Tuesday, May 5, 2009

வட்டார மட்டத்திற்கு அதிகாரப் பகிர்வு வந்தாலும் கூட ஆச்சரியப்படுவதற்கில்லை...

இலங்கைத் தமிழர்களின் இனப்பிரச்சினை தொடர்பான விடயம் இன்று சர்வதேச விவகாரமாகி விட்டிருக்கின்றது. இதைக் கையாள்வது தொடர்பில் கொழும்பு ஆட்சிப் பீடத் தின் நிலைப்பாடு காலங்காலமாக ஒன்றுதான்.

அடக்கப்பட்டு, நியாயமான உரிமைகள் நிராகரிக்கப்பட்டு, கௌரவமான வாழ்வு மறுக்கப்பட்டு, கொடூரப் போராலும் வன்முறைகளாலும் பேரவலப்பட்டு அந்தரிக்கும் ஈழத் தமிழ் இனத்துக்கு நியாயம் செய்யும் எண்ணமோ, நீதியான தீர்வை வழங்கும் தாராளமோ கொழும்பு ஆட்சிப்பீடத் துக்குக் கிஞ்சித்தும் கிடையாது என்பதும் தெளிவு.

தேசிய இனப்பிரச்சினை விடயத்துக்கான தீர்வு விடயத்தில் சிறுபான்மையினத்தவரான தமிழர்களின் பேரம் பேசும் வலுவை இராணுவ, அரசியல் ரீதியாக சிதைத்து, அழித்த பின்னர், உருப்படியற்ற உப்புச்சப்பற்ற திட்டம் ஒன்றைத் தனது பிச்சையாகத் தமிழருக்குத் தூக்கிப் போடு வதும், நலிவுற்றிருக்கும் தமிழினம் வேறு வழியின்றி அதைத் தலையாட்டி ஏற்றுக்கொள்ளும் நிலையை ஏற்படுத்துவதும் கொழும்பின் தந்திரோபாயம் என்பதும் வெளிப்படை.

பிரிட்டிஷ் காலனித்துவப் பிடியிலிருந்து இலங்கைத் தீவு விடுபட்ட காலம் முதல் இனப்பிரச்சினைத் தீர்வுக்காக எடுக்கப்பட்ட மேற்கொள்ளப்பட்ட எத்தனங்களின் போதெல்லாம், கொழும்பு ஆட்சிப் பீடத்தின் இலக்கும், நோக்கும், போக்கும் இந்த அடிப்படையில்தான் அமைந்து இருந்தன என்பது தமிழர்களின் அனுபவப்பாடமாகும்.
தமிழர் தரப்பின் பேரம் பேசும் வலுவை அரசியல், இராணுவ நடவடிக்கைகள் மூலம் சிதறடித்து சின்னாபின்ன மாக்கியிருப்பதாகக் கருதும் பேரினவாதம், இந்தச் சந்தர்ப் பத்தைப் பயன்படுத்தி பிச்சைத் தீர்வை விட்டெறியத் தயாராகின்றது.

தூங்கி, அடங்கிப் போய்க்கிடந்த "அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழு" என்ற செப்படி வித்தையை மீண் டும் இயக்குவிக்கக் கொழும்பு இப்போது எடுத்திருக்கும் முயற்சியின் பின்னணி இதுதான்.

அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழு என்பதே சுத்த மோசடி; வெறும் "ஹம்பக்"!
அரசுத் தரப்பில் உள்ள கட்சிகளை விட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும், ஜனநாயக மக்கள் முன்னணியும் தான் மேலதிகமாக அதில் அங்கம் வகிக்கின்றன. அதுவும் ஜனநாயக மக்கள் முன்னணி கூட இப்போது இறுதிக்கட்டத் தில்தான் அதன் அமர்வுகளில் கலந்து கொள்கின்றது. இதைத் தவிர பிரதான எதிர்க்கட்சிகள் எவையும் அதில் இல்லை. ஐ.தே.கட்சி இல்லை. ஜே.வி.பி. இல்லை. நாடாளுமன்றத்தில் இலங்கைத் தமிழர்களை 95 வீதம் பிரதிநிதித் துவம். பிரதான எதிர்க்கட்சிகள் இல்லாத அந்தக் கட்ட மைப்பை அரசுத் தரப்பு ஏகோபித்த ஆதிக்கம் செலுத்தும் அந்த நிறுவகத்தை "அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள்" என்று சோடித்து உலகின் காதில் பூச்சுற்றப் பார்க்கின்றது கொழும்பு.

இலங்கைத் தமிழரின் தேசிய இனப்பிரச்சினைக்கான இணக்கத் தீர்வைக் காண்பதற்காகவே இந்த அமைப்பு என்கிறது கொழும்பு அரசு. அதில் பிரதான எதிர்க்கட்சிகள் மட்டுமல்ல, இனப்பிரச்சினையில் சம்பந்தப்பட்ட பிரதான தரப்பான தமிழர்களின் பிரதிநிதிகளுக்கே இடமில்லை. அப் படியிருக்க, இதனை "அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழு" என்று காட்டி அதன் ஊடாகத் தீர்வுக்கான முயற்சிகளில் ஈடு படுவதாகக் கொழும்பு தம்பட்டம் அடித்துக் கொள்வது, மணப்பெண் இன்றித் திருமணம் நடத்துவது போன்ற வேடிக்கையாகும்.

இந்தியாவின் தலையீட்டுடன் இருபத்தியிரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் கொண்டுவரப்பட்ட மாகாண சபைத் திட்டமும், அரசமைப்பின் 13 ஆவது திருத்தமும் கூட சரிவர நடைமுறைப்படுத்தப்படவில்லை. அவை எல் லாம் தங்களின் அபிலாஷைகளை நீதி, நியாயமான எதிர் பார்ப்புகளை நிறைவு செய்யவேயில்லை என்பதைத் தமிழர்கள் வெளிப்படையாகவும் உறுதியாகவும் தெளிவுபடுத்தி விட்டனர்.

நாடாளுமன்றில் நிறைவேற்றி, அரசமைப்புச் சட்ட அதிகாரம் கொடுக்கப்பட்ட 13 ஆவது திருத்தச் சரத்துக் களை இருபத்தியிரண்டு ஆண்டுகள் கழித்தும் நடை முறைப்படுத்த வக்கில்லாத விருப்பில்லாத கொழும்பு இப்போது, இந்தியாவின் "பஞ்சாயத்து ராஜ்" போன்ற கிராம சபை மட்ட அதிகாரப் பரவலாக்கல் குறித்துப் பிரஸ்தாபிக்கின்றது.
இலங்கைத் தமிழர்களின் ஏகோபித்த பாரம்பரிய பூர்வீக தாயகத்தை வடக்கு, கிழக்காகத் துண்டாடி, மாகாணங்களாகப் பிரித்து, மாகாண மட்ட அதிகாரப்பகிர்வு என்று முன்னர் கதைவிட்ட கொழும்பு, இப்போது மாவட்டங்களை விட்டும் கீழிறங்கி, பிரதேச செயலகப் பிரிவு ரீதியி லும், கிராமசபை மட்டத்திலும் அதிகாரத்தைப் பகிர்வது குறித்துப் பிரஸ்தாபிக்கின்றது.

தனது போரியல் தீவிரம் மற்றும் யுத்த வெறிப் போக்கின் மூலம் தமிழர் தரப்பின் இராணுவப் பலத்தையும், தனது கெடுபிடி ஆட்சி மூலம் தமிழர்களின் அரசியல் அதிகார வலுவையும் சிதைத்து, அழித்து விட்டதாகக் கருதிப் பெரு மிதம் கொள்ளும் கொழும்பு ஆட்சிப்பீடம், தமிழர்களுக்கு எதிரான தனது அதிகாரக் கிடுக்குப் பிடியை மேலும் இறுக்கி, அவர்களை நசித்துக்கொண்டு, இப்போது தான் பேசும் கிராமிய மட்ட அதிகாரப் பரவலாக்கலை, மேலும் நீர்த்துப்போகப் பண்ணி, வட்டாரமட்ட அதிகாரப்பகிர்வு குறித்துப் பிரஸ்தாபித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

தனது திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள், கொடூர மான படை நடவடிக்கைகள் ஆகியவை மூலம் நடைமுறைச் செயற்பாட்டிலும்
நீதிமன்ற மற்றும் திட்டமிட்ட நிர்வாகச் செயற்பாடுகள் மூலம் சட்ட ரீதியிலும்
ஈழத் தமிழர்களின் பூர்வீகத் தாயகத்தைத் துண்டாடிப் பிரித்து நிற்கும் பேரினவாதம், அத்துண்டுபடுதலை நிரந்தர மாக நிலை நிறுத்தி, ஸ்திரப்படுத்துவதற்கான தந்திரோபாய யோசனையையே இப்போது தீர்வுத் திட்டம் என்ற பெயரில் முன்னெடுக்கக்காய் நகர்த்துகின்றது.

இந்தக் குள்ளநரித் திட்டத்துக்குத் துணைபோகும் சுயநலத் தமிழர் தரப்புகள் தாங்கள் தமது இனத்துக்கு இழைக்கப் போகும் வரலாற்றுத் தவறையும் அதன்மூலம் சம்பாதிக்கப்போகும் சரித்திரப் பழியையும் ஒரு தடவை சிந்தித்துப் பார்ப்பது நல்லது.

நன்றி
- உதயன் -

0 Comments: