வன்னியில் தமிழ் மக்கள் தினசரி பல நூற்றுக்கணக்கில் கொன்றொழிக்கப்படும் பேரவலம் தொடர்கையில் சர்வதேச சமூகம் அதைத் தடுத்து நிறுத்துவதற்குக் காத்திரமான பங்களிப்பு ஏதும் செய்யாமல் வெறும் கண்டனம், கவலை தெரிவிப்பு என்று அறிக்கைப் போர் நடத்திக்கொண்டிருக்கின்றது.
ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோக ணேசன் எம்.பி.கூறுவதுபோல, கடந்த வாரத்தில் தென் னிலங்கை கௌதம புத்தரின் பெயரால் புனித வெசாக் பண்டிகையைக் கொண்டாடிய வேளையில் வடக்கில் பெரும் எணிக்கையான மக்கள் படுகொலை செய்யப்பட்டி ருக்கின்றார்கள்.
கௌதம புத்தரின் காருண்ய சீலத்தைப் போதனையாகவும் வழிகாட்டலாகவும் கொண்டுள்ள ஒரு நாடு எனஓர் அரசு என தன்னைப் பிரகடனப்படுத்திக்கொண்டிருக்கும் ஒரு தரப்பால் இந்தப் பேரவலக் கொடூரம் அரங்கேற்றப் பட்டுக் கொண்டிருப்பதுதான் வேதனையிலும் வேதனை.
இவ்வளவு அட்டூழியங்களும் அங்கு நிகழ்த்தப்பட்டுக் கொண்டிருக்கையில், அப்படி எதுவும் நடக்கவில்லை என்றும், படையினரின் நடவடிக்கைகளில் பொதுமக்களுக்கு எந்தவித பாதிப்புமே ஏற்படவில்லை என்றும் தாங்கள் கனரக ஆயுதங்கள், விமானக் குண்டு வீச்சுகள் போன்றவற்றைப் பயன்படுத்தவில்லை என்றும் கதைவிட்டுக் கொண்டிருக்கின்றது அரசு.
இவ்வாறு சிறுபிள்ளைத்தனமாகக் கருத்து வெளியிடுவதை அரசு உடனடியாக நிறுத்த வேண்டும் என மனோ கணேசன் எம்.பி. சுட்டிக்காட்டியிருக்கின்றார்.
யுத்தப் பிரதேசத்தில் சிக்குண்டுள்ள மக்களுக்குரிய அவசர, அவசிய மருத்துவப் பொருள்கள், உணவுப் பொருள்கள் போன்ற இன்னோரன்னவற்றை எடுத்துச் செல்லவோ, மனிதாபிமானத் தேவைகளை வழங்கி நிறைவு செய்யவோ சர்வதேச தொண்டர் அமைப்புகளுக்கு அனுமதி வழங்க மறுக்கின்றது கொழும்பு. ஐ.நா. முகவர் அமைப்புகளைச் சேர்ந்தோர் உட்பட சர்வதேச தொண்டுப் பணியாளர்களோ, சுயாதீன ஊடகவியலாளர்களோ மோதல் பிரதேசத்துக்குச் செல்ல முடியாமல் தடையை எதிர்நோக்குகின்றார்கள். மோதல் பிரதேசத்தில் சிக்கிப் பேரவலப்பட்டு, அங்கிருந்து வெளியேறி, "உள் நாட்டில் இடம்பெயர்ந்தோரின் மையங்கள்" என்ற பெயரில் முட்கம்பிகளுக்குப் பின்னால் அரசு ஏற்படுத்தியிருக்கும் தடுப்பு முகாம்களில் "சிறை" வைக்கப்பட்டிருக்கும் சுமார் இரண்டு லட்சம் தமிழர்களைக் கூட ஊடகவியலாளர்கள், சர்வதேசப் பிரமுகர்கள், தொண்டர் அமைப்புப் பிரதிநிதிகள் சுயாதீனமாகச் சென்று, சுதந்திரமாகச் சந்தித்து, ஒளிவுமறைவின்றி வெளிப்படையாகப் பேசி, உண்மைகளைக் கண்டறிய அனுமதி இல்லை.
ஏன், இத்தகைய தடுப்பு முகாம்களில் சிறைவைக்கப்பட்டிருக்கும் மக்களை, அவர்கள் தமது வாக்குகள் மூலம் தேர்ந்தெடுத்த நாடாளுமன்றப் பிரதிநிதிகள் கூட நேரில் சென்று சந்தித்துப் பேச முடியாத அளவுக்குத் தடுப்பு விதிகள் மிக இறுக்கமாகவும் தீவிரமாகவும் உள்ளன.
இவ்வாறு "சாட்சியம் ஏதும் இல்லாமல் ஒரு யுத்தம் முன்னெடுக்கப்படுவதை" தனது கெடுபிடிக் கட்டுப்பாடு கள் மூலம் உறுதிப்படுத்திக் கொண்டுதான் மக்கள் பேரழிவு பற்றிய ஐ.நா. அறிக்கைகளைக் கூட வெளிப் படையாக நிராகரித்துக் கண்டித்துப் புறந்தள்ளுகின்றது இந்த அரசு.
பாதுகாப்புத் தரப்பின் கெடுபிடிகளை மீறி சம்பவப் பிரதேசங்களுக்கு நேரில் சென்று உண்மைகளைக் கண்டறிந்து ஆதாரத்துடன் அம்பலப்படுத்த முயலும் ஊடகங்கள், ஊடகவியலாளர்கள் மீது அரசின் அதிகாரக் கரங்கள் பாய்வதும் இந்தப் பின்னணியில்தான். பிரிட்டிஷ் "சனல் 4" ஊடகவியலாளர்கள் நாடு கடத்தப்பட்டதும் கூட இந்த வரிசையில் இடம்பெற்ற ஓர் அதிகாரக் கெடுபிடித்தனம்தான்.
இந்தக் கொடூர யுத்த விவகாரத்தில் அரசுத் தரப்புக்கு மறைக்கப்பட வேண்டிய விடயங்கள் ஏதும் இல்லை என்று கொழும்பு பீற்றிக்கொள்வது உண்மை என்றால், ஐ.நா. பாதுகாப்புச் சபையில் இலங்கை சம்பந்தமான பொது விவா தத்திற்கு அரசு ஏன் மறுக்க வேண்டும், அச்சம் கொள்ள வேண்டும் எனப் பிரதான எதிர்க்கட்சியான ஐ.தே.க. எழுப்பியிருக்கும் கேள்வியும் முற்றிலும் நியாயமானதே.
"மடியில் கனமில்லை என்றால் வழியில் பயம் இல்லை" என்பார்கள். வன்னியில் தனது யுத்த நடவடிக்கைகளை சர்வதேச சட்ட விதிகளுக்கு அமைவாகவும், மக்களுக்குப் பாதிப்பில்லாமலும் தான் முன்னெடுப்பதாகக் கொழும்பு கூறுவது உண்மையென்றால், ஐ.நா.பாதுகாப்புச்சபையில் இவ்விடயம் குறித்து விவாதிக்க அஞ்சுவதேன்? அதற்கு முட்டுக்கட்டை போடுவது ஏன்?
வன்னியில் பொதுமக்களுக்கு அப்பாவித் தமிழர்க ளுக்கு நேர்ந்துள்ள கொடூரம் மிக மோசமானது. முழு உலகுக்கும் புரிந்த உண்மை அது.
இந்தத் தீவின் சிறுபான்மை இனத்தவரான தமிழர்கள் நீதி வேண்டி, நியாயம் கோரி, கௌரவமான சமத்துவமான வாழ்வைத் தேடி நடத்தும் உரிமைப் போராட்டத்தை எப்ப டியும் நசுக்கி, அடியோடு ஒடுக்கி, அவர்கள் மீதான பேரினவாதத்தின் ஆக்கிரமிப்பையும், அடிமைப்படுத்த லையும் தொடர்ந்து நிலைநிறுத்தி உறுதிசெய்ய வேண் டும் என்ற மேலாண்மைத் திமிரில் சிங்களம் மிகவும் திடமாக இருக்கின்றது. உரிமை கோரும் தமிழர்களுக்கு உரிய பாடம் படிப்பித்து, அவர்களை நிரந்தரமாக அடக்கி வைத் திருப்பதை உறுதி செய்வதற்காக எத்தனை ஆயிரம் அப் பாவித் தமிழர்களைக் கொன்றாலும் தப்பில்லை என்ற ஆதிக்க எண்ணப் போக்கே தென்னிலங்கை மக்களைப் பற்றிப் பீடித்து நிற்கின்றது. அதனால்தான் இத்தகைய மனிதப் பேரவலக் கொடூரம் வன்னியில் அரங்கேறும் போது புத்தரின் பக்தர்கள் அதைப் பாராட்டி, வர வேற்றுப் பார்த்திருப்பது மட்டுமல்லாமல், அந்தப் பேரழிவுகளை புளகாங்கிதத்துடன் வர வேற்கவும் செய்கின்றார்கள்.
பிரதான எதிர்க்கட்சியான ஐ.தே.க. கூட இந்த மனிதப் பேரவலக் கொடூரத்தைப் பட்டும் படாமலும் கண்டித்து வாளாவிருப்பதன் பின்னணியும் கூட இதுதான்.
நன்றி
- உதயன் -
Wednesday, May 13, 2009
சாட்சியமின்றி அரங்கேறும் யுத்தம்
Posted by tamil at 8:10 AM
Subscribe to:
Post Comments (Atom)
0 Comments:
Post a Comment