Thursday, April 10, 2008

ஜே.வி.பியின் பிளவால் தெற்கில் பேரினவாதம் இன்னும் தீவிரமாகும்

ஜே.வி.பியின் சிவப்பு நிற இரும்புத் திரைக்குப் பின்னால் நடந்தேறிய குத்துவெட்டு இப்போது அம்பலத்துக்கு வந்துவிட்டது.
தொண்ணூறுகளுக்கு முந்திய பனிப்போர் காலத்தில் இடதுசாரிகளின் பிடியில் சிக்கிக் கிடந்த சோவியத் யூனியனிலும் பிற சிவப்புச்சட்டை நாடுகளிலும் அரச உயர் மட்டத்தில் நடப்பவை இப்படித்தான் இரும்புத் திரைக்குப் பின்னால் இடம்பெறும் இரகசியங்களாக மறைக்கப்பட்டன.
ஆனால் இன்று பனிப்போர் முடிவுக்கு வந்துவிட்டது. சோவியத் ஒன்றியத்தின் இரும்புத் திரைகளுக்குப் பின்னால் இறுக்கிக் கட்டப்பட்டிருந்த நாடுகள் தங்களைப் பலவந்தமாகப் பிணைத்து வைத்திருந்த இரும்புச் சங்கிலிகளை உடைத்தெறிந்துகொண்டு தம்பாட்டில் தனித்தனி நாடுகளாகிவிட்டன. சோவியத் ஒன்றியத்தின் இரும்புப்பிடிக்கு முன்னால் மறைக்கப்பட்டிருந்த இரும்புத்திரை இன்று தகர்ந்துவிட்டது.
ஜே.வி.பி. என்ற இடதுசாரிகள் எனத் தம்மை அழைத்துக் கொள்கின்ற சிவப்புச் சட்டைக் காரர்களின் கட்சியின் முன்னாலும் இதுவரை இத்தகைய இரும்புத்திரை ஒன்று போடப்பட்டிருந்தது. உள்ளே இடம்பெறும் அக்கிரமங்கள் கட்சிக் கட்டுப்பாடு என்ற பெயரில் மூடிமறைக்கப்பட்டிருந்தன. இப்போது இரும்புத்திரை தகர உண்மை அம்பலத்துக்கு வரத் தொடங்கிவிட்டது.
ஜே.வி.பியும், மஹிந்த ராஜபக்ஷவும் கூட்டுச்சேரும் சூழ்நிலை 2005 நடுப்பகுதியில் ஜனாதிபதித் தேர்தலை ஒட்டி ஏற்பட்டபோதே அரசியல் பார்வையாளர்களின் நோக்கில் ஒரு பலத்த சந்தேகம் எழுந்தது. தென்னிலங்கையில் ஒரே வாக்குவங்கியில் தங்கியிருக்கும் இரண்டு தரப்புகள் இப்போது ஒன்று சேருகின்றன. பிற்காலத்தில் யாரின் காலை யார் வாருவார்களோ என்ற சந்தேகமே அப்போது அவர்கள் மத்தியில் எழுந்தது. இப்போது அதற்கு ஓரளவு விடை கிடைத்தும் விட்டது.
தவறான ஆட்சி முறையாலும், பிழையான பொருளாதாரக் கொள்கையாலும், ஊழல் மோசடிகள் நிறைந்த நிர்வாகச் சீர்கேடுகளினாலும் நாட்டைக் குட்டிச் சுவராக்கி நடுவீதிக்குக் கொண்டுவந்த ஓர் ஆட்சிமுறையை, அது தமிழர் விரோத தீவிரப் போர்வெறிப்போக்கைப் பேரினவாத மேலாண்மைத் திமிரோடு கடைப்பிடிக்கின்றது என்ற ஒரே காரணத்துக்காக
தன்னுடைய பௌத்த சிங்களப் பேரினவாத மேலாதிக்கக் கொள்கை நிலைப்பாட்டை நிலை நிறுத்துகின்ற ஒரே நோக்கத்துக்காக
தொடர்ந்தும் இரண்டரை ஆண்டுகளாகக் காபந்து பண்ணி, காப்பாற்றிய தவறுக்கான வினைக்கான பரிசை இப்போது ஜே.வி.பி. அனுபவிக்கின்றது.
இரும்புத் திரை போன்ற இறுக்கமான கட்டுப்பாடு கொண்ட ஜே.வி.பியை சிதிலமடைய வைத்துவிட்டது "மஹிந்த சிந்தனை'! ஏதோ ஒன்றை நினைத்துக்கொண்டு மஹிந்த ராஜபக்ஷ குழுமத்தை அரியணையில் ஏற்றியவர்கள் இன்று அந்த அரசின் பின்னணியில் பின்னப்பட்ட வலைக்குள் சிக்கித் தாமே தமக்குள் பிளவுறும் நிலைக்குள் தள்ளப்பட்டிருக்கின்றார்கள்.
இதனை ஜே.வி.பி. உணர்ந்துகொள்ளுமா, இனிமேலாவது திருந்திச் செயற்படுமா என்பதே கேள்வி.
வர்க்க அடக்குமுறைக்கும், இன ஒடுக்குமுறைக்கும் எதிராகக் கொதித்தெழும்பும் இயல்பான போக்கு இடதுசாரிகளுக்கு உண்டு.
ஆனால் இடதுசாரிப் போக்கை வரித்துக் கொண்டதாகக் கூறிக்கொள்ளும் ஜே.வி.பியோ முழுக்க முழுக்க பேரினவாத மேலாண்மையிலேயே ஊறி நிற்கின்றது. அடக்கப்பட்ட மக்களுக்காகக் குரல் எழுப்பும் நேர்மையான இடதுசாரிச் சிந்தனை அதற்கு இல்லவே இல்லை என்பது வெளிப்படை.
இப்போது அந்தக் கட்சி இரண்டாகப் பிளந்து விட்டமை துலாம்பரமாக வெளிப்பட்டுள்ளது.
இந்தச் சந்தர்ப்பத்தில் இந்த இரண்டு பிரிவினருமே தென்னிலங்கையில் தங்களின் வாக்கு வங்கிகளைக் கைப்பற்றிக்கொள்வதற்காகத் தங்களுக்குள் போட்டிபோடப் போகின்றனர்.
பௌத்த சிங்களப் பேரினவாதக் கிளர்ச்சியைத் தூண்டி அதில் அரசியல் நடத்தி, ஆதரவு திரட்டுவதில் ருசி கண்ட இரு தரப்பினருமே அந்த விவகாரத்தையே தொடர்ந்தும் தமது ஆதரவுத் தளத்துக்கான அடிப்படையாகக் கொண்டு செயற்படுவார்கள் என்பதும் இலகுவாக ஊகிக்கத்தக்கதே.
அப்படியாயின், பேரினவாதச் சிந்தனையைத் தூண்டிக் கிளர்ந்தெழவைத்து, அதில் அரசியல் பிழைப்பு நடத்தும் தமது முயற்சிகளில் இந்த இரு பிரிவினருமே இனிமேல் மும்முரமாக ஈடுபடப் போகின்றமையை இனிவரும் காலங்களில் இலங்கை தரிசிக்கப் போகின்றது என்பது திண்ணம்.
அதாவது, ஜே.வி.பிக்குள் இப்போது ஏற்பட்டுள்ள பிளவு அல்லது இக்கட்சி இரண்டாக உடைந்ததன் விளைவு நாட்டில் இனவாதத்தைக் கிளப்பி அதில் அரசியல் குளிர்காய்ந்து பிழைப்பு நடத்தும் பேரினவாத சக்திகளை மேலும் முறுக்கேற்றி விடுமே தவிர, அப்போக்கைத் தணியப் பண்ணாது என்பது நிச்சயம்.
யுத்த வெறியைத் தூண்டி, சிறுபான்மையினரை அடக்கி, ஒடுக்கும் போக்கை வெளிப்படுத்துவதே தென்னிலங்கை வாக்கு வங்கியைக் கவரும் இலகுவான சுலபமான வழி என்பதைத் தென்னிலங்கை அரசியல்வாதிகள் பட்டறிவுப் பாடமாக நன்கு படித்துள்ளதால், இனவாதக் குதிரையிலேயே அவர்களது அரசியல் சவாரி தொடருவது உறுதி.


நன்றி - உதயன்

0 Comments: