Sunday, April 13, 2008

சுலபமாகத் தாக்கப்பட்ட கடினமான இலக்கு...

இலங்கையின் முக்கிய அரசியல் தலைவர்களும் மிக முக்கிய பிரமுகர்களும் தலைநகரிலும் அதனையண்டிய பகுதிகளிலும் மிகப் பெரும் பாதுகாப்பு அச்சுறுத்தலை எதிர்கொள்வதை, கம்பஹா வலிவேரியா பகுதியில் கடந்த வாரம் இடம்பெற்ற குண்டுத் தாக்குதலில் அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே கொல்லப்பட்ட சம்பவம் உறுதிப்படுத்தியுள்ளது.

வடக்கு கிழக்கு யுத்தத்தின் பிரதிபலிப்புகள் தலைநகருக்கும் தென் பகுதிக்கும் எப்போதோ பரவிவிட்டன. தலைநகருக்கு வெளியே பாதுகாப்பற்ற பகுதிகளில் கொல்லப்பட்ட தலைவர்களை விட தலைநகரிலும் அதன் சுற்றுப் புறங்களிலும் பலத்த பாதுகாப்புமிக்க பகுதிகளில் கொல்லப்பட்ட தலைவர்கள் மற்றும் படை அதிகாரிகளின் எண்ணிக்கை மிக அதிகம்.

இந்தப் பகுதிகளின் பாதுகாப்பு மிக உச்சக் கட்டத்தில் இருக்கின்றதென்ற நம்பிக்கையே, முக்கிய தலைவர்கள் தங்கள் பாதுகாப்பு குறித்து பெரிதும் அலட்டிக் கொள்ளாது பாதுகாப்பற்ற பகுதிகளுக்குச் செல்வதற்கான காரணங்களாகி விடுகின்றன. இது அவர்களை இலக்கு வைப்போருக்கு எப்போதுமே வாய்ப்பாகி விடுகின்றதென்பதை அமைச்சர் பெர்னாண்டோ புள்ளே மீதான தாக்குதல் மிகத் தெளிவுபடுத்துகிறது.

இந்தளவுக்கு மிக மோசமான பாதுகாப்பு குறைபாடு ஏற்படக் காரணம் என்ன என்பது குறித்தும் அவரது பாதுகாப்பில் ஏற்பட்ட குறைபாட்டுக்கு யார் பொறுப்பென்பது குறித்தும் ஜனாதிபதி தலைமையில் தேசிய பாதுகாப்புச் சபை கூடி மிக நீண்ட நேரம் ஆராய்ந்துள்ளது. ஆனாலும், ஒருவர் மீது ஒருவர் குற்றஞ்சாட்டுகின்றனரே தவிர, மிகவும் அச்சுறுத்தலுள்ள ஒருவருக்குத் தேவையான போதிய பாதுகாப்பு ஏன் வழங்கப்படாது போனதென்பது குறித்து இதுவரை கண்டறியப்படவில்லை.

நாட்டில் பெருநாள் கொண்டாட்டங்கள் வரும் போது பொதுவாகவே பாதுகாப்பில் ஒருவித தளர்வு ஏற்படும். அன்று வரை மிகவும் இறுக்கமான பாதுகாப்புடனிருக்கும் முக்கிய தலைவர்களும் பிரமுகர்களும் பெருநாள் காலங்களில் வீதிகளில் எப்படியாவது இறங்கிவிடுவர். பாதுகாப்பு தரப்பினரும் இக் காலப்பகுதியில் அவ்வளவுக்கு கெடுபிடிகளை மேற்கொள்ளாததும் இதற்கொரு காரணமாயிருக்கலாம்.

இதனால் இந்தக் காலப் பகுதியில் அரசுத் தலைவர்களின் பாதுகாப்பில் பெரும்பாலும் குறைபாடுகள் ஏற்படலாம். இதுபோன்றதொன்றே கடந்த வாரம் அமைச்சர் பெர்னாண்டோ புள்ளேக்கும் ஏற்பட்டது. அவரது பாதுகாப்புக்கு யார் பொறுப்பென்பது அறியப்படாமலே அவர் பொது நிகழ்வொன்றுக்குச் சென்றுள்ளார். அதனால், அந்த நிகழ்வில் அவரை இலக்கு வைத்தவர்களின் வேலை இலகுவாகிவிட்டது.

அந்த நிகழ்வுக்குச் சென்ற அமைச்சரின் பாதுகாப்புக்கு பொறுப்பானவர்கள் யாரென்ற சர்ச்சை தொடர்கிறது. அமைச்சரவைப் பாதுகாப்பு பிரிவா (எம்.எஸ்.டி.) அல்லது விஷேட அதிரடிப் படையினரா அல்லது உள்ளூர் பொலிஸாரா அவரது பாதுகாப்புக்கு பொறுப்பென்பது தெரியாத நிலையில், ஒவ்வொருவரும் ஒவ்வொருவர் மீது குற்றச்சாட்டை சுமத்திவிட முயலுகின்றனர்.

அமைச்சர் பெர்னாண்டோபுள்ளே வீட்டிலிருக்கும் போதும் சரி, அவர் அமைச்சில் இருந்தாலும் சரி அவருக்கு அமைச்சரவைப் பாதுகாப்பு பிரிவைச் சேர்ந்த நால்வரே பாதுகாப்பை வழங்குவரென அமைச்சரவைப் பாதுகாப்புப் பிரிவு கூறுகிறது. இதைவிட, விஷேட அதிரடிப் படையினரும் உள்ளூர் பொலிஸாருமே பாதுகாப்பு வழங்க வேண்டுமென்றும் அது கூறகின்றது. அமைச்சர் எங்கெல்லாம் செல்கிறாரோ அங்கெல்லாம் சென்று அவருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டிய பொறுப்பு அதிரடிப் படையினரையே சாருமெனவும் அவர்கள் கூறுகின்றனர்.

முன்னர், அமைச்சரவைப் பாதுகாப்பு பிரிவே ஜெயராஜுக்கு பாதுகாப்பு வழங்கியது. எனினும், அவருக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் அதிகரித்துள்ளதாக புலனாய்வுத் தகவல்கள் வெளியானதையடுத்து அவரது பாதுகாப்பு விஷேட அதிரடிப்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆனாலும், விஷேட அதிரடிப் படையினர் அதிரடி நடவடிக்கைகளுக்குரிய வகையிலேயே பயிற்சி பெற்றவர்களென்பதால் அவர்களால் மிக முக்கிய பிரமுகர்களுக்கான பாதுகாப்பை வழங்குவதில் சிக்கல்களிருப்பதாகவும் சில வட்டாரங்கள் கூறுகின்றன.

எனினும், அமைச்சரின் பாதுகாப்புக்குரியவர்கள் அமைச்சரவைப் பாதுகாப்பு பிரிவினரேயென்றும் அவர்கள் இவ்விடயத்தில் வேறு தரப்பினர் மீது குற்றஞ்சாட்டுவது தவறென்றும் விஷேட அதிரடிப் படை உயரதிகாரியொருவர் கூறுகின்றார். அதேநேரம், அமைச்சர் தங்கள் பகுதியூடாக போக்குவரத்துச் செய்யும் போது மட்டுமே தாங்கள் போக்குவரத்து ஏற்பாடுகளை மேற்கொள்வோமெனவும் அவரது பாதுகாப்புடன் தங்களுக்கு வேறெந்தத் தொடர்புமில்லையெனவும் பொலிஸார் கூறுகின்றனர்.

நாட்டில் மிக முக்கிய பிரமுகர்களின் பாதுகாப்பு ஏற்பாடுகளில் எந்தளவுக்கு குறைபாடுகளிருக்கின்றன என்பதற்கு, தற்போது ஒவ்வொருவரும் மற்றவர் மீது பொறுப்பைச் சுமத்துவது நல்ல உதாரணமாகும். இது அரசுத் தலைவர்களை குறிவைப்போருக்கு வாய்ப்பாக அமைந்து விடுமென்பது தற்போது சுட்டிக் காட்டப்படுவதுடன், அரசுத் தலைவர்களின் பாதுகாப்பு குறித்த முறையான திட்டமொன்று வகுக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட வேண்டியது அவசியமெனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கொழும்புக்கு வெளியே நடைபெறும் நிகழ்வுகளில் பொதுவாகவே பாதுகாப்பில் குறைபாடுகள் ஏற்படுவது வழமை. அது கம்பஹா சம்பவத்தில் நன்கு நிரூபிக்கப்பட்டுள்ளது. தற்கொலைக் குண்டுத் தாக்குதலிலேயே அமைச்சர் கொல்லப்பட்டதாக கூறப்படுகின்ற போதும், அதனை சரியாக உறுதிப்படுத்த முடியாத நிலையும் காணப்படுகிறது. அமைச்சரை நோக்கி வீசப்பட்ட பொதியொன்று வெடித்த போதே இந்த அனர்த்தம் ஏற்பட்டதாகக் கூறப்பட்டாலும் அதற்கு வாய்ப்பில்லையென்றே கருதப்படுகிறது.

கம்பஹா வலிவேரியா பகுதியில் புதுவருட தினத்தை முன்னிட்டு நடைபெற்ற விளையாட்டுப் போட்டிக்கான மரதனோட்டப் போட்டியிலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. மரதனோட்டப் போட்டி நடைபெற்ற இடத்திற்கு அருகிலுள்ள சேமக்காலை ஒன்றினுள்ளிருந்து அமைச்சர் நின்ற இடத்தை நோக்கி பொதியொன்று வீசப்பட்டதைக் கண்டதாக சிறுவனொருவன் பின்னர் தெரிவித்திருந்தான். இதேபோல் வேறொருவரும் கூறியிருந்தார். எனினும், விசாரணையாளர்கள் இவ்விடயத்தில் அதிக கவனம் செலுத்துவதாகத் தெரியவில்லை.

வெடித்த குண்டு சுமார் ஐந்து கிலோ நிறையுடையதாயிருக்குமெனக் கணிப்பிடப்படுகிறது. அது ஏற்படுத்திய சேதத்தின் அடிப்படையிலேயே அந்தக் குண்டு இந்தளவு நிறைகொண்டதாயிருப்பதாக கணிப்பிடப்பட்டுள்ளது. இந்தளவு நிறையுடைய குண்டை தூர இருந்து இலக்கை நோக்கி துல்லியமாக எறிவது சாத்தியமற்றது. பெருமளவானோர் குழுமி நிற்குமிடத்தில் குறிப்பிட்ட ஒருவரை இலக்கு வைத்து குண்டை எறிந்து அந்தக் குண்டு சரியாக இலக்குக்கு முன்னால் சென்று வெடிப்பதென்பது மிகவும் சாத்தியம் குறைந்தது. அதேநேரம், அமைச்சருக்கு மிகச் சமீபமாக மறைந்து நின்று அவரை நோக்கி குண்டுப் பார்சலை எறிந்து வெடிக்க வைப்பதென்பது மிகவும் சிக்கல் நிறைந்தது.

குண்டுப் பொதியை எறிபவர் அமைச்சருக்கு மிகச் சமீபமாக மறைந்திருந்தால் அவரை ஏதோவொரு வகையில் எவராவது கண்டுபிடிக்க வாய்ப்புள்ளது. அதைவிட, அந்த நபர் குண்டை எறியும் போது எப்படியாவது அப்பகுதியில் சுற்றி நிற்கும் பலரது பார்வையில் எறிபவர் அல்லது எறியப்படும் பொருள் தென்படும். எனினும், எவருமே அவ்வாறானதொரு சம்பவம் நிகழ்ந்ததாகக் கூறவில்லையென்பதால் அமைச்சரை நோக்கி குண்டுப்பொதியை வீசிய அவர் கொல்லப்பட்டதாகக் கூறப்படுவதற்கான சாத்தியங்கள் குறைவெனக் கருதப்படுகிறது.

அதேநேரம், ஐந்து கிலோ பார்சலொன்றை கையில் கொண்டு வரும் போது அல்லது பையில் எடுத்து வரும் போது அகப்படுவதற்கான சாத்தியங்கள் இருக்கின்றதென்பதுடன், குண்டுப் பார்சலை வீசிவிட்டு தப்பிச் செல்லும் போது பிடிபடுவதற்கான வாய்ப்பும் அதிகமென்பதால் இவ்வாறானதொரு முயற்சியில் தாக்குதலை நடத்துவோர் ஈடுபடுவதற்கான வாய்ப்பில்லையென்றே கருதப்படுகிறது.

இதனால், அமைச்சர் தற்கொலைக் குண்டுத் தாக்குதலிலேயே கொல்லப்பட்டதற்கான வாய்ப்பு மிகப் பெருமளவிலிருப்பதாக விசாரணையாளர்கள் கருதுகின்றனர். எனினும், தற்கொலைக் குண்டுதாரி எப்படி மிகச் சுலபமாக அமைச்சரை நெருங்கினாரென்ற கேள்வி எழுந்துள்ளது. அதைவிட அந்த இடத்திற்கு அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே வரவிருப்பதை தாக்குதல் நடத்தியோர் எப்படி அறிந்து கொண்டனர் என்ற கேள்வியும் எழுகிறது.

எனினும், அன்றையதினம் காலை 6.30 மணியளவில் அவ்விடத்தில் மரதனோட்டப் போட்டி நடைபெறப் போவதையும் அதனை அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளேயே தொடக்கி வைக்கப் போவதையும் அறிவிக்கும சுவரொட்டிகளும் பதாகைகளும் சில நாட்களுக்கு முன்பே அப்பகுதியெங்கும் அலங்கரித்திருந்ததால் அதனை அறிந்து அமைச்சர் பெர்னாண்டோ புள்ளேயை அங்கு இலக்கு வைக்க அவர்கள் முடிவு செய்திருக்கலாம்.

அமைச்சர் அங்கு வருவது தெரிந்துவிட்டதால் மரதனோட்ட வீரர் போன்று அல்லது பார்வையாளர் போன்று அமைச்சரை நெருங்க திட்டமிடப்பட்டுள்ளது. தாக்குதலை நடத்தியவர் பார்வையாளர் போல் நின்று குண்டை வெடிக்க வைத்தாரா அல்லது மரதனோட்ட வீரர் போல் நின்று குண்டை வெடிக்க வைத்தாரா என்பதை கண்டறிவதில் விசாரணையாளர்கள் தீவிரம் காட்டுகின்றனர். இதற்காக அவர்கள் மரதனோட்டத்தில் கலந்து கொண்டவர்களையும் ஏற்பாட்டாளர்களையும் பார்வையாளராக அங்கு வந்திருந்தோரையும் தீவிர விசாரணைக்குட்படுத்தி வருகின்றனர்.

மரதனோட்ட வீரர்கள் அனைவரும் உள் பெனியன் அணிந்தும் "ரன்னிங் சோட்ஸ்' அணிந்திருந்ததால் அவர்களில் எவராவது தற்கொலைக் குண்டுதாரியாக இருக்கும் வாய்ப்பு குறைவென பொலிஸார் கருதுகின்றனர். ஏனெனில், தற்கொலைக் குண்டுதாரிகள் வழமையாக குறைந்த நிறையுடைய குண்டை மார்புப் பகுதியிலேயே பொருத்தியிருப்பர். ஆனால், மரதனோட்ட வீரர்கள் அனைவரும் உள்பெனியன் அணிந்திருந்ததால் சுமார் 5 கிலோ குண்டை மார்புப் பகுதியில் பொருத்தியிருந்தால் உடனடியாக அது அனைவருக்குமே தெரிய வந்திருக்கும். அதேநேரம், தற்கொலைக் குண்டுதாரியும் அவ்வாறானதொரு நடவடிக்கையில் இறங்கி அகப்பட விரும்பியிருக்கமாட்டார்.

அதேநேரம், மரதனோட்டத்தில் கலந்து கொள்வோரின் விபரங்கள் பெறப்பட்டால் அதில் சிக்கல்களேற்படலாம் அல்லது மரதனோட்ட வீரர்களை சோதனையிட்டால் சிக்கல்களேற்படலாமென்பதால் மரதனோட்ட வீரராக தற்கொலைக் குண்டுதாரி வந்தாரா அல்லது தற்கொலைக் குண்டுதாரியை மிகச் சுலபமாகவும் சந்தேகம் எதுவுமின்றி அங்கு வர வைப்பதற்காக எவராவது ஒருவர் மரதனோட்ட வீரர் போல் வர தற்கொலைக் குண்டுதாரி அவருடன் சேர்ந்து எவருக்கும் சந்தேகமேற்படாதவாறு அங்கு வந்து பின்னர் ஓட்டப் போட்டி தொடங்கிய நேரத்தில் இலக்கை நெருங்கினாரா என்ற கேள்வியையும் விசாரணையாளர்கள் எழுப்புகின்றனர்.

நன்றி - விதுரன்

0 Comments: