Monday, May 11, 2009

அவலம் நிறைந்த அகதி வாழ்வு தொடருமா?...

அகதி முகாம் வாழ்க்கை என்பது தமிழினத்திற்கே சொந்தமான இன்னுமொரு வாழ்க்கை முறையா? என்ற கேள்வி தற்போது சகல தமிழனது மனதிலும் எழுந்துள்ளது.

வெவ்வேறு கொள்கைகள் உடைய இரு தரப்பினர் உள்நாட்டில் போர் புரிகின்றனர். ஒரு தரப்பினர் நாட்டிற்காக எனவும், இன்னுமொரு தரப்பினர் இனத்திற்காக எனவும் கூறிக்கொண்டு களத்தில் இறங்கி சண்டை புரிகின்றனர். இந்தப் போர் மூன்று தசாப்த காலமாக நடைபெற்றுவருகிறது. ஆனால், நடைபெற்று வரும் இப் போரிற்கு சம்பந்தமே இல்லாத ஒரு பகுதியினர் தண்டிக்கப்படுவது தர்மமாகுமா?

போர்ச் சூழலினால் பாதிக்கப்பட்டு, தற்போது வவுனியாப் பிரதேசத்தில் காணப்படும் ஓர் அகதிமுகாமைப் பார்வையிடும் சந்தர்ப்பம் கிடைத்தது. பிரதமரின் அலுவலகத்தினர் மேற்படி முகாமைப் பார்வையிட்டு, அங்கு வாழ்கின்ற அப்பாவிமக்களுக்கு நிவாரணங்களை வழங்கி, ஆறுதல் கூறினர். கடந்த வாரத்தில் கொழும்பில் இருந்து சில ஊடகவியலாளர்களையும் அழைத்துக் கொண்டு பிரதமரின் ஊடகப் பிரிவு, வவுனியா காமினி மகா வித்தியாலயத்தில் தங்கவைக்கப்பட்டுள்ள இடம்பெயர்ந்துள்ள தமிழ் மக்களைப் பார்வையிட சென்றனர். இவ் விஜயத்தின் நோக்கம், பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்குதலுடன், அன்றைய தினம் அவர்களுக்கு மதிய உணவினையும் வழங்குதலுமாகும். அந்த ஏற்பாடுகள் சிறப்பாக நடைபெற்ற போது, பாதிக்கப்பட்ட மக்களுடன் உரையாடும் சந்தர்ப்பம் சகல ஊடகவியலாளர்களுக்கும் கிடைத்தது.

வவுனியா காமினி மகாவித்தியாலயத்தில் இயங்கும் தற்காலிக முகாமின் பணியானது, போரின் போது இடம் பெயர்கையில் காயங்களுக்கு உள்ளாகும் பொதுமக்களை வைத்தியசாலை சிகிச்சைக்குப் பின் பராமரித்தலாகும். மேற்படி முகாமில் 781 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 1,820 பேர்கள் வரை தங்கவைக்கப்பட்டுள்ளனர். இம் முகாமில் பெண்களும், சிறுவர்களுமே அதிகமாக உள்ளனர். குறிப்பாக, குழந்தைகளைப் பெற்று ஒரு மாதத்திற்கு உட்பட்ட பல தாய்மார்களும் இங்கு காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

உணவும் நிவாரணமும்

முகாமில் தங்கியுள்ள மக்கள் தங்களுக்கான உணவினை குழுவாகச் சேர்ந்து சமைத்து உண்ணுகின்றனர். 250 பேர்கள் அல்லது 300 பேர்கள் கொண்ட குழுக்களாகப் பிரிந்து, மேற்படி உணவுத் தேவைகளையும் ஏனைய அத்தியாவசியதேவைப்பாடுகளையும் மேற்கொள்வதாக சமைக்கும் பணியில் ஈடுபட்ட பொதுமக்களில் சிலர் தெரிவித்தனர். நிவாரண உதவிகள் எங்களுக்குப் போதுமான அளவிற்குக் கிடைக்கின்றது. ஆனாலும் குழந்தைகளினதும், விசேடமாக பெண்களினது அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவதற்கான வசதி வாய்ப்புக்கள் குறைவாகவே காணப்படுகின்றன. பெரும்பாலும் பிறந்த 1 அல்லது 2 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்குத் தேவையான பால்மா வகைகள், சருமப் பராமரிப்புப் பொருட்கள் (பவுடர், கிறீம், ஓடிக்கொலோன்) போன்றவை தட்டுப்பாடாகவே உள்ளன. குறிப்பாக, இரண்டு மாதங்களுக்கு உட்பட்ட குழந்தைகளும் இம் முகாமில் உள்ளமையால் மேற்படி தேவைகள் மிக அத்தியாவசிய அவசரத் தேவையாக உள்ளதாகவும் இளம் தாய்மார்கள் தெரிவித்தனர். இதேபோன்று, குழந்தைகளைப் பிரசவித்து ஒரு சில தினங்களேயான தாய்மார்களுக்கான போஷாக்கு உணவு, பால்மா போன்றவற்றிக்கு பாரிய தட்டுப்பாடு நிலவுவதாகவும் இளம் தாய்மார்கள் தெரிவித்தனர்.

சுகாதாரம்

அகதி முகாமில் சுகாதா நலனோம்பு விடயங்களை சிறந்த முறையில் எதிர்பார்க்க முடியாது. இதற்கு காமினி வித்தியாலயமும் விதிவிலக்கல்ல. இங்க சுகாதாரப் பிரச்சினைகள் அதிகளவு உள்ளதாக பொதுமக்கள் குறைப்பட்டுக்கொண்டனர். குறிப்பாக, குழந்தைகளினதும் பெண்களினதும் சுகாதாரப் பிரச்சினைகள் உச்ச நிலையை அடைந்துள்ளதாகத் தெரிவிக்கின்றனர்.

நோய்கள்

இம்முகாமில் தங்கியுள்ள பொதுமக்களில் அநேகமானவர்களுக்கு கைகளிலும், கால்களிலும் சிறு சிறு புண்கள் காணப்படுகின்றன. இது தொடர்பாக பாதிக்கப்பட்ட நோயாளர்கள் கூறுகையில், யுத்தத்தினால் தாம் இடம்பெயர்ந்து வருகையில், கழுத்தளவிற்கு நீர் நிறைந்த குழிகள் உள்ள பாதைகளைக் கடக்க வேண்டியிருந்தது. இந்த அசுத்த நீர் எமது உடல்களில் பட்ட பின்பு ஓரிரு தினங்களில் சிறு சிறு புண்கள் தோன்றியதுடன், பெரும் அரிப்பும் ஏற்பட்டது. அவற்றுக்கான மருந்து வழங்கப்பட்ட போதும் இப் புண்கள் பூரணமாகக் குணமடையவில்லை. மேலும், இம் முகாமில் வாழும் சிலருக்கு வாந்தி, மயக்கம், காய்ச்சல், தலைவலி, போன்ற அறிகுறிகள் காணப்படுவதோடு உணவு உட்கொள்ள முடியாமல் உள்ளதாகவும் நோயாளி ஒருவர் குறிப்பிட்டார். வைத்தியர்கள் தொடர்ந்தும் சிகிச்சைகள் அளிக்கின்றமையால் நோய்கள் பரவாமலும், பாதிப்புக்கள் குறைவாகவும் உள்ளதாகத் தெரிவித்தனர்.

கல்வி ஏனையவை

முகாமில் உள்ள சிறார்களின் கல்வித் தேவையைக் கருத்தில் கொண்டு, இடம் பெயர்ந்து வந்து அதே முகாமில் இருக்கும் ஆசிரியர்கள் இருவரினால் தற்காலிகமாக மரநிழலில் மாணவச் சிறார்களுக்கு கல்வி கற்பிக்கப்படுகின்றது. மேலும், தமது உறவுகளுடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ள வசதியாக முகாமிற்குள் தபால் சேவையும் நடத்தப்படுகின்றது. முகாம் வாழ் மக்களின் கருத்து முகாம் வாழ்க்கை பற்றி எம்மால் கூறுவதற்கு ஒன்றும் இல்லை. எமது மண்ணில் பல வசதி வாய்ப்புக்களுடன் வாழ்ந்த நாம், இன்று அனைத்தையும் இழந்தவர்களாகவும் சபிக்கப்பட்ட இனமாகவும் வாழ்கின்றோம். எம்மை ஒரு காட்சிப் பொருளாகவே சகலரும் பார்க்கின்றனர். இன்று நாங்கள் வெறும் நடைப்பிணங்களே. எம் உணர்வுகள் அனைத்தும் அழிந்துபோய் விட்டன. நான் இந்த முகாமில் இருக்கின்றேன். எனது கணவன், பிள்ளைகள் தொடர்பில் எந்தத் தகவலும் இல்லை. இதேபோன்றே, ஏனையோரும் தத்தமது உறவுகளைப் பிரிந்து வாழ்கின்றமை கொடுமையானதொன்று எனப் புலம்புகின்றனர்.

ராஜேஸ்வரி (வயது 21)

போரினால் பாதிக்கப்பட்ட நிலையில், புதுக்குடியிருப்பு ஆனந்தபுரம் ஊடாக நானும் எனது குடும்பத்தாரும் இடம் பெயர்ந்தோம். இடம்பெயர்கையில் ஷெல் தாக்குதலுக்கு இலக்காகிக் காயமடைந்த நிலையில், வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையின் பின்பு இம் முகாமிற்கு அழைத்து வரப்பட்டேன்.

என்னுடன் வந்த அம்மா, அப்பா, அக்கா, இரண்டு தம்பிமார்கள் தொடர்பில் எதுவித தகவலும் இதுவரையில் இல்லை. இவர்கள் தொடர்பாக முகாமிற்கு வரும் அதிகாரிகளுடன் வினவிய போது, அவர்கள் பாதுகாப்பாக வேறொரு முகாமில் உள்ளதாகத் தெரிவித்தனர். என் மனநிலை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. எனது உறவுகள் மீண்டும் எம்முடன் இணைவார்களா என கண்ணீர் மல்க ராஜேஸ்வரி கூறினார்.

நகுலேஸ்வரன் ஜெயசீலி (வயது 37)

நான் புதுமாத்தளன் பகுதியிலிருந்து இடம்பெயர்ந்து வந்தேன். வரும் போது, எனது பிரசவ நாள் மிக அண்மித்துக் காணப்பட்டதால், என்னை எனது கணவர் பல சிரமங்களுக்கு மத்தியிலேயே அழைத்து வந்தார். இன்று எனக்கு குழந்தை பிறந்து 15 நாட்களே ஆகின்றன. குழந்தைக்குத் தேவையான எந்தப் பொருளுமே என்னிடம் இல்லை. இந்த முகாமில் நானும் 15 நாட்களேயான எனது குழந்தையும் மாத்திரம் ஆதரவற்ற நிலையில் உள்ளோம். எனது உறவுகள் தொடர்பில் எவ்வித தகவலும் இல்லை. மொழிப் பிரச்சினையால் என்னால் எனது குழந்தையின் பிறப்புச் சான்றிதழைக்கூட எடுக்கமுடியவில்லையென அழுது புலம்பினார்.

நந்தகுமார் (வயது 45)

நான் எனது மனைவி, ஐந்து பிள்ளைகளுடன் புதுமாத்தளனிலிருந்து கடும் போர்ச் சூழலிற்கு மத்தியில் இடம்பெயர்ந்தோம். ஷெல் தாக்குதலினால் காயமடைந்த நிலையில் காடுகள் வழியாகவும், நீர் ஓடைகள் ஊடாகவும் பாதுகாப்பான இடம்தேடி ஏனையோருடன் வந்தோம். இடையில் நான் வேறாகவும் மனைவி, பிள்ளைகள் வேறாகவும் பிரிந்துவிட்டோம். இன்று வரை அவர்கள் தொடர்பில் எவ்வித தகவலும் இல்லை என கண்கள் சிவந்த நிலையில் தெரிவித்தார்.

அனிட்டா (வயது 27)

சகல பொருட்களையும் கைவிட்ட நிலையில் நான் எனது கணவர், அம்மா, பிள்ளைகள் எல்லோருமாக இடம்பெயர்ந்தோம். நிறைமாதக் கர்ப்பிணியாக இருந்த நான் இம்முகாமிற்கு வந்த பின் குழந்தையைப் பிரசவித்தேன். தற்போது எனக்கு குழந்தை பிறந்து 1 1/2 மாதம் ஆகின்றது. ஆனால், எனது குழந்தையைப் பற்றியோ, எனது நிலைமை குறித்தோ எனது கணவருக்குத் தெரிவிக்கமுடியாத நிலையில் உள்ளேன். காரணம், நாம் வரும் போது இடையில் பிரிக்கப்பட்டமையால் தகவல் எதனையும் பரிமாறிக்கொள்ள முடியாத நிலையில் உள்ளோம்.

மகேஸ்வரி (வயது 37)

நானும் எனது கணவரும் ஒன்றாகவே இம் முகாமிற்கு வந்தோம். எனது கணவர் புலிகளுடன் தொடர்புடையவர் என சந்தேகத்தின் பேரில் கொண்டு செல்லப்பட்டார். ஒருவாரம் ஆகியும் இதுவரையில் கணவரை விடுவிக்கவில்லை. எனது கணவரின் பெயர் சதாசிவம் பாஸ்கரன் (வயது 45). இவர் புலிகளுடன் தொடர்புடையவர் அல்ல. உடனடியாக அவரை விடுவிக்க நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளைக் கேட்டுக் கொண்டார்.

நவநீதன் (வயது 10)

கிளிநொச்சிப் பிரதேசத்திலிருந்து இடம் பெயர்ந்தோம். வரும் வழியில் கடும் ஷெல் வீச்சுக்களுக்குள் சிக்கி எனது ஒரு காலை இழந்ததுடன், எனது அக்காவின் ஒரு கையும் துண்டிக்கப்பட்டு விட்டது. எனக்கு முன்பு போல விளையாடவோ, பாடசாலைக்கு செல்லவோ விருப்பமில்லாமலேயே உள்ளது. எனது சொந்த வீட்டிற்கு செல்லவேண்டும். அதுவே எனது ஆசை என அச்சிறுவன் தெரிவித்தான்.

வேண்டுகோள்


யுத்தத்தின் அகோரம் அப்பாவிகளான எங்களை பூச்சிய நிலைக்கே தள்ளியுள்ளது. எஞ்சியுள்ள உறவுகளும் உடல் உயிருமே எமது எதிர்கால குறுகிய எதிர்பார்ப்புக்கள். நாங்கள் இடம்பெயர்ந்தது வாழவேண்டும் என்ற ஆசையிலேயே. அது தமிழர்களாகிய எங்களுக்குப் பேரõசையா? அப்படியானால், அப்படித் தெரிந்திருந்தால், சொந்த மண்ணிலேயே மாண்டு போயிருப்போம். நம்பிக்கையோடும் எதிர்பார்ப்புக்களுடனும் வந்த எங்களை தனித்தனியே பிரித்து வைத்து எஞ்சியுள்ள உயிரையும் பறிக்க வேண்டாம். எங்களை எமது உறவுகளுடன் சேர்த்து வைக்க விரைவில் நடவடிக்கை எடுங்கள். பிறந்த குழந்தையின் முகத்தைப் பார்க்காத தந்தை, மனைவியைக் காணாத கணவன், பிள்ளைகளைக் காணாத பெற்றோர், பெற்றோரைக் காணாத பிள்ளைகள், ஒருவருமே இல்லாத அநாதை என எத்தனைத் துன்பங்கள் இந்த முகாமில் எம்மைச் சூழ உள்ளன. அத்தனையையும் மனதில் அடக்கி வைத்துக் கொண்டு சிறிய எதிர்ப்பார்ப்புக்களையும் மனதில் சிறைவைத்துக் கொண்டே வாழ்கின்றோம். எஞ்சிய எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற சம்பந்தப்பட்டவர்கள் நடவடிக்கை எடுப்பார்களா? எமது மண்ணில் மீண்டும் வாழும் சந்தர்ப்பம் வருமா? இல்லையேல் அகதி முகாம் வாழ்க்கை தொடருமோ என்ற பல கேள்விகளுக்கான பதில்கள் கிடைக்கப் பெறாத நிலையே உள்ளது. இம் முகாம்களில் பிறந்த குழந்தைகளுக்கு பிறப்புச் சான்றிதழ் உட்பட ஏனைய ஆவணங்கள் தொடர்பில் கவனம் செலுத்துமாறு பாதிக்கப்பட்ட தாய்மார்கள், சம்பந்தப்பட்டவர்களிடம் வேண்டுகோள் விடுப்பதுடன், தம்மைப் பார்வையிட வரும் உறவுகளை முகாமிற்குள் வர அனுமதிக்குமாறும் கேட்டுக் கொள்கின்றனர்.

நன்றி
- வீரகேசரி -

0 Comments: