Tuesday, April 8, 2008

வடக்கை நெருக்கடிக்குள் தள்ளியபடி தென்னிலங்கையைப் பாதுகாக்க முடியாது

பொருளாதாரம் சீரழிந்து வருகின்றது, பொதுமக்கள் அதிகளவில் காணாமல் போகின்றனர், மனித உரிமைகள் மோசமடைந்து வருகின்றன, நீதிக்குப் புறம்பான படுகொலைகள் அதிகரித்து வருகின்றன. அரசின் நடவடிக்கைகளுக்கு எதிராகக் குரல் கொடுப்பவர்கள் அனைவரும் படுகொலை செய்யப்படுகின்றனர். ஊடகவியலாளர்கள், மனிதாபிமானப் பணியாளர்கள் என யாருமே கொலை அச்சறுத்தல்களில் இருந்து தப்புவதில்லை.

மேற்கூறப்பட்டவை சிறிலங்கா அரசு தொடர்பாக பொது அமைப்புக்கள், மனிதாபிமான அமைப்புக்கள், அனைத்துலக அமைப்புக்கள். அனைத்துலக சமூகம் என்பன ஒவ்வொரு சந்தர்ப்பங்களில் தெரிவித்து வரும் கருத்துக்கள்.

அதாவது, அரசைத் தக்க வைத்துக்கொள்ளவும், தமிழ் மக்களின் உரிமைப்போரை சிதைத்து விடவும் சிங்கள அரசு கையில் எடுத்துள்ள படுகொலைக் கலாச்சாரத்தின் வெளிப்பாடுகளே அது. ஆனால், அதன் எதிர்விளைவுகளை அரசு தற்போது சந்திக்க ஆரம்பித்துள்ளது.

கடந்த மார்ச் மாதம் 6 ஆம் நாள் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் கலந்துவிட்டு வன்னிக்கு திரும்பிக்கொண்டிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் 'மாமனிதர்" கி.சிவநேசன் ஓமந்தை சோதனைச் சாவடியில் இருந்து அரை மணி நேரப் பயண இடைவெளியில் சிறிலங்கா இராணுவத்தின் ஆழ ஊடுருவும் படையினரின் கிளைமோர்த் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டிருந்தார்.

மகிந்த ராஜபக்ச அரசு பதவியேற்ற பின்னர் படுகொலை செய்யப்பட்ட நான்காவது தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் சிவநேசன் ஆகும். நாடாளுமன்ற உறுப்பினர் சிவநேசன் கொல்லப்பட்டு சரியாக ஒரு மாத முடிவில் அதாவது, ஏப்பிரல் மாதம் 6 ஆம் நாள் மகிந்த அரசின் முக்கிய தூண்களில் ஒன்று சரிந்துள்ளது.

கொழும்பில் இருந்து வடகிழக்காக 19 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள கம்பகா மாவட்டத்தின் வெலிவெரியாப் பகுதியில் காலை 7:45 மணியளவில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதலில் அரசின் பிரதமா கொறடாவும், நெடுஞ்சாலைகள் வீதி அபிவிருத்தி அமைச்சருமான ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே கொல்லப்பட்டுள்ளார்.

இந்த சம்பவத்தில் அமைச்சருடன் மேலும் 14 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 83 பேருக்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். கொல்லப்பட்டவர்களில் 12 பேர் இதுவரை அடையாளம் காணப்பட்ட போதும் இருவர் அடையாளம் காணப்படவில்லை. கொல்லப்பட்டவர்களில் சிறிலங்காவின் தேசிய தடகள விளையாட்டுப் பயிற்சியாளர் லக்ஸ்மன் டீ அல்விஸ், அமைச்சரின் பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்த பிரதம பாதுகாப்பு பரிசோதகர் கே.டீ.ஆர் கன்னங்கரா, சிறிலஙங்கா இராணுவத்தின் சார்ஜன் மேஜர் தர அதிகாரியான பிரபல தேசிய மரதன் ஓட்ட வீரர் கே.ஏ.கருணாரட்ன ஆகியோர் முக்கியமானவர்கள்.

சம்பவத்தில் கம்பகா மாவட்ட காவல்துறையின் மூத்த சுப்பிரின்டன்ற் ஹெக்டர் தர்மசிறீ காயமடைந்துள்ளார். ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே மகிந்தவின் மிக நெருங்கிய சகா என்பதுடன் சுதந்திரக் கட்சியிலும் மிகவும் முக்கிய பிரமுகர் ஆவார். தமிழ் - சிங்கள கலப்புக் குடும்பத்தில் பிறந்த பெர்னாண்டோபுள்ளே ஒரு தமிழராக தன்னை இனங்காட்ட முற்பட்ட போதும், முழுக்க முழுக்க பேரினவாத சிங்களவராகவே அவரது நடவடிக்கைகள் அமைந்திருந்தன.

தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்படும் இனப் படுகொலைகள் தொடர்பாக பெர்னாண்டோபுள்ளே தெரிவித்து வந்த கருத்துக்கள் தமிழ் மக்களை அதிகம் புண்படுத்தி வந்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

பல நூறு கருத்துக்களில் சில.....

கடந்த ஆண்டு ஜுன் மாதம் கொழும்பில் தங்கியிருந்த தமிழ் மக்களை அரசு பலவந்தமாக வவுனியாவுக்கும், பூசா தடுப்பு முகாமுக்கும் அனுப்பியது தொடர்பாக பல அமைப்புக்களும், அனைத்துலக சமூகமும் தமது விசனங்களை தெரிவித்த போது,

தமிழ் மக்களை சிங்கள மக்கள் நம்பக்கூடாது எனவும், அவர்களுக்கு வீடுகளை வாடகைக்கு கொடுக்கக்கூடாது எனவும் தெரிவித்திருந்தார்.

2004 ஆம் ஆண்டு ஆழிப்பேரலை இலங்கையைத் தாக்கிய போது, வடக்கு - கிழக்கு தமிழ் மக்கள் பெரும் துன்பத்தை சந்தித்ததுடன், உதவிகளை எதிர்பார்த்தும் காத்திருந்தனர். அப்போது தமிழ் மக்கள், தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனிடம் உதவிகளைக் கோரவேண்டும் என நக்கலாகக் கருத்து தெரிவித்திருந்தார் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே.

தற்போது நடைபெறவுள்ள கிழக்கு மாகாண சபைத் தேர்தல்கள் தொடர்பாக திருமலையில் பேசும் போது தமிழ் மக்களையோ அல்லது முஸ்லிம் மக்களையோ சிங்கள மக்கள் வெற்றியீட்ட அனுமதிக்கக்கூடாது எனவும் வடக்கில் தேர்தலை நடத்தப்போவதாக கொல்லப்படுவதற்கு முதல் நாளும் கருத்து தெரிவித்திருந்தார்.

2006 ஆம் ஆண்டு ஜெனீவாவில் நடைபெற்ற அமைதிப் பேச்சுக்களின் போது, விடுதலைப் புலிகளின் பேச்சுவார்த்தைக் குழுவினர் தமக்குள் உரையாடும் தமிழ் உரையாடல்களை ஒட்டுக்கேட்கும் நோக்குடன் அரசினால் அனுப்பப்பட்ட ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே மகிந்தவின் மிகவும் நம்பிக்கைக்கு உரியவர். சிறிலங்கா அரசில் உள்ள மிகவும் அதிக பாதுகாப்பு கொண்ட முக்கிய பிரமுகர்களில் இவரும் ஒருவர்.

சட்டத்தரணியான பெர்னாண்டோபுள்ளே 1972 களில் சுதந்திரக்கட்சியில் இணைந்து அரசியலில் நுழைந்த போதும் கம்பகா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக 1989 ஆம் ஆண்டு தெரிவாகியிருந்தார். அதன் பின்னர் பல அமைச்சுப் பொறுப்புக்களை வகித்துவந்த அவர், சுதந்திரக் கட்சியின் முக்கிய புள்ளியாகவும் இருந்து வந்தார்.

இறக்கும் போது அவர் சுதந்திரக் கட்சியின் தவிசாளராகவும் பணியாற்றி வந்தார். தற்போது ஆட்சியில் உள்ள அரசை நாடாளுமன்றத்திற்கு வெளியிலும், உள்ளுக்குள்ளும் காப்பாற்றும் முயற்சிகளில் அதிகம் ஈடுபட்டு வந்தவரும் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே தான்.

படையினரின் துணையுடன் கிழக்கில் இணைந்து செயற்படும் துணை இராணுவக்குழுவான பிள்ளையான் குழுவின் ஆயுதங்களை களையப்படக்கூடாது எனவும் அவர் வாதிட்டிருந்தார். கிழக்கு மாகாணத்தில் நடைபெற உள்ள மாகாண சபைத் தேர்தலை முன்னிட்டு திருமலை மாவட்ட ஐக்கிய மக்கள் முன்னணி அரசின் அமைப்பாளராக ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளேயே நியமிக்கப்பட்டிருந்தார்.

கடந்த ஜனவரி மாதம் 8 ஆம் நாள் ஜா-எல பகுதியில் நடைபெற்ற கிளைமோர்த் தாக்குதலில் புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான தேசிய கட்டடத்துறை பிரதி அமைச்சர் தசநாயக்க கொல்லப்பட்ட போது அந்த தாக்குதல் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளேயை குறிவைத்தே மேற்கொள்ளப்பட்டது என சிறிலங்கா அரசின் புலனாய்வுத்துறை தெரிவித்திருந்தது.

அதன் பின்னர் அவரின் பாதுகாப்புக்கள் மேலும் அதிகரிக்கப்பட்டிருந்தன. அமைச்சர்களின் பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்த சிறப்பு அதிரடிப்படையைச் சேர்ந்தவர்களே பாதுகாப்புக்கு நியமிக்கப்பட்டிரந்ததுடன், அவர்களுக்குப் பொறுப்பான பிரதம பாதுகாப்பு பரிசோதகர் கே.டீ.ஆர் கன்னங்கராவும் சிறப்பு அதிரடிப்டையைச் சேர்ந்த மிகவும் தரம் வாய்ந்த அதிகாரி ஆவார்.

இவ்வளவு பாதுகாப்புக்களுக்கும் மத்தியில் குண்டுத் தாக்குதலில் அமைச்சர் சிக்கிக் கொண்டது அரச தரப்பில் பெரும் அதிர்ச்சிகளை தோற்றுவித்துள்ளது. புதிய கண்டி வீதியில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த அந்த நிகழ்ச்சிக்கு அமைச்சர் காலை 6:30 மணியளவில் வந்திருந்த போதும் நிகழ்ச்சிகள் ஆரம்பிக்க தாமதமாகியதனால் அவர் சென்று விட்டு பின்னர் 7:30 மணியளவில் திரும்பி வந்திருந்தார்.

விளையாட்டு மைதானத்தில் 10 நிமிடங்கள் உரையாற்றிய பின்னர் மரதன் ஓட்டப்போட்டியை ஆரம்பித்து வைக்கும் பொருட்டு வீதிக்கு வந்த போது அவரை முன்னாள் மரதன் ஓட்ட வீரர் கருணாநாயக்க வரவேற்று கைலாகு கொடுத்து அழைத்துச் சென்றிருந்தார். 70 ஓட்டப் பந்தய வீரர்கள் அணிவகுத்து நிற்க அதனை ஆரம்பிக்கும் பொருட்டு சுநயனல கூறிய அமைச்சர் பின்னர் ளுநவ எனக் கூறிவிட்டு புழு எனக் கூறமுற்பட்ட போது பாரிய சத்தத்துடன் குண்டு வெடித்துள்ளது. ஒரே புகைமண்டலம் எல்லோரும் சிதறி ஓடினார்கள்.

புகை அடங்கிய பின்னர் அந்த இடத்தில் இருந்து அமைச்சரின் தலைப்பகுதியும் கைகளும் அடங்கிய பகுதி மட்டுமே மீட்கப்பட்டதாக தனது பெயரைக் குறிப்பிட விரும்பாத பாதுகாப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்திருந்தார்.

அங்கு வெடித்த குண்டு மிகவும் சக்தி வாய்ந்த குண்டு என தெரிவித்துள்ள பாதுகாப்புத் தரப்பினர், வழமை போல இது ஒரு தற்கொலை தாக்குதல் எனவும் தெரிவித்துள்ளனர்.

எனினும், இது ஒரு மனித கிளைமோர்த் தாக்குதலாக இது இருக்கலாம் என மூத்த இராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். குண்டுச் சிதறல்கள் நேரடியான தாக்கத்தை (னுசைநஉவழையெட டிடயளவ) எற்படுத்தியதுடன் அமைச்சரை மிகவும் கடுமையாக தாக்கியுள்ளதாகவும், அமைச்சர் குண்டு துழைக்காத அங்கியை அணிந்திருந்தாலும் உயிர் தப்பியிருக்க முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே மரதன் ஓட்டப் போட்டியில் பங்குபற்றியவர்களில் ஒருவர் இந்த தாக்குதலை நடத்தியிருக்கலாம் என்ற சந்தேகங்களும் படைத்தரப்பில் எழுந்துள்ளன. 22 ஆவது இலக்கமுடைய மேற்சட்டையை அணிந்திருந்த நபரே தாக்குதலை நடத்தியதாகவும் அந்த நபர் குண்டு வெடிப்பதற்கு முன்னர் தனது இடுப்புப் பகுதியை கைவிரல்களினால் அழுத்தியதை ஒளிப்படங்களில் இருந்து தாம் அறிந்து கொண்டதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆனால் வெலிவெரியாவில் வெடித்த குண்டு மிகவும் சக்தி வாய்ந்தது எனவும் அதனை ஓட்டப்பந்தய வீரர்கள் தமது பெனியனுக்குள் மறைப்பது கடினமானது எனவும் தெரிவித்துள்ள புலனாய்வுத்துறையினர், இது வீதியில் மறைத்து வைக்கப்பட்ட குண்டினை தொலை இயக்கி மூலம் வெடிக்க வைக்கப்பட்டிருக்கலாம் அல்லது அமைச்சருக்கு காவலாக வந்த காவல்துறை உறுப்பினர் வெடித்துச் சிதறியிருக்கலாம் எனவும் தெரிவித்துள்ளது. எனினும் இதுவரை மர்மங்கள் துலங்கவில்லை.

கடந்த மாதம் 22 ஆம் நாள் நாயாறு கடற்பரப்பில் மூழ்கிப்போன டோராவின் கதையைப் போலவே வெலிவெரியாவில் வெடித்த குண்டும் பலத்த மர்மங்களை ஏற்படுத்தி உள்ளது. இந்த மர்மங்களை படையினர் கண்டறிவார்களா இல்லையா என்பது தான் தற்போதைய முக்கிய கேள்வியல்ல. வடக்கை நெருக்கடிக்குள் தள்ளியபடி தென்னிலங்கையின் பாதுகாப்பை அரசால் உறுதிப்படுத்த முடியுமா என்பது தான் சிங்கள மக்கள் மத்தியில் எழுந்துள்ள முக்கிய கேள்வி.

-வேல்சிலிருந்து அருஸ்-

0 Comments: