Thursday, May 21, 2009

கூட்டுமன அதிர்விற்குள் ஒரு இனம்: தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் போக்கு குறித்த ஒரு உளவியல் பதிவு

தமிழீழ விடுதலைப் போராட்டம் எந்த வித மறு பேச்சிற்கும் இடம் வைக்காமல் முடிவடைந்து விட்டது அல்லது முடிவுக்கு வந்து கொண்டிருக்கிறது அல்லது நீர்த்துப்போய் படிப்படியாக அந்த நிலையை அது எய்தும் என்று எதிர்வு கூறல்களாக அல்லாமல் அவை முடிவுகளாகவே முன்வைக்கப்பட்டுக் கொண்டிருக்கிற ஒரு சூழலுக்குள் ஒரு இனத்தின் நீண்ட நெடிய போராட்டம் வந்து சேர்ந்திருக்கிறது.

போராட்டத்திற்கு வெளியே இத்தகைய சொற்பதங்கள் புழக்கத்திற்கு வந்து நீண்ட நாட்களாகிவிட்டன. ஆனால் துரதிஸ்டவசமாக நாமும் இவற்றை தற்போது உச்சரிக்கத் தொடங்கியிருக்கிறோம். அதன்வழி அவற்றை நம்பவும் தொடங்கியிருக்கிறோம் அல்லது நம்பும்படி கட்டாயப்படுத்தபடுகிறோம். ஒரு தமிழ் உயிரியின் ஒவ்வொரு கணமும் இத்தகைய நிர்ப்பந்தத்திலேயே கழிந்து கொண்டிருக்கிறது.

உண்மையிலேயே தமிழீழ விடுதலைப்போராட்டம் முடிவுக்கு வந்து விட்டதா? இந்த சிக்கலான கேள்விக்குள் நாங்கள் இறங்க விரும்பவில்லை. ஏனெனில் அது எமது வேலை இல்லை. அத்தோடு நாம் தீர்க்கதரிசிகளோ ஆருடக்காரர்களோ கிடையாது. படைத்துறை ஆய்வாளர்களும் அரசியல் ஆய்வாளர்களும் பதில் தெரியாமல் "பேந்த பேந்த" முழித்துக்கொண்டிருக்கும் ஒரு விடயத்திற்குள் நுழைந்து எம்மைக் காயப்படுத்திக்கொள்ளவும் விரும்பவில்லை.

ஆனால் நாம் வேறு ஒரு கோணத்தில் இந்த வரலாற்றுக் காலகட்டத்தை ஆய்வு செய்ய முனைந்திருக்கிறோம். ஒரு வேளை மேற்கண்ட கேள்விக்கான பதிலை இந்த ஆய்வினூடாக நீங்கள் தரிசிக்கலாம். அதற்கு எந்த உத்தரவாதத்தையும் நாம் முன்கூட்டியே வழங்கவிரும்பவில்லை.

"தமிழீழ விடுதலைப் போராட்டம் முடிவுக்கு வந்து விட்டதா?" என்ற கேள்வியைத்தான் மையப்படுத்தி நாங்களும் ஆய்வு செய்யப்புகுந்துள்ளோம். இது என்ன முரண்பாடு என்று நீங்கள் முணுமுணுப்பது கேட்கிறது. இதில் எந்த முரண்பாடும் இல்லை. நாம் எல்லோரையும்போல் அந்தக் கேள்விக்குள்ளாக இறங்காமல் மேலும் கீழுமாக அதைச்சுற்றிப் பயணித்து அக் கேள்வியின் உருவாக்க நியாயங்கள் மீதும் எதன் அடிப்படையில் இது முன்மொழியப்படுகிறது என்பதனையும் ஒரு உளவியல் ஆய்வாக முன்வைக்க முனைந்துள்ளோம். இந்த ஆய்வு கூட எமக்கு முக்கியமனதல்ல. இதனூடாகக் கிடைத்திருக்கும் ஒரு உளவியல் வாசிப்பையே நாம் பிரதானப்படுத்த விரும்புகிறோம்.

இப்பரந்த பூவுலகில் ஒவ்வொரு மனித உயிரியும் தாம் எதிர்கொள்ளும் வாழ்வியல் புறநிலைக்கேற்ப பல கருத்துருவாக்கங்களினால் கட்டமைக்கப்படுகின்றன. இதன்வழி இப்பூமியில் கட்டவிழும் ஒரு நிகழ்விற்கெதிராக அல்லது அந் நிகழ்வு குறித்து ஒவ்வொரு உயிரியும் வேறுபட்ட பார்வையை அல்லது எதிர்வினையைப் பதிவு செய்கின்றன. இதை சற்று விரிவு படுத்தினால் இனம், மதம், மொழி, கொள்கை, கோட்பாடுகள் சார்ந்து குழுமங்களாகவும் ஒருமித்த - வேறுபட்ட கருத்துருவாக்கங்களும் உருவாகின்றன - மாற்றம் பெறுகின்றன.

பெண்ணியம், மானுடவியல், தத்துவம், சமூகவியல் சார்ந்த உளவியலை கல்விப்பின்புலமாகக் கொண்ட எமக்கும் உலக சமூக நிகழ்வுகள் குறித்த ஒரு வாசிப்பு இருக்கிறது. இதன் அடிப்படையில் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் முடிவு குறித்த பல பிதற்றல்களையும், உளறல்களையும் அதன்வழி தொடர் பதற்றத்திற்குள்ளாகியிருக்கும் ஒரு இனத்தின் அரற்றல்களையும் அங்கலாய்ப்புக்களையும் கவனத்தில் கொண்டு நீண்ட உரையாடல்களை நிகழ்த்தி விவாதித்து தமிழீழ விடுதலைப்போராட்டத்தின் போக்கு குறித்த ஒரு கருத்துருவாக்கத்தினைப் பெற்றிருக்கிறோம்.

இக் கருத்துருவாக்கத்துடன் யாரும் முரண்படலாம். நாம் அதை மறுக்கவில்லை. ஆனால் இதன் பெரும்பான்மை சாத்தியங்களை யாரும் மறுதலிக்க முடியாது. நாம் இந்த ஆய்வை இன்னும் முழுமையாக நிறைவு செய்யவில்லை. இதை அனைத்துலகத்தின் பார்வைக்கு கொண்டு செல்வதற்கு முன்பாக தமிழ்ச்சூழலுக்கு உடனடியாகக் கொண்டு வருவதன் நோக்கம் சில மணித்தியாலங்களை போரின் இறுதி வெற்றிக்கான காலக்கெடுவாக அறிவித்துவிட்டு மிக மோசமான இனச்சுத்திகரிப்பில் இறங்கியிருக்கும் ஸ்ரீலங்கா அரசின் கபடத்தனத்தை நாம் புரிந்து கொள்வதுடன் எம்மிடையே தோன்றியிருக்கும் சில நம்பிக்கையீனங்களிற்கும் அடிப்படை புரிதலின்மைக்கும் ஒரு முற்றுப்புள்ளி வைப்பதற்கேயாகும். இவை குறித்த சரியான புரிதலில்லாவிட்டால் நாம் தொடர்ந்து உலகத்துடன் பேச முடியாது- எமது தொடர் போராட்டங்களுக்கும் ஒரு அர்த்தம் இருக்காது.

உண்மையிலேயே இவை குறித்து எமக்குள்ளாகப் பேசிக் கொள்ளத்தேவையில்லை. ஏன் எமது எதிரிகளான ஸ்ரீலங்கா அரசிற்குக் கூட எந்தச் செய்தியும் இதற்குள் இல்லை. மாறாக இந்தக் கருத்தியலை கவனத்தில் கொள்ள வேண்டியவர்கள் எமது போராட்டத்தின் மீது ஆதிக்கம் nசுலுத்தும் மூன்றாவது சக்திகளான இந்தியாவும் மேற்குலகமும்தான். ஏனெனில் நாளை ஒரு இனத்தின் எதிர்வினைக்குள் சிக்கி விளைவுகளை அறுவடை செய்யப்போவது அவர்கள்தான்.

சிலவற்றை வெளியாகப் பேசிவிட வேண்டியதுதான். எந்த பூசிமெழுகல்களும் பாசாங்குகளும் இனி வேலைக்கு உதவாது. எமது ஆய்வின் முடிவு பயங்கரமானது மட்டுமல்ல பெரும் அச்சம் தருவதும் உலக ஒழுங்கை நிர்மூலமாக்கக்கூடியதும்கூட. அதாவது ஒற்றை வரியில் சொன்னால் மூன்றாவது சக்திகளின் துணையுடன் படைத்துறை ரீதியில் தமிழீழ விடுதலைப் போராட்டம் தோற்கடிக்கப்படுமாயின் அல்லது தோற்கடிக்கப்படுவது போன்ற பாவனைகளையும் உளறல்களையும் அனைத்துத் தரப்பும் தற்போதுள்ளதுபோல் தொடருமாயின் எந்த கணத்திலும் இந்த உலகத்தின் மீது பல வடிவங்களில் வன்முறையைக் கட்டவிழ்த்து விடுவதற்கு தமிழ் இனம் தன்னையறியாமலேயே தயாராகிக் கொண்டிருக்கிறது. அதன் வன்முறை வடிவங்களைக்கூட நாம் இனங்கண்டிருக்கிறோம்.

உடனடியாக போரை நிறுத்தி தமிழீழ விடுதலைப்புலிகளின் ஏபிரநிதித்துவத்தை ஏற்று தமிழர்களின் அரசியல் அபிலாசைகள் நிறைவேற்றப்படாதவிடத்து தமது பிராந்திய மேற்குலக நலன்கள் சார்ந்து தமே தம்மைச்சுற்றி வரைந்து வைத்திருக்கும் உலக ஒழுங்கைக் காப்பாற்ற ஒரு சிறிய விடுதலைப்போராடத்தினதும் அதன் மக்களினதும் அழிவுக்கு எந்த மூன்றாவது சக்திகள் துணைபோனதோ அந்த உலக ஒழுங்கை அழிவுக்குள்ளான அந்த இனம் வன்முறை, பயங்கரவாத வடிவங்களினூடக சிதைத்து சின்னாபின்னப்படுத்துவதை இந்த உலகம் எதிர்கொள்வதைத்தவிர வேறு மாற்று விளைவுகள் கிடையாது. ஏனெனில் அந்த இனம் தனது சுய நனவு மனத்திலிருந்து விடுபட்டு - வெளியெடுக்கப்பட்டு நீண்ட நாட்களாகிவிட்டது. அதாவது அது ஒரு கூட்டு மன அதிர்விற்குள் தள்ளப்பட்டிருக்கிறது.

நாம் இந்த ஆய்வை செய்ய புகுந்த கதையை சுருக்கமாவேனும் விளக்க வேண்டியவர்களாக இருக்கிறோம். நாம் தமிழர்களாக இருந்தபோதிலும் எமது வாழ்வை தமிழ்ச்சூழலுக்கு வெளியிலேயே கட்டமைத்துக்கொண்டவர்கள். (இதில் விதிவிலக்கு நண்பர் பரணி கிருஸ்ணரஜனி - அவர் தொடர்ந்து தமிழ்ச்சூழலில் இயங்கி வருபவர்) காரணம் எமது கல்விப்பின்புலம், தொழில் சார்ந்த நடைமுறைகளும் குறிப்பாக சுயநலன்களும் என்று கூறலாம். தமிழர்களாக இருந்தும் எமது இனத்தின் போராட்டத்தை செய்தியாகவே அறிந்து கொள்ள முற்பட்டவர்களாக இருந்தோமேயொழிய பங்குதாரர்களாக நாம் இருக்கவில்லை. இப்போது அதற்காக நாம் வெட்கப்படுகிறோம் - வேதனைப்படுகிறோம்.


திடீரென்று நாம் எம்மை தமிழர்களாக உணரத்தொடங்கியது ஒரு இனம் அழியத்தொடங்கியதிலிருந்துதான் என்பது வேதனைக்குரியது மட்டுமல்ல வெட்கத்திற்குரியதும்கூட. நாம் தமிழீழ விடுதலைப்போராட்டத்திற்கு எதிரானவர்கள் அல்ல. ஆனால் புலிகள் பார்த்துக்கொள்வார்கள் அவர்கள் போராடி ஈழம் எடுத்த்துத்தருவார்கள்தானே என்று இருந்துவிட்டோம். இது எமது நிலைப்பாடல்ல, பலரதும் நிலைப்பாடும் இதுதான்.

இந்த மனோநிலையில்தான் இதுவரைகாலமும் இருந்திருக்கிறோம் என்பதையே எமது ஆய்வினூடகத்தான் நாம் கண்டுபிடித்தோம் என்பதே ஆச்சரியமாக மட்டுமல்ல அதிர்ச்சியாகவும் இருக்கிறது.

தமிழீழ விடுதலைப்புலிகளை படைத்துறை ரீதியாக தோற்கடிப்பதாகவும், தொடர்ந்து நிலங்களை கைப்பற்றுவதாகவும் ஸ்ரீலங்காக அரசு அறிவித்ததோடு மட்டுமல்ல பல மூன்றாம் சக்திகளின் துணையுடன் உலக அளவில் அவர்களுக்கு பயங்கரவாத முத்திரைகளைக் குத்தி அவர்களை ஓரங்கட்டத்தொடங்கியிருந்ததும் ஒட்டு மொத்த தமிழர்களையும் ஒரு வித வெறுமைக்குள் தள்ளி பதற்றமடையச் செய்திருந்ததை அப்போது உணராதவர்களும் இப்போது உணர்கிறார்கள். இதைத்தான் கூட்டுமன அதிர்வு என்ற உளவியல் சிக்கலாக விளக்க முற்படுகிறோம்.

விடுதலைப் போராட்டத்தோடு தம்மை தாயகத்திலும் புலத்திலும் நேரடியாக ஈடுபடுத்திக்கொண்டவர்கள் மட்டுமின்றி எம்மைப்போன்றிருந்த ஈழத்தமிழர்கள் உட்பட உலகெங்கும் பரந்து வாழும் தமிழ் உறவுகள் அனைத்துமே என்னவென்று அறியாமலேயே இந்த கூட்டுமன அதிர்வுக்குள்ளாகியதுதான் ஆச்சர்யம். தமிழகம் மட்டுமின்றி தென்னாபிரிக்கா, மலேசியா, மொறீசியஸ், பிஜித் தீவுகள் என்று ஒரு இனமே அதிர்ந்தது - இன்னும் அதிர்ந்து கொண்டிருக்கிறது. உலகின் சட்ட ஒழுங்குகளையும் மீறி நாம் இன்று வீதியில் இறங்கியிருப்பதே அதற்கு சாட்சி.

ஆயிரக்கணக்கான பக்கங்களில் நிறைந்து கிடக்கும் எமது ஆய்வை சுருக்கமாக இங்கு விளக்குவது கடினமானது மட்டுமல்ல பல உளவியல் வார்த்தைகளுக்கு தமிழில் விளக்கமும் கிடையாது. அதைத் தொடர்ந்து விளக்குவது உங்களுக்கு அயர்ச்சியையும் தரும். சுருக்கமாக சிறிய விளக்கங்களையே நாம் உங்கள் முன் வைக்க விழைகிறோம்.

இந்த கூட்டுமன அதிர்வுக்கு ஓரே காரணம் எதிரி நிலத்தை விழுங்கியதோ மக்கள் ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்டதோகூட அல்ல. பலருக்கு ஆச்சரியமாக இருக்கலாம், தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல் தலைமைத்துவம் கைநழுவிக்கொண்டிருப்பதாகவும் தமது தலைமையை எதிரியானவன் பலருடன் கூட்டுச்சேர்ந்து அழிக்க முற்படுகிறான் என்றும் எல்லைகள் கடந்து ஒட்டுமொத்த தமிழினமும் நம்பத் தொடங்கியதுதான் இக்கூட்டுமன அதிர்வின் முதன்மையான காரணம் ஆகும். எமது ஆய்வின் மிக முக்கியமான அம்சம் இது.

தேசம், தேசியம், தேசியத் தலைவர் என்று ஒரு இனம் மூன்று தசாப்பதங்களுக்கும் மேலாக ஒரு வாழ்வை வாழ்ந்து விட்டது. அந்த வாழ்வியலினூடாகவே அந்த இனத்தின் உளவியல் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. அந்த இனத்தின் ஆன்மாவாகவே விடுதலைப்புலிகள் மாறிப்போய்விட்டது யதார்தம். இது விருப்பு வெறுப்புகளுக்கும் அப்பால் நடந்தேறிவிட்டது. திடீரென்று கொஞ்சப்பேர் வெளிக்கிட்டுவந்து ஆளாளுக்கு வன்முறை, பயங்கரவாதம், மனிதக் கேடயம் என்று அந்த இனத்திடம் எந்தக் கருத்தையும் கேட்காமல் மிக மோசமான வன்முறையை அந்த இனத்தின் மீது பிரயோகித்துக்கொண்டே அந்த மூன்று தசாப்த கால வாழ்வைக் குலைப்பதென்பது மிக அப்பட்டமான மனித உரிமை மீறலும் மிகமோசமான வன்முறையுமாகும்.

புலிகளையும் தமிழினத்தையும் பிரித்துக் கருத்துச் சொல்லும் யாருமே அந்த இனத்தைப் பொறுத்த வரையிலே வன்முறையாளர்களே. இதற்கு ஐக்கிய நாடுகள் சபையும் சரி ஐரோப்பிய ஒன்றியமும் சரி யாரும் விதிவிலக்காக முடியாது.

இதைத்தான் எமது ஆய்வில் கடுமையாக முன்வைக்க விரும்புகிறோம்.

அண்மையில் கனடாவிலிருந்து வெளிவரும் "NATIONAL POST" மக்களின் போராட்டங்களை முன்வைத்து ஒரு சந்தேகத்தைக் கிளப்பியிருந்தது. அது தமிழர்கள் தமது போராட்டங்களில் புலிகளின் கொடியையும் அதன் தலைவரினது படங்களையும் வைத்திருப்பதைப் பார்த்தால் மக்களைக் காப்பாற்றுவதற்கு போராட்டங்களை நடத்துவது போல் தெரியவில்லை, மாறாக தடைசெய்யபப்பட்ட பயங்கரவாத இயக்கமான புலிகளைக் காப்பாற்றவதற்கே இந்த போராட்டங்கள் நடத்தப்படுவதாக சந்தேகம் வெளியிட்டிருந்தது.

"NATIONAL POST" உட்பட எல்லோருக்கும் ஒன்றைக்கூறிக் கொள்ள விரும்புகிறோம். உங்களுக்கு எந்தச் சந்தேகமும் தேவையில்லை, தமது அரசியல் தலைமைகள் என்று ஒட்டு மொத்த இனமுமே நம்புகிற புலிகளைக் காப்பதற்கும் அவர்களுக்கு ஒரு சர்வதேச அங்கீகாரத்தை வாங்கித் தருவதற்குமாகவே மக்கள் வீதியில் இறங்கியிருக்கிறார்கள். இதில் நீங்கள் புதிதாக எந்தக் கண்டுபிடிப்பையும் செய்யத் தேவையில்லை.

முப்பது வருடங்களுக்கும் மேலாக ஒரு இனம் படிப்படியாக வளர்த்த நம்பிக்கையும் அரசியல் அவாவும் புலிகளின் வளர்ச்சியோடு பின்னிப் பிணைந்தது. அதன் பெருபிம்பமாக தலைவர் பிரபாகரனை அந்த இனம் வரித்து நீண்ட காலங்களாகிவிட்டது. இதை உளவியல் மொழியில் கூறினால் ஒவ்வொரு தழிழனினதும் உள்ளத்தில் அவர்களது அரசியல் அவா பிரபாகரன் என்ற உருவத்திலேயே ஆன்மாவாக உறைந்து கிடக்கிறது. அவரையும் அவர் உருவாக்கி வளர்த்த அரசியல் கட்டமைப்பையும் அழிப்பதென்பது ஒவ்வொரு தமிழனினதும் ஆன்மாவில் கைவைப்பதற்கு ஒப்பானது. அதுதான் இப்போது ஒட்டுமொத்த இனமும் அதிர்வுக்குள்ளாகியிருக்கிறது.

இந்த அடிப்படையில்தான் நாம் எமது ஆய்வை வளர்த்துச் சென்று ஒரு கருத்துரலவாக்கத்தைப் பெற்றிருக்கிறோம். இனி நாம் விடயத்திற்குள் நுழைவோம்.

மேற்படி விளைவுகளின் காரணமாக கடந்த ஒரு வருடமாக ஒருவிதமான வெறுமைக்குள் தள்ளப்பட்டவர்களாக அலைந்து திரிந்த நாம் எமது பிரச்சினையை கண்டுபிடித்ததும் இந்த ஆய்வைச் செய்ய வேண்டும் என்று தூண்டியதும் ஒரு கருத்தரங்கு என்றால் உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கும்.

அண்மையில் ஸ்பெயின் பர்சிலோனா பல்கலைக்கழகத்தில் "Psychology of crime : Several psychological factors that figure into why people commit crimes" என்ற தலைப்பில் நடந்த கருத்தரங்கே அது. "பெண் உளவியல்" தொடர்பான எமது மேலதிக ஆய்வுகளின் பயன்பாட்டிற்கமையவும் ஒக்ஸ்போட் பல்கலைக்கழகத்தில் பயங்கரவாதத்திற்கும் உளவியலுக்கும் இடையிலான தொடர்பை முன்னிறுத்தி கலாநிதி பட்ட ஆய்வை மேற்கொண்டிருக்கும் எமது தோழி ஒருத்தியின் நச்சரிப்பு தாங்காமாலும் நாங்கள் அக்கருத்தரங்கில் கலந்து கொண்டோம்.

தனிமனித குற்றங்கள் எப்படி சமூக குற்றங்களாக மறுஉருவாக்கம் செய்யப்படுகின்றன என்பதிலிருந்து தொடங்கி வன்முறை, பயங்கரவாதம், உளவியல் ஆகியவற்றிற்கிடையேயான பிணைப்பையும் தொடர்பையும் மிகத்துல்லியமாக வரையறை செய்தது மேற்படி கருத்தரங்கு.

குற்றங்களின் மூலமும் அடிப்படையும் மனச்சிதைவிலிருந்து அல்லது மனப் பிறழ்விலிருந்துதான் தோற்றம் கொள்வதாக உளவியல்வாதம் கட்டமைக்கப்படுகிறது. ஆனால் தனிமனிதன் தொடங்கி அரசு, நிறுவனங்கள் வரை இதைப் பெரும்பாலும் கணக்கிலெடுப்பதில்லை. இதை வேறொரு மொழியில் கூறினால் தமது வசிதிக்கேற்ப மறந்து விடுகிறார்கள் என்று நாம் கூறிக்கொள்ளலாம்.

குற்றம் என்ற பொது வகைமைக்குள் தனிமனித குற்றம், சமூக குற்றம், போராட்டம், ஆயுதக்கிளர்ச்சி, வன்முறை, பயங்கரவாதம் என்ற தனி அலகுகளாகப் பிரித்து அவற்றின் உளவியல் பிரதிபலிப்பையும் தாக்கங்களையும் ஆய்வாக முன்வைத்தது மேற்படி கருத்தரங்கு.

உண்மையைக் கூறப்போனால் சிக்மன்ட் பிராய்டையும் லக்கானையும் அதன் வழி சர்த்தரையும் கற்றுத் தெளிந்த ஒருவருக்கு மேற்படி ஆய்வுகள் புதிதாக எதனையும் கற்பிக்கப் போவதில்லை. இன்றைக்கு 50 வருடங்களுக்கு முன்பே தொடர் வன்முறைக்குள்ளாகும் ஒரு மக்கள் கூட்டத்தின் மன அதிர்வுகளின் வெளிப்பாடே "பயங்கரவாதமாக" வெளிப்படுபகிறது என்று சர்த்தர் வரையறை செய்து விட்டார். மேற்படி கருத்தரங்கு அதை மீண்டுமொரு முறை மறுபதிப்பு செய்திருக்கிறது என்று வேண்டுமானால் கூறிக்கொள்ளலாம்.

இந்தக் கருத்தரங்கிள் முடிவில்தான் நாம் "கூட்டு மன அதிர்வு"க்குள்ளாகயிருக்கிறோம் என்பதையே கண்டுபிடித்தோம்.

அண்மைக்காலமாக மோசமடைந்து வரும் களநிலவரங்களினால் தமது அரசியல் எதிர்காலம் குறித்த நிச்சயமின்மையும் அதனால் தோற்றம் கொண்டிருக்கும் அரசியல் வெறுமையும் - வறுமையும் ஈழத்தமிழினத்தை எல்லையற்ற தொடர் கிலிக்கும் பீதிக்குள்ளும் அமிழ்த்திக்கொண்டிருக்கிறது. இதன் நிமித்தமாக ஈழத்தமிழினத்தின் உள்ளும் புறமுமாக ஒரு தொடர் வலைப்பின்னலாக பின்னப்பட்டுக்கொண்டிருக்கும் எண்ணற்ற கேள்விகளுக்கும் சந்தேகங்களுக்கும் ஒரு பதிலாக இல்லாவிட்டலும்கூட, அறத்தையும் நீதியையும் நழுவவிட்டு எம்மை இவ்விக்கட்டான நிலைக்குள் தள்ளியிருக்கும் அனைத்துலக சமூகத்தைத் தொடர்ந்து எதிர்கொள்வதற்கும் அதற்கு எம்மால் தொடர்ந்து

சொல்லப்படக்கூடியதுமான சில முன்முடிவுகளை - தீர்மானங்களை மேற்படி கருத்தரங்கு அடையாளம் காட்டியது. அந்த வகையில் மேற்படி கருத்தரங்கு முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக இருக்கிறது. இதிலிருந்து எமது ஆய்வை நாம் மேற்கொள்ளத் தொடங்கினோம்.

நாம் இக்கருத்தரங்கில் கலந்து கொண்ட நோக்கத்திற்கு மாறாக மேற்படி சங்கதிகளை அடையாளம் காணக்கூடியதாக இருந்தது. ஒரு வகையில் இவற்றைத்தான் தேடி அங்கே போனோமோ என்ற சந்தேகம் எமக்கே இப்போது எழுகிறது. ஏனெனில் மனம் ஒரு நிலையில் இல்லை. இது எமது நிலை மட்டுமல்ல, ஒட்டு மொத்த தமிழினத்தின் நிலை இன்று இதுதான்.

உளவியலில் ஒரு நிலை இருக்கிறது. ஒரு மனித உயிரி தன்னளவில் தான் சக மனிதர்களாலும் தான் வாழும் சமூகத்தாலும் நிராகரிக்கப்படுவதாக, புறக்கணிக்கப்படுவதாக, ஒதுக்கப்படுவதாக உணரும்போது அல்லது அவ்வாறு எண்ணத்தலைப்படும் போது ஒரு வகையான வெறுமைக்கும் தனிமைக்குள்ளும் தள்ளப்படும் நிலை தோன்றுகிறது. அந்த நிலையில் அந்த மனித உயிரி அடையும் உளவியல் சிக்கலை "Schizoid" என்று உளவியல் மொழியில் அழைப்பார்கள். இந்த நிலை தொடருமானால் மீளமுடியாத மனப்பிறழ்வுக்குள் அந்த மனித உயிரி தள்ளப்படுவதை நாம் தொடர்ந்து அவதானிக்கலாம். Paul Eugen Bleuler என்ற உளவியல் நிபுணர் இன்றைக்கு 100 ஆண்டுக்கு முன்பே மனித மனம் தொடர்பாக கண்டடைந்த உண்மை இது.

இந்நிலையினூடாக ஒரு உயிரிக்கு உள்ள பெரும்பான்மை சாத்தியம் மீளமுடியாத மனப்பிறழ்வு நிலை அதன்வழி தற்கொலை அல்லது குற்றம் மட்டுமே... இதன் அடிப்படையில்தான் குற்றங்களின் மூலமும் அடிப்படையும் மனச்சிதைவிலிருந்து அல்லது மனப் பிறழ்விலிருந்துதான் தோற்றம் கொள்வதாக உளவியல்வாதம் கட்டமைக்கப்படுகிறது. எனவே ஒரு குற்றத்திற்கு என்று அடிப்படையும் ஒரு மூலமும் இருக்கின்றது என்பதை நாம் முதலில் புரிந்து கொள்வோம். மேற்படி கருத்தரங்கு இதைத்தான் பல தலைப்புக்களில் பேச முற்பட்டது.

நாம் பயங்கரவாதத்திற்கும் உளவியலுக்கும் உள்ள தொடர்பை மட்டும் இங்கு

விவாதிப்போம். (ஏனென்றால் நாங்கள் "பயங்கரவாதிகள்"தானே.. இந்த கேடுகெட்ட உலகம் அப்படித்தானே சொல்கிறது) பயங்கரவாதம் என்ற சொல்லுக்கு ஏகப்பட்ட குழப்பமான விளக்கங்களை இந்த உலகம் முன்வைக்கிறது. எது பயங்கரவாதம் என்பதில் அதை உச்சரிக்கிறவர்களுக்கே குழப்பமான ஏகப்பட்ட முரண்பாடுகள் இருக்கின்றன என்பதுதான் இங்கு கவனிக்கப்படவேண்டியது. அரசுகள்கூட பயங்கரவாதச் செயற்பாடுகளில் ஈடுபடுகின்றன என்பது இங்கு ஏற்கனவே நிருபிக்கப்பட்ட ஒன்றாக இருக்கிறது. நாம் இதில் ஒன்றை மட்டும் கவனத்தில் கொள்வோம்.

பயங்கரவாதம் என்பது பல தருணங்களில் தனிமனிதர்களால் நிகழ்த்தப்பட்டாலும் அது தனிமனித நிகழ்வு அல்ல. எந்த தனி மனிதனும் இங்கு "பயங்கரவாதி"யாக அறியப்பட்டது கிடையாது. அவன் தான் சார்ந்துள்ள ஒரு அமைப்பிற்காக - ஒரு சமுதாயத்திற்காக - இனக்குழுமத்திற்காக என்று ஒரு பொதுச் சிந்தனையின் அடிப்படையிலேயே அந்த செயலை செய்ய முற்படுகிறான். அந்த நோக்கம் சரியானதா தவறானாதா என்பது இங்கு வேறு ஒரு தளத்தில் தனியாக விவாதிக்கப்பட வேண்டியது. ஆனால் அவனது நோக்கம் பொதுமையானது என்பதுதான் இங்கு முக்கியமானது.

இதைத்தான் சர்த்தர் தொடர் வன்முறைக்குள்ளாகும் ஒரு மக்கள் கூட்டத்தின் மன அதிர்வுகளின் வெளிப்பாடே "பயங்கரவாதமாக" வெளிப்படுகிறது என்றார். எனவே ஒரு குறிப்பிட்ட மக்கள் குழுமத்தை தொடர் வன்முறைக்குள் அமிழ்த்தி தொடர்ந்து அந்நிலைக்குள்ளிருந்து வெளியேற விடாமல் - வழி தெரியாமல் மனஅதிர்வுக்குள்ளாக்கி அந்தக் குழுமத்தை மனப்பிறழ்வடையச் செய்யும்போது அந்நிலைக்கு ஒரு எதிர்வினையை அக்குழுமம் பதிவு செய்த போது அதை இந்த கேடு கெட்ட உலகம் "பயங்கரவாதம்" என்று பெயர் சொல்லி அழைக்கிறது. இங்கு அந்த குற்றத்தின் மூலமும் அடிப்படையும் காரண காரியங்களும் அடியோடு மறைக்கப்பட்டது மட்டுமல்ல அந்தக் குற்றவாளிகளை( அரச பயங்கரவாதிகளை) காப்பாற்றும் உலக ஒழுங்கும் வேதனைக்குரியது என்பதுடன்

அச்சமூட்டக்கூடியதும்கூட...

இந்த ஒட்டு மொத்த சாராம்சத்துக்குள்ளிருந்துதான் நாம் இந்த உலகத்தோடு பேசவேண்டிய - அழுத்தமாகச் சொல்லவேண்டிய முக்கிய பேசுபொருள் வருகிறது.
நாங்கள் முன்பே குறிப்பிட்டது போல் அக் கருத்தரங்கில் நாம் கலந்து கொண்ட நோக்கத்திற்கு மாறாக எதை எதையோ கண்டடைந்தோம். ஏனெனில் ஒட்டு மொத்த தமிழ் சமூகத்தில் நாங்களும் ஒரு அங்கம். இப்போது முழுத் தமிழினமுமே அதிர்வுக்குள்ளாகியிருக்கிறது. ளுஉhணைழனை என்ற உளவியல் சொல்லாடல் ஒரு தனிமனித உயிரியின் மனப்பிறழ்வு நிலை குறித்துப் பேசுகிறது. இங்கே ஒட்டு மொத்த இனமுமே அத்தகைய நிலைக்குள்ளாகித் தவிக்கிறது. இதைத்தான் நாம் இப்போது கூட்டு மன அதிர்வு என்ற சொல்லாடலுக்குள் கொண்டு வருகிறோம்.

நாம் இந்த உலகத்தால் வஞ்சிக்கப்படுகிறோம், தொடர்ந்து ஏமாற்றப்படுகிறோம், நாம் புறக்கணிக்கப்படுகிறோம், ஒதுக்கப்படுகிறோம் என்று ஒட்டு மொத்த உலகத் தமிழினமுமே அச்சம் கொள்ளத் தொடங்கியிருக்கிறது. தமது அரசியல் வாழ்வியல் எதிர்காலத்தை ஒரு சூனிய வெளியில் வைத்தே புரிந்து கொள்ளத் தலைப்படுகிறது. இதன் வழி முழுத் தமிழினமும் கூட்டு மன அதிர்வுக்குள்ளாகித் தவிக்கிறது.
இப்போது சர்த்தாரை மீண்டும் ஒரு முறை அழைப்போம். அவர் சொல்கிறார்,"தொடர் வன்முறைக்குள்ளாகும் ஒரு மக்கள் கூட்டத்தின் மன அதிர்வுகளின் வெளிப்பாடே "பயங்கரவாதமாக" வெளிப்படுகிறது".

உண்மையில் இந்தக் ஆய்வுக்கு "புலிகளின் அழிவுக்குப் பின்னான பயங்கரவாதத்திற்கு யார் பொறுப்பு?" என்றுதான் தலைப்பிட்டிருக்க வேண்டும். ஏனெனில் புலிகளுக்கு "பயங்கரவாதப்" பட்டத்தை சுமத்தி ஒட்டு மொத்த தமிழினத்தையும் அழித்துக் கொண்டிருக்கும் சிங்களத்திற்கும் அதன் பின் நிற்கும் இந்தியா உட்பட மேற்குலத்திற்கும் ஒரு சிறிய செய்தி இருக்கிறது. அதாவது புலிகளின் அழிவுக்குப்பிறகும் நீங்கள் வரைவிலக்கணப்படுத்தி வைத்திருக்கும் "பயங்கரவாதம்" இருக்கும். அதுதான் அந்த செய்தி. எமது ஆய்வின் "பயங்கரமான" செய்தியும்கூட.

ஏனெனில் முழு இனமுமே அதிர்வுக்குள்ளாகத் தொடங்கியிருக்கிறது. அது ஒரு கட்டற்ற வன்முறையை எந்த நேரமும் யார் மீதும் பிரயோகிக்கக்கூடிய நிலைக்குத் தள்ளப்பட்டுக்கொண்டிருக்கிறது. அதாவது உளவியல் வாய்ப்பாட்டிற்கமைய இந் நிலையை வரைவிலக்கணப்படுத்தினால் அது ஒரு கூட்டு "Schizoid" நிலைக்குள் தள்ளப்பட்டிருக்கிறது. "Schizoid" என்ற மனப்பிறழ்வின் உச்சநிலை தற்கொலை அல்லது குற்றம். தமிழினம் நாளை இரண்டில் எந்த முடிவை எடுக்கப்போகின்றது என்பதை தீர்மானிக்கப்போகிறவர்கள் சிங்களத்தின் அரச பயங்கரவாதத்திற்கு துணைநிற்கும் அனைத்துசக்திகளும்தான். தற்கொலைகள் தொடங்கிவிட்டது. குற்றங்கள்தான் மீதமிருக்கின்றன...

இப்போது ஒட்டுமொத்த தமிழினமும் இந்த கூட்டு மன அதிர்வு என்ற வரையறைக்குள் எப்படி வந்தது என்பதை நாம் முதலில் பார்ப்பது நல்லது. இது முக்கியமானது மட்டுமல்ல வரலாற்று ரீதியான பல உண்மைகளையும் உள்ளடக்கியது.

தமிழர்களின் போராட்ட சக்திகளான தமிழீழ விடுதலைப்புலிகளை ஒரு சமாதான காலத்தில் "பயங்கரவாதிகள்" என்று இந்த மேற்குலகம் அறிவித்ததிலிருந்துதான் இந்த அதிர்வு தொடங்கியது. போராடும் காலத்தில்கூட இத்தகைய அறிவிப்பை வெளியிடாத மேற்குலகம் ஒரு சமாதான காலத்தில் இந்த நயவஞ்சக நாடகத்தை அரங்கேற்றியபோது தொடங்கிய இந்த மன அதிர்வுக்கான முதற் பொறுப்பாளிகள் அவர்கள்தான். சிறீலங்கா அரசின் குருரமான கபட நாடகத்தில் மேற்குலகமும் தம்மை ஒரு பங்காளிகளாக்கிவிட்டனவோ என்ற அச்சம்தான் இக்கூட்டுமன அதிர்வின் முதற் புள்ளி.

மேற்குலகத்தின் இந்த மோசமான பொறுப்பற்ற நடவடிக்கைகளை சிறீலங்கா இனவாத அரசு தமிழர்கள் மீதான இனப்படுகொலைக்கு மேற்குலகம் வழங்கிய ஆசீர்வாதமாகவும் அங்கீகாரமாகவும் கருதியதில் வியப்பேதும் இருக்க முடியாது.
தமிழீழ விடுதலைப்புலிகளின் போராட்டத்திலுள்ள "பயங்கரவாத" கூறுகளை அடையாளங் காணத் தலைப்பட்ட மேற்குலகம் அதன் பின்னுள்ள அறத்தையும் நியாயத்தையும் சீர் தூக்கிப் பார்க்க தவறியிருந்தது. அன்றைய உலக ஒழுங்கும் அதற்கு இடமளித்தது துரதிஸ்டவசமானது.

நாம் மீண்டும் ஒரு முறை சர்த்தரை அழைப்போம். அரச வன்முறைக்குள்ளாகி நிர்க்கதியாகி நிராயுபாணிகளாக இருக்கும் மக்களின் ஒரே ஆயுதம் பயங்கரவாதம் மட்டுமே என்று வாதிடும் ளயசவசந ஒடுக்கப்பட்டவர்களின் ஆயுதக்கிளர்ச்சிக்கு ஒரு புதிய வடிவத்தையும் தருகிறார். தமிழீழ விடுதலைப்புலிகளின் தோற்றுவாயும் அவர்களின் போராட்ட வழி முறைகளில் காணப்பட்ட "பயங்கரவாத" கூறுகளும் சர்த்தரின் எந்த வியாக்கியானத்தையும் மீறியதல்ல. அவ்வளவு ஏன் இன்றுகூட அந்த கருத்தரங்கின் முன்மொழிவும் புலிகளின் போராட்டத்தின் வழி முறைகளை சமன்செய்பவையேயாகும்.

சர்த்தரின் மேலதிக கூற்றுப்படி, தொடர்ந்து புதுப்பிக்கப்படும் அடக்குமுறைகள் ஒரு இனத்தை அடி பணியச் செய்வதற்கு பதிலாக தாங்கிக் கொள்ள முடியாத முரண்பாட்டிற்குள் அழுத்துகின்றன. இதற்குத்தான் அவர்கள் பதில் சொல்கிறார்கள். அவமானமும் பசியும் வலியும் என்னவென்று அவர்களுக்கு ஆக்கிரமிப்பாளன் கற்பித்த போது எழுந்த அழுத்தத்திற்கு சமமான சீற்றமான உணர்வை இன்று அவர்கள் வெளிப்படுத்துகிறார்கள். இப்போது அவர்களை பயங்கரவாதிகள் என்கிறார்கள். அவர்களுக்கு வன்முறையைத் தவிர வேறு ஒன்றும் தெரியாது என்றும் சொல்கிறார்கள். ஆமாம், உண்மைதான். ஆனால் ஆரம்பத்தில் அது எதிரியினுடையது. விரைவில் அவர்கள் அதை தமதாக்கிக் கொண்டார்கள். உண்மையைச் சொல்லப்போனால் அவர்கள் வன்முறையின் குழந்தைகள் - இதன் வழி தமிழர் சேனைகளான தமிழீழ விடுதலைப் புலிகள் வன்முறையின் குழந்தைகள்.

இதன்வழி தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் வன்முறை வடிவத்தையும் அதன் வடிவ மாறுதலையும் இந்த உலகம் புரிந்து கொள்ள வேண்டும்.
எனவே தமிழீழ விடுதலைப் பேராட்டத்திற்கோ தமிழீழ விடுதலைப் புலிகளுக்கோ சூட்ட வேண்டியது "பயங்கரவாத" பட்டங்கள் அல்ல... தமிழினத்திற்கான அரசியல் தீர்வு. மக்களிலிருந்துதான் புலிகள் பிறப்பெடுத்தார்கள். புலிகளை பயங்கரவாதிகள் என்பதற்கும் தமிழர்களைப் பயங்கரவாதிகள் என்பதற்கும் ஒரு மெல்லிய கோடு இடைவெளியேயுள்ளது.

ஏனெனில் அவர்கள் தமிழர்களின் விடுதலைக்காக ஆயுதம் தரித்திருக்கிறார்கள். அதற்கான அனுமதியையும் ஆசீர்வாதத்தையும் மக்கள் அவர்களுக்கு வழங்கியிருக்கிறார்கள். இந்த இடைவெளியைத் தவிர வேறு எந்த இடைவெளியும் இரு தரப்பையும் பிரித்துப் பார்க்க உதவாது. அந்த மெல்லிய கோட்டைக்கூட அனைத்துத் தரப்பும் இன்று மெல்ல மெல்ல அழிக்கத் தொடங்கியிருக்கிறது. ஏனெனில் எல்லோருமே வன்முறையார்களாக மாற வேண்டிய இக்கட்டான நிலைக்குள் தள்ளப்பட்டுக்கொண்டிருக்கிறது தமிழினம்.

இன்று அனைத்துத்தரப்பும் சொல்வது போல் புலிகளின் தலைமைத்துவம் அழிக்கப்படுமாயின் புலிகளில்லாத ஒட்டு மொத்த தமிழினமும் பிரயோகிக்கத் தயாராகிக் கொண்டிருக்கும் அந்த வன்முறை வடிவங்களை எதிர்கொள்வதற்கு உலகம் தன்னை தயார் செய்வது நல்லது... இது குறித்து அடுத்த வாரம் எழுதுகிறோம்...


000000000000000000000000000000000000000000


புலிகளின் தலைமைத்துவம் பேணப்படாதவிடத்து உலக ஒழுங்கு நிர்மூலமாகக்கூடும்!
ஆய்வாளர்கள் எச்சரிக்கை

தமிழ்ச்சூழலைச் சேர்ந்த உளவியலை கல்விப்பின்புலமாகக் கொண்ட சில பல்கலைக்கழக ஆய்வாளர்கள் கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாகச் செய்த சுயாதீன ஆய்விலிருந்து மேற்படி எச்சரிக்கை விடப்பட்டிருக்கிறது. தொடர் ஆய்வில் ஈடுபட்டிருக்கும் அவர்கள் காலத்தின் தேவை கருதி தமது ஆய்வின் முக்கிய விடயங்கள் தொடர்பாக சிலவற்றை இங்கு பகிர்ந்து கொள்கிறார்கள்.

பரணி கிருஸ்ணரஜனி (பாரிஸ்)
யாழினி ரவிச்சந்திரன் (ஒக்ஸ்போட்)
சித்ரலேகா துஸ்யந்தன் (வியன்னா)
பிரியதர்சினி சற்குணவடிவேல் (பர்சிலோனா)

நன்றி

- பதிவு -

0 Comments: