Thursday, April 24, 2008

ஈரானுடனான புதிய நட்புறவு இலங்கைக்குத் தெம்பு தருமா?

அடுத்தவாரம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள ஈரானிய ஜனாதிபதி மஹ்மூத் அஹ்மதி நிஜாத்தை வரவேற்பதற்காக இலங்கை அரசு தடல்புடலான ஏற்பாடுகளைச் செய்துவரும் இச்சமயத்தில் ஈரானிய அதிபரின் இந்த விஜயம் அமெரிக்காவிற்குப் பெரும் அதிருப்தியையும் எரிச்சலையும் ஏற்படுத்தியிருப்பதாகக் கூறப்படுகிறது.
ஈரான் அதிபரை இலங்கைக்கு அழைத்துப் பெரும் வரவேற்பு அளித்து, அந்நாட்டுடனான தனது உறவை வலுப்படுத்திக் கொள்வதை வெளிப்படுத்திக் கொள்ள இலங்கை முயல்கின்றது.
ஆனால் இந்த வரவேற்பு ஏற்பாடு அமெரிக்காவையும் மேற்குலகையும் கடும் விசனத்துக்குள்ளும் சீற்றத்துக்குள்ளும் ஆழ்த்தியிருப்பதாகத் தகவல்கள் கசிந்திருக்கின்றன.
ஈரான் தொடர்பில் இலங்கை அரசு கடைப்பிடித்து வரும் அதி தாராள நட்புறவுக் கொள்கைப்போக்குச் சம்பந்தமான தனது அதிருப்தியைத் தனது நாட்டில் உள்ள இலங்கைத் தூதுவரிடம் அமெரிக்கா உத்தியோகபூர்வமாக வெளியிடும் என்றும் கூறப்படுகின்றது.
ஏற்கனவே சில தினங்களுக்கு முன்னர் இரண்டுநாள் பயணமாக இலங்கைக்கு விஜயம் செய்திருந்த அமெரிக்காவின் தெற்கு மத்திய ஆசிய விவகாரங்களுக்கான சிரேஷ்ட பிரதி உதவிச் செயலாளர் டொனால்ட் காம்ப், இவ்விவகாரம் குறித்தும் இலங்கை அரச உயர் மட்டத்துடன் பேசி, அமெரிக்காவின் அதிருப்தியை நேரடியாக வெளிப்படுத்தியிருந்தார் என்றும் ஒரு தகவல் தெரிவிக்கின்றது.
"இனம் இனத்தைச் சேரும்' என்பார்கள். இப்போது ஈரானுடன் கொஞ்சிக் குலாவி உறவை விருத்தி செய்யும் மஹிந்த அரசின் போக்கு இந்தப் பழமொழியைத்தான் நினைவுபடுத்துகின்றது.
தம்முடைய தவறான செயற்போக்கினால் சர்வதேசக் கண்டனங்களையும், அதிருப்திகளையும் ஏன் சர்வதேசத் தடைகள், கட்டுப்பாடுகள் என்பவற்றையும் கூட எதிர்கொள்ள வேண்டிய ஒரே இக்கட்டில் சிக்கியிருக்கும் தோழமை சக்திகளாக ஈரான் அரசும் இலங்கை அரசும் உருவெடுத்துள்ளன. இப்படி சர்வதேச சமூகத்தால் குறிப்பாக அமெரிக்கா மற்றும் மேற்குலக நாடுகளின் அதிருப்திக்கு உள்ளாகும் ஒரே அணியில் இருப்பதால் அவை தமக்குள் உறவை இறுக்கிக்கொள்ள முயல்கின்றன போலும்.
ஏற்கனவே இலங்கைக்கான ஆயுத தளபாட விநியோகங்களை அமெரிக்கா மட்டுப்படுத்தி அறிவித்து விட்டது. இலங்கைக்கான பொருளாதார உதவிகளையும் அது கணிசமாகக் குறைத்துள்ளது. அதேவேளை ஈரானுடனான இலங்கையின் புத்துறவைக் காரணம் காட்டி இலங்கைக்கு ஆயுதத் தளபாட வசதிகளையும் உதவிகளையும் வழங்குவதை இஸ்ரேல் இடைநிறுத்தி விட்டது. இதன் காரணமாக, இதுவரை புலிகளுக்கு எதிரான ஆயுதப் போராட்டத்தில் தனக்குக் காலம் காலமாக ஆயுத, தளபாட வசதிகளையும் உதவிகளையும் தொடர்ந்து வழங்கிவந்த இஸ்ரேலின் நல்லுறவை இலங்கை இழக்கப் போகின்றது என்பது தெளிவாகிவிட்டது.
இதேசமயம், இதுவரை காலமும் நாட்டுக்குப் பெரும் அந்நிய செலாவணியையும், ஏற்றுமதி வருமானத்தையும், உள்ளூர் தொழில் வாய்ப்புகளையும் தாராளமாக ஏற்படுத்தித்தந்த ஐரோப்பிய நாடுகளின் ஏற்றுமதிச் சலுகை வசதியை அடுத்துவரும் மாதங்களோடு இலங்கை இழக்கப் போவதும் உறுதியாகிவிட்டது.
ஈரானுக்கு எதிராக அமெரிக்க மற்றும் ஐ.நா.சபையின் வர்த்தகத் தடைகள் உட்படப் பலமுனைத் தடைகள் கருக்கொண்டு உருக்கொண்டு வருகையில், அதுபோன்ற தடைகளை இலங்கையும் எதிர்கொள்ளும் சூழல் உருவாகியுள்ளது.
இந்தப் பின்புலத்தில்தான் இலங்கை ஈரான் புதிய நட்புணர்வு மலர்ந்திருக்கின்றது.
ஒருதலைப்பட்சமாக அணு ஆயுதங்களை உற்பத்திசெய்யும் திமிர்ப் போக்கு, இஸ்ரேலை அழித்தொழிக்கக் கங்கணம் கட்டி நிற்கும் தீவிரம் போன்றவை ஈரானுக்கு எதிரான சர்வதேச நிலைப்பாட்டை உருவாக்கியிருக்கின்றன.
அதேபோல, ஈழத் தமிழர்களின் நியாயமான அபிலாஷைகளைப் புறம்தள்ளி, அவர்களின் இருப்பையே அழித்தொழிக்கும் பௌத்த சிங்களப் பேரினவாதச் சிந்தனையோடு, கொடூர மனித உரிமைமீறல்களுக்கு வழிகோலும் இலங்கை அரசுத் தலைமையின் திமிர்ப் போக்குப் போர்த் தீவிரமும் இலங்கைக்கு எதிரான சர்வதேச எரிச்சலுக்கு வழிசெய்துள்ளன.
இவ்வாறு ஈரானிய ஜனாதிபதி மஹ்மூத் அஹ்மதியாவின் அரச நிர்வாகமும், இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரச நிர்வாகமும் ஒரே மாதிரியாக சர்வதேச எரிச்சலுக்கு உள்ளானாலும்கூட இலங்கையின் நிலைமை மோசமானது.
உலகில் எரிபொருள் உற்பத்தி நாடுகளின் முன்னணி வரிசையில் இருக்கும் நான்காவது நாடு ஈரான். தாராள எரிபொருள், எரிவாயு மூலவளம் புதைந்து கிடக்கும் தேசம். கனியவளமும் தாராளம். அத்தகைய நாடு ஒன்று அமெரிக்கா போன்ற வல்லரசுகளைப் பகைத்துக் கொண்டு, ஐ.நா.போன்ற உலக நாடுகளின் கூட்டமைப்பு விதிக்கும் சர்வதேசத் தடைகளைத் துச்சமாக மதித்துப் புறக்கணித்து, உதாசீனம் செய்தபடி, ஒருதலைப்பட்சமாகத் தான் எடுத்த தீர்மானத்தின் பிரகாரம் தங்கு தடையின்றி அணு ஆயுத உற்பத்தியில் ஈடுபட முடியும்.
ஆனால், தேயிலை, இறப்பர், தைத்த ஆடைகள் மற்றும் பணிப்பெண்கள் சேவை போன்றவற்றை மேற்குலகுக்கு வழங்குவதன் மூலமே அந்நிய செலாவணியைத் திரட்டவேண்டிய இக்கட்டில் சிக்கியிருக்கும் இலங்கையால் இலகுவாக மேற்குலகைப் புறக்கணித்து விடமுடியாது. அப்படிப் புறக்கணித்து உதாசீனம் செய்ய முயலும் மஹிந்தர் அரசின் போக்கு இலங்கைக்கு விபரீத விளைவுகளை ஏற்படுத்தக்கூடியது.
ஆனால், இந்த யதார்த்தமும் உண்மையும் புரியாமல் ஈரான் போன்ற சர்ச்சைக்குரிய நாடுகளின் ஆதரவை மட்டும் வைத்துக்கொண்டு எந்தச் சவாலையும் சமாளிக்க முடியும் என்ற துணிச்சலோடு காய்களை நகர்த்துகின்றது மஹிந்தரின் அரசுத் தலைமை.
மேற்குலகின் வலுவைக் கவனத்தில் கொள்ளாமல் ஈரான், பாகிஸ்தான், சீனா போன்ற சர்ச்சைக்குரிய சக்திகளின் ஆதரவை நம்பி, அதில் தங்கி, தமது விபரீத முயற்சியை முன்னெடுக்கின்றது இலங்கையின் இந்த அரசு. இது மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்கும் எத்தனம் என்பது புரியவரும்போது மீள முடியாமல் தவிக்கும் இக்கட்டை அது உணர்ந்துகொள்ளும்.
அதுவரை, இத்தகைய புத்துறவும், புதுநட்பும் இலங்கை அரசுத் தலைமைக்குக் கரும்பாய்த்தான் இனிக்கும். அதன் விளைவுகளை அனுபவிக்கும்போது அது வேம்பாய்க் கசப்பது புரியவரும்.

நன்றி - உதயன்

0 Comments: