வன்னியில் மோதல் பிரதேசத்தில் நிலைமை மிக மோசமடைந்துள்ள கட்டத்தில், சூழலைச் சரிசெய்வதற்கு சர்வதேச சமூகம் எடுத்த எந்த முயற்சியுமே பலன் தரவில்லை. எல்லாமே விழலுக்கு இறைத்த நீராகிவிட்ட கட்டத்தில் பல்வேறு சர்வதேசத் தரப்புகளும் மாறி மாறி வெறும் அறிக்கைகளை வெளியிட்டு, வன் னியில் கொன்றொழிக்கப்படும் தமிழர்களுக்காக வெறுமனே நீலிக்கண்ணீர் வடித்துக்கொண்டிருக்கின்றன.
அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் போன்ற வல்லாதிக்க நாடுகள் கூட கொழும்பைக் கட்டுப்படுத்த முடியாத நிலையில் நீதியை நிலைநிறுத்த முடியாத கையறு சூழலில் வெறுமனே கையைப் பிச்ந்து கொண்டிருக்கின்றன.
இலங்கையில் பல நூற்றுக்கணக்கில் அப்பாவித் தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதைத் தடுக்க முடியாமல் வெறுமனே பார்த்துக்கொண்டு வாளாவிருப்பதன் மூலம் பெரும் வரலாற் றுக் குற்றத்தை இழைத்துக் கொண்டிருக்கின்றது சர்வதேசம்.
"பாதுகாப்பு வலயம் "மீது எந்நேரமும் பாரிய இராணுவ நடவடிக்கை எடுக்கப்படலாம். இதனால் பெரும் இரத்தக்களரி அபா யம் உள்ளது. நிலைமை மிகமிக மோசமடையும் பேராபத்து ஏற்பட்டுள்ளது. கடந்த ஜனவரிக்குப் பின்னர் இப்படிப் படுகொலையுண்டோரின் எண்ணிக்கை ஏழாயிரத்தையும் தாண்டி விட்டது. பொதுமக்கள் மீதான இசாவாறான தாக்குதல்களுக்கு யார் காரணம் என்ற சர்ச்சையை முன்னிறுத்தியபடியே இக் கொடூரம் தொடர்கின்றது. எனவே, இச்சர்ச்சையைக் கருத்தில்கொண்டு மோதல் நடைபெறும் பகுதிகளுக்கு ஐ.நா. கண்காணிப்பாளர்கள் மற்றும் மனிதாபிமான அமைப்புகளை அனுமதிக்குமாறு பாது காப்புச் சபை வேண்டுகோள் விடுக்கவேண்டும் " இப்படி சர்வ தேச மன்னிப்புச்சபை கோரிக்கை விடுத்திருக்கின்றது.
இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள மனிதாபிமான அவலம் குறித்து ஐ.நா.பாதுகாப்புச்சபை உடனடியாக ஆராய வேண் டும் என மனித உரிமைகள் கண்காணிப்பகமும் வேண்டுகோள் விடுத்துள்ளது.
ஐ.நா.பாதுகாப்புச்சபையின் உத்தியோகபூர்வ அமர்விலும், ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸிலிலும் இலங்கை விவகாரம் விசேடமாக ஆராயப்பட வேண்டும் என அது வற்புறுத்துகின்றது.
ஆனால் இத்தகைய வற்புறுத்தல்கள், வலியுறுத்தல்கள், வேண்டுகோள்கள், கோரிக்கைகள் போன்றவை அங்கீகரிக்கப் பட்ட தகுதியும் தகைமையும் உடைய தரப்புகளால் முன் வைக் கப்படுகின்றன என்பதும், மிக அவசரமாகவும் அவசியமாக வும் கவனத்தில் எடுத்து உரிய நடவடிக்கைகளை விரைந்து எடுக்க வேண்டிய விவகாரம் இது என்பதும் சர்வதேச சமூகத்துக்கு நன்கு தெரியும். அது தெரிந்தும் புரிந்தும் கையாலாகாத நிலையில் வெறும் அறிக்கைகளை வெளியிட்டபடி அது பார்த்திருக்கின்றது.
இலங்கை விவகாரத்தை ஐ.நா. பாதுகாப்புச் சபையின் கூட்டத்துக்குக் கொண்டு செல்வதற்கு பிரிட்டன், பிரான்ஸ், அமெரிக்கா போன்ற வல்லரசு நாடுகளும் பிற ஐநோப்பிய நாடுகள் சிலவும் எடுத்த முயற்சியும் பலனளிக்கவில்லை.
இதேவேளை, ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸிலிலும் இலங்கை விவகாரம் குறித்து விசேட அமர்வு ஒன்றை நடத்த மேற்கு நாடுகள் சில எடுத்த முயற்சி தோல்வியில் முடிவடைந் திருப்பதாக இலங்கைத் தரப்பில் பெருமிதம் கூறப்படுகின்றது.
உலகின் மிகப்பெரிய வல்லரசான அமெரிக்காவின் வெளிவிவகார அமைச்சர் ஹிலாரி கிளின்ரனும், பிரிட்டிஷ் வெளிவிவகார அமைச்சர் டேவிட் மில்லிபாண்டும் கூட மோச மடைந்து வரும் இலங்கை நிலைமை குறித்துக் கலந்துரையாடி யிருக்கின்றார்கள். ஆனால் வன்னியில்நைர்ந்துள்ள பேராபத்து நிலையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்குத் தேவையான ஆக்கபூர்வ நடவடிக்கையை எடுக்க வக்கற்ற அவர்கள், திரும்பவும் ஒரு தடவை வழமை போல உடனடியாக மோதலை நிறுத்துமாறு வற்புறுத்தும் அறிக்கையை வெளியிட்டிருக்கின்றார்கள்.
இத்தகைய அறிவிப்புகள், அறிக்கைகள் மற்றும் வெற்றுக் கோரிக்கைகளைக் கொழும்பு செவிமடுக்கப் போவதில்லை என்பதும், தனது போரியல் வெறிப்போக்கை அது இன்னும் தீவிரமாக முன்னெடுப்பதிலேயே முனைப்பாக உள்ளது என்பதும் இப்படி வெற்றும் வறிதானதுமான கோரிக்கைகளை வெளியிட் டுவரும் சர்வதேச சமூகத்துக்கு நன்கு தெரியும்.
அப்படித் தெரிந்திருந்தும் கூட, தங்கள் கோரிக்கையை செவிமடுத்து உரிய வழியில் நீதி, நியாயத்துடன் செயற்பட கொழும்பு இணங்காவிட்டால், கடுமையான தீவிரமான பதிலடி நடவடிக்கைகளை சர்வதேச சமூகம் எடுக்கவேண்டிநைரும் என்ற கடும் தொனியுடனான வற்புறுத்தல்களை சர்வதேச சமூகம் வெளியிடாமல், வெறும் மேம்போக்கான கோரிக்கைகளையே அது தொடர்ந்தும் வெளியிட்டுக் கொண்டிருக்கின்றது.
"நான் ஒப்புக்குச் சப்பாணியாக மோதலை நிறுத்தும்படி வற்புறுத்திக் கொண்டு இருக்கிறேன். நீ அதனை ஒரு காதால் வேண்டி மறுகாதால் வெளியிட்டபடி தமிழர்களைத் துடைத்தழிக்கும் உனது கைங்கரியத்தை உன்பாட்டில் செய்து கொண்டிரு! "எனக் கொழும்புடன் இரகசிய உடன்பாடு செய்துவிட்டுக் காரியங்களை ஆற்றிக்கொண்டிருக்கின்றதோ சர்வதேச சமூகம் எனத் தமிழர்களும், சுயாதீனநேக்கர்களும் கருதும் அளவுக்கு இசா விவகாரத்தில் சர்வதேச சமூகத்தின் பொறுப்பற்ற நழுவல், வழுவல் போக்கு அமைந்திருக்கின்றது.
ஈராக் மீது தனது ஆக்கிரமிப்புப் போரை ஆரம்பிப்பதற்கு ஐ.நாவின் இணக்கத்துக்குப் பார்த்திருக்காத காத்திருக்காத அமெரிக்கா, இலங்கையில் மோசமடைந்துவரும் நிலைமை யைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து தமிழர்களின் பேரழிவைத் தடுப்பதற்கு மட்டும் பாதுகாப்புச்சபை கூட்டத்துக்கும் அனுமதிக்கும் காத்திருப்பது போல நடிக்கின்றது. "சர்வதேச பொலிஸ்காரனான "அமெரிக்காவின் வழியில் தானும் இப்படிப் "பொறுப்புடன் "நடிப்பதாகக் காட்ட முயல்கின்றன சர்வதேச சமூகத்தின் ஏனைய அங்கத்துவத் தரப்புகள்.
சமாதானப் பேச்சுக் காலத்தில் அமைதி முயற்சிகளில் விடுதலைப் புலிகளும் இலங்கை அரசு ம் சமதரப்பு அந்தஸ்துடன் பங்குபற்றியபோது, அவசரப்பட்டு, விரைந்து, புலிகளைப் பயங்கரவாதப் பட்டியலில் சேர்த்துத் தடைசெய்து, அதன்மூலம் அமைதி எத்தனங்களில் புலிகளின் சமதரப்பு அந்தஸ்தை சிதறடித்து, அதன் வாயிலாக சமாதான எத்தனங்களுக்கே நிரந்தர ஆப்பு வைத்த சர்வதேச சமூகம், அப்போது புலிகளுக்கு எதிராக விரைந்து நடவடிக்கை எடுத்தமை போல இப்போது கொலைக் கொடூரத்தை அப்பாவித் தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்து விட்டி ருக்கும் தரப்புகள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க முடியாமல் இருப்பது ஏன் என்பதுதான் தமிழ் மக்களுக்குப் புரியவில்லை.
சர்வதேச சமூகத்தின் இந்த வெற்றுவேட்டு அறிக்கைகளும் கோரிக்கைகளும் பேரழிவுக்குள் சிக்குண்டிருக்கும் அப்பாவி ஈழத் தமிழர்களைக் காப்பாற்ற மாட்டா என்பதை இந்த சர்வதேச சமூகத்தின் பிரதிநிதிகள் கவனத்தில் கொள்ளவேண்டும். மனச்சாட்சியுடன் காரியமாற்ற அத்தரப்புகள் முன்வரவேண்டும். அப் போதுதான் பேரழிவின் இறுதியில் சிக்குண்டிருக்கும் எஞ்சிய தமிழர்களின் உயிர்களையாவது காப்பாற்ற வாய்ப்புக்கிட்டும்.
நன்றி
- உதயன் -
Friday, May 15, 2009
வெற்றுவேட்டு அறிவிப்புகளை வெளியிடும் சர்வதேசத் தரப்புகள்
Posted by tamil at 8:05 AM
Subscribe to:
Post Comments (Atom)
0 Comments:
Post a Comment