உலகின் அரசியல் சரித்திரத்தையே மாற்றியமைக்கக் கால்கோள் இட்ட நிகழ்வுகளில் ஒன்று பிரெஞ்சுப் புரட்சி. மன்னராட்சியின் கீழ் வதைபட்டு சொல்லொணா துன்ப துயரங்களைச் சந்தித்த அந்த மக்களின் எழுச்சி, பெரும் கிளர்ச்சியாக வெடித்து, உலகெங்கும் ஒரு வரலாற்று மாற்றத்துக்கான புறநிலையை உருவாக்கி, வியாபித்தது.
மக்கள் அப்படி வதைபட்ட காலத்தில், அவர்களின் பட்டினி நிலை அதிகார ஆட்சிப்பீடத்திலிருந்த அரசனுக்கு எடுத்துரைக்கப்பட்டபோது லூயி மன்னன் கூறிய வார்த்தைகள் சில இப்போதும் அடிக்கடி நினைவுகூரப்படுவது உண்டு.
""மக்கள் உண்பதற்குப் பாண் இல்லை என்றால் "கேக்'கைச் சாப்பிடச் சொல்லுங்கள்!'' என்றானாம் லூயி மன்னன் மக்கள் படும் அவலங்களையும் கேக், பாண் போன்றவற்றின் பெறுமதிகளையும் அறியாதவனாக.
அதுபோல, இலங்கை அரசின் மோசமான அரசாட்சி முறைமையினாலும், திறனற்ற பொருளாதாரக் கொள்கைகளாலும், ஊழல், மோசடிகளினாலும் நாட்டின் பொருண்மிய நிலைமை நலிவுற்று, அப்பாவி மக்கள் அன்றாட வயிற்றுப்பாட்டுக்கு அல்லல்படும் மனிதப் பேரவலம் இலங்கைத் தீவில் நேர்ந்திருக்கிறது.
இச்சமயத்தில் "கோதுமை மாவில் தயாரிக்கப்பட்ட உணவைச் சாப்பிடுவதை விடுத்து அரிசியில் தயாரிக்கப்பட்ட உணவைச் சாப்பிடுங்கள்!' என்று விளக்கமும், வியாக்கியானமும் கொடுத்துக் கோரிக்கை விடுக்கிறார் இலங்கையின் அமைச்சர் ஒருவர்.
அதுவும் மக்களின் அன்றாட அத்தியாவசிய பாவனைப் பொருட்கள் தொடர்பான விவகாரங்களுக்குப் பொறுப்பான நுகர்வோர் விவகார அமைச்சர் பந்துல குணவர்த்தனவே இப்படிக் கணக்கு வழக்குப் புள்ளி விவரங்களுடன் கருத்து வெளியிட்டிருக்கின்றார்.
""பாண் இல்லாவிட்டால் கேக் சாப்பிடுங்கள்!'' என்று லூயி மன்னன் கூறியமை போன்று ""பாண், றொட்டி போன்றவை விலை கூடவென்றால் அரிசியில் தயாரான சோற்றைச் சாப்பிடுவது மலிவானது!'' என்று குறிப்பிட்டுக் கணக்கு வேறு காட்டி யிருக்கின்றார் விட்டிருக்கின்றார் அவர்.
உலக சந்தையில் கோதுமை மாவின் விலை எக்கச்சக்கமாக எகிறி வருவதால் தாம் முன்னர் ஒரு தடவை ஆரூடம் கூறியமை போன்று ஓர் இறாத்தல் பாணின் விலை விரைவில் நூறு ரூபாவானாலும் ஆச்சரியப்படுவதற்கே இடமில்லை என்றும் அப்படியாவதை ஒருவராலுமே தடுத்துவிட முடியாது என்றும் வெகு "சிம்பிள்' ஆகக் கூறியிருக்கின்றார் அவர்.
அவரது பேச்சையும், கணக்குக் காட்டும் திறனையும் நோக்கும்போது வயிற்றில் ஈரத் துணியைக் கட்டியபடி, பட்டினி அவலத்தைச் சமாளிக்க முடியாமல் அவஸ்தைப் பட்டுத் திணறிக் கொண்டிருக்கும் அப்பாவிப் பாமரனுக்கு அழுவதா, சிரிப்பதா என்று தெரியவில்லை.
அரிசியின் விலையும் உயரப் பறந்துகொண்டிருக்கின்றது. தேங்காயின் விலையும் தென்னை மர உச்சியையும் தாண்டி உயர்ந்துவிட்டது. சோறு சமைப்பதற்கான எரிபொருள், எரிவாயு அல்லது விறகின் விலைகளும் எகிறிவிட்டன.
இவற்றை எல்லாம் கணக்கில் எடுக்காமல், பாண் வாங்கிச் சாப்பிடுவதை விட, அரிசியைச் சோறாக்கி, தேங்காய்ச் சம்பலுடன் சாப்பிடுவது மலிவானது என்று கூறி மக்களின் வயிற்றெரிச்சலைக் கிளப்பி, வசவை வாங்கிக்கட்டிக் கொள்கிறார் அமைச்சர் பந்துல குணவர்த்தன.
இலங்கை மேலும் மேலும் வறுமைக்குள் நீண்ட கால அடிப்படையிலும், குறுகிய காலச் செயற்பாட்டிலும் பின்னடைவுக்குள் மூழ்கும் பெரும் ஆபத்து ஏற்பட்டிருப்பதை ஆசிய, பசுபிக் சமூக ஆய்வறிக்கை இப்போது உறுதிப்படுத்தியிருக்கின்றது.
வறுமையை ஒழிப்பதிலும், பட்டினிச் சாவிலிருந்து மக்களைக் காப்பதிலும், மோசமான யுத்தங்கள் மற்றும் அழிவுகள், மோதல்களில் இருந்து மக்களை மீட்பதிலும் கொழும்பில் மாறி மாறி வரும் அரசுகளுக்குத் திறமையோ, திராணியோ, தகுதியோ இல்லை என்பதையே தற்போதைய நிகழ்வுப் போக்குகள் நமக்கு எடுத்துக் காட்டுகின்றன.
பாணின் விலை விரைவில் நூறு ரூபாவாவதை யாராலுமே தடுக்க முடியாது என்று கைவிரிப்பதைப்போல நுகர்வோர் விவகார அமைச்சரே உறுதிப்படுத்துகின்றமை கொழும்பு அரசின் திறமையின்மையை அப்பட்டமாக அம்பலப்படுத்துகின்றது.
சர்வதேச சந்தையில் எரிபொருள் விலை அதிகரிக்கின்றமையே இலங்கையில் பணவீக்கம், விலைவாசி உயர்வு போன்றவற்றுக்குக் காரணம் என இலங்கை அரசு கூறும் சமாளிப்புகள் அப்பட்டமான பொய் என்பதை சர்வதேச நாணய நிதியத்தின் ஆய்வறிக்கை வெட்ட வெளிச்சமாக்கியிருப்பதும் இங்கு கவனிக்கத்தக்கது.
நல்லாட்சிக்கான அரசு ஒன்று கொழும்பில் ஏற்படாதவரை இனப்பிணக்கையும், பூசலையும், பேரினவாத வெறியையும், யுத்தத் தீவிரத்தையும் வளர்த்து, அதில் அரசியல் ஆதிக்கக் குளிர்காயும் தற்போதைய தலைமைகள் மாறும்வரை இத்தகைய பொருளாதாரப் பாதிப்புப் படுகுழியில் இருந்தும் நாடு விடுபடுவது துர்லபமே.
நன்றி:- உதயன்
Tuesday, April 1, 2008
பொருளாதாரப் பின்னடைவு எனும் படுகுழியில் வீழ்ந்துள்ள இலங்கை
Posted by tamil at 1:45 PM
Subscribe to:
Post Comments (Atom)
0 Comments:
Post a Comment