Wednesday, April 2, 2008

ஈழத் தமிழருக்கு ஆதரவான எழுச்சி கண்டு இந்தியாவில் சில தரப்புகள் கொதிப்பு

இந்தியாவில் குறிப்பாகத் தமிழகத்தில் இலங்கைத் தமிழர் விவகாரம் மீண்டும் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது.
அடுத்த ஆண்டில் இந்திய நாடாளுமன்றுக்கான தேர்தல் நடத்தப்படவிருக்கின்றது.
இந்தியாவின் பிரதான தேசியக் கட்சிகளான அகில இந்திய காங்கிரஸ் கட்சியோ அல்லது பாரதீய ஜனதா கட்சியோ அறுதிப் பெரும்பான்மை பெற்று தனித்து ஆட்சி அமைக்கும் அரசியல் சூழ்நிலை இப்போதும் இல்லை. அடுத்த ஆண்டிலும் அப்படி ஏற்படும் என்று நம்புவதற்கும் இடமில்லை.

இந்த நிலையில் பிராந்திய மாநில கட்சிகளின் தயவில் தங்கி நின்று அதிகாரத்தைப் பிடிக்கும் இக்கட்டு தேசியக் கட்சிகளுக்கு.

இப்போது ஆட்சியில் இருக்கும் காங்கிரஸ் கட்சி கூட, இடதுசாரிகள் மற்றும் தென்னிந்தியாவின் தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் செல்வாக்குள்ள கட்சிகளின் தயவு தாட்சண்யத்தில் தங்கித்தான் ஆட்சிக் காலத்தைக் கொண்டிழுக்கின்றது.
பிராந்தியக் கட்சிகளின் முகத்தை முறித்துக் கொண்டால் ஆட்சி கவிழும் என்ற "நித்திய கண்டம்; பூரண ஆயுசு' நிலைமையில்தான் இந்திய மத்திய அரசின் காலம் ஓடிக்கொண்டிருக்கின்றது.

இந்தப் பின்புலத்தில் தமிழகம் போன்ற மாநிலத்தில் கூட செல்வாக்குப் பெற்ற தி.மு.க., அ.திமு.க. போன்ற பிரதான கட்சிகள் மாநிலத்திலும், மத்தியிலும் நடைபெறும் தேர்தல்களில் முன்னிலை பெறுவதற்கு டாக்டர் ராமதாஸின் பாட்டாளி மக்கள் கட்சி, வைகோவின் ம.தி.மு.க., திருமாவளவனின் விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பு, விஜய்காந்தின் தே.தி.மு.க. போன்றவற்றில் தங்கியிருக்க வேண்டிய கட்டாயம் உள்ளது.
இப்படி தமிழகத்தினதும் அதன் மூலம் இந்திய மத்திய ஆட்சிப் பீடத்தினதும் தலைவிதியைத் தீர்மானிக்கும் பிராந்தியக் கட்சிகள் எல்லாம் சிறிய உதிரி கட்சிகளில் தங்கியிருக்கவேண்டிய நிலையில் அந்த சிறிய கட்சிகளோ ஈழத் தமிழர்களுக்காக ஏகோபித்துக் குரல் கொடுப்பதில் தீவிரம் காட்டி நிற்கின்றன.

போதாக்குறைக்கு இந்திய மத்திய அரசில் அதிகாரத்தில் இருக்கும் தரப்பை ஆட்டிப்படைத்து வரும் சில இடதுசாரிக் கட்சிகளும் இந்தியக் கம்யூனிஸ்ட் போன்றவையும் இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக சிங்கள அரசு இழைக்கும் கொடூரங்களுக்கு எதிராகக் கொதித்து எழுந்து நிற்கின்றன.

பற்றாக்குறைக்கு விஜய ரி.ராஜேந்தரின் இலட்சிய தி.மு.க., சரத் குமாரின் சமத்துவ மக்கள் கட்சி போன்றவையும் ஈழத் தமிழர்களுக்கு எதிராக வரிந்து கட்டிக்கொண்டு களத்தில் இறங்கத் தயாராகிவிட்டன.

இவ்வாறு ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான மறுமலர்ச்சி தமிழகத்தில் ஏற்பட்டு வருவதும், தவிர்க்க இயலாத இந்தப் பேரெழுச்சி, இந்திய மத்திய அரசையே ஈழத் தமிழர்களுக்குப் பரிவான நியாய நிலைக்குத் தள்ளிவிடும் என்ற யதார்த்தமும் சில இந்திய அதிகார வர்க்கங்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளன.

காலங்காலமாக அயல் தேசத்துத் தமிழர்களுக்கு நியாயம் கிட்டவிடாமல் குழிபறித்து வரும் இந்த அதிகார பீடத்தின் குசும்புத்தனம், தமிழகத்தில் ஈழத் தமிழர் சார்பு எழுச்சி இப்போது மீள ஏற்பட்டதும் தனது வேலையை வழமைபோல காட்டத் தொடங்கிவிட்டது. "சோ' இராமசாமி, "இந்து' ராம், சுப்பிரமணியசுவாமி, ஜெயலலிதா என்று பிரமாணப் பின்னணி கொண்ட இந்தக் கும்பல் தனது வேலையைத் தொடங்கிவிட்டது.

1987 இல் இலங்கைத் தமிழர் மீது பலவந்தமாகத் திணிக்கப்பட்ட இலங்கை இந்திய ஒப்பந்தத்தை பின்புலத்தில் நின்று உருவாக்கிய சூத்திரதாரிகளுள் "இந்து' ராமும் ஒருவர் என்பது விடயமறிந்தவர்களுக்கு நன்கு தெரிந்த உண்மை.

அவரின் "த இந்து' நாளிதழ் தற்போது தமிழகத்தில் ஈழத் தமிழருக்கு ஆதரவாக ஏற்பட்டுவரும் எழுச்சிகண்டு பொறுக்க முடியாது சில தினங்களுக்கு முன்னர் தான் தீட்டிய ஆசிரிய தலையங்கம் ஒன்றில்
"இலங்கையில் இன்றைய அரசியலுடன் தொடர்புபட்ட சக்திகளில் புலிகளைத் தவிர வேறு எவருமே இலங்கையின் நல்ல எதிர்காலத்துக்கு வடக்கு கிழக்கு இணைப்பு என்பது அத்தியாவசியமான உயிர்ப்பான விவகாரமாகக் கருதவேயில்லை' என்று படு"ஸிம்பிளா'கக் குறிப்பிட்டிருக்கின்றது.

வடக்கு கிழக்கு தமிழர்களின் பாரம்பரிய தாயகம் என்பதை அங்கீகரித்து, அதனை எழுத்தில் உறுதிப்படுத்திச் செய்யப்பட்டதே இலங்கை இந்திய ஒப்பந்தம். அது அந்த ஒப்பந்தத்தின் முன்னுரையில் கூறப்பட்ட பிரதான அம்சமுமாகும். அந்த உடன்படிக்கையின் சிற்பிகளுள் ஒருவரான "இந்து' ராமின் பத்திரிகையே இன்று வடக்கு கிழக்கு இணைப்பு அல்லது தமிழர் தாயக ஐக்கியம் ஈழத் தமிழரின் அரசியலில், முக்கியத்துவம் இல்லாத அம்சம் என்று விவரிக்கின்றது.

ஈழத் தமிழர்கள் கௌரவவாழ்வுக்கும், நியாயமான உரிமைகளுக்கும், நீதியான தமது அபிலாஷைகளை எட்டுவதற்கும் நடத்தும் இந்த வாழ்வா, சாவாப் போராட்டத்தில் இத்தகைய அதிகார வர்க்கக் கொடூரப் போக்காளர்களை எதிர்கொள்வதும் தவிர்க்க முடியாததுதான்.
தமிழகத்தில் ஈழத் தமிழருக்கு ஆதரவாக மீண்டும் மடை உடைத்த வெள்ளம் போலப் பெருகிவரும் ஆதரவு எழுச்சியை சோ ராம் சுப்பிரமணியசுவாமி ஜெயலலிதா போன்ற பிரமாணியப் பிரகிருதிகளினால் தடுத்து நிறுத்திவிட முடியுமா என்பதற்குக் காலம் விரைவில் பதில் சொல்லும் என எதிர்பார்க்கலாம்

நன்றி - உதயன்

0 Comments: