தை மூடி மறைத்துக்கொண்டு தொடர்ந்தும் அவ்வாறு மூடிமறைக்கும் கபட எண்ணத்துடன், பாதிக்கப்பட்ட தமிழ் மக்களை சர்வதேசத் தரப்புகள் தொடர்பு கொண்டு உதவி வழங்குவதைத் தடை செய்யும் வகையில் அதிகாரத் தரப்பு செயற்படுகின்றமை ஆரோக்கியமான சூழலைத் தரப் போவதில்லை.
இலங்கை அரசுத் தலைமைக்கு அமெரிக்கா சுட்டிக்காட்டியிருக்கின்றமை போல, யுத்தம் முடிவுற்று விட்டதாக இலங்கை அரசு அறிவித்துள்ள இச்சமயத்தில், அது எடுக்கப்போகின்ற நடவடிக்கைகளும் செயற்பாடும் தான் இத்தீவின் எதிர்கால அமைதி குறித்தும் சமாதானம் பற்றியும் தீர்மானிக்கப் போகின்றன.

இலங்கைக்கு விஜயம் செய்யும் ஐ.நா. செயலாளர் பான் கீ மூன் இந்த விடயத்தில் அதி தீவிர கவனம் செலுத்த வேண்டியவராக இருக்கின்றார்.

உலக நாடுகளின் சர்வதேசத் தரப்பின் பொது மன்றமாகத் திகழ்வது ஐக்கிய நாடுகள் சபை. அதன் செயலாளர் நாயகம் என்ற வகையில் உலகின் எங்கோ ஒரு மூலையில் ஓர் இனத்துக்கு எதிராகக் கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும் இனவழிப்புக் கொடூரம் குறித்து தகுந்த நடவடிக்கைகளை விரைந்து எடுக்க வேண்டிய தலையாய பொறுப்பு அவருக்கே உண்டு. ஆனால் அப்பாவித் தமிழர்கள் மீது யுத்தக் கொடூரம் எரிமலையாக சூறாவளிப் புயலாக கட்டவிழ்த்து விடப்பட்டபோது, கடந்த வார இறுதி வரை, தனது விசேட தூதுவரை இலங் கைக்கு அனுப்புகிறேன், கண்டனம் தெரிவிக்கிறேன் என் றெல்லாம் வெறுமனே வாய்ப்பந்தல் அறிக்கைகளை வெளியிட்டமையைத் தவிர, அவர் பாதிப்புற்ற தமிழ் மக்களுக்கு ஆறுதலளிக்கும் விதத்திலோ, மீட்சி கிட்டும் வகையிலோ, பலன் தரும் போக்கிலோ கிஞ்சித்தும் எதுவுமே உதவ வில்லை, அதனை நாடிச் செயற்படவுமில்லை என்பது தான் வெளிப்படையான உண்மை.

யுத்தம் முடிவுற்று விட்டதாக அறிவிக்கப்பட்ட பின்னராவது சர்வதேசத்தின் மனிதநேய உதவிகள் அந்த மக்களுக்கு விரைந்து கிட்டுவதற்கான காத்திரமான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு கொழும்பு அரசை அவர் இணங்கச் செய்வாரா?
அதனை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்!

நன்றி
- உதயன் -

0 Comments: