தமிழக அரசியல் தலைவர்களின் நிலைமை பார்க்கப் பரிதாபமாக இருக்கின்றது. அதுவும் "திரிசங்கு சொர்க்கம்" என்ற இக்கட்டில் இரண்டுங்கெட்டான் நிலையில் பரிதவிக்கும் தமிழக முதல்வர் கலைஞரின் அந்தரிப்பு இன்னும் பாவமாக இருக்கின்றது.
பதவிச் சுகத்தைத் தக்க வைப்பதற்காக அதிகாரச் செருக்கைப் பேணுவதற்காக இதுவரை காலமும் ஈழத் தமிழர் விடயத்தில் அவர் முன்னெடுத்த நாடகம், இப்போது அவருக்கு எதிரான முடிவுக்கட்டத்துக்குக் கொண்டுவந்திருப்பது அவருக்குப் பெரும் வேதனை தரக்கூடியதுதான்.
ஈழத் தமிழர்கள் அழியும்போது அழிக்கப்படும் போது அதைப் பார்த்துக்கொண்டு தாம் நடத்திய அபத்த நாடகத்துக்கு உரிய விலை கொடுக்கும் தண்டனையை எதிர்கொள்ளும் வேளை அவருக்கு நெருங்கிவிட்டது.
ஈழத் தமிழர்கள் நீதி, நியாயம், உரிமை, கௌரவ வாழ்வு ஆகியவற்றைக் கோரி உக்கிரத்தோடு போராடிய சமயம், அதற்கு உறுதுணை வழங்காமல் எள்ளி நகையாடியோர் இன்று ஈழத் தமிழருக்குத் தனித் தமிழ் ஈழம் பெற்றுக் கொடுப்போம் என்று வாக்குறுதி தந்து மக்களிடம் வாக்குப் பிச்சை கேட்கும் அளவுக்கு கட்டாயத்துக்கு வந்திருக்கின்றார்கள்.
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் செல்வி ஜெயலலிதாவிலிருந்து, தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி வரை தமிழகத் தலைவர்கள் பலரும் ஈழத் தமிழர் பிரச்சினையைத் தங்களுக்கு வாக்குத் திரட்டும் விவகாரமாகப் பயன்படுத்தி அவ்விடயத்தில் சந்தர்ப்பவாதிகளாகவே செயற்படுகின்றனர் என்பது வெளிப்படை.
கடந்த ஜனவரியில் நான்கு மாதங்களுக்கு முன்னர் இலங்கையில் தமிழர் தாயகத்தில் ராஜபக்ஷ அரசு முன்னெ டுத்து வரும் கொடூர யுத்தத்தை நியாயப்படுத்திய ஜெயலலிதா தான், இன்று தனி ஈழத்தையும் நியாயப்படுத்தி, இந்தியப் படை களை அனுப்பியாவது அதனை நிறுவுவேன் எனச் சூளுரைத்துத் தமிழக மக்களிடம் வாக்கு யாசகம் வேண்டுகின்றார்.
தமிழக மக்களின் உணர்வலைகள் தங்களின் தொப்புள் கொடி உறவுகளான ஈழத் தமிழர்களின்பால் திரும்பியதால் தமிழக அரசியல் தலைவர்களுக்கு ஏற்பட்ட கட்டாயம் இது.
ஆனால், இதனை ஒட்டிய அபத்த நாடகத்தில் தமிழகத் தலைவர்கள் எல்லோரிலும் பெரும் ஏமாற்றுக்கார நடிகர் என்ற தனித்துவத்தை நிலைநிறுத்தியிருப்பவர் தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதிதான் என்பதில் யாருக்கும் சந்தேகமில்லை.
ஈழத் தமிழர் விடயத்தில் அவர்களின் நலனுக்கு எதிரான நடவடிக்கைப் போக்கை வெளிப்படையாகவே பின்பற்றி வரு கின்றது இந்தியாவின் மத்திய அரசை வழி நடத்தும் காங்கிரஸ் தலைமைப்பீடம்.
தமிழகத்தில் தன்னுடைய சிறுபான்மை ("மைனாரிட்டி") அரசைத் தக்க வைப்பதற்காகக் காங்கிரஸ் கட்சியின் தயவில் தங்கியிருக்கும் தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி, அதன் காரணமாக இச்சமயத்தில் பேரவலப்படும் ஈழத் தமிழர்களின் விடயத்தில் மத்திய காங்கிரஸ் அரசை மீறிச் செயற்பட முடியா மல், அதற்குக் கட்டுப்பட்டு நடந்து, ஈழத் தமிழருக்காக ஆற்ற வேண்டிய வரலாற்றுக் கடமையைப் புறந்தள்ளிப் பெரும் துரோகமிழைத்திருக்கின்றார்.
அரசியல் பதவி சுகத்தை அனுபவிக்கும் ஒரே நோக்கத்துக் காக ஈழத் தமிழர் விவகாரத்தில் தாம் புரிந்த துரோகங்களை மூடி மறைக்கக் கலைஞர் போட்ட கூத்தும் நாடகமும் அளப்பரியவை.
அனைத்துக் கட்சிக் கூட்டம், மனித சங்கிலிப் போராட்டம், இராஜினாமா அச்சுறுத்தல், சர்வகட்சிகளுடனும் சென்று புது டில்லிக்குக் காலக்கெடு விதித்து மிரட்டல் அறிவிப்பு வெளியி டல், "சாகும்வரை" உண்ணாவிரதம் என்று அவர் அரங்கேற்றிய நாடகங்களின் வரிசையில் இப்போது வைத்தியசாலையில் போய்ப் படுத்துக்கொண்டு, "தமிழ் ஈழம் அமைக்கும் பொறுப்பை ஏற்கிறேன்" என்று அறிவிப்பு விடுக்கும் கூத்தை அவர் கடைசியாக அரங்கேற்றியிருக்கின்றார்.
பாவம்! இதனைத்தான் "காலம் கடந்த ஞானம்" அல்லது "சுடலை ஞானம்" என்பதா என்று எண்ணிப் பரிதாபப் படுகின்றார்கள் நோக்கர்கள்.
"தமிழ் ஈழம் அமைக்கும் பொறுப்பை ஏற்கிறேன்" என்ற அவரின் அந்த இறுதி அறிவிப்பில் கூட தமது வழமையான "குசும்பை" அவர் கைக்கொள்ளத் தவறவில்லை.
ஈழத் தமிழர் விடயத்தில் தமது "சாதனை"களைப் பட்டியலிடுவதற்காக, "1956 இல் தி.மு.க.பொதுக்குழுவில் இலங் கைத் தமிழருக்காக விசேட பிரேரணை முன்மொழிந்து நிறை வேற்றினேன்", "சட்டசபை உறுப்பினர் பதவியை இராஜினாமாச் செய்தேன்" என்றெல்லாம் பழைய கதை பேசிக்கொண்டிருப் பவர் கலைஞர்.
அந்த வரிசையில் இப்போது "ஈழம் அமைக்கும் பொறுப்பை ஏற்கிறேன்" என்ற தமது அறிவிப்பில் கூட "இலங்கைத் தமிழருக்கு கணிசமான அளவு நீதியை உறுதிப்படுத்தியுள்ளோம். அடுத்த கட்டமாக அவர்கள் ஈழத்தைப் பெற வேண்டும். நான் பொறுப்புகளை எடுத்துக்கொண்டபின் அடுத்த கட்டமாக ஈழம் உருவாக்கப்படுவதற்கான சகல முயற்சிகளையும் உறுதிப்படுத்துவேன்" என்று கூறியிருக்கின்றார் கலைஞர்.
சரி. இனி அவர் ஈழம் அமைக்கும் முயற்சிகளைப் பொறுப்பெடுத்து உறுதிப்படுத்துவார் என்று அவர் கொடுக்கும் "கயிறை" விட்டுவிடுவோம். இதுவரை "இலங்கைத் தமிழர்களுக்கு கணிச மான அளவு நீதியை உறுதிப்படுத்தியுள்ளோம்" என்று அவர் கூறும் கணிசமான அளவு நீதி எது என்பதுதான் புரியவில்லை.
தாமும் தமது தி.மு.க. தரப்பும் கடந்த ஐந்து ஆண்டுகளாக மத்தியில் முண்டு கொடுத்து நிலை நிறுத்தியிருந்த காங்கிரஸ் அரசு இலங்கையில் தமிழர்கள் கொன்றொழிக்கப்படும் போரில் கொழும்புக்கு அளவற்ற உதவிகளை வழங்கியமையைத்தான் ஈழத் தமிழர்களுக்கு கணிசமான அளவு நீதி கிடைப்பதை உறுதிப் படுத்திய தங்கள் சாதனையாகக் கருதுகின்றாரோ கலைஞர்....?
இலங்கையில் தமிழர்களின் இன்றைய பேரவல நிலைக் குப் பிரதான காரணம், அவர்கள் மீது கொடூரப் போர் தொடுத்தி ருக்கும் கொழும்புக்கு இந்திய மத்திய அரசு கொடுத்த ஆதரவு, ஒத்துழைப்பு, உதவி போன்றவைதான். அதில் இரண்டு கருத்து களுக்கு இடமில்லை.
அத்தகைய மத்திய அரசுக்கு முண்டுகொடுத்து ஈழத் தமிழர்களுக்குப் பெரும் துரோகம் இழைத்திருக்கும் கலைஞரும், தி.மு.கவினரும் அதற்காக முதலில் பகிரங்க மன்னிப்புக் கோர வேண்டும். அதுவே இதுவரை அவர்கள் இழைத்த இழி செயல் போக்குக்கு ஆகக் குறைந்த பட்ச பிராயச்சித்தமாகும். அதைக் கூடச் செய்யாது இதுவரை ஈழத் தமிழர்களுக்குத் தாம் இழைத்த அநீதிகளை மூடி மறைத்து, நீதியே செய்தவர்களாகத் தம்மைக் காட்ட அவர்கள் முயல்வது, மேலும் அரசியல் துரோகமாகும்.
தனி ஈழம் அமைக்கும் பொறுப்பை ஏற்கிறேன் என்று அறி விப்பு விடுக்கும் அளவுக்கு "சுடலை ஞானம்" வந்த பின்னரும் கூட, இதுவரை இழைத்த அநீதிகளை மூடி மறைத்து நீதியாகக் காட்ட முயலும் அவரது எத்தனம், ஈழத் தமிழர் விடயத்தில் அவர் திருந்தவில்லை, தொடர்ந்தும் கூத்தாடுகின்றார் என்பதை உறுதிப்படுத்துகின்றது.
நன்றி
- உதயன் -
Saturday, May 9, 2009
கலைஞருக்குப் பிறந்த "சுடலை ஞானம்" !
Posted by tamil at 4:36 AM
Subscribe to:
Post Comments (Atom)
0 Comments:
Post a Comment