Friday, April 18, 2008

இராணுவ இக்கட்டுநிலையை பதற்றத்துடன் மதிப்பிடுகிறார் ஜனாதிபதி

2002 இல் கைச்சாத்திடப்பட்ட யுத்தநிறுத்த உடன்படிக்கையை உத்தியோகபூர்வமாக கைவிட்டு கிட்டத்தட்ட மூன்று மாதங்களில், வடக்கின் மீதான இராணுவ நடவடிக்கைகள் சேற்றுக்குள் புதைந்து போன நிலையில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தில் வேகமான வெற்றி என்ற இலங்கை அரசாங்கத்தின் எதிர்பார்ப்புகள் மங்கிப் போய்க்கொண்டிருக்கின்றன.

இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ, இந்த நிலைமையைப் பற்றி கலந்துரையாடுவதற்காக வடக்கில் யுத்தக் களத்தில் இருந்த இராணுவத் தளபதிகளுடன் தேசிய பாதுகாப்புச் சபையின் கூட்டமொன்றை மார்ச் 28 ஆம் திகதி தனது இல்லத்தில் கூட்டினார். வட பிராந்திய தளபதிகள் நால்வருடன் இரு பிரதான கடற்படைத் தளபதிகளும் இக்கூட்டத்திற்கு வருகை தந்திருந்தனர்.

யுத்தத்தின் ஏனைய பகுதிகளைப் போலவே, தேசிய பாதுகாப்பு சபை கூட்டமும் கடுமையான தணிக்கைக்கு உள்ளாக்கப்பட்டிருந்தது. இனவாத யுத்தத்தை மீண்டும் முன்னெடுத்துள்ள மற்றும் எந்தவொரு மட்டுப்படுத்தப்பட்ட விமர்சனங்களையும் கூட யுத்தத்தைக் கீழறுக்கும் முயற்சியாகவும் தேசத் துரோகமாகவும் கண்டனம் செய்யும் ராஜபக்‌ஷவின் ஆட்டங்கண்டுபோயுள்ள ஆளும் கூட்டணிக்கு இராணுவ நடவடிக்கைகள் திட்டமிட்டவகையில் இடம்பெறவில்லை என்ற எந்தவொரு சமிக்ஞையும் கூட அரசியல் விளைவுகளை ஏற்படுத்துவதாகும்.

இந்த சூழ்நிலையில், கடந்த சிலவாரங்களுக்கு முன்பு வெளியான சண்டே டைம்ஸ் பத்திரிகையின் `நிலைவர அறிக்கை' தேசிய பாதுகாப்பு சபை கூட்டத்தில் நெருக்கடியான சூழல் நிலவியதை சமிக்ஞை செய்கின்றது. புலிகள் கிழக்கில் இருந்து வெளியேற்றப்பட்ட பின்னர் கடந்த ஜூலையில் மன்னார் பிரதேசத்தில் வடக்குக்கான இராணுவ நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டதோடு வடக்கில் ஏனைய பிரதேசங்கள் மீதும் ஜனவரி மாதம் நடவடிக்கைகள் தொடங்கின. 2008 கடைசிப் பகுதியில் தான் ஓய்வு பெறுவதற்கு முன்னதாக புலிகளை இராணுவ ரீதியில் தோற்கடிப்பதாக இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சரத் பொன்சேகா முன்னறிவித்திருந்தார்.

தேசிய பாதுகாப்புச் சபை கூட்டத்தில் உணர்ச்சியூட்டும் வெற்றிகள் பற்றி பெருமைபட்டுக்கொள்ள வடக்கு இராணுவ தளபதிகளால் முடியவில்லை. கிழக்கில் இராணுவத்தின் துரிதமான முன்னேற்றம், 2004 இல் புலி உறுப்பினர்களுக்கிடையில் பலவீனமாக்கும் பிளவு ஒன்றை ஏற்படுத்துவதற்கான பெரும் நடவடிக்கையில் தங்கியிருந்தது. இதன் காரணமாக புலிகள் ஆயிரக்கணக்கான உறுப்பினர்களையும் ஆயுதங்களையும் இழந்தனர். புலிகளில் இருந்து பிரிந்த கருணா குழு இராணுவத்துடன் சேர்ந்து புலிகளின் நிலைகளைத் தாக்குவதில் ஒரு துணைப்படையாக செயற்பட்டது, வடக்கில், இரு பக்கமும் பெரும் உயிரிழப்புக்களை ஏற்படுத்தும் அழித்தொழிக்கும் யுத்தத்தில் புலிகளின் பலமான நிலைகளுக்கு எதிராக நான்கு நிலைகளில் இருந்து இராணுவம் போராடிக்கொண்டிருக்கின்றது.

சண்டே டைம்ஸ் இக்பால் அத்தாஸின்படி, பாதுகாப்புச் சபை கூட்டம் காலநிலையின் மீது குற்றஞ்சாட்ட தீர்மானித்துள்ளது. இராணுவத்தளபதிகளில் பெரும்பான்மையானவர்கள் "எதிர்பாராத எதிரி -இடைவிடாத மழை -வன்னியில் இராணுவ நடவடிக்கைகளுக்கு தடை ஏற்படுத்தியது என்ற கருத்திலேயே இருந்தனர். மன்னார், மணலாறு ஆகிய பகுதிகளிலும் இந்த நிலைமை இருந்தது.. காவலரண்களுக்குள் வெள்ளம் புகுந்துவிட்டது. கண்காணிப்பு, நெருக்கமான விமான உதவி, உயிரிழந்தவர்களை அகற்றுதல் போன்ற விமானப்படை நடவடிக்கைகள் மோசமான காலநிலையால் பாதிக்கப்பட்டன. பாதைகள் சேறாகின, கவச வாகனங்களை அனுப்பிவைப்பதும் பிரச்சினையை ஏற்படுத்தியது" என அவர் எழுதியுள்ளார்.

போதுமானளவு தேசப்பற்றுடன் இருக்கவில்லை என ஊடகங்களையும் இராணுவம் குற்றஞ்சாட்டுகிறது. "அவர்களால் அனுப்பி வைக்கப்படும் யுத்தக் களத்தில் வெற்றிகளை சித்திரிக்கும் படங்களை ஒளிபரப்புவதில்லை, மாறாக முன்னைய இராணுவ நடவடிக்கை தொடர்பான படங்கள் ஒளிபரப்பப்படுகின்றன என தேசிய தொலைக்காட்சி சேவையான ரூபவாஹினி மீதும் ஒரு சிரேஷ்ட இராணுவ அதிகாரி பிரச்சினை ஒன்றை எழுப்பினார்," என இக்பால் எழுதியுள்ளார். கோபமடைந்த ஜனாதிபதி, இது தொடர்பாக பதிலளிக்க உடனடியாக ரூபவாஹினி அதிகாரிகளுக்கு அழைப்பாணை அனுப்பினார்.

முப்படைத் தளபதியும் பாதுகாப்பு அமைச்சருமான ஜனாதிபதி யுத்ததை முன்னெடுத்துள்ளதால் "பாதுகாப்புக்கு பெருந்தொகையான நிதி செலவிடப்பட்டுள்ள நிலையில், பெற்றுக்கொண்டுள்ள முன்னேற்றம் பற்றி ஆராய்ந்து தெரிந்துகொள்ள பொதுவில் விருப்பங்கொண்டவராக இருப்பார். சுய கட்டுப்பாடுகளால் இதோடு சம்பந்தப்பட்ட சில பகுதிகளைப் பற்றி குறிப்பிட முடியாது. அவை உயிரிழப்புகள் பற்றிய முக்கிய விடயங்களையும் உள்ளடக்கியிருந்தது," என இக்பால் எச்சரிக்கையுடன் குறிப்பிடுகின்றார். இராணுவ உயர் மட்டத்தினருடன் தொடர்புகள் வைத்துள்ள பழைமைவாத விளக்கவுரையாளரான இக்பால், ஆயுதக் கொள்வனவு சம்பந்தமான அவதூறுகள் பற்றி அம்பலப்படுத்தியமைக்காக கடந்த ஆண்டும் அரசாங்கத்தின் கடுமையான அடக்குமுறைகளுக்கு உள்ளானார்.

ஏனைய தளபதிகளும் வடக்கில் இராணுவ இக்கட்டு நிலைபற்றி குறிப்பிட்டனர். இதே தேசிய பாதுகாப்புச் சபை கூட்டம் பற்றி எழுதிய அரசுக்குச் சொந்தமான சண்டே ஒப்சேவர், "மடுப்பிரதேசத்தை துருப்புக்களால் எப்போதும் கைப்பற்ற முடியும்" என்பது பற்றி ராஜபக்‌ஷ அக்கறை காட்டினார். "துருப்புக்கள் உயிரிழப்பது அதிகரிப்பது பற்றியும் ஜனாதிபதி கவலையடைந்தார்" என தெரிவித்துள்ளது.

மன்னார் மீதான இராணுவ நடவடிக்கைகள் கடந்த எட்டு மாதங்களாக குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் இன்றி நகர்ந்துகொண்டிருக்கின்றன. தற்போது மோதல்கள் மடு தேவாலயத்திற்கு அருகில் இடம்பெறுகின்றன. இது பிரதேசத்தின் தூய்மையைக் கெடுப்பதாக இராணுவமும் புலிகளும் ஒருவருக்கு எதிராக ஒருவர் குற்றஞ்சாட்டும் நிலைக்கு வழிவகுத்துள்ளது. கத்தோலிக்கர்களால் புனிதமாகக் கருதப்படும் உருவச்சிலையுடன் பாதிரிமார்கள் தேவாலயத்தை விட்டு வெளியேறியுள்ளனர்.

இராணுவம் மணலாறு பகுதியிலும் புலிகளின் கடுமையான எதிர்த் தாக்குதலை சந்திப்பதாக கடந்த திங்களன்று வெளியான ஐலண்ட் பத்திரிகை செய்தி வெளியிட்டிருந்தது. அந்தப் பத்திரிகை பிரிகேடியர் நாணயக்காரவிடம் இருந்து மேற்கோள் காட்டியிருந்தது. "எதிரிகள் மீது இராணுவம் பெரும் சேதங்களை ஏற்படுத்தியிருந்தாலும், மணலாறு முன்னரங்கில் இயங்கும் துருப்புக்களை புலிகள் உறுதியாக எதிர்க்கின்றனர்" என அவர் தெரிவித்திருந்தார்.

டோரா அதிவேகப் படகு ஒன்றை புலிகள் மூழ்கடித்ததில் மார்ச் 22 ஆம் திகதி கடற்படையும் பின்னடைவை சந்தித்தது. இந்தத் தாக்குதலில் குறைந்தபட்சம் 10 கடற்படையினர் உயிரிழந்துள்ளனர். அது தற்கொலைக் தாக்குதலா அல்லது கடற்கண்ணிவெடியா என்பது பற்றி, புலிகள் பயன்படுத்தும் வழிமுறைகள் தொடர்பாக ஊகங்கள் தொடர்கின்றன. அந்தப் படகு முல்லைத்தீவில் புலிகளின் கடற்படைத் தளம் உள்ள பகுதியில் ஆழ் கடலில் மூழ்கடிக்கப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலால் வடக்கில் யாழ்ப்பாணக் குடாநாட்டில் இருக்கும் இராணுவத்தினருக்கான விநியோகத்துக்கு புலிகள் தொந்தரவு ஏற்படுத்தக் கூடும் என்ற கவலை கொழும்பில் எழுந்துள்ளது. புலிகள் இப்போது யாழ்ப்பாணத்துக்கான அனைத்து தரைப் பாதைகளையும் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்.

அண்மையில் உடனடித் தேவையின் அடிப்படையில் பாகிஸ்தானிடம் இருந்து உதவி கோரியிருப்பதானது இராணுவத்தினுள் காணப்படும் நெருக்கடிக்கான இன்னுமொரு அறிகுறியாகும். இந்திய, ஆசிய செய்திச் சேவையின் படி, 60 மில்லிமீற்றர் மோட்டார் குண்டுகள் மற்றும் கிரனேட்டுகளுமாக மொத்தம் 150,000 ஐ உடனடியாக விநியோகிக்குமாறு இராணுவத் தளபதி பொன்சேகா கோரியிருக்கின்றார். 25 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான 81 மில்லிமீற்றர், 121 மில்லிமீற்றர் மற்றும் 130 மில்லிமீற்றர் மோட்டார் குண்டுகளும் ஏனைய கோரிக்கைகளில் அடங்கும். கடந்த ஆண்டு, இராணுவம் 50 மில்லியன் டொலர் பெறுமதியான குண்டுகளை பாகிஸ்தானில் இருந்து கொண்டு வந்தது.

மிகப் பெருந்தொகையான வெடி பொருட்களை பெறுவதானது புதிய தாக்குதல்களுக்குத் தயாராகுவதை சுட்டிக்காட்டுகிறது. புலிகளின் நிலைகள் மீது தாக்குதல் தொடுப்பதற்கு மட்டுமன்றி உள்ளூர் மக்களை அச்சுறுத்தவும் இலங்கை இராணுவம் கண்மூடித்தனமான ஆட்டிலறி மற்றும் மோட்டார் தாக்குதல்களிலும் அதே போல் விமானத் தாக்குதல்களிலும் தங்கியிருக்கின்றது. கடந்த 2 ஆண்டுகளில் மக்கள் தமது வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர்.

கடந்த மாத முற்பகுதியில், ஜெனரல் பொன்சேகா இந்திய பாதுகாப்பு அதிகாரிகளை சந்தித்து மேலதிக இராணுவ உபகரணங்களைக் கோரினார். இந்தியா இராணுவ பயிற்சிகளை வழங்குவதுடன் புலனாய்வுத் தகவல்களை பரிமாறிக்கொள்வதோடு இலங்கைப் படைகளுக்கு தாக்குதலுக்குப் பயன்படாத உபகரணங்களையும் வழங்குகிறது. தென்னிந்தியாவில் உள்ள தமிழர்கள் மத்தியில் எதிர்ப்பைப் பற்றி கவலைகொண்டுள்ள புதுடில்லி, யுத்தத்திற்கு வெளிப்படையாக ஆதரவளிக்கத் தயங்குவதோடு பொன்சேகாவின் புதிய வேண்டுகோளை மறுத்துள்ளது போல் தெரிகின்றது.

பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க இலங்கையின் இன்னுமொரு ஆயுத விநியோகஸ்தரான இஸ்ரேலுக்கு கடந்த மாதம் நான்கு நாள் விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார். லங்கா லொஜிஸ்டிக் கம்பனியின் (படைக்கல விநியோக நிறுவனம்) பிரதான நிர்வாக அதிகாரி ரன்சித் விக்கிரமசிங்க மற்றும் ஏனைய உயர்மட்ட இராணுவ அதிகாரிகளும் அந்த குழுவில் அடங்குவர். பாதுகாப்பு அமைச்சின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள லங்கா லொஜிஸ்டிக் கம்பனியே இராணுவத்துக்கான பாதுகாப்பு உபகரணங்கள் அனைத்தையும் கொள்வனவு செய்யும் நிறுவனமாகும்.

விக்கிரமசிங்க இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் எடுஹர்ட் பராக்கை சந்தித்ததோடு, அரசுக்கு சொந்தமான இஸ்ரேல் ஏரோஸ்பேஸ் இன்டஸ்ரீஸ் மற்றும் ஏனைய இராணுவ விநியோக நிலையங்களுக்கும் சென்றார். இலங்கை 1980 களில் இருந்து கடற்படை கப்பல்கள், யுத்த விமானங்கள் மற்றும் துப்பாக்கிகளையும் இஸ்ரேலில் இருந்து கொண்டுவந்துள்ள போதிலும், இலங்கை பிரதமர் ஒருவர் அந்நாட்டுக்கு விஜயம் செய்தது இதுவே முதல்தடவை ஆகும். இராணுவத் தளபாடங்கள் மற்றும் உதவிகள் நிகழ்ச்சி நிரலில் முதலில் இடம்பிடித்திருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

மிக் - 29 குண்டுவீச்சு விமானங்கள் ஐந்தை கொள்வனவு செய்வதற்கு இலங்கை அரசாங்கம் ரஷ்யாவுடன் ஏற்பாடுகளை நிறைவேற்றியிருப்பதாக மார்ச் 14 அன்று ஜேன்ஸ் டிபென்ஸ் வீக்லி சஞ்சிகை செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த பிரமாண்டமான இராணுவக் கொள்வனவு அரசாங்கத்தின் நிதியில் மேலும் சுமைகளை திணிக்கும். ராஜபக்‌ஷ 2008 ம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் பாதுகாப்புக்காக 167 பில்லியன் இலங்கை ரூபாய்களை (16 பில்லியன் அமெரிக்க டொலர்) ஒதுக்கியுள்ளார். இது 2007 ம் ஆண்டையும் விட 20 வீத அதிகரிப்பாகும். அதிகரித்துவரும் வரவு செலவுத்திட்ட பற்றாக்குறையை நிரப்புவதன் பேரில் உள்நாட்டிலும் மற்றும் சர்வதேச நிதிச் சந்தைகளிலும் உயர்ந்த வட்டி வீதத்தில் அரசாங்கம் கடன் வாங்கத் தள்ளப்பட்டுள்ளது.

இராணுவச் செலவும் மற்றும் சர்வதேச ரீதியில் எண்ணெய் மற்றும் உணவுப் பொருட்களின் விலை அதிகரிப்பதும் நாட்டின் ஆண்டு பணவீக்கத்தை மார்ச்சில் 28 வீதம் வரை உயர்த்தியுள்ளன. யுத்தத்திற்கு அரசியல் தீர்வு காண்பதற்கு பதிலாக வாழ்க்கை தரம் சீரழிந்து வருவது தொடர்பாக வளர்ச்சிகண்டுவரும் வெகுஜன அதிருப்தியை திசை திருப்பும் முயற்சியில் இராணுவ நடவடிக்கைகளை ராஜபக்‌ஷ உக்கிரமாக்குகின்றார். எந்தவொரு இராணுவ பின்னடைவும் மற்றும் உயர்ந்த எண்ணிக்கையிலான உயிரிழப்புக்களும் அரசாங்கத்தின் அணியிலும் கூட மேலும் எதிர்ப்புக்கு எண்ணெய் வார்க்கும்.

1948 ல் சுதந்திரம் அடைந்ததில் இருந்தே இலங்கை ஆளும் தட்டு பயன்படுத்தி வந்த இனவாத அரசியலின் உற்பத்தியே ராஜபக்‌ஷவின் கொள்கைகளாகும். நாட்டின் எந்தவொரு சமூகப் பிரச்சினையையும் தீர்க்கவோ மற்றும் அடிப்படை ஜனநாயக உரிமைகளை வழங்கவோ இலாயக்கற்றுப் போன ஆட்சியில் இருந்த கொழும்பு அரசாங்கங்கள், தொழிலாளர் வர்க்கத்தைப் பிரிப்பதற்காக தமிழர் விரோத இனவாதத்தை கிளறிவிடுவதை நாடின.

தனது சுதந்திர சந்தை அரசியலில் அழிவுகரமான தாக்கத்திலிருந்து கவனத்தை திசைதிருப்புவதன் பேரில், ஜனாதிபதி ஜே.ஆரின் அரசாங்கம் 1983 ல் யுத்தத்தை ஆரம்பித்து வைத்தது. 70,000 க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்த போதிலும் அவருக்கு அடுத்து வந்தவர்கள் எவராலும் இந்த மோதல்களுக்கு முடிவுகாண முடியாமல் போனதற்கு துல்லியமான காரணம், அவர்கள் அனைவரும் அதே பிற்போக்கு நோக்கத்தில் மூழ்கிப் போயிருந்தமையே ஆகும்.

நன்றி உலக சோசலிச இணையத் தளம்.

0 Comments: