மூன்று தசாப்தகால உள்நாட்டுப் போர் முடிவடைந்துவிட்டதாக கடந்த வாரம் பிரகடனம் செய்திருக்கும் இலங்கை அரசாங்கம் தமிழ் மக்களின் நியாயபூர்வமான அரசியல் அபிலாசைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய அரசியல் தீர்வொன்றைக் காண்பதற்கு எத்தகைய உருப்படியான செயற்பாடுகளை முன்னெடுக்கும் என்பதே சர்வதேச சமூகத்தின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. போர் வெற்றிக்குப் பிறகு இலங்கையின் சமூகங்கள் மத்தியில் மீண்டும் நல்லிணக்கத்தை ஏற்படுத்தி நிரந்தரமான அரசியல் தீர்வைக் காண வேண்டுமென்று உலக நாடுகள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துக் கொண்டிருப்பதையும் காணக்கூடியதாக இருக்கிறது. மோதல்கள் இடம்பெற்ற பகுதிகளில் இருந்து இடம்பெயர்ந்து அகதிமுகாம்களில் தங்கியிருக்கும் 3 இலட்சத்துக்கும் அதிகமான தமிழ் மக்களுக்கான நிவாரண மற்றும் புனர்வாழ்வு நடவடிக்கைகளை மேற் கொள்வதே உடனடித் தேவையாக இருக்கின்றபோதிலும் கூட, போருக்குக் காரணமாயமைந்த இனநெருக்கடிக்கு அரசியல் தீர்வைக் காணுகின்ற விடயத்தில் காலத்தை இழுத்தடிக்கக்கூடிய எந்தவொரு போக்கையும் சர்வதேச சமூகம் விரும்பப் போவதில்லை என்பதை உணரக்கூடியதாக இருக்கிறது.
போரின் முடிவை உறுதி செய்யும் தகவலை இந்திய வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜிக்கு தொலைபேசி மூலம் ஜனாதிபதி ராஜபக்ஷ கடந்த வாரம் தெரிவித்த உடனடியாக இந்திய வெளியுறவு அமைச்சு விடுத்த அறிக்கையிலும் இலங்கையில் சகல சமூகங்களும் கௌரவமாகவும் சுதந்திரமாகவும் வாழ்வதற்கு ஏற்றவகையில் பயனுறுதியுடைய அதிகாரப் பரவலாக்கலைச் செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டிருந்தது. கடந்த வியாழக்கிழமை கொழும்புக்கு விஜயம் செய்திருந்த இந்திய தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணனும் வெளியுறவுச் செயலாளர் சிவ் சங்கர் மேனனும் ஜனாதிபதி ராஜபக்ஷடன் நடத்திய பேச்சுவார்த்தைகளின் போது இனநெருக்கடிக்கு நிரந்தர அரசியல் தீர்வைக் காண்பதற்கான தேவை வலியுறுத்தப்பட்டது. இவர்கள் இருவரினதும் கொழும்பு விஜயத்தின் இறுதியில் வெளியிடப்பட்ட கூட்டறிக்கையிலும் அரசியல் தீர்வு பற்றிய விடயம் முக்கியமானதாக இடம்பெற்றிருக்கிறது.
ஜனாதிபதி ராஜபக்ஷவுடனான சந்திப்புக்குப் பிறகு கொழும்பில் செய்தியாளர்களுடன் பேசிய மேனன் இலங்கையில் முதற்தடவையாக அதிகாரப் பரவலாக்கலுக்கு வழிவகுத்த 1987 ஜூலை இந்திய இலங்கை சமாதான உடன்படிக்கையின் ஏற்பாடுகளுக்கு அப்பாலும் செல்வதற்கு இலங்கை தயாராயிருக்கிறது போலத் தெரிகிறது என்று கூறியிருந்தார். தங்களது பேச்சு வார்த்தைகள் சமாதான உடன்படிக்கை வரையறைக்குள் தான் அமைந்திருந்தன என்று தெரிவித்த மேனன் ஜனாதிபதி ராஜபக்ஷ இலங்கை அரசியலமைப்புக்கான 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கு மாத்திரமல்ல, அதற்கு அப்பால் அதிகாரங்களைப் பரவலாக்கம் செய்யவும் தயாராகியிருக்கிறார் என்று குறிப்பிட்டிருந்தார். கடந்த செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தில் உரையாற்றிய ஜனாதிபதி ராஜபக்ஷ இந்திய இலங்கை சமாதான உடன்படிக்கை பற்றி எதுவும் குறிப்பிடவில்லையென்று நாராயணனிடம் செய்தியாளர்கள் சுட்டிக்காட்டியபோது அதற்குப் பதிலளித்த அவர் இலங்கை ஜனாதிபதி மாகாணங்களுக்குக் கூடுதல் அதிகாரங்களை பரவலாக்கம் செய்யும் விடயத்தில் சமாதான உடன்படிக்கையையும் அரசியலமைப்புக்கான 13 ஆவது திருத்தத்தையும் ஏற்றுக் கொள்கிறார் என்று கூறியிருந்தார்.
அரசியலமைப்புக்கான 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவது மாத்திரமல்ல, அதற்கு அப்பாலும் கூடச் செல்வதற்கு ஜனாதிபதி ராஜபக்ஷ தயாராயிருப்பதாக இவர்கள் இருவரும் கூறுகின்ற அதேவேளை, ஜனாதிபதியோ கடந்த வாரம் பாராளுமன்றத்தில் ஆற்றிய உரையில் வெளிநாட்டு வட்டாரங்களினால் சிபாரிசு செய்யப்படும் தீர்வு யோசனைகளை பரீட்சித்துப் பார்ப்பதற்கு தங்களுக்கு நேரமில்லை என்றும் உள்நாட்டு நிலைவரங்களுக்கு இசைவாக வகுக்கப்படக்கூடிய ஒரு அரசியல் தீர்வையே நடைமுறைப்படுத்துவதற்கு விரும்புவதாகவும் தெரிவித்திருக்கிறார். முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியும் முன்னாள் இலங்கை ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தனவும் 22 வருடங்களுக்கு முன்னர் கைச்சாத்திட்ட சமாதான உடன்படிக்கை குறித்து ஜனாதிபதி ராஜபக்ஷவுக்கு அக்கறை பிறந்தது கடந்த வருடம் ஜனவரியில் தான். அதற்கு முன்னர் அந்த உடன்படிக்கை குறித்து சாதகமாக எதையுமே அவர் கூறியதாக நாம் அறியவில்லை. 2008 ஜனவரி நடுப்பகுதியில் இந்தியாவின் என்.டி.ரி.வி. தொலைக்காட்சிச் சேவையின் "வோக் த ரோக்' நிகழ்ச்சியில் இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் சேகர் குப்தாவுக்கு பேட்டியொன்றை அளித்த ஜனாதிபதி ராஜபக்ஷ இந்தியஇலங்கை சமாதான உடன்படிக்கையில் விதந்துரைக்கப்பட்டிருக்கும் அதிகாரப் பரவலாக்கல் திட்டம் இன நெருக்கடிக்குச் சிறந்த தீர்வாக அமைந்திருக்கிறது என்று குறிப்பிட்டிருந்தார்.
இன நெருக்கடிக்கான அரசியல் தீர்வு யோசனைகள் குறித்து ஆராய்ந்துவரும் விஞ்ஞான, தொழில்நுட்ப அமைச்சர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண தலைமையிலான சர்வகட்சி மகாநாட்டு பிரதிநிதித்துவக் குழு 2008 ஜனவரி பிற்பகுதியில் ஜனாதிபதியிடம் கையளித்த இடைக்கால அறிக்கையில் அரசியலமைப்புக்கான 13 ஆவது திருத்தத்தை அரசாங்கம் முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டுமென்ற விதப்புரையைச் செய்த போது தான் சமாதான உடன்படிக்கையிலும் அந்த திருத்தச் சட்டத்திலும் ஜனாதிபதிக்குப் பிறந்த திடீர் அக்கறைக்கான காரணத்தைப் புரிந்து கொள்ளக்கூடியதாக இருந்தது. சர்வகட்சி மகாநாட்டுப் பிரதிநிதித்துவக் குழு இந்த விதப்புரையைச் செய்து கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்கள் கடந்துவிட்டன. ஆனால், அரசியலமைப்புக்கான 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதை நோக்கிய திசையில் எந்த நடவடிக்கையையாவது அரசாங்கம் எடுத்திருக்கிறதா? பேராசிரியர் விதாரண சமர்ப்பித்த இடைக்கால அறிக்கையில் விதந்துரைக்கப்பட்டதன் பிரகாரம் கிழக்கு மாகாண சபைக்கான தேர்தல் நடத்தப்பட்டு இப்போது ஒருவருடம் கடந்துவிட்டது. அந்த மாகாணத்தில் தானும் 13 ஆவது திருத்தத்தின் ஏற்பாடுகளில் ஏதாவது ஒன்றை நடைமுறைப்படுத்துவதற்கான முயற்சி எடுக்கப்பட்டதா?
முன்னாள் ஜனாதிபதி திருமதி குமாரதுங்க மூன்று மாதங்களுக்கு முன்னர் புதுடில்லிக்கு சென்றிருந்த போது இந்திய இலங்கை சமாதான உடன்படிக்கை தொடர்பிலான கொழும்பு அரசாங்கங்களின் நிலைப்பாடுகள் குறித்து தெரிவித்திருந்த கருத்துகளை இச்சந்தர்ப்பத்தில் நினைவுபடுத்துவது மிகவும் பொருத்தமானதாக இருக்கும். "இலங்கையில் கடந்த இரு தசாப்தங்களாக அதிகாரத்தில் இருந்த சகல அரசாங்கங்களுமே இந்திய இலங்கை சமாதான உடன்படிக்கையின் ஏற்பாடுகள் நடைமுறைப்படுத்தப்படாதிருப்பதை உறுதி செய்து கொண்டன. சமாதான உடன்படிக்கையைச் சகல அரசாங்கங்களுமே சூழ்ச்சித்தனமாகச் சீர்குலைத்திருக்கின்றன. அரசியலமைப்புக்கான 13 ஆவது திருத்தம் நடைமுறைப்படுத்தாதிருப்பதை சகல அரசாங்கங்களும் உறுதிப்படுத்திக் கொண்டன. என்னாலும் கூட இதை நடைமுறைப்படுத்தக் கூடியதாக இருக்கவில்லை என்று திருமதி குமாரதுங்க கூறியிருந்தார். அரசியல் தீர்வுக்கான முயற்சிகளைப் பொறுத்தவரை தமிழ் மக்கள் பெற்றுக்கொண்ட வரலாற்றுப் படிப்பினைகளை மறுதலையாக்கக் கூடியதாக இலங்கையில் அரசியல் அதிசயம் நடந்துவிடமுடியுமென்று சர்வதேச சமூகம் எதிர்பார்க்கிறதா? இந்திய இலங்கை சமாதான உடன்படிக்கை தொடர்பிலான கொழும்பு அரசாங்கங்களின் இதுவரையான அணுகுமுறைகளுக்கு வேறுபட்டமுறையில் ஜனாதிபதி ராஜபக்ஷ அரசாங்கம் நடந்துகொள்ளுமென்று தமிழ் மக்கள் நம்பமுடியுமா?
நன்றி
- தினக்குரல் -
Sunday, May 24, 2009
அரசியல் தீர்வு குறித்த வெளியுலக எதிர்பார்ப்புகள்
Posted by tamil at 7:10 AM
Subscribe to:
Post Comments (Atom)
0 Comments:
Post a Comment