Monday, April 21, 2008

இந்திய வாடைக் காற்று ஈழம் நோக்கி வருகிறது.

புலிகள் இயக்கத்தை பயங்கரவாத முத்திரைகுத்தி அந்த இயக்கத்தின் செயற்பாடுகளை இந்தியாவில் தடைசெய்து ஈழத்தமிழர்களுக்கான அதரவு தளத்தை கடந்த காலங்களில் நிர்மூலம் செய்திருந்த மத்திய அரசு இதற்கு காரணம் இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி மீதான படுகொலை என உலகதத்மிழர்களுக்கு கிளிப்பிள்ளைப் பாடம் ஒப்புவித்தது.

ஈழத்திற்கான உரிமைப்போர் போரியல் வரலாற்றில் சுமார் 30 வருடங்களை காவு கொண்டுள்ள நிலையில் கிட்டத்தட்ட 17 வருடங்களை இந்தியாவின் புலித்தடை பொசுக்கிவிட்டது என்று குறிப்பிடுவது இந்நிலையில் சாலப்பொருந்தும்.

இந்தியாவின் கைவிரிப்புக்கு மத்தியில் அதன் ஒத்துழைப்பின்றியே ஈழத்தமிழர்களின் உரிமைப் பயணம் தொடரும் நிலையில் சமீப காலமாக இந்தியாவில் அதன் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவான உணர்வலைகள் எல்லை கடந்து மடை திறந்த வெள்ளம் போல பெருகிவருவதை இந்திய அரசியல் சமுத்திரத்தில் பார்க்க முடிகிறது .

பூகோள வரைபில் இந்தியாவின் காலடியில் கிடக்கும் இலங்காபுரியில் அதன் உள்நாட்டுக்குள் நாளாந்தம் நடந்து கொண்டிருக்கும் வன்முறையின் அதிர்வுகள் இந்தியாவின் உச்சந்தலையில் உதைப்பது போல அது இப்போது உணர தலைப்பட்டுள்ளது போலும்.

இதற்கு உதாரணமாக மாறி வரும் இந்திய அரசியலில் தற்போது ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக இடம்பெற்று வரும் முக்கிய நிகழ்வுகளை இவ் ஆய்வில் பதிவு செய்யலாம்.

பிரபாகரன் என பெயரிட்ட சிங்களத்திரைப்படம் மீதான உடனடி இடைக்காலத்தடை, டி.ராஜேந்தரின் அரசியல் கட்சி,தலைமைத்துவ பதவி துறப்பு ,ஒகேனக்கல் குடிநீர் திட்ட விவகாரம் தொடர்பில் தமிழக நடிகர் சங்கம் மெற்கொண்ட உண்ணாவிரத நிகழ்வில் நடிகர்களான சத்தியராஜ்,ரஜினி காந்த், சரத்குமார் ஆகியோர் ஈழத்தமிழர்களுகாக ஆற்றிய ஆவேச உரை, நளினி பிரியங்கா சந்திப்பு ,மதிமு,க செயலர் வைக்கோவின் நோர்வே உரை ,அதனை தொடர்ந்து வந்த இந்திய ஆன்மீக தலைவர் ஸ்ரீறி ஸ்ரீறி ரவிசங்கரின் இலங்கை சமாதான முன்னெடுப்புக்கள் மீதான அக்கறை, அதன் பின்னரான வைக்கோ, மன்மோகன் சிங் சந்திப்பு, ,தமிழக முதல்வர் கருணாநிதி( Times of India) என்ற நாளேட்டுக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வி,திராவிடர் கழக தலைவர் கீ.வீரமணியின் ஈழத்தமிழர்களுக்குக்காக ஒன்றுபடுவோம் என்ற அறைகூவல்,பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் இராமதாஸ், மன்மோகன் சந்திப்பு. ஆகியவை இந்திய மத்திய அரசு ஈழத்தமிழர்களுக்கு நேசக்கரம் நீட்ட தயாராகிறது என்பதையே தெளிவுபடுத்தும்.

இதேவேளை இந்தியாவின் ஈழத்தமிழர் மீதான எண்ணக்கருக்களை தமிழீழ விடுதலை புலிகள் எவ்வாறு உள்வாங்கி எதிர்காலத்தில் அரசியல் தீர்வு விஷயத்தில் காய்களை நகர்த்தப்போகிறார்கள் என்பதிலேயே ஈழத்தமிழர்களின் உரிமைக்கான வெற்றி தங்கி உள்ளது.
நன்றி :- வீரகேசரி

2 Comments:

Anonymous said...

நம்பிக்கை துளிர் விடும் காலம்.
நிச்சயம் ஈழப்பூக்கள் மலரும்.

-சத்தியன்

Anonymous said...

ஏற்கனவே வாடைக்காற்று வாட்டிய உடம்பு இது, இது உடம்புக்கு ஒத்து கொள்ளாது.அனுபவப்பட்டவன் சொல்லுறான் வாடைக்காற்றில் வாஞ்சை கொள்ளாதீர்கள்.