Saturday, April 26, 2008

தீர்வுக்கு கால வரையறை இல்லை அழிக்க மட்டும் காலக்கெடு

""ஒன்றுபட்ட நாட்டையும் தேசிய நல்லிணக்கத்தையும் ஏற்படுத்த வேண்டுமானால் தமிழ்,முஸ்லிம் மக்கள் உள்ளிட்ட சிறுபான்மை மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும்.

""சிறுபான்மை மக்கள் தமது உரிமைகளை முழுமையாக அனுபவித்துத் தாம் மகிழ்ச்சியுடனும் சுதந்திரமாகவும் உள்ளனர் என்பதை உணர்ந்தால் மாத்திரமே ஒன்றுபட்ட நாடு என்ற எண்ணக்கரு இங்கு சாத்தியமாகும்.''
இவ்வாறு இலங்கை நிலைமையின் உண்மை நிலைவரத்தின் அடிப்படையை பின்னணியை தெளிவாக உரைத்திருக்கின்றார் கொழும்புக்கான அமெரிக்கத் தூதுவர் றொபேர்ட் ஓ பிளேக்.
எனவே, ஒன்றுபட்ட நாட்டையும் தேசிய நல்லிணக்கத்தையும் ஏற்படுத்த வேண்டுமானால் தமிழ், முஸ்லிம்கள் உட்பட்ட சிறுபான்மை மக்களின் உரிமைகளை உறுதி செய்யுங்கள் என்றும் வழிகாட்டியிருக்கின்றார் அமெரிக்கத் தூதுவர்.

இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் "சமாதான முன்னெடுப்புகளுக்கான வர்த்தக முயற்சி' என்ற கலந்துரையாடலில் பங்குகொண்டு கருத்துரையாற்றிய சமயமே அவர் இவ்வாறு ஆலோசனை கூறியிருக்கின்றார்.

ஆனால், சிறுபான்மையினர் மீதான மேலாதிக்கச் சிந்தனையில் மூழ்கிக் கிடக்கும் கொழும்பு அதிகார பீடத்தின் காதில் இந்த ஆலோசனை ஏறப்போவதில்லை என்பது நிச்சயம். பௌத்த சிங்கள மேலாண்மைத் திமிரிலும், சிங்களத் தேசியவாதச் செருக்கிலும் தீவிரம் கொண்டு அதன் ஆதிக்கத்துக்கு உட்பட்டு அதனடிப்படையில் சிறுபான்மையினரின் உரிமைகளைப் பறித்து, அவர்களை அடக்கி, ஒடுக்கி, நசுக்கி, கபளீகரம் செய்வதிலேயே தென்னிலங்கை முனைப்புக் கொண்டு நிற்கின்றது.

பிரிட்டிஷ் காலனித்துவப் பிடியிலிருந்து இலங்கை விடுவிக்கப்பட்ட பின்னர் இந்த ஆறு தசாப்த காலத்தில் கொடூரமாக அரங்கேறிய பேரினவாதத்தின் அடக்குமுறை நடவடிக்கைகளே இன்று இலங்கைத் தீவை இத்தகைய மீள முடியாத உள்நாட்டுப் போருக்குள் ஆழ்த்தி நிற்கின்றன.

இந்தப் பின்னணியைத் தமது பூடகமான வார்த்தைகளில் விளக்கியுள்ள அமெரிக்கத் தூதுவர் இந்த இழிநிலையில் இருந்து விடுபடுவதற்கான மருத்துவத்தையும் கூறியுள்ளார்.
பாதிக்கப்பட்ட சிறுபான்மை மக்கள் தொடர்பில் தாராளத்துடனும், பரிவுடனும், அரவணைக்கும் பண்புடனும், நியாயம் செய்யும் உறுதியுடனும் செயற்படும் திடசங்கற்பம் பெரும்பான்மையினருக்கும் அவர்களது பிரதிநிதிகளான ஆட்சியாளர்களுக்கும் ஏற்பட வேண்டும் என்பதையே அமெரிக்கத் தூதுவர் கோடிகாட்டுகின்றார்.
ஆனால் சிங்களத்தின் மனவமைப்பில் அதன் மூளையத்தை இறுகப் பற்றிப் பீடித்திருக்கும் பேரினவாதப் பேய், அடக்கு முறைப் பிசாசு, சிறுபான்மையினருக்கு நியாயம் செய்யவிடாது என்பது தெளிவு. அடக்குமுறை முனைப்பிலேயே அது தீவிரம் கொண்டு நிற்கின்றது என்பதை யதார்த்த நிகழ்வுகள் நமக்கு வெளிப்படையாக எடுத்தியம்புகின்றன.
பாதிக்கப்பட்டுள்ள சிறுபான்மையினரான தமிழர்களுக்கு உரிய நிவாரணமும் நீதியும் செய்வதை விடுத்து, அவர்களை அடக்கி, ஒடுக்குவதிலேயே கொழும்பு அதிகாரத்தின் சிந்தனை முனைப்புப் பெற்று நிற்கின்றது.

சிறுபான்மை மக்களுக்கு நீதியான தீர்வு ஒன்றை வழங்குவதை நோக்கமாகக் கொண்ட முயற்சிகள் என்ற பெயரில் காலத்துக்குக் காலம் ஆரம்பிக்கப்பட்ட எத்தனங்கள் எல்லாம் வெறும் வெளிவேஷ நாடகங்களாகக் கிடப்பில் போடப்பட்டு விட்டன. அடக்குமுறையை நோக்கமாகக் கொண்ட பலாத்கார நடவடிக்கைகளும் படைச் செயற்பாடுகளும் மட்டுமே தங்கு தடையின்றித் தொடர்கின்றன.

தமது நிச்சயமான உரிமைகளுக்காகவும், கௌரவமான வாழ்வை வேண்டியும் போராடும் தமிழர் தரப்பிடம் போரியல் நடவடிக்கையில் பதிலடி வாங்கிக் கட்டிய பின்னரும் கூட அடக்குமுறையின் வெற்றிக்கான காலக்கெடு குறித்துப் பிரலாபிக்கும் கொழும்பு, அமைதித் தீர்வுக்கான காலவரையறை குறித்துச் சிந்திப்பதாகத் தெரியவில்லை.
புதனன்று வடக்குப் போர் முனையில் பெரும் பின்னடைவு கண்டுள்ள கொழும்பு அரசு, அந்தத் தோல்வியைச் சமாளித்து, மூடி மறைத்துக்கொண்டு, மேலும் போர் முனைப்புடன் கூடிய மமதை அறிவிப்புகளையே விடுக்கின்றது.

இலங்கை இனப்பிரச்சினைக்கான தீர்வு முயற்சியில் தமிழர் தரப்பில் பேரம்பேசும் வலிமையுடன் திகழும் தமிழீழ விடுதலைப் புலிகளை அடியோடு அழித்து ஒழிக்கும் தனது ஒரே இலக்குக்கான காலக்கெடுக்களை, காலவரையறைகளைத் தன்பாட்டில் அறிவித்து, அதன்மூலம் தென்னிலங்கையின் அடக்குமுறைச் சிந்தனையையும் பேரினவாத எண்ணப்போக்கையும் உசுப்பேற்றி விடுவதில் அதிக ஈடுபாடு காட்டும் கொழும்பு அரசு, பாதிக்கப்பட்டுள்ள சிறுபான்மையினருக்கு நீதி, நியாயம் செய்யும் வகையில் முன்னெடுக்கப்படவேண்டிய தீர்வு முயற்சிகளுக்குக் காலக்கெடு அறிவிப்பதாகத் தெரியவில்லை
இப்போது, புதனன்று கிடைத்த வடக்குக் களமுனைப் பின்னடைவுகளை சமாளிக்கும் எத்தனத்தின்போது கூட, இவ்வருட இறுதிக்குள் புலிகளை அடியோடு ஒழித்து விடுவோம் என்ற கங்கணம் கட்டும் அறிவிப்பையே கொழும்பு முன்வைக்கின்றதே தவிர, தீர்வு முயற்சிக்கான காலக்கெடுவைப் பிரகடனப்படுத்துவதாக இல்லை.
ஆட்சிக்கு வந்தால் அடுத்த மூன்றுமாத காலத்துக்குள் இனப்பிரச்சினைத் தீர்வுக்கான தென்னிலங்கையின் இணக்கப்பாட்டை உருவாக்கி, அதனை அடையாளம் கண்டு, அதன் அடிப்படையில் தமிழர் தரப்போடு பேசி இலங்கை இனப்பிரச்சினைக்கு இணக்கத் தீர்வு காண்பேன் என்று தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் எழுத்துமூலம் உறுதியளித்து அதிகாரத்தைக் கைப்பற்றியவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ. அவர் பதவிக்கு வந்து மூன்று மாதங்கள் அல்ல. இப்போது முப்பது மாதங்களாகின்றன.

அமைதித்தீர்வுக்கான இணக்கப்பாடு ஒன்றைத் தென்னிலங்கையில் உருவாக்குவதில் சிரத்தையும், ஈடுபாடும் காட்டாத அவர், தமிழர் தரப்பின் போராட்ட சக்தியான தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை ஒரேயடியாக அழித்து ஒழிக்க வேண்டும் என்ற பேரினவாதச் சிந்தனைக்கான தென்னிலங்கையின் ஒருமித்த கருத்து நிலைப்பாட்டை உருவாக்குவதில் மட்டும் ஒற்றைக்காலில் விடாப்பிடியாக நிற்கின்றார்.
அமைதி முயற்சிகளைக் கிடப்பில் தூக்கிக் கடாசிவிட்டு, அழிப்பு முயற்சிகளுக்கான தென்னிலங்கையின் எத்தனம் உருக்கொண்டு, சந்நதம் பிடித்து நிற்பதன் பின்னணி தாற்பரியம் இதுதான்.

இத்தகைய போர் வெறிச் சிந்தனையில் மூழ்கிக்கிடக்கும் ஆட்சியாளர்களின் காதில், சிறுபான்மையினருக்கு நியாயம் செய்யக்கோரும் அமெரிக்கத் தூதுவரின் கருத்து விழப்போவதில்லை என்பது வெள்ளிடை மலை.

நன்றி :- உதயன்

0 Comments: