Friday, April 4, 2008

யாழ் குடாநாட்டு நிலைவரம்

யாழ், குடாநாட்டு மக்கள் நாள் தோறும் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருகிறார்கள்.

அவர்கள் படுகின்ற துயரங்களை எண்ணில் அடக்கிக்கொள்ள முடியவில்லை. கடந்த 2006. டிசெம்பர் முற்பகுதியில் படையினருக்கும்,புலிகளுக்குமிடையில் யாழ் முன்னரங்கப் பகுதிகளில் கடும் மோதல்கள் வெடித்ததை தொடர்ந்து A- 9 பாதையூடான குடா நாட்டுக்கான அனைத்து போக்குவரத்துகளும் துண்டிக்கபட்டன.

அன்று முதல் இன்று வரை தொடர்ந்து, குடாநாட்டுக்கான தரை வழிப் போக்குவரத்துப் பாதை மூடப்பட்டிருப்பதால் குடாநாட்டு மக்கள் பல்வேறு இடர்களை எதிர்கொள்ளவேண்டிய சூழ் நிலை ஏற்ப்பட்டுள்ளது.

பாதுகாப்பு முதல் அடிப்படை பிரச்சினைகள் வரை பல்வேறு அழுத்தங்கள் அவர்களை நெருக்கிவருகிறது. மக்களின் சுதந்திரமான பாதுகாப்பு என்பது எப்ப்போதும் ஒரு திறந்தவெளிச் சிறையில் தான்.

வரையறுக்கப்பட்ட சுதந்திர வரம்புக்குள் அந்த மக்களின் வாழ்க்கை நாளாந்தம் நகர்ந்து கொண்டிக்கிறது. களத்திலிருந்து நிலைமைகளை ஆய்ந்தால் துயரம் தோய்ந்த அனுபவம் பட்டறிவுப் பாடமாகும்.

உணவுக்காக மாத்திரம் வாய் திறக்கும் கலாச்சாரம் இவர்களின் தற்போதைய நாகரீகம். பொருளாதார நெருக்கடிகள் இவர்களது குரல்வளைகளை நெரித்துக் கொண்டிருக்கின்றன.

போர் வளையத்துக்குள் குடா நாட்டு மக்களின் வாழ் நாள்கள் ஆபத்தானநிலையில் கழிந்து கொண்டிருக்கின்றன. எப்போது என்ன நடக்கும் என்ற அச்சம் ஆட்கொல்லி நோய் போல அவர்களை பீடித்துள்ளது. அத்தியாவசிய பொருட்களுக்கான தட்டுப்பாடுகள் இன்னமும் தொடர்கின்றன. பொருளாதர வளத்தோடும் பலத்தோடும் வாழ்ந்த மக்கள் இன்று ஆவல நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளது கண்டு பல தரப்பினரும் வேதனை அடைந்துள்ளார்கள்.அவலங்கள் தொடர் கதையாகின்றன.

இந் நிலையில் பலரும் கொதித்து போய் உள்ளனர். குடாநாட்டு மக்களின் அத்தனை தேவைகளையும் நிறைவு செய்வதற்கான அத்தனை வழங்கல்களும் கடல் வழியாகவே மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. இலங்கை அரசின் கடல் வழி வளங்கல்கள் குடாநாட்டு மக்களின் தேவைகளை நிறைவு செய்து கொள்வதற்கு தற்போது போதுமானதாக இல்லை.

இவ்விடயம் பல தரப்பாலும் அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்ட போதிலும் இதுவரை இது தொடர்பில் ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எவையும் மேற்கொள்ளப்படவில்லை. இரவு நேர ஊரடங்கு, இரவு பகல் புலிவேட்டை, இவற்றில் சாதாரண சாமானிய மக்கள் அகப்பட்டு தினறும் நிலை தொடர்கிறது. இவர்களது கடமை நேரங்கள் இராணுவ வாகன தொடரணிகளின் போக்குவரத்துக்காக ஏற்படுத்தப்படும் வீதி போகுவரத்துத் தடைகளால் பறிக்கப்பட்டு. மக்களின் சுதந்திர நடமாட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

தொடரும் திடீர் கைதுகள் காணாமல் போதல் சம்பவங்கள் மக்களை அச்சமடைய வைத்துள்ளது.

நாள் தோறும் கொலைகள் இடம்பெறுகின்றன. திறந்த வெளிச்சிறைச்சாலையில் மிருகங்கள் போல் மனிதர்கள் நாள் தோறும் வேட்டையாடப்படுகிறார்கள்.

கொலைக்குள் மறைந்திருப்பவர்களின் நாமம் அடையாளம் தெரியாத நபர்களாக சித்தரிக்கப்படுகிறது. குடா நாட்டு கடல் அன்னையின் மடியின் தவம் கிடக்கும் மீனவ சமூகத்திற்கு கடலில் ஏற்ப்பட்டுள்ள பாதுகாப்பு வலையங்கள் சோதனைக்களங்களாக மாறியுள்ளன.

குடா நாட்டில் இருந்து வெளிமாவட்டங்களுக்கு செல்ல வேண்டும் என்றால் ஏகப்பட விண்னப்பங்களை நிரப்பிவிட்டு நீண்ட நாட்கள் காத்திருக்க வேண்டிய சோக நிலை தொடர் கதையாக உள்ளது, சாதரண மக்களுக்கு புலிச்சாயம் பூசி பார்ப்பது எப்போது தான் இந்த நாட்டில் நிறுத்தப்படபோகிறது. குடாநாட்டுக்கு மக்களின் நிலைமையோ இப்படித்தான். இது சம்பந்தமாக பல்வேறு தரப்பினரும் எழுப்பிய ஆதங்கமே உங்கள் முன் வைக்கப்படுகிறது, சம்பந்தப்பட்டவர்கள் விரைந்து சிந்தித்து செயலாற்றவும்.

வீரகேசரி இணையம்

0 Comments: