Sunday, May 3, 2009

இவர்களின் இன்றைய கதியே தொடருமா?

போர் நடைபெறும் பகுதிக்குள் சிக்குண்டிருப்பது ஒருவித வேதனை.

எறிகணைகள் மற்றும் ஆயுதங்களின் தாக்குதலில் அகப்பட்டு எப்போது உயிர் பிரியுமோ என்ற மரண பயம் வினாடிக்கு வினாடி மக்கள் மனங்களைக் கொன்று கொண்டிருப்பது அந்த வகை வேதனை.

ஆனால் உயிரைத் தக்க வைத்து விட்டோம், அது பறிக்கப்படும் ஆபத்து 90 முதல் 95 வீதம் நீங்கிவிட்டது என்ற ஆறுதலுடன் நலன்புரி நிலையங்களுக்குப் போய்ச் சேர்ந்த பின்னர் படும் வேதனை இன்னொரு விதம்.

எதுவுமற்ற ஏதிலிகளாக, உடுத்த உடையுடன் முல்லைத்தீவுப் பாதுகாப்பு வலயத்திலிருந்து வெளி யேறி வந்த மக்கள்வவுனியாவில் நலன்புரி நிலையங் களில் அடைபட்டிருக்கும் மக்கள்படும் துன்ப துயரங் கள் நீண்ட நிரல் வரிசைப்படுத்தக் கூடியவை.

இங்கே வந்து இத்துணை வடிவங்களில் அல்லற்பட்டு ஆற் றாது விநாடிக்கு விநாடி செத்துக்கொண்டிருப்பதை விட, ஆயுதங்களால் தாக்குண்டு ஒரே முறையில் மடிந் திருக்கலாம் என்று மனம் சலிப்புற்று விரக்தி நிலைக் குத் தள்ளப்படும் அளவுக்கு, நலன்புரி நிலையங்களில் நாள்களைக் கழிப்பது நரகலோக வாழ்வாக மாறியிருப்பதனை தூரத்தே இருந்து பார்க்கவே மனித நேயம் உள்ள எந்த மனிதனுக்கும் மனதை வதைக்கும்.
வவுனியா நலன்புரி நிலையங்களுக்குச் சென்று, அங்குள்ள மக்களைக் கண்டு, கதைத்து வந்தவர்கள் கூறும் சோகக் கதைகள் எவர் மனதிலும் இரக்கம் பிறக்க வைக்கும் காட்சிகளாகப் பதியக்கூடியவை.

கடந்த மாதம் இருபத்திநான்காம் திகதி, தமது இலங்கைக்கான சிறப்பு வருகையின் போது வவுனியா நலன்புரி நிலையத்தில் உள்ளவர்களைச் சந்தித்துப் பேசிய அவர்களின் நிலைமையை நேரில் கண்ட, கேட்டவாழும் கலை அமைப்பின் தலைவரும், ஆன்மீகக் குருவுமான ஸ்ரீஸ்ரீரவிசங்கர் குருஜி தெரிவித்த தகவல்கள் கேட்டவர் மனங்களை உருகவைப்பவை.

பிச்சைக்காரர்களையே காணாத மக்கள்,மற்றவர் களிடம் கையேந்தும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார் கள். அவர்களில் பெரும்பாலானோர் மனநிலை பாதிக்கப்படும் நிலைக்குத் தள்ளப்படுவார்கள் என்பதனைக் காண முடிந்தது. அங்கு மனிதனாகப் போகமுடியாது. மனதைக் கல்லாக்கிக் கொண்டுதான் போக வேண்டும் என்று மனம் வெதும்பியிருக்கிறார் ரவிசங்கர் குருஜி.

அவர் தமிழ் பேசத் தெரிந்த அயல்நாட்டவர், ஓர் ஆன்மீகவாதி என்ற வகையில் மக்களுடன் நெருங்கி உரையாடி அவர்களின் மனநிலைகளை அளந்து சென்றிருக்கிறார். உண்மையைச் சொல்லத் தயங்க வேண்டிய நிலைக்கு அப்பாற்பட்ட ஆன்மீக யோகி. அதனால், அவர் கூடவே இந்திய அரசாங்கத்தையும் அரசியல்வாதிகளையும் அவர்களின் போக்கையும் கண்டித்தார் மன வேதனையுடன்.

வன்னியிலிருந்து வந்து, வவுனியா நலன்புரி நிலையங்களில் அடிப்படை வசதிகள் எதுவும் இன்றி வாழும் மக்கள் மூன்று வேளையும் பிச்சைக்காரர்கள் போன்று உணவுக்குக் கையேந்துகிறார்கள். அவர்கள் சோர்வடைந்த நிலையில் காணப்படுகிறார்கள். அந்த மக்களின் நிலைமை பரிதாபகரமானது, வேதனைக்குரியது என்று மனம் வெதும்பியுள்ளார் இன்னுமொரு ஆன்மீகக் குருவான யாழ்.மறை மாவட்ட ஆயர் அதிவண. தோமஸ் செளந்தரநாயகம் ஆண்டகை. அவர் தாம் நேரில் கண்டதை மனம் தாங்காது, மனம் திறந்து மிக நீட்டமாகவும் கூறியுள்ளார்.

அரசாங்கத்தினால் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள கூடாரங்கள் பாதுகாப்பானவை அல்ல; சர்வதேச தரம் வாய்ந்தவை அல்ல. மக்கள் களைத்துச் சோர்வடைந்த நிலையில் இருக்கிறார்கள். குளிப்பதற்குப் போதிய இடவசதிகள் இல்லை. சுத்தமான குடிதண்ணீர் இல்லை. மருத்துவ வசதிகள் போதியனவாக இல்லை. உழைத்து வாழ்ந்த மக்கள் விரக்தியுடன் வெறுங்கையுடன் இருக்கின்றனர் என்று நலன்புரி நிலைய மக்களின் அவலத்தைத் தத்ரூபமாகப் படம் பிடித்துக் காட்டுகிறார்.

இடம்பெயர்ந்தவர்களின் தேவைகளை உரியவகையில் நிறைவேற்றாத அரசு, உள்நாட்டு மக்கள் மற்றும் உறவுகள் உதவுவதற்கு அனுமதியும் வழங் குவதாக இல்லை. நிவாரணப் பொருள்களைத் தாங்கள் கொண்டு போய்க் கொடுப்பதாக இராணுவத்தினர் தெரிவிக்கின்றனர். மனிதாபிமான உதவிகளைச் செய்வதற்கும் இப்படி ஒரு மறைமுகமான தடை!
இடம்பெயர்ந்த மக்களுக்கான நிவாரணப் பணிகளை அரசு செவ்வனே செய்யவில்லை என்பதை வவுனியாவுக்குச் சென்றிருந்த ஐ.நா.அதிகாரி ஜோன் @ஹாம்ஸ் மற்றும் பிரிட்டிஷ், பிரெஞ்சு வெளிநாட்டமைச்சர்கள் மில்லிபான்ட், பேர்னாட் கௌச்னர் ஆகியோரும் வன்னி நலன்புரி நிலையங்களைச் சென்று பார்வையிட்ட பின்னர் தெரிவித்திருந்தனர். அவர்களும் இடம் பெயர்ந்தோருக்கு உரிய வசதிகள் செய்யப்பட வில்லை என்பதனையே பிரதானமாகச் சுட்டிக்காட்டி உள்ளனர்.

தமது உழைப்பால், வீடுவாசல்களில் வசதியாக வாழ்ந்த மக்கள், பிச்சைக்காரர்களாக மாற்றப்பட்டிருக்கிறார்கள்; போதிய அடிப்படை வசதிகள் இன்றி நோயாளிகளாக மாறிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு உறவினர்கள் மற்றும் வெளியார் உதவுவதற் குத் தடை போடும் அரசு, அந்த மக்களை நீண்ட நாள் "கைதிகள்" ஆக்கி உடலாலும் உள்ளத்தாலும் மெலிந்தும் நலிந்தும் போகச் செய்து அடிமைகளாக்கப் போகிறதா அல்லது கண்ணுக் குப் புலப்படாத விதத்தில் உள்ளூர்ந்து சாகடிக்கப்போ கிறதா? அவர்களும் மனிதர்களே என்று மனந்திருந்தி, அரசு போதிய வசதிகளைச் செய்யும் என்று இப்போதைய செயற்பாடுகளை வைத்து எவரும் நம்புவதற்கில்லை.

நிர்க்கதிக்கு ஆளாகி இருக்கும் வன்னி வாழ் தமிழ் மக்களை, மிகக் குறுகிய காலத்தில் அவர்களின் முந்திய பிரதேசங்களில், சொந்த இடங்களில் மீளக்குடியேற்ற வேண்டும். ஐ.நா. போன்ற சர்வதேச மனிதாபிமான அமைப்புகளே அதற்கு உந்துசக்தியாக இருக்க முடியும்.

நன்றி
- உதயன் -

0 Comments: