கோயபல்ஸ் வாதம் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள், ஒரு பொய்யை ஒன்பது தடவை சொன்னால் பத்தாவது தரம் அது உண்மையாகி விடும்.
மேலாதிக்க அரசியல் செயற்பாடுகளின் போதெல்லாம் கோயபல்ஸ்; வாதத்திற்கு முக்கிய இடமுண்டு.
இலங்கை அரசியல் மீதான இந்திய தலையீட்டிற்காக சொல்லப்பட்டு வரும் வாதங்களும் அத்தகைய ஒன்றுதான்.
இலங்கை அரசியல் மீதான இந்தியத் தலையீடு என்பது எப்போதுமே இலங்கையில் தனது பிராந்திய நலன்களுக்கு எதிரான சக்திகள் அதிகளவில் தலையீடு செய்து வருகின்றன என்ற குற்றச்சாட்டின் பேரில்தான் நிகழ்ந்து வருகிறது.
இப்படியொரு குற்றச்சாட்டுத்தான் இந்திய -சிறிலங்கா ஒப்பந்தத்திற்கும் பின்னணியாக இருந்தது.
இதிலுள்ள வேடிக்கை என்னவெனில் இந்திய - சிறிலங்கா உறவின் வரலாறு முழுவதுமே ஒரு குற்றச்சாட்டின் பேரில் நிகழ்ந்து வருவதுதான்.
மறுபுறமாக இதே குற்றசாட்டையே சிங்கள கொள்கை வகுப்பாளர்கள் இந்தியாவை கையாள்வதற்கான தமக்குரிய இராஜதந்திரமாகவும் கைக்கொண்டு வருகின்றனர்.
ஆரம்பத்தில் இந்தியாவின் இவ்வாறான குற்றச்சாட்டின் கீழ் அமெரிக்கா, சீனா, பாகிஸ்தான் ஆகியவையே அன்னிய சக்திகள் என்ற வரையறையைப் பெற்றிருந்தன.
ஆனால் சமீப காலமாக இந்தியா, அமெரிக்காவுடன் நெருக்கமான உறவுகளை பேணி வரும் பின்புலத்தில், இந்திய கொள்கை வகுப்பாளர்களும் இந்திய புலனாய்வுத்துறையினரும், இன்று பெருமளவிற்கு தமது வரலாற்று எதிரிகளான சீனா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் மீதே குறிவைத்திருக்கின்றனர்.
சீனா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் சிறிலங்காவுடன் நெருக்கமான உறவுகளை பேணி வருவதானது இந்தியாவின் பாதுகாப்பிற்கும் பிராந்திய நலன்களுக்கும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளது.
எனவே அதனை தடுத்து நிறுத்த வேண்டிய பொறுப்பு இந்தியாவிற்கு உண்டு, அதனை இந்தியா புறம்தள்ள முடியாது, போன்ற வாதங்களிலேயே, இன்று இந்திய கொள்கை வகுப்பினர் அனைவரும் குடி கொண்டிருக்கின்றனர்.
நான் இந்த இடத்தில் ஒரு மாறுபட்ட விவாதத்தை உருவாக்க விரும்புகிறேன்.
என்னைப் பொறுத்த வரையில் இந்தியாவின் இவ்வாறான வாதங்களின் பின்புலத்தில் ஒரு மறைமுகமான அரசியல் தந்திரோபாயம் ஒளிந்திருப்பதாகத்தான் நான் பார்க்கிறேன். நான் இவ்வாறு கூறுவதற்கு ஒரு சில காரணங்கள் உண்டு.
சிறிலங்கா அரசு கொள்கையளவில் தன்னை அணிசேரா நாடுகளின் வரிசையில் நிலை நிறுத்தி வந்திருக்கிறது.
இதன் மூலம் சிறிலங்காவின் வளர்ச்சிக்கான உதவிகளை ஆலோசனைகளை எந்தவொரு நாட்டிடம் இருந்தும் பெற்றுக்கொள்வதற்கான தகுதியை சிங்களம் பெற்றிருக்கிறது. இதில் இந்தியாவும் அடங்கும், பாகிஸ்தானும் அடங்கும். இந்த நிலமையை இந்தியாவும் நன்கு அறியும்.
ஆனால் இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் சில கிலோமீற்றர் தொலைவே இருந்த நிலையில், குறிப்பாக ஈழத் தமிழ் மக்களுடன் நெருக்கமான உறவுகளையும் கலாசார தொடர்புகளையும் கொண்டிருந்த தமிழ்நாட்டை தனது அங்கமாக கொண்டிருந்த புற நிலமைகளையும் காரணம் காட்டியே இந்தியா - சிறிலங்கா அரசியலில் தலையீடு செய்தது.
இதனூடாக வேறு எவரைக் காட்டிலும் இலங்கையில் தலையீடு செய்வதற்கான தார்மீக பொறுப்பு தனக்கு உண்டு என்னும் அரசியல் நியாயப்பாட்டையே இந்தியா முன்வைக்க விரும்பியது.
இந்த இடத்தில்தான் இந்தியா தனது இராஜதந்திர அரசியலுக்கான இடைவெளியை உருவாக்கிக் கொண்டது என்பதுதான் எனது வாதம்.
எனவே எப்போதெல்லாம் சிங்களம் இந்தியா தவிர்ந்த சக்திகளுடன் உறவுகளை பேண முற்படுகின்றதோ அப்போதெல்லாம் பாதுகாப்பு அச்சுறுத்தல் என்ற பூச்சாண்டியை கிளப்பிவிட்டு, தனது தலையீட்டிற்கான இடைவெளியை ஏற்படுத்திக்கொள்கின்றது.
மகிந்த அணியினர், ஆட்சியமைத்ததைத் தொடர்ந்து மகிந்தவின் அரசியல் உறவுகள் பெரும்பாலும் ஆசிய நிலைப்பட்டதாக இருக்குமென்றே பலரும் கருதியிருந்தனர்.
மகிந்தவும் தலதா மாளிகைத் தரிசனத்தை முடித்துக்கொண்டு உடனடியாகவே இந்தியாவின் கரங்களை பற்றிக்கொள்ளவதற்கான முயற்சியில் இறங்கியிருந்தார்.
ஆனால் மகிந்த எதிர்பார்த்தது போல் உடனடியாக இந்தியாவிடமிருந்து பெரியளவில் சாதகமான சமிக்ஞைகள் காட்டப்படவில்லை.
அப்போது இந்தியாவின் மென்போக்கின் பின்னால் தமிழகம் குறித்த கரிசனை இருந்ததாகவே பல அரசியல் கருத்தாளர்களும் அபிப்பிராயப்பட்டனர்.
தமிழகத்தை கருத்தில் கொள்ளாமல் சிறிலங்காவுடனான உறவுகளை பேணிக்கொள்வதானது தமிழகத்தில் கொந்தளிப்புக்களை ஏற்படுத்தக்கூடுமென இந்தியா அச்சப்படுவதாகவே நம்பப்பட்டது.
இந்தியாவின் மென்போக்கைத் தொடர்ந்து மகிந்த அரசு பாகிஸ்தான் சீனா ஆகியவற்றிடமிருந்து ஆயுத உதவிகளைப் பெற்றுக்கொண்டது.
தமிழக மக்களைக் கருத்தில் கொண்டு மென்போக்கை கடைப்பிடித்து வருவதாக நம்பப்பட்ட இந்தியா, சிங்களமானது சீனா, பாகிஸ்தான் ஆகியவற்றுடன் நெருக்கமான இராஜதந்திர தொடர்புகளை பேணிக்கொள்ளத் தொடங்கியதும் தனது நிலைப்பாட்டில் மாற்றங்களை காட்டத்தொடங்கியது.
இந்த இடத்தில் நாம் கேட்க வேண்டிய கேள்வி, மகிந்த வலிந்து உறவுகளைப் பேணிக்கொள்ள முயற்சித்த சந்தர்ப்பத்தில் மென்போக்கை கடைப்பிடித்த இந்தியா, சிங்களம் தனது வரலாற்று எதிரிகளான சீனா, பாகிஸ்தான் ஆகியவற்றுடன் நெருக்கிச் சென்றபோது ஏன் தனது மென்போக்கு நிலையை கைவிட்டு படிப்படியாக தீவிரத்தைக் காட்டத் தொடங்கியது? நம்மில் பெரும்பாலானவர்கள் நம்பிய இந்தியாவின் தமிழகம் குறித்த அச்சத்திற்கு அப்போது என்ன நடந்தது?
நோர்வேயின் மத்தியஸ்த காலத்தில் தன்னை அவதானிப்பாளர் நிலையில் காட்டிக்கொண்ட இந்தியா தனக்கான சந்தர்ப்பம் வரும் வரை காத்திருந்தது பற்றி எனது முன்னைய (மீண்டும் இந்தியா) கட்டுரையில் குறிப்பிட்டிருந்தேன்.
இலங்கையில் ஒரு சுமூகமான நிலமை இருப்பதே தனது விருப்பம் என்று அடிக்கடி இந்தியா தெரிவித்து வந்த நிலையில், நோர்வேயின் மத்தியஸ்த காலத்தில் அவதானிப்பாளர் என்ற நிலைக்கு அப்பால் தன்னை அடையாளம் காட்டிக்கொள்ள முடியாத ஓர் அரசியல் இறுக்கத்திற்கு இந்தியா ஆளாகியிருந்தது.
அந்தச் சூழலில் மேற்கின் அதிகரித்த தலையீடுகள் இந்தியாவை எரிச்சலையடைச் செய்திருந்தாலும் தான் உருவாக்கிய இராஜதந்திர இடைவெளியை பயன்படுத்திக்கொள்ள முடியும் என்பதில் இந்தியா தெளிவாக இருந்தது.
நோர்வேயின் மத்தியஸ்த முயற்சிகள் தோல்வியடைந்ததும் இந்தியா எதிர்பார்த்த சந்தர்ப்பம் வாய்த்தது, ஆனால் அப்போது கூட இந்தியா மென்போக்கையே கடைப்பிடித்ததற்கு ஒரு காரணமுண்டு.
இந்தியா, இலங்கை இனப்பிரச்சனைக்கு ஒரு அரசியல் தீர்வை வலியுறுத்தி வந்த நிலையில் உடனடியாகவே தனது தலையீட்டினை செய்வது தனது இராஜதந்திர நகர்வுகளில் பின்னடைவுகளை ஏற்படுத்திவிடக் கூடுமென இந்தியா கருதியிருக்க வேண்டும்.
இந்திய கொள்கை வகுப்பாளர்களிடம் சிங்கள ஆட்சியாளர்கள் குறித்து ஒரு தெளிவான நிலைப்பாடு உண்டு. எப்போதுமே இந்தியாவை நேரடியாக பகைத்துக் கொள்ள விரும்பாத சிங்களம் இந்தியாவை தனது வழிக்குக் கொண்டு வரும் நோக்கில் அதன் வரலாற்று எதிரிகளை துணைக்கு அழைப்பதனை தனது அரசியல் சாணக்கியமாகவே கருதிக்கொள்கின்றது.
உண்மையில் இதனை இந்தியா மிகவும் துல்லியமாக மதிப்பிட்டு வைத்திருக்கிறது. இந்தியாவை வளைத்துப் போடும் சிங்களத்தின் எதிர்பார்ப்புகள் பெருமளவிற்கு நிறைவேறாத நிலையில் மகிந்த, இந்தியா எதிர்பார்த்தது போன்றே சீனா, பாகிஸ்தான் ஆகியவற்றுடனான உறவுகளை பலப்படுத்தும் அரசியல் வேலைத்திட்டங்களை தொடங்கினார்.
சிங்களத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்பவே இந்தியாவும் தனக்கான இராஜதந்திர இடைவெளியை பயன்படுத்தத் தொடங்கியது.
இந்தியா உருவாக்கிய இராஜதந்திர இடைவெளியைப் பேணிப் பாதுகாத்துக் கொள்வதில் இந்திய பார்ப்பனவாத ஊடகங்களும், இந்திய புலனாய்வுத்துறையினரும் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன் வெளிப்பாடுகள்தான் இந்திய புலனாய்வுத்துறையினர் மற்றும் கருத்தியலாளர்கள் பாகிஸ்தான் மற்றும் சீனா இலங்கையில் அதிகளவு தலையீடு செய்து வருவதாகவும் அது இந்தியாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமையும் என்றெல்லாம் கூறிவருவதன் பின்னணி.
சிங்களத்தைப் பொறுத்த வரையில் பாகிஸ்தானிடமிருந்தும் சீனாவிடமிருந்தும் ஆயுதங்களைப் பெறுவது இதுதான் முதல் தடைவையல்ல. இதற்கு முன்னரும் பல தடவைகள் இவ்வாறு நடந்திருக்கிறது.
சிங்களத்தைப் பொறுத்த வரையில் அதன் வெளிநாட்டு உறவுகள் என்பது பெரும்பாலும் இராணுவ தேவைகள் சார்ந்ததாகவே இருக்கிறது.
ஒரு நாட்டின் வெளியகத் தொடர்புகள் அதற்கான கொள்கை முன்னெடுப்புக்கள் என்பவை பொருளாதார, தொழில்நுட்ப மற்றும் இராணுவ தேவைகள் என பல்வேறு விடயங்கள் சார்ந்தாகவே இருக்கும். ஆனால் சிங்களத்தின் வெளிநாட்டு உறவுகள் பெருமளவிற்கு இராணுவ தேவைகள் சார்ந்ததாகவே இருக்கின்றன.
ஆரம்பத்தில் சிங்களத்தின் வெளிநாட்டு கொள்கை முன்னெடுப்புக்கள் வாத்தக தொடர்புகள் சார்ந்து இருந்தாலும் தமிழர் விடுதலை அரசியல், ஆயுத வழிப் போராட்டமாக பரிணமித்ததைத் தொடர்ந்து தமிழர் எழுச்சியை அடக்குவதற்கான உதவிகளைக் கோருவதே சிங்களத்தின் சர்வதேச உறவுகளின் அச்சாணியாக மாறியது.
இது பின்னர் விடுதலைப் புலிகள் ஈழத்தமிழர் விடுதலைப் போராட்டத்தின் ஒரேயொரு தேசியத் தலைமையாக பரிணமித்ததைத் தொடந்து விடுதலைப் புலிகளை பலவீனப்படுத்துவதற்கான இராணுவ முன்னெடுப்புக்களுக்கான அனுசரணைகளை பெறுதல் ஆலோசனைகளைப் பெறுதல் என்பதாக மாறியது. இந்த பின்புலத்தில்தான் இன்று, மகிந்த அரசு விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தை முன்னெடுப்பதற்கு ஈரான் வரை சென்றுள்ளது.
இந்தியாவை நேரடியாக பகைத்துக்கொள்ள முடியாத சிங்களம் நீங்கள் தராவிட்டால் நாங்கள் அவர்களிடம் என்ற தந்திரோபாயத்தை பிரயோகித்து வருகிறது.
இந்த சிங்கள தந்திரோபாயத்தையே தொடர்ந்தும் இலங்கை அரசியலில் தனது மேலாதிக்க தலையீட்டினை தொடர்வதற்கான இடைவெளியாகவும் இந்தியா கைக்கொண்டு வருகிறது.
இந்தியாவைப் பொறுத்தவரையில் ஒரு கட்டம் வரைக்கும் சிங்களத்தை அனுமதித்து அதன் பி;ன்னர் தனது தலையீட்டிற்கான அரசியலை நகர்த்தும் தந்திரோபாயத்தையே கைக்கொண்டு வருகின்றது.
என்னதான் சிங்களம் சீனாவிடமிருந்தும் பாகிஸ்தானிடமிருந்தும் உதவிகளைப் பெற்றாலும் தன்னை மீறி செயற்பட முடியாது என்பதை இந்தியா தனது தலையீட்டின் மூலமாக அவ்வப்போது நிரூபித்து வந்திருகிறது.
சிங்களம் என்னதான் சீனாவுடனும் பாகிஸ்தானுடனும் உறவுகளை பேணிக் கொண்டாலும் பாகிஸ்தான், சீனா அகியவற்றின் இலங்கை அரசியல் மீதான ஈடுபாடு என்பது மிகவும் மட்டுப்பட்ட ஒன்றுதான்.
இதனை இந்தியாவும் நன்று அறியும். எனவே இலங்கை அரசியலில் பாகிஸ்தான் மற்றும் சீனா அதிகளவில் தலையீடு செய்வதாகவும் அது இந்தியாவின் பிராந்திய நலன்களுக்கு பெரிய அச்சுறுதலாக அமைந்திருப்பதாகவும் இந்தியத் தரப்பில் கூறப்படு வரும் வாதங்கள் இந்திய மேலாதிக்கத்தை நியாயப்படுத்துவதற்கான பிரச்சாரங்களே அன்றி வேறொன்றுமில்லை.
ஆனால் இதில் நாம் கவனம் கொள்ள வேண்டிய விடயம் என்னவெனில், இந்தியா எதனை தனது மேலாதிக்கத்திற்கான இராஜதந்திர இடைவெளியாகக் கைக்கொள்கின்றதோ அதனையே சிங்களம் தனது இராஜதந்திர முன்னெடுப்பிற்கான வாய்ப்பாகவும் பயன்படுத்திக் கொள்ள முயல்கிறது.
இரு மேலாதிக்க சக்திகளின் இராஜதந்திரமும் ஒரு புள்ளியில் சந்திக்கின்றது. ஆனால் இரண்டுமே தமிழர் தேசியத்தின் இறைமையை அரசியல் அர்த்தத்தில் இல்லாதொழித்தல் என்னும் மேலாதிக்க நிகழ்ச்சி நிரலில் சங்கமிக்கின்றன.
எனவே நாம் கோயபல்ஸ் பிரச்சாரங்களுக்கு எடுபட்டுப் போகால் இருப்போமாக.
நன்றி -தாரகா-
Monday, April 14, 2008
'ஒரு புள்ளியில் சந்திக்கும் இந்திய - சிறிலங்கா நலன்கள்"
Posted by tamil at 5:45 AM
Subscribe to:
Post Comments (Atom)
0 Comments:
Post a Comment