Tuesday, April 29, 2008

அடக்குமுறைக்கு எதிராக மாறிவரும் உலகப் போக்கு

உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதியரசர் க. விக்னேஸ்வரன் கடந்த சனியன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற தந்தை செல்வா நினைவுப் பேருரையில் இலங்கை இனப் பிரச்சினை குறித்துக் கூறிய கருத்துகள் முக்கியமானவை.

இலங்கை இனப்பிணக்கு விவகாரத்தில் இலங்கை அரசு, நோய்க்கு வைத்தியம் செய்வதை விடுத்து நோயின் அடையாளங்களுக்கு குணங்குறிக்கு மருத்துவம் செய்கின்றது. இதை விடுத்து நோயின் மூலத்தைக் கண்டறிந்து, அதற்குத்தான் மருந்து கொடுக்கவேண்டும் என இப்பத்தியில் நாம் தொடர்ந்து சுட்டிக்காட்டி வருகின்றோம். அதை மீண்டும் ஒரு தடவை சுட்டிக்காட்டியிருக்கின்றார் விக்னேஸ்வரன்.

தமிழர்களின் போராட்டம் என்ற நோயை அடக்குவதற்கு அரசியல் தீர்வே தேவை. விடுதலைப் புலிகளை அழித்துவிட்டால், தான் முன்வைக்கும் எந்தத் தீர்வையும் தமிழர்கள் தாராளமாக ஏற்றுக்கொள்வர், அவர்கள் மீது எத்தகைய திட்டத்தையும் தீர்வாகத் திணித்து அவர்களை அதற்கு இணங்க வைக்கலாம் என்று அரசு கருதுகின்றது. அது தவறு என்ற சாரப்பட விக்னேஸ்வரன் கருத்துக் கூறியிருக்கின்றார்.
2002 டிசம்பரில் ஒஸ்லோவில் அப்போதைய இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் இடம்பெற்ற அமைதிப் பேச்சுகளின்போது "உள்ளக சுயநிர்ணய உரிமையுடன் கூடிய சமஷ்டிக் கட்டமைப்பின் கீழ் இலங்கை இனப்பிரச்சினைக்கு இணக்கமான தீர்வுத்திட்டம் ஒன்றைக் காண்பது குறித்து ஆராய்வதற்கு இரு தரப்பும் உடன்படுகின்றன' என்ற தீர்மானம் எட்டப்பட்டது. அந்த அமைதிப் பேச்சின் பின்னர் வெளியான அறிக்கையில் இது குறித்து விவரிக்கப்பட்டது.
அதன் பின்னர், இனப்பிரச்சினைக்கு சமஷ்டிமுறைத் தீர்வு காண்பது குறித்து அதிகம் கூறப்பட்டு வந்தது. ஆனால் அமைதி முயற்சிகளில் ஈடுபட்ட பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் அரசு கலைக்கப்பட்டு பொதுமக்கள் ஐக்கிய முன்னணி அரசு ஆட்சிக்கு வந்த பின்னர் சமஷ்டித் தீர்வு முயற்சி பற்றிய பேச்சுகள் மெல்ல மெல்ல அடங்கின.
இப்போது போர்வெறித் தீவிரம் கொண்ட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஆட்சிக் கட்டமைப்பு பதவிக்கு வந்த பின்னர் கடந்த சுமார் இரண்டரை ஆண்டு காலத்தில் சமஷ்டித் தீர்வு பற்றிய எண்ணக்கருவே கிடப்பில் போட்டு மூடப்பட்டு விட்டது. அதற்கான வாய்ப்புகள் அடியோடு நிராகரிக்கப்பட்டு விட்டன.

சமஷ்டி முறைத் தீர்வு முயற்சியை முற்றாக ஆழக் குழிதோண்டிப் புதைத்துவிட்ட அரசு,போரினால் தமிழ் மக்களை முழுமையாக வழிக்குக் கொண்டுவந்துவிடலாம் எனக் கங்கணம் கட்டிச் செயற்படுகின்றது என்பதை சுட்டிக்காட்டுகின்றார் விக்னேஸ்வரன்.
தமிழ் மக்களையும் அவர்களின் உரிமைகளுக்காகக் குரல் எழுப்பும் போராட்ட சக்தியான விடுதலைப் புலிகள் இயக்கத்தையும் வேறுபடுத்திக் காட்ட அரசு முயல்கின்றது. புலிகள் மட்டுமே வன்முறைகளில் ஈடுபட்டு வருகின்றனர், அவர்களை அழித்து ஒழித்தால் அரசு முன்வைக்கும் எந்தத் தீர்வையும் தமிழ் மக்கள் தாராளமாக ஏற்றுக்கொள்வர் என்ற எண்ணத்தில் கருத்தில் அரசு செயற்படுகின்றது என்ற நிலைவரத்தை வெளிப்படையாக எடுத்துக் காட்டுகின்றார் விக்னேஸ்வரன்.

தமிழீழ விடுதலைப் புலிகளை அழித்தொழிக்கும் தனது எத்தனத்தில் இலங்கை அரசு புரியும் மற்றொரு கபடத்தனத்தையும் அவர் அம்பலப்படுத்துகின்றார்.
புலிகளின் போராட்டத்துக்கு பயங்கரவாத முத்திரை குத்துகின்றது அரசு. அங்குதான் சூட்சுமம் உள்ளது.

வன்முறையில் புலிகள் ஈடுபட்டால் அது பயங்கரவாதம். அரசின் அட்டூழியங்களுக்கு எதிராக எவரேனும் கிளர்ந்து எழுந்தால் அது பயங்கரவாதம்.
ஆனால் அதை அடக்கும் பெயரால் அரசு வன்முறைகளை முன்னெடுத்தால் அது நாட்டைக் காக்கும் உன்னதப் பணி.

இதுதான் அரசின் கணிப்பீடும்,பரப்புரையும் என்று வெளிப்படுத்துகின்றார் விக்னேஸ்வரன்.
இவ்வாறு தமிழ் மக்களின் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தி அதை அடக்கி ஒடுக்க முற்படுவது பலன் தராது, தீர்வை வழங்கவே வழங்காது.

உரிமைக்கான கௌரவ வாழ்வுக்கான தமிழ் இளைஞர்களின் எழுச்சியையும், கிளர்ச்சியையும், போராட்ட வீறையும் அடக்குவது நோயின் அடையாளங்களை அடக்க முனைவது போன்றது. நோயை போராட்ட நோயை அடக்க வேண்டுமானால் தமிழர்களின் நியாயமான அபிலாஷைகளை நிறைவுசெய்யும் அரசியல் தீர்வே அவசியமானது என்பதையும் வெளிப்படையாகவே சுட்டிக்காட்டுகின்றார் விக்னேஸ்வரன்.
நோயின் மூலத்தை அடக்காமல் நோயின் அடையாளங்களை அல்லது குணங்குறிகளை அடக்க முயன்றால் நோயின் வெளிப்பாடு வேறு குணங்குறியாகத் தோற்றும் என்பதையும் கூட அவர் சுட்டிக்காட்டத் தவறவில்லை.

விடிவை நோக்கிப் போராடும் ஒரு மக்கள் கூட்டத்தின் அயராத முயற்சி, அந்த மக்கள் கூட்டத்தினருடன் அடங்கிவிடும் விவகாரம் அல்ல. இன்று உலகமே அதில் தலையிடும் சாத்தியம் பங்களிப்பு அதிகரித்து வருகின்றது. அடக்கப்பட்ட மக்களுக்காக உலகமே ஒன்றுபட்டு ஓங்கிக் குரல் எழுப்பும் சூழ்நிலை இன்று உருவாகி வருகையில் ஈழத் தமிழ் மக்களும் அவர்களது உரிமைக்கான போராட்டமும் உலகின் எங்கோ ஒரு மூலையில் தனித்து விடப்படவில்லை என்பதையும் ஓய்வுபெற்ற நீதியரசர் விக்னேஸ்வரன் எடுத்துக் காட்டுகின்றார்.

விடிவை நோக்கித் தமிழர்கள் மட்டுமே போராடுகின்றார்கள் என்பது அல்ல. உலகமே அந்த விடிவை நோக்கிய யாத்திரையிலேயே முனைப்பாக ஈடுபட்டுள்ளது. அதனால்தான் "பாதுகாப்பிற்கான உரித்து' (the right to protect) என்ற எண்ணக்கரு உலகில் மேலோங்கி வருகின்றது. இந்தக் கொள்கைப் போக்கின்படி ஒரு நாட்டில் இடம்பெறும் அட்டூழியங்களை இன்னொரு நாடு பார்த்துக்கொண்டு வாளாதிருக்க முடியாது என்ற நிலைமை ஏற்பட்டுள்ளது. தட்டிக் கேட்கும் உரித்து உண்டு என்கிறது இந்த எண்ணக்கரு. தட்டிக்கேட்பது மட்டுமல்ல பாதிக்கப்பட்டவர்களை உலக நாடுகள் சேர்ந்து பாதுகாக்கும் பிரயத்தனங்களில் ஈடுபட வேண்டும்'' என்றும் வலியுறுத்தப்படுகின்றது.

""உலகின் கண்ணோட்டம் இன்று மாறியிருக்கின்றது. அட்டூழியங்களுக்கும், இம்சைக்கும் ஆளான மனித சமூகம் அல்லது மக்கள் கூட்டம் இன்று தனித்து விடப்படவில்லை. உலகமே அதற்காகக் குரல் எழுப்பும் நிலைமை வந்துவிட்டது.'' என்பதை முன்னாள் நீதியரசர் விளக்கியுள்ளார்.

""கொடூரமான தொடர் மனித உரிமை மீறல்களில் இருந்து ஒவ்வொரு நாடும் அதன் மக்களைப் பாதுகாப்பது அதன் தலையாய கடமை. நாடுகளால் தமது மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியாவிட்டால் ஐக்கிய நாடுகள் சாசனம் மற்றும் வேறு சர்வதேச ஆவணங்களின் அடிப்படையில் சர்வதேச நாடுகள் சட்டபூர்வமாக இடையில் புகுந்து தலையிட வேண்டும். இவ்வாறு இடைபுகுவதைத் தேவையற்ற குறுக்கீடாகவோ அல்லது நாடுகளின் இறைமையைக் கட்டுப்படுத்துவதாகவோ அர்த்தப்படுத்த முடியாது.'' என்று பரிசுத்த பாப்பரசர் கூறியிருப்பதையும் அவர் ஆதாரம் காட்டியிருக்கின்றார்.
தமிழரை அடக்கி, ஒடுக்கி, அடிமைப்படுத்தி ஆளக் கங்கணம் கட்டி நிற்கும் தென்னிலங்கைக்கு உலகின் மாறி வரும் சிந்தனைப் போக்கு கண்ணோட்டம் புரிந்தால் சரி.

நன்றி - உதயன்

Monday, April 28, 2008

இலங்கைத் தமிழர் விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாடு என்ன?

""இலங்கைத் தமிழர்களின் இனப்பிரச்சினைக்குத் தீர்வு ஒன்று எட்டப்படுமானால் அது நிச்சயம் அவர்களின் சுயநிர்ணய உரிமை மற்றும் தாயகக் கோட்பாட்டை அங்கீகரிப்பதை அடிப்படையாகக் கொண்டதாகவே அமைய முடியும். அதைத் தவிர்ந்த வேறு எந்தத் திட்டமும் நிரந்தரமான, நிலைத்து நீடிக்கக் கூடிய தீர்வாக அமையப்போவதில்லை. இதனை இந்தியாவும் உணர்ந்து கொள்ளும் காலம் வெகு தூரத்தில் இல்லை.''
தமிழகத்தைச் சேர்ந்த பிரபல ஊடகவியலாளரும் "டெக்கான் குரோனிக்கல்' ஊடக மையத்தின் செய்திப் பிரிவுத் தலைவருமான ஆர். பகவான் சிங் இவ்வாறு கூறியிருக்கின்றார்.
சர்வதேச தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் லண்டன் ஹரோவில் நேற்று முன்தினம் நடத்திய கருத்தரங்கில் பகவான் சிங் உட்படப் பல ஊடகவியலாளர்களின் காத்திரமான கருத்துகள் வெளிப்படுத்தப்பட்டன. "இலங்கைப் பிணக்கின் மத்தியில் ஊடகம்: உண்மை எங்கே?' என்ற தலைப்பில் இடம்பெற்ற இந்தக் கருத்தரங்கில் இலங்கைத் தமிழ் ஊடகவியலாளர்களின் தற்போதைய நெருக்கடி நிலை குறித்தும், ஈழத் தமிழர் பிரச்சினையின் போக்குக் குறித்தும் விரிவாக ஆராயப்பட்டது. ஈழத் தமிழர்கள் விவகாரத்தில் இந்தியாவின் பங்களிப்புப் பற்றிய விடயமும் விரிவாக அலசப்பட்டது.

""பதினேழு வருடங்களுக்கு முன்னர் நிகழ்ந்த துன்பியல் நிகழ்வில் சிக்கி நிரந்தரமாகத் தடைப்பட்டுத் தங்கிவிட முடியாது. கடந்த கால அனுபவச் சிந்தனையில் தேங்கி இடக்குப் பட்டு நிற்காமல் எதிர்கால நலன் நோக்கிச் சிந்தித்து ஆக்கபூர்வமாகச் செயற்பட வேண்டிய கட்டம் இந்தியாவிற்கு வந்துவிட்டது. அதற்கான ஆக்கபூர்மான சமிக்ஞைகள் வெளிப்படத் தொடங்கிவிட்டன.'' என்று இந்தியாவின் மூத்த பத்திரிகையாளரும், "டெக்கான் குரோனிக்கல்' ஆங்கில நாளிதழின் சென்னைப் பதிப்பின் ஆலோசக ஆசிரியராகப் பொறுப்பேற்கவிருப்பவருமான பகவான் சிங் மேலும் குறிப்பிட்டார்.

""ராஜீவ் காந்தி கொலை வழக்கில் நளினிக்கு வழங்கப்பட்ட மரணதண்டனைக்குப் பின்னர் ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது. இப்போது ராஜீவின் மகள் பிரியங்கா சிறைச்சாலைக்குச் சென்று நளினியைச் சந்தித்து உரையாடியிருக்கின்றார்.

""இதுவரை காலமும் இலங்கை விவகாரத்தில் மத்திய அரசின் கருத்தியல் நிலைப்பாடே மாநில அரசின் நிலைப்பாடுமாகும் என்று தெரிவித்து, இவ்விடயத்தில் ஒதுங்கி நின்று செயற்பட்ட தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி, இப்போது தமிழகத்தின் தனியான கருத்தை வெளிப்படுத்தி, மத்திய அரசை வழிப்படுத்தும் நிலைக்கு மாறிக்கொண்டுள்ளார். இவை புதிய ஆக்கபூர்வமான பிரதிபலிப்புகள்.

""கடந்த கால சரித்திரத்தை இறுகப் பற்றிநின்று எதிர்காலச் சுபீட்சத்தைத் தொலைத்து விடமுடியாது என்ற உண்மையை இந்தியர் புரிந்துகொள்ளும் நிலைமை ஏற்பட்டு வருகின்றது.
""ஈழத் தமிழர்களின் பிரச்சினைக்கு அவர்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கும் ஒரு தீர்வே அது மட்டுமே சாத்தியப்படக் கூடும் என்று நான் நம்புகிறேன். இதனை இந்தியாவும் புரிந்துகொண்டிருக்கும் எனக் கருதுகிறேன்.'' என்று பகவான் சிங் மேலும் குறிப்பிட்டார்.
இந்த யதார்த்தத்தை இந்தியா உண்மையில் புரிந்துகொண்டதா? அல்லது வெளியில் ஒரு படத்தைக் காட்டிக்கொண்டு, மறைவில் தென்னிலங்கையோடு கைகோக்கும் கபடத்திட்டம் ஒன்றைத் தொடர்ந்தும் நிறைவேற்றுகின்றதா? என்ற சந்தேகம் ஈழத் தமிழர்களுக்கும் இலங்கை விவகாரங்களை உன்னிப்பாகக் கவனித்துவரும் நோக்கர்களுக்கும் ஏற்படவே செய்கின்றது.

இலங்கை விவகாரத்தை ஒட்டிய இந்தியாவின் நடத்தையைக் காரசாரமாக விமர்சிக்கும் விதத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறை அண்மையில் விடுத்த அறிக்கையிலும் அதேபோன்று, இந்தியாவின் செயற்போக்கைக் குறைகூறும் விதத்தில் புலிகளின் உத்தியோகபூர்வ ஏடான "விடுதலைப் புலிகள்' மாத சஞ்சிகையின் ஆசிரிய தலையங்கத்திலும் கூறப்பட்ட கருத்துகளும் கூட இவ்வாறு இந்தியாவின் நிலைப்பாடு குறித்த தமிழர்களின் பெரும் சந்தேகத்தைப் பிரதிபலிப்பனவாகவே கொள்ளப்பட வேண்டும்.
உண்மையில் இந்தியா என்னசெய்கின்றது? என்ன செய்யப்போகின்றது?

மீண்டும் புலிகளின் வான்தாக்குதல் பற்றிய செய்திகள் வெளியாகியுள்ளன. திரும்பவும் தனது "ராடர்' சாதன வசதிகளையும் உதவிகளையும் மேம்படுத்துவதாகக் கூறி ஓடோடி வந்து ஒத்தாசை புரிந்து, இலங்கைப் படைகளின் தமிழர் தாயக ஆக்கிரமிப்புக்கு உதவப் போகின்றதா? அல்லது, இதை ஒரு சந்தர்ப்பமாகப் பயன்படுத்தி இலங்கை அரசு மீது அழுத்தம் பிரயோகித்து இலங்கையை அதன் போர் வெறிப் போக்கிலிருந்து அமைதித் தீர்வுக்கான சமாதான முயற்சிகளின் பக்கம் திருப்பும் எத்தனத்தில் ஈடுபடப்போகின்றதா?
""இப்பொழுது இந்தியா தனது வெளியுறவுக் கொள்கைப் போக்கில் ஒரு தெளிவான நிலைப்பாட்டை எடுக்க முடியாது இருப்பது எப்போதும் போல இந்தச் சந்தர்ப்பத்திலும் கூட உணரப்படுகின்றது. தனது நலன்கள் எவை, அவற்றுக்குத் துணை போகின்றவர்கள் யார், அல்லது துணைபோகின்ற தரப்புகள் எவை? எத்தரப்பை அரவணைத்துக் கொள்வது போன்ற விடயங்களில் பல தடுமாற்றங்கள் கொண்டதாக இந்தியா உள்ளது'' எனப் புலிகளின் மூத்த பிரமுகர் வே. பாலகுமாரன் குறிப்பிடும் கருத்தும் இங்கு ஈண்டு கவனிக்கத்தக்கது.

இலங்கை விவகாரத்தில் சீனாவும், பாகிஸ்தானும் அதிகம் மூக்கை நுழைத்துள்ளன.
இந்தியாவின் நலன்களுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய விதத்தில், அதன் விரோதப் போக்கு நாடுகளான பாகிஸ்தானையும், சீனாவையும், இந்தியாவின் தென்கோடி முனையில் உள்ள இலங்கையில் காலூன்றுவதற்கு வாய்ப்பு, வசதி அளித்து, வெற்றிலை வைத்து நிற்கின்றது கொழும்பு.
இதன் அர்த்த பரிமாணங்களையும் ஆழமான பாதிப்புகளுக்கான அடிப்படைகளையும் புரிந்துகொள்ளாத புதுடில்லி, இரண்டுங்கெட்டான் நிலையில் நடந்து கொள்கின்றது என்பதே தமிழர்களின் ஆதங்கம்.

உண்மையான நண்பர்கள் யார், கபட வேடம் தரித்த எதிரி யார் என்பதை அடையாளம் காணாமல், வெறும் அரசுக் கட்டமைப்புகளின் அடிப்படையில் மட்டும் தீர்மானங்களை எடுத்துக்கொண்டு, தனது நாட்டுக்குரிய தொடர்ச்சியான, விவேகம் மிக்க இராஜதந்திர வெளியுறவுக் கொள்கையை வகுக்க முடியாமல் தடுமாறும் இந்தியா, இன்னும் எவ்வளவு காலத்துக்கு இப்படிச் செய்யப்போகின்றது?

மூத்த பத்திரிகையாளர் பகவான் சிங் குறிப்பிடுவது போல அல்லது எதிர்பார்ப்பது போல ஈழத் தமிழர்களின் போராட்டத்தின் நியாயமான பக்கத்தைப் புரிந்துகொண்டு, அதற்கு ஆதரவான நிலைப்பாட்டை இந்தியா வகுத்துக்கொள்ளுமானால் அது இந்தியாவுக்கும் நல்லது. அவலப்பட்ட ஈழத் தமிழர்களுக்கும் நியாயம் கிடைக்கவும் வழி செய்யும்.

பாரதத்தை எப்போதும் தனது நட்புச் சக்தியாகக் கருதும் ஈழத் தமிழினம் இந்தியா நல்லதையே செய்யும் என்று இன்னமும் நம்பிக் காத்திருக்கவே செய்கின்றது.

நன்றி - உதயன்

Sunday, April 27, 2008

இந்தியாவிற்கு இருப்பது இரண்டு தெரிவுகள் மட்டுமே

தாரகா
சமீப காலமாக இந்தியாவின் இலங்கை மீதான கரிசனைகள் அதிகரித்து வருகின்ற பின்னனியில் நமது அரசியல் சூழலில் பரவலாக எழுந்திருக்கும் கேள்வி இந்தியா தமிழ் மக்களுக்கு சாதகமான வகையில் ஒரு நியாயமான தலையீட்டினை செய்யுமா அல்லது கடந்த காலங்களைப் போல பழைய குருடி கதவைத் திறடி என்ற கதைதானா? சமீப நாட்களில் வைகோ- மன்மோகன் சிங் சந்திப்பு, ராமதாஸின் வலியுறுத்தல் மற்றும் தமிழக சட்டசபை தீர்மானம் ஆகியவற்றின் பின்னனியில் பார்க்கும் போது மேற்படி கேள்விகள் எழுவது நியாயமானதே! ஆனால், கடந்த கால வரலாற்று அனுபவத்தில் நோக்கும் போது நிலைமைகள் அவ்வளவு எளிதானதாக இல்லை என்பதுதான் எனது அபிப்பிராயம். ஆனாலும் இந்தியா ஒரு தீர்க்கமான முடிவினை வெளிப்படுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது உண்மைதான்.

இந்தியாவின் தற்போதைய பிரச்சினை, சீனா முன்னர் எப்போதுமில்லாதவாறு மகிந்த தலைமையிலான சிங்களத்துடன் பொருளாதார மற்றும் ராஜதந்திர ரீதியான உறவுகளை பேணுவது ஆகும். இந்த பின்புலத்தில்தான் இந்தியா ஒரு தீர்க்கமான நிலைப்பாட்டை கைக்கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. ஆசியாவில் தனது இராணுவ ரீதியான தளங்களை விஸ்தரிக்கும் முயற்சியில் இறங்கியிருக்கும் சீனா, அதன் ஒரு பகுதியாகவே ஷ்ரீலங்காவுடனான தொடர்புகளை வலுப்படுத்தி வருகின்றது. இந்தியா எப்போதுமே தனது பிராந்திய ஸ்திரத்தன்மையை பேணும் வகையில் இலங்கை அரசியலில் தலையீடு செய்யும் உரிமையை வெளிப்படுத்த தயங்கியதில்லை. ஆனால், கடந்த கால கசப்பான அனுபவங்கள் குறிப்பாக தமிழர் பிரச்சினையை கையாள்வதில் இந்தியாவிற்கு ஏற்பட்ட பாரிய தோல்வி போன்ற விடயங்களால் இந்தியாவிற்கு மீண்டும் நேரடியாக இலங்கை பிரச்சினையில் தலையிடுவதில் தயக்கங்கள் இருந்தன. ஆனால், இந்த காலத்திலும் இலங்கை பிரச்சினையில் தலையிடும் ஏகபோக உரிமையை எதிர்காலத்தில் பிரயோகிப்பதற்கான இடைவெளிகளை இந்தியா பேணத் தவறவில்லை. கொழும்பிற்கு இராணுவ ரீதியான ஒத்துழைப்புக்களை வழங்கி வந்ததுடன் கொழும்பிற்கு அழுத்தங்களை கொடுக்கும் வகையிலும் இந்தியா செயற்பட்டு வந்திருக்கிறது.

குறிப்பாக நோர்வேயின் மத்தியஸ்த்த காலத்தில் இலங்கையில் அந்நிய தலையீடுகள் அதிகரிப்பது குறித்து இந்தியா அதிருப்தியடைந்தாலும் இலங்கையில் ஒரு சுமூக நிலைமையை பேணுவதில் நோர்வே ஏதோவொரு வகையில் பங்களிப்பை செய்வதையிட்டு இந்தியா அமைதிப்பட்டது. இந்த பின்புலத்தில்தான் மகிந்த ராஜபக்ஷ அரசு வெற்றி பெற்றதை தொடர்ந்து இந்தியா பேச்சுவார்த்தையை தொடருமாறு அழுத்தங்களை பிரயோகித்தது. இந்தியாவிற்கு அப்போது இருந்த உடனடி நலன், இலங்கையில் மீண்டும் பாரியளவில் யுத்தம் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதுதான். இலங்கையில் மோதல்கள் வலுவடைந்தால் அது தெற்காசிய பிராந்திய ஸ்திரத்தன்மையை பாதிக்கும் என்றே இந்தியா கருதியது. ஆனால் இந்தியாவிற்கு மகிந்த ராஜபக்ஷ குறித்து தெளிவான கணிப்பு இருந்ததா என்ற கேள்வியைத்தான் நாம் இந்த இடத்தில் கேட்க வேண்டியிருக்கிறது. அவ்வாறில்லாது இந்தியா தனக்கு சாதகமான சூழல் வரும்வரை காத்திருந்த போது எதிர்பாராமல் சீனா என்ற பூதம் உள்நுழைந்து விட்டதா? இதிலுள்ள சீனாவின் தலையீடானது சமீப காலமாக அமெரிக்க-இந்திய கூட்டுநலன் சார்ந்த உறவுகள் வலுவடைந்துவரும் பின்னனியில் நோக்கப்பட வேண்டியதாகும். அது பற்றி பிறிதொரு சந்தர்ப்பத்தில் பார்ப்போம்.

உண்மையில் மகிந்தவின் வரவைத் தொடர்ந்து இந்திய ஆளும் வர்க்க குழுக்கள் சில, தமது அபிப்பிராயங்களை வெளிப்படுத்தியிருந்தன. மகிந்த ராஜபக்ஷ சிங்கள தேசியவாதத்திற்கு முன்னேறியிருப்பதன் ஆபத்துக்களை சுட்டிக் காட்டிய அக் குழுவினர், இந்தியா 87இன் உடன்படிக்கை கால அனுபவங்களை ஒதுக்கி வைத்துவிட்டு இலங்கை விடயத்தில் நேரடியாக தலையிடுமாறு மன்மோகன் சிங்கிற்கு அழுத்தங்களை கொடுத்திருந்தன. அவர்களது கணிப்பின்படி இலங்கை சம்பந்தமான இந்திய கொள்கைகள் ஆபத்தான திருப்பத்தை ஏற்படுத்துவதற்கு முன் அதனை கட்டுப்படுத்த வேண்டிய இந்திய கடப்பாட்டை வலியுறுத்துவதாகவே இருந்தன. இது பற்றி அப்போது கருத்துத் தெரிவித்திருந்த இந்திய அரசியல் பகுப்பாய்வாளர் ஏ.பி.மஹாபற்றா புதுடில்லிக்கு பிரச்சினைகளை ஏற்படுத்தும் அயல்நாடுகளின் குழுவில் இலங்கை விரைவில் சேரக் கூடும் என எச்சரித்திருந்தார். நான் நினைக்கிறேன், இவ்வாறான பல எச்சரிக்கைகளை இந்தியா கருத்தில் கொள்ளாமல் இருக்க வாய்ப்பில்லை. ஆனால், இந்தியா இவ்வாறு இருந்ததற்கு இரண்டு காரணங்கள் இருக்கலாம். ஒன்று, சிங்களத்தை கட்டுப்படுத்துவதற்கான தனது ஆற்றல் குறித்து இந்தியா மிகவும் மிகையான மதிப்பீட்டைக் கொண்டிருந்திருக்க வேண்டும். மற்றையது, நிலைமைகளை இந்தியா குறைத்து மதிப்பிட்டிருக்க வேண்டும்.

மகிந்த ராஜபக்‌ஷ ஆட்சியை கைப்பற்றுவதற்காக சிங்கள அடிப்படைவாத அரசியல் கட்சிகளுடன் மேற்கொண்டிருந்த உடன்பாடுகள் எவையுமே இலங்கையில் ஒரு போர்தணிப்பையோ சுமூகமான நிலைமைகளையோ ஏற்படுத்துவதற்கு ஏற்புடையவையாக இருக்கவில்லை. தமிழீழ விடுதலைப்புலிகளுடனான யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை மீளாய்வு செய்தல், கடல்கோள் பொதுக் கட்டமைப்பை இரத்து செய்தல், எந்தவொரு சமாதான உடன்படிக்கையும் சமஸ்டி கோரிக்கையை நோக்கி செல்வதை தடுத்தல் போன்ற சமானத்திற்கு முற்றிலும் விரோதமான நடவடிக்கைகளையே உட்கொண்டிருந்தது. ராஜபக்ஷவின் மேற்படி தீவிர நிலைப்பாடுகளைக் கருத்தில் கொண்டே இந்திய ஆய்வாளர்கள் பலரும் அந்த நேரத்தில் மன்மோகன் சிங்கை எச்சரித்திருந்தனர்.

ஆனால், இவ்வாறன பின்னனியில் ஆட்சியைக் கைப்பற்றிய மகிந்தவிடமிருந்தும் இந்தியா சமாதானத்திற்கான ஒத்துழைப்புக்களை எதிர்பார்ப்பதாக குறிப்பிட்டது. மகிந்தவை இந்தியாவிற்கு அழைத்து உத்தியோகபூர்வமாக பாராட்டிய மன்மோகன் சிங், புலிகளுக்கு எதிரான ஆக்ரோசமான நடவடிக்கைளை தவிர்க்குமாறு வேண்டுகோள் விடுத்திருந்தார். ஆனால், மகிந்த விடுதலைப்புலிகளின் பகுதிகள் மீது வலிந்து யுத்தத்தை தொடுத்த போதும், புரிந்துணர்வு ஒப்பந்தத்திலிருந்து ஒரு தலைப்பட்சமாக விலகிக் கொண்ட போதும் இந்தியாவால் கொழும்பை எந்தவகையிலும் கட்டுப்படுத்த முடியவில்லை. மகிந்த தலைமையிலான சிங்களம் இவ்வாறான முடிவுகளை எடுப்பதற்கு முக்கிய அனுசரனையாக இருந்தது பாகிஸ்தானும் சீனாவும் கொடுத்த உற்சாகங்கள்தான். ஆரம்பத்தில் இராணுவரீதியான முன்னெடுப்புகளுக்கான ஆயுத உதவியாக இடம்பெற்ற சீன உள்வருகை தற்போது பொருளாதார, ராஜதந்திர உறவுகள் என்பதாக வலுவடைந்திருக்கிறது.

தற்போது இதனை கட்டுப்படுத்தும் வகையில் இந்தியா விரைந்து நடவடிக்கைகளை எடுக்க வேண்டியிருக்கிறது. இந்த நடவடிக்கைகள் வெறுமனே கொழும்பை எச்சரிக்கும் நிலைமைகளை தாண்டிவிட்டது. கடந்த 2007 மேயில் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன் கொழும்பு சீனா, பாக்கிஸ்தானிடம் ஆயுதங்களை பெறுவது தொடர்பில் சிங்களத்தை எச்சரித்திருந்தார். இந்தியா ஒரு பிராந்திய சக்தி என்பதை ஷ்ரீலங்கா விளங்கிக்கொள்ளவேண்டும் என்றும் அதனை மறந்து ஷ்ரீலங்கா சீனாவிடமோ அல்லது பாகிஸ்தானிடமோ ஆயுதங்களை பெற முயலக் கூடாது, இலங்கைக்கு தேவையானவற்றை நாம் எங்களது வெளிநாட்டுக் கொள்கைகளுக்கு ஏற்ப வழங்குவோம் என்று தெரிவித்திருந்தார். இதற்கு உடனடியாகவே கொழும்பின் பாகிஸ்தான் தூதரகம் தனது பதிலையும் தெரிவித்திருந்தது. அதில் பாகிஸ்தான் பிராந்தியத்தில் எந்தவொரு நாட்டினதும் மேலாதிக்கத்தை ஏற்றுக் கொள்ளமாட்டாது . ஆனால், இந்த விடயம் இலங்கையின் தீர்மானத்துக்குரியதாகும் என தெரிவித்திருந்தது. நாராயணனின் கூற்றுக்கு முன்பதாகவே இந்திய கொள்கைவகுப்பு மட்டத்தில் செல்வாக்கு செலுத்தும் முக்கியமான சிந்தனைக் குழுவான பாதுகாப்பு ஆய்வுகள் மற்றும் கற்கைகளுக்கான நிறுவனம் தனது மதிப்பீட்டை வெளியிட்டிருந்தது. சீனாவும் பாகிஸ்தானும் இலங்கையில் தலையிடுவதற்கான இந்தியாவின் செல்வாக்கை குறைக்கும் வகையில் செயற்பட்டுவருவதாக சுட்டிக் காட்டியிருந்த ஐ.டி.எஸ்.ஏ, பாக்கிஸ்தான் தனது நோக்கங்களுக்காக இலங்கையில் இருக்கும் முஸ்லிம் சமூகத்தை பயன்படுத்த முயல்வதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டியிருந்தது.

தற்போது நிலைமைகள் மிகவும் தெளிவாக இருக்கின்றன. மேற்கில் பெருமளவு அம்பலப்பட்டு நிற்கும் சிங்களம் தற்போது சீனா, பாக்கிஸ்தான், ஈரான் ஆகியவற்றின் துணையுடன் தன்னை இராணுவ, பொருளாதார ரீதியில் பலப்படுத்திக் கொண்டு வருகிறது. இதில் மேற்கின் எச்சரிக்கைகளையும் சிங்களம் பெருமளவு கருத்தில்கொண்டதாக தெரியவில்லை...

ஆகவே, தொடர்ந்தும் இலங்கை அரசியலில் இந்தியாவிற்கு அச்சுறுத்தலான பிரதான சக்திகளின் தலையீடு அதிகரித்தே செல்லும். இந்த சூழலில் இந்தியா ஒரு தீர்க்கமான முடிவை எடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. ஆனால் அந்த முடிவு தமிழ் மக்களுக்கு சாதகமாக இருக்குமா என்பதுதான் நம் முன்னிருக்கும் கேள்வி. இந்த இடத்தில் கேட்க வேண்டிய இன்னொரு கேள்வி, இந்தியாவின் பிராந்திய பாதுகாப்பு குறித்து கொள்கை வகுப்பின் அடிப்படை என்ன? இலங்கையில் தலையீடு செய்துவரும் சகல அந்நிய சக்திகளும் தமது உள்நுழைவிற்கான வாயிலாக பயன்படுத்திக் கொள்வது தமிழர் விடுதலைப் போராட்டத்தைத்தான். சிங்களம் இன்று இந்தியாவிற்கு எதிரான வரலாற்று எதிரிகளை உள்நுழைய விட்டிருப்பதும் தமிழர் விடுதலைப் போராட்டத்தை அழித்தல் என்னும் இலக்கில்தான். எனவே, இந்திய பிராந்திய பாதுகாப்பினை பேணக் கூடிய தகைமை யாருக்கு உண்டு என்பதில் இந்தியா தனது கடந்த கால அனுபவங்களை புறமொதுக்கி விட்டு பரிசீலிக்க வேண்டியிருக்கிறது. இந்தியா இதுவரை காலமும் தமிழர் போராட்டம் தொடர்பில் சொல்லி வந்திருக்கும் விடயங்கள் அனைத்துமே நமக்கு நல்ல மனப்பாடமாக இருக்கின்றன. ஐக்கிய இலங்கைக்குள் தமிழர்களின் உரிமைகள் பேணப்பட வேண்டும். தனி அரசு கோரிக்கையை ஏற்க முடியாது. அவ்வாறு ஏற்றுக்கொண்டால் அதனை பாகிஸ்தான் காஷ்மீர் விடயத்தில் பயன்படுத்திக் கொள்ள முயற்சிக்கும். இப்படியெல்லாம் சொல்லிக் கொண்டு தொடர்ந்தும் இந்தியா, பழைய குருடி கதவை திறடி என நடந்து கொள்ளுமா? அல்லது நிலைமைகளை துல்லியமாக விளங்கிக் கொண்டு நீண்டகால நோக்கில் தனது கொள்கை முன்னெடுப்பினை மேற்கொள்ளுமா? பார்ப்போம் என்ன நடக்கிறதென்று. ஆனால், இந்தியாவிடம் இருப்பது இரண்டு தெரிவுகள் மட்டும்தான். ஒன்று இலங்கையில் தனது வரலாற்று எதிரிகளின் உள்நுழைவை தடுக்கும் வகையில் சிங்களத்தை திருப்திப்படுத்தி சிங்களத்தின் போர் வெறிக்கு துணைபோவது அல்லது தமிழர்களின் போராட்டத்தை விளங்கிக் கொண்டு அதனைச் சார்ந்து தனது பிராந்திய நலன் பாதுகாப்பிற்கான திட்டங்களை வகுப்பது. நமது கடந்த கால அரசியல் அனுபவங்களில் ஒருபோதும் இந்தியா நமக்கு சார்பாக இருந்ததற்கான சான்றுகள் இல்லை.

நன்றி-
தாரகா
தினக்குரல்

Saturday, April 26, 2008

தீர்வுக்கு கால வரையறை இல்லை அழிக்க மட்டும் காலக்கெடு

""ஒன்றுபட்ட நாட்டையும் தேசிய நல்லிணக்கத்தையும் ஏற்படுத்த வேண்டுமானால் தமிழ்,முஸ்லிம் மக்கள் உள்ளிட்ட சிறுபான்மை மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும்.

""சிறுபான்மை மக்கள் தமது உரிமைகளை முழுமையாக அனுபவித்துத் தாம் மகிழ்ச்சியுடனும் சுதந்திரமாகவும் உள்ளனர் என்பதை உணர்ந்தால் மாத்திரமே ஒன்றுபட்ட நாடு என்ற எண்ணக்கரு இங்கு சாத்தியமாகும்.''
இவ்வாறு இலங்கை நிலைமையின் உண்மை நிலைவரத்தின் அடிப்படையை பின்னணியை தெளிவாக உரைத்திருக்கின்றார் கொழும்புக்கான அமெரிக்கத் தூதுவர் றொபேர்ட் ஓ பிளேக்.
எனவே, ஒன்றுபட்ட நாட்டையும் தேசிய நல்லிணக்கத்தையும் ஏற்படுத்த வேண்டுமானால் தமிழ், முஸ்லிம்கள் உட்பட்ட சிறுபான்மை மக்களின் உரிமைகளை உறுதி செய்யுங்கள் என்றும் வழிகாட்டியிருக்கின்றார் அமெரிக்கத் தூதுவர்.

இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் "சமாதான முன்னெடுப்புகளுக்கான வர்த்தக முயற்சி' என்ற கலந்துரையாடலில் பங்குகொண்டு கருத்துரையாற்றிய சமயமே அவர் இவ்வாறு ஆலோசனை கூறியிருக்கின்றார்.

ஆனால், சிறுபான்மையினர் மீதான மேலாதிக்கச் சிந்தனையில் மூழ்கிக் கிடக்கும் கொழும்பு அதிகார பீடத்தின் காதில் இந்த ஆலோசனை ஏறப்போவதில்லை என்பது நிச்சயம். பௌத்த சிங்கள மேலாண்மைத் திமிரிலும், சிங்களத் தேசியவாதச் செருக்கிலும் தீவிரம் கொண்டு அதன் ஆதிக்கத்துக்கு உட்பட்டு அதனடிப்படையில் சிறுபான்மையினரின் உரிமைகளைப் பறித்து, அவர்களை அடக்கி, ஒடுக்கி, நசுக்கி, கபளீகரம் செய்வதிலேயே தென்னிலங்கை முனைப்புக் கொண்டு நிற்கின்றது.

பிரிட்டிஷ் காலனித்துவப் பிடியிலிருந்து இலங்கை விடுவிக்கப்பட்ட பின்னர் இந்த ஆறு தசாப்த காலத்தில் கொடூரமாக அரங்கேறிய பேரினவாதத்தின் அடக்குமுறை நடவடிக்கைகளே இன்று இலங்கைத் தீவை இத்தகைய மீள முடியாத உள்நாட்டுப் போருக்குள் ஆழ்த்தி நிற்கின்றன.

இந்தப் பின்னணியைத் தமது பூடகமான வார்த்தைகளில் விளக்கியுள்ள அமெரிக்கத் தூதுவர் இந்த இழிநிலையில் இருந்து விடுபடுவதற்கான மருத்துவத்தையும் கூறியுள்ளார்.
பாதிக்கப்பட்ட சிறுபான்மை மக்கள் தொடர்பில் தாராளத்துடனும், பரிவுடனும், அரவணைக்கும் பண்புடனும், நியாயம் செய்யும் உறுதியுடனும் செயற்படும் திடசங்கற்பம் பெரும்பான்மையினருக்கும் அவர்களது பிரதிநிதிகளான ஆட்சியாளர்களுக்கும் ஏற்பட வேண்டும் என்பதையே அமெரிக்கத் தூதுவர் கோடிகாட்டுகின்றார்.
ஆனால் சிங்களத்தின் மனவமைப்பில் அதன் மூளையத்தை இறுகப் பற்றிப் பீடித்திருக்கும் பேரினவாதப் பேய், அடக்கு முறைப் பிசாசு, சிறுபான்மையினருக்கு நியாயம் செய்யவிடாது என்பது தெளிவு. அடக்குமுறை முனைப்பிலேயே அது தீவிரம் கொண்டு நிற்கின்றது என்பதை யதார்த்த நிகழ்வுகள் நமக்கு வெளிப்படையாக எடுத்தியம்புகின்றன.
பாதிக்கப்பட்டுள்ள சிறுபான்மையினரான தமிழர்களுக்கு உரிய நிவாரணமும் நீதியும் செய்வதை விடுத்து, அவர்களை அடக்கி, ஒடுக்குவதிலேயே கொழும்பு அதிகாரத்தின் சிந்தனை முனைப்புப் பெற்று நிற்கின்றது.

சிறுபான்மை மக்களுக்கு நீதியான தீர்வு ஒன்றை வழங்குவதை நோக்கமாகக் கொண்ட முயற்சிகள் என்ற பெயரில் காலத்துக்குக் காலம் ஆரம்பிக்கப்பட்ட எத்தனங்கள் எல்லாம் வெறும் வெளிவேஷ நாடகங்களாகக் கிடப்பில் போடப்பட்டு விட்டன. அடக்குமுறையை நோக்கமாகக் கொண்ட பலாத்கார நடவடிக்கைகளும் படைச் செயற்பாடுகளும் மட்டுமே தங்கு தடையின்றித் தொடர்கின்றன.

தமது நிச்சயமான உரிமைகளுக்காகவும், கௌரவமான வாழ்வை வேண்டியும் போராடும் தமிழர் தரப்பிடம் போரியல் நடவடிக்கையில் பதிலடி வாங்கிக் கட்டிய பின்னரும் கூட அடக்குமுறையின் வெற்றிக்கான காலக்கெடு குறித்துப் பிரலாபிக்கும் கொழும்பு, அமைதித் தீர்வுக்கான காலவரையறை குறித்துச் சிந்திப்பதாகத் தெரியவில்லை.
புதனன்று வடக்குப் போர் முனையில் பெரும் பின்னடைவு கண்டுள்ள கொழும்பு அரசு, அந்தத் தோல்வியைச் சமாளித்து, மூடி மறைத்துக்கொண்டு, மேலும் போர் முனைப்புடன் கூடிய மமதை அறிவிப்புகளையே விடுக்கின்றது.

இலங்கை இனப்பிரச்சினைக்கான தீர்வு முயற்சியில் தமிழர் தரப்பில் பேரம்பேசும் வலிமையுடன் திகழும் தமிழீழ விடுதலைப் புலிகளை அடியோடு அழித்து ஒழிக்கும் தனது ஒரே இலக்குக்கான காலக்கெடுக்களை, காலவரையறைகளைத் தன்பாட்டில் அறிவித்து, அதன்மூலம் தென்னிலங்கையின் அடக்குமுறைச் சிந்தனையையும் பேரினவாத எண்ணப்போக்கையும் உசுப்பேற்றி விடுவதில் அதிக ஈடுபாடு காட்டும் கொழும்பு அரசு, பாதிக்கப்பட்டுள்ள சிறுபான்மையினருக்கு நீதி, நியாயம் செய்யும் வகையில் முன்னெடுக்கப்படவேண்டிய தீர்வு முயற்சிகளுக்குக் காலக்கெடு அறிவிப்பதாகத் தெரியவில்லை
இப்போது, புதனன்று கிடைத்த வடக்குக் களமுனைப் பின்னடைவுகளை சமாளிக்கும் எத்தனத்தின்போது கூட, இவ்வருட இறுதிக்குள் புலிகளை அடியோடு ஒழித்து விடுவோம் என்ற கங்கணம் கட்டும் அறிவிப்பையே கொழும்பு முன்வைக்கின்றதே தவிர, தீர்வு முயற்சிக்கான காலக்கெடுவைப் பிரகடனப்படுத்துவதாக இல்லை.
ஆட்சிக்கு வந்தால் அடுத்த மூன்றுமாத காலத்துக்குள் இனப்பிரச்சினைத் தீர்வுக்கான தென்னிலங்கையின் இணக்கப்பாட்டை உருவாக்கி, அதனை அடையாளம் கண்டு, அதன் அடிப்படையில் தமிழர் தரப்போடு பேசி இலங்கை இனப்பிரச்சினைக்கு இணக்கத் தீர்வு காண்பேன் என்று தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் எழுத்துமூலம் உறுதியளித்து அதிகாரத்தைக் கைப்பற்றியவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ. அவர் பதவிக்கு வந்து மூன்று மாதங்கள் அல்ல. இப்போது முப்பது மாதங்களாகின்றன.

அமைதித்தீர்வுக்கான இணக்கப்பாடு ஒன்றைத் தென்னிலங்கையில் உருவாக்குவதில் சிரத்தையும், ஈடுபாடும் காட்டாத அவர், தமிழர் தரப்பின் போராட்ட சக்தியான தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை ஒரேயடியாக அழித்து ஒழிக்க வேண்டும் என்ற பேரினவாதச் சிந்தனைக்கான தென்னிலங்கையின் ஒருமித்த கருத்து நிலைப்பாட்டை உருவாக்குவதில் மட்டும் ஒற்றைக்காலில் விடாப்பிடியாக நிற்கின்றார்.
அமைதி முயற்சிகளைக் கிடப்பில் தூக்கிக் கடாசிவிட்டு, அழிப்பு முயற்சிகளுக்கான தென்னிலங்கையின் எத்தனம் உருக்கொண்டு, சந்நதம் பிடித்து நிற்பதன் பின்னணி தாற்பரியம் இதுதான்.

இத்தகைய போர் வெறிச் சிந்தனையில் மூழ்கிக்கிடக்கும் ஆட்சியாளர்களின் காதில், சிறுபான்மையினருக்கு நியாயம் செய்யக்கோரும் அமெரிக்கத் தூதுவரின் கருத்து விழப்போவதில்லை என்பது வெள்ளிடை மலை.

நன்றி :- உதயன்

Friday, April 25, 2008

யாழில், வெடித்து புகைத்த மும்முனைச் சமர்

இலங்கை இராணுவ தளபதி மேஜர் ஜெனரல் சரத்பொன்சேகா கடந்த வார முற்பகுதியில் கொழும்பு ஊடகமொன்றுக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியில் உள்ளடக்கப்பட்ட முக்கிய செய்தி ஒன்றை நாம் எமது (Online) வாசகர்களாகிய உங்களுக்கு கடந்த வாரம் வழங்கி இருந்தது ஞாபகம் இருக்கும்! .

அந்த செய்தியை ஆதாரமாக கொண்டு யாழ். போர் முன்னரங்குகளில் பூதாரமாக வெடித்து பிசுபிசுத்துப்போன மும்முனைச் சமரை ஆய்வுக்குட்படுத்துவோம் . தளபதி சரத் பொன் சேகா அன்று வழங்கி இருந்த அந்த செய்தி :

இம் மாத முற்பகுதியில் கம்பஹா வெலிவேரிய பகுதியில் அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே மீது மேற்கொள்ளப்பட்ட படுகொலைத் தாக்குதலுடன் சர்வதேச சமூகம் ஜனாதிபதியையும், பிரதமரையும் மீண்டும் புலிகளுடன் பேச்சு வார்த்தையை ஆரம்பிக்கும் படி வலியுறுத்தி இருந்தது . ஆனால் ஜனாதிபதியோ, பிரதமரோ , சர்வதேசத்தின் வாய்க்கு பூட்டு போடும் விதத்தில் நாம் முன்வைத்த காலை பின்வைக்கமாட்டோம் என தெரிவித்திருந்தனர்.

தற்போது வன்னிப்போர் அரங்குகளான வவுனியா, மன்னார், மணலாறு ஆகிய பகுதிகளில் முன்னெடுக்கப்பட்டு வரும் படை நடவடிக்கைகள் போல் அல்லாமல் ஈழம் இதுவரை சந்தித்திராத சடுதியான பெரும் படை நகர்வொன்றை யாழ், முன்னரங்குகளில் விரைவில் மேற்கொள்வோம் என இறுமாப்போடு தெரிவித்திருந்த செய்தி புலிகள் காதுகளை விரைவாக எட்டி இருக்கும். செய்தி புலிகளின் காதுகளில் எட்டியதும் யாழ் களமுனைகளில் புலிகள் அதி உச்ச தயார் நிலைகளில் பதுங்கி இருந்திருப்பர் என்பதே நிதர்சனம் .

இதேவேளை கடந்த செவ்வாய்கிழமை தளபதி சரத் பொன்சேகா யாழ், பாலாலிப்படைத் தளத்திற்கு வந்திருந்ததாக குடாநாட்டுப் பத்திரிகைகளில் செய்திகள் வெளியாகி இருந்தன. அன்றைய தினம் முகமாலை முன்னரங்கில் புலிகளின் நிலைகள் மீது இராணுவத்தினரின் 53 மற்றும் 55 ஆவது டிவிசன்களை சேர்ந்த சிறப்புப் பயிற்சி பெற்ற கவசப் படையணி காலை 9.30 மணியளவில் தாக்குதலை ஆரம்பித்ததாகவும் அந்த தாக்குதல் இரு தரப்புக்குமிடையில் 30 நிமிட நேரம் மாத்திரமே நீடித்ததாகவும், இந்த சமரில் இராணுவ கவசம் படைப்பிரிவின் சீனத் தயாரிப்பான YW எனப் பெயரிடப்பட்ட T.89ரக பீரங்கி பொருத்தத்தப்பட்ட கவசவண்டி தாக்கப்பட்டதாகவும் விடுதலை புலிகள் அறிவித்திருந்தனர்.

ஆனால் இச் சமர் குறித்த எந்த விபரத்தையும் படைத்தரப்பு அன்றை தினம் வெளியிடவில்லை என்பது மர்மம். இந் நிலையில் இச் சமரை யாழ், முன்ரங்கில் புதிய களமுனை திறப்புக்கான ஒத்திகை நகர்வாக பார்ப்பதோடு , குடா நாட்டுக்கான சரத் பொன்சேகாவின் திடீர் வரவையும் சமரோடு தொடர்புபடுத்தி பார்ப்பது முக்கியத்துவம் பெறுகிறது.

தளபதி சரத் பொன்சேகா புதிய தாக்குதலுக்கான புதிய வியூகங்களை வகுத்து கொடுத்து நகர்வை ஆரம்பித்து வைத்திருப்பது போல இதிலிருந்து ஊகிக்க முடிகிறது . இதற்கு ஏற்றால் போல் மறுநாள் அதிகாலை 2.30 மணியளவில் யாழ், முன்னரங்கில் நிறுத்தப்பட்டுள்ள 53 மற்றும் 55 ஆவது படையணிகள் (A-9) வீதிக்கு மேற்கே கிளாலி முதல் (A-9) வீதிக்கு கிழக்கே முகமாலை கண்டல் வரையான சுமார் 7 கிலோமிற்றர் நீளமுள்ள பகுதியில் விடுதலைப் புலிகளின் முன் நிலைகளை அழித்து முன்னேறுவதற்ற்கான பெரும் சமரை ஆரம்பித்திருந்தனர்.

விசேட பயிற்சி பெற்ற கவச படைபிரிவின் ஒத்துழைப்பு , பின் படைத்தள சூட்டாதரவு என்பனவற்றுடன் முன்னேடுக்கப்பட்ட இப் பாரிய படை நகர்வை விடுதலைப் புலிகள் வெற்றிகரமாக முறியடித்து படையினரை பழைய நிலைகளுக்கு பின் தள்ளியதாகவும் அறிவித்திருந்தனர். அதிகாலை 2.30 முதல் மதியம் 1.00 மணி வரை 10 மணி நேரங்கள் சமர் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்திருக்கும் புலிகள் பலமான அடி கொடுத்து படையினரை பின்தளங்களுக்கு கலைத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளமை ஏற்கனவே புலிகள் யாழ், முன்நிலைகளில் படையினரின் புதிய நகர்வுகளை எதிர்கொள்வதற்கான தயார் நிலையில் இருந்திருப்பதை கோடிட்டு காட்டுகிறது .

இப்பாரிய படைநகர்வுக்கு கிடைத்த பின்நடைவு புலிகளது கெரில்லா போர் பொறிமுறையோடு , அதன் மரபு படையணியின் வளர்ச்சியையும் உலகப்பார்வைக்கு கொண்டு வருகிறது .

இச் சமர் குறித்த சேத விபரங்களை படைத்தரப்பே முதலில் வெளியிட்டது. இதிலிருந்து இது வரை இடம் பெற்றிராத பெரும் போர் யாழ், முன்னரங்கில் இடம் பெற்றது உறிதியாகிறது .

கொல்லப்பட்ட படையினரின் எண்ணிக்கை 15 ல் இருந்து படிப் படியாக உயர்ந்து இறுதியில் 100 க்கு மேற்பட்டவர்கள் என்பது போல அரசு தரப்பு மறைமுகமாக ஒப்புக்கொண்டுள்ளது .

இதேவேளை தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தின் தகவல்களின் படி புலிகள் தரப்பில் 55 பேர் கொல்லப்பட்டும் 90 க்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இது குறித்து அன்றிரவு புலிகளின் படைத்துறை பேச்சாளர் இராசையா இளந்திரையன் BBC சந்தேசிய சிங்கள சேவைக்கு வழங்கிய பேட்டியில் இராணுவத்தில் சுமார் 100 பேர் வரை கொல்லப்பட்டும் 400 க்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவித்திருந்தார். அத்தோடு புலிகளின் பிந்திய வெளியீடுகள் இச் சமர் குறித்த பல விடயங்களை வெளியிடுவதாகவும் அமைகிறது. படைக்கலங்கள் பல அழிக்கப்பட்டுள்ளதாகவும் அவை குறிப்பிடுகின்றன.

இதேவேளை இராணுவம், குடா நாட்டை கைப்பற்றுவதற்கு புலிகள் இப்பககுதிகளில் சண்டையை ஆரம்பித்ததாகவும், அப்போது இடம் பெற்ற சண்டையில் தாம் புலிகளின் முன் நிலைகளை கைபற்றியதாகவும் தெரிவித்திருந்தனர்.

இதேவேளை இராணுவ ஆய்வாளர்களின் கருத்தும் படைத்தரப்பு யாழில், எதிர்பாராத இழப்புகளை சந்தித்துள்ளது போலவே உள்ளது. அத்தோடு யாழ், முன்னரங்கில் படையினரின் பாரிய திட்டம் பலிக்கவில்லை என்பது உண்மையாவதோடு யாழில் படையினரின் புதிய நகர்வுக்கு விழுந்த பேரிடி எதிர்கால படை நடவடிக்கைகளை குழப்பும் வித்தில் அமைந்துள்ளது.

இதன் மூலம் முதற்கோணல் முற்றும் கோணல் என்பது நிரூபணமாகிறது .ஏற்கனவே களமுனைகளில் குழப்பத்தில் இருக்கும் படையினரை இச் சமர் மேலும் குழப்பத்துக்குள் தள்ளிவிடுவதாகவே பார்க்கலாம் . வட போர் முனையில் பல மாதங்களாக வெற்றிகளின்றி தொடரும் போர் இலங்கை அரசையும் படையினரையும் மிகவும் ஆபத்தான நிலை நோக்கி நகர்த்திக்கொண்டிருப்பதே உண்மை.

தொடர்ந்து களமுனைகளில் முடங்கிக்கிடக்கும் படையினர் மத்தியில் மனோறிதியான தாக்கத்தை ஏற்படுத்துவதோடு படை முன்னெடுப்புகளில் வெறுப்பையும் ஏற்படுத்தலாம் . அத்தோடு புலிகளின் தற்காப்பு தாக்குதல் வடிவம் மாறி படை நிலைகளை வலிந்து தாக்கும் நிலை உருவாகும் போது படையினர் களமுனைகளிலிருந்து சிதறி ஓடும் நிலையை எதிர்காலத்தில் தோற்றுவிக்க கூடும் .

இது இலங்கை அரசியலில் எதிர்காலத்தில் எதிர்பாராத திருப்பங்களை ஏற்படுத்தும் என்பது நிதர்சனம்!

ஆக்கம் வீரகேசரி இணையம்

Thursday, April 24, 2008

ஈரானுடனான புதிய நட்புறவு இலங்கைக்குத் தெம்பு தருமா?

அடுத்தவாரம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள ஈரானிய ஜனாதிபதி மஹ்மூத் அஹ்மதி நிஜாத்தை வரவேற்பதற்காக இலங்கை அரசு தடல்புடலான ஏற்பாடுகளைச் செய்துவரும் இச்சமயத்தில் ஈரானிய அதிபரின் இந்த விஜயம் அமெரிக்காவிற்குப் பெரும் அதிருப்தியையும் எரிச்சலையும் ஏற்படுத்தியிருப்பதாகக் கூறப்படுகிறது.
ஈரான் அதிபரை இலங்கைக்கு அழைத்துப் பெரும் வரவேற்பு அளித்து, அந்நாட்டுடனான தனது உறவை வலுப்படுத்திக் கொள்வதை வெளிப்படுத்திக் கொள்ள இலங்கை முயல்கின்றது.
ஆனால் இந்த வரவேற்பு ஏற்பாடு அமெரிக்காவையும் மேற்குலகையும் கடும் விசனத்துக்குள்ளும் சீற்றத்துக்குள்ளும் ஆழ்த்தியிருப்பதாகத் தகவல்கள் கசிந்திருக்கின்றன.
ஈரான் தொடர்பில் இலங்கை அரசு கடைப்பிடித்து வரும் அதி தாராள நட்புறவுக் கொள்கைப்போக்குச் சம்பந்தமான தனது அதிருப்தியைத் தனது நாட்டில் உள்ள இலங்கைத் தூதுவரிடம் அமெரிக்கா உத்தியோகபூர்வமாக வெளியிடும் என்றும் கூறப்படுகின்றது.
ஏற்கனவே சில தினங்களுக்கு முன்னர் இரண்டுநாள் பயணமாக இலங்கைக்கு விஜயம் செய்திருந்த அமெரிக்காவின் தெற்கு மத்திய ஆசிய விவகாரங்களுக்கான சிரேஷ்ட பிரதி உதவிச் செயலாளர் டொனால்ட் காம்ப், இவ்விவகாரம் குறித்தும் இலங்கை அரச உயர் மட்டத்துடன் பேசி, அமெரிக்காவின் அதிருப்தியை நேரடியாக வெளிப்படுத்தியிருந்தார் என்றும் ஒரு தகவல் தெரிவிக்கின்றது.
"இனம் இனத்தைச் சேரும்' என்பார்கள். இப்போது ஈரானுடன் கொஞ்சிக் குலாவி உறவை விருத்தி செய்யும் மஹிந்த அரசின் போக்கு இந்தப் பழமொழியைத்தான் நினைவுபடுத்துகின்றது.
தம்முடைய தவறான செயற்போக்கினால் சர்வதேசக் கண்டனங்களையும், அதிருப்திகளையும் ஏன் சர்வதேசத் தடைகள், கட்டுப்பாடுகள் என்பவற்றையும் கூட எதிர்கொள்ள வேண்டிய ஒரே இக்கட்டில் சிக்கியிருக்கும் தோழமை சக்திகளாக ஈரான் அரசும் இலங்கை அரசும் உருவெடுத்துள்ளன. இப்படி சர்வதேச சமூகத்தால் குறிப்பாக அமெரிக்கா மற்றும் மேற்குலக நாடுகளின் அதிருப்திக்கு உள்ளாகும் ஒரே அணியில் இருப்பதால் அவை தமக்குள் உறவை இறுக்கிக்கொள்ள முயல்கின்றன போலும்.
ஏற்கனவே இலங்கைக்கான ஆயுத தளபாட விநியோகங்களை அமெரிக்கா மட்டுப்படுத்தி அறிவித்து விட்டது. இலங்கைக்கான பொருளாதார உதவிகளையும் அது கணிசமாகக் குறைத்துள்ளது. அதேவேளை ஈரானுடனான இலங்கையின் புத்துறவைக் காரணம் காட்டி இலங்கைக்கு ஆயுதத் தளபாட வசதிகளையும் உதவிகளையும் வழங்குவதை இஸ்ரேல் இடைநிறுத்தி விட்டது. இதன் காரணமாக, இதுவரை புலிகளுக்கு எதிரான ஆயுதப் போராட்டத்தில் தனக்குக் காலம் காலமாக ஆயுத, தளபாட வசதிகளையும் உதவிகளையும் தொடர்ந்து வழங்கிவந்த இஸ்ரேலின் நல்லுறவை இலங்கை இழக்கப் போகின்றது என்பது தெளிவாகிவிட்டது.
இதேசமயம், இதுவரை காலமும் நாட்டுக்குப் பெரும் அந்நிய செலாவணியையும், ஏற்றுமதி வருமானத்தையும், உள்ளூர் தொழில் வாய்ப்புகளையும் தாராளமாக ஏற்படுத்தித்தந்த ஐரோப்பிய நாடுகளின் ஏற்றுமதிச் சலுகை வசதியை அடுத்துவரும் மாதங்களோடு இலங்கை இழக்கப் போவதும் உறுதியாகிவிட்டது.
ஈரானுக்கு எதிராக அமெரிக்க மற்றும் ஐ.நா.சபையின் வர்த்தகத் தடைகள் உட்படப் பலமுனைத் தடைகள் கருக்கொண்டு உருக்கொண்டு வருகையில், அதுபோன்ற தடைகளை இலங்கையும் எதிர்கொள்ளும் சூழல் உருவாகியுள்ளது.
இந்தப் பின்புலத்தில்தான் இலங்கை ஈரான் புதிய நட்புணர்வு மலர்ந்திருக்கின்றது.
ஒருதலைப்பட்சமாக அணு ஆயுதங்களை உற்பத்திசெய்யும் திமிர்ப் போக்கு, இஸ்ரேலை அழித்தொழிக்கக் கங்கணம் கட்டி நிற்கும் தீவிரம் போன்றவை ஈரானுக்கு எதிரான சர்வதேச நிலைப்பாட்டை உருவாக்கியிருக்கின்றன.
அதேபோல, ஈழத் தமிழர்களின் நியாயமான அபிலாஷைகளைப் புறம்தள்ளி, அவர்களின் இருப்பையே அழித்தொழிக்கும் பௌத்த சிங்களப் பேரினவாதச் சிந்தனையோடு, கொடூர மனித உரிமைமீறல்களுக்கு வழிகோலும் இலங்கை அரசுத் தலைமையின் திமிர்ப் போக்குப் போர்த் தீவிரமும் இலங்கைக்கு எதிரான சர்வதேச எரிச்சலுக்கு வழிசெய்துள்ளன.
இவ்வாறு ஈரானிய ஜனாதிபதி மஹ்மூத் அஹ்மதியாவின் அரச நிர்வாகமும், இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரச நிர்வாகமும் ஒரே மாதிரியாக சர்வதேச எரிச்சலுக்கு உள்ளானாலும்கூட இலங்கையின் நிலைமை மோசமானது.
உலகில் எரிபொருள் உற்பத்தி நாடுகளின் முன்னணி வரிசையில் இருக்கும் நான்காவது நாடு ஈரான். தாராள எரிபொருள், எரிவாயு மூலவளம் புதைந்து கிடக்கும் தேசம். கனியவளமும் தாராளம். அத்தகைய நாடு ஒன்று அமெரிக்கா போன்ற வல்லரசுகளைப் பகைத்துக் கொண்டு, ஐ.நா.போன்ற உலக நாடுகளின் கூட்டமைப்பு விதிக்கும் சர்வதேசத் தடைகளைத் துச்சமாக மதித்துப் புறக்கணித்து, உதாசீனம் செய்தபடி, ஒருதலைப்பட்சமாகத் தான் எடுத்த தீர்மானத்தின் பிரகாரம் தங்கு தடையின்றி அணு ஆயுத உற்பத்தியில் ஈடுபட முடியும்.
ஆனால், தேயிலை, இறப்பர், தைத்த ஆடைகள் மற்றும் பணிப்பெண்கள் சேவை போன்றவற்றை மேற்குலகுக்கு வழங்குவதன் மூலமே அந்நிய செலாவணியைத் திரட்டவேண்டிய இக்கட்டில் சிக்கியிருக்கும் இலங்கையால் இலகுவாக மேற்குலகைப் புறக்கணித்து விடமுடியாது. அப்படிப் புறக்கணித்து உதாசீனம் செய்ய முயலும் மஹிந்தர் அரசின் போக்கு இலங்கைக்கு விபரீத விளைவுகளை ஏற்படுத்தக்கூடியது.
ஆனால், இந்த யதார்த்தமும் உண்மையும் புரியாமல் ஈரான் போன்ற சர்ச்சைக்குரிய நாடுகளின் ஆதரவை மட்டும் வைத்துக்கொண்டு எந்தச் சவாலையும் சமாளிக்க முடியும் என்ற துணிச்சலோடு காய்களை நகர்த்துகின்றது மஹிந்தரின் அரசுத் தலைமை.
மேற்குலகின் வலுவைக் கவனத்தில் கொள்ளாமல் ஈரான், பாகிஸ்தான், சீனா போன்ற சர்ச்சைக்குரிய சக்திகளின் ஆதரவை நம்பி, அதில் தங்கி, தமது விபரீத முயற்சியை முன்னெடுக்கின்றது இலங்கையின் இந்த அரசு. இது மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்கும் எத்தனம் என்பது புரியவரும்போது மீள முடியாமல் தவிக்கும் இக்கட்டை அது உணர்ந்துகொள்ளும்.
அதுவரை, இத்தகைய புத்துறவும், புதுநட்பும் இலங்கை அரசுத் தலைமைக்குக் கரும்பாய்த்தான் இனிக்கும். அதன் விளைவுகளை அனுபவிக்கும்போது அது வேம்பாய்க் கசப்பது புரியவரும்.

நன்றி - உதயன்

Tuesday, April 22, 2008

இன்று எல்லோரிடமும் ஒரு கேள்வி இருக்கின்றது

கொள்கை முன்னெடுப்பு பிரிவைச் சேர்ந்த திரு. ஏழிலன் பேசுகின்றார்.இன்றைய இந்த நாளிலே பல நெருக்கடிக்குள்ளே வாழ்ந்து வழுகின்ற நாங்கள் இடையிலே எங்களை ஆசுவாசப் படுத்திக் கொள்வதற்காக மாத்திரமல்லாது இன்றைய காலத்தின் தேவைகளையும் நாங்கள் எல்லோரும் சேர்ந்து பகிர்ந்து கொள்ளவேண்டும்.

இதேநேரம் இன்றைய நிலைப்பாடு என்ன என்பது இன்று மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இன்று பலரிடம் பல கேள்விகள் எழுந்துள்ளது.

இப்போது இராணுவத்தினரின் நடவடிக்கைகள் தொடர்ச்சியாக இராணுவம் முன்னேறுவது போல சொல்லகின்ற செய்திகள். எங்களுக்கருகிலேயே சத்தங்கள் கேட்பதற்கான அந்த நடவடிக்கைகள். நாங்கள் அதனை அண்மையிலேயே தொடர்ச்சியாக எதிரியினுடைய, தாக்குதல் நடவடிக்கைகளை கேட்கின்ற வாய்ப்புகள், எனவே இப்படியாக தொடர்ச்சியாக நடைபெறுகின்ற இந்த நடவடிக்கை காரணமாக அடுத்தகட்டம் என்ன என்ற கேள்வி எல்லோர் மனத்திலும் எழுந்துள்ளது.

பலருடைய கேள்வி இப்போது அதுவாகத்தாக் இருக்கின்றது. என்ன, ஒரு நடவடிக்கையையும் காணவில்லையே என்று.

என்னிடம் நேற்று ஒரு ஐயா கேட்டார் முந்தியென்றால் அடிக்கடி ஏதாவது ஒரு சத்தம் கேட்கும் கடலிலே சத்தம் கேட்கும், தரையிலே சத்தம் கேட்கும், எதிரியினுடைய பாசறையினுள்ளே சத்தம் கேட்கும். இப்படி புலிகள் சும்மா இருப்பதில்லை.

தொடர்ந்து எங்கயாவது ஒரு தாக்குதலை செய்து கொண்டிருந்தார்கள். முகாங்கள் அடித்தார்கள் பிரதேசங்களைப் பிடிப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டார்கள். ஆனால் அண்மைக்காலமாக எந்த சத்தங்களையுமே காணவில்லை இதற்கு என்ன காரணம் என்று சொல்லிக் கேட்டார். எல்லோரிடமும் இப்படி ஒரு கேள்வி இருக்கிறது.

ஆனால் இது ஒரு விடுதலைப் போராட்டம். இங்கே நாங்கள் வெல்லவேண்டும். தோற்போமாக இருந்தால் அதில் இழப்பைத்தான் நாங்கள் சந்திக்க வேண்டி வரும். எனவே நாங்கள் தோற்காமல் வெல்லவேண்டும் என்கின்ற தேவை இருக்கிறது. அது ஒரு விடுதலைப்போராட்டத்திலே, மிகவும் பிரதானமான விடயம் என்னவென்றால் நாங்கள் எல்லாவற்றிலுமே குறைந்த வளங்களைக் கொண்டவர்கள்.

அது ஆளணியாக இருந்தாலும் சரி ஆயதங்களாக இருந்தாலும் சரி. அந்த வளங்களிலே நாங்கள் குறைந்தவர்கள். எதிரி அரசு. அந்த அரசு அவர்களுக்கு தேவையானவற்றைப் பெற்றுக் கொள்வதற்கு தேவையான வாய்ப்புகள் இருக்கின்றது. அதை வளங்குவதற்கு பலர் தயாராக இருக்கின்றார்கள்.

எனவே போராடுகின்ற அமைப்பு வெற்றியை சரியாக பெற்றுக் கொள்கின்ற வகையில் தான் தனது போர் நடவடிக்கைகளை செய்யவேண்டும். அதை விட்டு விட்டு எல்லோருமே எதிர்பார்க்கிறார்கள் என்ற வகையிலே உடனடியாக அதையிதைச் செய்து விட்டு இந்த விடுதலையிலே நாங்கள் அழிந்து போகமுடியாது.

எனவே எங்களுடைய தலைவரைப் பொறுத்த வரையிலே ஏற்ற காலங்களை சரியாகக் கணித்து அதற்கு ஏற்ற வகையிலே தனது நடவடிக்கைகளை செய்கின்ற போது பல மாற்றங்கள் எங்களுக்கு ஏற்படுத்தித் தந்திருக்கிறார். எனவே நாங்கள் காத்திருக்கின்ற காலமாக அது இருக்கின்றது.


இந்தக் காத்திருப்பு எவ்வளவு காலம் என்பதுதான் எங்களில் பலருடைய கேள்வியாக இருக்கின்றது. இன்னும் எவ்வளவு காலத்திற்கு நாங்கள் காத்திருக்கவேண்டும். இப்படிப் பலரிடம் இருக்கிறது கேள்வி. காத்திருப்பதற்கான காலம் முடிவதற்கான காலம் நெருங்கியிருக்கிறது என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

தமிழீழ விடுதலைப் போராட்டத்திலே இப்படி ஒரு நீண்டகால இடைவெளி வந்தது கிடையாது. அதே வேளையிலே இப்போது உங்களுக்குத் தெரிந்திருக்கும் விடுதலைப்புலிகள் சும்;மா இருக்கவில்லை. தொடரான தாக்குதல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. நாங்கள் எதிர் பார்க்கிறோம் என்னவென்றால், எங்கேயாவது ஒரு முகாமைப்பிடிக்கவில்லை அல்லது ஏதாவது ஒரு பிரதேசத்தைப் போய் அடித்துப் பிடிக்கவில்லை என்பதுதான்.

இப்போது எங்களுக்கு இருக்கின்ற அங்கலாய்ப்பாக இருக்கின்றது. அல்லது 100 ஆமியைக் கொல்லவேண்டும். அல்லது 200 ஆமியைக் கொல்லவேண்டும். எல்லோரும் விரும்புவது நல்ல செய்தி ஒன்றுதான் அது.

செய்யவேண்டும் என்கின்ற ஆவல் எல்லோரிடமும் இருக்கின்றது. அந்த வாய்ப்பை நாங்கள் சரியாகச் செய்யவேண்டும். அது தான் இப்போது இருக்கின்ற பிரச்சினை. உங்களுக்குத் தெரியும் இன்று ஒரு நீண்ட பெரும் பிரதேசத்திற்குள்ளே எதிரியை உள் நுழைய விடாமல் நாங்கள் தடுத்து வைத்திருக்கிறோம். இது ஒரு பெரிய போர். இன்று உங்களுக்குத் தெரிந்திருக்கும் இந்தியாவிலே யுத்தம் நடைபெறுகின்றது என்றால் அது எங்கே நடைபெறுகின்றது.

காஸ்மீரின் எல்லையிலே தான அங்கு சண்டை நடைபெறுகின்றது. பாகிஸ்தானும் இந்தியாவும் சண்டைபிடிக்கிறார்கள். எல்லையிலே தான்; சண்டை நடைபெறுகின்றது. அதைத்தான் அவர்கள் இந்தியா பாகிஸ்தான் யுத்தம் என்று சொல்கிறார்கள்.

போர் என்று சொல்கிறார்கள். எனவே எங்களுடைய எல்லையிலே நாளாந்தம் சண்டை நடைபெறுகின்றது. அது ஒரு சாதாரணமான படையோடு அல்ல. இலங்கையினுடைய ஒட்டு மொத்தமான படைகளிலே அந்த இராணுவ நடவடிக்கைகளை செய்கின்ற படைகளிலே முக்காவாசிப் படைகளோடு சண்டை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

உங்களுக்குத் தெரிந்திருக்கும் மணலாறில் இருந்து மன்னார் வரைக்கும் காவலரண்கள் அமைத்திருக்கிறோம். இங்கே நாகர் கோயிலில் இருந்து கிளாலி வரையிலும் எங்களுடைய காவலரண் இருக்கிறது.

மொத்தமாக முன்னூற்றைம்பது (350) கிலோமீற்றர் தூர நீளத்திற்கு எல்லைக் காவலரண்களை அமைத்து வைத்துக் கொண்டு அங்கே காப்பு நடவடிக்கைகளில் நாங்கள் ஈடு பட்டுக் கொண்டிருக்கிறோம்.

இந்த முன்னூற்றைம்பது (350) கிலோமீற்றர் தூரத்திற்கு சிறீலங்காவினுடைய படைகள் 70,000 படைகள் நிற்கின்றார்கள். ஏழு டிவிசனில் படை நிற்கின்றது. ஒரு டிவிசனிலே 13000 படைகள் இருக்கவேண்டும்.

ஆனால் சிறிலங்காவிலே 10000, 11000, 9000 என்று அந்த டிவிசன்கள் இருக்கின்றது. இப்பொழுது மொத்தமாக 70000 படைகள் இந்த எல்லைகளிலே நிற்கிறார்கள். அந்த 70000 படைகளோடு எங்களது போராளிகள் நாளாந்தம் சண்டை பிடித்துக் கொண்டு இருக்கிறார்கள்.
வீரச்சாவுகள் வருகிறது. இப்பொழுது நாங்கள் கேட்கின்ற கேள்விகள் என்னவென்றால் தொடர்ச்சியாக எல்லையிலே நின்றால் இப்படியே தொடர்ந்து வீரச்சாவுகள் வந்து கொண்டிருக்கும். இழப்புகளை சந்தித்துக் கொண்டிருப்போம். இதை எப்பொழுது நிற்பாட்டமுடியும் என்கின்ற கேள்வி எல்லோரிடமும் எழுகின்றது. நி;ற்பாட்ட வேண்டும்.

விரைவாக நிற்பாட்டவேண்டும். அந்த விரைவாக நிற்பாட்டுவதற்கான நடவடிக்கைகள் இப்பொழுது ஒழுங்கு படுத்தப்படுகிறது.

எங்களுடைய தலைவர் அண்மைக்காலங்களிலே இரவு பகலாக நித்திரை முழித்து விரைவான ஒரு மாற்றத்தைச் செய்தற்கான ஒழுங்கமைப்பைச் செய்து கொண்டிருக்கிறார். முதலில் எங்களுக்கு நம்பிக்கை வேண்டும். ஒன்று சொல்லுவார்கள் நம்பிக்கைக்கு அடுத்தது என்ன என்று கேட்டால் நம்பிக்கைதான் என்று சொல்கிறார்கள்.

அதைவிட வேறு ஒன்றும் இல்லை. எனவே அந்த நம்பிக்கை எங்களுக்கு முதலில் இருக்கவேண்டும். ஏனென்றால் நாங்கள் ஒரு போதுமே நம்பிக்கையை இழக்கமுடியாது. நாங்கள் விடுதலைக்காக போராடுகின்ற ஒரு அமைப்பு.

விடுதலைக்காகபோராடுகின்ற அமைப்பு ஒன்றின் பிரதானமான மூலதனமே நம்பிக்கைதான். ஜெயசிக்குறு காலப்பகுதிகளிலே எல்லாமே முடங்கிப்போனதொரு காலமொன்று இருந்தது. எல்லாவற்றையுமே நாம் இழந்து போனோம்.

இந்த ஏ 9 வீதியிலே படையினர்கள் நடந்து வந்து மாங்குளம் வீதியைக் கடந்து அம்பகாமம் வரைக்கும் போயிருந்தார்கள். அந்தப் பகுதியாலே கடந்து கிளிநொச்சிவரையிலுமே இராணுவம் வந்து நின்றது. இங்கே வவுனிக்குளம் வரையும் படைகள் வந்து நின்றன. இங்கே இருந்து போகின்றவர்கள் ஒரு குறிக்கப்பட்ட பிரதேசத்தைத் தாண்டிப்போகமுடியாது.

எந்த நேரமும் அச்சுறுத்தலான காலமாக அது இருந்தது. இந்தப் பிரதேசங்களிலே செல் வந்து விழுந்தது வெடித்தது. ஆழமுடியுமா என்கின்ற கேள்வி. அடுத்தகட்டம் எங்களுடைய வாழ்க்கைக்கு என்ன வளியிருக்கிறது என்ற கேள்வி.

இந்த நிலைமையிலே தான் தலைவருடைய திட்டம் சரியாக ஒழுங்கு படுத்தப்பட்டு அடுத்த கட்டத் தாக்குதலிலே எதிரி எல்லாப் பிரதேசங்களையும் கைவிட்டு விட்டு ஓட வேண்டிய நிலைப்பாடு வந்தது.

எனவே அந்த சூழல் இருக்கிறது. நாங்கள் இன்னும் இழந்து போகவில்லை. இந்த ஒரு பெரிய நிலப்பிரதேசத்தை பாதுகாப்புக்குள்ளே வைத்திருக்கிறோம். உங்களுக்குத் தெரிந்திருக்கும் இன்று மன்னார் பிரதேசத்தில் எரிமலை இராணுவ நடவடிக்கையிலே, அவர்கள் மூன்று நாட்களுக்குள்ளே சண்டையிட்டு அந்தப் பிரதேசங்களைப் பிடித்தார்கள்.

இங்கே பாலமோட்டையிலிருந்து அப்படியே அடம்பன் வரையும், மன்னார் மடுவரையும் ஒரு பெரு நிலப்பிரதேசத்தை பெரியமடு பள்ளமடு என்கின்ற பிரதேசங்கள் எல்லாவற்றையும் சேர்த்து மூன்று நாட்களுக்குள்ளே பிடித்தார்கள். ஆனால் இன்று ஆண்டாகப் போகிறது இன்னும் அவர்கள் எதிர்பார்த்த நடவடிக்கையை செய்யமுடியாமல் தான் நிற்கிறார்கள்.

எனவே இதுதான் எங்களுடைய பெரிய பலம் ஒரு பெரிய பிரதேசத்தை எம்மடைய கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறோம். அங்கே எல்லையை தூரத்திலே வைத்திருப்பதன் காரணமாகத்;தான் இங்கே நாங்கள் வாழக் கூடியதாக இருக்கின்றது.

இன்று எதிரியினுடைய நடவடிக்கைகள் உங்களுக்குத் தெரிந்திருக்கும். தூரவீச்சைச் செய்யக்கூடிய தூரவீச்சிற்கு எறிகணைகளை வீசக் கூடிய ஆயதங்கள் இருக்கின்றது. எனவே எதிரியை உள்ளே நகர விடமுடியாது.

எதிரி அண்மித்து வருவானாக இருந்தால் நாங்கள் இந்தப் பிரதேசங்களிலே வாழ முடியாது. கடந்த காலங்களைப்போல அல்ல. கடந்த காலங்களிலே 20 கிலோமீற்றர்கள் 25 கிலோமீற்றர்களுக்குள்ளே எதிரி வருவானாக இருந்தால் அந்தப் பிரதேசத்தை விட்டு வெளியேறவேண்டும்.

ஆனால் இப்போது அப்படியில்லை. 35 கிலோமீற்றர்களுக்கு அப்பாலேயே நாங்கள் நகர வேண்டிய தேவையிருக்கிறது. ஏனென்றால் அந்த அளவுக்கு தூரவீச்சுக் கொண்ட ஆயதங்கள் இருக்கின்றது. எனவே எதிரியை இங்கே வரவிடாமல் தடுக்கவேண்டிய கட்டாய கடமைப்பாடு அங்கே காணப்படுகிறது.

ஒரு பெரிய நிலப்பரப்பை எங்களுடைய பாதுகாப்புக்குள் வைத்திருக்கிறோம். இதைப்பரிந்து கொள்ளவேண்டும். எந்தவொரு விடுதலைப்போராட்டமும் தனக்கென்ற ஒரு பாதுகாப்பான வரையறுக்கப்பட்டபிரதேசத்தை வைத்திருக்கின்றபோது தான் அவர்கள் விடுதலையை வென்றதாக வரலாறுகள் இருக்கின்றது.

எதுவுமில்லாத நிலைமையிலே நின்று ஒரு விடுதலைப் போராட்டத்தை வென்று எடுக்க முடியாது. இது ஒரு வரலாற்றுச் சாட்சியம். வியட்னாமை நாங்கள் எடுத்துக் கொண்டால் அங்கே வியட்னாமிலே ஒரு பகுதி அவர்களினுடைய கட்டுப்பாட்டிலே இருந்தது. அந்தப் பிரதேசங்களிலே நின்று கொண்டு தான் ஏனைய பிரதேசங்களை மீட்டெடுத்தார்கள்.

அண்மையிலே விடுதலையைப் பெற்றுக் கொண்ட எரித்திரியாவைப் பார்ப்போமாக இருந்தால் அங்கே ஆர்த்ரமாவின் கட்டுப்பாட்டுக்குள்ளே இருந்தது. அந்தக் கட்டுப்பாட்டுக்குள் இருந்து தான் அவர்கள் ஏனைய பிரதேசங்களை மீட்டெடுத்தார்கள்.

எனவே ஒரு விடுதலைப் போராட்டத்திற்கு போராடுவதற்கான ஒரு தளம் பிரதேசம் இருக்கவேண்டும்;. அந்தப் பிரதேசம் பாது காப்பானதாக இருந்து கொண்டு பின்னணித் தளமாக இருக்கின்ற போது தான் ஏனைய பிரதேசங்களை மீட்கமுடியும்.
என்று விளக்கியிருந்தார் திரு எழிலன் அவர்கள்.

நன்றி
“நாம்” பத்திரிகை.

Monday, April 21, 2008

இந்திய வாடைக் காற்று ஈழம் நோக்கி வருகிறது.

புலிகள் இயக்கத்தை பயங்கரவாத முத்திரைகுத்தி அந்த இயக்கத்தின் செயற்பாடுகளை இந்தியாவில் தடைசெய்து ஈழத்தமிழர்களுக்கான அதரவு தளத்தை கடந்த காலங்களில் நிர்மூலம் செய்திருந்த மத்திய அரசு இதற்கு காரணம் இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி மீதான படுகொலை என உலகதத்மிழர்களுக்கு கிளிப்பிள்ளைப் பாடம் ஒப்புவித்தது.

ஈழத்திற்கான உரிமைப்போர் போரியல் வரலாற்றில் சுமார் 30 வருடங்களை காவு கொண்டுள்ள நிலையில் கிட்டத்தட்ட 17 வருடங்களை இந்தியாவின் புலித்தடை பொசுக்கிவிட்டது என்று குறிப்பிடுவது இந்நிலையில் சாலப்பொருந்தும்.

இந்தியாவின் கைவிரிப்புக்கு மத்தியில் அதன் ஒத்துழைப்பின்றியே ஈழத்தமிழர்களின் உரிமைப் பயணம் தொடரும் நிலையில் சமீப காலமாக இந்தியாவில் அதன் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவான உணர்வலைகள் எல்லை கடந்து மடை திறந்த வெள்ளம் போல பெருகிவருவதை இந்திய அரசியல் சமுத்திரத்தில் பார்க்க முடிகிறது .

பூகோள வரைபில் இந்தியாவின் காலடியில் கிடக்கும் இலங்காபுரியில் அதன் உள்நாட்டுக்குள் நாளாந்தம் நடந்து கொண்டிருக்கும் வன்முறையின் அதிர்வுகள் இந்தியாவின் உச்சந்தலையில் உதைப்பது போல அது இப்போது உணர தலைப்பட்டுள்ளது போலும்.

இதற்கு உதாரணமாக மாறி வரும் இந்திய அரசியலில் தற்போது ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக இடம்பெற்று வரும் முக்கிய நிகழ்வுகளை இவ் ஆய்வில் பதிவு செய்யலாம்.

பிரபாகரன் என பெயரிட்ட சிங்களத்திரைப்படம் மீதான உடனடி இடைக்காலத்தடை, டி.ராஜேந்தரின் அரசியல் கட்சி,தலைமைத்துவ பதவி துறப்பு ,ஒகேனக்கல் குடிநீர் திட்ட விவகாரம் தொடர்பில் தமிழக நடிகர் சங்கம் மெற்கொண்ட உண்ணாவிரத நிகழ்வில் நடிகர்களான சத்தியராஜ்,ரஜினி காந்த், சரத்குமார் ஆகியோர் ஈழத்தமிழர்களுகாக ஆற்றிய ஆவேச உரை, நளினி பிரியங்கா சந்திப்பு ,மதிமு,க செயலர் வைக்கோவின் நோர்வே உரை ,அதனை தொடர்ந்து வந்த இந்திய ஆன்மீக தலைவர் ஸ்ரீறி ஸ்ரீறி ரவிசங்கரின் இலங்கை சமாதான முன்னெடுப்புக்கள் மீதான அக்கறை, அதன் பின்னரான வைக்கோ, மன்மோகன் சிங் சந்திப்பு, ,தமிழக முதல்வர் கருணாநிதி( Times of India) என்ற நாளேட்டுக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வி,திராவிடர் கழக தலைவர் கீ.வீரமணியின் ஈழத்தமிழர்களுக்குக்காக ஒன்றுபடுவோம் என்ற அறைகூவல்,பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் இராமதாஸ், மன்மோகன் சந்திப்பு. ஆகியவை இந்திய மத்திய அரசு ஈழத்தமிழர்களுக்கு நேசக்கரம் நீட்ட தயாராகிறது என்பதையே தெளிவுபடுத்தும்.

இதேவேளை இந்தியாவின் ஈழத்தமிழர் மீதான எண்ணக்கருக்களை தமிழீழ விடுதலை புலிகள் எவ்வாறு உள்வாங்கி எதிர்காலத்தில் அரசியல் தீர்வு விஷயத்தில் காய்களை நகர்த்தப்போகிறார்கள் என்பதிலேயே ஈழத்தமிழர்களின் உரிமைக்கான வெற்றி தங்கி உள்ளது.
நன்றி :- வீரகேசரி

Sunday, April 20, 2008

கருணாநிதியிடமிருந்து இலங்கைத் தமிழர் எதிர்பார்ப்பது....

இலங்கையில் சமாதானப் பேச்சுக்களை இந்தியா ஏற்பாடு செய்ய வேண்டும் என்று தமிழக முதலமைச்சரும் உலகத் தமிழர்களின் மூத்த தலைவருமான மு.கருணாநிதி யோசனை தெரிவித்திருக்கிறார். இலங்கைத் தீவில் சமாதானத்தை ஏற்படுத்துவதற்காக மோதலில் ஈடுபடும் தரப்பினரிடையே பேச்சுவார்த்தைகளுக்கான ஏற்பாடுகளை இந்திய மத்திய அரசாங்கம் ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டும் என்பதும் சமாதானப் பேச்சுகள் பிரயோசனமானவையாகவும் பொருத்தமான அரசியல் தீர்வைக் கொண்டு வருவதாகவும் அமைய வேண்டும் என்பதும் கலைஞரின் யோசனையின் பிரதான அம்சமாகக் காணப்படுகிறது.
சமாதான அனுசரணையாளரான நோர்வே கடந்த வாரம் இலங்கையின் சமாதான நடவடிக்கைகளில் இந்தியா தீர்க்கமான பங்களிப்பை வழங்கும் என்று உறுதிபடத் தெரிவித்திருந்த நிலையில் இப்போது தமிழக முதல்வரும் மத்திய அரசாங்கத்திடம் இந்த அழைப்பை விடுத்திருக்கிறார். 1999 இன் பின்னர் இலங்கை அரசாங்கத்தின் அழைப்பிலும் விடுதலைப் புலிகளின் இணக்கப்பாட்டுடனும் சமாதான அனுசரணையாளராக நடவடிக்கைகளை மேற்கொண்ட ஒஸ்லோ தற்போது முழுமையாக ஸ்தம்பிதமடைந்திருக்கும் சமாதான நடவடிக்கைகளுக்கு உயிரோட்டம் அளிக்க முடியாமல் திண்டாடிக் கொண்டிருக்கின்ற அதேசமயம் இப்போது அந்தப் பொறுப்பை இந்தியாவிடமே மீண்டும் ஒப்படைக்கும் விதத்தில் கருத்துத் தெரிவித்திருக்கிறது. தெற்காசியப் பிராந்தியத்தின் களநிலைமைகளை நன்கு உணர்ந்திருப்பதன் அறிகுறியாகவே அதாவது இலங்கை விவகாரத்தில் இந்தியாவின் ஆசீர்வாதமின்றி எதுவுமே நடக்கப்போவதில்லை என்பதை முழுமையாக விளங்கிக் கொண்டதன் விளைவாகவே நோர்வே தற்போது தீர்க்கமான பங்களிப்பை புதுடில்லி வழங்கும் என்று கூறியிருக்கிறது.

ஒஸ்லோவில் கடந்த 10, 11 ஆம் திகதிகளில் இடம்பெற்ற தெற்காசியாவில் சமாதானம் மற்றும் நல்லிணக்கம் தொடர்பான மாநாட்டைத் தொடர்ந்தே இலங்கையில் சமாதானத்தை ஏற்படுத்துவது தொடர்பான கருத்துப் பரிமாற்றங்கள் மீண்டும் சர்வதேச அரங்கில் சிறியளவில் முனைப்புக் கொண்டிருக்கின்றன என்ற சிறுதுளி நம்பிக்கை முளைவிட்டிருக்கின்றது. இதற்கு வலுவூட்டுவது போன்று தமிழக முதல்வரும் யோசனை தெரிவித்திருக்கின்றார். நோர்வேயில் இடம்பெற்ற மாநாடு தொடர்பாக இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்கிடம், வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜியுடனும் விளக்கமாக எடுத்துக்கூறியிருக்கும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழக பொதுச் செயலாளர் வைகோ, இலங்கைத் தீவில் தமிழ் மக்கள் அனுபவிக்கும் வேதனைகளையும் அவலங்களையும் விரிவாக எடுத்துக் கூறியிருக்கிறார். வைகோவின் கருத்துகளை செவிமடுத்த இந்தியப் பிரதமரும் இலங்கைத் தமிழரின் கஷ்டங்களை இந்தியா அலட்சியப்படுத்தி விடமுடியாது என்று கூறியிருக்கிறார்.

1983 இனக்கலவரத்தைத் தொடர்ந்து இலங்கையிலிருந்து இலட்சக்கணக்கான தமிழர்கள் புகலிடம் தேடி தமிழ்நாட்டில் தஞ்சமடைந்ததைத் தொடர்ந்து இலங்கையின் இன நெருக்கடியில் நேரடியாக புதுடில்லி தலையிட்டது. ஆனாலும், வடக்கு கிழக்கை தமது பாரம்பரிய தாயகமாகக் கொண்ட தமிழ் மக்களின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்வதற்கான முழுமையான உத்தரவாதத்தை இந்திய நிர்வாகம் ஏற்படுத்திக் கொடுக்கத் தவறி விட்டதாகவே கருத முடிகிறது. தமிழ் மக்களின் முழுமையான இணக்கப்பாடின்றியே கொழும்புடன் 1987 இல் புதுடில்லி ஒப்பந்தத்தை செய்து கொண்டது. அந்த ஒப்பந்தத்தில் முக்கியமாக விதந்துரைக்கப்பட்ட எந்தவொரு முக்கியமான அம்சங்களும் இதுவரை அமுல்படுத்தப்படவில்லை என்பது யாவரும் அறிந்ததொன்றேயாகும். யாவற்றுக்கும் மேலாக அந்த ஒப்பந்தத்தில் சுட்டிக்காட்டப்பட்டிருந்த தமிழர்களின் வரலாற்று ரீதியான வதிவிடமான வடக்கு, கிழக்குப் பிராந்தியம் இப்போது துண்டாடப்பட்டுவிட்டது. அதேசமயம் கிழித்தெறியப்பட்ட பண்டா - செல்வா ஒப்பந்தத்தில் உள்ளடக்கப்பட்டிருந்த அதிகாரப் பரவலாக்கல் அம்சங்கள் கூட இலங்கை - இந்திய உடன்படிக்கையின் கீழான தீர்வுத் திட்டத்தில் இல்லையென அச்சமயம் தமிழ்த் தரப்புகள் சுட்டிக்காட்டியிருந்தன.

இலங்கையில் நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்த இந்தியா ஏற்பாடுகளை செய்து கொடுக்க வேண்டுமென்ற கருணாநிதியின் யோசனை வரவேற்கத்தக்க விடயமேயானாலும் புதுடில்லி நிர்வாகமானது இந்தியாவின் பூகோள அரசியல் நலன்களுக்கு அப்பால் தற்போது அதி முக்கியமான விடயமாக தோற்றம் பெற்றிருக்கும் வர்த்தக நலன்களுக்கு பாதிப்பின்றி பாதிக்கப்பட்ட தமிழ்மக்களின் நலன்களுக்கு முன்னுரிமை கொடுக்குமா என்பதே தமிழ் மக்கள் மனதிலுள்ள பரவலான சந்தேகமாகும். பக்கத்து வீட்டுக்காரன் உதவாவிடில் மற்றைய அயலவர்கள் எமது நலன்களை கவனிக்க தயாராக இருக்கின்றனர் என்ற செய்தியையே கொழும்பு மீண்டும் மீண்டும் விடுத்து வருகிறது. இந்நிலையில் புதுடில்லி நிர்வாகம் வர்த்தக நலன்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதாக தனது காய்களை நகர்த்துவதாக தென்படுகிறது. இதனால் புதுடில்லியின் கண்ணோட்டத்தில் பாதிக்கப்பட்ட தமிழர்களின் நலன்கள் இரண்டாம் பட்சமான நிலைமைக்கே தள்ளப்படும் நிலைமையே காணப்படுகிறது.

இதனை மாற்றியமைத்து இலங்கையில் தமிழ் மக்கள் சமவுரிமைகளுடன் வாழ்வதற்குரிய உத்தரவாதத்தையும் ஏற்பாடுகளையும் இந்தியா மேற்கொள்வதற்கு அதனை வழிநடத்தக்கூடிய அரசியல் அதிகார பலம் தற்போது தமிழக முதலமைச்சர் கருணாநிதியிடம் உள்ளது. இந்திய மத்திய அரசாங்கத்தில் கலைஞரின் தி.மு.க. பலம் வாய்ந்த பங்காளியாக இருக்கும் நிலையில் இலங்கைத் தமிழர்களின் அபிலாஷைகளை நிறைவேற்றக் கூடிய தீர்வை பெற்றுக் கொள்வதற்கு அவர் தனது பலத்தையும் செல்வாக்கையும் முழுமையாக பயன்படுத்த வேண்டும் என்பதே இலங்கையிலும் உலகின் பல பாகங்களிலுமுள்ள தமிழர்களின் எதிர்பார்ப்பாகும். தமிழ் நாட்டிலுள்ள ம.தி.மு.க, பாட்டாளி மக்கள் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் போன்றவை இலங்கைத் தமிழர்களின் நலன்களுக்காக உரத்துக்குரல் கொடுத்துவரும் நிலையில் `நானும் ஒருவன்' என்ற ரீதியில் கருத்துக்கள் யோசனைகளை தெரிவிப்பதுடன் மட்டும் நிறுத்திக் கொள்ளாமல் தமது இருப்பே கேள்விக்குறியாகியிருக்கும் இலங்கைத் தமிழர்களுக்கு நீதி கிடைக்க முழு அளவிலான செயற்பாட்டில் கலைஞர் ஈடுபட வேண்டும். இதனையே இந்த முதுபெரும் தலைவரிடமிருந்து தமிழ் மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.


நன்றி தினக்குரல்

Friday, April 18, 2008

இராணுவ இக்கட்டுநிலையை பதற்றத்துடன் மதிப்பிடுகிறார் ஜனாதிபதி

2002 இல் கைச்சாத்திடப்பட்ட யுத்தநிறுத்த உடன்படிக்கையை உத்தியோகபூர்வமாக கைவிட்டு கிட்டத்தட்ட மூன்று மாதங்களில், வடக்கின் மீதான இராணுவ நடவடிக்கைகள் சேற்றுக்குள் புதைந்து போன நிலையில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தில் வேகமான வெற்றி என்ற இலங்கை அரசாங்கத்தின் எதிர்பார்ப்புகள் மங்கிப் போய்க்கொண்டிருக்கின்றன.

இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ, இந்த நிலைமையைப் பற்றி கலந்துரையாடுவதற்காக வடக்கில் யுத்தக் களத்தில் இருந்த இராணுவத் தளபதிகளுடன் தேசிய பாதுகாப்புச் சபையின் கூட்டமொன்றை மார்ச் 28 ஆம் திகதி தனது இல்லத்தில் கூட்டினார். வட பிராந்திய தளபதிகள் நால்வருடன் இரு பிரதான கடற்படைத் தளபதிகளும் இக்கூட்டத்திற்கு வருகை தந்திருந்தனர்.

யுத்தத்தின் ஏனைய பகுதிகளைப் போலவே, தேசிய பாதுகாப்பு சபை கூட்டமும் கடுமையான தணிக்கைக்கு உள்ளாக்கப்பட்டிருந்தது. இனவாத யுத்தத்தை மீண்டும் முன்னெடுத்துள்ள மற்றும் எந்தவொரு மட்டுப்படுத்தப்பட்ட விமர்சனங்களையும் கூட யுத்தத்தைக் கீழறுக்கும் முயற்சியாகவும் தேசத் துரோகமாகவும் கண்டனம் செய்யும் ராஜபக்‌ஷவின் ஆட்டங்கண்டுபோயுள்ள ஆளும் கூட்டணிக்கு இராணுவ நடவடிக்கைகள் திட்டமிட்டவகையில் இடம்பெறவில்லை என்ற எந்தவொரு சமிக்ஞையும் கூட அரசியல் விளைவுகளை ஏற்படுத்துவதாகும்.

இந்த சூழ்நிலையில், கடந்த சிலவாரங்களுக்கு முன்பு வெளியான சண்டே டைம்ஸ் பத்திரிகையின் `நிலைவர அறிக்கை' தேசிய பாதுகாப்பு சபை கூட்டத்தில் நெருக்கடியான சூழல் நிலவியதை சமிக்ஞை செய்கின்றது. புலிகள் கிழக்கில் இருந்து வெளியேற்றப்பட்ட பின்னர் கடந்த ஜூலையில் மன்னார் பிரதேசத்தில் வடக்குக்கான இராணுவ நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டதோடு வடக்கில் ஏனைய பிரதேசங்கள் மீதும் ஜனவரி மாதம் நடவடிக்கைகள் தொடங்கின. 2008 கடைசிப் பகுதியில் தான் ஓய்வு பெறுவதற்கு முன்னதாக புலிகளை இராணுவ ரீதியில் தோற்கடிப்பதாக இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சரத் பொன்சேகா முன்னறிவித்திருந்தார்.

தேசிய பாதுகாப்புச் சபை கூட்டத்தில் உணர்ச்சியூட்டும் வெற்றிகள் பற்றி பெருமைபட்டுக்கொள்ள வடக்கு இராணுவ தளபதிகளால் முடியவில்லை. கிழக்கில் இராணுவத்தின் துரிதமான முன்னேற்றம், 2004 இல் புலி உறுப்பினர்களுக்கிடையில் பலவீனமாக்கும் பிளவு ஒன்றை ஏற்படுத்துவதற்கான பெரும் நடவடிக்கையில் தங்கியிருந்தது. இதன் காரணமாக புலிகள் ஆயிரக்கணக்கான உறுப்பினர்களையும் ஆயுதங்களையும் இழந்தனர். புலிகளில் இருந்து பிரிந்த கருணா குழு இராணுவத்துடன் சேர்ந்து புலிகளின் நிலைகளைத் தாக்குவதில் ஒரு துணைப்படையாக செயற்பட்டது, வடக்கில், இரு பக்கமும் பெரும் உயிரிழப்புக்களை ஏற்படுத்தும் அழித்தொழிக்கும் யுத்தத்தில் புலிகளின் பலமான நிலைகளுக்கு எதிராக நான்கு நிலைகளில் இருந்து இராணுவம் போராடிக்கொண்டிருக்கின்றது.

சண்டே டைம்ஸ் இக்பால் அத்தாஸின்படி, பாதுகாப்புச் சபை கூட்டம் காலநிலையின் மீது குற்றஞ்சாட்ட தீர்மானித்துள்ளது. இராணுவத்தளபதிகளில் பெரும்பான்மையானவர்கள் "எதிர்பாராத எதிரி -இடைவிடாத மழை -வன்னியில் இராணுவ நடவடிக்கைகளுக்கு தடை ஏற்படுத்தியது என்ற கருத்திலேயே இருந்தனர். மன்னார், மணலாறு ஆகிய பகுதிகளிலும் இந்த நிலைமை இருந்தது.. காவலரண்களுக்குள் வெள்ளம் புகுந்துவிட்டது. கண்காணிப்பு, நெருக்கமான விமான உதவி, உயிரிழந்தவர்களை அகற்றுதல் போன்ற விமானப்படை நடவடிக்கைகள் மோசமான காலநிலையால் பாதிக்கப்பட்டன. பாதைகள் சேறாகின, கவச வாகனங்களை அனுப்பிவைப்பதும் பிரச்சினையை ஏற்படுத்தியது" என அவர் எழுதியுள்ளார்.

போதுமானளவு தேசப்பற்றுடன் இருக்கவில்லை என ஊடகங்களையும் இராணுவம் குற்றஞ்சாட்டுகிறது. "அவர்களால் அனுப்பி வைக்கப்படும் யுத்தக் களத்தில் வெற்றிகளை சித்திரிக்கும் படங்களை ஒளிபரப்புவதில்லை, மாறாக முன்னைய இராணுவ நடவடிக்கை தொடர்பான படங்கள் ஒளிபரப்பப்படுகின்றன என தேசிய தொலைக்காட்சி சேவையான ரூபவாஹினி மீதும் ஒரு சிரேஷ்ட இராணுவ அதிகாரி பிரச்சினை ஒன்றை எழுப்பினார்," என இக்பால் எழுதியுள்ளார். கோபமடைந்த ஜனாதிபதி, இது தொடர்பாக பதிலளிக்க உடனடியாக ரூபவாஹினி அதிகாரிகளுக்கு அழைப்பாணை அனுப்பினார்.

முப்படைத் தளபதியும் பாதுகாப்பு அமைச்சருமான ஜனாதிபதி யுத்ததை முன்னெடுத்துள்ளதால் "பாதுகாப்புக்கு பெருந்தொகையான நிதி செலவிடப்பட்டுள்ள நிலையில், பெற்றுக்கொண்டுள்ள முன்னேற்றம் பற்றி ஆராய்ந்து தெரிந்துகொள்ள பொதுவில் விருப்பங்கொண்டவராக இருப்பார். சுய கட்டுப்பாடுகளால் இதோடு சம்பந்தப்பட்ட சில பகுதிகளைப் பற்றி குறிப்பிட முடியாது. அவை உயிரிழப்புகள் பற்றிய முக்கிய விடயங்களையும் உள்ளடக்கியிருந்தது," என இக்பால் எச்சரிக்கையுடன் குறிப்பிடுகின்றார். இராணுவ உயர் மட்டத்தினருடன் தொடர்புகள் வைத்துள்ள பழைமைவாத விளக்கவுரையாளரான இக்பால், ஆயுதக் கொள்வனவு சம்பந்தமான அவதூறுகள் பற்றி அம்பலப்படுத்தியமைக்காக கடந்த ஆண்டும் அரசாங்கத்தின் கடுமையான அடக்குமுறைகளுக்கு உள்ளானார்.

ஏனைய தளபதிகளும் வடக்கில் இராணுவ இக்கட்டு நிலைபற்றி குறிப்பிட்டனர். இதே தேசிய பாதுகாப்புச் சபை கூட்டம் பற்றி எழுதிய அரசுக்குச் சொந்தமான சண்டே ஒப்சேவர், "மடுப்பிரதேசத்தை துருப்புக்களால் எப்போதும் கைப்பற்ற முடியும்" என்பது பற்றி ராஜபக்‌ஷ அக்கறை காட்டினார். "துருப்புக்கள் உயிரிழப்பது அதிகரிப்பது பற்றியும் ஜனாதிபதி கவலையடைந்தார்" என தெரிவித்துள்ளது.

மன்னார் மீதான இராணுவ நடவடிக்கைகள் கடந்த எட்டு மாதங்களாக குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் இன்றி நகர்ந்துகொண்டிருக்கின்றன. தற்போது மோதல்கள் மடு தேவாலயத்திற்கு அருகில் இடம்பெறுகின்றன. இது பிரதேசத்தின் தூய்மையைக் கெடுப்பதாக இராணுவமும் புலிகளும் ஒருவருக்கு எதிராக ஒருவர் குற்றஞ்சாட்டும் நிலைக்கு வழிவகுத்துள்ளது. கத்தோலிக்கர்களால் புனிதமாகக் கருதப்படும் உருவச்சிலையுடன் பாதிரிமார்கள் தேவாலயத்தை விட்டு வெளியேறியுள்ளனர்.

இராணுவம் மணலாறு பகுதியிலும் புலிகளின் கடுமையான எதிர்த் தாக்குதலை சந்திப்பதாக கடந்த திங்களன்று வெளியான ஐலண்ட் பத்திரிகை செய்தி வெளியிட்டிருந்தது. அந்தப் பத்திரிகை பிரிகேடியர் நாணயக்காரவிடம் இருந்து மேற்கோள் காட்டியிருந்தது. "எதிரிகள் மீது இராணுவம் பெரும் சேதங்களை ஏற்படுத்தியிருந்தாலும், மணலாறு முன்னரங்கில் இயங்கும் துருப்புக்களை புலிகள் உறுதியாக எதிர்க்கின்றனர்" என அவர் தெரிவித்திருந்தார்.

டோரா அதிவேகப் படகு ஒன்றை புலிகள் மூழ்கடித்ததில் மார்ச் 22 ஆம் திகதி கடற்படையும் பின்னடைவை சந்தித்தது. இந்தத் தாக்குதலில் குறைந்தபட்சம் 10 கடற்படையினர் உயிரிழந்துள்ளனர். அது தற்கொலைக் தாக்குதலா அல்லது கடற்கண்ணிவெடியா என்பது பற்றி, புலிகள் பயன்படுத்தும் வழிமுறைகள் தொடர்பாக ஊகங்கள் தொடர்கின்றன. அந்தப் படகு முல்லைத்தீவில் புலிகளின் கடற்படைத் தளம் உள்ள பகுதியில் ஆழ் கடலில் மூழ்கடிக்கப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலால் வடக்கில் யாழ்ப்பாணக் குடாநாட்டில் இருக்கும் இராணுவத்தினருக்கான விநியோகத்துக்கு புலிகள் தொந்தரவு ஏற்படுத்தக் கூடும் என்ற கவலை கொழும்பில் எழுந்துள்ளது. புலிகள் இப்போது யாழ்ப்பாணத்துக்கான அனைத்து தரைப் பாதைகளையும் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்.

அண்மையில் உடனடித் தேவையின் அடிப்படையில் பாகிஸ்தானிடம் இருந்து உதவி கோரியிருப்பதானது இராணுவத்தினுள் காணப்படும் நெருக்கடிக்கான இன்னுமொரு அறிகுறியாகும். இந்திய, ஆசிய செய்திச் சேவையின் படி, 60 மில்லிமீற்றர் மோட்டார் குண்டுகள் மற்றும் கிரனேட்டுகளுமாக மொத்தம் 150,000 ஐ உடனடியாக விநியோகிக்குமாறு இராணுவத் தளபதி பொன்சேகா கோரியிருக்கின்றார். 25 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான 81 மில்லிமீற்றர், 121 மில்லிமீற்றர் மற்றும் 130 மில்லிமீற்றர் மோட்டார் குண்டுகளும் ஏனைய கோரிக்கைகளில் அடங்கும். கடந்த ஆண்டு, இராணுவம் 50 மில்லியன் டொலர் பெறுமதியான குண்டுகளை பாகிஸ்தானில் இருந்து கொண்டு வந்தது.

மிகப் பெருந்தொகையான வெடி பொருட்களை பெறுவதானது புதிய தாக்குதல்களுக்குத் தயாராகுவதை சுட்டிக்காட்டுகிறது. புலிகளின் நிலைகள் மீது தாக்குதல் தொடுப்பதற்கு மட்டுமன்றி உள்ளூர் மக்களை அச்சுறுத்தவும் இலங்கை இராணுவம் கண்மூடித்தனமான ஆட்டிலறி மற்றும் மோட்டார் தாக்குதல்களிலும் அதே போல் விமானத் தாக்குதல்களிலும் தங்கியிருக்கின்றது. கடந்த 2 ஆண்டுகளில் மக்கள் தமது வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர்.

கடந்த மாத முற்பகுதியில், ஜெனரல் பொன்சேகா இந்திய பாதுகாப்பு அதிகாரிகளை சந்தித்து மேலதிக இராணுவ உபகரணங்களைக் கோரினார். இந்தியா இராணுவ பயிற்சிகளை வழங்குவதுடன் புலனாய்வுத் தகவல்களை பரிமாறிக்கொள்வதோடு இலங்கைப் படைகளுக்கு தாக்குதலுக்குப் பயன்படாத உபகரணங்களையும் வழங்குகிறது. தென்னிந்தியாவில் உள்ள தமிழர்கள் மத்தியில் எதிர்ப்பைப் பற்றி கவலைகொண்டுள்ள புதுடில்லி, யுத்தத்திற்கு வெளிப்படையாக ஆதரவளிக்கத் தயங்குவதோடு பொன்சேகாவின் புதிய வேண்டுகோளை மறுத்துள்ளது போல் தெரிகின்றது.

பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க இலங்கையின் இன்னுமொரு ஆயுத விநியோகஸ்தரான இஸ்ரேலுக்கு கடந்த மாதம் நான்கு நாள் விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார். லங்கா லொஜிஸ்டிக் கம்பனியின் (படைக்கல விநியோக நிறுவனம்) பிரதான நிர்வாக அதிகாரி ரன்சித் விக்கிரமசிங்க மற்றும் ஏனைய உயர்மட்ட இராணுவ அதிகாரிகளும் அந்த குழுவில் அடங்குவர். பாதுகாப்பு அமைச்சின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள லங்கா லொஜிஸ்டிக் கம்பனியே இராணுவத்துக்கான பாதுகாப்பு உபகரணங்கள் அனைத்தையும் கொள்வனவு செய்யும் நிறுவனமாகும்.

விக்கிரமசிங்க இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் எடுஹர்ட் பராக்கை சந்தித்ததோடு, அரசுக்கு சொந்தமான இஸ்ரேல் ஏரோஸ்பேஸ் இன்டஸ்ரீஸ் மற்றும் ஏனைய இராணுவ விநியோக நிலையங்களுக்கும் சென்றார். இலங்கை 1980 களில் இருந்து கடற்படை கப்பல்கள், யுத்த விமானங்கள் மற்றும் துப்பாக்கிகளையும் இஸ்ரேலில் இருந்து கொண்டுவந்துள்ள போதிலும், இலங்கை பிரதமர் ஒருவர் அந்நாட்டுக்கு விஜயம் செய்தது இதுவே முதல்தடவை ஆகும். இராணுவத் தளபாடங்கள் மற்றும் உதவிகள் நிகழ்ச்சி நிரலில் முதலில் இடம்பிடித்திருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

மிக் - 29 குண்டுவீச்சு விமானங்கள் ஐந்தை கொள்வனவு செய்வதற்கு இலங்கை அரசாங்கம் ரஷ்யாவுடன் ஏற்பாடுகளை நிறைவேற்றியிருப்பதாக மார்ச் 14 அன்று ஜேன்ஸ் டிபென்ஸ் வீக்லி சஞ்சிகை செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த பிரமாண்டமான இராணுவக் கொள்வனவு அரசாங்கத்தின் நிதியில் மேலும் சுமைகளை திணிக்கும். ராஜபக்‌ஷ 2008 ம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் பாதுகாப்புக்காக 167 பில்லியன் இலங்கை ரூபாய்களை (16 பில்லியன் அமெரிக்க டொலர்) ஒதுக்கியுள்ளார். இது 2007 ம் ஆண்டையும் விட 20 வீத அதிகரிப்பாகும். அதிகரித்துவரும் வரவு செலவுத்திட்ட பற்றாக்குறையை நிரப்புவதன் பேரில் உள்நாட்டிலும் மற்றும் சர்வதேச நிதிச் சந்தைகளிலும் உயர்ந்த வட்டி வீதத்தில் அரசாங்கம் கடன் வாங்கத் தள்ளப்பட்டுள்ளது.

இராணுவச் செலவும் மற்றும் சர்வதேச ரீதியில் எண்ணெய் மற்றும் உணவுப் பொருட்களின் விலை அதிகரிப்பதும் நாட்டின் ஆண்டு பணவீக்கத்தை மார்ச்சில் 28 வீதம் வரை உயர்த்தியுள்ளன. யுத்தத்திற்கு அரசியல் தீர்வு காண்பதற்கு பதிலாக வாழ்க்கை தரம் சீரழிந்து வருவது தொடர்பாக வளர்ச்சிகண்டுவரும் வெகுஜன அதிருப்தியை திசை திருப்பும் முயற்சியில் இராணுவ நடவடிக்கைகளை ராஜபக்‌ஷ உக்கிரமாக்குகின்றார். எந்தவொரு இராணுவ பின்னடைவும் மற்றும் உயர்ந்த எண்ணிக்கையிலான உயிரிழப்புக்களும் அரசாங்கத்தின் அணியிலும் கூட மேலும் எதிர்ப்புக்கு எண்ணெய் வார்க்கும்.

1948 ல் சுதந்திரம் அடைந்ததில் இருந்தே இலங்கை ஆளும் தட்டு பயன்படுத்தி வந்த இனவாத அரசியலின் உற்பத்தியே ராஜபக்‌ஷவின் கொள்கைகளாகும். நாட்டின் எந்தவொரு சமூகப் பிரச்சினையையும் தீர்க்கவோ மற்றும் அடிப்படை ஜனநாயக உரிமைகளை வழங்கவோ இலாயக்கற்றுப் போன ஆட்சியில் இருந்த கொழும்பு அரசாங்கங்கள், தொழிலாளர் வர்க்கத்தைப் பிரிப்பதற்காக தமிழர் விரோத இனவாதத்தை கிளறிவிடுவதை நாடின.

தனது சுதந்திர சந்தை அரசியலில் அழிவுகரமான தாக்கத்திலிருந்து கவனத்தை திசைதிருப்புவதன் பேரில், ஜனாதிபதி ஜே.ஆரின் அரசாங்கம் 1983 ல் யுத்தத்தை ஆரம்பித்து வைத்தது. 70,000 க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்த போதிலும் அவருக்கு அடுத்து வந்தவர்கள் எவராலும் இந்த மோதல்களுக்கு முடிவுகாண முடியாமல் போனதற்கு துல்லியமான காரணம், அவர்கள் அனைவரும் அதே பிற்போக்கு நோக்கத்தில் மூழ்கிப் போயிருந்தமையே ஆகும்.

நன்றி உலக சோசலிச இணையத் தளம்.

Thursday, April 17, 2008

பாவப்பட்ட ஈழத் தமிழர்களுக்கு பாவப்பட்ட ஈழத் தமிழர்களுக்கு

இந்திய அரசுக்கு எதிராக மிக முக்கிய குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்திருக்கின்றார்கள் விடுதலைப் புலிகள்.
""இலங்கையில் போர் நிறுத்தப்பட வேண்டும். தமிழரின் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணப்பட வேண்டும்.'' என்று இந்திய அரசு விடுக்கும் அறிக்கைகள் வெறும் வாய்ச் சொற்களே தவிர வேறெதுவும் இல்லை என்றுதான் தமிழ்மக்கள் பார்க்கின்றனர். இவ்வாறு நேரடியாகவே இந்தியா மீது குற்றப்பத்திரம் வாசித்துள்ளார்கள் புலிகள்.
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் உத்தியோகபூர்வ ஏடான "விடுதலைப் புலிகள்' சஞ்சிகையின் ஆசிரிய தலையங்கம் இப்படி அப்பட்டமாக இந்தியாவைக் குறை கூறியிருக்கின்றது.

வேறு வார்த்தைகளில் கூறுவதானால் இலங்கையில் போர் நிறுத்தப்படவேண்டும், அரசியல் தீர்வு காணப்படவேண்டும், சமாதானம் உருவாக வேண்டும் என்றெல்லாம் இந்தியா கூறுவது வெறும் வாய்ப்பந்தல் நடிப்பு; பசப்பு வார்த்தை. ஆனால் இந்தியாவின் உள்ளக்கிடக்கையோ வேறு என்பதையே புலிகள் குறிப்பிட்டுச் சுட்டிக் காட்டியிருக்கின்றார்கள்.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொண்டு தத்தளிக்கும் இலங்கை அரசுக்கு அதன் இன அழிப்புப் போருக்கு இராணுவ உதவிகள் புரிந்து, தமிழ் மக்களைக் கோபத்துக்கு உள்ளாக்கியுள்ள இந்திய அரசு, தனது இச் செயற்பாடு மூலம் சர்வதேச சமூகத்தையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது என்றும் புலிகள் சுட்டிக்காட்டியிருக்கின்றனர்.

விடுதலைப் புலிகளின் உத்தியோகபூர்வ சஞ்சிகையில் அதன் ஆசிரிய தலையங்கமாகவே இக்கருத்து முன்வைக்கப்பட்டிருப்பதால் அது புலிகளின் உத்தியோகபூர்வ கருத்தியலாகவே கருதப்பட்டு கவனத்தில் எடுக்கப்பட வேண்டும்.

இதற்கு அப்பால் இன்னொரு விடயத்தையும் புலிகள் சுட்டிக்காட்டியிருக்கின்றனர். அதுவும் ஊன்றிக் கவனிக்கப்படவேண்டியது.

இலங்கை அரசின் போரியல் போக்குக்கு ஒத்தாசையாக இருக்கும் அதேசமயம், இலங்கை அரசு ஆக்கிரமித்த தமிழர் நிலப் பகுதிகளில் பொருண்மிய நன்மை பெறும் சிறுமைத் தனத்திலும் இந்திய அரசு அக்கறை காட்டி வருகின்றது எனப் புலிகள் குற்றம் சுமத்தியிருக்கின்றனர்.

திருகோணமலை மாவட்டம் சம்பூர் பகுதியைப் படைகள் ஆக்கிரமித்த கையோடு அங்கே ஓர் அனல் மின் நிலையத்தை இலங்கை அரசுடன் இணைந்து அமைப்பதற்கு இந்திய அரசு உடன்பட்டமையையும் புலிகள் மேற்கோள் காட்டியிருக்கின்றனர்.

"எரிகிற வீட்டில் பிடுங்கியது லாபம்' என்ற கணக்கில் இந்தியா நடந்து கொள்கின்றதோ என்ற சிந்தனைப் போக்கைப் புலிகளின் இந்தக் குற்றச்சாட்டு நமக்கு ஏற்படுத்துகின்றது.
இக் குற்றச்சாட்டுகள் விடுதலைப் புலிகளினால் முன்வைக்கப்பட்டாலும் இத்தகைய சந்தேகமும் சிந்தனையோட்டமும் சராசரி ஈழத் தமிழர் ஒவ்வொருவரினதும் மனதிலும் இழையோடுகின்றது என்பதை இந்தியா புரிந்துகொள்ள வேண்டும்.

புலிகளின் குற்றச்சாட்டில் உண்மை இருக்கலாம். இல்லாமல் இருக்கலாம். அவை வெறும் அபாண்டக் குற்றச்சாட்டுதலாகக் கூட இருக்கலாம்.

ஆனால் இந்தியா தனது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தியே செயற்பட வேண்டும். "கூழுக்கும் ஆசை, மீசைக்கும் ஆசை' போல இரண்டுங்கெட்டானாக அது நடந்து கொள்ளக்கூடாது.
தாய் சேய் போல இந்தியாவின் தென்னகத் தமிழர்களும் ஈழத் தமிழர்களும் தொப்புள்கொடி உறவுமுறை கொண்டவர்கள். "தானாடாவிட்டாலும் தசை ஆடும்' என்பதுபோல ஈழத்தமிழர்களுக்காகத் தென்னகம் கிளர்ந்தெழும் சூழல் நிலவும் இச்சமயத்தில், இந்தியா இரண்டு பக்கமும் சமாளிப்பது போலப் போலி வேடமிட்டு நடிக்கக்கூடாது; புரட்டுப் பண்ணக்கூடாது.

இலங்கைப் படைகளுக்குப் பயிற்சி உதவி, ஆயுத, தளபாட விநியோகம், கூட்டுக் கடல் ரோந்து, செய்மதி மூலமான உளவுத் தகவல் சேகரிப்பும் பரிமாற்றமும்,வான் பாதுகாப்புத் திட்டம், இலங்கை உயர் இராணுவ அதிகாரிகளுக்கு கௌரவ வரவேற்பு என்று நீண்டு செல்லும் இந்தியாவின் இலங்கைக்கான உதவித் திட்டங்கள் இலங்கை விவகாரத்தில் பாரதத்தின் பங்களிப்புத் தொடர்பாக ஈழத் தமிழர்களுக்கு சந்தேகத்தைத் தருவனவாக மட்டுமல்லாமல், தமக்கு எதிராக அயல் வல்லாதிக்கம் பெரும் துரோகம் இழைப்பதான உணர்வு நிலையையும் ஏற்படுத்தி நிற்கின்றன.

"புலிகளை அழித்துத் தமிழர்களுக்குத் தீர்வு' என்ற பெயரில் பௌத்த சிங்களப் பேரினவாதம் வரித்துக் கொண்டிருக்கும் அடக்குமுறைக் கொள்கைப் போக்கை இந்தியாவும் சுவீகரித்துக் கொண்டு விட்டதோ என்பதுதான் ஈழத்தில் மட்டுமல்லாமல், உலகெங்கும் வாழும் தமிழர்களின் மனதில் இன்று நெருடும் ஒரே கேள்வியாகும்.

பாரத மாதாவே! பாவப்பட்ட இந்த ஈழத் தமிழர்களுக்கான உனது பதில்தான் என்னவோ.......?

நன்றி - உதயன்

Tuesday, April 15, 2008

சிங்களத்தின் சீனக்காதலும் இந்திய ஊடலும்

-க.வே.பாலகுமாரன்-


மிகக் குரூரமானதொரு கபடம் நிறைந்த அரசியல் பொம்மலாட்டமொன்று மீண்டும் சிங்களத்தில் அரங்கேறுகின்றது. இப் பொம்மலாட்டத்தினை நிகழ்த்துபவர்கள் ஜே.வி.பி.யினராக இருந்தாலும் ஆட்டுவிப்பவர் யார்? என்பதே எமது கேள்வி.

இக் கபட நாடகத்தின் கருப்பொருள் இந்திய எதிர்ப்பு; சென்ற பெப்ரவரி மாதம் பதினெட்டாம் நாள் அனுராதபுரத்தில் இந்திய விரிவாக்கத்திற்கெதிரான தமது பெருமெடுப்பிலான எதிர்ப்பியக்கத்தை ஜே.வி.பி. தொடங்கியது. அங்கு முழங்கித் தள்ளிய சோமவன்சர் தொடர்ந்தும் இந்தியத் தலையீடு அதிகரித்தால் இந்தியப் பொருட்களை புறக்கணிக்குமாறு மக்களை வேண்டுவோமென அச்சுறுத்தினார்.

13 ஆவது திருத்தம், இடைக்கால சபை என்பதெல்லாம் இந்திய விரிவாதிக்கத்திற்கு வழியமைக்கவே இவற்றினைக் கடுமையாக எதிர்ப்போம் என்றார்.

இப்பொழுது ஜே.வி.பி.யினர், மீண்டும் றோவின் தலையீடு, இந்தியப் பணித்துறை ஆட்சியாளரின் அடாவடித்தனம், பெரியண்ணன் நினைப்பு, தென்னாசியாவைத் தமது கொல்லையாக நினைக்கும் போக்கு என விளாசுகின்றனர்.

இவையெல்லாம் எமக்குப் பின்னோக்கி ஒட்டப்படும் திரைப்படமொன்றின் காட்சிகளாகின்றன. 1971 ஆம் ஆண்டு ஜே.வி.பி.யினர் தமது உறுப்பினர்களுக்கு எடுத்த ஐந்து பாடங்களுள் ஒன்று இந்திய விரிவாதிக்கம். இன்று, அன்று அதைக் கற்பித்தோரில் உயிரோடு இருப்பவர் சோமவன்சர் மட்டுமே. அது போலவே 1987&88 களில் இந்தியாவை மிக இழிவாகப் பேசி இந்திய ஏகாதிபத்தியத்தின் சுரண்டலுக்கு இடம் கொடோமென்றும் ஏகாதிபத்தியத்தின் காவல் நாய்களே தமிழர் இயக்கங்களென்றும் இலங்கை - இந்திய உடன்பாடு அடிமைச்சாசனமென்று அலறியதும் தெரிந்ததே. இப்பொழுதும் அதே தான் நிகழ்கின்றது.

அதிரடி அறிக்கைகளுக்கும் அரசியல் அதிர்வேட்டுக்களுக்கும் ஜே.வி.பி.யினரிடம் எப்பொழுதும் பற்றாக்குறையிருந்தது கிடையாது. என்றாலும் அவர்களது இந்த அதிர்வேட்டு வெறும் அரசியல் நாடகமா? அல்லது சிங்களத்தின் ஆழமான மனநிலையின் வெளிப்பாடா? இது பற்றி எவரும் மேலோட்டமான முடிவிற்கு உடனடியாக வர முடியாது.

இருண்மை நிறைந்த மருமங்கள் புதைந்த ஐதீகங்களால் வனையப்பட்ட சிங்களத்தாரின் அடிமனத்தில் சில ஆழமான வெறுப்பு நோய்க் கூறுகள் உறைந்திருக்கின்றன. அதிலே வெளிநாட்டவர் மீதான வெறுப்பு நோயும் ஒன்று.

சோமவன்சர் அனுராதபுரத்தில் பேசிய பொழுது 'யார் எங்கள் எதிரி?" என வினா வெழுப்பித் தானே விடையும் தந்தார். முதலில் நோர்வே பிறகு பிரசல்ஸ் (ஐரோப்பிய ஒன்றியம்), வோசிங்டன், ரோக்கியோ, மேற்கு ஐரோப்பிய நாடுகள். இவர்கள் எங்களுக்கெதிராக நேரடியாக செயற்படுபவர்கள். ஆனால் இங்கே இன்னொரு பகை மறைந்திருக்கின்றது. அதுதான் புதுதில்லி என்றார்.

எனவே இங்கே விடுபட்டிருக்கின்ற நாடு சீனா மட்டுமே. இங்குள்ள துயரம் அல்லது விபரீதம் என்னவென்றால் ரோக்கியோவோ வோசிங்டனோ, புதுதில்லியோ பெய்ஜிங்கோ ஏதோவொரு விதத்தில் சிங்களத்திற்கு ஒன்றில் நிதியுதவிகளை அல்லது இராணுவ உதவிகளை அல்லது இரண்டையுமே பெருமளவில் வழங்கிவருபவை தான்.

அதேவேளை ஏதோ ஒப்பிற்கு சிங்களத்தின் மனித உரிமை மீறல் எல்லை கடந்துவிட்ட நிலையில் வேறு வழியின்றிக் கடுமையான கண்டனங்களையும் மெலிதான சில தடைகளையுமிட்டு ஏனோதானோவென செயற்படுபவை.

ஆனால் இதனைக் கூட பெய்ஜிங் செய்ய ஆயத்தமாகவில்லை. ஆகவே இவ்வகையில் தான் சீனா வேறுபடுகின்றது. ஆனால் சீனா இங்குதான் என்றில்லை. எங்கும் இதே கதை தான். மியான்மாரில், கென்யாவில், சூடானில் இன்றும் பல நாடுகளில் இதுவே அவர்கள் கதை. என்றாலும் சூடானில் தார்பூர் பகுதி மனித அவலத்தைப் புறந்தள்ளிச் சீனா சூடானுக்கு வழங்கிய உதவி அனைத்து நாடுகளின் கண்டனத்திற்குள்ளாகிச் சீனா சங்கடப்பட்டு, ஏன்? அவமானப்பட்ட நிலையிற் தனது நிலைப்பாடு குறித்து மீளாய்வு செய்யத் தள்ளப்பட்டுள்ளது. எனவே எம் மக்களும் என்றோவொரு நாள் சீனா மட்டுமல்ல ஏனைய நாடுகளும் வரலாற்று நீதியின் முன் தலைகுனிய நேரிடும். இதனால் தத்தம் போக்கினை மாற்ற நேரிடும் என்று திடமாக நம்புகின்றார்கள்.

எனவே இத்தகைய சீனத் தொடர்பு குறித்து சற்று பின்னோக்கிப் பார்த்தால் இன்றைய நிலையைப் புரிய அது உதவிடும். இற்றைவரை சிங்களத்தில் எக்கட்சி ஆண்டாலும் அது எவ்வித கொள்கையைக் கொண்டிருந்தாலும் அது பற்றிச் சீனா அலட்டிக் கொள்ளாமல் உறவு கொள்ள ஆயத்தமாகவே இருந்துள்ளது.

எனினும் இப்பொழுது ஜே.வி.பி.யோடு கூட நெருக்கம் கொள்கின்றது. அது பதவிக்கு வருவதை விரும்புகிறது எனக் கூறப்படுகின்றது. சீனாவோடு தமது உறவு 2000 ஆண்டுகட்கு முற்பட்டதென சிங்களத்தார் பெருமையடித்துக் கொள்கின்றார்கள்.

முதன் முறையாக ஐ.தே.க ஆட்சிக்காலத்தில் தான் சீன உறவிற்கான அடிக்கல் நாட்டப்பட்டது. புதிய நாடாக அப்போது தான் தோற்றம் பெற்ற சீனாவை 1950 களில் சிங்களம் அங்கீகரித்தது.

1952 இல் ஆர் ஆர் உடன்பாடெனப்படும் அரிவி இறப்பர் உடன்பாடு கைச்சாத்தாகியது. 1971 ஆம் ஆண்டு ஜே.வி.பி.யினரின் கிளர்ச்சியின் பொழுது அதனை அடக்க ஆயுதங்களை அள்ளி வழங்கியது. இதை ஜே.வி.பி. மறந்தாலும் வரலாறு மறக்காது. பின் ஜே.ஆர் காலத்தில் 1983 இன் பின் விடுதலைப் போர் முனைப்புப் பெறத் தொடங்கவே. முதன் முறையாக நொறின்கோ (Norinco) எனப்படும் வட சீனத் தொழிற் கூட்டுத்தாபனத்தோடு ஆயுதக் கொள்வனவு உடன்பாடு செய்யப்பட்டது.
அன்று தொட்டு நொறின்கோ இங்கு ஆயுதக் களஞ்சியங்களைப் பேணத் தொடங்கியது. இவ்விராணுவ உதவிகளில் சீனாவால் முதலில் தமக்கு வழங்கப்பட்ட ரி-56 இலகு சுடுகலன் புலிக்கெதிரான தமது போரிடும் ஆற்றலைப் பெருமளவு அதிகரித்ததாகச் சிங்கள இராணுவம் நன்றியோடு கூறிக்கொள்கின்றது.

ருசிய ஏ.கே 47 இன் சீனப் பதிப்பான இச் சுடுகலன் பாரம் குறைந்தது, பயன்படுத்த இலகுவானது. அதுவரை சிங்களம் பிரித்தானிய என்பீல்ட் குழுமத்தின் இரண்டாம் உலகப் போரின் பின்னாகப் பயன்பாட்டிலிருந்த எஸ்.எல்.ஆர் சுடுகலன்களையே பயன்படுத்தி வந்தது.

சிறீமா காலத்தில் 1973 இல் பண்டாரநாயக்கா நினைவு மாநாட்டு மண்டபம், 1980 களில் ஜே.ஆர் காலத்தில் உயர் நீதிமன்ற வளாகக் கட்டடம், இப்பொழுது சீன மக்சிம் வங்கி வழி அம்பாந்தோட்டை துறைமுகம் உட்பட வளர்ச்சித் திட்டங்களுக்கு பாரிய நிதியுதவி Y8,Y12,Y22 வான் கலங்கள் வழங்கியது. அந்தக்காலம் இப்போது (மிக் 29 வான் கலங்களை வாங்க வக்கற்ற சிங்களத்திற்கு) F-7G வான்கலம். இவ்வாறாக சீனா படிப்படியாக சிங்களத்தின் முதன்மை ஆயுத விற்பனையாளராக, கொடையாளராக, பொருண்மிய உதவியாளராகத் தோற்றம் பெற்றுவிட்டது.

அண்மையில் நியூயோர்க் ரைம்ஸ் ஏட்டிற்குத் தான் வழங்கிய செவ்வியில் பாலித கோகண பின்வருமாறு கூறினார். சிறிலங்காவின் பழமையான மரபுவழி கொடையாளரான கனடா, அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் எல்லோருமே இப்போது ஒரு மூலைக்குத் தள்ளப்பட்டுவிட்டார்கள். எமக்கு கீழைத்தேய உதவி குறிப்பாக சீனா போன்றவை அந்த இடத்தைப் பெறுகின்றன. சென்ற வருடத்தில் சீன உதவி ஐந்து மடங்காக, ஏறத்தாழ ஒரு பில்லியன் அமெரிக்க டொலராக அதிகரித்து யப்பானை விட கூடுதல் உதவி வழங்கும் நாடாக சீனா மாறியுள்ளது. இப்பொழுது சீனா எமது நாட்டில் ஒரு புதிய துறைமுகம், நெடுஞ்சாலை, இரு மின்னுற்பத்தி நிலையங்கள் என்பனவற்றை அமைத்துத் தருகின்றது என்றார் அவர்.

எனவே இப்பொழுது சீனக் காதல் புதிய கட்டமொன்றுக்குள் நுழைகின்றது. இதற்கேற்ப ஜே.வி.பி.யினர் செயற்படுவதும் அதற்கு மறைமுகமாக மகிந்தர் ஆதரவு வழங்குவதும் புலப்படும் விடயங்கள். எனவே இப்பொழுது ஒரு புதிய வாய்ப்பாட்டு மாற்றம் ஏற்பட்டு விட்டதாகக் கருதப்படுகின்றது.

20 வருடங்களுக்கு முன் இந்தியாவே இப் பகுதியில் ஒரேயொரு மேலாதிக்க நாடு. ஆனால் இப்பொழுது சீனா தன் நுட்பம் மிகுந்த செயற்பாடுகளால் இந்தியாவின் கொல்லைக்குள் சீனா புகுந்து விட்டது. சிங்கப்பூர் பல்கலைக்கழக சர்வதேச உறவுகளுக்கான பேராசிரியர் ராஜா மோகன் பின்வருமாறு குறிப்பிடுகிறார்; 'சீனா இப்பொழுது இந்திய அயல் நாடுகளில் வீதிகள், துறைமுகங்கள் போன்றவற்றைக் கட்டி அவற்றினைத் தொடர்புபடுத்தித் தொடர்பு வட்டமொன்றை உருவாக்கி வருகின்றது.

இந்து சமுத்திரத்தின் கடற்பாதை அதன் வளங்கள் யாவற்றின் மீதும் சீனா கண் வைத்துள்ளது". மனித உரிமை காப்பு அமைப்பின் தென்னாசிய ஆய்வாளர் மீனாட்சி கங்குலி சொல்கிறார் 'சிறிய நாடுகளெல்லாம் இப்பொழுது சீனா பக்கம் சாய்கின்றன. இதன் மூலம் இந்தியாவின் பிராந்திய நலன் தொடர்பிலான அதன் கொள்கையில் அழுத்தம் கொடுக்கவும் மனித உரிமை விடயத்தில் இந்தியாவை வாயடைக்கவும் இதனை அவர்கள் பயன்படுத்துகிறார்கள்" இப்பொழுது இந்தியா கவலைப்படத் தொடங்கியுள்ளது.

இப்பொழுது இந்தியா தனது வெளியுறவுக் கொள்கை தொடர்பில் இந்தியாவால் ஒரு தெளிவான போக்கினை எப்போதும் வெளிப்படுத்த முடியாமலிருப்பது இப்பொழுது உணரப்படுகின்றது. தனது நலன்கள் அதற்குத் துணைபோகிறவர் என்கிற விடயங்களில் அதன் போக்கு பல தடுமாற்றங்களைக் கொண்டதாகின்றது. இதற்கு எடுத்துக்காட்டாக முதலில் மியான்மார் இப்பொழுது சிறிலங்கா சான்றாவதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

1990 களில் மியான்மாரில் சனநாயகம் மீள வேண்டுமெனக் குரல் கொடுத்த இந்தியா, இப்போது இராணுவ ஆட்சிக் குழுவின் பக்கம் சாய்ந்துள்ளது. இங்கோ இமாலய குத்துக் கரணத்தை அடித்துள்ளது. கோகண தொடர்ந்து தன் செவ்வியில் சொல்கிறார் 'இந்தியாவின் உதவியும் அதிகரிக்கின்றது. இவ்வருடம் 500 மில்லியன் டொலரை ஈட்டும் அனல்மின் நிலையம், கைத்தொழில், பூங்காக்கள், தொலைத் தொடர்புத்துறை போன்ற வற்றில் முதலிட இந்திய நிறுவனங்களை அழைத்துள்ளோம்" காங்கேசன் சீமெந்து ஆலையை மீள இயக்க பிர்லா குழுமம் முயல்வதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்திய நலன்களுக்கு என்றும் தடையாக இருக்கக் கூடாதென்பது தமிழ் மக்கள் நிலைப்பாடு. இதனைப் பயன்படுத்தி தன்மீது அவநம்பிக்கையும் ஐயுறவும் கொண்ட சிங்களத் தரப்பை வழிக்குக் கொண்டு வர இந்தியா முயன்றது. இதனால் தமிழ் மக்கள் நலன்கள் என்பது இந்திய நலன்களுக்கு வாய்ப்பானது என்கின்ற சமன்பாடு சிங்களத்தில் உருவானது. இதுவே சீனா, பாகிஸ்தான் நிலையும் இதன் வழி தமிழ் மக்கள் வாழ்வில் தீ அள்ளிப் போடப்படுகின்றது. ஒரு தொடர்ச்சியான விவேகமிக்க இராசதந்திர வெளியுறவுக் கொள்கையை வகுக்க முடியாமல் இந்தியா தடுமாறுவதால் இந்நிலை. 1970 களிலிருந்து ஒவ்வொரு பத்தாண்டுகளாக வகுத்துப் பார்த்தால் இது புரியும்.

2002 ஆம் ஆண்டு அமைதி முயற்சிகளைக் குழப்ப ஜே.வி.பி, சந்திரிகா போன்றோர் பயன்படுத்தப்பட்டதாகக் கொழும்பில் முன்னர் செய்திகள் அடிபட்டன. ஆனால் சீனா இதனை எவ்விதம் கையாள்கின்றது?. தனது ஸ்ரீலங்காவின் உடைவு என்கிற நூலில் ஏ.யே வில்சன் பின்வருமாறு எழுதியுள் ளார். '1979 இன் இறுதி வாக்கில் தன்னை இரவுணவிற்கு சீனத் தூதர் அழைத்திருந்தார். அங்கு நான் அவரிடம் தமிழர் தனிநாட்டு வேண்டுகை பற்றி சீன நிலைப்பாடென்னவென்பது பற்றிக் கேட்டேன். அதற்கு அவர் தமது ஆபிரிக்க நட்பு நாடுகளுடனும் வளைகுடா எண்ணெய் வள நாடுகளுக்குமான நல்லுறவினை இது பாதிக்கும் சோவியத்தின் இரையாகும் என்றார்".

இதுதான் இன்றைய நிலை, தமிழர் நலன்கள் என்பது இன்று சீனத் தரப்பிற்கும் இந்தியத் தரப்பிற்கும் தமது நலன்களை முன்னெடுக்க ஒரு ஏவுதளம். சர்வதேசத்திற்கும் இங்கு தனது மூக்கை நுழைக்க தமிழர் மீதான மனித உரிமை மீறல் ஒரு வாய்ப்பு. எல்லோர் நலன்களும் தமிழர் நலன்களுக்கு முன்னெடுக்கப்படும் விடுதலைப் போரின் அச்சிலே சூழல்கின்றது. இத்தனை பாதகமான நிலைமைகளுக்கு மத்தியிலும் வீறுடன் நடத்தப்படும் விடுதலைப் போர் உலகின் முதன்மைக் கவனத்திலு முள்ளது. இவையாவையும் வரலாற்றன்னை மிகுந்த அக்கறையுடன் கவனித்துக் கணக்கிலெடுத்து வருகின்றார். இன மானமிகு பொன் கணேசமூர்த்தியின் வரிகளை மீண்டும் நினைவுறுகின்றோம்.

'சலிக்காமல் நடக்கும் சக்தியினை அருளும்
செல்லும் வழிகளைச் செம்மைப்படுத்தி வையும்
பாய்ச்சல் நிகழ்கையிலே பக்கத்துத் துணையிருந்து
காற்றுச் சங்கூதும்".
நன்றி: விடுதலைப் புலிகள் ஏடு (14.04.08)

Monday, April 14, 2008

சொன்னால் முடியாத சரித்திரமாக... "என்னால் முடியும்" கேணல் சார்ள்ஸ்

2008 ஆம் ஆண்டின் முதல் வார நாட்கள். தீவிர மோதல்களால் மன்னார் களமுனை அதிர்ந்துகொண்டிருந்த காலம். தளபதி பாணு அவர்களைச் சந்திக்க விரும்பியிருந்தேன். மன்னாரில் எமது வழமையான பணிகளுடன், போகுமிடத்தில் பாணுவையும், களநிலவரத்தையும் கண்டு வரலாம் என்ற விருப்புடனான பயணம்.

பயணத்திட்டத்தை முறைப்படி தலைவருக்கு முன்வைக்கும் சந்திப்பு. தலைவரின் புருவம் உயர்கின்றது. 'இப்ப மன்னாருக்கு ஏன் போகவேண்டும்?'நீ இப்போது அங்கு போய் என்ன செய்யப்போகின்றாய்?' தனது வழமையான கேள்விகளுக்கான பதில்களுடன் எமது தயார் நிலையைக் கண்ணுற்ற தலைவர் கூறுகின்றார்.

'மன்னார் களமுனையின் பின்னணியில் எதிரியின் சிறப்பு அணிகள் நிலையெடுத்துள்ளன. பிரதான வீதிகளினூடான பயணம் பாதுகாப்பானதல்ல. இவை எதிரியின் வழமையான நகர்வுகள் என்பதாக எனது கருத்துகளைச் சொல்லி பயணத்திட்டத்தை முன்னெடுக்க முற்பட, தலைவர் தீர்மானமாக கூறுகின்றார். 'அங்கு நிற்கும் பாணு, சொர்ணம் ஆகியோருக்கும் பிரதான வீதி பாதுகாப்பானதல்ல எனச் சொல்லப்பட்டுள்ளது நீ போக வேண்டாம்.'

எம் மன்னார் பயணத் திட்டத்தை தலைவர் தடுத்து நிறுத்திவிட்ட மறுநாள். அன்றைய மாலைப் பொழுதைப் பரபரப்பாக்கும் வகையில் மன்னாரில் எதிரியின் கிளைமோர் தாக்குதலொன்று நடைபெற்றுவிட்ட செய்தி வந்து சேர்ந்தது.

அண்ணை சொன்ன புலனாய்வுத் தகவல் மிகச் சரியாகவே அமைந்திருந்தமை பற்றிய எண்ண ஓட்டத்துடன் எதிரியின் அத்தாக்குதலிற்கு உள்ளானவர் யார்? கேள்விக்குப் பதிலைத் தேடியபோது நெஞ்சை உலுக்கும் அதிர்ச்சியாகவும், வேதனைமிக்க பேரிடியாகவும் வந்து சேர்ந்தது அந்தச் செய்தி. அந்தத் தாக்குதலில் எங்களின் சாள்ஸ் வீரச்சாவு. படையப்புலனாய்வுப் பொறுப்பாளர், தளபதி சாள்ஸ் வீரச்சாவு.

அன்றைய நாளின் பின் இரவில் சாள்சின் பிரிவின் வேதனையுடன் தனிமையில் இருந்தார் தலைவர் அவர்கள். சாள்சின் வித்துடலுக்கான வீரவணக்கத்திற்கு வரச்சொல்லிக் கேட்க 'அவனைக் கடைசியாகக் கண்ட அந்த முகமே நினைவில் இருக்கட்டும்' என்றதும், 'சாதித்தவன் போய்ச் சேர்ந்துவிட்டான்' என்றதுமே தலைவரின் சுருக்கமான வார்த்தைகளின் சாரம்சமாகும். அதிகம் பேசாது தலைவர் தனது சட்டைப் பையில் இருந்ததை எடுத்துத் தந்தார். அது நாலாக மடிக்கப்பட்ட கணினியில் தட்டச்சுச் செய்யப்பட்ட அறிக்கைத்தாள். மூன்று நாட்களுக்கு முன்னர் சாள்ஸ் அனுப்பியிருந்த புலனாய்வு அறிக்கை அது.

மன்னார் களமுனையின் பின்னணிச் சாலையைக் குறிவைத்து, ஊடுருவித் தாக்குதல் செய்ய எதிரியின் அணிகள் நிலையெடுத்துள்ளமையை, எடுத்து வெளிப்படுத்தி, வலியுறுத்தியிருந்தது. படையப்புலனாய்வின் முக்கிய மூலத்தில் இருந்து கிடைத்த ஆழமான தகவல்களைக் குறிப்பிட்டுத் தயாரிக்கப்பட்டிருந்த தீர்மானமான அறிக்கை அது.

மன்னாருக்கான முதன்மைச் சாலையில் எதிரியின் தாக்குதல் நடைபெறலாம் என்ற கணிப்பை முற்கூட்டியே அறிக்கையாகக் கொடுத்த சாள்ஸ், அதே சாலையில் எதிரியின் கிளைமோர்த் தாக்குதலுக்கு உள்ளாகிவிட்டான். ஆபத்திருப்பது தெரிந்தும் அவ்விடத்தை நோக்கி அவனை பயணிக்க வைத்த சக்தி எது? அது விதியின் கொடிய கரமா?

******

இந்திய இராணுவம் எம் மண்ணை விட்டகன்று அமைதி நிலவிய நாட்கள். பிறேமதாசா அரசும் புலிகளும் பேச்சு நடத்தி வந்த நேரமது. எமது மக்களுக்கு ஏதோ ஒரு நன்மையைச் செய்ய பிறேமதாசா அரசு முன்வருமா? என்ற எண்ணத்தில் அனைவருமே ஆழ்ந்திருந்தனர்.

இந்திய இராணுவத்தினரின் நெருக்கடி மிக்க சுற்றிவளைப்புக் காலத்தில், பிரிந்திருந்த தலைவரின் குடும்பம் ஒன்றாகச் சேர்ந்திருந்த காலமுமதுதான் - அவ்வேளையிற்தான் அவ் அறிக்கை கிடைத்தது - எம்மவர்களால் புறக்கணிக்க முடியாத முக்கியமான அறிக்கை.

அப்போதைய சிறிலங்காவின் பாதுகாப்பு அமைச்சர் றஞ்சன் விஜயரட்ணாவும், பலாலியில் இருந்த சிறிலங்கா புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரியும் இணைந்து செயற்படுத்தும் திட்டத்தின் விபரங்கள் கிடைத்திருந்தன.

அக் காலப்பகுதியில் தலைவர் அவர்களது துணைவியார் மதியக்கா நல்லூர் கோவிலுக்குச் சென்றிருந்ததை உதயன் பத்திரிகை சிறு செய்தியாக வெளியிட்டிருந்தது. அச்செய்தியை அடிப்படையாக வைத்து அமைந்திருந்தது சிறிலங்காவின் திட்டம்; மதியக்காவை பின்தொடர்ந்து கண்காணிப்பதற்கான ஏற்பாடும், அதனைத் தொடர்ந்து தலைவரின் இடத்தைக் கண்டறிவதும், தலைவரைக் கொலை செய்வதுமான திட்டங்களை உள்ளடக்கிய அறிக்கையது.

தென்னிலங்கையில் எழுந்த ஜே.வி.பி கிளர்ச்சியை ஒடுக்கியதன் மூலம் சிறிலங்காவின் அரச இயந்திரம் புத்தூக்கம் பெற்றிருந்த காலமது. எமது விடுதலைப் போரையும் அதே வழியிற் சென்று முடக்கிவிடலாம் என்ற நம்பிக்கையுடன் நகர்வுகளில் இறங்கியிருந்தனர். ஜே.வி.பியை ஒடுக்குவதில் நேரடியாக முன்னின்று செயற்பட்ட பாதுகாப்பு அமைச்சர் றஞ்சன் விஜயரட்ணாவின் மிக நேரடியான வார்த்தைகளில் அமைந்திருந்தது - அவ் அறிக்கையிலிருந்த திட்டம். அறிக்கை துல்லியமானதாக, தெளிவானதாக, இறுக்கமானதாக, இருந்தது. மதியக்கா அவர்களைப் பின்தொடர்ந்து தலைவர் அவர்களது இருப்பிடத்தைக் கண்டறிந்து தலைவரைக் கொன்றுவிட வேண்டும் எனும் நேரடியான கட்டளை என்பதாகவும் அமைந்திருந்தது.

நிலைமை தெளிவாகத் தெரிந்தது. சிங்களம் உண்மையுடன் பேச்சுவார்த்தை நடத்தவில்லை. வஞ்சகத்தின் வழியிற் பேசுகின்றது என்பது தெளிவாகிவிட்டது. கொல்லும்வரை பேசுவோம் - 'கொல்லச் சந்தர்ப்பம் கிடைப்பதற்காகப் பேச்சுவார்த்தை நடத்துவோம்' என்பதாக அமைந்திருந்தது சிங்களத்தின் வியூகம்.

எமக்கு அதுவொரு சவால். சிறிலங்காவின் திட்டம் எமக்குத் தெரியுமென்பது இரகசியமாக வைக்கப்பட்டது.

ஆனாலும் இனிச் செய்வது என்ன? என்ன செய்ய வேண்டுமென்று தெரிந்தது. ஆம் அவர்களின் வழியிலேயே அவர்களுக்கு பதிலளிக்க வேண்டும். அதனை எப்படிச் செய்வது? யார் செய்வது?

அவர்களது தலைநகரத்தில் அவர்கள் முடக்கப்பட வேண்டும். அவர்களது செயற்பாடுகளை கொழும்பிலும் முடக்க எம்மால் முடியுமென்பது நிரூபிக்கப்படவேண்டும்.

தலைவர் தனது வார்த்தைகளில் சொன்னார் 'இதுதான் எமக்கொரு ஆற்றல் மிக்க புலனாய்வு அமைப்பு வேண்டுமென்று சொல்வது. நாமோ... பெயரளவிலேயே புலனாய்வு என்ற பெயர் தரித்திருந்தோம்.

அக் காலப்பகுதியில் நாம் புலனாய்வு ரீதியாக எந்தவொரு அடிப்படையையுமே உருவாக்கியிருக்கவில்லை. சொல்லப்போனால் புலனாய்வு என்ற எண்ணக்கருவை மனதிற் கொண்டிருந்தோம் என்பதற்கு மேலாக புலனாய்வு ரீதியாக நாம் எந்தவொரு கட்டமைப்பையோ அல்லது அதற்கான ஆளணிகளையோ கூடக் கொண்டிருக்காத காலமது. சாள்ஸ் நினைவிற்கு வந்தான்.

1988. யாழ். மாவட்டப் பணிக்காக, மணலாற்றில் இருந்து யாழ். நோக்கிப் பயணம் மேற்கொண்டிருந்தேன். விசுவமடுவில் உள்ள கிராமம் ஒன்றில் ஓய்விற்காக அமர்ந்திருந்தோம். எனது உதவியாளர்களில் ஒருவராய் இருந்த கிளி, சாள்சை எனக்கு அறிமுகப்படுத்தினார். அப்போது சாள்ஸ் கிளிநொச்சி மாவட்டத்திற்குரிய சண்டையணிப் போராளிகளில் ஒருவர். முதலாவது அறிமுகத்திலேயே சாள்சை அடையாளம் கண்டுவிட்டேன். சாள்சின் ஆற்றலை முழுமையாக அடையாளம் கண்டுவிட்டதாகக் கூறினால் அது மிகைப்படுத்தப்பட்ட பொய். கொழும்பிற்குச் சென்று வரக்கூடிய துணிவும், அதற்குப் பொருத்தமாக சிறிலங்கா அரசால் வழங்கப்பட்ட தேசிய அடையாள அட்டையும் கைவசம் வைத்திருக்கும் ஒரு போராளி.

கொழும்பில் சில வேலைகள் செய்ய வேண்டி வரலாம் எனத் தலைவர் அவர்கள் கூறிவிட்டது நினைவிற்கு வர, அன்றே சாள்ஸ் என்வசம் ஆனான். ஆயுதங்கள் களைந்து பொதுமக்களின் உடை தரித்த போராளியானான்.

இந்திய இராணுவம் இங்கிருந்த காலத்திலேயே வேறு வேலையாகச் சென்று கொழும்புடன் ஓரளவு பரீட்சயத்தை ஏற்படுத்தியிருந்த சாள்ஸ் முன்வந்தான். நான் செய்கிறேன். 'என்னால் முடியும் அம்மான்' என்று முன்வந்தான்.

இருபது வயதே நிரம்பிய இளைஞன்; வஞ்சினம் பொங்கும் நெஞ்சினனாய் கொழும்பு நோக்கிப் பயணிக்கின்றான். இன்றும் நினைவில் மாறாத அன்றைய நாள். அதன்பின் யாழ்ப்பாணத்திற்கு வராமலேயே நின்றுவிட்ட அந்தப் புகையிரதம். - யாழ்தேவி புகையிரதம் - சாவகச்சேரி நிலையத்திலிருந்து சாள்சையும் ஏற்றிக் கொழும்பு நோக்கிப் போகின்றது.

புகையிரதம் திரும்ப வரவில்லை. சாள்ஸ் மீண்டு வந்தான். வெற்றி வீரனாக, தேசத்தை நோக்கி உலகைத் திரும்பிப் பார்க்கவைத்த சாதனையாளனாகத் திரும்பி வந்தான்.

********

1990 கொழும்பில் சாள்ஸ்; அவனோ மிகவும் இளவயது இளைஞன்; கொழும்பிலோ சரியான தொடர்புகள் இல்லை. இலக்கற்ற வகையில் அலைச்சல், கொழும்பு சிங்களக் கொழும்பாக இருக்க அந்தக் கொழும்புக்குள் கால் பதிக்க முடியாமல் தனி இளைஞனாக அலைந்து திரிந்தான்.

ஆரம்பத்தில் அவனது கொழும்புப் பயணமும் கூட எல்லாம் நல்லபடியாக அமைந்துவிடவில்லை. அவனது ஆரம்பப் பயணத்திலேயே வழித்துணையாக புகையிரதம் ஏறிச்சென்ற மனிதன் கொழும்பு புகையிரத நிலையத் திலேயே தனியாக இறங்கி, மெதுவாகக் கழன்றுவிட தனித்துநின்று, பின் ஆசுவாசப்படுத்தி தெரிந்த ஓரிடத்தில் நிலைபெற்று தொடங்கியதுதான் அவனது செயற்பாடு.

உள்ளுரில் முன்னரே அறிமுகமாகியிருந்த துரோகி - நல்லவேளையாக துரோகி என்று முன்னரே அடையாளம் தெரிந்த துரோகி - கண்டுவிட்டுப் பின்தொடர சுழித்துத் தப்பியோடினான் சாள்ஸ். துரோகியானவன் தொடர்ந்து முயற்சித்தும் முடியாமற் போகும் வரை சுழித்து விட்டு, ஓடித்தப்பி மூச்சுவிட்டு முன்னேறித்தப்பியிருந்தான் சாள்ஸ். ஆனாலும் கொழும்பை விட்டுவிட்டு வர முடியாதபடி கடமை முதன்மையானது.

சாள்ஸ் மறைமுகச் செயற்பாட்டாளனாய் களத்தில் நின்ற காலத்தில் அவனுக்கு அதிர்ஷ்டம் என்று கூறப்படும் ஆகூழ் உம் கொஞ்சம் உதவி செய்யாமல் இல்லை. இந்திய இராணுவம் இருந்த காலத்தில், பயணத்தில் கட்டாய ஆட்சேர்ப்பிற்கு என்று கூறி ஈ.என்.டி.எல்.எஃப். ஆல் ஒருமுறையும், பின்னர் கொழும்பிற்குப் போகையில் வவுனியாவில் வைத்து புளொட் ஆல் இன்னொரு தடவையும், கொழும்பு விமான நிலையத்தில் சிறிலங்கா புலனாய்வாளர்களினால் மீண்டும் ஒரு தடவையுமாக கைதாகிப்போன அனுபவமும் பெற்றிருந்தான்.

அவனது உரையாடற்திறனும், சொன்ன மறைப்புக் கதைகளும் அவனது ஆகூழ் உம் ஒன்றாய் இணைந்து அவனை விடுவித்தன. அவனது உதவியாளர்கள் எல்லோரும் உத்தமமானவர்களாகவும் அமைந்து விடவில்லை. முதலாளி ஒருவர் யாழ்ப்பாணத்தில் பெருமளவு வாக்குறுதிகள் தந்து சென்றவர். முதலாளி இங்கு நிற்கும் போது அவரைச் சந்திக்க இரவிரவாக, இரகசியமாக தொண்டமனாறு மற்றும் அச்சுவேலி நோக்கிப் போவோம். கொழும்பில் எல்லாம் செய்யலாம், வெல்லலாம் என்று அந்தமாதிரி வாக்குறுதி வழங்கினார் மனிசன்: நடவடிக்கைக்குத் தேவையான தவிர்க்க முடியாத உதவியைக்கேட்டு அவரது கடைவாசலில் தவமிருப்பான் சாள்ஸ்.

சந்திக்கும் வேளைகளில் மாலை அல்லது நாளை வாருங்கள் என்று சொன்னவர், நாளாக நாளாகச் சந்திப்பதையே தவிர்த்து காய்வெட்டித் திரியத் தொடங்கினார். நம்பிக்கை இழந்தாலும் வேறு வழியில்லாமல் கடைவாசலில் போய்க் குந்தியிருப்பான் இவன். தினமும் இவன் காத்திருப்பதைக் கண்ட பக்கத்துக்கடை முஸ்லீம் ஐயா, 'இவனை நம்பி மினக்கெடாதீர்கள், அவன் சரியான சுத்துமாத்துப் பேர்வழி" என்று சொல்ல இறுதியாய் நம்பிக்கையிழந்து சோர்ந்துபோய் நின்றான்.

பணம் பறிப்பதிலேயே குறியாக இருக்கும் இன்னும் சில உதவியாளர்கள்; 300 ரூபா பொருளை 3000 ரூபா விலை சொல்லி பணம் கேட்கும்போது எல்லாம் தெரிந்தும் தெரியாததுபோல் பணத்தை எடுத்து கொடுப்பான் சாள்ஸ்; பணம் கேட்பவருக்குச் சிங்களக் காவற்ருறை, இராணுவத்தினரின் தொடர்பு உள்ளது சாள்சிற்குத் தெரியும். தனது பாதுகாப்பான செயற்பாட்டுத் தேவைக்கு அவரது நட்பு அவசியம் என்று உணர்ந்ததால் அதற்குக் கொடுக்கும்விலை அந்தப் பணமென்பது சாள்;சினது கருத்து. ஆனால் பாவம் அந்த உதவியாளரோ வலு கெட்டித்தனமாக சாள்சை ஏமாற்றி அந்தப் பணத்தைப் பெற்றுக்கொள்வதான நினைப்பு அவருக்குள்.

கொஞ்சம் கொஞ்சமாய் சாள்சிற்கு இடமும், ஆட்களும் பிடிபட இரகசியச் செயற்பாட்டில் முதிர்ந்தவனாகி விட்டான். யாழ்ப்பாணத்திலும், வன்னியிலும் இருந்த அவனது தோழர்கள் தொடர்புகளை தொட்டெடுத்துக் கொடுக்க இடங்களும் ஆட்களும் நெளிவு சுழிவுகளும் கொஞ்சம் கொஞ்சமாக பிடிபட கொழும்பில் அகலச் சிறகு விரிக்கத் தொடங்கிவிட்டான் சாள்ஸ்.

கொழும்புத் தெருவெங்கும், அங்குள்ள ஒழுங்கையெங்கும், சிங்களத்துச் சேரிப்புறமெங்கும் சடசடத்து, சீறிப்பறக்கும் அவனது உந்துருளி. வீதிக்காவலர் மறிக்க நின்று கதைசொல்வதும் நிற்காமல் இழுத்து ஓடி மறைவதுமாக மாறி மாறி நடக்கும் அவனது பயணங்கள்.

கொழும்பில் நின்ற சாள்சிற்கான முகவர் ஒழுங்கு, பொருள் வழங்கல் என பின்னணிப் பணிகளைக் கவனித்தான் சுருளி. தாக்குதலிற்கான வெடிமருந்து இணைப்பை பரிசீலிக்கும் வேளையில் தவறு நடந்துவிட வெடிவிபத்தில் சுருளி வீரச்சாவு. மேஜர் சுருளியின் வீரச்சாவால் மனம் சோர்ந்து போனாலும், பணி சோராமல் விட்ட இடத்தில் இருந்து தொடர்ந்தார் மாதவன் மாஸ்ரர்.

கீதனின் அறிமுகத்தில் மாதவன் மாஸ்ரர் நகர்த்திய நற்குணத்தாரும், விடுதலைப் புலிகள் ரவி அறிமுகப்படுத்திய வரதனும் சாள்சுடன் இணைந்துகொள்ள இருள் விலகி நம்பிக்கை ஒளிக்கீற்று தென்படத் தொடங்கியது.

'வரதன்' சாள்சிற்குக் கிடைத்த அரிய துணை. நடவடிக்கை நகர்வின் தடைகளைப் புரட்டி ஓரம்தள்ளி பாதை அமைத்துக்கொடுத்த துணையானான். முன்பு வேறொரு பின்னணியில் கொழும்புப் பரீட்சயமும், ஆளணி அறிமுகமும் கொண்ட வரதனின் புதிய வேகத்துடன் காரியங்கள் முன்னகர்ந்தன.

அதைவிட சாள்சின் தனித்த முயற்சியாலும் கணிசமான வெற்றி; இலக்கு அடையாளம் காணப்பட்டு விட்டது. அதுவும் துல்லியமாய்; இனித் திட்டமிட வேண்டியதும் செயற்படுத்த வேண்டியதும்தான் பாக்கி.

திட்டமிடல்கள்..., நகர்வுகள்..., கரும்புலிகள்..., பயிற்சிகள்;..., என்று புலனாய்வுச் சக்கரமும் - செயற்திட்டத்திற்கான சக்கரமும்- முன்னோக்கி நகர்ந்தன. நடவடிக்கையாளர்கள், மற்றும் கரும்புலிகள் சென்றனர்.

எங்களுக்கும் அது பட்டறிவுக்குறைவான காலம். நடவடிக்கைக்கென தெரிவு செய்யப்பட்ட ஆள் சறுக்கிப் பின்வாங்கிவிட, குழப்பமான நிலைமை. முன்னோக்கிய நகர்வு கீழிறங்கிவிட்ட நிலைவரம். புதிய கரும்புலிக்கு அவசர அவசரமாக பயிற்சியும், தேவையான நகர்வுகளுமாக திட்டம் முன்னகர்ந்தது. புதிய ஏற்பாடுகளுடன் விட்ட இடத்திலிருந்து மீண்டும் தொடங்கிய முயற்சியில், கிடைத்தது வெற்றி! அந்த அரிய வெற்றி! அதிர்ந்த துணையைச் சமமாய் மதித்து, வாழ்வையும் பொறுப்பையும் பகிர்ந்துகொள்ளும் நல்ல குடும்பத்தலைவனாயிருந்தான்.

வாழ்க்கைத்துணை மருத்துவக் கல்விக்காய் தூர இடம் சென்றிருந்த வேளையில் பல மாதங்களாக குழந்தையைப் பராமரிக்கும் நல்ல தந்தையாக, மிக நல்ல கணவனாக விளங்கினான். பணியால் இல்வாழ்விற்கும், வாழ்வினால் பணிக்கும் இடையூறின்றி இனிதாய் நகர்ந்தது அவனது வாழ்வு.

******

புலனாய்வுத் தளத்தில் சாள்ஸ் ஒரு பொறுப்பாளர். எமது துறையின் வெளிக்களப் புலனாய்வின் ஒரு பகுதிப் பொறுப்பாளனாய்ச் செயற்படத் தொடங்கிவிட்டான். கொழும்பில் பெற்ற வெற்றிகள் தந்த அனுபவமும், தலைவர் மற்றும் பொறுப்பாளர்கள் தந்த ஊக்கமும் அவனது செயற்பாட்டில் துணைநின்றன.

உறுப்பினர்களைப் பயிற்றுவித்தல், மற்றும் எதிரிப் பிரதேசத்தில் தளங்களை உருவாக்குதல் என்ற வகையில் ஆரம்பித்தது சாள்சின் ஆரம்பகாலப் புலனாய்வுப் பணிகள்.

கொழும்பு

கொழும்பை உலகெல்லாம் திரும்பிப் பார்க்க மகிழ்ச்சிக் கடலில் மிதந்தது தமிழர் தேசம். விடுதலைப் போராட்டத்திற்கு ஆப்புவைக்க முற்பட்ட சிங்களத்தின் கொழும்பில், அவர்களது தலைநகர் கொழும்பில் வைக்கப்பட்டது வெடி, அவர்களுக்கு அது மரண அடி.

'வீழ்ந்தான் எதிரி, - வென்றான் சாள்ஸ்' என்று இங்கு அவனது தோழர்கள் ஆளையாள் கட்டித்தழுவிக் கொண்டாடி மகிழ்ந்தது தனிக் கதை.

வெற்றி தந்த மகிழ்ச்சியில், வெற்றி தந்த ஊக்கத்தில் அடுத்தடுத்த நகர்வுகள். சாள்சின் எண்ணத்திற்கு ஈடுகொடுக்க வரதனின் ஏற்பாட்டில் குவேந்தி, ரவியர், இந்திராக்கா என நல்ல பொருத்தமான உதவியாளர் வட்டம் அமைந்து விட்டது. சாள்சின் வேகத்திற்கு ஈடுகொடுக்கும் வகையில் தளத்தில் இருந்த ஏற்பாடுகளும் அந்த மாதிரி அமைந்துவிட 'அடுத்ததும் கிடைத்தது அற்புதமான வெற்றி'.

முதலாவது சம்பவத்தைப்போல் இம்முறையும் நடவடிக்கையாளர்கள் சறுக்கிப் பின்வாங்கிவிட்ட நிலை. முன்னைய அனுபவம் தந்த பாடத்தால் அகிலாவின் ஏற்பாட்டில் முன்கூட்டியே நகர்ந்து காத்திருந்த இரண்டாவது கரும்புலி சந்திரன் முன்வந்தான். 'மனிசனாய்ப் பிறந்தவனுக்கு கொஞ்சமாவது ரோசம் இருக்கவேணும்' என்று சொல்லி சந்திரன் முன்வர தாமதமில்லாமலேயே உடனடியாக நகர்ந்தது திட்டம். தேர்ச்சி பெறாத கரும்புலிச் சாரதியான சந்திரனை அருகிருத்தி வெடிமருந்து வாகனத்தை ஓட்டிச்சென்றான் குவேந்தி. குவேந்தியை அழைத்துவரப் பின்தொடர்ந்து சென்றது சாள்சின் உந்துருளி. இம்முறை சிறிலங்கா கூட்டுப்படைத் தலைமையகம் தகர்ந்தழிந்தது.

கூட்டுப்படைத் தலைமையகத்தின் வெற்றி. எல்லோரும் வெற்றி தந்த மகிழ்வில் திளைத்திருக்க, இந்தமுறை சறுக்கியது எங்களுக்கு. 'ஆயிரம் கிலோ வெடிமருந்துடன் வெடிக்கும் வாகனத்தில் தடயம் எங்கே மிஞ்சப்போகின்றது' என நாம் நினைத்ததற்கு மாறாக எம் கரும்புலியின் வாகனத்தின் - இலக்கத்தகடு - 'முழுத்தடயமாய்க் கிடைத்தது எதிரிக்கு'. வரதன் தேடப்பட வந்தது சிக்கல். மறைப்பிடங்கள் அடையாளம் காணப்பட்டன. இந்திராக்கா மட்டத்தில் கொஞ்சப்பேர் கைதாக, கூட்டுப்படைத் தலைமையக கரும்புலி நினைவாக போராளிப் பெயராய் சந்திரனின் பெயரை தனக்குச்சூட்டிய அப்போதைய குவேந்தியை 'தப்பிப்போ' என்று அனுப்பிவிட்டு வரதன் சயனைற் அருந்தி வீரச்சாவு. புலனாய்வுச் சக்கரத்தின் மறுபக்கம், வீரச்சாவுகள்..., கைதுகள்..., சித்திரவதைகள்..., என துயரமும் வலியும் கலந்த வேதனையான மறுபக்கம். - குழம்பியது கட்டமைப்பு.

******

இளவயதுச் சாள்ஸ், நான்கு சகோதரர்களைக்கொண்ட ஐந்தாவது கடைசிச் செல்லப்பிள்ளை. ஓரளவு வளர்ந்து பெரியவனாகும் வரையிலும் அம்மாவின் உடையைப் பற்றிப் பின்தொடர்ந்து செல்லும் செல்லம். குடும்பத்தில் மற்றவர்களைப் போலவே படிப்பில் படுசுட்டி ஆனால் மற்றவர்களைப்போல்; படிப்பிற்கென நேரம் ஒதுக்கி மினக்கெடமாட்டான். செல்ல மகன் படிப்பில் பின்தங்கிவிடுவானோ என்று அம்மாவிற்குப் பயம்.

வயது ஏற ஏற எல்லாவற்றையும் அம்மாவிடம் கேட்டுச் செய்வது குறையத் தொடங்கிவிட்டது. அந்தக் காலத்தில் அவனது சொந்த இடமான பருத்தித்துறை இராணுவ முகாம் வடபகுதியின் பெரிய இராணுவ முகாம்களில் ஒன்று. முற்றுகைக்கு உள்ளான நிலையில் முகாமைச் சுற்றி புலிகளுடன் காவல் நின்றனர் ஊரில் உள்ள இளைஞர்கள். தனது பாடசாலைப் பருவத்தின் இளைய காலத்திலேயே இராணுவ முகாம் காவலரண் இளைஞர் அணியுடன் தொடர்பு ஏற்பட, படிப்புப் பாழாகின்றதே என்று அம்மாவிற்கு படபடப்பு. படிப்பிற்கென்று நேரம் ஒதுக்கி மினக்கெடுவது கிட்டத்தட்ட நின்றே போய்விட்டது. 'நீ இப்படியிருந்தால் அக்காமார் உத்தியோகத்திற்குப் போக நீ அவர்களுக்கு ரைவராகத்தான் போகப் போகின்றாய்' என அம்மா செல்லமும் கண்டிப்புமாய் பகிடி பண்ணுவா. அவனது க.பொ.த சாதாரணதரப் பரீட்சையில் நல்ல பெறுபேறு வந்தபோது குடும்பத்தில் எல்லோருக்கும் பெருமைதான். அம்மாவிற்கு மட்டும் 'இன்னும் கொஞ்சம் கவனம் எடுத்திருந்தால்' என்ற வழமையான ஆதங்கம். க.பொ.த சாதாரண தரப் பரீட்சை முடிந்து ஒரு வாரம்கூட ஆகியிருக்கவில்லை. 'குஞ்சு கூட்டைவிட்டுப் பறந்து விட்டது.' ஆம் சாள்ஸ் இயக்கத்தில் இணைந்துவிட்டான்.

சாள்ஸ்சின் தமையனார் தனது காலத்தில் 1980களில் இயக்கத்தில் இணையவென பாடசாலை நண்பனான ஜொனியுடன் சேர்ந்து பெயர் கொடுத்திருந்ததும், அம்மாவிற்குச் சொல்லாமல் போக மனமில்லாமல் கடைசியாய் ஒருமுறை அம்மாவிடம் சொல்லிவிடடுப் போக வந்ததும், அம்மா எல்லா அம்மாமாரையும்போல அழுது மன்றாடி மகனை மறித்ததுமான நிலை சாள்சிற்கு வரவில்லை. பதினைந்து, இருபது ஆண்டுகள் கழிந்த பின்னரும் தமையனை நக்கலடிப்பான். 'இயக்கத்திற்கு போறதுக்கும் அம்மாட்டைச் சொல்லிவிட்டுப் போகவந்த ஆளிவர்' என்று.

குடும்பத்தினருடன் இவனுக்கான உறவு அதுவொரு அப+ர்வமான உறவுநிலைப் பிணைப்பு. தந்தை, தாய், மகன், உறவுநிலைக்கு அப்பால் குடும்பத்தில் உள்ள அனைவரும் சாள்சின் ஆளமை வீச்சுக்குள் கட்டுப்பட்டிருந்தனர்.

இன்னும் சொல்வதானால் இவனொரு பெரிய பொறுப்பாளராகவும், அம்மா, அப்பா மற்றும் இவனது மூத்த சகோதரர்கள் அனைவரும் இயக்கத்தில் அப்போதுதான் சேர்ந்த புதிய போராளிகள் போல் ஓடுப்பட்டும், கட்டுப்பட்டும் நடப்பதைப் பார்க்க எங்களுக்கு வியப்பும், சிரிப்புமாய் இருக்கும்.

வளர்ந்து பெரியவனாகி, இயக்க முதிர்ச்சியும் சேர்ந்துவிட, சாள்ஸ் குடும்பத்தின் தலைமகனாய் ஆகிவிட்டான். குடும்பத்தினர் எல்லோரும் எதற்காகவும் அவனது ஆலோசனையைப் பெறுவது என்ற நிலைவந்து விட்டது. சாள்ஸ் தனது பெற்றோருடன், சகோதரர்களுடன் பழகுவதைப் பார்க்க அலாதியாய் இருக்கும். பெற்றோர், சகோதர உறவு என்ற நிலை அல்லாது நல்ல சினேகித வட்டம் ஒன்று ஒன்றாய்க் கூடியிருந்து பம்பலடிப்பது போலிருக்கும்.

சாள்சின் பணிகளில் இணைந்தும் சேர்ந்தும் அவனது பெற்றோர் குடும்பத்தினர் ஆற்றிய விடுதலைப் பணியும் பங்களிப்பும் இன்னொரு பக்க வரலாறாய் விரியும்.... சாள்சின் நண்பர்கள் அனைவரையும் தம் பிள்ளைகளாய், சகோதரராய் கொண்டாடி இன்பத்திலும் துன்பத்திலும் கூடி வாழ்ந்திருந்த குடும்பமது.

எம்முடன் ஒன்றாயிருந்து வீரச்சாவடைந்த எம் தோழர்கள் நினைவாக நாம் அமைதியாய் உணர்வின் மௌனமாய் இருக்கும் நாள், இயல்பில் சாள்சின் பிறந்த நாளாயும் அமைந்தது. சாள்சின் பிறந்த நாளும் எம்மோடு அமைதியாய்க் கழியும். பிறந்த நாளன்று பிள்ளைக்கு உணவூட்டி மகிழ நினைக்கும் தாயின், குடும்பத்தின் உணர்வுகளும்கூட எம் நிலை கருதி இன்னொருநாளாய் அமையும்.

******

விடுதலைப் போராட்டப் பற்றுணர்வை எந்தவொரு கட்டத்திலும் எதற்காகவும் விட்டுக்கொடுக்காமல் வாழ்ந்தவன் சாள்ஸ். அவனது இள வயதுக்காதலி, உறவு முறைச் சொந்தக்காரியும்தான். இயக்க முகாமில் போராளிகளிடையே நடந்த சாதாரண விவாதம் ஒன்றில், போராளிகள் போராளிகளையே திருமணம் செய்தல் சிறந்ததாக இருக்கும் என்ற கருத்து முன்வைக்கப்பட, அக்கருத்தின் தாக்கத்துடன் சாள்ஸ் தன் காதலியிடம் சென்றான். அப்பெண்ணைப் போராளியாக்கும் முயற்சியில் சாள்சும், சாள்சை போராட்டத்தில் இருந்;து விலத்தி எடுக்கும் முயற்சியில் அப்பெண்ணுமாக உரையாடல் நடந்தது. அங்கு காதல் தோற்றது. இல்லையில்லை... சாள்சின் போராட்டப்பற்று வென்றது. காதற் பயணம் நின்றது. சாள்ஸ்சின் விடுதலைப் பயணம் தொடர்ந்தது.

அதன்பின் அவன் கடமைக்குள்ளேயே ஆழமாய் மூழ்கிவிட்டான். குறித்த காலம் வரை தனிப்பட்ட தனது வாழ்க்கையைப்பற்றிக் கவலைப்படவோ, காதலிக்கவோ நேரமிருக்கவில்லை அவனுக்கு.

காலம் ஓடியது. மட்டக்களப்பு சென்றுவந்து வெற்றிகரமான நடவடிக்கையாளன் என்ற வகையில் அவனது பரிமாணம் வளர்ந்திருந்த வேளையில், அவனது திருமணம் கனிந்தது.

முன்னைய அனுபவத்தாலோ அல்லது தொடர்ச்சியான பணிசார்ந்து அவனுள் உருவாக்கியிருந்த இயல்பினாலோ என்னவோ பேச்சுத்திருமணம் என்றே நின்று கொண்டான். மருத்துவப் போராளியை மனையாட்டியாய்க் கொண்டு இனிதான வாழ்க்கையில் அழகான மூன்று பிள்ளைகள். துணையைச் சமமாய் மதித்து, வாழ்வையும் பொறுப்பையும் பகிர்ந்துகொள்ளும் நல்ல குடும்பத்தலைவனாயிருந்தான்.

வாழ்க்கைத்துணை மருத்துவக் கல்விக்காய் தூர இடம் சென்றிருந்த வேளையில் பல மாதங்களாக குழந்தையைப் பராமரிக்கும் நல்ல தந்தையாக, மிக நல்ல கணவனாக விளங்கினான். பணியால் இல்வாழ்விற்கும், வாழ்வினால் பணிக்கும் இடையூறின்றி இனிதாய் நகர்ந்தது அவனது வாழ்வு.

******

புலனாய்வுத் தளத்தில் சாள்ஸ் ஒரு பொறுப்பாளர். எமது துறையின் வெளிக்களப் புலனாய்வின் ஒருபகுதிப் பொறுப்பாளனாய்ச் செயற்படத் தொடங்கிவிட்டான். கொழும்பில் பெற்ற வெற்றிகள் தந்த அனுபவமும், தலைவர் மற்றும் பொறுப்பாளர்கள் தந்த ஊக்கமும் அவனது செயற்பாட்டில் துணை நின்றன.

உறுப்பினர்களைப் பயிற்றுவித்தல், மற்றும் எதிரிப் பிரதேசத்தில் தளங்களை உருவாக்குதல் என்ற வகையில் ஆரம்பித்தது சாள்சின் ஆரம்பகாலப் புலனாய்வுப் பணிகள். கொழும்பு அதிகார வர்க்கமும் எமது செயற்பாடுகளைத் தடுப்பதற்கான முறியடிப்புப் புலனாய்வு அமைப்பும் முன்புபோல் இல்லை. அவர்களது செயற்பாடுகளும் விரிவடைந்து செல்லத்தொடங்கிவிட்டது.

எமது செயற்பாட்டாளர்களுக்கு முன்புபோல் அல்லாமல் இப்போது தீவிரமான பயிற்சியும் பெருமளவான அறிவுறுத்தல்களும் தேவைப்படுகின்ற நிலைமை. பயிற்சிகள்..., புலனாய்வு வகுப்புகள்..., புதிய தந்திரோபாயங்கள்... என்று சாள்சின் ஆளுமை விரிந்து சென்றது.

கரும்புலி நடவடிக்கையாளர்களையும், உறுப்பினர்களையும் பயிற்றுவிப்பதிலும், பழகி ஊக்குவிப்பதிலும் சாள்சின் தனித்துவம் சக பொறுப்பாளர்கள் அனைவருக்கும் ஒரு பாடமாய் இருக்கும். பம்பலடித்து விளையாடியும், கண்டித்து அறிவுறுத்தியும் உறுப்பினர்களைப் பயிற்றுவிப்பான்.

விளையாட்டு மைதானத்திலும் உடற்பயிற்சிக் கூடத்திலும் அவர்களுடன் கூடி ஒன்றாய்ப்பழகி அவர்களை வென்றெடுப்பான்.

சாள்சின் பிரதான பயிற்சி ஆசிரியர் பிறேம்நாத் இன் பயிற்சி மைதானங்களிலும், சூட்டுக் களங்களிலுமாக கழியும் அவனது பொழுதுகள். அப் பொழுதுகளிலேயே கரும்புலிகளுடனான உறவும், மதிப்பீடுமாய் அவனது வேலை நகர்ந்திருக்கும்.

நீந்தத் தெரியாத ஒருவருக்கு இடுப்பில் கயிறு கட்டிக் கடலில் இறக்கி விடுவதாகட்டும், இளைய போராளிகளுடன் உடற்தகைமையிலும், ஆயுதத்திறனிலும் போட்டி போடுவதிலாகட்டும், ஒன்றாய் கூடி உண்டு மகிழ்வதிலாகட்டும் அவர்களுடன் பழகி அவர்களுடனேயே ஒன்றித்து விடுவான் சாள்ஸ்.

இராணுவத் திட்டமிடலிலும் கூட அவர்களது நிலையறிந்து, தகைமையறிந்து, திட்டம் வகுப்பதிலும், ஆயுத வெடிபொருளைத் தெரிவு செய்வதிலும், மொத்தமாய்க் கவனமெடுப்பான் சாள்ஸ். குறித்த ஆயுதத்தை, குறித்த முறையில், குறித்த போராளி இயக்குவானா? என்று பார்ப்பானே அல்லாமல் பொதுவான ஆயுதம் ஒன்றையெடுத்து ஆட்களிடம் கொடுத்தனுப்பி விடமாட்டான்.

அது - அதனால் - அவனுக்குப் பொருத்தம் - என்பதாய் அமையும் சாள்சின் திட்டமும் பொருட்களும். அதற்கேற்ப இருந்திருக்கும் போராளிகளுடனான அவனது பழக்கமும் மதிப்பீடும்.

சாள்சுடன் ஒன்றாயிருந்து, ஒன்றாய்ப் பயணித்து, அவனுடனேயே வீரச்சாவடைந்துவிட்ட லெப். காவலன், லெப். சுகந்தன், லெப். வீரமறவன் ஆகியோரை நான் தனிப்பட்ட முறையில் அறிந்திருக்கவில்லை. ஆனாலும் அவர்கள் அறிவும், ஆற்றலும் கொண்ட எதிர்காலச் சாதனையாளர்களாய் இருந்திருப்பர். ஏனெனில், சாள்சின் தெரிவு அப்படி இருந்திருக்கும்.

1997. நாம் யாழ்ப்பாணத்தில் இருந்து பின்வாங்கி வன்னியில் தளம் அமைத்திருந்த காலம். ஜெயசிக்குறு படைநகர்வையும் எதிரி ஆரம்பித்திருந்தான்.

கொழும்பிற்கான திட்ட நகர்வுகளைச் செய்வதற்கான களச்சூழல் வன்னியில் தடங்கல்களைச் சந்தித்தது. இதேவேளை இந்நகர்வுகளைச் செயற்படுத்தச் சாதகமான களச்சூழல் மட்டக்களப்பில் உருவாகியிருந்த நேரமது. எம்மில் ஒரு பொறுப்பாளர் மட்டக்களப்பிற்குச் சென்று அங்கிருந்து செயற்படுவதென முடிவெடுத்தோம். மட்டக்களப்பு களப்பரீட்சயம் இல்லாத சாள்சை அனுப்ப நாம் தயங்கியபோது 'என்னால் முடியும'| என்று முன்நின்றான் சாள்ஸ். வெளியக வேலைகளிற்காகவும், புலனாய்வுப் பொறுப்பாளனாகவும் சாள்ஸ் மட்டக்களப்பிற்குப் பயணித்தான்.

மட்டக்களப்பில் நிக்சனின் ஆரம்பத் தொடர்புகளில் இருந்து காந்தி உருவாக்கி வைத்த புலனாய்வுக் கட்டமைப்புத் தளத்தில் நின்று சாள்ஸ் செயற்படத் தொடங்கினான்.

மட்டக்களப்பில் இருந்த கள நிலவரத்தை தனது ஆளுமை வீச்சிற்குள் எடுத்துக்கொண்டான் சாள்ஸ். விடுதலைப் புலிகளை முற்றுகைக்குட்படுத்திய பெருமிதத்துடன் நடந்த எதிரியின் இராணுவ நடவடிக்கைகளுக்கு பதிலடியாக சிங்களத்தின் நகரங்களில் வெடித்தன குண்டுகள் ஒன்றல்ல, இரண்டல்ல, தொடர்ச்சியாக் வீழ்ந்தன இலக்குகள்.

காந்தியும் சின்னவனுமாய் கொழும்பையும் மட்டக்களப்பையும் இணைத்ததாய் உருவாக்கிய புலனாய்வுத் தளத்தில் சாள்சின் வெற்றிப்பயணம் நடந்தது. காந்தியால் உருவாக்கப்பட்ட அந்தக் கட்டமைப்பை வெற்றியென்ற மகுடத்தில் ஏற்றி ஒளிர வைத்தது சாள்சின் ஆளுமையும், இராணுவத் திட்டமிடல்களும்.

கரடியனாற்றில் இருந்து பழுகாமம் வரை நேரகாலமின்றி ஓடித்திரியும் அவனது உந்துருளி. இளங்கோ, மதன், அருள்ராஜ், தூயமணி மாஸ்ரர் என அவனது பொறுப்பாளர்களை உசுப்பிவிடும் சாள்ஸ்சின் கேள்விகளும், கட்டளைகளும்; சாள்சின் நேரடி வழிநடத்தலில் மட்டக்களப்பில் புலனாய்வுக் கட்டமைப்பு மெருகுபெற்று வளர்ந்தது. எதிரிகளுக்கும் துரோகிகளுக்கும் தக்க அடி கொடுத்தும் ஊடுருவியும் உருவாக்கியிருந்தான் தனது கட்டமைப்பை.

******

புலனாய்வின் கட்டமைப்புகள், நகர்வுகள் எவ்விதத்தில் நடந்தாலும் வெற்றிகரமான நடவடிக்கையாய் அவற்றைப் பொருத்தி நடாத்தி முடிப்பதுதான் மகுடம். இந்த மகுட வெற்றிமாலையை தொடுத்து முடிப்பதில் சாள்ஸ் ஒரு சமர்த்தன்.

'எல்லாப் பாதைகளும் ரோமுக்கே' என்பதைப்போல் எல்லா வளங்களும் வெற்றியை நோக்கியே திரும்பும். நியூட்டனின் கட்டமைப்பு திட்ட வேவு முடித்து பொருள்நகர்வு வழிதேடிக் காத்திருக்கும். பயிற்சி கொடுத்து அணியைத் தயாராக வைத்திருப்பான் அன்பு. பொருள் நகர்வின் நோக்கமாய் அமைந்த காந்தியின் கட்டமைப்பு தனக்கான பணிமுடிக்கத் தயாராக நின்றிருக்கும். தடை தாண்டி கரும்புலியை இலக்குநோக்கி நகர்த்த வழியொன்றை கைவசமாய் வைத்திருப்பார் கபிலம்மான்.

அனைத்தையும் ஒருங்கிணைத்து நடவடிக்கையை நோக்கி நகர்த்த வேண்டும். என்னமாதிரி? செய்வாயா? என்று கேட்டால் 'என்னால் முடியும்' என்றுகூறி அந்த இடத்தில் பொறுப்பேற்பான் சாள்ஸ். - வேவை, - பொருள் நகர்வை, - ஆளணிப் பயணத்தை, - ஒன்றிணைத்து, ஒருங்கிணைத்து திட்டத்தின் வெற்றிவரை ஓயமாட்டான். தொடர்புபட்ட மற்றையோரை ஓய விடவும் மாட்டான். சொன்னவர் சொன்ன பணியைச் செய்து தரும் வரை மென்மையாகவும், கடுமையாகவும் நின்று அவர்களை அப்பணியைச் செய்விக்கும் ஆற்றல் சாள்சின் தனித்துவம்.

சாள்ஸ் பெற்ற வெற்றிகளும் அவனது ஆளுமை வீச்சுமாக புலனாய்வுத்துறையினுள்ளே அவன் தனித்துவமாய் ஒளிர்ந்தான். அந்த ஒளியை நோக்கி ஆளணி மற்றும் பிற வளங்களும் இணைந்துகொண்டன. புலனாய்வின் முதன்மை வளங்கள் அனைத்தையும் தன்வசம் ஈர்த்து 'என்னால் முடியும்' என்று கூறி வெற்றிக்கான உத்தரவாதத்தை வழங்கும் ஆற்றல் சாள்சிடம் இருந்தது.

நீர்கொழும்பைச் சூழ கட்டமைப்பு உருவாகி வேவு, பொருள் மற்றும் ஆளணி நகர்வு என எல்லாம் பொருந்தி வந்துவிட்ட வேளையிலும் கூட தளத்திலும், புலத்திலுமாக விநாயகத்தின் தோளில் அழுத்திக்கொண்டிருந்தது கட்டுநாயக்கா நடவடிக்கை.

மன்னார் அரிப்பிற்கும், முல்லைத்தீவு- அன்புவின் பயிற்சி முகாமிற்குமாக இராணுவ வேலி தாண்டி மாறிமாறி அலைந்து திரிந்தார் விநாயகத்தார்.

சுற்றிவளைப்புகளில் கூடச்சென்றோர் வீரச்சாவடைகின்ற போதும் வேலைகளைப் பகிர்ந்து கொள்ளாமல் தனியே தானே சுமக்கும் விநாயகத்திற்கு கடிவாளம் போட்டு நட்புடன் கட்டிமேய்க்க பொருத்தமான நேரத்தில் மட்டக்களப்பில் இருந்து சாள்ஸ் வந்து சேர்ந்தான். 'நீங்கள் ஏன் ஓடித்திரிகின்றீர்கள் நான் பார்க்கின்றேன் அம்மான்' என்று தாங்கினான் சாள்ஸ்.

சாள்சின் வேகமான திட்டமிடலும், விநாயகத்துடனான நட்புரிமையான உறவும் சேர்ந்து வேலை முன்நகர்ந்தது.

அந்நேரம் பார்த்து திட்டத்தின் களப் பொறுப்பாளராக விநாயகம் நியமித்த செட்டி வீரச்சாவடைந்தபோதும் கூட, 'என்னால் முடியும் அம்மான்' என்று சாள்ஸ் முன்வந்தான். அவனது பொறுப்பின் கீழிருந்த முத்தப்பன் பொறுப்பேற்க, திட்டம் தொடர்ந்தது.

தலைவர் அவர்களது ஆலோசனைகளுடனான திட்டத்துடன், தூர வீச்சிற்கான கனரக ஆயுதப் பயன்பாடு..., இரவுச் சூட்டிற்கான தந்திரோபாயங்கள்..., பொருத்தமான வெடிமருந்துத் தெரிவுகள்.... என எங்கள் எண்ணங்கள் எல்லாவற்றையும் செயல்வடிவப் பொறுப்பேற்றான் சாள்ஸ்.

சாள்சின் கையாள்கையினால் திட்டம் புதுவேகம் பெற்றது. நடவடிக்கையென்று வந்துவிட்டால் வழமையாகச் செய்வது போல பொருளாதாரம், ஆவணம், தொழில் நுட்பம் என எல்லாக் கட்டமைப்பும் 'எள் என்று கேட்க எண்ணெய் ஆக' கை கொடுக்க நகர்வு வசமானது. தாக்குதல் அணி புது மெருகுபெற்றதும், கட்டுநாயக்காவில் எமது கரும்புலி வீரர்கள் களமாடி வென்றதும் வரலாறு.
******

புலனாய்வின் அடிப்படையான 'இரகசியம் காப்பாற்றுவதில்' புலியாய் இருப்பான் சாள்ஸ். அவன் பெற்ற வெற்றிகள் போலவே அவனது கோபமும் புகழ்பெற்றது. 'ரௌத்திரம் பழகு' என்றார் பாரதியார்; இரகசியப் பாதுகாப்பிலோ புலனாய்வு மற்றும் இராணுவ முன்நகர்விலோ தவறுகள் விடுவோருடன் மென்மையாக நடந்துகொண்டு சமாளித்துப் போக நினைப்பவர்கள் - சாள்சிடம் படித்துக்கொள்ள வேண்டியது இந்த 'ரௌத்திரம்; பழகுதல்.'

இரகசியமான செய்தி ஒன்றை தொலைத்தொடர்புச் சாதனத்தில் பாதுகாப்பில்லாமல் அறிவித்துவிடுவார் யாரோ ஒருவர். உலுக்குகின்ற உலுக்கில் அவர் கொஞ்சம் எரிபொருள் தேவை என்றோ அல்லது மழைவரப்போகின்றது குடை தேவை என்றோ இருக்கக்கூடிய சாதாரண செய்திக்கே பாதுகாப்பான சங்கேதத்தாள் தேடித்தான் திரிவார்.

சிலவேளைகளில் ஒருவரையொருவர் அடையாளம் கண்டிருப்பர் அல்லது அடையாளம் காண வாய்ப்பு அங்கு இருந்திருக்கும். வெடித்துத் துளைப்பான் சாள்ஸ். குறித்த முகாமிற்குப் பொறுப்பாக இருந்தவர் 'பொறுப்பு வேண்டாம் ஆளை' விடு என்பார். அல்லது அடுத்த சந்திப்பு நேரத்தில் அன்னம், தண்ணீர் இல்லாமல் ஆளையாள் காணாதபடி காவல் காத்து நிற்பார்.

சமைக்கும்போது அவ்வப்போது கொஞ்சம் உப் புப்புளி கூடிவிடுவது போல சாள்சின் கோபமும் அவ்வப்போது கொஞ்சம் எல்லை மீறிவிடுவதுமுண்டு.

குறித்த திகதியில் தரப்படவேண்டிய ஏதாவது ஓர் அறிக்கை தரப்படவில்லையா? சம்மந்தப்பட்டவர் யாரென்று பாராமலும், முன்னுள்ளவர் எவரென்று நோக்காமலும் வார்த்தைகள் வெடிக்கும் கோவைகள் பறக்கும். பின்னர் சமாதானம் செய்ய பொட்டம்மான்தான் தேவைப்படுவார்.

தோல்விகளைச் சந்திக்க மறுத்து, வெற்றிகளுக்காக முயன்று முன்நகர்வது சாள்சின் இரத்தத்தில் ஊறிய இயல்பு. சாதாரண நீச்சலிலோ அல்லது பந்து விளையாட்டிலோகூட அவன் தோல்விகளை ஏற்கமறுத்து முயல்வான். இந்த இயல்பே அவனது பல வெற்றிகளுக்கு அடிப்படையானதென்றாலும், நண்பர்களிடையேயும் கூட அவனது பிடிவாதம் வெளிப்பட்டு வெடித்து விடுவதுமுண்டு.

கலந்தாலோசித்து முடிவெடுப்பதற்கும், முன்கூட்டியே முடிவெடுத்து அதனைக் கட்டளையாக வழங்குவதற்கும் இடையேயான தெரிவில் அவ்வப்போது சிக்கல் வரும் சாள்சிற்கு.

1991 இல் கூட்டுப்படைத் தலைமையக நடவடிக்கைக்கு வீடு ஒன்றை எடுத்து வைத்திருந்தார் வரதன். அந்த வீட்டில் யார் யார் தங்குவதென வரதனுடன் ஆலோசிக்காது சாள்ஸ் கட்டளையாக வழங்க வந்தது உறவுச்சிக்கல். அது போலவே, 2001 இல் கட்டுநாயக்கா நடவடிக்கை அணிக்கு பிரதான பொறுப்பாளர் கண்ணனின் கருத்தின்றி இரண்டாவது பொறுப்பாளராக இருந்த கானகனை நீக்கி, முகிலனை நியமிக்க, வந்தது சிக்கல்.

விடுதலையை விரைவுபடுத்த வெற்றியின் தேவை பற்றிய தெளிவூட்டலும், மனிதர்களைவிட நாடு வணங்க வைத்தும் நகரும் திட்டங்கள்.
******

இராணுவ ரீதியான திட்டங்களில் சாள்ஸ் புதிய எண்ணங்களை முதன்மைப் படுத்துவான். வழமையான வழிகளில் அல்லாது வித்தியாசமான வழியில் சிந்தித்து நடைமுறைப்படுத்துதலும் சாள்சின் இயல்பு. அவனது அந்த இயல்பு எமக்குப் பல இடங்களில் வெற்றியைப் பெற்றுக் கொடுத்தது.

கட்டுநாயக்கா திட்டமிடல்; சிறு வேவு அணி விமானத்தளத்திற்குள் வெற்றிகரமாக உள்ளே சென்று வந்துவிட்டது. பெரிய அணியை உள்நகர்த்துவதிலும் பிரச்சினை இருக்காதென்பது உறுதிப்படுத்தப்பட்டு விட்டது. இந்நிலையில் கங்கர் எனப்படும் விமானக்கொட்டகைக்குள்ளும், வெளித்திடலிலும் நிற்கும் விமானங்களை அழிப்பதற்கான சிறந்த வழி எது என்ற விவாதம்; விமானங்களை நெருங்கிச் சென்று நேரக்கணிப்புக் குண்டுகளைப் பொருத்தலாம் என்றும், தவிர்க்கமுடியாத நெருக்கடி நிலை ஏற்பட்டால் உடலில் பொருத்தியிருக்கும் வெடிகுண்டின் மூலமாக விமானத்தை ஒட்டியபடி வெடிக்கவைத்து விமானத்தைத் தகர்க்கலாம் என்றும் கருத்துக் கூறப்பட்டது.

தூரத்தில் இருந்தே விமானங்களை P.K, G.P.M.G மற்றும் R.P.Gகளால் அடிப்பதே பொருத்தமானதாய் இருக்கும் என்பது சாள்ஸ்சின் வாதம். 'என்னால் முடியும். P.K, R.P.G பயிற்சியை என்னிடமே விட்டுவிடுங்கள். என்று நின்றுகொண்டான் சாள்ஸ். நான் சாள்சின் பக்கமே நின்று கொண்டேன். சாள்சின் கருத்தே சரியானது என்பதை கட்டுநாயக்காவின் முடிவு நிரூபித்தது.

'பலமானதொரு பாதுகாப்பிற்குள்ளும் பலவீனமான நிலையிருக்கும்' என்பதை உணர்ந்த முன்னகர்த்தல்கள்; பணிசார்ந்த நகர்வுகளுக்காக தன்னுடன் தொடர்புபடும் மானிடர்களை முடுக்கி, இறுக்கி நகர்த்துவதில் சாள்சின் திறமை வெளிப்படும். ராஜகிரிய வழிநடத்தல் இதனை வெளிப்படுத்தும்.

கண்ணிவெடி ஒன்றை நிலைப்படுத்த ராஜகிரியவில் இடம் பார்த்து அறிவிக்கின்றான் முத்தப்பன். சாள்சின் மூளையில் திட்டம் மாற்றம். அணியொன்று நிலையெடுக்கப் பொருத்தமான இடம் பார்... மறைந்திருக்க வீடு பார்..., என்று பின்னர் சாள்சிடமிருந்து முத்தப்பனுக்கு யோசனைகளும், அழுத்தமான கட்டளைகளும் சென்றன. அது கடினம் என்றும், சாத்தியமில்லை என்றும் முத்தப்பனிடமிருந்து பதில். அப்படியானால் வேறு ஆளை அனுப்பி அதனைப் பார்க்க 'என்னால் முடியும்'. என்று சாள்ஸ் கறாராக, பதில் அனுப்ப, முத்தப்பன் மீண்டும் முயற்சித்தான். சாள்சின் எதிர்பார்ப்பு சரியென்பதை நிரூபித்தன அடுத்து வந்த நாட்களும், வகுக்கப்பட்ட திட்டமும்.

******

சிக்கலான இராணுவத் திட்டத்தில் இக்கட்டான நிலைமைகள் தோன்றும். அவ்வேளையில் பின் விளைவுகள் தொடர்பாக எதிர்மறை எண்ணம் தென்படும்போதும் அவற்றை எதிர்கொள்ளும் துணிவுடன் நேர்மறைச் சிந்தனையை முன்நிறுத்தி திட்டத்தை நகர்த்த ஒரு இரும்பு மனம் வேண்டும். வைரம் பாய்ந்த அந்த இரும்புமனம் சாள்சிற்கு வாய்த்திருந்தது. இது சாள்சின் பல வெற்றிகளின் சூட்சுமம்.

இப்படித்தான் ஒரு சந்தர்ப்பம். 1998. சிறிலங்கா ஜெயசிக்குறு படைகள் கிளிநொச்சியை நெருங்கிவிடலாம் என்ற வகையில் முன்நகர்வில் நின்றன. அதனை ஒரு அரசியல் வெற்றியுமாக்கி சிறிலங்காவின் 50 ஆவது சுதந்திர தினத்தைத் தமிழரை வெற்றிகொண்ட எழுச்சி நாளாக்க கங்கணம் கட்டி நின்றது கண்டிச் சிங்களத்தின் தலைமை.

கண்டிச் சிங்களத்திற்கு பாடம் படிப்பிக்கத் தமிழரை அடிமைகொள்ளும் சிங்களத்தின் அதிகார மையத்திற்கு நல்லதொரு அடி கொடுக்கத் திட்டம் தயாரானது. குறுகிய அவகாசத்தில் குறுகிய நாட்களில் அது சாத்தியமா? என்று நாம் கேட்க 'என்னால் முடியும்' என்ற சாள்சின் பதிலுடன் வேகவேகமாக வகுக்கப்பட்டது திட்டம்.

முழுமையாக பயிற்சிபெற்ற கரும்புலி அணிகூட தயாராக இல்லாத நிலவரம். சாள்சின் நேரடி உதவியாளர்களும், வேறு பணிநிலைக்கு உரியோராகவும் நின்றிருந்த போராளிகளும் ஒன்றாக்கப்பட்டு அவசரக் கரும்புலி அணியும் தயாராகி விட்டது.

திட்டம் உருவம்பெற்று வெடிமருந்து வாகனம் புறப்படச் சில மணிநேர அவகாசமே இருந்த ஒரு பகற்பொழுது. சிறிலங்கா வானொலியில் மதியச் செய்தியறிக்கை சொன்னது 'மட்டக்களப்பில் விடுதலைப் புலிகள் வாகனத்தில் வெடிமருந்து பொருத்துகின்றார்கள்... இப் புலனாய்வுத் தகவலின்படி வாகனத்தைப் பிடிக்க எல்லாப் படை நிலைகளும் உசார்படுத்தப்பட்டுள்ளன'. இது செய்தியின் சாராம்சம். இப்போது இக்கட்டான நிலைமை. செய்தியிற் சொன்னதுபோல் அதே மட்டக்களப்பு பழுகாமத்தில் நின்றே வெடிமருந்து பொருத்திய வாகனத்தில் இறுதிச் சரிபார்த்தலில் ஈடுபட்டிருந்தனர் சாள்சும் அவனது நண்பர்களும்.

எம்மைக் கலங்கடித்துத் எம்மிடம் உள்ள திட்டங்களைக் கைவிடச் செய்யும் பொதுவான தந்திரோபாயமாகவும் இருக்கலாம். அல்லது உண்மையான புலனாய்வு அறிக்கை தவறுதலாக செய்தி நிறுவனத்திற்கு கசிய, அங்கு அது வெளிப்படுத்தப்பட்டு விட்டதாகவும் இருக்கலாம்.

இதே விடயத்தையொட்டிய புலனாய்வு அறிக்கையொன்றும் வேறொரு இரகசியத் தகவல் மூலத்திலிருந்தும் அதே சமநேரத்தில் கிடைத்தது. ஆக எமது திட்டத்தை முன்னறிந்து முறியடிக்க எதிரி தயாராகிவிட்டான் என்பது தெளிவாகிவிட்டது.

இதற்கிடையில் இன்னுமொரு புதிய சிக்கலாக இலக்கு நோக்கி நகர்ந்த கரும்புலிப் போராளியொருவர் எதிரிகளிடம் கைதாகி விட்டார். இலக்குப் பிரதேசத்தில் நடவடிக்கைப் பொறுப்பாளரும், மேற்படி கரும்புலியும் சந்திக்க ஓரிடத்திற்குச் சென்றிருந்தனர். தனது சந்திப்பு நேரத்திற்கு சற்று முன் - பின்னாக குறித்த போராளி கைதானதை தானே நேரில் உறுதிப்படுத்தியதாக நடவடிக்கைப் பொறுப்பாளர், சாள்சிற்கு அறிவிக்கின்றார். கைதானவருக்கு பொறுப்பாளரையும், அணியில் மற்றையோரையும் தெரியும் என்பதும், இலக்கு, திட்டம் என்பனவும் தெரியுமென்பதுமான நிலவரம். நெருக்கடியான ஆபத்தும் நிலவர அழுத்தமும் உச்சத்தில் இருந்த நேரமது.

சாதாரண மனிதர்களுக்கு திட்டத்தை இடைநிறுத்தி, பிற்போட்டுவிட பொருத்தமான நிலவரம். ஆனால் சாள்ஸ் சாதாரணமானவன் அல்ல. அவன் பின் விளைவுகளை எதிர்மறையாக அல்லாது நேர்மறையாக சிந்திக்கும் ஆற்றல் கொண்டவன். விளைவுகளுக்கு அஞ்சாத இரும்பு மனம் கொண்ட மனிதன்.

'அவசர அவசரமாகச் செய்யப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் சிலவற்றுடன்' திட்டம் நகர்ந்தது. எதிரி வானொலியில் கூறிய அதே கிராமத்தில் இருந்து, எதிரி எதிர்பார்த்த அதே பாதையால், அதேநாளில், அதே திட்டம் நகர்ந்தது. - வெற்றி எமதானது.

புலனாய்வின் நீண்டகால இரகசிய நடவடிக்கையாளனும், சாள்சின் அருகிருந்து அவனையுணர்ந்த கரும்புலிகளும் இணைந்த அர்ப்பணிப்பின் வெற்றி; சாள்சின் அயராத உழைப்பிற்கும், அசராத மனத்துணிவிற்கும் கிடைத்த வெற்றி ஆனது. சாள்சின் வழிநடத்தலின் பெறுபேறாய், அவனது ஆளுமையின் அடையாளமாய் ஆனது அந்த வெற்றி!

******

புலனாய்வுத்துறையில் முக்கிய பொறுப்பாளராக விளங்கியவன் சாள்ஸ். நிர்வாக ரீதியாக அல்லாவிட்டாலும் நடைமுறை ரீதியாக எனக்கு அடுத்த பொறுப்புநிலையில் செயற்பட்டு, திட்டங்களை வீச்சுடனும், மூச்சுடனும் முன் நகர்த்தியவன்.

அவன் புலனாய்வுத்துறையில் இருந்து துறை மாறிச் சென்ற நினைவு பாரமாய்க் கனக்கும்.

தனிப்பட்ட உறவுகளுக்கு மேலாக, கட்டமைப்பின் மீதான பொறுப்புணர்வு மேலெழுந்தவேளை அது. எங்கள் நாட்டை சுனாமி தாக்கிய காலத்தில் எங்கள் உறவினுள்ளும் சோகம் சூழ்ந்தது.
சாள்ஸ் தீவிரமான முன் முயல்வின் அடையாளமாய் தலைவர் அவர்களின் மதிப்பைப் பெற்றிருந்தவன். ஒரு இராணுவத் திட்டம் எவ்வாறு வகுக்கப்பட வேண்டும் எனத் தலைவர் அவர்களின் மனதில் உதிக்கும் எண்ணத்திற்குச் செயல்வடிவம் கொடுக்கும் சிந்தனைத் திறனும், செயலூக்கம் கொண்டவனுமாக சாள்ஸ் வளர்ந்திருந்தான்.

தனியானதொரு நிர்வாக அலகை இயக்குவதற்குத் தேவையான ஆற்றலும், அறிவும், திறனும் கொண்டிருந்த சாள்சிற்கு தனியானதொரு பணி வழங்க தலைவர் அவர்கள் முடிவுசெய்தார்.

******

2002. சமாதான காலத்தின் ஒருநாள் கொழும்பில் இருந்து முதலாளி ஒருவர் பெரிய வெற்றிகளைப் பெறலாம், கொஞ்சம் காசுதான் வேண்டும் என்று கூறி வந்திருந்தார். - அவரது மொழியில் கொஞ்சக்காசு. அவர் கேட்ட தொகை மூன்று கோடிரூபா - அவர் வேறு யாருமல்ல 1991 இல் உதவி செய்யலாம் என்று எம்மை இழுத்தடித்து, கொழும்பில் சாள்சை பல தடவை சந்தித்து, அலைக்களித்து ஏமாற்றிய அதே தொண்டமனாற்று முதலாளி. இப்போது கிளிநொச்சியில் தன்னை நேரில் சந்திக்க வந்த சாள்சிடமே சொன்னார். 'என்னைப்பற்றியும், கூட்டுப்படைத் தலைமையக தாக்குதலில் எனது பங்களிப்புப்பற்றியும் அவருக்கு நான் செய்த உதவி பற்றியும் சாள்சிடம் போய்க் கேட்டுப்பாருங்கள்' என்று.

இந்த நகைச்சுவையின் பின்னே மறைந்திருந்தது நாம் சந்தித்த மனிதர்களின் ஏமாற்றுத்தனம் மட்டுமல்ல நீண்ட, நெடிய புலனாய்வு வாழ்வில் சாள்சின் அனுபவமும், வரலாறும்.

*******
தாக்குதல்கள், இராணுவ நடவடிக்கைகள் ஆகியவற்றிற்கு அப்பாலான ஊடுருவல், மனம் மாற்றுதல் சார்ந்த ஆழமான புலனாய்வும், அதன் தளமும் சாள்சிற்கு அந்நியமானதல்ல.

ஆழமான புலனாய்வுத் தளத்தில் செயற்படுவதற்கான அவகாசம் இல்லாதபடி இராணுவ நடவடிக்கை சார்ந்த தொடர்ச்சியான அழுத்தத்திற்குள் சாள்ஸ் ஆழ்ந்திருந்தான் என்பதே இன்னொரு உண்மையாகும்.

'வெட்டொன்று துண்டு இரண்டாய்' பேசும் அவனது இயல்பும், 'உன்னால் முடியுமா? முடியாதா? இப்போதே சொல்லு' என்று உரையாடும் அவனது பாங்கும், இதுபோன்ற ஆழமான புலனாய்வுகளில் அவன் நேரடியாய் இறங்கி நின்று செய்வதில் இடைஞ்சலாய் இருந்ததையும் மறுப்பதற்கில்லைத்தான்.

ஆனால் தனது ஆளுகையின் கீழிருந்த பொறுப்பு நிலைப் புலனாய்வாளர்களுக்கு ஆழமான புலனாய்வு பற்றிய நுட்பங்களை விளங்கவைத்து, நகர்வுகளை திட்டமிட்டு, முன்நகர்த்தி, வெற்றிமிகு பெறுபேற்றை எட்டுவதில் சாள்ஸ் கணிசமாகவே சாதித்திருந்தான்.

எதிரியின் இராணுவத் தலைமையகத்திற்குள்ளும், எதிரியின் புலனாய்வுக் கட்டமைப்பிற்குள்ளும் பயனுள்ள மனிதர்களை கண்டறிந்தோம். அவர்களை மனம்மாற்றி, விடுதலைக்கு வலுச்சேர்க்கும் பெரும் வெற்றிகளை ஈட்டியதில் சாள்சின் வழிநடத்தலும், புலனாய்வின் முன்நகர்த்தல்களும் அவனது புலனாய்வு வரலாற்றின் பொன்னான பக்கங்கள்.

******

புலனாய்வில் வழமையான பணிகளில் உள்ள அழுத்தத்தின் அளவும்கூடக் குறைத்து மதிப்பிடக்கூடியதல்ல என்ற போதிலும், கூட புலனாய்வு நகர்வுகள் நடந்துகொண்டிருக்கும் போது பின்னணி நிலை அழுத்தங்கள் உச்ச நிலையில் இருக்கும்.

எதிரியின் முழுச் சுற்றிவளைப்பிலும், தேர்ந்த கண்காணிப்பாளர்களால் அமைக்கப்பட்ட நெருக்கடிக்குள்ளும், ஆயுதங்கள், வெடிபொருட்களுடனோ அல்லது வேறு திட்டங்களுடனோ நகரவேண்டியிருக்கும். அந்த நகர்வுகளின் நிலைபற்றி இங்கிருந்து சிந்தித்துக்கொண்டிருந்தால் தூக்கம் வருவதே அரிதாக இருக்கும். அதுவும் சில வேளைகளில் குறித்த கரும்புலி உறுப்பினர்கள் நகர வாழ்விற்கு அவ்வளவாக தேர்ச்சிபெறாத கிராமியத் தன்மையுடையவர்களாகவும் இருந்து விட்டாலோ சொல்லவேண்டியதில்லை.

நாம் சந்தித்த அழுத்தங்களை விபரிக்க முற்பட்டால் அவை பெரும் விவரணமாய் நீளும். இவ்வகை அழுத்தம் எப்போதாவது என்பதாக அல்லாமல், எப்போதுமே என்பதாகும்போது அவ் அழுத்தங்களின் தாங்குசக்தித் துணையொன்றை நாடும் எனது மனம். அவ் அழுத்தங்களின் தாங்குசக்தித் துணையாகச் செயற்பட்டான் சாள்ஸ்.

******

சாள்ஸ் நல்ல அழகியல் உணர்வு கொண்டவன். பூங்கன்றுகள் வளர்ப்பதிலும், செல்லப்பிராணிகளைப் பராமரிப்பதிலும் ஆர்வம் கொண்டவன். அதேபோல் இயல்பான ஆற்றலுடன் முகாம்கள், வீடுகள் மற்றும் கட்டடங்களை வடிவமைக்கும் திறனையும் பெற்றிருந்தான். அவனது பணி சார்ந்த இறுக்கங்கள் முன்நின்று இவற்றில் பொழுதுபோக்க விடாமல் வைத்திருந்தபோதும் கூட, கிடைக்கும் வாய்ப்புகளில் தனது அழகியல் ஆர்வத்தை வெளிப்படுத்துவான்.

தேர்ந்த வாசிப்பு ஆர்வத்தையும், சிறந்த எழுத்தாற்றலையும் கொண்டிருந்த சாள்சின் எழுத்தாக்கங்கள் எமது இளைய போராளிகளுக்கு புலனாய்வுச் செயற்பாட்டிலும், நிர்வாகவியல் ஒழுங்கமைப்பிலும் நல்ல பாடங்களாய் அமைந்திருந்தன. எமது தேசியத்தலைவர் அவர்களது 50 ஆவது அகவை மலரில் 'தலைவரது கோட்பாடு' என்ற பெயரில் சாள்ஸ் எழுதிய கட்டுரையானது இங்கு நினைவிற்கொள்ளத்தக்கது. தலைவர் அவர்கள் பற்றிய சாள்சின் புரிந்துணர்வின் அடிப்படையிலும், சாள்சின் காத்திரமான எழுத்தாற்றலை வெளிப்படுத்தும் வகையிலும் அமைந்திருந்தது மேற்படி ஆக்கம்.

தன்னோடு பணிபுரிவோருக்குக் கட்டளைகளை வழங்கும்போது குறிக்கோளை நோக்கியே முழுதாய் வழி நடத்துவான் சாள்ஸ். மனித உணர்வுகளுக்கு ஆட்பட்டு வேறு தெரிவுகளுக்கு இடம்கொடுக்க வாய்ப்பளிக்காமல் கோடுபோட்டது போல் துல்லியமாய் அமைந்திருக்கும் சாள்சின் கட்டளைகள்.

தன்கீழ் பணிபுரிவோருக்கு போராட்டத்தை முதன்மைப்படுத்தி கட்டளைகளை வழங்குவதைப்போலவே அவன் தனது வாழ்விலும் போராட்டத்தை முதன்மைப்படுத்தியே வாழ்ந்தான். சிந்தித்தான்.

நேரடிக் களச் செயற்பாட்டாளனாகவும், பின்னணி இயக்குனராகவும் அவன் பெற்ற பட்டறிவுகள்; எண்ணற்றவை. தமிழீழப் புலனாய்வுப் பட்டறிவினதும், இராணுவச் செயற்பாட்டுப் பட்டறிவினதும் களஞ்சியமான அவன் வாழ்ந்த காலம் முழுவதும் தேசியம் பற்றியும், தேச விடுதலை பற்றியுமே சிந்தித்தான்.

புலனாய்வு வழிமுறையில் எதிரிகளைச் செயலிழக்கச் செய்வது பற்றியே அவனது சிந்தனை சுழலும். அவனுடைய எண்ணம் முழுவதும் கரும்புலிகளும், அவர்களது வெற்றிக்குத் தேவையான திட்ட நகர்வுகளுமே நிறைந்திருந்தன.

அவன் இன்னமும் வாழ்ந்து சாதித்திருக்க வேண்டியவன். தமிழீழத்தின் திறவுகோல்களாய் அமைந்திருக்கக்கூடிய இராணுவ வெற்றிகளை நோக்கியே அவனது படையப்புலனாய்வுச் செயற்பாட்டுக்காலச் சிந்தனைகள் இருந்திருக்கும். அதற்கான அறிவும், ஆற்றலும், பட்டறிவும் அவனிடம் இருந்தது.

******
மன்னாருக்கான முதன்மைச் சாலையில் எதிரியின் தாக்குதல் நடைபெறலாம், என்ற கணிப்பை முன்கூட்டியே அறிக்கையாகக் கொடுத்த சாள்ஸ் அதே சாலையில் எதிரியின் கிளைமோர் தாக்குதலுக்கு உள்ளாகிவிட்டான். ஆபத்திருப்பது தெரிந்தும் அவ்விடத்தை நோக்கி அவனை பயணிக்க வைத்த சக்தி எது? அது விதியின் கொடிய கரமா?

இல்லை. அவனால் வழிநடத்தப்பட்ட போராளிகள் தொடர்புபட்ட பணி. தாயக மண்ணிலிருந்து வெகுதூரம் சென்று எதிரியின் கோட்டைக்குள் நிலைபெற்று நின்றார்கள் அவர்கள். அவர்களது நிலையை அவன் அறிவான். அவர்களது துடிப்பை..., அவர்களுக்கான நெருக்கடியை..., அவர்களைச் சுற்றி எதிரிகளின் விய+கத்தை..., அவன் அறிவான். - நெருக்கடி ஒன்றின் பின்னால் அவர்களுக்கு தனது வழிநடத்தலின் தேவையை - அவன் அறிவான்.

எதிரியின் தலைமை மையத்தினுள் நெருக்கடிக்குள் உறைந்திருக்கும் இளைய போராளி ஒருவனுக்கு - தனது பொறுப்பாளரின் குரல் - எப்படி இருக்கின்றாய்? என்ற விசாரிப்பு - உனக்கு ஏதாவது தேவையா? என்ற கனிவான கேள்வி - எப்படியாவது செய்யத்தான் வேண்டும் என்ற கறாரான அறிவுறுத்தல் - என்பன அவனை முடுக்கி, இயக்கி விடும் மந்திரங்கள் என்பதை அவன் அறிவான்.

அந்தத் தேவை - அந்தக் கட்டாயக் கடமை - அவனை மன்னாரை நோக்கிப் பயணிக்க வைத்தது. காலம் அவனுக்கிட்ட கடமை பாதுகாப்பு நோக்கிய சிந்தனையைப் புறந்தள்ளி, அவனை மன்னாரை நோக்கிப் பயணிக்க வைத்தது.

சாள்ஸ் ஒரு இளம் செயற்பாட்டுக்கள வீரனாக கொழும்பில் நின்ற காலத்தில் திட்டத்திற்குத் தெரிவுசெய்த கரும்புலி பிசகியபோது தானே கரும்புலியாய்ச் செல்லும் தயார் நிலையில் நின்றான். தனது பணிமுடிக்க உச்ச அர்ப்பணிப்பின் தயாரான நிலை அது. அந்த நிலையிலேயே இப்போதும் தன் பணிமுடிக்க ஆபத்தைப் புறம்தள்ளி முன்நகர்ந்தான்.

வெடிமருந்து வாகனத்தில் கரும்புலியுடன் தயாராகப் போகையில் எதிர்பாராமல் இலக்குவர, ~வெடிக்கவை| என்ற சாள்சின் கட்டளையைப் புறக்கணித்து அன்று அந்தக் கரும்புலி சாள்சை எம்மிடம் அனுப்பி வைத்தான். ~இந்த வேலை தொடர்ந்து நடக்கவேணும்| என்ற அந்தக் கரும்புலியின் வார்த்தையை மெய்யாக்கி அதற்காக வாழ்ந்தான். மாவீரனாகி அவர்களோடு கலந்துவிட்டான்.

கரும்புலியாய் வாழ்ந்து............, கரும்புலியால் வாழ்ந்து............., கரும்புலிகளோடு வாழ்ந்து............, கரும்புலிகளுக்காக வாழ்ந்து............, இறுதிவரை கரும்புலிகளோடு கலந்திருந்தான். கரும்புலிகள் கண்ட தமிழீழ தேசத்தின் விடுதலைக்கனவு நனவாகி சரித்திரத்தின் நாயகனாக வாழ்வான் சாள்ஸ்.


நன்றி: விடுதலைப் புலிகள் ஏடு (14.04.08)