Sunday, March 30, 2008

பிள்ளையான் குழு விவகாரத்தால் ஜே.வி.பிக்குள் உட்கட்சிக் குரோதம்

கிழக்கில் தனது துணைப்படையான பிள்ளையான் குழுவை வைத்துக்கொண்டு அரசு மேற்கொள்கின்ற அரசியல், இராணுவக் காய் நகர்த்தல்கள் தென்னிலங்கை அரசியலிலும் பலத்த சூட்டைக் கிளப்பியிருக்கின்றன.

பிள்ளையான் குழுவின் செயற்பாடுகளும் அதற்கு அரசுத் தரப்புக் கொடுக்கும் ஊக்கமும் ஆதரவும் ஜே.வி.பி. கட்சிக்குள்ளேயே சர்ச்சைகளையும் குழப்பங்களையும் ஏற்படுத்தி விட்டன என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்!
பிள்ளையான் குழு விவகாரம் தொடர்பாக ஜே.வி.பி. கட்சியின் மூத்த தலைவர்களே தமக்குள் மோதிக்கொள்ளும் நிலை உருவாகியிருக்கின்றது.

கிழக்கு மாகாணசபைத் தேர்தல் அறிவிக்கப்பட்டதும் அதையொட்டி, கடந்த இருபதாம் திகதி ஜே.வி.பி. தலைவர் சோமவன்ஸ அமரசிங்க கொழும்பில் கருத்து ஒன்றை வெளியிட்டார்.
கிழக்கில் தேர்தல் நீதியாகவும், நியாயமாகவும் நடக்க வேண்டுமானால் பிள்ளையான் குழுவினரின் ஆயுதங்கள் களையப்பட வேண்டும். அவர்களுக்குத் தேவையானால் பொலிஸ், இராணுவப் பாதுகாப்பு வழங்கலாம் என்று ஜே.வி.பி. தலைவர் அறிவித்தார். இதுவே இவ்விவகாரத்தை ஒட்டி ஜே. வி. பியின் பொதுவான நிலைப்பாடாக இருக்கும் என்று அப்போது கருதப்பட்டது.

2006 பெப்ரவரியில் விடுதலைப் புலிகளுடன் தான் நடத்திய "ஜெனிவா 1' பேச்சுகளின்போது கருணா குழு (தற்போதைய பிள்ளையான் குழு) உட்பட சகல சட்டவிரோதக்குழுக்கள் மற்றும் ஒட்டுப்படைகளின் ஆயுதங்களைக் களைவதற்கு இலங்கை அரசு இணங்கியபோது அதனை ஜே.வி.பி. கடுமையாக எதிர்த்து விமர்சித்திருந்தது.

அந்தக் கட்சிதான் இப்போது அதே பிள்ளையான் குழுவின் ஆயுதங்களைக் களைய வற்புறுத்துகின்றது என அண்மைக்காலத்தில் சில தரப்புகளினால் விமர்சிக்கப்பட்டது. ஆனால் ஜே.வி.பிக்குள் இது தொடர்பாக இருவேறு முரண்பாடான கருத்துகள் இருக்கின்றமை, கட்சித் தலைவர் சோமவன்ஸ அமரசிங்கவின் கருத்து வெளியாகி ஆறு நாட்களுக்குள் அம்பலமாயிற்று.

"தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின்' செய்தியாளர் மாநாடு ஒன்றில் கலந்து கொண்ட ஜே.வி.பியின் பிரசாரச் செயலாளரும் அதன் நாடாளுமன்றக் குழுத்தலைவருமான விமல் வீரவன்ஸ, பிள்ளையான் குழுவின் ஆயுதங்களைக் களைய வேண்டும் என்ற கோரிக்கையைக் கடுமையாகச் சாடினார். அப்படிப் பிள்ளையான் குழுவின் ஆயுதங்களைக் களையக்கோருவோரை "பைத்தியக் காரர்கள்' என்று சுட்டுவது போல அத்தகையோரின் மண்டையைச் சோதிக்கவேண்டும் என்றும் விமல் வீரவன்ஸ பகிரங்கமாகப் பிரஸ்தாபித்திருந்தார்.

ஆனால், ஜே.வி.பியின் முக்கிய பிரமுகரான விமல் வீரவன்ஸவின் கருத்துக்கு கட்சியின் மூத்த வட்டாரங்களில் இருந்து காரசாரமாகப் பதிலடி வந்திருக்கின்றது.
லால் காந்த, அனுர குமார திஸநாயக்கா போன்றோர் தமது கட்சித் தலைவர் சோமவன்ஸ அமரசிங்க கூறியபடி, பிள்ளையான் குழுவின் ஆயுதங்கள் களையப்பட வேண்டும் என்பதே கட்சியின் ஒருமித்த நிலைப்பாடு என வற்புறுத்தியிருக்கின்றனர்.
மாத்தளை, இரத்தோட்டையில் கடந்த வாரம் ஜே.வி.பி. ஆதரவாளர்கள் மத்தியில் பேசிய கே.டி. லால் காந்த
""தங்களுடைய சொந்த எண்ணம் என்ற ஒன்று கருதி, கட்சியின் பெரும்பான்மையினரின் தீர்மானத்தை மதிக்க விரும்பாத நபர்களையே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தமது அரசியல் இலாபங்களுக்குப் பயன்படுத்திக்கொள்ள இப்போது விரும்புகின்றார். ஜனாதிபதி ராஜபக்ஷ தமது அரசியல் நிகழ்ச்சித்திட்டத்தை நகர்த்துவதற்கு இத்தகைய பலவீனமான அரசியல்வாதிகளைத் தேடுகிறார். அவரது அரசியல் இத்தகையோரை வட்டமிடுவதில்தான் அமைந்துள்ளது.

""ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, ஜே.வி.பியைப் பொறுத்தவரை அதை ஒரு முழுமையான கட்சியாக அங்கீகரித்து அதனுடன் அரசியலில் ஈடுபட வேண்டுமே தவிர, ஜே.வி.பியில் தனக்குப் பிடித்தமான தனியாட்களை வைத்து அவர்கள் மூலம் அல்ல. அதை விடுத்து தனியாட்கள் மூலம் ஜே.வி.பியைக் கையாள அவர் முயற்சிப்பாராயின் ஜே.வி.பியின் ஆதரவையுமே அவர் இழக்க வேண்டியவராவார்'' என எச்சரித்திருக்கிறார் லால் காந்த.
இதேபோன்ற கருத்தை அவர் சிங்களப் பத்திரிகையான "லங்காதீப'வுக்கும் ஓர் அறிக்கை மூலம் தெரிவித்திருக்கின்றார் எனத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
பிள்ளையான் குழு விவகாரம், ஜே.வி.பியின் மூத்த தலைவர்கள் மத்தியில் வழமைக்கு மாறாக பகிரங்க அரங்குகளில் அவர்கள் மோதும் நெருக்கடி நிலைக்குச் சென்று விட்டதையே இக்கருத்துகள் காட்டுகின்றன.

கிழக்கு மாகாணசபைத் தேர்தல் சூடு பிடித்து, அதன் விளைவாக கிழக்கில் சூடுகள் விழும்போது, பிள்ளையான் குழுவின் ஆயுதங்களைக் களைவதா, இல்லையா என்ற விவகாரம் ஜே.வி.பிக்குள் இன்னும் சூடு பிடிக்கும் என எதிர்பார்க்கலாம்.
நன்றி :- உதயன்

0 Comments: