Sunday, April 6, 2008

கிழக்கு மாகாண தேர்தலும் அரசாங்கத்தின் உபாயங்களும்

இப்படி ஒரு கதை நம் அனைவருக்கும் ஞாபகம் இருக்கும். அதிலும் புராண இதிகாசங்களில் ஈடுபாடுள்ளவர்கள் என்றால் சொல்லவே தேவையில்லை. குருஷேத்திரப் போரில் எல்லா ஆயுதங்களையும் பயன்படுத்தி இனி ஒன்றுமில்லை என்னும் தறுவாயில் பயன்படுத்தப்பட்டதுதான் வஜ்ராயுதம்.

உண்மையைச் சொல்வதானால் எனக்கு புராண இதிகாசங்களில் பெரிதாக ஈடுபாடில்லை. எனவே ஏதும் நான் பிழையாக சொல்லி இருந்தால் மன்னித்துக் கொள்ளுங்கள். ஆளும் மகிந்த அரசு கிழக்கு மாகாண சபைத் தேர்தலை அவசர, அவசரமாக நடத்தி முடிப்பதற்கு கங்கணம் கட்டிக்கொண்டு நிற்பதை பார்த்த போது எனக்கு வஜ்ராயுதத்தின் ஞாபகம்தான் வந்தது.

தமிழீழ விடுதலைப் புலிகளையும் தமிழர் தேசத்தின் விடுதலை அரசியலையும் அழித்தொழித்து விட முடியுமென நம்பிய சிங்களம் கடந்த மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக எத்தனையோ முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறது.

நேரடி இராணுவ நடவடிக்கைகளில் இருந்து கீழ்த்தரமான நடவடிக்கைள் வரை அதில் அடங்கும். ஆனால் சிங்களம் எல்லாவற்றிலுமே அவமானகரமான தேல்வியைத்தான்; சந்தித்தது. ஒரு வகையில் இதனை தொடரும் 'சிங்களத் துயரம்" என்று கூடச் சொல்லாம். இப்பொழுது மீண்டும் சிங்களம் மாகாண சபை தேர்தல், முதலமைச்சர் என்ற நாடகம் ஒன்றை அரங்கேற்றியிருக்கிறது.

நாடகத்திற்கான எல்லாப் பாத்திரங்களும் தற்போது தங்களுக்கான ஒப்பனைகளுடன் மேடையேறியிருக்கின்றனர். இனி நாம் சண்டைக் காட்சிகள், பாடல்கள், ஆடல்கள் எல்லாவற்றையும் பார்க்க முடியும்.

நாம் அறிந்த வரலாறுகள் எல்லாம் பொதுவாக முன்நோக்கி நகர்ந்ததாகத்தான் நமக்கு தெரியும். ஆனால் இலங்கைத்தீவில் மட்டும் நிகழ்ந்து கொண்டிருக்கும் புல்லரிக்க வைக்கும் ஆச்சரியம் என்னவென்றால் எப்போதுமே வரலாறு பின்நோக்கி நகர்வதுதான். அதன் வெளிப்பாடுகளில் ஒன்றுதான் தற்போதைய கிழக்கு மகாண சபைத் தேர்தல் நாடகம்.

சிங்களத்தின் வரலாற்றியல் முரண் நகைகளை விளங்கிக் கொள்ள முடியாதவர்கள் 50 வருடங்கள் பின்நோக்கி இருக்கின்றனர் என்பதுதான் உண்மை. சிங்கள ஆளும் வர்க்கத்திற்கு ஏன் இவ்வாறனதொரு அவசரமான தேர்தல் தேவைப்படுகின்றது? அதற்குப் பின்னால் உள்ள சூட்சும அரசியல் எத்தகையது?

இவ்வாறான கேள்விகளுக்கு விடை தேடுவதற்கு முன்னர் நாம் சற்று வரலாற்றில் பின்நோக்கி சென்று பார்ப்போம். 1987 இல் இந்தியா, இலங்கையுடனான ஒப்பந்தம் என்ற பேரில் நமது அரசியலில் சிங்கள ஆளுகைக்குட்பட்ட சட்ட அங்கீகாரத்துடன் குறுக்கிட்டது. இதனைத் தொடர்ந்து 1988 பெப்ரவரி 8 இல் வடக்கு-கிழக்கு தற்காலிமாக இணைக்கப்பட்டதாக சொல்லப்படுகின்றது.

பெரும்பாலான சிங்கள கருத்தியலாளர்கள் மேற்படி தற்காலிக இணைப்புத்தான் தமிழர்களின் தாயகக் கோட்பாட்டிற்கு உறுதுணையாக இருப்பதாக கருதுகின்றனர். ஜே.வி.பி, ஹெல உறுமய போன்ற பௌத்த சிங்களவாத அமைப்புக்கள் நீண்ட காலமாகவே வடகிழக்கு பிரிக்கப்பட வேண்டும் என்பதை தமது முக்கிய அரசியல் கோரிக்கையாக முன்வைத்திருந்தன.

இந்த பின்புலத்தில்தான் சிறிலங்காவின் சட்ட நியமங்களுக்கு அமைவாக தற்காலிமாக இணைக்கப்படதாக கருதப்படும் வடகிழக்கு மாகாணம் வடக்கு, கிழக்கு என இரண்டு மாகாணங்களாக சட்டரீதியாகவே பிரிக்கப்பட்டது. இதுதான் வடகிழக்கு பிரிப்பிற்கு சிங்களம் சொல்லிவரும் விளக்க உரை.

இந்த இடத்தில் நாம் கேட்க வேண்டிய கேள்வி, 1988 இற்கு முன்னர் வடகிழக்கு பிரிந்தா இருந்தது? அதற்கு முன்னர் தமிழர் அரசியல் என்பது இரண்டு வௌ;வேறு பகுதிகளாகவா இருந்தன? ஒருவேளை இந்தியத் தலையீடு நிகழாது இருந்திருந்தால் வடகிழக்கு என்ற அடிப்படையிலான ஒருங்கிணைந்த அரசியல் உருவாகமாலே போயிருக்குமா?

உண்மையில் இவையெல்லாம் ஒன்றுமற்ற வாதங்கள். என்னைக் கேட்டால் வடகிழக்கு என்பது எப்போதுமே ஒன்றுதான் என்பேன். நமது விடுதலை அரசியலில் அது இணைக்கப்படவுமில்லை பிரிக்கப்படவும் இல்லை.

நமது அரசியல் வரலாற்றை ஆழ்ந்து நோக்காமல் அவ்வாறான வாதங்களுக்கு ஆட்படுவோமானால், பெரும்பாலான சிங்கள கருத்தியலாளர்கள் நம்புவது போன்று ஏதோ இந்தியாதான் தமிழர் தாயகக் கோட்பாட்டிற்கான அடித்தளத்தை உருவாக்கியது, என்ற சிறுபிள்ளைத்தனமான வாதத்தில் நாமும் எடுபட்டுப் போகவேண்டி வரும்.

நமது பாடசாலை மாணவர்களுக்கு இலங்கையின் சுதந்திர தினமாக சொல்லிக் கொடுக்கப்படும் 1948 உடன் பிரித்தானியர்கள் இத்தீவை விட்டு முன்கதவால் வெளியேறினர். அதற்கு பின்னரான இலங்கையில் அரசியல் வரலாறு என்பதே தமிழர் தேசியம், சிங்களப் பௌத்த பெருந்தேசியவாதம் ஆகிய இரண்டு அரசியல்களுக்கும் இடையிலான மோதல்கள், முரண்பாடுகள் மற்றும் பேச்சுக்கள் என்பவற்றின் அரசியலாகத்தான் நகர்ந்து வருகிறது.

சிங்களப் பெருந்தேசியவாதத்துடன் ஒரு சமரசத்தைச் செய்து கொள்வதன் மூலம் தமிழர்களின் அரசியல் அபிலாஷைகளை வென்றெடுக்க முடியமென்று நம்பிய அப்போதைய மிதவாத தலைமைகள் தமது நம்பிக்கைளில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்தே வட்டுக்கோட்டை தீர்மானத்தை நிறைவேற்றின. தமிழ் மக்களின் பிரச்சனைக்குப் பிரிந்து சென்று தனியரசமைப்பதைத் தவிர வேறு வழியில்லை என்ற முடிவு முன்வைக்கப்பட்டது.

இந்த முடிவுக்கு அதரவாகத்தான் தமிழ் மக்கள் தமது ஏகோபித்த ஆதரவை 77இல் இடம்பெற்ற தேர்தல் மூலம் வழங்கியிருந்தனர். எப்போது தமிழ் மக்கள் சர்வதேசம் புகழ்ந்துரைக்கும் தேர்தல் நடைமுறை மூலம் தமது சுதந்திர அரசுக்கான ஆதரவை வெளிப்படுத்தினரோ அன்றே தமிழர் தேசத்திற்கான தெளிவான புவியியல் வரையறை உறுதியாகிவிட்டது.

அதுவரை மொழி வழித் தேசியமாக பரிணமித்திருந்த தமிழர் தேசியம் மொழியுடன் நிலத்தை இணைத்துக்கொண்ட தேசியமாக உருப்பெற்றது. அப்போதுதான், பின்னர் நடைபெற்றதெல்லாம் அதனை கருத்தியல் ரீதியிலும் போராட்ட ரீதியிலும் உறுதிப்படுத்தும் நிகழ்வுகள்தான். இன்று ஈழத்தமிழர் ஒரு தனியான தேசம் ஆவர்.

தேசம் என்பது தமக்கான சொந்த அரசியல் அதிகாரத்தைக்;கொண்ட, தமது வாழ்வைத் தமது முடிவுகளின் படி தீர்மானிப்பதற்கான உரிமையைக் கொண்ட, தனியான மக்கள் சமூகம் என்னும் விரிவான அர்த்தத்தைக்கொண்டதாகும். இந்த பின்புலத்தில்தான் தமிழர் தாயகம், தமிழர் தேசியம், தமிழர் சுயநிர்ணயம் என்பன தமிழர் விடுதலைப் போராட்டத்தின் அடித்தளமாக இருக்கின்றன.

சரி, மீண்டும் நாடகத்திற்கு வருவோம். சிறிலங்கா அரசின் நன்மதிப்பு சமீகாலமாக சர்வதேச அளவில் குறைந்து வருகின்ற சூழலில், குறிப்பாக இனப்பிரச்சினைக்கு அரசியல் ரீதியான தீர்வொன்று காணப்பட வேண்டுமென்பதனை இந்தியா உட்பட அமெரிக்க ஜரோப்பிய சக்திகள் வலியுறுத்தி வருகின்ற சூழலில்தான், சிங்களம் இந்த கிழக்கு மாகாண சபை தேர்தல் என்னும் நாடகத்தை அரங்கேற்றியிருக்கிறது.

இதன் மூலம் சிங்கள ஆளும் வர்க்கம் இரண்டு விடயங்களை எதிர்பார்க்கிறது. ஒன்று தான் மேற்கொண்டுவரும் வலிந்த யுத்த நடவடிக்கைகளுக்கு நியாயம் கற்பிப்பது. அதாவது சிங்களத்தின் யுத்த நடவடிக்கைளை சர்வதேசம் விமர்சித்து வரும் சூழலில் யுத்தத்தின் மூலமே இவ்வாறானதொரு ஜனநாயக சூழலை தம்மால் உருவாக்க முடிந்தது என்ற வாதத்தை சிங்களம் முன்வைக்க முயல்கின்றது.

இதன் மூலம் வடக்கில் தான் மேற்கொண்டு வரும் இராணுவ நடவடிக்கைளுக்கான புறச்சூழல் ஆதரவை திரட்டிக்கொள்ள முயல்கின்றது. அடுத்து சிங்களத்தின் தேர்தல் இலக்கானது, கிழக்கு வாழ் தமிழ் மக்கள் மத்தியில் குழப்பங்களை ஏற்படுத்துவதன் மூலம் விடுதலைப் புலிகளை அவர்கள் மத்தியில் இருந்து தனிமைப்படுத்துவது. இந்த காலத்தில் சில சலுகைகளை வழங்குவதன் மூலம் அவர்கள் மத்தியில் ஒரு வகையான உரிமைகள் சார்ந்த வெறுப்பினை ஏற்படுத்துதல்.

இது காலம் காலமாக சிங்கள பெருந்தேசியவாதிகளும், சிங்கள போரியல் நிபுணர்களும் கையாண்டு தோல்விடைந்து போன துருப்பிடித்துப்போன ஆயுதம் என்பதை நான் சொல்லித்தான் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டுமென்பதில்லை.

இந்தியா புலிகளை புறம்தள்ளி தனக்கு சார்பான மாகாண சபை நிர்வாகமொன்றை உருவாக்க முற்பட்ட போதும் இந்தியாவிடம் இருந்த உள்நோக்கம் அத்தகைய ஒன்றுதான். மாகாண சபை மூலம் விடுதலைப் புலிகளை மக்கள் மத்தியிலிருந்து அன்னியப்படுத்தி அவர்களை நிரந்தரமாக அழித்துவிட முடியும் என்றே இந்திய ஆளும் வர்க்கம் நம்பியது.

இப்பொழுது அதே இந்தியாவின் தலையீட்டினால் விழைந்த 13 ஆவது திருத்தச் சட்டத்தின் மூலம் உருவாக்கப்பட்ட அதே மாகாண சபை முறைமையை இன்னும் சுருக்கி மீண்டும் சிங்களம் அதே தந்திரோபாயத்தை கைக்கொள்ள முயல்கின்றது. இதுதான் நான் மேலே குறிப்பிட்ட பின்நோக்கி நகரும் சிங்கள மேலாதிக்க வரலாற்றின் முரண்நகை.

இந்த இடத்தில் நாம் குறித்துக்கொள்ள வேண்டிய முக்கியமான விடயம் ஒன்றுண்டு. ஒருவேளை இந்த மாகாண சபை நடைமுறை அன்று தமிழர் தேசத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தால் இன்று நாம் சந்திக்கும் வட, கிழக்கு பிரிப்பை 90-களிலேயே நாம் சந்தித்திருப்போம்.

பிராந்திய சக்தியான இந்தியாவுடன் ஒரு ஒப்பந்தத்திற்கு சிங்களம் சென்றபோதே இந்தியத் தலையீட்டின் எல்லையை மட்டுப்படுத்துவதற்கான அதிகாரம் குறித்து தெற்காசியாவின் நரியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவிடம் தெளிவான நிலைப்பாடு இருந்தது.

சிறிலங்காவின் சட்ட ஆளுகைக்கு உட்பட்டே இந்திய - சிறிலங்கா ஒப்பந்தம் இருந்ததால் அது சிங்கள பௌத்த பெருந்தேசியவாத நலன்களுக்கு பாதகமாக செல்லுமிடத்து எந்த நேரத்திலும் வடகிழக்கு என்பதை பிரிந்து இந்திய-இலங்கை ஒப்பந்தத்திற்கு நெருக்கடிகளை கொடுக்க முடியும் என்பதில் சிறந்த இராஜதந்தரியான ஜே.ஆர். தெளிவாகவே இருந்திருக்கிறார்.

ஆனால் ஜே.ஆர். மற்றும் ராஜீவ் தோற்றுப்போன இடம் பிரபாகரன் அதன் சூட்சுமங்களை அறிந்து வைத்திருந்ததுதான்.

இதனால் விடுதலைப் புலிகளை இவ் ஒப்பந்தத்தை ஏற்கச் செய்வதன் மூலம் தமிழர் விடுதலைப் போராட்டத்தின் வீச்சை கட்டுப்படுத்தி காலப்போக்கில் அதனை நிரந்தரமாக அழித்தொழித்து விட முடியுமென்ற ஜே.ஆர். இராஜதந்திரம் தோல்வியடைந்தது. மறுபுறம் தமிழர் தேசத்தின் அரசியலை தனது மேலாதிக்கத்தின் கீழ் வைத்திருப்பதற்கான ராஜீவ் இராஜதந்திரமும் தோல்வியடைந்தது. ஜே.ஆர் தந்திரமும் ராஜீவ் தந்திரமும் ஒன்றுக்கு ஒன்று வேறுபட்டிருந்தாலும் இரண்டுமே கை வைத்தது தமிழர்களின் தலையில்தான்.

இந்த இடத்தில் ஒரு கேள்வி எழலாம், ஜே.ஆரின் இராஜதந்திரம் தோல்வியடைந்த பின்னரும் ஏன் ஜக்கிய தேசியக்கட்சி வடகிழக்கு பிரிப்பு விடயத்தை முன்னிலைப்படுத்தவில்லை?.

ஜே.ஆரின் எச்சசொச்ச இராஜதந்திரங்களை தொடர்ந்தும் பேணிவரும் ஜக்கிய தேசியக்கட்சி மீண்டும் ஒரு சந்தர்ப்பம் வரும்போது அதனை பயன்படுத்திக்கொள்ள முடியுமென்றே நம்பியிருந்தது.

இந்தியா பிரபாகரன் கைது, பொட்டம்மான் கைது என்பவற்றை பேணி வருவது போன்று. இன்று மகிந்த தலைமையிலான அணியினர் மேற்கொள்ளும் இந்த தடாலடி நடவடிக்கைகள் தனது நீண்டகால இராஜதந்திரங்களை பாழ்படுத்தி விட்டதே என்பதுதான் ஜக்கிய தேசியக் கட்சியின் தற்போதைய கவலை.

இன்று கிழக்கு தேர்தல் என்ற போர்வையில் நடைபெறுவதும் நான் மேலே குறிப்பிட்ட அந்த துருப்பிடித்துப் போன இராஜதந்திரத்தின் எச்சசொச்சங்கள்தான்.

ஆனால் ஜக்கிய தேசியக் கட்சி கடைப்பிடித்தது போன்று மிகவும் நுட்பமான இராஜதந்திர அணுகுமுறையல்ல இது. சிங்களம் என்ன முயற்சிகளையும் செய்யலாம் அது வேறு விடயம், ஆனால் நாம் நமது விடயங்களில் தெளிவாக இருப்போம்.

இன்று இலங்கை அரசியலில் தலையீடு செய்யும் சகல அன்னிய சக்திகளும் அரசியல் தீர்வு பற்றித்தான் பேசிவருகின்றன.

பிராந்திய சக்தியான இந்தியா வலியுறுத்தும் அரசியல் தீர்விற்கும் மேற்கு வலியுறுத்தும் அரசியல் தீர்வு முயற்சிக்கும் இடையில் சில வேறுபாடுகள் இருப்பினும் அடிப்படையில் இரண்டுமே தமிழ் மக்களின் போராட்டத்தைதோ, அவர்களின் அரசியல் நியாயப்பாட்டையோ கருத்தில் கொண்டவையல்ல என்பதுதான் நாம் கவனம் கொள்ள வேண்டிய புள்ளி.

இலங்கையில் ஒரு சுமூக நிலைமை ஏற்பட வேண்டுமென்பதுதான் இந்த இரண்டு சக்திகளினதும் எதிர்பார்ப்பாக இருக்கிறேதே தவிர தமிழ் மக்களின் அரசியல் கோரிக்கைகளின் அடிப்படை அம்சங்களல்ல.

எனவே கிழக்கு தேர்தல் வரலாம் வடக்கு தேர்தல் வரலாம். அது ஒவ்வொரு காலகட்டத்pலும் அந்த காலத்துக்குரிய சிங்களப் பௌத்த மேலாதிக்க தலைமைகள் தமிழர் விடுதலைப் போராட்டத்தை அழித்தொழிப்பதற்காக முயன்று பார்க்கும் வடிவங்கள்தான். எனவே எந்தச் சந்தர்ப்பத்திலும் தமிழ் மக்களின் அடிப்படை அரசியல் அபிலாஷைகளான தமிழர் தேசியம், தமிழர் தாயகம், தமிழர் சுயநிர்ணயம் என்பவற்றை நாம் மறக்காமல் இருந்தால் சரி.

நன்றி: தினக்குரல்

0 Comments: